விவாகரத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 7,254 
 

தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் டெல்லி யிலிருந்து சென்னை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது . தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் . ஆனந்த் S-7 கோச்சில் தன் ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டான் . காலியாக இருந்த தன் பக்கத்து இருக்கையைப் பார்த்தான். எப்போதும் அவனுடன் பயணிக்கும் வர்ஷா இன்று அவனோடு இல்லை. அந்த பக்கத்து இருக்கையை வேறு யாரோ முன்பதிவு செய்திருந்தனர். அவனுக்குக் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது . இனி இந்த வாழ்க்கை முழுவதும் அவள் இல்லாமலேயே பயணிக்க வேண்டியிருக்குமோ….மனதில் ஏதேதோ எண்ணங்கள், இனம் புரியாத உணர்வுகள் தோன்றி மறைந்தன.

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மூத்த ஜோடிகள் வெளியில் நின்று கொண்டிருந்த தங்கள் மகனிடமும் மருமகளிடமும் ஜன்னல் வழியாகப் பேசிக்கொண்டிருந்தனர் .
“உடம்பை பாத்துக்குங்க அப்பா ஊருக்குப் போனதும் போன் பண்ணுங்க” என மகனும் “மாத்திரை சாப்பிட மறந்துடாதீங்க மாமா” என மருமகளும் சொல்லி க்கொண்டிருந்தனர் .

அப்போது அவனுக்குப் பக்கத்து இருக்கையில் வட இந்திய இளைஞன் ஒருவன் வந்து அமர்ந்தான்.

அவனது பெற்றோர் கண்ணீர் மல்க மகனுக்கு விடை கொடுத்து கொண்டிருந்தனர். பிரிவுகள் தற்காலிகமோ நிரந்தரமோ மனித வாழக்கையில் பிரிவு என்பது வலி தான். ஆனால் தன் விஷயத்தில் அப்படி இல்லையோ ? தான் மட்டும் இதற்கு விதி விலக்கோ ? ஆனந்தின் மனதில் கேள்விகள் விரிந்தன.

ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட பிளாட்பாரத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். சிக்னல் விழுந்து மிக லேசான அதிர்வுடன் ரயில் புறப்பட சுயநினைவுக்கு வந்தான்.

இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நட்சத்திர புள்ளிகளாய் விரிந்து கிடந்த இரவு நேரத் தில்லி மாநகரம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி மறையத் துவங்கியது.

பயணிகள் உறங்க தயாராகிக் கொண்டிருக்க ஆனந்த் எழுந்து கொக்கிகளிலிருந்து செயினை விரித்து பெர்த்தை தூக்கிப் பொருத்தினான் . எதிர் புறத்தில் சிரமப்பட்டுக்கொண்டிந்த பெரியவருக்கும் உதவி செய்தான் .

“பங்கஜம்., நீ…கீழ் பெர்த்தில் படுத்துக்கொள்… நான் மிடில் பெர்த்தில் படுத்துக்குறேன்” என சொல்லிவிட்டு மேலே ஏற முயன்ற பெரியவரிடம்

“சார் நீக்க என்னோட லோயர் பெர்த்தில் படுத்துக்குங்க” என கூறி மாற்றி கொண்டான்.

“நன்றி நான் சாமிநாதன் ரிடையர்டு பேங் மேனேஜர்”

என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்.

“நான் ஆனந்த். டில்லியில உத்யோக் பவனில வேலை பாக்கிறேன். உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி…” என்றான்.

அவரிடம் குட் நைட் …சொல்லி விட்டு உறங்க முற்பட்டவனுக்கு ஏனோ வெகு நேரம் வரை உறக்கம் வரவில்லை .

இரவில் ஏதோ ஒரு ஸ்டேசனில் ரயில் நின்று புறப்பட்டது. திருமண வாழ்வில் வர்ஷா வுடன் ஏற்பட்ட சின்ன சின்ன வாக்கு வாதங்கள்.

நாளாக நாளாகப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி ஈகோ மற்றும் விட்டுக்குக்கொடுக்காத மன நிலை காரணமாக அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் வளர்த்துக் கொண்ட வெறுப்புணர்வுகள். திருமணமான சிலவருடங்களிலேயே பிரச்சனைகள் முற்றி டைவோர்ஸ் நோட்டீஸ் வரை போய்விட்டிருந்தது…

கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் எப்போதும் தானே விட்டுக்கொடுக்க வேண்டுமா…

ஒருவருக்கொருவர் விருப்பங்கள் முடிவுகள் மாறும் போது யாருக்காக யார் விட்டுக் கொடுப்பது?

எது எப்படியோ பிரிந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடலாம்…

ஒருவேளை வர்ஷாவும் தன்னைப்பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பாளோ…

என திருமணமான நாளிலிருந்து இன்று வரை நிகழ்ந்தவைகளின் நினைவுகள் அவனை உறங்க விடாமல் செய்திருந்தன.

ஒரு வழியாக உறங்கிபோனவன் மறுநாள் காலையில் கண் விழித்த போது….’குட் மார்னிங்’ என்றார் பெரியவர் முகத்தில் புன்னகையோடு எதிர் இருக்கையில் அமர்ந்தபடி.

“குட் மாரனிங் சார்…”

பதில் வணக்கம் சொல்லி புன்னகைத்தான் ஆனந்த்.

ரயிலிலேயே இரண்டு இரவுகள் ஒரு பகல் என உறங்கி விடிந்து தொடருகிற பயணம். அந்த இரண்டு நாட்களும் ரயில் பயணமே வாழ்க்கை. சகபயணிகள் தான் பேச்சுத்துணை. பயணம் முடிந்த அடுத்த இரண்டு நாட்களுக்கு அவ்வப்போது லேசாக அசைந்து கொண்டே பயணிக்கிற மாதிரி உணர்வுகள் வந்து போகிற நீண்ட பயணம் அது.

ரயிலுக்குள் காலை உணவை விற்றுக்கொண்டுவந்த ஊழியரிடம் உணவை வாங்கி உண்டு காபி குடித்த பின் வரப்பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தான் ஆனந்த்.

பின் ரயிலில் உள் புறமாக நடந்து சென்று பக்கத்து கம்பார்ட்மென்ட்களில் தெரிந்தவர்கள் யாரும் தென்படுகின்றனரா என்று பார்த்தான். அப்போது அங்கு அமர்ந்திருந்த அந்த சர்தார்ஜி தம்பதிகள் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தனர்.

அந்தப் பெண்ணை பார்க்கும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் போல் தெரிந்தது. கலப்பு திருமணமாக இருக்லாம். இருவரின் மொழியும் மாறுபட்டிருந்ததால் அவர்கள் தங்களுக்குள் பொதுவான மொழிகளில் ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். அது ஏதோ வாக்குவாதம் போலிருந்தது அவனுக்கு.

காதலை அன்பை வெளிப்படுத்துவதற்கு மனிதர்கள் வார்த்தைகளை உபயோகப்படுத்துவதைவிட ஒருவர் மீது ஒருவர் கோபத்தை கொட்ட வெறுப்பை வெளிப்படுத்த சன்டையிட திட்டிக்கொள்ளத்தான் வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்துகின்றனரோ என்று ஏனோ தோன்றியது. அவனுக்கு. தனது இருக்கைக்குத் திரும்பிவந்து அமர்ந்தான் ஆனந்த்.

“மாத்திரை சாப்பிடுங்கோ தண்ணி குடிங்கோ “…என பங்கஜம் தன் கணவர் சாமிநாதனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் . அவர்களையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திடம்

“தம்பி எனக்கு இவ தான் எல்லாம் நான் இந்த வயசிலும் நல்லா இருக்கேன்னா அதுக்கு காரணமே இவள்தான்” என தன் மனைவியைப் பற்றி பெருமையாகச் சொன்னார் பெரியவர்.

ரயில் இடார்சியிலிந்து நாக்பூர் நகரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . திடீரென்று வேகம் குறைய பாதையில் நின்று விட்டது. சாமிநாதன் ஆனந்திடம் “தம்பி நீங்க எந்த ஊர்…? என்றார்

நான் தஞ்சாவூர் சார்.

“எங்களுக்கும் பூர்விகம் தஞ்சாவூர் தான் . தஞ்சாவூர் பக்கத்தில பாபநாசம். டெல்லியில செட்டில் ஆயிட்டோம். சென்னையில இருக்குற எங்க பொண்ணு வீட்டுக்கு போறோம்” என்றார்.

அப்போது தண்டவாளத்தில் ஏதோ விரிசல்கள் ஏற்படடிருப்பதாகவும் அதன் காரணமாக ரயில் புறப்பட இன்னும் இரண்டு மணிநேரமாகலாம் என்று யாரோ சொன்னார்கள். அந்த வனாந்திர பகுதி பசுமையோடு மனிதநடமாட்டமே இல்லாமலிருந்தது. ரயிலிருந்து இறங்கி வேடிக்கை பார்க்கத் துவங்கினான் ஆனந்த்.

“தம்பி நானும் வரேன்” என்றார் பெரியவர்.

“கீழே இறங்காதீங்கோ விழுந்துடப்போறேள்…”

என அவரின் மனைவி தடுக்க ,

“பயப்படாதே தம்பியோட சித்த நேரம் கீழே நிக்கறேன். பெட்டிக்குள்ளேயே அடைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு.” என சொல்லி ஆனந்த் கைபிடித்து கீழே இறங்கினார்.

வெளியில் வீசிய காற்றும் வெயிலும் இதமாக இருந்தது.

கொஞ்ச நேரம் சுற்றுப்புறத்தை கவனித்தபின்…

தம்பி…டில்லியில் எங்க இருக்கீங்க? என கேட்டார்.

ஆர் கே புரத்தில் வீடு சார்.

கல்யாணம்..? என்று கேட்டவரிடம்…..

ம்…ஆயிடுச்சி. மனைவி வர்ஷாவுக்கு டில்லி நேரு பிளேசில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை எனக் கூறினான்.

மனைவியைப்பற்றிக் கேட்டவுடன் சட்டென்று ஆனந்தின் முகம் மாறிவிட்டதைக் கவனித்தவர்…

“சாரி….ஏதாவது பர்சனலா கேட்டுட்டேனா”… என்றார்.

இல்லை சார்….நீங்க உங்க மனைவி மேலே இவ்வளவு அன்பாய் இருக்குறதை பார்க்க எனக்கு ஆச்சரியமாயிருக்கு. இத்தனை வருஷத்திற்குபிறகும் எந்த சலிப்புமில்லாமல்….ஆதர்ச தம்பதிகள் நீங்கள்” என்றான்.

ஹ..ஹா… என்று சிரித்தவர்…

தம்பி…நீங்க எப்படி ?

கேட்டவரிடம் உண்மையை சொல்லாமா… வேண்டாமா… என யோசித்து பிறகு தன் கதையை விவரமாக கூறினான்.

அதைக்கேட்டவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பேசத்துவங்கினார்…தம்பி நீங்க மனசைத்திறந்து பேசினதுனால சொல்றேன்…

சில மோசமான மனிதர்கள், இணைந்து வாழவே முடியாத ஜோடிகள் இருக்காங்க. இப்படிப்பட்டவர்களைத்தவிர, பெரும்பாலும் சாதாரணமாக உறவுகள் நடுவே இருப்பது “ஈகோ பிராப்ளம்”தான். சம்பளம் கொடுக்குற முதலாளி கிட்ட, சாலையில் வாகனத்தில் பயணிக்கப்பற யார் மேலே தப்பு பாக்கமா திட்டிட்டு போயிடுற மூனாவது மனிஷன் கிட்ட “ஈகோ” பாக்கா முடியாத நாம் நமக்குனு துணையா இருக்கிற உறவுகளிடம் ஈகோ பாக்குறது தான் பாதி பிரச்சனைகளுக்குக் காரணம்.

திருமண வாழ்க்கையில நிறைய ஜோடிகளுக்கு சில சமயங்களில் பிரிஞ்சிடலாம்னு தோணும். அதைக் கடந்து வருகிறவர்கள் தான் கடைசி வரைக்கும் சேர்த்து வாழமுடியும்.

மனிதர்கள் குறையில்லாதவர்னு யாரும் இல்ல. நமக்குள்ளே எத்தனையோ குறைகள் இருக்கும் போது அடுத்தவங்க மட்டும் குறையில்லாம இருக்கனுமின்னு எதிர்பார்க்கறது எந்த வகையில் நியாயம். எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது ஏமாற்றங்களும் அதிகமாகுது.

மனிதர்களை அவர்களின் நிறை குறைகளோட ஏற்றுக்கொள்ள முயற்சி பண்ணனும். துணை சரியில்லைனு மாத்திக்கிட்டே போனா வாழ்க்கையை வாழுறது எப்போ? முழுமையான சரியான துணைனு உலகத்தில யாரும் கிடையாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழறது தான் வாழ்க்கை.

சார் எத்தனை பேருக்கு உங்கள மாதிரி பக்குவம் இருக்கும். எனக்கும் கோபம் வரும். நான் சாதாரண மனிஷன் தானே…

தம்பி நீங்க நினைக்கிறமாதிரி நான் அதிசயமான மனிஷனில்லை. நானும் சராசரி மனிஷன் தான். நானும் ஆம்பளை என்ற ஈகோவில ஆரம்பத்திலே அவளை அடிமையா நடத்தனும்னு நினைச்சேன். நான் சொல்றத மட்டும் தான் கேட்கனுன்னு நினைச்சேன். ஆனா ஆரம்பத்திலேயே என் தவறை உணர்ந்து அவளை மதிக்க முயற்சி பண்ணினேன். வாழக்கையில எல்லாவற்றையும் கடந்து வருகிற போது துணையோட அருமை புரியுது.

அந்த காலம் மாதிரி இப்ப இல்ல. பெண்கள் படிச்சி முன்னேற ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை புரிஞ்சுண்டு விட்டுக் கொடுத்து வாழனுன்னு ஆண்கள் முழுமையா உணரனும். பெண்களும் ஆண்களை புரிஞ்சிக்கனும். கருத்துவேறுபாடுகள் வருகிறபோது ஒரு சின்ன இடைவெளிக்குப்பிறகு இரண்டு பேரில யார் சரின்னு விவாதம் பண்றதவிட்டுட்டு இரண்டு பேருக்கும் எது சரின்னு மனம் விட்டுப் பேசினா தீர்வுகள் கிடைக்கும்… இதெல்லாம் இன்னிக்கு நிறைய பேருக்கு நல்லாவே தெரியும் ஆனா நடைமுறையில் தான் சிக்கல்… என்றார்.

சார்..நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படலை. தனியா இருந்துட்டா நிம்மதியா இருக்குமுன்னு நினைக்கிறேன்.

மனுஷாளுக்கு துணை ரொம்ப முக்கியம். துணை தான் பலம். அதுவும் முதுமையில் துனணயில்லாம இருக்கறது மாதிரி கஷ்டம் வேறெதுவுமில்லை. பிள்ளைகளே கைவிட்டாலும் கணவன் மனைவி ஒருத்தருக் கொருத்தர் துணையா இருந்தா வயசான காலத்திலேயும் கஷ்டங்களை சமாளிச்சிகிட்டு வாழ்ந்துடலாம்.

ஒரு வகையில நம்ம வாழ்க்கையும் இந்த ரயில் பயணம் மாதிரிதான். பாதையில விரிசல்கள் ஏற்பட்டா அவைகளை சரிசெஞ்சிப் பயணத்தை தொடரனுமே தவிர அதுக்காகப் பயணத்தையே ரத்து செய்ய வேண்டியதில்லை.

எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். எதையும் ஈஸியா தொலைச்சிடலாம் திரும்ப கிடைக்கிறது தான் கஷ்டம். துணையை நேசிக்கக் கத்துக்கனும். வீட்டுக்குள்ளேயே விட்டுக் கொடுக்குறதால ஒண்ணும் குறைஞ்சிடப் போறதில்லை. மனசில அன்போட ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ்ந்தா வாழ்க்கை சொர்க்கமாயிடும்….

தம்பி… என்னோட ஒரு அன்பு வேண்டுகோள் தான் இது…நீங்க உங்க எண்ணத்தை மாத்திகிட்டு உங்க மனைவியை நேசிச்சி அவளடோட சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்… நாங்க அடுத்த மாசம் தில்லிக்கு வந்தவுடன் கூப்பிடுறேன். எங்க வீட்டுக்கு ஜோடியா வாங்க. உங்க மனைவி வர்ஷாவையும் பார்க்கனும் அவங்க கிட்டேயும் பேசுறோம் நாங்க.

தமிழ் நாட்டிலிருந்து தில்லி வந்து குடும்ப உறவுகளிலிருந்து விலகி தூரத்தில் தனியா இருக்கிற உங்களுக்கும் புதிய உறவுகள் கிடைச்ச மாதிரி இருக்கும். அவசியம் வரணும்…
என்றார் சாமிநாதன்.

அவரின் பேச்சைக்கேட்ட ஆனந்தின் மனதில் தெளிவு பிறந்தது. சார் நிச்சயமா வர்ஷாவோட உங்க வீட்டுக்கு வர்றேன். உங்க அன்பான. அழைப்புக்கு நன்றி சார்…என்றான் ஆனந்த்.

அவன் மனதில் சென்னையில் தன் வேலைகளை முடித்து விட்டு அடுத்தவாரம் தில்லிக்கு திரும்பும் நாளை எண்ணத்துவங்கினான்.

சாமிநாதன் சாரும் ஆனந்தும் ரயிலில் ஏறி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கணவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தாள் பங்கஜம். தண்டவாள விரிசல்கள் சரி செய்யப்பட்டு ரயில் புறப்படத் தயாரானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *