விருந்தாளி

 

குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள் படித்துக்கொண்டிருப்பார்கள். தேன்மதி அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருப்பாள். அந்தச் சூழ்நிலைக்கு மாறாக இந்நேரத்துக்கு குழந்தைகள் விளையாடுவது எப்படி சாத்தியம் என்று யோசித்தேன். வீட்டுக்குள் பிள்ளைகள் விளையாடுவது என்பது கோடை விடுமுறை நாட்களில் மட்டுமே! மற்றபடி எப்போதும் படிப்பு… படிப்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை கொஞ்ச நேரம் ஷட்டில் விளையாடுவார்கள். அதைத் தவிர்த்து விளையாட்டு என்பது அவர்களது அன்றாட நிகழ்வுகளில் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

எனது பள்ளிக் காலத்தில் விளையாட்டு மட்டுமே பிரதானம். படிப்பு அடுத்து. நாங்கள் பங்காளி சகோதரர்கள், பத்தர் வீட்டு ரமேஷ், பந்தா குணா என எட்டுப் பேர்கள் அடங்கிய டீம் செல்வம் தெருவைப் பொறுத்தவரை அறிவிக்கப்படாத பயங்கரவாதிகள்.

கொல்லைப்புறச் சுவரின் மீதே நடந்து செல்வம் தெருவில் இருந்து எல்லையம்மன் கோவில் தெரு வரை செல்வதும், தீபாவளி நாட்களில் பட்டாசுகளைக் குப்பைகளோடு சேர்த்துக் கொளுத்துவதும், வாரவிடுமுறை நாட்களில் தலைக்கு ஒரு ரூபாயோடு கும்பலாக மாலை நான்கு மணிக்கே புறப்பட்டு சினிமா பார்க்கச் செல்வதும், கோடை விடுமுறை நாட்களில் எல்லா வீடுகளுக்குள்ளும் உரிமையோடு புகுந்து வீடுகளைக் கலைத்து யாரையும் மதிய நேரத்தில் தூங்கவிடாமல் செய்வதும் சேட்டப்பா வீட்டுக் கொல்லையை, கிரிக்கெட் மைதானமாக்கி துவம்சம் செய்ததும் மறக்க முடியாத கல்வெட்டு நினைவுகள்…

அதெல்லாம் இப்போதைய பிள்ளைகளுக்கு வாய்க்காத அபூர்வ நிகழ்வுகள். அதைப்போல உறவினர்கள், நண்பர்கள் என மாலை நேரங்களில் வீட்டுக்கு யாராவது வந்து கொண்டுதான் இருப்பார்கள். அம்மா, அனைவருக்கும் காஃபி கலந்து கொடுப்பாள். இல்லாவிட்டால் காளிமார்க் கலர். பணக்கார விருந்தாளிகள் என்றால் சிவராமராவ் கடையிலிருந்து அல்வா.

அவ்வப்போது அம்மா நல்லதம்பிமாட்டு வண்டியில் குமரகோயில் தெருவில் இருக்கும் அவளது அம்மா வழிச் சொந்தங்களைப் பார்க்க சொல்வாள். நல்லதம்பிதார்க்குச்சியால் மாட்டைக் குத்திக் கத்தி “”ஹேய் ஹேய்” என்று சத்தமிட்டு ஓட்டுவார். செல்வம் தெருவிலிருந்து குமரகோயில் தெரு சென்றடைய ஒரு மணிநேரம் பிடிக்கும். கூடச் செல்லும் பாக்கியம் அடியேனுக்கு மட்டும் கிடைக்கும்.

மாமா, அம்மாவின் அண்ணன் வாரத்துக்கு இரண்டு முறை வந்துவிடுவார். எருத்திக்காரத் தெருவிலிருந்து பிரேக் இல்லாத சைக்கிளை மிதித்துக்கொண்டு வியர்க்க விறுவிறுப்பாக வருவார். அப்படி வரும்போதெல்லாம் எனக்குப் பத்துப் பைசா தருவார். பத்துப் பைசா என்பது அப்போது உச்சபட்ச சந்தோஷம் . அம்மா, மாமாவுக்கு உப்புமா கிளறித் தருவாள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை வந்தாலும் அந்த வருகையில் அண்ணன், தங்கை உறவின் இறுக்கமும் மாமா என்கிற அதீத உரிமையும் நிறைந்திருக்கும்.

இப்போது அப்படி ஒரு கலாச்சாரமே இல்லாதது ஏமாற்றமான விஷயம். வீட்டுக்கு விருந்தாளி என்பதெல்லாம் சென்னை வாழ்க்கையில் எப்போதாவது நேருகிற அதிசயமாகப் போய்விட்டது.

பர்த் டே பார்ட்டி, இன்னபிற விசேஷங்களில் சாமியான பந்தலில் பிளாஸ்டிக் சேரில் பத்து நிமிடம் வெறுமனே அமர்ந்து விட்டுப் பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்து, கொண்டுபோயிருக்கும் பரிசுப் பொருளைக் கொடுத்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு யாரும் சாப்பிடச் சொல்லாமலே சாப்பிட்டு.. உறவு, நட்பு கொண்டாடுவதில் உயிர்ப்பில்லாமல் போய்விட்டது.

வீட்டுக்குள் நுழைந்தபோது, சில புதுமுகக் குழந்தைகள் ஹாலில் ரவுண்ட் கட்டி எனது குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்ததையும் சோபாவில் அந்த நடுத்தர வயதானவர் டி.வி.ரிமோட்டோடு அமர்ந்திருந்ததையும் பார்க்க மகிழ்ச்சியாயிருந்து.

“”வாங்க…” என்றேன். அவர், எழுந்து நின்று கைக்கூப்பினார்.

“”இவங்க அட்சிதா ஃபிரெண்ட் வசந்தியோட பேரண்ட்ஸ்ங்க. வெங்கடேசா நகர்ல இருக்காங்க… ரொம்ப நாளா வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். ஒரு வழியா இன்னைக்கு வந்துட்டாங்க” தேன்மதி பேச்சில் மகிழ்ச்சி தெறித்தது. டிஃபன் கேரியரை வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தேன். குழந்தைகள் கேரம்போர்ட் எடுத்து நடுஹாலில் பரப்பி விளையாடத் தொடங்கினர்.

அந்தச் சத்தம் காதுக்கு இனிமையாக இருந்தது. இன்றைய தினம் ஏதோ அவர்களுக்கான சுதந்திரத்தை உரிமையோடு அனுபவிப்பதுபோல பட்டது.

வீடு தேடிவந்த அந்த நண்பருடன் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினேன்.

அவரது உத்யோகம் . எனது வேலை. அரசியல், சினிமா, டி.வி. இண்டர்நெட்… எல்லாம் பேசி முடித்தபோது ஒரு மணி நேரம் ஓடியிருந்தது.

“”அப்ப நாங்க கிளம்பறோம்…”

இருவரும் எழுந்துகொண்டார்கள்.

குழந்தைகள் முகத்தில் இப்போது ஏக்கம் தெரிந்தது.

அந்தப் பெண்மணி தேன்மதியைத் தனியாக அடுப்படிக்குள் அழைத்துச் சென்று ஏதோ பேசினாள். இருவரும் சிரித்தபடி வெளியே வந்தார்கள்.

அவர் சிநேகமாக மீண்டும் ஒருமுறை என் கைபற்றிக் குலுக்கினார். வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன்.

இன்றைய தினம் ஒரு மாறுதலாகத் தெரிந்தது. உறவு, நட்பு இதற்கெல்லாம் அர்த்தம் பிறந்த மாதிரி இருந்தது. மனத்துக்குள் “செல்வம் தெரு’ சந்தோஷ மத்தாப்பு எரிந்தது.

“”நாம குடி வந்த இந்த அஞ்சு வருஷத்துல திடும்னு இதமாதிரி விருந்தாளி வந்தது இதுதான் முதல்தடவைன்னு நினைக்கிறேன் தேன்மதி. நமக்குன்னு இதமாதிரி ஒரு நாலு பேர் வேணும் தேன்மதி. நல்லது கெட்டதுன்னா உரிமையோட பக்கத்துல நிக்கணும்… நாமளும் அவங்க வீட்டுக்கு ஒருநாள் போயிட்டு வரணும்…” என்றேன்.

தேன்மதி முகத்தில் ஆமோதிப்பை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.

நான் அவளையே பார்த்தேன்

“”அவங்க டப்பர்வேர் பிஸினஸ் பண்றாங்க… இந்த வருஷ டார்கெட்டுல ரெண்டாயிரம் குறையுதாம். அதான் உங்களால அந்தத் தொகைக்குப் பொருள் வாங்க முடியுமான்னு கேட்க வந்தாங்களாம்…”
மனசுக்குள் பூத்திருந்த சந்தோஷ பலூன் வெடித்துச் நொடிந்தது.

- மார்ச் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
டிபன் ரெடி
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சாவித்திரி தவிப்பாக உணர்ந்தாள். தலைமுடியிலிருந்து உதிர்ந்த நீர்த் திவலைகளால் ஜாக்கெட் நனைந்து, முதுகில் ஈரம் உணர்ந்ததா... அல்லது, வயிற்றில் ஓடிய பசிப் பூச்சியா... தவிப்புக்குக் காரணம் எது என்பது புரியவில்லை. திருமணமாகி பதினான்கு வருடத்தில் தவிப்பென்பது அவளது நிரந்த ...
மேலும் கதையை படிக்க...
பயனுற வேண்டும்
ஒரு நாள் கூட கதிரேசன் இரவு வீட்டுக்கு வந்ததும் அதிகாலை புறப்பட்டுப் போனதும் அவளுக்குத் தெரியாது. அதுதான் அம்பது லட்சம். ""என்னம்மா விக்கித்து நிக்கற... போய் கம்ப்யூட்டர ஆன் பண்ணு.. மணி ஆயிட்டு..'' மலர்விழி, வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். குறிப்பிட்ட இணையதளத்திற்குள் நுழைந்தாள். இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
அதிர்வு நிலையில் இருந்த அலைபேசி உயிர்பெற்று உறக்கம் கலைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி முதலில் மணி பார்த்தார். அதிகாலை ஐந்து. பிறகு அழைப்பது உயரதிகாரிகள் இல்லையென உணர்ந்து நிம்மதியாகி பட்டனை அழுத்தினார். மறுமுனையில் சிறு அமைதி. பிறகு “ஐயா இன்ஸ்பெக்டருங்களா...?’ உயிர்ப்பின்றி, தயக்கமாய் ஆண் குரல். “ஆமாம்... ...
மேலும் கதையை படிக்க...
கலைவாணி டீச்சர்
'பேரு சொல்லுங்க!'' 'கலைவாணி.'' 'வயசு?'' '30.'' 'ஹஸ்பெண்டு பேரு... என்ன பண்றார்?'' 'இன்னும் கல்யாணம் ஆகலை.'' 'நாலு வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வொர்க் பண்ணிருக்கீங்க...'' 'ஆமா.'' 'ஒரு ஸ்டூடன்டைத் திட்டி, அந்தப் பொண்ணு தூக்குல தொங்கிருச்சு. உங்களை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. ஆனாலும் உங்க குவாலிஃபிகேஷனும் டீச்சிங் எபிளிட்டியும்தான் திரும்பவும் ...
மேலும் கதையை படிக்க...
யாழ்
தமிழ்ச்செல்வி பதற்றமாக இருந்தாள். திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பின்போது இப்படித்தான் காணப்பட்டாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போது! ஆனந்தி, தன் அம்மாவையும் என்னையும் மிரட்சியாகப் பார்த்தாள். மிரட்சிக்குக் காரணம் அறிமுகம் இல்லாத இடம். அவள் வயதையத்த குழந்தைகள் கண்களிலும் அதே மிரட்சி! ''ஏங்க, ...
மேலும் கதையை படிக்க...
டிபன் ரெடி
பயனுற வேண்டும்
அந்த இரண்டு லெட்டர்
கலைவாணி டீச்சர்
யாழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)