விளக்கு

 

சென்னை-மும்பை தாதர் விரைவு ரயில்.

மரகதம் அதில் மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தாள்.

சமீபத்தில் திருமணமான அவளுடைய ஒரே மகன் ஸ்ரீராம், மருமகள் அனன்யா இருவரும் மும்பையில் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் தடவையாக மரகதம் அவர்களுடன் மும்பையில் ஒரு ஆறு மாதங்கள் தங்கப் போகிறாள்.

ஸ்ரீராமுக்கு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரில் (BARC) நல்ல வேலை. அவனுக்கு அங்கேயே அணுசக்தி நகரில் ஒரு பெரிய வீடு கொடுத்திருந்தார்கள். பி.ஈ படித்திருக்கும் அனன்யா மும்பையில் ஏதோவொரு ஐடி கம்பெனியில் மனேஜராக இருக்கிறாள்.

இருவரும் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள்.

சரியான நேரத்திற்கு ரயில் தாதர் வந்தடைந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு ஸ்ரீராமும், அனன்யாவும் வந்திருந்தார்கள். ஒற்றுமையுடன் சந்தோஷமாகக் காணப்பட்டார்கள்.

வீட்டில் மரகதத்தை மிக நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.

வீட்டில் வசதிக்கு குறைச்சல் இல்லை. கேஸ் ஸ்டவ்; இண்டக்ஷன் ஸ்டவ்; மைக்ரோவேவ் ஓவன்; ரைஸ் குக்கர்; காபி மேக்கர்; சப்பாத்தி மேக்கர்; சாண்ட்விச் மேக்கர்; ப்ரெட் டோஸ்டர்; எலக்ட்ரிக் கெட்டில்; டிஷ் வாஷர்; வாஷிங் மெஷின், மெகா சைஸ் ப்ரிட்ஜ்; சோனி டிவி என ஏகப்பட்ட சாதனங்களை அனன்யா வாங்கிப் போட்டிருந்தாள்.

பணத்திற்கோ, வசதிகளுக்கோ பஞ்சமில்லை.

எல்லாம் இருந்தும் என்ன பயன்? சனி ஞாயிறு தவிர மற்ற தினங்களில் இருவரும் காலில் ரெக்கை கட்டிக்கொண்டு வேலைக்குப் பறந்தார்கள். காலையில் போனால், இருவரும் இரவு மிகவும் களைப்புடன் வீடு திரும்புவார்கள்.

மரகதம் அந்த வீட்டில் தனிமையில் நேரத்தைப் போக்கினாள்.

தினமும் தவறாது மாலை ஆறு மணிக்கு வீட்டில் விளக்கேற்றி சாமியை நமஸ்கரிப்பாள்.

அனன்யா ஒருநாள் கூட வீட்டில் விளக்கேற்ற மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள் மரகதம்.

அன்று வெள்ளிக்கிழமை மாலை.

“அனன்யா நீ இன்னையிலிருந்து தினமும் சாமிக்கு விளக்கேற்றி நமஸ்காரம் பண்ணும்மா… நம் வீட்டில் எப்போதும் சுபிட்சம் தவழும்…”

“சரிம்மா… ஆனால் நான் இதுவரை இந்த வீட்டில் விளக்கேற்றி வைத்ததில்லை…”

“அதனாலென்ன, இன்றையிலிருந்து தினமும் மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றிப் பழகிக்கோ…நானும் கூட இருந்து உனக்கு ஒத்தாசை செய்கிறேன்.. அப்புறமா தினமும் ஆபீஸ் விட்டு வந்ததும் கை, கால், முகத்தை அலம்பிக்கொண்டு விளக்கை ஏத்து, அப்புறம் பார் நம்ம வீடு எப்படி மங்களகரமா இருக்குன்னு…”

“ஆனால், நான் வீட்டுக்கு வரும்போதே தினமும் எட்டு மணியாகி விடுகிறதே அம்மா… வீட்டுக்கு விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?”

“கண்டிப்பா இருக்கு அனன்யா… விளக்கு எரிந்த வீடு வீணாய்ப் போகாது என்று பழமொழியே இருக்கிறது.”

“……………………”

“நம் வீட்டிலும், கோவில்களிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் என்று தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச்சுற்றி பாஸிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும், இந்திரியங்கள் பலத்தோடும் காணப்படும்.”

“இவ்வளவு விஷயங்கள் இருக்கா அம்மா?”

“தினமும் விளக்கேற்றிப் பழகிய பிறகு இரண்டு நாட்கள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால், வீடே மயானம் போல் தோன்றும். வீட்டிலுள்ள அனைவருமே சோர்வாக இருப்பார்கள். அதையே தொடர்ந்தால் வீட்டில் பேய் பிசாசுகள் போன்ற வேண்டத்தகாத ஆவிகள் சுற்ற ஆரம்பித்துவிடும். வீட்டில் குடியிருப்போர்க்கு தேவையற்ற பயமும், மனப் பிராந்தியும் உண்டாகி, அடிக்கடி உடம்பு சுவாதீனம் இல்லாமலும் போகும்… அதனால்தான் எல்லார் வீட்டிலும் சந்தியாவந்தன வேளையில் தவறாது சுவாமிக்கு விளக்கேற்றி நமஸ்கரிப்பார்கள்… தவிர, தீபத்தின் சுடர் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு வம்சத்தைச் சேர்ந்தது. இதுவே விளக்கேற்றுவதின் தத்துவம்.

“நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி; சந்திர நாடி; சுஷம்னா நாடிஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகிறது அனன்யா….

சூரிய நாடி நல்ல சக்தியையும், வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி நம்முள் ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய், நெய் போன்றவைகளால் விளக்கு ஏற்றலாம். ஆனால் தினமும் கருக்கல் நேரத்தில் தவறாது ஏற்ற வேண்டும்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச் சூழலில் பரவி, நம் வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது அனன்யா… நாம் ஏற்றும் விளக்கு ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுப்போகும். எனவேதான் சூரிய அஸ்தமனத்தில் விளகேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை அனன்யா….”

“கண்டிப்பாக இன்றே ஆரம்பித்து விடுகிறேன் அம்மா…”

“ரொம்ப நல்லது… தவிர, நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மை அடைந்து நல்ல பலன்களை அளிக்கிறது…”

அன்றே மாலையில் முகம் கை கால்களை அலம்பிக்கொண்டு அனன்யா பூஜையறையினுள் சென்று விளக்கேற்றி வைத்து நமஸ்கரித்தாள். அதன் பின் வீட்டில் இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி வைத்தாள்.

கடைசியாக அம்மா கொண்டு வந்திருந்த தசாங்கத்தைப் பற்ற வைத்தாள்.

அன்று அந்த வீடே மங்களகரமான வாசனையில் கமழ்ந்தது. மரகதம் மகிழ்ச்சியில் திளைத்தாள். சிறிசுகளுக்கு அக்கறையுடன் பெரியவர்கள் எடுத்துச் சொல்லிப் புரியவைத்தால் அவர்கள் உடனே அவற்றை ஆர்வத்துடன் பிடித்துக்கொண்டு விடுகிறார்கள் என்று நினைத்தாள்.

ஒரு மாதம் சென்றது. திடீரென அனன்யா வேலைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்தாள்.

மரகதம், “என்னம்மா நீ வேலைக்குப் போகலையா?” என்றாள்.

“இல்லம்மா நான் வேலையை விட்டு விட்டேன்… என்னால் தினமும் அரக்க, பரக்க வேலைக்கும் போய்க்கொண்டு வீட்டை சமாளிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக வீட்டில் இருந்தபடியே நம் அணுசக்தி நகரில் வசிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்க ஆயத்தமாகி விட்டேன்… அடுத்த வாரத்திலிருந்து குழந்தைகள் என்னிடம் கற்றுக்கொள்ள வருவார்கள்.”

அடுத்த வாரம் முதல், காலையும், மாலையும் ஏகப்பட்ட இளம் மாணவ மாணவிகள் அனன்யாவை நோக்கிப் படையெடுத்தனர்.

“அனன்யா, இந்தக் குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்த்தாலே நமக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது…”

“ஆமாம்மா… தினமும் குறிப்பட்ட நேரத்துக்கு அலுவலகம் ஓடிச்சென்று; அங்கிருக்கும் முசுடுகளிடம் பேச்சு வாங்கிக்கொண்டு; இன்க்ரிமென்ட், ப்ரமோஷன் என்கிற எதிர் பார்ப்பில் காலத்தைக் கழிப்பதைவிட; நான் படித்த அதே படிப்பின் மூலம் வீட்டில் இருந்தபடியே குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால், பணத்துக்கு பணமும் ஆச்சு, மனத்திற்கு திருப்தியும் ஆச்சு, வீட்டையும், கணவனையும் நன்றாக கவனித்த மாதிரியும் ஆச்சு…”

அனன்யாவின் நல்ல முடிவை நினைத்து மரகதம் சந்தோஷித்தாள். .

தினமும் மாலையில் அந்த வீட்டில் விளக்கும் ஏற்றி வைக்கப்பட்டது.

வீடு விளக்கின் ஒளியுடன் தினமும் மங்களகரமாகப் பிரகாசித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் - ஒரு மாமாங்கம் - இந்த ...
மேலும் கதையை படிக்க...
நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்... சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘முதல் கதை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) என் முதல் கதை ‘திசை மாறிய எண்ணங்கள்’ விகடனில் வெளியான பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. இதனிடையில் எனக்கு பெங்களூர் டைட்டான் வாட்சஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு நல்ல ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு விதத்தில் சந்தோஷம். முதல் சந்தோஷம், வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏழ்மையில் உழன்றாலும் ராஜலக்ஷ்மி ரொம்ப அழகான பெண்ணாக இருந்தாள். இரண்டாவதாக, பார்ப்பதற்கு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘இரண்டாம் கல்யாணம்’ படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மியை நடுத்தர வயதான ஆண்களோ அல்லது வயசான ஆண்களோ உற்றுப் பார்த்ததில் சபரிநாதனின் மனசில் பெருமைதான் ஏற்பட்டதே தவிர வேற பாதிப்பு எதுவும் இல்லை. அதே சமயம் சின்ன வயசுப் பையன்கள் ...
மேலும் கதையை படிக்க...
தொடுதல்
வீட்டுப் பசி
அடுத்த ஜென்மம்
புது மாப்பிள்ளை
விரட்டும் இளைஞர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)