விளையும் பயிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,752 
 

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய குடியாத்தம். நடுப்பேட்டையில் அஞ்சுமான் தெருவும், கோபாலபுரம் மஜீத் தெருவும் இணையும் இடத்திலிருந்து தொடங்கும் வயற்காடு பச்சைப் பசேல் என்றிருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போடப் பட்டிருக்கும். முகப்பில் ஆளுயர கல் தூண்கள் நான்கைந்து நட்டு வைத்திருப்பார்கள். ஒரு நபர் மட்டும் நுழையக்கூடிய விதத்தில் அவை அமைந்திருக்கும். ஆடு, மாடு போன்ற பிராணிகள் வயற்காட்டில் நுழையாமல் இருக்கத்தான் அந்த ஏற்பாடு.

வயற்காட்டுக்குப் போகும் வழியில் இடது பக்கம் வஹாப் பாயோட மரக் கடையும், வலப் புறம் வடை சுடும் மூதாட்டிக் கடையும் இருக்கும். புவனேஸ்வரி பேட்டை, கஸ்பா போன்ற இடங்களுக்குப் போகிறவர்கள் குறுக்கு வழியாக அந்த வயற்காட்டுக்குள் நுழைந்துப் போவர். அவர்களைத் தவிர்த்து சில ‘குடிமகன்’களும் வயற்காட்டுக்குள் நுழைவதுண்டு. காரணம், வயற்காட்டுக்குள் மறைத்து வைத்து விற்கப்படும் கள்ளச் சாராயம்தான்! அதைக் குடித்துவிட்டு வருவோர் நேராக மூதாட்டி கடைக்கு வந்து காரமான மிளகாய் பஜ்ஜியும், சூடான ஆட்டுக் கறி சாப்ஸும் வாங்கிக் கடித்துக்கொண்டே செல்வர்.

மாதக் கடைசியில் போலீஸ் லாரி வந்து நிற்கும். அதிலிருந்து சிவப்புத் தொப்பி அணிந்து, அரை டவுசர் போட்ட போலீசார் இறங்கி வந்து மூதாட்டி கடை அருகில் நின்றுக்கொண்டு வயற்கட்டிலிருந்து வருவோரை நிறுத்தி வாயை ஊதச் சொல்வர். சாராய நெடி அடித்தால் பிடறியில் ஓங்கி ஓர் அடி. “ஐயோ… அம்மா….” என்று அலறி அடித்துக்கொண்டு கீழே விழுவர். அதோடு அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு போய் ‘செம’ கவனிப்பு வேறு.

வயற்காட்டில் கரும்பு, கம்பு, கேழ்வரகு, நெல் என வகை, வகையாய் பயிரிட்டிருப்பார்கள். வயற்காட்டின் நடுவே மின்சாரக் கம்பிகளில் தூக்கணாங்குருவி கூடுகள் வரிசையாய்த் தொங்கும். பம்பு செட் பக்கம் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க, வரப்பு ஓரப் பொந்துகளில் இளைஞர்கள் சிலர் நண்டு பிடித்துக் கொண்டிருப்பர். காற்று வீசும்போது நெற்கதிர்கள் அலை, அலையாய் அசையும் காட்சி மனதைக் கொள்ளைக் கொள்ளும்.

பேருந்து நிலையம், தரணம்பேட்டை பஜார், நெல்லூர்பேட்டைச் சதுக்கம் போன்ற முக்கியமான இடங்களைத் தவிர்த்து, கணமுக்கல பெத்த முனியப்பச் செட்டித் தெரு, குல்லாரி மந்திரி தெரு, போடா சலமய்யச் செட்டித் தெரு, பங்காரு செட்டித் தெரு, ஆரணி நன்னுமியான் தெரு, ஆலியார் அப்துல் ரஷீத் சாயபு தெரு போன்ற சின்னச் சின்னத் தெருக்கள் வழியாக பகல் நேரங்களில் போகவே பயமாக இருக்கும். மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக்கிடக்கும் தெருக்கள் அவை.

ஒவ்வொரு வருடமும் கெங்கையம்மன் கோவில் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும். கோவிலை ஒட்டினாற்போலிருக்கும் வற்றிய ஆற்றில் விதவித மான கடைகள் விரியும். ரங்கராட்டினம், மிட்டாய் கடைகள், மேஜிக் ஷோ போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களும், சினிமா தியேட்டர்களில் விசேஷக் காட்சிகளும் இடம்பெறும். பூ வியாபாரிகளின் கை வண்ணத்தில் அதிவிமரிசையாய் புஷ்பப் பல்லக்கும், அமானுல்லா பாயின் திறமையில் வாண வேடிக்கையும் நகரத்தையே குலுக்கி எடுக்கும். சுத்துப்பட்டி கிராமங்களிலிருந்து மக்கள் படையெடுப்பதால் ஊர் முழுக்க, ‘ஜெ,ஜெ’வென ஜன சமுத்திரம் பிரவாகமெடுக்கும். தேர் திருவிழா, அம்மன் சிரசு ஊர்வலம், புஷ்பப் பல்லக்கு, பாட்டுக் கச்சேரி, மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என ஒரு வாரத்துக்கு அமர்க்களமாய் இருக்கும்.

மொஹரம் பண்டிகை வந்துவிட்டால் போதும், மீண்டும் குடியாத்தம் நகரத்தில் கோலாகலம் தலை தூக்கும். மொஹரம் முதல் தேதியிலிருந்து தொடங்கி பத்தாவது நாள் வரை ஒவ்வொரு நாளும் மாலையில் உஸ்தாத் இஸ்மாயில் பாய் தலைமையிலும், பச்சே பாய் தலைமையிலும் ‘தாலீம்’ எனப்படும் சிலம்பாட்டமும், கோலாட்டமும் நடுப்பேட்டையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வரும். போதாத குறைக்கு அமீர் பாயும், மவுலா பாயும் புலி வேஷம் போட்டுக் கொண்டு தங்கள் பங்கிற்கு ஆடிக் களிப்பார்கள். பத்தாம் நாள் பேண்டு வாத்தியம் முழங்க, அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் ‘பாரா இமாம்’ ஊர்வலமாகக் கொண்டுவரப்படுவார்கள். இஸ்லாமியப் பெருமக்கள் தெருக்களின் இரு புறமும் நின்று ‘பாத்திஹா’ ஓதி இனிப்பு வழங்குவார்கள். அன்றிரவு ‘அலாவா’ எனப்படும் தீமிதி விழாவும் நடைபெறும்.

அப்போது நாங்கள் அஞ்சுமான் தெருவில்தான் குடியிருந்தோம். வாடகை வீடு. பக்கத்து வீட்டில் என் நண்பன் உமாபதி இருந்தான். அவனோடு சேர்ந்து நான் கோலி, பம்பரம், கில்லி எல்லாம் விளையாடியிருக்கிறேன்.

ஒரு நாள் திண்ணையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தான் உமாபதி.

“ஏண்டா அழுறே?” என்று கேட்டதற்கு, “எங்க வீட்ல விருந்தாளிங்க வந்தாங்கன்னு கோழி அடிச்சு குருமா வெச்சுட்டாங்கடா…” என்று கேவி, கேவி அழலானான்.

“இதுல என்ன இருக்கு? விருந்தாளிங்க வந்தா அப்படித்தானே செய்வாங்க?” என்றேன்.

“அதுக்காக ஆசையா வளத்த என் கருப்புக் கோழிதான் கிடைச்சதா? கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாம அறுத்துப்போட்டுட்டானுங்க.” – அழுகை மேலும் வலுத்தது.

கோழின்னா உமாபதிக்குக் கொள்ளைப் பிரியம். கோழிகளை அறுப்பது அவனுக்குச் சுத்தமாப் பிடிக்காது. வீட்டில் கோழி கறி சமைத்தால் அவன் சாப்பிட மாட்டான். அத்தனை ஈடுபாடு அவனுக்கு கோழிங்க மேல்.

வியாபார விஷயமாக குடியாத்தத்தை விட்டு வெளியேறி சென்னையில் செட்டில் ஆகி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. கால ஓட்டம் எத்தனை வேகமாக உள்ளது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஐம்பது வருடங் களில் குடியாத்தம் பக்கம் வர எனக்கு வாய்ப்பே இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் எனக்கு நிலபுலனோ, சொத்து சுகமோ அல்லது உறவுக்காரர்களோ அங்கு இல்லாமல் போனதுதான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு வழக்கு விஷயமாக வக்கீல் ஒருவரைப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட, இதோ… குடியாத்தம் வந்திருக்கிறேன்.

புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அசந்துபோனேன். ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த குடியாத்தமா இது? எங்கு பார்த்தாலும் ‘கச,கச’வென ஜனக் கூட்டம். ஆட்டோக்கள், லாரிகள், பைக்குகள் என ஒரே வாகன ஓட்டம்.

நான் வந்த வேலை முடிந்ததும், முன்பு தங்கியிருந்த அஞ்சுமான் வீதிக்கு ஆவலோடு போனேன். என்ன ஆச்சரியம்? தெருவே உருமாறிப்போயிருந்தது. பயிர் முளைக்கவேண்டிய வயற்காட்டில் வீடுகள் முளைத்திருந்தன. வயற்காடு முழுக்க ஒரு காலனியாக மாறியிருந்தது. பழைய வீடுகள் பல இடிக்கப்பட்டு உயர்ந்த கட்டிடங்களாக எழும்பியிருந்தன.

நாங்கள் குடியிருந்த வீட்டை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்தேன். வீட்டின் அமைப்பு மாறிப்போயிருந்தாலும் பழைய அடையாளங்கள் சில ஆங்காங்கே தென்படவே செய்தன.

அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நான் நிற்கையில், வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வெளிப்பட்டார்.

என்னைப் பார்த்ததும் தயங்கி நின்றவர், “யாரு..? சாருக்கு என்ன வேணும்..?” என்று கேட்டார்.

“பெரியவரே.. ரொம்ப வருஷங்களுக்கு முன்னே நான் இந்த வீட்லதான் குடியிருந்தேன்.என் நண்பன் உமாபதிகூட இதோ இந்த வீட்லதான் இருந்தான்.” என்று நான் நினைவூட்ட, கண்களை இடுக்கிக்கொண்டு என்னைக் கூர்மையாகப் பார்த்தார் அவர்.

“யாரு..? மதியா..?”

“அட, சரியாச் சொல்றீங்களே, நீங்க..?”

“என்னைத் தெரியலை? நான்தான் உமாபதியோட அப்பா காசிநாதன்.”

எனக்கு ‘சடா’ரென நினைவுக்கு வந்தது.

“காசி மாமாவா நீங்க? அடையாளமே தெரியலையே?”

“நீ கூடத்தான் மாறிப்போயிருக்கே. அப்ப சிறுவனா இருந்தே இப்ப ஒரு பெரிய மனுஷனா வந்து நிக்கறே.”

“பரவாயில்லையே, இந்த வயசிலும் நீங்க என்னைக் கண்டுபிடிச்சிட்டீங் களே?”

சிரித்தவர், “பஜார் பக்கம் போறேன். வர்றீயா?” என்றார்.

“நானும் ஊருக்குக் கிளம்பணும். வாங்க…”

அவருடன் நடந்தேன்.

எண்பதைத் தொடும் இந்த வயதிலும் அவர் நடந்து வந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அறுபதை நெருங்கத் தொடங்கியதுமே ஷுகர், பீ.பி., தைராய்டு, கொலஸ்ட்ரால் என ஏகப்பட்ட நோய்களுக்கு ஆளாகி நடக்கக்கூட சிரமப்படும் நான் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்பதைவிட சற்றே பொறாமைப்பட்டேன் என்பதுதான் உண்மை.

வழியில் பழைய இடங்கள் எப்படியெல்லாம் மாறிப்போயிருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே வந்தார் காசி மாமா.

“மதி… இந்த மூலையில யாசீன் பாயோட டீ கடை இருந்ததே ஞாபகமிருக்கா உனக்கு?”

“ஏன் இல்லாம? கிரீன் கேஃப் பத்தித்தானே சொல்றீங்க?”

“அட, பேருகூட ஞாபகமிருக்கா உனக்கு?”

“ஏன் இல்லாம? சாயந்தர நேரத்துல சுடச் சுட சமோசா போடுவாங்க. அதை வாங்கித் தருவார் என் அப்பா. என்ன டேஸ்ட். இப்பக்கூட மனசுல நிக்குது.”

இரண்டு டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அருகில் இருந்த சிக்கன் ஸ்டாலில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தவர், “மதி, இப்படி உட்கார்.” என்று இன்னொரு ஸ்டூலைக் காட்டினார்.

நானும் அமர்ந்ததும், “இப்பெல்லாம் சிக்கன் ஸ்டாலுங்கதான் நல்ல விதமா நடக்குதுங்க.” என்றார்.

டீ வந்தது.

உறிஞ்சிக்கொண்டே கவனித்தேன்.

அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் உட்கார்ந்திருந்த ஸ்டாலிலும் ஏகப்பட்ட கிராக்கி. கடைக்காரர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் கோழியைப் பிடித்து கால்களை மடக்கி, ‘சரக்’கென்று கத்தியால் அதன் கழுத்தை அறுத்து கூடையில் போட்டுவிட்டு, அது படபடத்து அடங்குகிற வரை ஏற்கனவே கழுத்து அறுபட்டு அடங்கிப் போயிருந்த கோழியை எடுத்து வெந்நீரில் முக்கி எடுத்து ‘பர,பர’வென தோலை உரித்து, கத்தி யால் துண்டு துண்டாய் வெட்டி, பையில் போட்டு கொடுத்துக் கொண்டிருந்தார் கடைக்காரர்.

எனக்கு ‘சட்’டென உமாபதியின் நினைவு வந்தது.

“மாமா… இப்ப உமாபதி எங்கே இருக்கான்? என்ன பண்றான்?” என்று கேட்டேன்.

“நீயாவே கண்டுபிடிக்கிறாயான்னு பேசாம இருந்தேன். இவனை யார்னு நினைச்சே? இவன்தான் உமாபதி.” என்றார் அவர்.

‘அநாவசியமாய் கோழிகளை அறுத்துப்போட்டு இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இவனா உமாபதி?’

நான் ‘சட்’டென எழுந்தேன்.

“உட்கார் மதி. அவனோடு பேசிட்டுப் போ.”

“பரவாயில்லை மாமா. இன்னொரு நாளைக்கு வர்றேன். இப்ப எனக்கு அவசரமா சென்னை பஸ் பிடிக்கணும். கடையில் வேறு ஏகப்பட்ட கிராக்கியா இருக்கு.”

பொய் சொல்லிவிட்டு ஆட்டோவை மடக்கி ஏறிக்கொண்டேன்.

சில விளையும் பயிர்கள் முளையில் தெரிவதில்லை.

– இச்சிறுகதை 27-06-2020 தேதியிட்ட “மக்கள் குரல்” நாளிதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *