Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விலாசம்

 

அவர்களது வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை .

நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர்சந்தில் இருக்கிறது என்றார்கள். போய் விட்டேன்.

நீண்ட அகலமான தெரு.ஸ்டோரிலிருந்து பார்த்தால் குறுக்காகப் போன மெயின் ரோட்டைத்தாண்டி நீண்டு தெரிந்தது.

இரண்டு பக்கமும் முளைத்திருந்த வீடுகள் வரிசையாகவும்,வரிசை தப்பியுமாய் தெரிந்தன.வாசலில்போடப்பட்டிருந்த கோலங்கள் அழிந்தும் வெள்ளை பாவியுமாய் தெரிந்தது அலசலாக. அருகில் போய் தான் பார்க்க வேண்டும்.

மண் பாதையாக இருந்த தெருக்கள் எல்லாம் இப்போது சிமெண்ட் அல்லது தார் சாலையாக பூத்திருந்தது.

சரி தெருவிற்குள் போய் தேடிப்பார்க்கலாம்.தெருமுக்கில் வலது பக்கம் தச்சுப் பட்டறையும், மர அறுவை மில்லும் இருந்தது. நான்கைந்து பேர் எந்த நேரமும் தேவைகேற்ப வேலைபார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இரண்டு பக்கமும் சட்டமடித்து எங்கோ ஒரு ஓரமாய் மோட்டார் பொருத்தப்பட்டிருந்த அறுவை மிஷினின் ஒரு முனை யில் மரசக்கையை கொடுக்க அது நகன்று,நகன்று அறுபட்டு எதிர் முனையில் இருப்பவரின் கைகளில் செதுக்கப்பட்ட வழவழப்பான கட்டையாக உருமாறி வருகிறது.

அடைக்கப்பட்ட சதுரமான கட்டிடத்தில் முன் வாசல் மட்டும் தப்பை வைத்துகட்டப்பட்டிருந்தது.பக்கவாட்டில்தகரம்வைத்துமூடப்பட்டிருந்த வெளியில்தான் சொர,சொரப்பு வழவழப்பாய் மாறிய நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

வீட்டுக் கொல்லை வாசலுக்கு வலைக்கதவு அடிக்க வாங்கிய மரச்சக்கையை இங்குதான் செதுக்கக் கொண்டு போயிருந்தேன். செதுக்கவும் நன்றாக இருந்தது.

சொர,சொரப்பெல்லாம்போய்வழவழப்பாய்.மஞ்சள்பூசிக்குளித்த புதுப்பெண்ணின் பொலிவு போல கண்களும், உதடும் உதிர்க்கும் வார்த்தைகள் மனதிற்குள்ளாய் நுழை ய புதுப் பெண்ணின் பொலிவு நிறைய இடங்களில் அவசியப் படுகிற மாதிரி அல்லது அது மனதை கிறக்கி விடுகிற மாதிரி கட்டை வழவழ ப்பில் நான் லயித்துவிட பேசாமல் அவர்கள் கேட்ட கூலியை நான் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்.

ஸ்டோரிலிருந்து ரோட்டை கடந்த நேரம் மஞ்சள் பார்டர் போட்ட சேலை கட்டிய பெண் என்னை திரும்பித் திரும்பி பார்த்தவாறு செல்கிறாள்.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவளின் பார்டருக்குள் சிரித்த பூக்களும்,வடிவங்களும் என்னைப் பார்த்து கண் சிமிட்டின.

அவளது தோளில் தொங்கியகைப்பை அவளது அலங்காரம்,தலை யில் சிரித்த மல்லிகைப்பூ,சேலையில் பொதிந்திருந்த பொடி,பொடி பூக்கள் ,மெதுவான வேகத்தில் விரைந்த அவர்களது இரு சக்கர வாகனம் எல்லாமும் என்னை சற்று நிதானித்து சாலையை கடக்கச் செய்தது.

கடந்த வேகமும்,அவர்களின் இருசக்கர வாகன அமர்வும் தரையில் பட்டு அவர்களின்நிழலை இழுத்துச் சென்றது. இழுபட்ட நிழல் பள் ளம்,மேடு,கல்,மண்,கழிவு என அனைத்தின் மீதும் பட்டுப்பட்டு பயணிக்கிறதாய்…

யாரவது சொந்தமாய் இருக்க வேண்டும் அல்லது தோழமை பூத்திருந்த நட்பின் மூலமாய் கிடைத்திருந்த பழக்கமாய் இருக்க வேண்டும்.

அதுதான் அப்படி திரும்பித்திரும்பிப் பார்த்துச் செல்கிறாளோ, என்ன வோ………..?சொந்தங்களின் முகம் மறந்து ரொம்ப நாட்களாகிப் போனது. அலுவலகம், யூனியன், ஆர்வம் காரணமாக அணைத்துக் கொண்ட பழக்கங்கள் எல்லாம் செக்கு மாடாய் சுழல வைக்க சொந்தம், பந்தம், கோவில்,குளம்,சுற்றம் மறந்து ரொம்ப நாட்களாகிப் போனது.

லீவு கிடைக்கிற நாட்களில் “அக்காடா” என ஓய்வெடுக்கவும் முரண் களை யோசிக்கவுமே நேரம் சரியாகிப் போகிறது.பின் எங்கிட்டு சொந்தம் ,பந்தம் அவர்களது முகங்கள், அவர்களோடான உறவு……………?வெளியில் சொல்லமுடியாத கனவாய் ஆகிப் போகிற இம்மாதிரி கொடுமைகளையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது என தெரியவில்லை.அதிலும் என் போன்ற கீழ் மட்ட ஊழியனுக்கு இந்த சமூகம் தருகிற மரியாதை இருக்கிறதே,அடேயப்பாஅதை ………………ம் போய்தான் சரிபண்ணிக் கொள்ள வேண்டும்.

அந்நேரத்திற்கு கூட்டம் அதிகமில்லாத சாலையில் சென்றவர்களின்,
விரைந்தவர்களின் எண்ணங்களும்,செயல்களும்அப்படித்தானே இருந்திருக்கும்?

எண்ணங்களை ஒட்டிய செயல் பாடுகளை தடுக்க யாரால் முடியும்?என எனது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வர அதை அசை போட் டானாய் தெருவிற்குள் செல்கிறேன்.

காலையில் போட்டிருந்த கோலத்தின் அழிந்து போன அடையாள ங்கள் தெருவின் இருபக்க வீடுகளின் முன்பும் தெரிந்தது.

ரோடு,ரோடு தாண்டி நடை,நடை தாண்டி வீட்டின் உள்புறம், என விரிந்த வீடுகளின் வரைவில் ஒன்றுக்கொன்று மாறுபட்டும் வேறுபட் டும், வித்தியாசித்துத்தெரிந்தது.

இத்தனைக்கும் மத்தியில்தான் அவர்களது வீட்டை பார்க்க வேண்டும் பழைய காவல் நிலையத்தை ஒட்டிய தெருவில்தான் அவர்களது வீடு எனச் சொன்னார்கள்.இப்போது வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள்.காவல்நிலையம் இருந்ததற்கான அறிகுறிகளே அங்கு இல்லை.கட்டிடமே உருமாறிப் போயிருந்தது.

நல்லதுதான் எத்தனை,எத்தனை மனிதர்களை எப்படியெல்லாம் சந் தேகப்பட்டு, எப்படியெல்லாம் வழக்குப் போட்டு விசாரித்த இடமாக இது இருந்திருக்கிறது. எத்தனை பேரின் வாழ்கையின் திசையை திருப்பிப் போட்டதோ இந்த இடம் என தெரியாத முடிவுடன் நான் நின்று கொண்டு.

அந்த இடத்தின் எஞ்சியஅடையாளமாய்தெருமுனையில்இருந்த அடி குழாய் இன்னும் அப்படியே தண்ணீரோடு. ஆண்களும், பெண்களும், பெரியவர்களும் எப்போதும் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருக்கி றார்கள். சண்டை,சச்சரவு இல்லாமல். எந்த வேலையானாலும் சரி, எந்த மழை குளிரானாலும் சரி எப்போதும் அந்தக்குழாய் அடி பட்டுக்கொண்டேயிருக்கும் போல.

பூமியிலிருந்து தண்ணீர் வருகிறதா,அல்லது கைபிடித்து தண்ணீர் அடிக்கிறவர்களின் ராசியா? தெரியவில்லை.அந்த தெருக்காரர்களுக் கும்,அந்த அடி குழாய்க்கும் அப்படி ஒரு உறவு பூத்திருந்தது.

இந்த அழகர்நகர் தோன்றியகாலத்தில் போட்டது என சொல்லியிருந்தார் அந்த வாழைப் பழக்கடைக்காரர்.

முப்பதிலிருந்து முப்பத்தியிரண்டு இருக்கலாம் வயது.நாற்பத்தியிர ண்டு வயதுக்காரனான நான் அவரை பற்றி குறிப்பிடுகையில் அவர், இவர் என்றுதான் குறிப்பிடுகிறேன்.

ஏன்அப்படிஎனகேட்டால்தெரியவில்லைஎனசொல்வதற்கில்லை. அப்படியேபழகிப் போனேன். என்னை விட குறைந்த வயதினர் ,குறை ந்த வருவாய் பிரிவினர் குறைந்த வேலை பார்ப்பவர் அனைவ ரிடமும் எந்த பேதமுமில்லாமலும், மரியாதையுடனும் பேசவும், பழகவும் கற்றுக் கொண்டதன் விளைவுதான் இந்த மனது.

நான் வேலை பார்க்கிற வங்கிக்கு வருகிற வாடிக்கையாளர்களிட மும், சக உழியர்களிடமும் எப்போதும் மரியாதையாகவே நடந்து கொள்கிற பழக்கம் என்னிடம் எப்பொழுதும் உண்டு.வாங்க ம்மா, வாங்கசார்,வாங்க மேடம்,வாங்க தம்பி.வாங்கஅண்ணே ,,,,,,,,என்று தான் சொல்லி பழகியிருந்தேன்.

முள்ளு, முள்ளான தாடி முகத்தில் குத்திக் கொண்டு நிற்க பார்வை சரியாக தெரியாமல் வரும் கந்தவேலிடமும்,நகைக்கடன் கேட்டு வருபவரிடம், நகை எத்தனை உருப்படி எனக்கேட்டால் தான் மேய்க் கும் ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் பாண்டி வேலனிடமும் தராதரம் பார்க்காத பழக்கம்தான் என்னை அப்படியெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது.

ஒரே ஊரிலேயே பிறந்து,ஒரே ஊரிலேயே வளர்ந்து அதே ஊரிலே யே வாழ்ந்து முடித்து விடுகிற பாக்கியம்தான் பெரும்பாலானோ ரைப் போலவே எனக்கும் வாய்த்திருக்கிறது என்றார் அந்த வாழைப் பழகடைக்காரர்.

கடையின் பேர் என்னவோ வாழைப்பழகடைதான்.ஆனால் அங்கு சாந்திப் பாக்கு,பீடி,சிகரெட் வெற்றிலை,பாக்கு,பான்பராக் என எல்லா ம் இருந்தது.அவர் சொன்ன அடையாளத்துடனான வீட்டிற்கு செல்ல இன்னும் கொஞ்சம் தூரமிருக்கிறது.

நேராகப்போய் ஒரு தெரு திரும்ப வேண்டுமாம் கூறினார்கள்.நான் போய்க் கொண்டிருந்த தெருவின் முனையில்சாக்கடை கழிவை வாரி ஓரத்தில் குவித்திருந்தார்கள்.

சின்னதான அந்த குவியலின் உள்ளேயிருந்து அழுக்கும்,சாக்கடை கரையுமாக குச்சி ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.பார்க்க அருவரு ப்பாக தோன்றினாலும் குச்சியின் நீட்டத்தை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஏன் இப்படி என சாக்கடை அள்ளியவர்களை கேட் பதா அல்லது அள்ளியதை போடுவதற்கு உரிய ஏற்பாடை செய்து கொடுக்காதவர்களைப்பற்றி பேசுவதா?எது எப்படியாயினும் உடனடி யான தவறுக்குஅவர்கள்தான் ஆட்பட்டுப்போகிறார்கள்.

குவியலுக்கு எதிர்த்த வீட்டில் இருந்த வயதான மூதாட்டியை பார்க்கிறேன்.

அவர்தான் சொல்கிறார் என்ன செய்யச் சொல்றீங்க தம்பி, அப்பிடித்தான் கெடக்கு, அவுங்கள கேட்டா இவுங்கன்றாங்க,இவுங்களக் கேட்டா அவுங்கள கையக் காட்டுறாங்க. இப்பிடியே மாறி,மாறி நடக்குது தம்பி. இது எங்க போயி எப்பிடி முட்டிக்கிட்டு நிக்கும்னுதான் தெரியல.

நீங்க தேடி வந்த வீடு அதோ அதுதான் தம்பி.ரெண்டு பேரு வாசலுக்கு முன்னால நிப்பாங்க, ,அவுங்கதான் நீங்க தேடி வந்த ஆளுங்க, அண்ணன்,தம்பி ரெண்டு பேரும் சேந்து தொழில் பண்றாங்க, வருமானம் சில சமயம் அள்ளிக்கிட்டு வரும் சில சமயம் ஈயாடும்.சமாளிச்சு ஓட்றாங்க,என்னோட சொந்தக்காரங்கதான் தம்பி.பேச்சு வார்த்தை கெடையாது இப்ப.

அவுங்கதான் என்னைய இங்க வீடு பாத்து குடி வச்சாங்க,அதுக்கு பாத்திங்கீன்னா எத்தன தடை,எத்தன எதிர்ப்பு,எத்தன வசச்சொல்லு, எவ்வளவு குரோதம், யப்பா, மனசுவிட்டுப் போச்சு தம்பி. ஏன் பேரன் மார்கதான் என்னானாலும் பரவாயில்லைன்னு சொல்லி எதுதவுங்க கூடயல்லாம் பேசி சண்டபோட்டு என்னய உக்கார வச்சாங்க.இப்ப அவுங்ககுடியிருக்க நெலையான வீடில்லாம அலையுறாங்க தம்பி.

வீட்டுக்காரரு காலி பண்ணச் சொல்றாராம்.திடீர்னு இப்பிடிச் சொன்னா எங்க போவாங்க அவுங்க,புள்ள,குட்டிகள வச்சிக்கிட்டு.ஒரே ஆள் க இருக்குற தெரு அதான் இப்பிடி.

எங்கள மாதிரி ஆள்கள இருக்க விடமாட்டங்க.நொரண்டு இழுத்துக் கிட்டே இருப்பாங்க தம்பி. நாங்க பொழப்பப் பாக்குறதா,இல்ல இவுங்களோட சண்ட போட்டுகிட்டு இருக்குறதா? சொல்லுங்க, பாத்தா படிச்சவரு மாதிரி இருக்கீங்க, ஏதாவது கரைக்ட்டா சொல்லுங்க தம்பி என்றாள்.

வீடு தேடிய அலுப்பை விட மூதாட்டியின் பேச்சு என்னை அசைத்து விட அண்ணன்,தம்பி இருவரையும் நோக்கி கிளம்புகிறேன்.அவர்கள் என்னை பார்க்க, நான் அவர்களைப் பார்க்க மெளனமாய் கரைகிறது நிமிடங்கள்.

நான் பேச வாய் எடுத்த சமயத்தில் அவர்கள் துண்டுச்சீட்டு ஒன்றை நீட்டினார்கள். அதில் அவர்கள் குடிபுகப்போகும் புது வீட்டின் முகவரி இருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
இனி வேண்டாம் இருபது.ரூபாய் பத்தே போதுமானது. இளஞ் சிவப்பில் வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபா ய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறிய கணம் அது சடைப் பைக் குள்ளாய் பயணித்து பத்து ரூபாய் தாள் ஒன்றை கையில் எடுக்கிறது. இளம்மஞ்சளிலும்,அடர் ...
மேலும் கதையை படிக்க...
காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி. இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள் அந்தத்துணிகளின் துணையில்லாமல் வெந்ததில்லை,அது போல் அவள் அந்தத்துணிகள் போட்டு எடுக்கும் இட்லியைத்தவிர்த்து வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை. அது அவள் கட்டியிருந்த புடவையைப் போலவே ...
மேலும் கதையை படிக்க...
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன ...
மேலும் கதையை படிக்க...
தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே... பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற ...
மேலும் கதையை படிக்க...
இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால் கண்டக்டர், கண்டக்டர் அய்யா, கண்டக்டர் சார், கண்டக்டர் அண்ணே என்கிற அழைப்பொழிகளிலும் அதன் இயக்கத்திலுமாய் அன்றாடம் முனைப்புக்காட்டி இயங்கிக் கொண்டிருக்கிற ...
மேலும் கதையை படிக்க...
நெளிகோட்டுச்சித்திரம்
இட்லித்துணி…
இன்வாய்ஸ்
தூரங்களின் விளிம்புகளில்…
படிக்கட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)