வீடு

 

காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ – அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் பெயருக்கு பதிவு செய்யப்பட்டிருந்த பத்திரம். தன்னுடையது என உரிமைகொள்ள கிடைத்துள்ள முதல் அசையாச் சொத்து. அந்தத் தாள்கள் கையில் கிடைத்த நாளில் பிரபஞ்ச ஆசிகள் முழுதாக தன்மேல் தூவப்பட்டதாக தோன்றியது அவளுக்கு. அகத்தின் மகிழ்ச்சி முகத்திலும் பூசிக்கொள்ள அதன் சுவடுகளை தன்னைச் சுற்றிலும் பதியமிட்டாள். உச்சி வெயிலும் உறைப்பதில்லை. தூக்கம் தொலைந்தாலும் களைப்பதில்லை.

இதோ இன்றைக்கும் முன்னிரவில் துப்புரவாக நித்திரையில்லை. ஆனாலும் இருள் மயக்கம் படராமல் முகம் பொலிவாக உள்ளதே. ஜென்மாந்திர ஏக்கம் தீரும் நேரம் வந்துவிட்டது. வாஸ்து செய்ய உகந்த நாள் என நாள்காட்டியும், கோணியம்மன் கோயில் குருக்களும் குறித்துக் கொடுத்த நேரம் நெருங்குகிறது. இன்று அவளின் புது வீட்டுக்கு பூமிபூஜை.

ஷியாமளிக்கு இருப்பு கொள்ளவில்லை. தெருவில் இன்னும் கோலப்பொடி, கீரை விற்பனர்களின் கூவல் எழவில்லை. ’அம்மா பால்’ எனும் குரலொலியும் சைக்கிள் மணிச் சத்தத்தையும் காணோம். வெளிச்சததை முந்தி எழுந்து சளக் ப்ளக்கென வாசல் தெளிக்கும் பாப்பாத்திக்காகூட இன்றைக்கென்று பார்த்து நேரம்வரை தூங்கி வழிவதாகப்பட்டது. சூரியக் கதிர் கீற்று பூமிதொட இன்னும் நேரமிருக்கிறது என்ற நிஜம் அறியாதவளாக, ‘விடியா மூஞ்சிகள்’ என பொதுவாக எல்லோரையும் குறை கூறி, முணுமுணுப்போடு வெற்று நிலத்தைச் சுற்றி வந்தாள் ஷியாமளி.

ஊருக்கெல்லாம் வாழ்க்கை ஒரு வட்டம். அவளுக்கோ அது சதுரம். அறுபதுக்கு அறுபது சதுர அடி அதன் அளவு. உலகப் பரப்பில் அந்த இடம் சிறு புள்ளி. அவளுக்கு அதுவே உலகம். நிலம் கையகப்பட்ட நாள் முதலாய் தினமும் அங்கே வந்து போவது அவள் விருப்பங்களில் முதன்மையானது. அந்த மனைதான் இப்போது வீடாகப் போகிறது. அந்தப் பரவசத்தில்தான் இருட்டைச் சபித்துக் காத்திருக்கிறாள்.

ஒருவழியாக மேஸ்திரியும் ஒத்தாசை ஆட்களும் வந்து சேர, சாஸ்திரம் சொல்லும் ஆழம் வரை குபேர மூலையில் குழி தோண்டி நீர் ஊற்றப்பட்டது. தேங்காய், பழம், கற்பூரம் என்று வழக்கப் பொருட்களோடு நவதான்ய மூட்டைகள், குலதெய்வ கோயில் தீர்த்தம் என சிறப்புச் சேர்மானங்களையும் சேர்த்து பூஜை முடித்து அத்தனையும் கொட்டப்பட்டது குழியில்.

ஷியாமளி தன்னிடமிருந்த சற்றே பெரிய துணி மூட்டையைப் பிரித்து உள்ளே கைவிட்டு அள்ளிப் பார்த்தாள். இளங்கதிர் பட்டு தகதகத்தன. மெருகு மங்காத புதுக் காசுகள் கிடைத்தால் அதை செலவாக்காமல் சாமி உண்டியலில் போட்டு வைப்பது அவள் வழக்கம். அப்படிச் சேர்த்த காணிக்கையைத்தான் பூமிக்கு என மொத்தமாய்க் கொண்டு வந்திருந்தாள். ’என் வம்சம் காசு பணத்துக்கு தட்டுப்பாடில்லாம வாழணும்’ என்ற மனக் குரலோடு துணியை குழியில் கவிழ்த்தாள். அவ்வளவுதான் சம்பிரதாயம் என்று அவள் நினைத்திருக்க, அப்போதுதான் நினைவு வந்தவராக ஐயர் அடுத்துச் சொன்னதைக் கேட்டு அவள் உற்சாகம் வடிந்து, மனசு பொசுக் என்றானது.

’’சாங்கியத்துக்கு இவ்வளவுதான். தோதுப்பட்டவங்க வெள்ளி, தங்கக் காசெல்லாமும் போடுவாங்க. பூஜையப்ப பூமில வெதைக்கறது பின்னால வீட்டுல முளைக்கும்ங்கறது ஐதீகம்.’’

இதை முன்னாலேயே சொல்ல வேண்டாமா? இப்போ தங்கக் காசுக்கு எங்க போறது? தவித்தாள் ஷியாமளி. இல்லாட்டிப் போகுதுபோ என தங்கம் தவிர்க்கவும் மனசு ஒப்பவில்லை. ‘பொன் புதைபடாத வீட்டில் பொருட்செல்வத்துக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ?’என தொலைநோக்குப் பார்வையில் விசனப்பட்டாள். ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை என்ற விடுகதை தென்னைக்கு மட்டுமல்ல வீட்டுக்கும் பொருந்துமென்று நம்பிக்கை கொள்கிறது மனது. பிறகு அதில் குறை வைக்க எப்படி சம்மதிக்கும்? மனத் தளும்பளுக்கிடையே தாலி நினைவு வந்தது.

அவள் தாலிக் கயிற்றின் இரு புறமும் இணையான அளவில் கருகமணி, பவழத்தோடு லட்சுமி உருவம் பொறித்த இரண்டு தங்க காசுகளும் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு சவரன் பெறும். அதில் ஒன்றை பூமிக்கு இடம் மாற்ற தீர்மானித்தாள். தினசரி தேய்த்த மஞ்சளும், தண்ணீரும், வியர்வையுமாக ஊறி, உலர்ந்து, இறுக்கிக்கிடந்தன முடிச்சுகள். அவிழ்ப்பது சாமான்யமில்லை. சிரமத்திலும், வேற்று ஆள் அறியாமல் பிரித்து, காசை தனித்து எடுத்தாள். மகாலட்சுமியை தன் தாலியில் சேர்த்த அம்மாவுக்கு ஒரு நன்றியும், ’என் சந்ததி எந்தச் செல்வத்துக்கும் குறையில்லாம வாழ நீதான் தாயே துணையா நிக்கணும்” என அம்மனுக்கொரு கோரிக்கையுமாக குபேர குழிக்குள் தங்கத்தைப் புதைத்தாள். மனதில் உற்சாகம் மீண்டிருந்தது.

மங்களப் பொருட்களை மண்போட்டு மூடிய கையோடு ஆரம்பித்தது வேலை. கல், மண் என என்னனென்ன வேண்டுமோ அவை ஒப்பீட்டளவில் உயர்ந்த ரகமாக வருவிக்கப்பட, பொறியாளர், மேஸ்திரியோடு அரை டஜன் சித்தாளுகளும் ஆளுக்கொரு கைப்பிடித்துக் கொண்டுவந்தனர் அந்த வெற்றிடத்திற்கு ஒரு கட்டிடத்தை.

மொத்தம் ஐந்து அறை. வரவேற்பறை போலவே பிற அறைகளும் விரிவாக இருக்கவேண்டும். சம அளவு என்றாலும் சம்மதமே. காற்றும் வெளிச்சமும் தன் வீடு போல வந்து போக வழி வேண்டும். குழந்தைகள் குதித்து விளையாடினாலும் இடித்துக்கொள்ளும் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது. வீட்டுக்கு முன்பக்கம் பூச்செடிகள், வருவோரை மணம் பரப்பி வரவேற்க. பின்பக்கம் காய், கீரை செடி கொடிகள், வயிற்றை நிறைக்க. வாசலருகே பெரிதாக ஒரு திண்ணை. மழை வெயிலுக்கு யாரும் ஒதுங்க. மேலே குளுமை தரும் ஒரு ஓலை மறைப்பு. தோள் உயரத்துக்கு சுற்றுச் சுவர். அதில் அங்காங்கே கிண்ணம் போல குழி பறிக்க வேண்டும், காக்காய் குருவிகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் ஊற்ற… என வீடு குறித்த அவளின் கனவுக் கோட்டையில் ஒவ்வொரு துகளும் கல்தூண். அந்தக் கருப்பு வெள்ளை கற்பனைக்கு வண்ணம் பூசிட கணவன் முன்வர, அவள் கட்டளைப்படி கட்டமைக்கப்பட்டது வீடு. நிலத்தின் ஆழத்தில் உழப்பட்டது நீண்டகாலத் திட்டம்.

வீடு மீது கட்டட்ற காதல் கொண்ட ஷியாமளியைப் பொறுத்தவரை, வீடெனப்படுவது இந்த மண்ணில் வாழத் தகுதிப்படுத்தும் சான்றிதழ். ஆவணம். வேற்று மனிதர் யாரும் இடையில் புகவோ, இடம் பெயரச் செய்யவோ வழி விடாத எல்லைக்கல். இன்னுமொரு காவல் தெய்வம். சொந்தமாக ஒரு வீடு என்பது அவளுக்கு தலைமுறைகள் தாண்டிய கனவு. பெருங்கொண்ட ஏக்கம். அந்த ஆசையின் ஆணிவேரைத் தேடிப்போனால் அது அண்டை மாநிலத்தைத் தொட்டு நிற்கும்.

ஷியாமளியின் கொள்ளு தாத்தா, எள்ளுப் பாட்டிகளுக்கு தமிழ்நாட்டிற்கு அடுத்த மாநிலம்தான் பூர்வீகம். சந்தன மரத் தோட்டத்தினிடையே மச்சு வீடு கட்டி வாழ்ந்த பரம்பரைதான். ஆனாலும் என்ன, சொல்லாமல் வந்த திடீர் வெள்ளமும், புயலும் அதன் தொடர்ச்சியாக பஞ்சத்தை விட்டுச் செல்ல அவர்கள் வம்சம் புலம் பெயர்ந்தது. அப்படி வந்து குடியமர்ந்த இடம்தான் இப்போதைய வசிப்பிடம். பஞ்சம் விலகியது. ஆனாலும் பெயரெடுக்கும்படி நில, புலன்களையோ சொத்துக்களையோ சேர்க்கும் திறனில்லை. பிறந்த மண்ணின் பந்தம் விட்டுப் போய் வெகுகாலமானது. வந்த இடத்திலும் சொந்தம் என கொண்டாட கல் வீடோ கையகல நிலமோ சம்பாதிக்கவில்லை. அந்த திரிசங்கு வாழ்க்கை மீதான வேதனையின் வெளிப்பாடுதான் அவளின் வீடு கனவு. உரிமைக்காரி என சுய மதிப்பை உயர்த்திக்கொள்ள, ஒரு வம்சாவளியின் ஓர் உயிரையாவது ஓட்டத்தை நிறுத்தி ஓரிடத்தில் நிலைநிறுத்த அவளுக்கு வேண்டியதும் விருப்பமானதுமாய் இருப்பதெல்லாம் சொந்தத்தில் ஒரு வீடு. கம்பீரமாய் ஒரே ஒரு வீடு.

சுப்பிரமணி அவளிடம், ’உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். என்ன சொல்ற?” என்று தெருவில் வழி மறித்துக் கேட்டபோது, அவளின் எதிர்க் கேள்வி இதுவாகத்தான் இருந்தது. ’உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னா எனக்கொரு வீடு கட்டித்தரணும். தருவீங்களா?’’ அவன் சத்தியத்தை தர, அவள் தாலிக்கு சம்மதித்தாள்.

பத்து பைசாவும் கடன் வாங்காமல் கைக்காசைக் கொண்டே மனைவிக்கு மதிப்பாக, ஒரு வீடுகட்டித் தரவேண்டுமென்ற வைராக்கியம் சுப்பிரமணிக்கு. சொந்த இரும்புக்கடை, நண்பர்களோடு இணைந்த சீட்டுக்கம்பெனி என்று அவன் இரட்டை குதிரையில் சவாரி செய்து வியர்வை வழிய சேர்த்த பணம் இடமாகி, இதோ இன்று இருப்பிடமாகிறது. கணவன் காதலையும் உழைப்பையும் கலந்து கொடுத்த பரிசு. ஒவ்வொரு நொடி நகர்வையும், தவமிருந்து பெற்ற வரமாக அனுபவித்து மகிழ்ந்தாள் ஷியாமளி.

வெற்று நிலம் ஈசான்ய மூலையில் நீர் தொட்டி, நாற்புற சுவர் என அவளுக்கான கட்டிடம் தோற்றத்தை பொறுத்தவரை ஒரு வீடாகியிருந்தது. மேலே ஒரு கூரையிட்டால் வசிப்பிடமாகிவிடும். கான்கிரீட் கூரை போடுவதென்பது கட்டிடப் பணியில் முக்கிய நிகழ்வு. உடல் படைத்த பிரம்மா அதற்கு உயிர் கொடுப்பதைப் போல. மலையைத் தூக்கி மழையைத் தடுத்த கிருஷ்ணன் போல, வெயில் மழையிலிருந்து வீட்டு மனிதர்களை காப்பாற்றும் பெரும் பொறுப்பு கொண்டதாலோ என்னவோ கான்கிரீட் போடுவதற்கும் முகூர்த்த நாள் பார்க்கப்படும். பக்கச் சுவர் போல இப்போ பாதி, அப்புறம் மீதி என வேலையைப் பிரித்து வைக்க முடியாது. இடைவெளி விடாமல் மொத்தமாய் முடிக்க வேண்டும் வேலையை. ஆட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இரட்டிப்பாய் இருக்கவேண்டும். கலவை மெஷின் சிமெண்ட் கலவையை சுழற்றித் துப்பும் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் ஆட்கள் சாந்துச் சட்டியை கைமாற்றும் வேகம். எல்லா ‘வேண்டும்’களும் சரியாக அமைய, நினைத்ததிலும் விரைவாக கூரை வேயப்பட்டுவிட்டது. அன்றைக்கு மதிய உணவுக்கு பணம் கொடுக்க வேண்டியது கட்டிட உரிமையாளரின் பொறுப்பு.

’ஆளுக்கு ஐம்பது ரூவா கொடுத்துடுங்க’’ என்றார் மேஸ்திரி.

’அன்னபூர்ணா ஹோட்டல்ல பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருந்தோம்.. வந்துடுச்சுங்ண்ணா.. வாங்க சாப்பிடலாம்’’ என்றாள் ஷியாமளி.

கழுத்துவரை சாப்பிடசொல்லி கட்டாயப்படுத்திப் பரிமாறினான் சுப்பிரமணி. கை கழுவி வந்தவர்களிடம் மேஸ்திரி சொன்ன பணத்தை கொடுத்தாள் ஷியாமளி. வெயிலில் களைத்த மனதுகள் அவர்களையும் வீட்டையும் வாழ்த்திச் சென்றன.

ஆச்சு. முக்கால் வேலை முடிந்த அந்த வீட்டுக்கு இனி சின்ன விடுமுறை. இரவுக்குள் கான்கிரீட் இறுகிவிடும். அப்புறம் மூன்று வாரம் கூரைக்கு ஏறி தண்ணீர் ஊற்றினால் போதும். நீரை உறிஞ்சி உறிஞ்சி வெடிப்பு, விரிசல் விழாமல் கட்டிடம் உறுதியாகும். அதுவரை ஆன வேலைகள் நிம்மதியைத் தர ஷியாமளிக்கும் சுப்பிரமணிக்கும் நிறைந்தது மனது.

அது மழைக் காலமல்ல. ஆனால் அன்றிரவு மழை பெய்தது. ஒலியும் ஒளியுமாக பெரும் மழை. கட்டிடத்துக்கு தண்ணீர் ஊற்ற ஆள் வைக்கலாமா இல்லை தானே செய்யலாமா? என புரண்டு படுத்து யோசித்துக்கொண்டிருந்த ஷியாமளியை மழை கலவரப்படுத்தியது. இந்தப் பேய் மழையை அந்தப் பிஞ்சு கட்டிடம் தாங்குமா? அத்தனைபேர் உழைப்பும், செலவும் வீண்தானா? கணவனும் மனைவியும் விடிய விடிய கவலைப்பட்டனர். விடியும்போது கதவு தட்டப்பட்டது. மேஸ்திரிதான்.

’’என்னம்மணி சொல்லி வெச்சாப்ல மழை இன்னைக்குனு பாத்து இப்படி பேஞ்சு போடுச்சே. வீட்டைப் பார்த்துட்டுதான் வர்றேன். மழைக்கு முன்னாலயே கலவை நல்லா காஞ்சு இறுகிருச்சு. மழை தண்ணி சும்மாக் குளமாத் தேங்கிக்கெடக்கு. மூணு வாரத்துக்கும் அதுவே போதும். ஆள்கூலி, வேலை எல்லாமே மிச்சம். உம்மனசு போலவே எல்லாம் நல்லா அமையுது அம்மணி.’’ மனித வாழ்த்தும், வருணனின் கருணையும் அவளை பெருமை படுத்தின.

விடுப்பு முடிந்தது. ஜன்னல் பதிப்பு, சுவர் பூச்சு என மிச்ச வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. வீட்டைப் போலவே ஷியாமளிக்கு ஜன்னல் வேலைப்பாடு பற்றியும் ஒரு கிளைக்கனவு உண்டு. அது தனித்துவத்தோடும், ஒரு செய்தியை சொல்வதாகவும், திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும் என்பது அந்த கனவின் பின்னணி. மிகுந்த மெனக்கெடல்களுக்குப் பிறகு இறுதியாக அப்படியொன்றை தேர்வு செய்தாள். ஐந்து விரல்களினிடையே அழகாய் ஒரு ரோஜா மொக்கு இருப்பது போன்று. கம்பிகளை மலராக வடிவமைப்பதன்மூலம் வீடே விருந்தினர்களை வரவேற்பது போலிருக்கும் என்பது அவள் எதிர்பார்ப்பு. அவள் வரைந்த ஓவியத்தை அச்சில் வார்த்து ஜன்னலில் பதித்தபோது உள்ளபடியே வீடு புன்னகைத்தது.

வீடு கட்டும் யாரும் அதனைப் பார்த்து, தொட்டுணர்ந்து இது எனது என பெருமிதப்படலாம். உங்களில் யாரேனும் வீட்டை சுவாசித்திருக்கிறீர்களா? அந்த சுவாசம் தரும் சுகந்தத்தை அறிந்திருக்கிறீர்களா? ஷியாமளியால் அது முடிந்தது. நீரில் மணலும், சிமெண்டும் கலக்கப்படும்போதும், சாந்து குழைக்கையிலும் அதன் ஈர வாடையை மூச்சில் இழுத்து இழுத்து நுரையீரலை நிரப்பினாள். இது என் வீடு. இதோ என் மூச்சுக் காற்றில் கலந்திருக்கும் மணம் என் வீட்டின் மணம் என எல்லோரும் புறம் தீண்டிப் பார்க்கும் கட்டிடத்தை அவள் அகம் தீண்டினாள். நேசம் அதனை சாத்தியமாக்கியது.

தளதளவென கலக்கப்படும் சாந்து எடுத்து வீசப்பட்டு, வழிந்தோடாமல் செங்கல்லைப் பிடித்துக் கொண்டு சுவராய் சமைந்துவிடுவதை பார்த்துக்கொண்டிருந்த ஷியாமளி, சுவரை நெருங்கி, இடுப்பில் இருந்த மகளின் கை பிடித்து ஈரச்சுவற்றின்மீது ஆங்காங்கே அழுத்தமாகப் பதித்தாள். அவளின் செய்கைகண்டு பதறிப்போய் ஓடி வந்தார் மேஸ்திரி.

’’அம்மணி.. அம்மணி என்ற பண்ற? ஈர செவுருல யாராச்சும் அச்சு வெப்பாங்களா? வெளையாட்டுப் புள்ளையா இருக்கியே’’ என்றபடியே அச்சிலை அழித்து சமன்படுத்த கரண்டி எடுத்துவர, அவரைத் தடுத்தாள் ஷியாமளி.

’’ண்ணா…ண்ணா.. அழுச்சுராதீங்ண்ணா.. எம் புள்ள கை அச்சு இந்த வீட்டைச் சுத்திலும் இருக்கணும். நாளைக்கு, எம்புள்ளை, பேரப் புள்ளைங்ககிட்டயெல்லாம் இதைக் காட்டி பேசணுங்ணா. எந்த வருஷத்துல இந்த வீட்டை கட்டறோம்னு எங்கயும் நாம எழுதிவெக்கப் போறதில்ல. எம்புள்ள வெச்ச அச்சை வெச்சுத்தான் என் தலைமுறையே இந்த வீட்டோட வயச தெரிஞ்சுக்கணும். அத அழிக்காதீங்ணா…’’ அவளின் கட்டிடக் காதல் அவருக்கு விநோதமாயிருந்தது.

தேக்கு மரத்தில் கதவு நிலவு பதியமிட்டு, வெளுத்த நிறத்தில் வழுக்காத தரையைப் பதித்து, அலமாரி, அட்டாளி கட்டி முடித்து பூசல் மெழுகலென இன்னபிற வசதிகளும் செய்து முடித்துப் பார்க்கையில், அந்த வீடு இருந்தது, அளவு சிறுத்ததொரு அரண்மணை போல.

வந்த வேலை முடிந்து, வேட்டி சேலை வாங்கிக்கொண்டு, அடுத்த வேலை தேடி ஆட்கள் சென்றுவிட்டனர். கிரஹப்பிரவேசத்துக்கு நாள் குறிப்பதில் மும்முரமாக இருந்தான் சுப்பிரமணி.

கட்டிய வீட்டைச் சுற்றி வந்தாள் ஷியாமளி. அழகும், தூய்மையும், குளுமையும், மணமுமான, யாருடைய ஒலியுமில்லாத வீடு. புதுவிதமாக இருந்தது. ஒவ்வொரு அறையாகச் சென்றாள். சத்தமாக சிரித்தாள். ’’இங்க எப்போ குடிவரப்போற ஷியாமளி?” உரக்கப் பேசினாள். சிரிப்பும் பேச்சும் திரும்ப வந்தன. அது அவளுக்கும் வீட்டுக்குமான உரையாடல். எதிரொலித்த குரலை வைத்து வீட்டை பெண்பாலாக உருவகப்படுத்தினாள். ’’இனி இங்க எனக்கு நீ. உனக்கு நான். பேசறதெல்லாம் இப்பவே பேசிக்கோ. சாமானெல்லாம் கொண்டுவந்து இறக்கிட்டா அப்புறம் நீ பேசறது எனக்கு கேக்காது.’’ பால்ய வயசுப் பெண்ணாக மாறி குதூகலித்தாள்.

அப்போதுதான் அந்த ஒலி எழுந்தது.

பூமிப்பந்து எகிறிக் குதித்ததுபோல ஓர் ஓசை. திடுக்கிட்டு, சுதாரிப்பதற்குள் நாலாத் திசைகளிலும் அடுத்தடுத்து ஐந்நாறு முறை அந்தச் சத்தம் கேட்டது. நடுக்கத்தோடு வெளியே வந்து பார்த்தாள். தூரத்தில் ஊர் சனம் திக்கு திசை புரியாமல் ஓடிக்கொண்டிருந்தது. காதை பழுதாக்கிய அந்த ஒலி கொஞ்சம் ஓய்ந்தபோது மனித ஓலம் எழும்பியது. மரணக் கூச்சல். சத்தத்தின் பின்னணி தெரியவந்தபோது மொத்த இந்தியாவுக்கும் தலைப்புச் செய்தியாகியிருந்தது தமிழ்நாடு.

‘கோவையில் தொடர் குண்டு வெடிப்பு. உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்’

ஷியாமளிக்கு வேறு எதன் மீதும் பதட்டம் வரவில்லை. வீடு மீதே கவலை வந்தது. வெடியின் அதிர்வால் சுவர், ஜன்னல்களில் விரிசல் இருக்குமோ? அங்குலம் அங்குலமாகத் துழாவிப் பார்த்தாள். போடப்பட்டவை தரமான பொருட்களாக இருந்ததால் தாக்குப்பிடித்தன. வீட்டுக்குள் எந்தச் சேதாரமும் இல்லை.

ஆனால்…

சில நாட்களாகவே சுப்பிரமணி சரியில்லை. துக்க வீட்டில் பிணத்திற்கு அருகே இருப்பவன்போல் இறுகிக் கிடந்தான். முகத்தில் இருள் அடர்வாகப் பரவிக்கிடந்தது. தாங்க முடியாத அதிர்ச்சிக்கு மட்டுமே முகத்தில் அப்படியொரு கருமையைத் தரும் வலிமை உண்டு. ஷியாமளி கலக்கத்தோடு காரணம் கேட்டாள். வெகுவாக யோசித்த பிறகே வாய் திறந்தான் சுப்பிரமணி.

‘‘நான் பங்குதாரரா இருந்து நடத்தற சீட்டுக் கம்பெனில நான் சேர்த்துவிட்ட வாடிக்கையாளுங்க அத்தன பேரும் இஸ்லாமியருங்க. குடும்பம் வேற ஊர்ல இருந்தாலும் இதே ஊர்ல ரொம்ப வருஷமா டீக்கடை, பேக்கரினு சொந்தமா தொழில் பண்றவங்க. நல்ல மாதிரி ஆளுங்கதான். பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்பச் சரியா நடந்துக்குவாங்க. அதனாலதான் அந்த ஆளுங்களாப் பார்த்து சேர்த்துவிட்டேன். அவங்க எல்லாருமே சீட்டுப் பணத்தை எடுத்துட்டாங்க. இன்னும் முழுசா கட்டி முடிக்கலை. இப்போ, குண்டு வெடிச்சு, அதுக்கு காரணம் இஸ்லாமியர்ங்கறதால ஊர்ல இருக்கற ஒவ்வொரு முஸ்லிமையும் போலீஸ் துருவித் துருவி விசாரிச்சு சக்கையா புழுஞ்சு எடுக்குது. அதுக்கு பயந்துகிட்டு, நெறையப்பேர் சொல்லாம கொள்ளாம ஊரை காலி பண்ணிட்டு ஓடிட்டாங்க. நம்மகிட்ட சீட்டெடுத்தவங்கள்ல ஒருத்தர்கூட இப்ப ஊர்ல இல்ல. யாரோட அட்ரஸும் யாருகிட்டயும் இல்லை. யாரை எங்கபோயித் தேடறதுனு தெரியல. இன்னும் ரெண்டு வருஷ சீட்டுத் தொகை பாக்கியிருக்கு. அவுங்க கட்டவேண்டிய பணத்துக்கு நாந்தான் பொறுப்பு. என்ன பண்றது? எப்படிப் புரட்டறது? ஒண்ணுமே புரியலம்மா.”

’’எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும்?’’

’’லட்சக்கணக்குல’’

தளர்ந்து உட்கார்ந்தாள் ஷியாமளி. அவள் முகத்திலும் கருமை அப்பிக்கொண்டது. தனித்தனியாக யோசித்தனர். சேர்ந்து ஆலோசித்தனர். வழி தேடித் திரிந்தனர். கடன் வாங்கி கடனை அடைக்கலாம் என்றால் தொகை சாமான்யமானதல்ல. சக்திக்கு மிகுந்தது. வட்டி கட்டியே வாழ்நாள் தீர்ந்துவிடும். வெளியேற பாதை கிடைக்காமல் ஆரம்பப் புள்ளியிலே முட்டி நின்றது மனக்கலக்கம். வாழ்நாளின் மகிழ்ச்சியை இறந்தகாலம் மொத்தமாக எடுத்தோடிவிட, எதிர்காலம் சூன்யமாய் முறைத்து பயமூட்டியது.

சப்தங்கள் செத்துப்போன நடுநிசியில் ஷியாமளி கேட்டாள்…

’’வீடு கட்ட வரங்கொடுத்த சாமி ஏம் பாவா வாசலை மட்டும் அடைச்சு வெச்சுருச்சு?’’ திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

சுப்பிரமணி பயந்துவிட்டான்.

’’என்னம்மா என்னமோ மாதிரி பேசற?’’

’’சீக்கிரமா பணத்தைக் குடுத்துரலாம்..’’

’’எப்படி?’’

’’வீட்டை வித்துடலாம்’’

‘குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஆளுக்கொரு பட்டியலை வெளியிட்டுக்கொண்டேயிருந்தன. ஆனால், எந்தப் பட்டியலிலும் இவர்களை மட்டும் யாரும் சேர்க்கவே இல்லை.

- கல்கி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆத்தா
“நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..” - இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு ...
மேலும் கதையை படிக்க...
வெளியே பலத்த மழை! வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
பெரிய மனுஷி
சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி. விஷயம் வெளி வந்தால் ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது. நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் 'டிசம்பர் சீஸன்'. ...
மேலும் கதையை படிக்க...
ஆத்தா
தேசம்
பெரிய மனுஷி
சுருதி பேதம்

வீடு மீது ஒரு கருத்து

  1. இரா. தங்கப்பாண்டியன் says:

    இனிய கோமளா அவர்களுக்கு…. கல்கி இதழில் நாம் பரிசு வென்ற போது தங்களின் வீடு படித்தேன். மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வாசிக்கும் போதும் முன்பு படித்த அதே உணர்வு இன்றும் ஏற்படுகிறது.
    நுட்பமான சிறுகதையாளருக்கான எல்லா தகுதிகளும் தங்களுக்குள்ளது. தொடருங்கள். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)