விருந்தோம்பலுக்கு ஒரு பாலம்

 

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு நேர் எதிர் வீட்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்தார்கள் பாகீரதி மாமியும், மாமாவும்.

பள்ளிக்கூடம் மத்தியானம் ஒரு மணிக்கு முடிந்துவிடும். அப்போது மாமி தன் வீட்டு வாசலில் நின்றிருப்பாள், வெயிலைப் பொருட்படுத்தாது.

கோலாலம்பூரில் கோயில், கல்யாணம் போன்ற இடங்களில்தான் புடவை உடுத்திய தமிழர்களைப் பார்க்கமுடியும், என் அம்மா உள்பட. மாமி புடவை அணிந்திருந்தது இனம்புரியாத உவகையை ஊட்டியது.

ஒரு நாள், என்னைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தபடி, “ஒன் பேர் என்னம்மா?” என்று விசாரித்தாள். வாட்டசாட்டமான உடலுக்குத் தக்க பெரிய குரல். அதில் மென்மை இல்லை. ஆனாலும், மஞ்சள் பூச்சுடன் முகம் களையாக இருந்தது.

பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம், மலாயைத்தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்ற விதியால் நொந்திருந்த எனக்குத் தமிழைக் கேட்டவுடனேயே மாமியைப் பிடித்துப்போயிற்று.

இரண்டு பஸ் மாற்றி நான் வீடு போய்ச்சேர ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று விசாரித்துவிட்டு, “வளர்ற வயசு. அத்தனை நேரமா பசியோட இருப்பே? வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ, ஷீலு!” என்றாள் உரிமையோடு. (என் பெயர் சுசீலா என்றுதானே சொல்லியிருந்தேன்?) பிறருடன் சுலபமாக நெருங்கிவிடும் வித்தை மாமிக்குத் தெரிந்திருந்தது.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு விரைவாகத் தயாரிக்கவென நிறைய எண்ணையைக் கொட்டியிருப்பார் பள்ளி காண்டீனை நடத்திய ஆ சேக். (சீன மொழியில் மாமா). உப்புக்குப் பதில் சோயாவிலிருந்து தயார்செய்யும் கீசாப். நாள் தவறாது இதையே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்திருந்தது. அதிகமாகப் பிகு செய்துகொள்ளாது மாமியின் வீட்டுக்குள் நுழைந்தேன்.

சில வாரங்களில், எங்களில் சிலருக்குத் தினமுமே மாமி கைச்சாப்பாடுதான் என்று ஆயிற்று. ஒரு சாம்பார், கொஞ்சம் மோர். உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய் என்று ஏதாவது ஒரு `இந்திய’ கறிகாயை காரசாரமாக வதக்கி வைத்திருப்பாள். அவ்வளவுதான். ஆனால், மாமி அன்புடன் பரிமாறும்போது அமிர்தமாக இருந்தது.

“விசு வரவர சரியாவே சாப்பிடறதில்லே. சொதப்பறான்,” என்று கரிசனப்பட்டுவிட்டு, “சிகரெட் பிடிக்கறியாடா? அதான் பசி மந்தமாயிடுத்து!” என்று கண்டுபிடித்தாள்.

அவன் முழுப்பெயர் விசுவலிங்கம். மாமிக்கோ, முதல் நாளிலிருந்தே அவன் விசுதான்.

“ஐயோ! இல்லே மாமி!” என்று விசு மறுத்தபோது, எங்கள் முகத்தில் புன்னகை.

“பொய்யாடா சொல்றே? படவா! அதான் நாத்தம் கொடலைப் பிடுங்கறதே!” என்று சொரசொரப்பான அவன் கன்னத்தை மாமி உரிமையுடன் கிள்ளியபோது, நாங்கள் எல்லாரும் உரக்கச் சிரித்தோம்.

விசு வெட்கத்துடன் நெளிந்தான்.

“தினமும் நாலஞ்சு தமிழ்ப்பிள்ளைங்களுக்குச் சோறு போடற அந்த நல்லவங்க யாரு?” என்று அதிசயித்த அம்மாவுடன், அப்பாவும் ஒரு நாள் வந்திருந்தார்.

மாமாவுக்கு அரசாங்கத்தில் ஏதோ சிறிய வேலை. அதனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வீடும் சிறியது. மாமி வீட்டுக்குள்தான் இருந்தாள். பூஜை அறையில் மணியடிக்கும் ஒலி கேட்டது.

`ஓ, இன்று வெள்ளிக்கிழமை இல்லை?’ என்று என் யோசனை போயிற்று. அன்று மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் தொழுகைக்குப் போகவென பள்ளிக்கூடம் முன்னதாகவே முடிந்துவிடும்.

ஐந்து நிமிடங்கள் பொறுத்து மாமி வந்தாள், பக்திப்பழமாக. நெற்றி நிறைய விபூதி, குங்குமம். என்னுடன் நின்றிருந்தவர்களைப் பார்த்து முக மலர்ச்சியுடன், “வாங்கோ, வாங்கோ,” என்று வாயார வரவேற்றாள். “பூஜையிலிருந்தேன்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள்.

எனக்குப் பெருமையாக இருந்தது.

சிறிது பொறுத்து, அம்மா விஷயத்துக்கு வந்தாள். “எங்க மகளுக்கு நீங்க தினமும் சாப்பாடு போடறீங்களாம். அது சரியில்லே. நீங்க ஏதாவது வாங்கிக்கணும்,” என்று தன் கைப்பையைத் திறக்கப்போனாள்.

“மொதல்லே பையை மூடுங்கோ,” என்றாள் மாமி, அதட்டலாக. “படிக்கிற குழந்தைகளுக்கு சாப்பாடு போடறதால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டேன். அதிதிக்குப் பண்றது தேவர்களுக்குப் பண்றதுக்குச் சமானம்னு சொல்லி வெச்சிருக்கா! பாருங்கோ,” என்று ஓர் ஆன்மிகப் புத்தகத்தைப் பிரித்தாள்.

நாங்கள் திரும்பும் வழியில் அம்மா, “இந்தக் காலத்தில இப்படியும் ஒத்தங்க!” என்று அப்பாவிடம் கூறி ஆச்சரியப்பட்டாள்.

“ஒனக்கு ஒலகம் புரியல, ஜானு. ஆதாயமில்லாம யாரும் எந்தக் காரியமும் பண்ணமாட்டாங்க!” என்றார் அப்பா, வரண்ட குரலில்.

என்ன ஆதாயம்? எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்தில் நடந்தவைகளையெல்லாம் நாங்கள் மாமியிடம் கூற, சிரித்தபடி கேட்பாளே, அதுவா?

தனியாக இருக்கையில், அப்பா என்னிடம் கேட்டார் மாமாவைப்பற்றி.

மாமா யாருடனும் அதிகம் பேசமாட்டார், வீணையை வைத்துக்கொண்டு தன் அறையிலேயே இருப்பார், இந்த வருடம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், வாடகை வீட்டுக்குப் போய்விடுவார்கள் என்று எனக்குத் தெரிந்ததை ஒரே மூச்சில் கொட்டினேன்.

`ஏழைக்குடும்பத்திலே பிறந்துட்டேனே, என்ன செய்யறதுடி, ஷீலு! இரண்டாந்தாரமா வாக்கைப்பட்டேன். `வயசானவரா இருந்தா என்ன, பணக்கார நாடு! நம்ப பாகீரதி அமோகமா இருப்பா!’ அப்படின்னா எல்லாரும். ஏண்டி, நான்தான் கேக்கறேன், பணக்கார நாடா இருந்தாப்போல அங்கே இருக்கிற எல்லாருமே பணக்காரான்னு ஆயிடுமா?” என்று பொரிந்துவிட்டு, “மாமாவுக்கு வீணைதான் பொண்டாட்டி! நான் வெறும் சமையக்காரிதான்!’ என்று பெருமூச்சுடன் மாமி என்னிடம் அந்தரங்கமாகக் கூறியதைச் சொல்லத் தோன்றவில்லை. பதினாறு வயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரியவுமில்லை.

என் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாது, “அந்தப் பொம்பளை நல்லவ இல்லே, சுசிம்மா!” என்றார் அப்பா ரகசியக்குரலில்.

“ஏம்பா?”

“`இந்தப் பக்கம் வரும்போது, நீங்க மட்டும் வாங்களேன்,’ அப்படின்னு என்னை ஒருமாதிரி பாத்துச் சொன்னா அந்த …,” ஒரு கெட்ட வார்த்தையைப் பிரயோகித்தார். “அம்மாகிட்ட சொல்லிடாதே. என்னைச் சந்தேகப்படுவாங்க”.

என்னால் நம்ப முடியவில்லை. அப்பா அதிகம் பேசமாட்டார். அதனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

“சாமி பக்தியா இருப்பாங்களே?”

“எல்லாம் வேஷம்!” ஏளனச்சிரிப்பு சிரித்தார். “ராத்திரியெல்லாம் தண்ணி அடிக்கிறவன் காலையில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு, வெள்ளையும் சொள்ளையுமா ஒலகத்தை ஏமாத்தற கதைதான் இதுவும்!”

`எப்பவும் சைவச் சாப்பாடுதான்! யாருக்கு வேணும்?’ என்று விசுவும், நடராஜாவும் மாமி வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டதற்குக் காரணம் புரிந்தது.

அதன்பின் நான் மாமி வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை. அம்மாவுக்குத் துரோகம் செய்யப்பார்க்கிறாள் என்று ஒரே ஆத்திரமாக இருந்தது.

மாமி, “என்னடி, ஷீலு? இப்பல்லாம் நீங்க இந்த மாமியை மறந்துட்டேள்போல இருக்கே?” என்று கேட்டபோது, எங்கோ பார்த்தபடி, “பெரிய பரீட்சை வருதில்ல? நிறைய படிக்கணும்,” என்று சமாளித்தேன். எதற்காக உறவு முறை வைத்துக் கூப்பிடுவது!

எதிர்வீட்டைக் காலி செய்துகொண்டு அவர்கள் போனபோதுகூட நாங்கள் யாரும் உதவிக்குப் போகவில்லை. காணாதமாதிரி இருந்துவிட்டோம்.

என் கல்யாணத்திற்கு விசு வந்திருந்தபோது, முகம் சிரிப்பைக் காட்டினாலும், `பாவி! மாமியைப்பத்தி என்கிட்ட ஏண்டா அப்பவே சொல்லலே?’ என்று மனத்துள் திட்டிக்கொண்டேன்.

கேட்டுத்தான் என்ன ஆகப்போகிறது! மாமியை இனி எங்கே பார்க்கப்போகிறேன்!

ஒரு கச்சேரிக்கு கைக்குழந்தையுடன் போயிருந்தபோது, வயதானவர்களுக்கென்று பின்னால் போட்டிருந்த நாற்காலியில் மாமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.

“போய், பிள்ளையைக் காட்டிட்டு வா!” என்று அம்மா பணித்தாள்.

நான் தயங்கினேன்.

“எதாச்சும் இருந்தாலும், சாப்பாடு போட்டிருக்காங்களே! போ,” என்றாள் அம்மா, வற்புறுத்தலாக.

`எதாச்சும் இருந்தாலும்!’

அதற்கு என்ன அர்த்தம்?

அம்மாவை உற்றுப் பார்த்தேன். ஆமோதிப்பதுபோல் கண்களை ஒரு முறை சிமிட்டியபடி, மிக மிக லேசாகத் தலையாட்டினாள்.

அப்படியானால், அம்மாவுக்கும் தெரியுமா?

முன்பு சாதாரணமாகப்பட்டதெல்லாம் இப்போது பூதாகாரமாகத் தெரிந்தது. விசுவின் கன்னத்தைக் கிள்ளியது, நடராஜாவின் தோளை அணைத்தது, சதீஷ் வகுப்பில் முதல் என்று கட்டி அணைத்துப் பாராட்டியது – இப்படி எத்தனை சம்பவங்கள்!

“போகலாம்மா. நவராத்திரி கச்சேரியிலே தரையில ஒக்காந்து கேக்க முடியலே,” என்று எழுந்தேன். கவனமாக, பின்பக்கம் திரும்பாது முன்வாசல்வழியாக மண்டபத்திற்கு வெளியே நடந்தேன்.

வரிசை வரிசையான மேசைகளில் `பிரசாதம்’ என்ற பெயரில் பெரிய விருந்து தயாராக இருந்தது.

“கச்சேரியும் பூசையும் முடிஞ்சுதான் சாப்பாடு,” என்றான் ஓர் இளைஞன். “ஊரிலேருந்து பால்கோவா தருவிச்சிருக்கோம். கொஞ்ச நேரம் இருங்களேன்!”

“பரவாயில்லே,” என்று லேசாகப் புன்னகைத்தபடி நடந்தேன்.

பசித்தவனுக்கு வெறும் ஊறுகாய் கிடைத்தாலே சற்று மகிழ்வதுபோல், அந்த விடலைப் பையன்களை யதேச்சையாகத் தொடுவதுபோல் தொட்டு, அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறாள் பாகீரதி மாமி!

என் நண்பர்களை அந்த வீட்டுக்குள் வரவழைக்க நான் ஒரு பாலமாகப் பயன்பட்டிருக்கிறேன்! நினைக்கவே கசப்பாக இருந்தது.

“என்ன ஷீலு, இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? கச்சேரி நல்லா இல்லியா?” என்று வரவேற்ற கணவரிடம், “என்னை அப்படிக் கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” என்று எரிந்துவிழுந்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது. அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு -- குனிந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று ...
மேலும் கதையை படிக்க...
ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள் முதியவள். உரக்க அழைத்தாலே வராத மருமகள் இப்போது மட்டும் காதில் வாங்கிக்கொள்வாளா, என்ன! “குடிக்க கொஞ்சம்..,” அதற்குமேல் பேச முடியாது ...
மேலும் கதையை படிக்க...
“மொத மொதலா நேத்திக்கு ஒரு பொண்ணு பாத்துட்டு வந்தியே!” என்று கேசவன் ஆரம்பித்ததும், சதாசிவம் பெருமூச்செறிந்தான். `இனி இவனிடமிருந்து தப்பிக்க முடியாதே!’ என்ற அயர்ச்சி பிறந்தது. இன்று, நேற்று பழகியவர்களாக இருந்தால் இப்படித் தொணதொணக்க மாட்டார்கள். இவனோ, பால்ய சிநேகிதன்! தான் மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
கணவனின் குரல் கேட்டு கண்விழித்தாள் வேணி. மெலிந்திருந்த உடலுக்குள் ஏதோ ஒன்று பரவியது -- வரண்ட நிலத்தில் குளிர்ந்த நீர் படர்ந்தாற்போல். அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த முக்காலிமேல் சுடுநீர் போத்தல், கோப்பை, `டிஷ்யூ’ பேப்பர். கீழே குப்பைக்கூடை. அந்தச் சிறிய ...
மேலும் கதையை படிக்க...
நிமிர்ந்த நினைவு
பந்தயம்
காலம் மாறவில்லை
பெண் பார்த்துவிட்டு..
பரம்பரை பரம்பரையாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)