விருப்பமுள்ள திருப்பங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 10,066 
 

”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண மண்டபம் முழுக்கச் சுற்றமும் நட்பும் கூடிக் குலாவிக்கொண்டு இருந்தது.

”கடமையை முடிச்சிட்டோம்ல… மல்லிகா” தன் பக்கத்தில் பூரிப்புடன் நின்றுகொண்டு இருந்த தன் மனைவியிடம் கேட்டார் பரமசிவம். அவரின் கையை அழுத்தினாள் மல்லிகா. அந்த அழுத்தத்தில் இருந்தது ஓராயிரம் வார்த்தைகளின் திருவிழா!

கண்களின் கடைக்கோடியில் திரண்ட கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடியே பரமசிவம் மணமேடையில் இருந்து இறங்கி, மண்டபத்தின் ஓர் ஓரத்தில் இருந்த ஃபேனுக்குக் கீழே வந்து அமர்ந்தார். காற்று இதமாக வருட, கல்யாணக் களைப்பில் சிறிது நேரம் கண் அயர்ந்தார். நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் பறந்தன.

வத்திராயிருப்பு. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத நடுத்தர ஊர். காலை மணி ஏழு. காலிங் பெல் அடிக்கும் சத்தம். வீட்டு வேலைக்குத் தாமதமாக வந்திருந்தாள் சகுந்தலா. ”உன்னை ஏதாச்சும் குத்தம் சொன்னா இந்த வீட்டு எஜமானி அம்மாவுக்குப் பொசுக்குனு கோபம் வந்துடுது!” என்று திட்டிக்கொண்டே கதவைத் திறந்துவிட்டார் பரமசிவம். சகுந்தலா எதையும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

”ஐயா! ரொம்ப நாளா நானும் கேக்கணும் கேக்கணும்னு நினைச்சேன். நம்ம பாப்பாவுக்கு எப்பதான் மாப்பிள்ளைப் பார்க்கப் போறீங்க?”

”பாப்பாவுக்குப் படிப்பு முடியட்டும்!” என்றார் சுருக்கமாக.

வீட்டு நல்லது, கெட்டது அனைத்திலும் மூக்கை நுழைக்கும் அளவு சகுந்தலாவுக்கு உரிமை கொடுத்து இருந்தார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களில், ”சகுந்தலா… நீ வாய் திறந்த நேரம் பாப்பாவுக்கு மாப்பிள்ளை அமைஞ்சிடுச்சி. இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்” மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றிய விஷயங்கள் அத்தனையும் சகுந்தலாவிடம் ஒப்பித்தனர்.

திருமண வேலைகளில் வீடு களைகட்டியிருந்தது. உறவினர்கள் வெவ்வேறு பணிகளில் ஆர்வமாக இருந்தனர்.

”மல்லிகா… பூஜை அறையில வெச்சிருந்த மோதிரத்தைக் காணோம். நீ பார்த்தியா?”- கலவரத்துடன் கேட்டார் பரமசிவம். வீடே தலைகீழானது. மோதிரம் கிடைக்கவே இல்லை.

வீடு முழுக்கவும் உறவினர்கள். யாரைச் சந்தேகப்படுவது? பரமசிவமும் மல்லிகாவும் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடி… ஓய்ந்து போனார்கள். ‘யார் எடுத்து இருப்பா?’ சந்தேகக் கண்கள் எல்லோரையும் படம் எடுத்தது.

”வேலைக்காரி சகுந்தலா எடுத்திருக்கலாமோ?”- மெதுவாக தனது சந்தேகத்தை மனைவியிடம் சொன்னார் பரமசிவம்

”என்ன பேசுறீங்க. பத்து வருஷமா நம்ம வீட்ல வேலை பார்க்குறா. எந்தக் குத்தமும் சொல்ல முடியாது. அவ எடுத்திருக்க மாட்டா. சொந்தக்காரங்க யார் மேலயும் சந்தேகப்பட முடியாது. போனது போவட்டும்… விடுங்க” -அமைதிப்படுத்தினாள் மல்லிகா.

அடுத்த ஆறு மாதங்களில் மகனின் திருமணம். பரமசிவமும் மல்லிகாவும் மீண்டும் கல்யாண வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தனர். குழந்தைகளாலும் உறவுகளாலும் ஹவுஸ் ஃபுல்!

”என்னங்க… பூஜை அறையில இருந்த நவரத்தின மோதிரத்தைக் காணோங்க!”- மல்லிகா அலறிக்கொண்டே வந்து சொன்னாள். பரமசிவம் பதறிப் போனார்.

”இந்தத் தடவை நீ எதுவும் பேசாத. எனக்கு அந்த வேலைக்காரி சகுந்தலா மேலதான் சந்தேகம்!” கோபத்தின் உச்சத்தில் இருந்தார் பரமசிவம்.

கண்ணீரோடு சகுந்தலா நின்றுகொண்டு இருந்தாள். ”இதப் பாரு சகுந்தலா… பத்து வருஷத்துல நான் ஏதாச்சும் உன்னைக் கேட்டுருப்பேனா. பாப்பா கல்யாணத்துலயே மோதிரம் ஒண்ணு காணாமப் போச்சு. யாரைச் சந்தேகப்படுறதுன்னு விட்டுட்டோம். அதே மாதிரி இப்பவும் நடந்திருக்கு. நீ எடுத்திருந்தா குடுத்துடு. தப்பா நினைக்க மாட்டோம். இல்லீன்னா போலீசுக்கு போறாப்பல இருக்கும்!”- வார்த்தை களைக் கொட்டினார் பரமசிவம்.

”ஐயா! நான் ஏழைதான். என் புருஷன் என்னை விட்டுட்டுப் போய் மூணு வருஷம் ஆவுது. இந்தக் கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு ஒவ்வொரு வீடா போய் பாத்திரம் கழுவி, துணி துவைச்சி… நானும் புள்ளையும் காலம் தள்ளிட்டு இருக்கோம். திருடற புத்தி இதுவரைக்கும் எனக்கு வரலை”-புடவை முந்தானையை அவிழ்த்து உதறிக் காட்டினாள் சகுந்தலா. செய்யாத குற்றத்துக்காக அவள் விசாரிக்கப்பட்டது அவமானமாக இருந்தது. வறுமையான மனிதர்களின் நேர்மையை யாரும் எளிதில் நம்புவது இல்லை. புழுவாகத் துடித்தாள் சகுந்தலா. அம்மாவின் அழுகை பார்த்து குழந்தையும் அழுதது.

”திருட்டுத்தனம் பண்ணிட்டு நல்லா நடிக்கிறே. எங்க கண் முன்னால நிக்காதே… வெளியில போ!” கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்கள்.

மனசு கேட்காமல் மீண்டும் பூஜைஅறையில் இருந்த பூக்கூடைக்குள் துழாவி மோதிரத்தைத் தேடினார் பரமசிவம். விரல்களில் தட்டுப்பட்டது மோதிரம். அதிர்ச்சியானவர், ”மல்லிகா, மோதிரம் பூக்கூடைக்குள் விழுந்தது தெரியாம சகுந்தலாவைத் திட்டிட்டோம்!” என்று பதறினார்.

மீண்டும் சகுந்தலாவை அழைக்கச் சென்றபோது, ”எதுக்கும் உள்ளே வந்து வீடு பூரா மோதிரம் இருக் கான்னு தேடிப் பார்த்துட்டுப் போயிடுங்கம்மா!”-அழுகையுடனே சொன்னாள் சகுந்தலா.

”எங்களை மன்னிச்சிடும்மா. ரெண்டாவது தடவையா நகை தொலைஞ்ச தும் அப்செட் ஆயிட்டோம். நகை கிடைச்சிடுச்சு. பழையபடி வேலைக்கு வா”- மல்லிகா பேச்சில் குற்ற உணர்ச்சியின் சாரம்.

”நகை கிடைக்காமப் போயிருந்தா என் மேல இருந்த சந்தேகம் அப்படியேதானே இருந்திருக்கும். உங்க வீட்டு தெருப் பக்கமே வர மாட்டேன். ரொம்ப அவமானமா ஆயிடுச்சு!”- அழுதுகொண்டே சொன்னாள் சகுந்தலா.

உள்காயத்துடன் மல்லிகா வீடு திரும்பினாள்.

அன்று பாகீரதி முதல் தெருவில் இருக்கும் அந்தப் பெரிய வீட்டு வாசலில் போலீஸ் தொப்பிகள் தெரிய, தெரு பரபரப்பு உடுத்திக்கொண்டு இருந்தது.

”ஒரே தெருவுல ரெண்டு சாவு. ஒண்ணு, இந்த வீட்டு வேலைக்காரி கொலை. இன்னொண்ணு, நம்ம ராஜாங்கம் ரோட்டை கிராஸ் பண்றப்ப ஆக்சிடென்ட்ல செத்துப்போனது!” யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தது வாக்கிங் போன பரமசிவம் காதில் விழ, அந்த வீட்டை எட்டிப் பார்த்தார். அவரை அறியாமல் வாய், ”ஐயோ!” என்றது.

கொலை செய்யப்பட்டுக் கிடந்தது சகுந்தலா! ‘தான் வேலை பார்த்த வீட்டுக்காரர்கள் வெளியூருக்குச் சென்றதால், இரவுக் காவலுக்குத் தங்கி இருந்திருக்கிறாள் சகுந்தலா. திருட வந்தவர்களிடம் சண்டை போட்டபோது அவளைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார்கள். தலை ஒரு மேஜையின் கூர் முனையில் மோதியிருக்கிறது. அப்படியே உயிர் போயிட்டு. குழந்தை தொட்டில்ல தூங்கிட்டிருக்கு. முதலாளி வீட்டுச் சொத்தைக் காப்பாத்துறேன்னு தன் பிள்ளையை அநாதை ஆக்கிட்டுப் போயிட்டா மவராசி!’ தெரு பேசிக் கொண்டதை அப்படியே மனைவியிடம் ஒப்பித்தார் பரமசிவம்.

‘நல்ல பொம்பளையை அநாவசியமா சந்தேகப்பட்டுட்டோமே!’ பரமசிவம்-மல்லிகா தம்பதியைத் தாக்கியது குற்றஉணர்ச்சி. ‘நம்ம வீட்லயே வேலை பார்த்திருந்தா அவளுக்குச் சாவு வந்திருக்காதோ… தெரிந்தோ தெரியாமலோ அவள் சாவுக்கு நாமும் காரணமாகிட்டோமா?’ கணவனும் மனைவியும், ‘சகுந்தலாவின் குழந்தையை அநாதையாக விட்டுவிடக் கூடாது’ என்று முடிவெடுத்தனர்.

அந்த முடிவு அவர்களின் சொந்த மகனுக்கும் மகளுக்கும் பிடிக்காதபோதும் கவலைப்படாமல் சகுந்தலாவின் குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டனர். ‘ஆர்த்தி’ என்று புதிய பெயரும் சூட்டினார்கள்.

தன் வீட்டுக்குள் புதிய தென்றலாக வந்திருக்கும் ஆர்த்தியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே மனைவி, குழந்தையுடன் சென்னைக்குக் குடியேறினார் பரமசிவம். ஆர்த்தியை ஒரு பள்ளியில் சேர்த்தனர். ‘இந்தக் குழந்தையைக் கரை சேர்க்கும் வரையில் எங்கள் இருவரையும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் கடவுளே’ இதுதான் இந்தத் தம்பதிகளின் அன்றாட பிரார்த்தனை.

காலண்டர் மரத்தில் நிறைய மாதங்கள் உதிர்ந்தன. சில காலண்டர்களும் உதிர்ந்தன. கல்லூரிக்குப் போனாள் ஆர்த்தி. பருவத்தின் ஜன்னல்களில் ஹார்மோன்களின் மானாட மயிலாட… இறுதி ஆண்டு படிப்பில் இருந்தபோது ஆர்த்தியின் திக்குமுக்காடல் அவள் காதல் வலை யில் சிக்கியிருப்பதை உணர்த்தியது.

ஆர்த்தியை விசாரித்தார் பரமசிவம். ஒரு பையன் போட்டோவைக் காட்டி, ”இவன்தான் ரகு. கேம்பஸ் இன்டர்வியூவில் செலெக்ட் ஆகி, ஒரு எம்.என்.சி. கம்பெனியில் வேலைக்குப் போகப் போறான். நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!” என்றாள்.

”எல்லாம் சரிம்மா. சாதாரண குடும்பத்துப் பையனை எப்படிம்மா உனக்கு மாப்பிள்ளையா?”- பரமசிவம் வார்த்தைகளைப் பிசின் போல இழுக்க…

”அப்படிச் சொல்லாதீங்கப்பா… பாசம் காட்ட ரகுவுக்கு யாரும் இல்லைப்பா. அநாதை ஆசிரமத்துல தங்கிதான் படிச்சிருக்கார். நீங்க என்னைத் தத்து எடுக்கலைன்னா நானும் அநாதை ஆசிரமத்துலதானே வளர்ந்திருப்பேன். அப்பா ப்ளீஸ்…”-ஆர்த்தியின் கெஞ்சல் பரமசிவத்தின் மனசை அசைக்க,

”பையனை வரச் சொல்லும்மா” என்றார்.

அடுத்த நாளே ரகு ஆஜர்.

”சார்… எனக்குச் சொந்த ஊர் வத்திராயிருப்பு” என்று அவன் சொன்னதும், மல்லிகாவும் பரமசிவமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

”ராஜபாளையம் பக்கத்தில் இருக்கு சார். நான் பிறந்து அஞ்சு வயசு வரை அங்கேதான் வளர்ந்தேன். நான் சின்ன பையனா இருக்கும்போதே எங்கப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டார்!”

”என்னாச்சு..?”

”அம்மாவுக்கு கேன்சர். அம்மாவை எப்படி யாவது காப்பாத்திடணும்னு அப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டார். பிழைக்க வைக்க ரொம்ப பணம் தேவைப்பட்டு இருக்கு. திருடலாம்னு முடிவு பண்ணி, என்னை ஒரு வீட்டு வாசல்ல நிறுத் திட்டு, முகத்தில் துணியைக் கட்டிக்கிட்டு அந்தவீட்டுக் குள்ளேபோனார். அந்த வீட்டு வேலைக்காரம்மா முழிச்சுக் கிட்டு சத்தம் போட, மாட்டிக்கிட்டா மானம் போயிடு மேனு அந்தம்மாவைப் புடிச்சுத் தள்ளி விட்டுட்டுத் தப்பிச்சா போதும்னு என்னையும் தூக்கிட்டு ஓடினார். அவசரத்துல ரோட்டை கிராஸ் பண்ணும்போது, வேகமா வந்த லாரியில அடிபட்டு என் கண் முன்னாலயே செத்துப் போயிட்டார்!”- தன் சோகக் கதையைக்கண்ணீ ருடன் சொன்ன ரகு, சற்று நிறுத்தி மேலும் தொடர்ந் தான்.

”நான் மட்டும் பொழைச்சுட்டேன். ஊரைப்பொறுத்த வரை அப்பா இறந்தது ஒரு விபத்து. நானும் யார் கிட்டயும் எதுவும் சொல்லலை. உள்ளுர்ல இருக்கப் பிடிக்காம பிழைப்பு தேடி அம்மா இந்த ஊருக்கு வந்துட்டாங்க. வந்த கொஞ்ச நாள்லேயே அம்மா இறந்துட்டாங்க. இப்போ என்னைப் பத்தி நினைக்க யாரும் இல்லை… ஆர்த்தியைத் தவிர!”- ரகுவின் குரல் கம்மியிருந்தது.

வாழ்க்கை எனும் வரைபடத்தில் ஆரம்பமும் முடிவும் எப்படி அமையும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பெருமூச்சோடு ஆர்த்தியைப் பார்த்தார். ”சரியான பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்க!”- ஆர்த்தியின் தோளில் தட்டிக்கொடுத்தார் பரமசிவம். தனக்குத் தெரிந்த ரகசியத்தைத் தெரியாமல் மறைத்தார்.

ஆர்த்தியின் கைகளை ரகுவின் கையில் ஆனந்தமாகப் பிடித்துக் கொடுத்தனர், நரைத்த முதியவர்களாக இருந்த பரமசிவமும் மல்லிகாவும். கோலாகலமான திருமணத்தன்று மதியம்….

”ஏங்க… பூஜை அறையில வெச்சிருந்த மோதிரத்தைப் பார்த்தீங்களா?”- அலறினாள் ஆர்த்தி.

வீடே அதிர்ந்து பின் சிரித்தது. அது அன்பின் பல்லாங்குழி ஆட்டம்!

– ஆகஸ்ட், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *