கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 16,860 
 

வேதகிரியின் முன்னால் பத்துப் பேராவது இருப்பார்கள். சுவாமிகள் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, தினமும் வேத பாரயணமும் ஆன்மீக உரையாடலும், பூஜையும், பஜனையுமாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஞானப்பழமாக, ஒளிரும் விளக்காக, அருளும் ஆசானாக விளங்கிய அந்தப் பூஜ்யரின் முன்னால், ஒவ்வொருவரும் அடக்கமுடனும், பணிவுடனும் சென்று, அவரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர்.

வேதகிரி கொணர்ந்திருந்த வில்வமாலையைத் தன்மீது அணிந்து கொண்டவர், ‘என்ன, திருப்திதானே?’ என்ற தோரணையில்
வேதகிரியைப் பார்த்த போது, மெய்சிலிர்த்துப் போயிற்று. ஜடாமுடியுடன் விளங்கும் பரமேஸ்வரனைப் பார்த்த பரவசத்தில்
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் வேதகிரி. மென்மையான குரலில் வேதகிரியிடம் ஏதோ சொல்லிக் கொண்டே
இரண்டு மாங்கனிகளைப் பிரசாதமாக அளித்துக் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார், சுவாமிகள்.

வேதகிரியின் மனம் நிறைந்திருந்தது. இந்த உன்னதமான நிகழ்வை, இப்படியே இதே உணர்வோடு ஞானத்திடமும் சேதுவிடமும் உடனே போய்ப் பகிர்ந்து கொள்ள மனம் விழையவே, வேக வேகமாக நடந்தார். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்துச் சுவாமிகள் கேட்டுக் கொண்டதை எப்பாடு பட்டாவது நிறைவேற்றி விடணும்! அவரது நடையில் துரிதம் கூடியது…

திண்ணையில் நுழையும் போதே, தான் வந்தது கூடத் தெரியாமல் ஞானமும் சேதுவும் உரத்த குரலில் பேசுவது கேட்டது.
புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள கூடத்துக்கு விரைந்தார்…

‘அம்மா, என்னை எதுவும் கட்டாயப் படுத்தாதே’

‘சேது, உன்னை அப்படி என்ன கட்டாயப் படுத்தறேன்? காயத்ரி பண்ணச் சொல்றேன். வரவர உன் போக்கே சரியில்லை சேது. வளர்ந்த பிள்ளையிடம் ரொம்பவும் போதனை செய்ய வேண்டாம்னு நானும் பொறுமையா இருக்கேன். ஆனால், உன்னிடம் பயபக்தி இல்லை…மரியாதை காணாமப் போய்டுத்து. என்னாச்சு?’

‘அம்மா, எத்தனையோ தடவை சொல்லியாச்சு. இப்படி மூக்கப் புடிச்சுண்டு ஜபம், தபம்னு பண்றதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வரலை. இதுக்குப் பேருதான் பக்தியா?’

ஞானத்தின் குரல் கமறிப் போயிருந்தது. ‘சேது, நம்ப பழக்க வழக்கம் அது தானேடா குழந்தை. அதுலேருந்து எப்படிப் பிறழலாம்னு சொல்லு? நெற்றியில் விபூதியே இட்டுக்கறது இல்ல…நீறில்லா நெற்றி பாழ்னு சொல்லி இருக்கு தெரியுமோ?’

‘அம்மா, ஆரம்பிச்சுட்டியா? பாலு மாமா பிள்ளை சிவராமன் இப்படித்தான் நெத்திலே விபூதி, குங்குமம்னு வரான். காலேஜ்ல அவனை எல்லோரும் ‘பட்டைச் சாமி வந்தாச்சு’ ‘தயிர்சாதம் வந்தாச்சுனு’ சொல்லி மானத்தை வாங்குறா. எதிர்வீட்டு சந்தானம் கழுத்தில ருத்ராட்சத்தோட வந்ததுக்கு, ‘அடிகளார் பராக்’னு அவனை உண்டு இல்லைனு பண்ணிட்டா
தெரியுமா? காலேஜ் போனப்புறம்தானே எனக்கும் வெளி உலகம் புரியறது’…

‘ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோமா. இந்தப் பூஜையும், தர்ப்பைக்கட்டும் அப்பாவோடயே போகட்டும். என்னை இதுல மாட்டி விடாதே. நான் நிறையப் படிக்கணும்…நன்றாகச் சம்பாதிக்கணும்…ரொம்ப உசரத்துக்குப் போகணும்…இனிமே என்னைத் தொந்திரவு பண்ணாதே’

கேட்டுக் கொண்டிருந்த வேதகிரிக்கு மனதெல்லாம் வலித்தது. சமீப காலமாக சேதுவின் போக்கு அவரும் அறிந்ததுதான்! ‘வேத பாராயணம் செய்வதில்லை… காயத்ரி ஜபம் செய்வதில்லை’ என்று அவ்வப்போது ஞானம் அவரிடம் சொல்வதுண்டு.

வளர்ந்த பிள்ளையிடம் என்ன சொல்ல முடியும்? வயசுக் கோளறு… காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் அவரும்
நம்பிக்கையோடு இருக்கிறார்.

பள்ளிப்படிப்பு முடியும் வரையில் வேளை தவறாமல் சந்த்யாவந்தனம் செய்தும், தினமும் இறை வணக்கம் செய்தும், ராட்டையில் பஞ்சு வைத்து நூல்நூற்றுப் பூணூல் செய்து கொடுத்தும், அனுசரணையாக இருந்தவன் தான். என்ன செய்வது? இளரத்தம்….விட்டுப் பிடிக்க வேண்டியதுதான் என்று எண்ணியவர், தான் சொல்ல வந்த விஷயத்தை
அந்தத் தருணத்தில் சொல்வது சரியாகாது என்று உணர்ந்தவராய்ப் பூஜை அறைக்கு நகர்ந்து சென்றார்.

கல்லூரி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால், சேதுவிற்குப் பெரிய கம்பெனியில் கூப்பிட்டு வேலை கொடுத்தார்கள். கை நிறையச் சம்பளம். வானம் வசப்பட்டது போல் தெரிந்தது சேதுவுக்கு. முதல் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே எடுத்துச் சென்று வேதகிரியிடம் நீட்டியபோது, அவருக்கும் ஏக மகிழ்ச்சி… ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்காமல் அவன் பேச்சு அமைந்தது…

‘அப்பா, இது எனது முதல் சம்பளம். இனிமேல் நீங்கள் மழை, வெய்யில் என்று போய் அலைந்து, பிறர் கொடுக்கும் தட்சிணையை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்த வேண்டாம். இந்தத் தர்ப்பைக்கும், தட்சிணைக்கும் இன்னியோட முற்றுப்புள்ளி வையுங்கோ. உங்கள் பிள்ளை நான் இருக்கிறேன்…அம்மாவையும் உங்களையும் காப்பாற்றுவேன்….’

இதுநாள் வரையில், சேதுவின் முரண்பட்ட நடத்தையால், பணியாத குணத்தால், எடுத்தெறிந்து பேசும் அலட்சிய சுபாவத்தால் ஏற்படாத வருத்தமும், கோபமும் முதன்முதலாக எழுந்தது வேதகிரிக்கு.
‘சேது… ஆணவம் உனது அறிவை மழுங்கச் செய்கிறதுனு நினைக்கிறேன். என்ன பேச்சுப் பேசுகிறாய்? மந்திரம் சொல்லிப், புரோகிதம் நடத்திக் கிடைத்து வந்த தட்சிணைதான் உனக்கு இந்தப் படிப்பையும் கொடுத்து, வேலையையும் கொடுத்திருக்கு… நீ நிறைய சம்பாதிப்பதால் வரும் சந்தோஷம் உன்மட்டோடயே இருக்கட்டும்… எனது சொல்ப சம்பாத்தியம் தரும் மன நிம்மதி எனக்கு ஆயுசுக்கும் போறும்… உனது ஒரு நயாபைசா கூட எனக்கோ, அம்மாவுக்கோ தேவை இல்லை’….

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுதானோ? சேது மட்டும் இல்லை, ஞானமும் உண்மையிலேயே அரண்டுதான் போனாள். சேதுவிற்குத் தன் மேல் எச்சில் உமிழ்ந்தாற் போல் இருந்தது.

‘இந்த அப்பாவை எவ்விதத்திலாவது ஜெயிச்சுக் காட்டணும்; உலகம் மாறிண்டு வருவதை உணர்த்தணும்…. எனது அருமையை உணரணும்… அவன் மனதில் போராட்ட எண்ணங்கள் ஊழிக் கூத்தாடின. விருட்டென்று போனவன், அடுத்த இரண்டு மாதங்களில் மும்பைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

சேதுவின் வசீகரமான பேச்சும், புத்திசாலித்தனமும், அறிவார்ந்த அணுகுமுறையும் அவனது மேல் அதிகாரிகளுக்கு வெகுவாகப் பிடித்துப் போக, இருபத்து நான்கு வயதுக்குள், அவனது பதவி உயர்ந்து, உச்சத்துக்கு அவனைக் கொண்டு போனது. அவ்வப்போது பெற்றவர்களைப் பார்க்கணும் என்று தோன்றும்….அதுவும் மும்பையில் சப்பாத்தியும், சமோசாவும் சாப்பிட்டு நாக்கு மசமசத்துப் போயிருந்தது. ஓடிப் போய், அம்மாவின் கையால் வற்றல்குழம்பும் ரசமும் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. மும்பை வந்து எட்டு மாதங்களே ஆகியிருந்ததால், ஒரு வருஷம் கழித்துப் போகலாம் என்று நினைத்துக்
கொள்வான்.

திடும்மென்று போய், கெட்டியாக அம்மாவுக்கு ஒரு தங்கச் சங்கிலியும், அப்பாவுக்கு ஒரு வைர மோதிரமும் போட்டு அசத்தணும்… அப்படியே, அவர்களுக்குப் பிடித்த மாதிரி தோட்டம் சூழ்ந்த வீடும் வாங்கினால் மகிழ்ந்து போய்விட மாட்டார்களா?’… பாங்கில் இருந்த இருப்பை வைத்துச் சேதுவின் மனதில் இப்படியெல்லாம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் எண்ணங்கள் அலையடித்தாலும், வேதகிரியின் நிராசையான குணமும், எதற்கும் மயங்காத மனமும், அவனது எண்ண அலைகளை மிஞ்சிய பெரும் புயலைக் கிளப்பின…
‘மிஸ்டர் சேது! உங்களை சேர்மன் கூப்பிடுகிறார்’… செகரட்டரியின் குரல்.

ஓ! போன தடவை போர்ட் மீட்டிங்க்கில் சேதுவுக்குப் பெரிய ப்ராஜக்ட் தருவதாக முடிவாகி இருந்தது. அதற்காக வெளிநாடு போகும்படி இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள். அதற்குள் போய் அம்மா அப்பாவைப் போய்ப் பார்த்துடணும்…அது பற்றிப் பேசி முடிவு செய்யத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தீர்மானித்தவன், அது சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் சேர்மனின் அறைக்குச் சென்றான்.

‘மிஸ்டர் சேது…’

‘சொல்லுங்க சார்.,.’ இரண்டொரு வினாடிகள் கனத்த மெளனம் காத்த சேர்மன், ‘சேது, நீங்கள் ஒரு கடும் உழைப்பாளி சேது
என்று சொல்லி நிறுத்தினார்.

சேதுவுக்குப் புல்லரித்துப் போனது… தான் நினைத்தபடி அந்த ப்ராஜக்ட் விஷயம்தான்… மிகவும் உற்சாகமாகத் தொடர்ந்தான்.

‘சொல்லுங்க சார். எந்தப் ப்ராஜக்டும் செய்யத் தயாரா இருக்கேன்…’

‘இல்ல சேது….அவசரப் படாதீர்கள்… நான் சொல்ல வந்தது வேற விஷயம்…’ அவரே தொடந்தார். ‘சேது… ரொம்ப மன்னிக்கணும். அடுத்த மாசதிலேருந்து உங்களோட சர்வீஸ் எங்களுக்குத் தேவைப் படாது சேது.’

படீரென்று சம்மட்டியால் தாக்கியது போல் இருந்தது சேதுவுக்கு. குழறியபடியே, ‘நான் ஏதும் வேலைல தப்பு பண்ணிட்டேனா
சார்?’ என்றபோது அவன் கையும் காலும் ஏகத்துக்கு நடுங்கிக் கொண்டிருந்தது.

‘நிச்சயமா இல்ல சேது… நான் தான் சொன்னேனே நீங்க கடும் உழைப்பாளினு… நல்ல புத்திசாலி கூட… புரிந்து கொள்வீர்கள்னு நினைக்கிறேன். 1930-களில் அமெரிக்காவில பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது… அதுக்கு ‘க்ரேட் டிப்ரஷன்’னு பேரு, இப்பவும் அதே சூழல்தான். இந்தப் பொருளாதார நெருக்கடி உலக அளவுல பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கு சேது. ஆட் குறைப்பும், சம்பளக்குறைப்பும் தவிர்க்க முடியாததாப் போய் விட்டது. உங்களைப் போலத் திறமையானவர்களை நீக்கும் படியான ஒரு நிர்ப்பந்தம்… அதிலும் நீங்கள் சேர்ந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகாததால் திடீரென்று முடிவு எடுக்கும்படி ஆயிற்று… காலத்தின் கட்டாயம்…’

தடுமாறிப் போனான் சேது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. திடீர் தாக்குதலின் வீச்சு பலமாக இருக்கவே மனம் ஒரேயடியாகக் கனத்துப் போனது. புயல் காற்றில் பருத்த தென்னங்காய்களைச் சுமந்த தென்னைமரம் அலைக்கழிக்கப்பட்டு ஆடுவது போல் அவனது நடையில் ஒரு தள்ளாட்டம். உடனே ஓடிப்போய் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு கதறி அழுது விட்டால் சரியாகும் போல் இருந்தது. நீளமாய் யோசித்துக் கொண்டிராமல் உடனே ஊருக்குக் கிளம்ப ஆயத்தம் செய்தான்.

‘ஆர்யா வேத பாடசாலை’…வீட்டு வாசலில் தெரிந்த போர்டு சேதுவுக்குப் புதிதாக இருந்தது. பரபரவென்று வீட்டுக்குள் நுழைந்த போது தெய்வ சன்னிதானத்துக்குள் அடியெடுத்து வைப்பது போல் இருந்தது. அம்மா துளசி மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள். சேதுவைப் பார்த்ததில் கண்கள் குளம் கட்டியது…..’வந்துட்டியாப்பா…’ என்று ஞானம் கேட்பதற்குள் தடக்கென்று அவள் காலில் விழுந்தான் சேது…

‘இந்த வீட்டை, இனிமையான சூழலை, அப்பாவை–அம்மாவை விட்டு எதைத் தேடிப் போனேன்?’…

அவன் இருந்த போது பயன்படுத்திக் கொண்டிருந்த அறையில் பத்திலிருந்து இருபது வயதுக்குள்ளாக ஏறத்தாழ ஐம்பது மாணவர்கள் போல் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கருணை பொங்கும் மஹாஸ்வாமிகளின் படம் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

‘நாளைக்கு ஸ்வாமிகள் நம்ப ஊருக்குப் பத்து வருஷங்களுக்கு அப்புறம் இப்பத்தான் விஜயம் பண்ணப்போறார். அப்பாவும் இந்தப் பாடசாலை மாணவர்களை அழைச்சுண்டு நாளைக்குப் போய் அங்கே நடக்கும் யாகத்துல கலந்துக்கப் போறா…அதுக்குத்தான் நானும் துளசி மாலை தொடுக்கிறேன்’…ஞானம் சொல்லியபடியே எழுந்து கொண்டாள்.

‘நீ போய் கைகால் அலம்பிண்டு வா…காபி கலந்து தரேன்’…’

பேச்சு சப்தம் கேட்டு வேதகிரி வெளியே வந்த போது, சேதுவைப் பார்த்ததில் திகைப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது. அவரைப் பார்த்தவுடன் சடாரென்று விழுந்து நமஸ்கரித்தான். சேதுவின் முக வாட்டமும், கலங்கிய கண்களும் எதையோ சொல்லாமல் சொல்லியது.

‘அப்பா… எனக்கு வேலை போய்டுத்துப்பா…எந்த அளவுக்கு உயரப் போனேனோ, அந்த அளவுக்குக் கீழே விழுந்துட்டேன்பா….’

சேதுவை ஆதரவாகத் தூக்கி நிறுத்திய வேதகிரி சற்றே மெளனித்தார். பிறகு சன்னமான குரலில் பேசினார்…

”சேது… நிதானமற்ற வேகம் நம்மை அதல பாதாளத்துல தான் தள்ளும்… வாகனங்களுக்குக் கூட விபத்து நிகழாமல் இருக்கணும்னு வேகத்தடை இருக்கும். நிறைய சம்பாதிக்கணும்னு நீ நினைத்ததுல எந்தத் தப்பும் இல்ல… ஆனால் உன்னோட உறுதிப்பாடு சரியா இல்ல… மனப் போக்கில் நிதானம் இல்லை……அதான் இந்த வீழ்ச்சி…”

சேது நிமிர்ந்து உட்கார்ந்தான்…அவர் பேசுவதைத் தொடர்ந்து கேட்க வேண்டும் போல் இருந்தது. அவனது காயம் பட்ட மனதுக்கு நிவாரணம் தேவை அல்லவா?
வேதகிரி தொடர்ந்தார். ‘உறுதிப்பாடு, அதாவது திடமான மனசு ரொம்ப முக்யம். உண்மையான அன்புல, உயர்ந்த எண்ணங்களில், நிறைவான நட்பில், ஆரோக்கியமான மனதில், ஆதரவான அணைப்பில்…இப்படிப் பலதரப்பட்ட நல்லவைகளில் கூட கவர்ச்சி என்பது உண்டுதான். ஆனால், கவர்ச்சியக் கண்டு மயங்காத, கலவரப்படாத மனோபலம்
வேணும். ‘ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாந்தேஹீச பார்வதீ’னு ஆதி சங்கரர் கூட, திடமனசைத் தான் கேட்கிறார்.

கடவுள் வழிபாடு என்பது நம்பிக்கை தரக்கூடியது. அடுத்த கணம், அடுத்த நாள் பற்றித் தெரியாத போது, இந்த நம்பிக்கைதான் ஆதாரமா இருக்கு. கடந்த காலத்து வேதனைகளைப் பற்றிய மறதியும், எதிர்கால நம்பிக்கையும் இருந்தால்தான் நிகழ்காலத்துல சரியா வாழ முடியும்…

அரிச்ச்சந்திரன் நாடகம் காந்தியடிகளைக் கவர்ந்தது…அது அவரை மகாத்மா ஆக்கியது. தாயாரின் போதனை, சத்ரபதி சிவாஜியைக் கவர்ந்தது…அது அவரை மாவீரனாக்கியது. நாம் யாரால், எதனால் கவரப்படுகிறோம் என்பது முக்கியம்….அதன் வழியேதான் அவரவர் வாழ்வும் கடமையும் அமைகிறது. நம்ப வேதத்துல என்ன சொல்லி
இருக்கு தெரியுமா? ‘பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா’… நாம் செய்திருக்கும் புண்ணியங்களுக்கு ஏற்பத்தான் நமக்குப் பதவியோ, வேலையோ கிடைக்கும்னு அர்த்தம்.

உனக்கு நினைவு இருக்கா? தர்ப்பைப் புல்லையும், தட்சிணையையும் விட்டுவிடச் சொன்னாயே….தர்ப்பை எத்தனை உசத்தினு தெரியுமா? புண்ணிய பூமிலதான் முளைக்கும்….கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். கிரகணத்தின் தாக்கம் மீறாமல் இருக்க தர்ப்பையை எல்லாப் பொருட்கள், தண்ணீர்னு எல்லாவற்றிலும் போடுவோம்…
அதனால் தொற்று நோய் வராது. அதுக்கு காந்த சக்தியும் இருக்கு… இப்படி அதோட மகத்துவத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தர்ப்பை வெறும் புல்தான்…ஆனால் அந்தப்புல் தடுக்கி யாரும் விழுவதில்லை….தெரியுமா? என்னவோ போ…சில பாடங்களை நாம், ஏதோ காரணங்களுக்காக ஒதுக்கி விடுகிறோம். அப்புறம் பின்னால ஒரு
பெரிய விலை கொடுத்து அதே பாடங்களைக் கத்துக்கற போது தான், எல்லாவற்றின் அருமையும் தெரியும்.’…

வேதகிரி பேசி முடித்த போது, போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனின் மன நிலையில் இருந்தான் சேது.

மறுதினம் வேதபாடசாலைப் பிள்ளைகளுடன் சுவாமி தரிசனத்துக்குப் புறப்பட்ட போது, நெற்றியில் திருநீறு துலங்க சேதுவும் சேர்ந்து கொண்ட போது, நெக்குருகிப் போனார் வேதகிரி.

இதுவல்லவா சுவாமிகள் பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இட்ட பணி? ‘உன் பிள்ளையை வேதம் பயிலச்செய்…காலம் காலமா நம்ப வேதங்கள் சுபிட்சமா இருந்து, என்னிக்கும் தர்ம நெறி இந்தப்பூமில வத்தாமத் தழைக்கணும்னா, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிள்ளையை வேத பாடசலையில் சேர்த்து, நல்ல வழியிலே கொண்டு வரணும்…செய்வியா?’…

இதுதானே ஸ்வாமிகள் அவரைப் பணித்தது? வேதகிரி மெய்யுருகிக் கைகூப்பிய போது, கருணைத் தெய்வமான ஸ்வாமிகளின் திருவுருவப் படத்திலிருந்து புஷ்பம் விழுந்து அவர்களது புனிதப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லியது!

– பெப்ரவரி 2009

Print Friendly, PDF & Email

2 thoughts on “விலை

  1. எது..,இந்த நால்வருணத்தை வலியுறுத்தி மனுசன பிரிச்ச வேதமா…?

  2. நல்ல கருத்து..நல்ல கதை..ஆனால், இது இந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் ஏற்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *