விளையாட்டு வாத்தியார்

 

வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது.

அண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. அண்ணன் செல்வத்தை நினைத்து, கைகாலெல்லாம் நடுங்கியது அவளுக்கு.

ரிஜிஸ்டர் கல்யாணத்திற்கு அவளுடைய கிராமத்திலிருந்து வந்து வள்ளியின் சார்பாக சாட்சி கையெழுத்து போட்ட பக்கிரி, ஊனமான தன் காலை ஒரு முறை தொட்டுபார்த்துக் கொண்டான். அவனுக்கும் வள்ளியின் அண்ணன் செல்வத்தை நினைத்து, பயமாக இருந்தது.

ஊனமான தனக்கும், வெகுளிப் பெண் வள்ளிக்கும் பொருத்தம் என்று தான் இது வரை நினைத்து வந்ததற்கும், இப்போது அவளுக்கு வேறு ஒருவனை தானே கல்யாணம் செய்து வைக்கும் நிலைமைக்கு வந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து பார்த்தான்.

அதில் வருத்தம் ஏதும் இல்லாமல் மனம் நிறைவாகவே இருப்பதாகத் தோன்றியது பக்கிரிக்கு.

செல்வம் அடிக்கும் போது, தன்னை பிழைத்து போ என்று விட்டு விட்டது கூட தன் கால் ஊனத்தை பார்த்து தான் என்பதும் நினைவுக்கு வந்தது.

இல்லையென்றால் கோலப்பனை அடித்து கொன்றது போல் அவனையும் செல்வம் கொன்றிருப்பானோ…

தீடீரென்று ஜன்னலுக்கு வெளியே கடைத்தெருவில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பக்கிரியும், வள்ளியும் திரும்பிப் பார்த்தார்கள். போலீஸ் ஒரு மனிதனை துரத்தி கொண்டு ஓடுவது தெரிந்தது.

துரத்தப்படும் அந்த மனிதனைப் இருவரும் உற்றுப்பார்த்தார்கள்….

“ வள்ளி… அது செல்வம் அண்ணன் தான்….” பக்கிரி சொன்னான்.

“ ஆமாண்டா பக்கிரி… அது அண்ணன் தான்…” வள்ளி பதில் சொன்னாள்.

இருவருக்கும் நெஞ்சு பட பட வென்று அடித்துக் கொண்டது.

“ உன்னோட அண்ணன் செல்வத்தை பத்தி எனக்கு தெரியும்.. கண்டிப்பா செல்வத்தை போலீசால பிடிக்க முடியாது..” பக்கிரி சொல்ல..

“ ஆமாண்டா… எனக்கும் அப்படித்தான் தோணுது..” என்றாள் வள்ளி.

“ செல்வம் கண்டிப்பா நம்மள தேடி ஊருக்கு வரப்போவுது.. அதுக்கு தான் போலீசுகிட்ட இருந்து தப்பிச்சுருக்கும்…..” பக்கிரியின் பேச்சு பயத்துடன் வந்தது.

“ வந்து என்ன செய்யும் அண்ணன்.. கோலப்பனை அடிச்சு கொன்னது மாதரி, நம்ம மூணு பேரையும் அடிச்சு கொன்னுடுமா..” வள்ளி.

“ இப்ப என்ன செய்ய…. வாத்தியாருகிட்ட அண்ணன் தப்பிச்சகிட்ட விஷயத்தை சொல்லவா…” பக்கிரி கேட்டான்.

“ வேணாண்டா.. போலீசுகிட்ட பிடிச்சுக் கொடுக்கப் போறேன்னு சொல்லுவாரு…” வள்ளி சொன்னாள்.

வள்ளி இப்படி பேசுவதைக் கேட்டு, கல்யாணம் முடிஞ்சா வெகுளித்தனம் போய்விடும் என்று யாரோ சொன்னது சரிதான் என்று தோன்றியது பக்கிரிக்கு.

கிராமத்துக்கு திரும்பிய வள்ளியும் பக்கிரியும், குமாருக்கு விஷயத்தை சொல்லாமல், இருட்டியவுடன் அண்ணன் செல்வம் வருவான் என்று பயத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் போலீசும் மறைவாய் ஊருக்குள் காத்துக்கொண்டிருந்தது.

செல்வம் எதற்காக ஒருத்தன் மேல் கோபப்படுகிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் நினைத்து விட்டால் அந்த மனிதனை மிருகத்தனமாக புரட்டி, புரட்டி அடிப்பான்…

செல்வம் பலசாலி. முறுக்கேறிய உடம்பு அவனுடையது. அவனை யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. யாராவது ஏன் எதற்கு என்று கேட்க போனால் அவர்களும் அவனிடம் அடி வாங்க வேண்டியதுதான். டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் செல்வத்தைப் பற்றி புகார் கொடுக்கவும், சாட்சி சொல்லவும் யாருக்கும் தைரியம் இதுவரை வந்ததில்லை.

செல்வத்தை பொறுத்தவரை அவனுக்கு முன் இருக்கும் ஒரே சவால், வள்ளியின் குழந்தைத்தனமும் அது சம்பந்தமாக வரும் மற்ற பிரச்சினைகளும்தான். அவளுடைய குழந்தைத்தனத்திற்கு செல்வமும் ஒரு காரணம். அவர்களின் அப்பா அம்மா சின்ன வயதிலே இறந்து விட்டார்கள். செல்வம் சின்ன வயதிலிருந்தே ஊரே வெறுக்கும் ரௌடிப்பையனாக உருவெடுத்தான். செல்வத்தின் மேல் இருக்கும் பயத்தினால் அக்கம்பக்கம், உறவுக்கார்கள் என்று யாரும் வீட்டிற்கு வருவதில்லை. யாரும் வள்ளியுடன் பேசுவதுமில்லை. தன் போக்கில் அவள் வளர ஆரம்பித்தாள். அதனால் அவள் பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாகவே இருந்தது.

பக்கிரிக்கு மட்டும் ஒரு பாட்டி இருக்கிறாள். மற்றபடி வேறு யாரும் இல்லை அவனுக்கு. அவன் ஒருத்தன் தான் வள்ளியிடம் பேசுவான். இது சின்ன வயதிலிருந்து வரும் பழக்கம். அப்போது செல்வம் ஒன்றும் சொன்னதில்லை.

மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு நாள்.

வள்ளியிடம் பக்கிரி பேசிக்கொண்டிருப்பதை பார்த்த செல்வம்,

“ ஏண்டா.. நொண்டிப் பயலே… வள்ளிக்கிட்ட என்னடா பேச்சு…”
என்று அடிக்க ஆரம்பிக்க..

“ அண்ணா.. அவனை அடிக்காதே…” என்று அவள் கெஞ்ச, செல்வத்தின் கோபம் உச்சத்திற்கு போய், இன்னும் உக்கிரமாய் அடித்தான். பிறகு பக்கிரியின் ஊனத்தைப் பார்த்தோ என்னவோ அடிப்பதை நிறுத்திவிட்டான்.

ஆனால் கோலப்பன் விஷயத்தில் அப்படி செல்வம் கருணை காட்டவில்லை. ஒரு வேளை அவன் பக்கிரி போல் ஊனமாக இருந்திருந்தால் கருணை காட்டி விட்டிருப்பானோ என்னவோ…

கோலப்பன் மர வேலைசெய்யும் ஆசாரி. கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட உண்டு. செல்வம் இல்லாத நேரத்தில், ஒரு நாள் வள்ளியின் வெகுளித்தனத்தை உபயோகப்படுத்தி, அவளிடம் தவறாக நடந்து கொள்ள, வள்ளி அதை புரிந்து கொண்டு கத்தி சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து காப்பாற்ற, கோலப்பன் ஓடி விட்டான்.

விஷயம் செல்வத்தின் காதுக்கு போக, அவ்வளவுதான்….

உடனே கோலப்பன் வீட்டிற்கு போய் அவனை மரண அடி அடித்தான்.

ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. கோலப்பனின் மூக்கிலும் வாயிலும் இரத்தம் கொட்டியது. யாரும் வாய் திறக்கவில்லை.

பக்கிரி மட்டும், “ யாராவது வெலக்கி விடுங்களே….” என்று ஊர் மக்களைப் பார்த்து கெஞ்சினான்.

யாருக்கும் கிட்டே போகும் தைரியம் இல்லை.

குற்றுயிராய் அவன் கிடக்கும் போது, அவனை விட்டுச்சென்றான் செல்வம்.

ஊனம் ஏதும் இல்லாமல், நல்ல உடம்பு உள்ள ஊர் மக்களே செல்வத்தின் ரௌடித்தனத்தை பார்த்து எதுவும் பாதிக்க படாத போது, உடல் ஊனமான பக்கிரிக்கு செல்வத்தின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தோன்றியது.

அன்று மாலை, கிராமத்தில் கபடி போட்டி நடந்தது. புதிதாய் கிராமத்துக்கு மாற்றலாகி வந்த விளையாட்டு வாத்தியார் குமார்தான் அந்த போட்டிக்கு ரெப்ரி.

உள்ளூர் வீரர்கள் பனிரெண்டு பேரும், வெளியூர் வீரர்கள் பனிரெண்டு பேரும் கூடியிருந்தார்கள்.

உள்ளூர் வீரர்களுக்கு செல்வத்தைப் பற்றி தெரியும்.

ஆனால் வெளியூர் வீரர்களுக்கு செல்வத்தைப் பற்றி தெரியாது.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கான நேரம். கிராமத்து மக்கள் குழுமியிருந்தார்கள். பக்கிரியும் அதில் ஒருத்தன்.

பார்க்க வந்தவர்கள் கட்டுபாட்டுடன் உட்கார்ந்திருந்தார்கள் விளையாட்டை பார்க்க.

கபடி விளையாட்டு வீரர்கள் இரண்டு அணியாக ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்றுகொண்டிருந்தார்கள்.

ரெப்ரி குமார் இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு வீரர்களுக்கு கபடி போட்டிக்கான விதிமுறைகளை விளக்கி கொண்டிருந்தார்.

போட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

அங்கு வந்த செல்வம், அந்த இரு வரிசைகளுக்கு இடையே வந்து நின்று கொண்டான். உள்ளூர் மக்கள் யாருக்கும் அவனிடம் பேச தைரியம் இல்லை.

ஊருக்கு புதிதான ரெப்ரி குமார்,

“ யாருப்பா அது….. இப்படி குறுக்க வர்ரது… கொஞ்சம் கூட மரியாதை தெரியாம… போய் மத்த ஜனங்களோட போய் உட்காரு..” என்று மிரட்ட,

உள்ளூர் வீரர்கள், “ சார்… சார்… அவன் கிட்ட வம்பு வைச்சுக்க வேணாம்… அவன் பெரிய ரௌடி…” என்று பதைபதைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து செல்வத்தைப் பற்றி தெரியாத வெளியூர் விளையாட்டு வீரர்கள், ரெப்ரி குமாரை ஆதரித்து, செல்வத்தை மிரட்ட, செல்வம் தன்னுடைய இயல்பான குணத்தோடு, குமாரையும் மற்ற விளையாட்டு வீரர்களையும் அடிக்க வர, நிலைமை முற்றி விட்டது.

பக்கிரிக்கு தான் செல்வத்திடம் அடிவாங்கியதும் அப்போது தான் கெஞ்சியதும் ஞாபகம் வந்தது. அன்று காலையில் கோலப்பனை மரண அடி அடித்து விட்டு செல்வம் வந்ததும் ஞாபகம் வந்தது.

செல்வம் தண்டிக்கப்பட, ஒரு வாய்ப்பு கிடைப்பதாகத் தோன்றியது.

இந்த விளையாட்டு வீரர்களுடன் செல்வம் வம்புக்கு போனதை வைத்து அவனுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும் என்று பக்கிரிக்கு தோன்றியது.

ஊனமான தன்னால் செல்வத்தை திருப்பி அடிக்க முடியாது. அவனிடம், ‘ என்னை விட்டு விடு’ என்று கையெடுத்து கும்பிடுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது. இது வரைக்கும் அவனிடம் அடி வாங்கியவர்கள் எல்லோரும், அப்படித்தான் செய்திருப்பார்கள்…

ஆனால் இந்த கபடி விளையாட்டு வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், செல்வதை வீழ்த்திவிடலாம்…

இப்படி பக்கிரி யோசித்துக் கொண்டிருக்க, செல்வமும் நிலைமையை யோசித்திருப்பான் போலிருக்கிறது.

அவனுக்கும் இது ஒரு வித்தியாசமான நிலை…..

இது வரை செல்வத்தைக் கண்டு பயப்பட்டவர்கள் எல்லாம் எளியவர்கள். செல்வத்திற்கு நிகரான உடல் வலிமை இல்லாதவர்கள்.

ஆனால் இப்போது செல்வம் வம்புக்கு இழுத்தது, வலிமை கொண்ட இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்கள்.

விளையாட்டு வாத்தியார் குமாரை செல்வம் அவமதித்தாக, அந்த இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்களும் நினைக்கும் சூழ்நிலை.

எல்லோரும் நினைத்தால் தன்னை அடித்து அடக்கிவிடலாம் என்பதை உணர்ந்த செல்வம் தன் வாழ்நாளில் முதன்முறையாக அடங்கி போய் விடலாம் என்று நினைத்தான்.

பேசாமல் ஓரமாக போய் அமைதியாக நின்று கொண்டான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கரிக்கு சப்பென்று போய் விட்டது.

இவர்களை வைத்து செல்வத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாது போய் விடும் போலிருக்கிறதே என்று நினைத்தான் பக்கிரி.

எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான்.

கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை சீண்டி விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தரையிலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து செல்வத்தின் மேல் எறிந்தான்.

சட்டென்று திரும்பிய செல்வம்,

“ யாருடா அது… கல் எடுத்து அடிச்சது..” என்று செல்வம் ஒவ்வொருவராக பிடித்து உலுக்கி கேட்க ஆரம்பித்தான்.

அது குமாரின் கவனத்தை கவர்ந்தது.

“ என்ன மறுபடியும் கலாட்டா பண்ணற.. போய் உட்காரு…” என்று விளையாட்டு வாத்தியார் குமாரிடம் மீண்டும் வந்து சொல்ல, செல்வம் தன் உண்மையான குணத்தை காண்பித்து, ஆக்ரோஷத்துடன் குமாரை பிடித்து தள்ளிவிட, அதைப் பார்த்து வெளியூர் கபடி விளையாட்டு வீரர்கள் எல்லாம் ஓடி வந்து செல்வத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள்.

முதலில் யோசித்த உள்ளூர் விளையாட்டு வீரர்களும் சேர்ந்து கொள்ள, பக்கிரி எதிர்பார்த்த சண்டை ஆரம்பித்தது.

செல்வம் என்னதான் பலசாலி என்றாலும், இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்களுக்கு முன்னால், அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

நிறைய அடிவாங்கிய பிறகு, செல்வம் அடங்கிப்போனான். கிராமத்து மக்களோடு ஒன்றாய் போய் உட்கார்ந்து கொண்டான்.

பக்கிரி மட்டும் அல்ல, மொத்த கிராமத்து மக்களும் இதைப் பார்த்து சந்தோசப்பட்டார்கள்.

இந்த அவமானத்திற்கு பிறகு செல்வம் திருந்திவிடுவானா….

பக்கிரி யோசித்தான்.

கபடி விளையாட்டு ஆரம்பித்தது.

விளையாட்டு முடியும் தருவாயில், உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு விஷயத்தை பேசிக்கொண்டார்கள்.

அது என்னவென்றால் செல்வம் அடித்து போட்ட கோலப்பன் செத்து விட்டான் என்பது தான்.

இதைக் கேட்டபோது பக்கிரிக்கு மனம் பாரமாய் இருந்தது. தான் காலையில் கோலப்பனை காப்பாற்ற நினைத்துக் கதறியது ஞாபகம் வந்தது.

விளையாட்டு வாத்தியார் குமார் செல்வத்தை தட்டிக் கேட்டது மனதில் தோன்ற, இந்த விஷயத்தை உடனே போய் விளையாட்டு வாத்தியார் குமாரிடம் சொன்னான்.

அவர் ஆச்சர்யப்பட்டு, “ இந்த ஊர்ல கேக்கறதுக்கு ஆளில்லையா… இப்படி ஒரு ரௌடியா… நான் போலீசில அவனை பிடிச்சுக் கொடுக்கப் போறேன்…” என்றார்.

கபடி விளையாட்டு முடிந்து இரவு வந்தது. எல்லோரும் போய் விட்டார்கள் செல்வம் உட்பட.

கபடி விளையாட்டு வீரர்கள், குமார் மற்றும் பக்கிரி உட்கார்ந்து யோசனை செய்தார்கள். வெளியூர் வீரர்கள் டவுனுக்கு போய் போலீசை கூட்டி வருவது என்று முடிவு ஆனது.

விடியும் தருவாயில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூட்டி வந்த போலீசுடன் செல்வத்தின் வீடு வளைத்துக்கொள்ளப்பட்டது.

வேறு வழி இல்லாமல் போலீசுக்கு பணிந்து, விளையாட்டு வாத்தியார் குமாரை கருவிக்கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறினான் செல்வம்.

செல்வத்தைப் விளையாட்டு வாத்தியார் குமார்தான் பிடித்துக் கொடுத்தார் என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள். செல்வம் போலீசிடம் இருந்து தப்பி வந்து குமாரை பழிவாங்குவான் என்றும் அவர்கள் பேசிக்கொள்ள, பக்கிரிக்கு திக் என்று ஆகிவிட்டது.

ஜீப் போன பிறகு, அழுது கொண்டு நின்று கொண்டிருந்த வள்ளியை கவனித்தார் குமார். உடன் நின்று கொண்டிருந்த பக்கிரி,
“ சார்.. இந்த பொண்ணு பேரு வள்ளி.. செல்வத்தோட தங்கச்சி.. வேற யாரும் கெடையாது அவளுக்கு… இனிமே இந்த பொண்ணு தனியா அந்த வீட்டில இருக்கபோறா.. இந்த பொண்ணு ரொம்ப வெகுளி சார்.. அவளுக்கு நாம தான் ஏதாவது பாதுகாப்பு பண்ணனும்..”.” என்றான்.

அதை ஆமோதித்த குமார், “ ஆமா.. அவளோட நெலமைக்கு நாம தான் காரணம்.. நாம தான் ஏதாவது செய்யணும் ..” என்று சொல்லிவிட்டு கிளம்ப, பக்கிரிக்கு வள்ளியின் எதிர்காலம் பற்றிய கவலை வந்தது.

அதே சமயத்தில், செல்வத்தால் விளையாட்டு வாத்தியாரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால், அதற்கும் தாம் காரணமாகி விடுவோமே என்ற குற்ற உணர்வும் பக்கரிக்கு வந்துவிட்டது.

பக்கிரிக்கு இப்படி இரண்டு பேருக்கும் தான் தீங்கு செய்து விட்டதாகத் தோன்றியது. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும், ஒரே தீர்வு, செல்வத்தின் தங்கை வள்ளியை குமாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பது தான் என்று முடிவு செய்து கொண்டான் பக்கிரி. குமார், செல்வத்தின் தங்கையை கல்யாணம் செய்துகொண்டால், தங்கைக் கணவனை செல்வம் ஒன்றும் செய்ய மாட்டான் என்று அவன் மனம் கணக்கு போட்டது..

யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பக்கிரி, குமாரின் வீட்டிற்கு போய் தயங்கி தயங்கி சொன்னான்.

“ வள்ளியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிங்க சார்….”

குமார் பக்கிரி சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் குமார், பக்கிரியிடம், “ செல்வத்தை நான் போலீசில பிடிச்சு கொடுத்தனால, வள்ளிக்கான பொறுப்பு என்னுது ஆயிடுது.. நீ சொன்னபடி நானே வள்ளியை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னா, ரிஜிஸ்டர் கல்யாணம் தான் டவுனுக்கு போய் பண்ணனும். அதுக்கு ரெண்டு சாட்சி வேணும்… வள்ளி சார்பில ஒருத்தரும், என் சார்பில ஒருத்தரும்…” என்று சொன்னார்.

பக்கிரியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. “ வள்ளி சார்பில நா வந்து கையெழுத்து போடறேன் சார்..” பக்கிரி சொல்ல,

“ அப்ப என்னோட சார்பில ஒருத்தர் தேவைப்படும்… டவுன்ல எனக்கு ஒரு பிரண்டு இருக்கான்.. அவனை வரச்சொல்றேன்.. வெள்ளிக் கிழமை கல்யாணம் வைச்சுக்கலாம்..” என்று குமார் சொல்ல,

“ கல்யாணத்துக்கு நான் ஏற்பாடு பண்ணறேன் சார்.. மொதல்ல வள்ளியை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்திடணும்… வள்ளி தனியா இருக்கிறது சரியில்ல.. நான் போய் வள்ளிக்கிட்ட சொல்லி சம்மதிக்க வைச்சு கூட்டிக்கிட்டு வர்ரேன்..” பக்கிரி சொல்லிவிட்டு வள்ளியைப் பார்க்க போனான்.

அடுத்த நாள் வள்ளி வாத்தியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஜெயிலில் இருக்கும் செல்வத்திற்கு குமாரைக்குப் பற்றிய சிந்தனையை விட வள்ளியைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாய் இருந்தது. இப்படி வள்ளி ஒன்றும் தெரியாமல், வெகுளித்தனமாய் வளர்ந்து விட்டதைப் பற்றி கவலைப்பட்டான்.

தான் ஜெயிலுக்கு வந்துவிட்டதை விட, தான் ஜெயிலுக்கு வந்துவிட்டதற்குப் பிறகு வெகுளி வள்ளிக்கு என்ன ஆகும் என்பதும், தான் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொண்டு விட்டதால், தன் எதிரிகள் தன் தங்கையை எதாவது செய்து விடுவார்களோ என்ற கவலையும் செல்வத்தை பற்றிக் கொண்டது.

இந்த பயம் வந்தவுடன், எப்படியாவது வள்ளிக்காக தப்பித்து வர வேண்டும் என்று செல்வம் மனதில் நினைத்துக் கொண்டான்.

இந்த நிலையில், வள்ளிக்கும், வாத்தியாருக்கும் தொடர்பு என்றும், வள்ளியை வாத்தியார் வைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் ஒரு செய்தி சப்-ஜெயிலில் இருக்கும் செல்வத்திற்கு போக, கோபத்தின் உச்சிக்கு போன செல்வம், எப்படியாவது ஜெயிலில் இருந்து உடனே தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

கிராமத்தில், வள்ளியும், பக்கிரியும், போலீசும் இருட்டுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

வள்ளி எதிர்பார்த்தது போல, செல்வம் கிராமத்துக்கு வந்து, வள்ளி தன் வீட்டில் இல்லாததும், குமார் வீட்டில் இருப்பதும் தெரிய வர, கோபத்தின் உச்சிக்கு வந்து, குமார் வீட்டிற்கு வந்தான். அங்கு வள்ளி இருப்பதைப் பார்த்து,

“ எங்கடி அந்த வாத்தியாரு..அவனைக் கொல்லாமல் வுட மாட்டேன்..” என்றான் செல்வம்.

அதற்கு, வள்ளி,

“ உன்ன காலையில டவுன்ல பார்த்தேன்… நீ வருவேன்னு தெரியும்..” என்றாள் பதட்டத்தை அடக்கிக் கொண்டு,

“ பாத்தியா.. எப்படி…” என்றான் செல்வம்.

வள்ளி, “ வாத்தியாரு என்னை காலையில டவுன் ரிஜிஸ்டர் ஆபீசில வைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பாரு தாலி… நீ போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடும் போது, நானும் பக்கிரியும் ரிஜிஸ்டர் ஆபீசில இருந்து பார்த்தோம்..” என்றாள் வள்ளி.

அப்போது அங்கு வந்து சேர்ந்த பக்கிரி, தானும் கூட இருந்துதான் கல்யாணம் செய்து வைத்ததாகவும், ரிஜிஸ்டர் கல்யாணத்தில் யாரும் ஏமாற்ற முடியாது என்பதையும் கூறினான். பிறகு,

“ நீயே மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைச்சு இருந்தா கூட, வாத்தியார் மாதரி ஒரு நல்ல மாப்பிள்ளை கெடைச்சிருக்காது வள்ளிக்கு…” என்றான் பக்கிரி.

‘ நீ போய் தேடியிருந்தா எந்த மாப்பிள்ளையும் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கமாட்டான்..’ என்று மனதிற்குள் தோன்றினாலும் அதைச் சொல்ல பக்கிரிக்கு வாய் வரவில்லை.

செல்வம் உட்கார்ந்து யோசித்தான்.

பிறகு, “ சரி எனக்கு சந்தோசம்தான்.. போலீஸ் என்னை தேடி வந்து பிடிக்க போவுது.. அதுக்குள்ள, நா போய் வள்ளிக்காக சேத்து வைச்ச நகைகளை கொண்டாந்து கொடுத்தடறேன். இந்த அண்ணனோட சீதனமா.” என்று சொல்லிவிட்டு, ஓடிபோய் தன் வீட்டு பரணிலிருந்து வள்ளிக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை எடுத்து வந்து கொடுத்தான் வள்ளியிடம்.

அதற்குள், குமார் வந்து விட, நகைகளை வாங்கிக் கொள்ளவா என்று வள்ளி தன் கணவனிடம் அனுமதி கேட்க, அதற்கு “ அந்த பாவப்பட்ட நகைங்க நமக்கு வேண்டாம்..” என்று சொன்னார் குமார் வள்ளியிடம்.

அதற்கு செல்வம், “ இது எங்க குடும்பத்து பரம்பரை நகை…. தப்பா நா எதுவும் சம்பாத்திக்கல, வாங்கிங்க மாப்பிள்ளை..” என்று செல்வம் கெஞ்ச, ஒரேயடியாய் மறுத்து விட்ட குமார்,

“ போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சது பெரிய குற்றம்… உடனடியா சரண் அடைஞ்சுடுங்க… போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சது, தண்டனையை அதிகப் படுத்தும்” என்று கூற, அப்போது வீட்டிற்குள் நுழைந்த போலீஸ்காரர்கள் செல்வத்தைப் பிடித்து கொண்டார்கள்.

வாங்கிக் கொள்ள மறுத்து விட்ட நகைகளுடன், செல்வம் குமாரின் வீட்டை விட்டு போலீசுடன் நடக்க ஆரம்பித்தான்.

செல்வத்தை தொடர்ந்து பக்கிரியும் நடந்தான் தன் ஊனமான காலுடன்.

செல்வம் போலீசுடன் நடக்கும் போது, எதிரே இறந்த போன கோலப்பனின் மனைவி குப்பம்மா தன் குழந்தையோடு வருவதைப் பார்த்தான்.

செல்வத்தைப் பார்த்து தன்னையும் கொன்று விடுவானோ என்று அவள் பயந்து ஒதுங்க, செல்வம்,

“ பயப்படாதே.. இங்க வா… இதை வாங்கிக்க…” என்று அந்த நகைகளை அவளிடம் கொடுக்க, மறுக்கமுடியாமல் அவன் மேல் இருக்கும் பயத்தினால் அந்த நகைகளை அவள் வாங்கிக் கொண்டாள்.

போலீசுடன் நடக்க ஆரம்பித்த செல்வம், போலீசைப் பார்த்து,

“ என் தங்கச்சி வீட்டுக்கார் சொன்னபடி, போலீசுக்கிட்ட இருந்து தப்பிச்சதுக்கு, தண்டனை அதிகமாகுமா சார்..” என்று கேட்க, அதற்கு அந்த போலீஸ்காரர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து செல்வம்,

“ தூக்கு தண்டனை கெடைச்சா, நா எங்க கிராமத்துக்கு திரும்பவும் வரவே முடியாது.. அதனால, இப்பவே எங்க கிராமத்தை கடைசியா ஒரு தடவ ஆசை தீர பாத்துக்கிறேன்..” என்றான்.

பிறகு, போலீஸ்காரர்களுடன் டவுன் போலீஸ் ஸ்டேசனை நோக்கி செல்வம் வேகமாக நடக்க ஆரம்பித்தான். பக்கிரியால் தொடர்ந்து நடக்க முடியாமல் போகவே, நின்று கொண்டு, செல்வம் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு இறங்கினாள் லதா. சற்று தள்ளி, சாலையின் ஓரமாக, அவள் பணி புரியும் அந்த ...
மேலும் கதையை படிக்க...
சம்பள கிளார்க் நாராயணன் ஒரு பெண்ணின் போட்டோவை பக்கத்து கிளார்க் சுப்பிரமணியிடம் காண்பித்து இளிக்க, அவனும் ஒரு மாதரி சிரித்தான்.. இருவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்த போட்டோ கண்டிப்பாக நாராயணனின் மனைவி போட்டோவாக இருக்க முடியாது. மேலும் மனைவியின் போட்டோவுக்கு அப்படி ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில். நேரம் காலை எட்டு மணி இருக்கும். பத்து மணிக்கு வர வேண்டிய அந்த ரயிலுக்காக மூன்று பேர் மட்டும் காத்து கொண்டு இருந்தார்கள், வெறிச்சோடிக் கிடந்த அந்த ஸ்டேஷனில். ஒருவர் பேண்ட் ...
மேலும் கதையை படிக்க...
பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
வருடக் கணக்கில் எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்படி திடீரென்று கூடி வரும் என்று கபாலி கனவில் கூட எதிர் பார்க்க வில்லை. பொன்னம்மா வீடு கட்டும் தொழிலாளர் கூட்டத்தில் ஒரு சித்தாள். அவளின் குடிசை, கபாலியின் வொர்க்க்ஷாப்பிற்கு எதிரில் வழியை அடைத்துக்கொண்டு நிற்கிறது. ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளிக்கான டிவி புரோகிராம்
நாராயணனின் நண்பர்கள்
பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
ஒரு மகளின் ஏக்கம்
பொன்னம்மாவின் உயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)