Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விலக வேண்டிய உறவு!

 

ஆட்டோ, கடைத் தெருவில் சென்று கொண்டிருக்க, ஆட்டோவில் உட்கார்ந்திருந்த சாவித்திரி, தன் கணவனிடம், “”என்னங்க அந்த பாம்பே ஸ்வீட் ஸ்டாலில், ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தச் சொல்லுங்க. ரசகுல்லா ஒரு டப்பா வாங்கிட்டு போகலாம். நம்ப சந்துருவுக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு அவன் பிறந்த நாள். அவன் படத்துக்கு முன்னால வச்சு கும்பிடலாம்.”

ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ரசகுல்லா வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறினார் சண்முகம்.

“”என்ன ஐயா, வேறு எங்கேயும் நிறுத்தணுமா. இல்லை, நேரா சுபஸ்ரீ கிளினிக்குக்கு வண்டியை விடவா?”

“”ஆமாம்பா… எங்களை கிளினிக்கில் இறக்கி விட்டுடு. வர லேட்டாகும். நாங்க வேற ஆட்டோ பிடிச்சு வந்துடறோம்.”

விலக வேண்டிய உறவு

அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். “”பெயரை பதிவு பண்ணிட்டிங்களா; டோக்கன் கொடுத்திருக்காங்களா… கூட்டம் அதிகமாக இருக்கும் போலிருக்கு. நிறையப் பேர் காத்திருக்காங்க.”

“”ஆமாம் சாவித்திரி. புருஷன், பெண்டாட்டி இரண்டு பேரும் டாக்டர். அதான் கூட்டம். நம்ப டோக்கன் நம்பர் பனிரெண்டு. இப்பதான் மூணாம் நம்பர் போயிருக்காம். காத்திருக்கத்தான் வேணும்.”

“”அந்தம்மா பல் டாக்டர். வீட்டுக்காரர் ஆர்த்தோ டாக்டர். ரெண்டு பேரும் படிச்ச படிப்புக்கு, நல்லபடியாக பிராக்டிஸ் பண்றாங்க. நாம் கருவேப்பிலை கொத்து மாதிரி, ஒத்த பிள்ளையை பெத்து, இன்ஜினியருக்கு படிக்க வெச்சோம். அவன் ஆசைக்கு குறுக்கே நிற்காம, ஜாதி விட்டு ஜாதி பரவாயில்லைன்னு, அவன் காதலிச்ச பெண்ணையே கல்யாணம் பண்ணி வச்சோம்.

“”ஒரு வருஷம் சந்தோஷமாக வாழ்ந்தான். ஆனா, அது நிலைக்காம போயிருச்சு. லாரி ரூபத்தில் வந்த எமன், வேலைக்குப் போன பிள்ளையின் உயிரை பறிச்சுட்டான். பத்து வருஷமாக அவன் நினைவுகளை மனசில் சுமந்துக்கிட்டு வாழ்ந்துட்டிருக்கோம். ஒரு வருஷம், அவனோடு குடும்பம் நடத்தின மகராசி, அப்பா வந்து கூப்பிட்டதும் போயிட்டா… நமக்குன்னு இந்த உலகத்தில யாரு இருக்கா?”

“”எதுக்கு சாவித்திரி புலம்பறே. பல் வலின்னு வந்திருக்கே. அதிகம் பேசாதே. இன்னும் வலி ஜாஸ்தியாயிடும். காலையில் ஒண்ணும் சாப்பிடலை. பக்கத்து டீ கடையில் போய், பால் ஏதும் வாங்கிட்டு வர்றேன்… குடிக்கிறியா?”

“”வேண்டாங்க… இந்த பல்வலி நின்னா போதும். நீங்களும் தான் பசியோடு இருக்கீங்க. போய் காபி சாப்பிட்டுட்டு வாங்க. நம்மை கூப்பிட இன்னும் நேரமிருக்கு.”

“”எனக்கும் இன்னைக்கு நம்ப சந்துரு ஞாபகமாகவே இருக்கு. பசியே தோணலை. வாழ்க்கையில் கடவுள் நம்மை அதிகமாக சோதிச்சிட்டாரு. மகன், மருமகள் பேரன், பேத்தின்னு வாழற கொடுப்பினை இல்லாம, கடைசி வரை நீயும், நானும் வாழணுங்கற விதியை நமக்கு கொடுத்திட்டாரு.”

அவரிடமிருந்து பெருமூச்சு வர, மவுனமாக அமர்ந்திருந்தாள் சாவித்திரி.

“”டோக்கன் நம்பர் பனிரெண்டு. சாவித்திரி வாங்க,” நர்ஸ் அழைத்தாள்.

நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டாள் சாவித்திரி. நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தது, முழங்கால் வலியால் உடனே நடக்க வராமல், சற்று நின்று, கணவனைப் பிடித்து, டாக்டரின் அறை நோக்கி நடந்தாள்.

“ஏசி’ ஓடிக் கொண்டிருக்க, ஒளிரும் விளக்குடன் டாக்டரின் அறை பிரகாசமாக இருந்தது.

“”அம்மா… அந்த சேரில் ஏறி உட்கார்ந்து, தலையை பின்னால் சாய்த்து வெச்சுக்குங்க. டாக்டரம்மா வந்திடுவாங்க. சார் நீங்க அப்படி ஓரமாக அந்த சேரில் உட்காருங்க.”

டாக்டரின் உதவியாளர் சொல்ல, உள் அறையிலிருந்து, கைகளை டவலால் துடைத்தபடி வந்த டாக்டரம்மாவைப் பார்த்து அதிர்ந்தார் சண்முகம். அவளது கண்களிலும் ஆச்சரியம் மின்னின,

“”அப்பா, நீங்களா… நல்லா இருக்கீங்களா?”

குரல் கேட்டு, கண்மூடி நாற்காலியில் உட்கார்ந்திருந்த சாவித்திரி, கண் திறந்து பார்க்க, அவளால் நம்ப முடியவில்லை.

“யமுனாவா அது… அவள் எப்படி?’

அதற்குள் சாவித்திரியின் அருகில் வந்த யமுனா, அன்போடு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“”அம்மா உங்களை சந்திப்பேன்னு நினைக்கலை. இந்த பத்து வருஷத்தில், என்னென்னவோ நடந்து போச்சு. சந்துரு மறைவுக்கு பின், அப்பாவோடு போயி வேதனையில் இருந்த என்னை, அப்பா தான் தேற்றி திரும்பப் படிக்க வச்சாரு. பல் டாக்டருக்குப் படிச்சு, என் அத்தை பையனை எனக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க. அஞ்சு வயசிலே ஒரு பெண் இருக்கா. நீங்க எப்படியம்மா இருக்கீங்க?”

அவள் சகஜமாகப் பேச, சாவித்திரியால் நம்ப முடியவில்லை. சந்துருவுடன் வாழ்ந்த யமுனா, இன்று பல் டாக்டராக, இன்னொருவரின் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக் கிறாள். கண்கலங்க மவுனமாக அமர்ந்திருந்த சாவித் திரியை, அன்புடன் பார்த்தாள்.

“”என்னைப் பார்த்ததும் உங்களுக்கு பழைய ஞாபகங்கள் வந்திருக்கும். உங்க வேதனை எனக்குப் புரியுதும்மா. கடவுள் கொடுத்த வாழ்க்கையை, நாம் வாழத்தானே வேண்டியிருக்கு.”

“”நீ நல்லா இருக்கியா யமுனா? உன் கணவர் தான் ஆர்த்தோ டாக்டரா… உன் மகள் பேர்தான் சுபஸ்ரீயா?”

“”ஆமாம்மா. அவள் பெயரில் தான் இந்த கிளினிக் இருக்கு. உங்களுக்கு என்னம்மா பல்வலியா. முதலில் செக் – அப் பண்ணிடறேன். அப்புறம் பேசலாம்.”

வாயைத் திறக்கச் சொல்லி, சிகிச்சை செய்த யமுனா, “”மருந்து போட்டிருக்கேன். வலி நிற்க இஞ்செக்ஷன் கொடுத்திருக்கேன். ஒரு வாரம் கழிச்சு வாங்கம்மா. உங்க பல்லை எடுக்க வேண்டியிருக்கும். ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துட்டு, பல்லை எடுத்துடலாம். அப்புறம் திருச்சியில் தான் இப்ப இருக்கீங்களா? உங்க அட்ரஸ் சொல்லுங்க. கட்டாயம் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேணுமினாலும் செய்யத் தயாராக இருக்கேன். இவ்வளவு நாள் உங்களைப் பத்தி விசாரிக்காம இருந்ததுக்கு மன்னிச்சிடுங்க. எங்கப்பாவின் கட்டளையை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாம போயிடுச்சி.”

“”உன் நிலைமை எனக்குப் புரியுதும்மா. சின்ன வயசில், வாழ்க்கையை இழந்த உன்னை, உன் அப்பா படிக்க வச்சு, நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்காரு. எங்களுக்குத் தான் கொடுப்பினை இல்லாம போயிடுச்சி.”

“”உங்களையும், அப்பாவையும் பார்த்தா, மனசுக்கு சங்கடமாக இருக்கு. என்னை நீங்க பிரிச்சுப் பார்க்க வேண்டாம். உங்க மகளாக நினைச்சுக்குங்க. உங்க அட்ரஸ் சொல்லுங்கம்மா.”

“”நம்பர் இருபது. வேலம்மாள் தெரு. புது சத்திரம்,” சாவித்திரி சொல்ல, குறித்துக் கொண்டாள்.

“”சரிம்மா, கார் அனுப்பறேன். வீட்டில் போய் இறங்கிக்குங்க. எனக்கு பேஷன்ட், “வெயிட்’ பண்றாங்க. இன்னொரு நாள் பேசுவோம். இந்த சன்டே வர டிரை பண்றேன்.”

“”காரெல்லாம் வேண்டாம் யமுனா. நாங்க வீட்டிலிருந்தே ஆட்டோ வச்சுட்டு வந்திருக்கோம். அதிலே போயிடறோம். நீ உன் வேலைகளைக் கவனி,” சொன்னவள், கணவரிடமிருந்து பையை வாங்கி, அதிலிருந்த ரசகுல்லா டப்பாவை யமுனாவிடம் கொடுத்தாள்.

“”இதிலே, ரசகுல்லா இருக்கு. என் பேத்திகிட்டே கொண்டு போய் கொடும்மா.”

கண்கலங்க சாவித்திரியை அணைத்து கொண்டாள் யமுனா. இருவரும் அவளிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.

ஆட்டோவில் ஏறி, வீடு வரும் வரை, எதுவுமே பேசாமல் வந்த சாவித்திரி, பூட்டிய கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

“”சாவித்திரி, நம்ப சந்துரு பிறந்த நாளான இன்னைக்கு, யமுனாவை பார்த்து பேசியது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு. நம்பகிட்ட எவ்வளவு பிரியமா, அன்பாக நடந்துக்கிட்டா… நீ ஏன் சாவித்திரி அவக்கிட்டே பொய்யான அட்ரஸ் சொன்ன. உன்னோட நடவடிக்கை எனக்குப் புரியலை.”

கணவரை திரும்பிப் பார்த்தாள் சாவித்திரி.

“”யமுனாவின் அன்பும், அரவணைப்பான பேச்சும், மனசுக்கு இதமாகத்தான் இருந்தது. அதை நான் மறுக்கலை. ஆனா, அதை நாம் ஏத்துக்கறது சரியில்லைங்க. இப்ப அவ இன்னொரு வீட்டு மருமகள். கணவர், குழந்தைன்னு சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கா. பழைய உறவை ஞாபகப் படுத்த, நாம் அவள் முன்னே போயி நின்னா. அவள் மனசிலும் பழைய ஞாபகங்கள் வரும்.

“”இப்ப சந்தோஷ சூழலில் போயிட்டி ருக்கிற அவள் வாழ்வில், தேவையில்லாத சங்கடங்கள் வர, நாம் காரணமாயிடக் கூடாது. நாம் இழந்தது இழந்ததுதான். வாழ வேண்டிய அந்த பெண்ணின் வாழ்க்கையில், தர்மசங்கடத்தை ஏற்படுத்த எனக்கு விருப்ப மில்லைங்க. அதான் அவள் நம்மைத் தொடர்பு கொள்ளாம இருக்க பொய்யான விலாசம் கொடுத்தேன்,”

சொன்னவள் மவுனமாக உட்கார்ந்திருக்கும் கணவனை பார்த்தாள்…

“”சரி, நீங்க போய் கை, கால், முகம் அலம்பிட்டு வாங்க. சூடா காபி கலந்து தர்றேன். பல் வலி சரியானதும், வேற டாக்டர் கிட்ட போய்தான் பல்லைப் பிடுங்கணும்,” என்று சொன்ன சாவித்திரி, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் சந்துருவின் படத்தை பார்த்து, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

- ஜனவரி 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
காலியான கூடு!
வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, "விடிந்து விட்டதா?' என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து என காட்டியது. அருகில், ரேணுவின் படுக்கை காலியாக இருந்தது. "எழுந்து விட்டாள் போலிருக்கிறது. பாவம் ராத்திரியெல்லாம் தூங்காமல், மனவேதனையுடன் புலம்பிக் கொண்டிருந்தாள்...' சமையல் ...
மேலும் கதையை படிக்க...
பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத். ""என்னப்பா பேரனுக்கு இவ்வளவு விலையில் காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?'' பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவைப் ...
மேலும் கதையை படிக்க...
பிரிவும் பரிவும்!
கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். ""வா அக்கா... வர்றேன்னு போன் கூட பண்ணலை... திடீர்ன்னு வந்து நிக்கறே!'' ""குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அதான், உன்னை பார்த்துட்டு, இரண்டு நாள் உன்னோடு இருந்துட்டு, அப்படியே கிராமத்துக்கு போகலாம்ன்னு புறப்பட்டு வந்தேன்.'' கல்லூரிக்கு ...
மேலும் கதையை படிக்க...
வடிகால்
மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், ...
மேலும் கதையை படிக்க...
நிராசை!
கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில். அவனருகில் பூக்கூடை, பழக்கூடைகளுடன் ஏறிய பெரியவர்கள் இருவர், தங்கள் காலடியில் அதை பத்திரப்படுத்தி அமர்ந்து கொண்டனர். பஸ் கிளம்பியது கூட தெரியாமல் கண்களை ...
மேலும் கதையை படிக்க...
காலியான கூடு!
மனமே கடவுள்
பிரிவும் பரிவும்!
வடிகால்
நிராசை!

விலக வேண்டிய உறவு! மீது ஒரு கருத்து

  1. vishnupriya says:

    சாவித்திரி யமுனாவின் இன்னொரு அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)