வினைத்தொகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 15,112 
 

கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக் கொப்பளங்கள். நாலுநாள் கண்ணைக் கூடத் திறக்க முடியாமல் இமை மேலும் முத்துகள். உலகம் படுக்கையறையோடு சுருங்கி இன்றைக்குப் பத்து நாள். ரயில் பயணத்தையும் சேர்த்துப் பம்பாயிலிருந்து கிளம்பி பனிரெண்டு நாள்.

‘ஊருக்குப் போகணும்.. ‘

‘போய்க்கோ. ‘

‘இல்லே ..எப்பத் திரும்ப வரணும்னு .. ‘

‘வர வேண்டாம். ‘

நிஷ்டூரமான பதில். ‘போடா பயலே, நீ என் தலைமுடிக்குச் சமானம். நீ இருந்தாலும் போனாலும் எனக்கு என்ன போச்சு ‘ என்ற பாவம்.

முதலாளி. நம்மளவர். ஆனாலும் முதலாளி.

எங்கெங்கோ சுற்றியலைந்து, படிதோறும் ஏறி இறங்கி வந்து, மொழியும் மனிதர்களும் புரியாமல் விழித்துக் கொண்டு, மழைக்காலத்தில், விடிந்ததிலிருந்தே கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு பகல் பொழுதில், பசியும், சோர்வுமாக நனைந்த பட்சியாக வராந்தாவில் ஒதுங்கியவனுக்குப் பாட்டிலில் ஊறுகாய் அடைக்கிற வேலை போட்டுக் கொடுத்த பரமாத்மா.

‘எஸ்.எஸ்.எல்.சி தானே படிச்சிருக்கே ? இந்த வேலையே ஜாஸ்தி. ‘

மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட வேலை. முக்கியமாக, நாள் கணக்கில் காணாமலிருந்து கண்ட சாப்பாடு.

‘வயிறு நிறையச் சாப்பிடு … ரங்கா, இவனுக்கு நம்ம ஆவக்கா ஊறுகாய் ஒரு கஷணம் போடுடா .. ‘

‘பையன் அழறான் அண்ணா. காரம் போல இருக்கு. ‘

காரம் இல்லை, நன்றி என்று மனது கரைந்து கரைந்து கண்ணில் வழிந்தது.

சாப்பாட்டுக்கு நன்றி. மாதாமாதம் கொடுப்பதாகச் சொன்ன முன்னூறு ரூபாய்க்கு நன்றி. மூத்திரப்புரைப் பக்கம் ஏழோடு எட்டாக ஒதுங்க இடம் கொடுத்ததற்கு நன்றி.

‘நாளைக்கு ஒரு பாயும், தலைகாணியும் வாங்கிடு. கல்யாண்லே கிடைக்கும்… எத்தனை சட்டை வச்சிருக்கே ? ரெண்டுதானா ? போதும். அடுத்த மாசம் என் பிள்ளை ஆமதாபாத்திலேருந்து வரான். கொடுக்கச் சொல்றேன். பாங்கிலே ஆபீசரா இருக்கான்.. ‘

பழைய சட்டைக்கும், இடுப்பில் இழுத்து இழுத்துச் செருகிக் கால்பக்கம் நீளத்தைக் குறைக்கப் பிரிமணையாகச் சுருட்டி விட்டு, உட்கார்கிற இடத்தில் கிழிந்திருந்ததை ஒட்டுப்போட்டுத் தைத்துக் கொண்ட பேண்டுகளுக்கு நன்றி. இரண்டு வருஷத்தில் எதற்கெல்லாமோ நன்றி நினைத்து நன்றி சொல்லியாகி விட்டது. அவ்வப்போது ஊருக்கு எழுத என்று வாங்கிக் கொண்ட போஸ்ட் கார்டுகளுக்கும் சேர்த்து.

ஊறுகாய் பேக்கர் கம் பில்லிங்க் கிளார்க் கம் (ஆள் வராத பட்சத்தில்) டெலிவரிபாய். கையிடுக்கு வியர்வையிலும் ஊறுகாய் வாடை. ஊறுகாய் பாட்டில்களுக்கு நடுவே படுத்துப் படுத்துக் கனவு கூட அந்த மணத்தோடுதான்.

‘என்ன இன்னும் நிண்ணுண்டே இருக்காய் ? டோம்பிவிலிக்கு டெலிவரி கொடுத்தனுப்பச் சொன்னேனே, என்ன ஆச்சு ? அம்பது பாட்டில் இன்னிக்க சாயரட்சைக்குள்ளே வேணும்னு நாயக் சொல்லி அனுப்பிச்சான்… சேஷன் எங்கே போய்த் தொலஞ்சான் ? தேடற நேரத்துலே எல்லாரும் அந்தர்தியானமாயிடறா… ‘

‘வந்து, ஊர்லேருந்து .. அம்மாவுக்கு .. ‘

‘பிரம்மஹத்தி .. உனக்கு வேறே நேரமே கிடைக்கலியா என் இழவெடுக்கறதுக்கு ? ‘

குறுகிப் போனான். நன்றிக்கு ஒரு நேரம் என்றால் அவமானப்படவும் ஒரு நேரம் இருக்கிறது.

சாயந்திரம் நாயக் வந்து இன்னும் நூறு பாட்டில் ஆர்டர் கொடுத்துவிட்டுப் போக, முதலாளிக்கு நல்ல மூட். ‘ ‘ஓமனாளக் கண்டு ஞான் பூங்கினாவில்.. ‘ மேஜையில் தட்டித் தாளம் வேறு.

‘என்ன கிரிதர கோபாலா.. என்னவாக்கும் உன் பிரச்சனைகள் ? ‘

‘ஊருக்குப் போய்ட்டு வரணும். வந்து ரெண்டு வருஷமாச்சு. ‘

‘போய்க்கோ. போய்ட்டுப் பதினஞ்சே நாள்ளே வந்துடணும். இல்லையோ, படியிறங்கி இப்படியே போயிட வேண்டியதுதான். இந்த ராமபத்ரனுக்கு மனுஷா எவ்வளவு முக்யமோ, கிரமமாத் தொழில் நடத்தறதும் அதைவிட முக்யம். மனசிலாச்சோ ? ‘

அனுமதி கிடைத்து விட்டது. போகும்போது நிறைய வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று தாதரில் கடையெல்லாம் திறந்திருக்கிற நாளாகப் பார்த்துப் போனான். என்னத்தை வாங்குவது ? அம்மா கட்டுகிற மாதிரிப் புடவை இங்கெல்லாம் கிடைக்கிறதில்லை. ரானடே ரோடில் இரண்டு சுற்று சுற்றி வந்தான். ஜாடிக்குள் ஜாடியாக எட்டு ஜாடி அடுக்கிய பீங்கான் வாங்கினான். அப்புறம் டிட்வாலா பிள்ளையார் ஸ்டிக்கர். கோல ஸ்டிக்கர். லக்ஷ்மியும் சரஸ்வதியுமாக சுபம் – லாபம் என்று போட்ட ஜிகினாத் தோரணம். அம்மாவுக்கு வாங்குகிற மாதிரி வேறு எதுவும் கிடைக்கவில்லை.

ஸ்டிக்கர் பொட்டு, வளையல், மார்க்கச்சை, கைப்பை என்று தெருவோடு பெண்கள் கூட்டம் கூட்டமாக வாங்கிக்கொண்டு போக, இவன் ஜாடியையும் பந்திப் பாயையும் தூக்கிக்கொண்டு வந்தான். அடுத்த ராத்திரிக்குப் பயணம்.

ரயில் சென்னை போய்ச் சேருவதற்குள் உடம்பெல்லாம் தகிக்க ஆரம்பித்தது. அனல்காற்று வீசுகிற தெலுங்குப் பிரதேசங்களைப் பேயோட்டம் ஓடி வண்டி கடந்து கொண்டிருக்க, சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பியும், டாயுமாகக் குடித்தபடி படுத்தே வந்தான். காய்ச்சலோடு மெட்ராசில் பஸ் ஏறிப் புதுக்கோட்டையில் இறங்குகிறபோது, பெட்டியைக் கூடத் தூக்க முடியாமல் தளர்ச்சி. கிராமத்துக்குப் போவதற்காகக் கீரனூர் பஸ்ஸுக்கு ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருந்தபோது நிமிஷத்துக்கு நிமிஷம் உடல் தகிப்பு உக்ரமாகிக் கொண்டிருந்தது. போய்ச் சேரவேண்டும் என்ற நினைப்புத்தான் முன்னால் செலுத்தி எப்படியோ வீட்டில் விழ வைத்தது.

நிலைப்படியில் கால் வைத்ததுமே சரிந்து உட்கார்ந்தவனை ஓடி வந்து அம்மா கைத்தாங்கலாக உள்ளே கூட்டி வந்தபோது, ‘என்னடா இது உடம்பெல்லாம் சிவப்புச் சிவப்பாத் தடிச்சு இருக்கு ? ‘ என்றாள். அப்போதுதான் அவனும் கவனித்தான்.

பம்பாய்க்காரனைப் பார்க்க அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள் நிச்சயப்படுத்திச் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே போக, வாசல் முகப்பில் வேப்பிலை செருகப்பட்டது.

‘அம்மை வார்த்திருக்கு. கொப்புளிப்பான். ஒருவாரம் ஏறி ஆடிட்டுத்தான் அடங்கும். நெத்தியிலே முத்து வர ஆரம்பிச்சிருக்கு .. வந்து படுத்துக்கோப்பா. ‘

படுத்துக் கிடந்த இடத்திலிருந்து வாசல் நடை தெரிகிறது. பத்து நாளாகப் பார்க்கக் கிடைத்தது எல்லாம் ஜன்னலுக்கு அப்புறம் கையும் அரிவாளும் மட்டும் தெரிய செவ்விளநீரைச் சீவிப் பாத்திரத்தில் கவிழ்த்து, அரிவாளை அலம்பி ஆளோடியில் வைத்துவிட்டுப் போகிற வைத்தியலிங்கத்தை. வாசலில் இரும்பு வாளியில் வைத்த தண்ணீரைச் செம்பில் எடுத்து, அது ஒழுகி முடிகிறதுக்குள் கால் அலம்பிப் படுக்கையைச் சுற்றி நடந்து போகிற அம்மாவின் ஈரக்கால்களை. அவ்வப்போது பக்கத்தில் வந்து பார்த்து, வேப்பிலைக் கொப்பால் வருடிக் கொடுக்கிற அம்மாவின் லேசாக நடுங்கும் கைகளை. காலங்காலமாக அழுதழுது கண்ணீர் வற்றிப்போன, பார்வை மங்கிக் கொண்டு வரும் அவள் கண்களை.

‘அம்மா, அந்தப் பெட்டியிலே .. ‘

‘எல்லாம் நீ எழுந்திருந்ததும் பாத்துக்கலாம்டா. பட்சணம் மாதிரிக் கெட்டுப்போற சாமான் ஒண்ணும் வாங்கிண்டு வரல்லியோன்னோ ? ‘

பம்பாயில் பிரிஜ்வாசி மிட்டாய்க்கடையில் ஐஸ் அல்வாவும், மாவா பாதுஷாவுமாக அட்டைப் பெட்டிகளில் வாங்கிக் கொண்டு போகிறவர்களை நினைத்துக் கொண்டான். பணம் இருக்கிறது. உட்கார்ந்து சாப்பிட வீடு. பகிர்ந்து கொள்ள அன்பான மனைவி. குழந்தைகள். கல்யாணிலோ, டோம்பிவிலியிலோ ஒரு புறாக்கூண்டு ஃப்ளாட். இல்லை, பாண்டுப்பில் இருபது குடித்தனத்தோடு, ‘ ‘சாலில் ‘ வாசம்.. கூடி இருக்கிறார்கள். நாளைக்கு என்ன சமைப்பது என்பதிலிருந்து அடுத்த மாதம் ஆரம்பிக்கும் மழை சீசனுக்காகப் புதிதாகக் குடை வாங்க வேண்டுமா என்பது வரை பேசவும் முடிவெடுக்கவும் என்று சுவாசிப்பதைத் தவிரவும் வாழ்க்கை பாக்கி இருக்கிறது. தனக்கு ?

‘முப்பத்தஞ்சு பாட்டில் ஊறுகாய் எடுத்துண்டுபோய் நாயக் கிட்டே கொடுத்துடு. மடுங்கா ரயில்வே குவார்ட்டர்ஸ்லே காசி விசுவநாதன் .. அதாம்பா மெட்ராஸ் போய்ட்டுத் திரும்பறச்சே பெட்டியைத் தவற விட்டுட்டு வந்ததா அன்னிக்கு வந்து சொல்லிண்டிருந்தாரே, அவர்தான்.. மெட்ராஸ்லே லேபல் பிரிண்டு பண்றவா அட்ரஸ் ஒண்ணு தரேன்னார். வாங்கிண்டு, அப்படியே சூனாப்பட்லே மோரேயைப் பார்த்து எண்ணெய்க்குச் சொல்லிட்டு வந்துடறியா ? சீக்கிரம் வந்துடு. நாயக் பணம் கொடுக்கறானான்னு இன்னொரு தடவை மெல்லக் கேட்டுப் பாத்துடு .. ஆவக்காய்க்கு விழுது அரைச்சாச்சான்னு பாரு .. கிரைண்டரை ஆஃப் பண்ணாம பிரம்மஹத்தி பராக்குப் பாத்துண்டிருப்பான் .. விழுதை வழிக்கச் சொல்லு. ‘

விடிகிறபோதே ஊறுகாய் விழுதைப் பூசிக் கொண்டுதான் பொழுது விடிகிறது.

‘அண்ணா, டைப் கிளாஸ் போகலாம்னு பார்க்கிறேன் .. ‘

‘பேஷாப் போய்ட்டு வா. வெறும் எஸ்.எஸ்.எல்.சிக்கு மதிப்பு உண்டோ ? என்னை மாதிரி இளிச்சவாயன் தான் கூப்பிட்டு வெத்தலை பாக்கு வச்சு வேலை போட்டுத் தருவான். டைப், ஷார்ட் ஹாண்ட் அவசியம்தான். முடிஞ்சா, கம்ப்யூட்டர் கூடக் கத்துக்கலாம்தான். அதான் தெருவுக்கு ஒண்ணாத் திறந்து வச்சுண்டு குட்டிகள் கூட்டம் அலைமோதிண்டிருக்கே .. கத்துக்கோ .. வேலை நேரத்துக்கு அப்புறம் எல்லாம் வச்சுக்கோ .. ‘

காலையில் ஆறு மணிக்கு முன்னாலும், ராத்திரி கிரமமாகப் பத்து, பதினோரு மணி தாண்டியும் எந்த இன்ஸ்ட்டிட்யூட்டும் திறந்து இருக்கவில்லை.

கத்துக்கலாம்தான். வாய்த்தால் கம்ப்யூட்டர்கூடக் கத்துக்கலாம் தான். வாய்க்கவில்லை. ராம்தாஸ் நாயக்கிடம் மடியைப் பிடித்து இழுக்காத குறையாகப் பணம் வாங்கிக்கொண்டு வரக் கத்துக்கலாம் தான். அவன் அற்பப் புழுவாகப் பாவித்து மராட்டியில் ஏதோ திட்ட, பக்கத்திலிருந்தவர்கள் சிரிக்க, முகத்தில் சலனமில்லாமல் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு, மழையிலும் வெய்யிலிலும் தெருவில் ஊர்ந்து திரியக் கத்துக்கலாம்தான். எல்லோரும் சேர்ந்து சமையல் செய்ய வெங்காயம் அரிந்து தரக் கத்துக்கலாம்தான். கேட்டபடி எண்ணெயும், மிளகாயும் அளந்து கொடுத்து நோட்புக்கில் குறித்துக் கொள்ளக் கத்துக்கலாம்தான். தினசரி குழம்பு சாதமும், ஊறுகாயுமாக உள்ளே தள்ளக் கத்துக்கலாம்தான். கற்றுக்கொண்டாகி விட்டது.

அம்மா கையால் சாப்பிட வேண்டும். ரொம்பப் பெரியதாக இல்லாவிட்டாலும் துவையலும், கீரை மசியலும், மோர்க் குழம்பும் ..

‘சாப்பிடுப்பா .. குளிர்ச்சியாத்தான் சாப்பிடணும். பொரிச்சுக் கொட்டினது எதுவும் கூடாது. தயிர்சாதம் வெண்ணெயாப் பிசைஞ்சு இருக்கேன். ‘

இரண்டு வேளை தயிர்சாதம். ஆனால் அம்மா மெல்ல ஊட்டி விடுகிறபோது அலுக்கவில்லை. வருஷம் பூராவும் இப்படிப் படுத்துக் கொண்டிருந்தாலும் இது அலுக்காது என்று தோன்றியது.

ஆனாலும் மனது ஏங்குகிறது. என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தான். வாய்க்கால் மதகில் உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து மனுஷவாடை பட்டதும் விருட்டென்று பறந்துபோகிற குருவியைப் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டும். கண்ணப்பப் பூசாரி வயலுக்குக் கிளம்புவதற்கு முன்னால் கூட்டிக்கொண்டு வந்து ஐயனாருக்கு எண்ணெய்க் காப்பு இடச்சொல்லிக் கும்பிட வேண்டும். ஐயனார் சிலைக்குப் பின்னால் இருந்து பறந்து வந்து காதுப் பக்கம் குறுகுறுக்கிற சின்னக் குளவி கொட்டுமோ என்று லேசான கவலையோடு நிமிஷ நேர வெளிச்சத்தில் கறுப்பு மின்னித் தெரிகிற ஐயனாரைக் கும்பிடுவதும், வரப்பிலே நடக்கிறபோது யாரையாவது உரக்க அழைத்து எதையாவது கேட்க, காற்றில் கலந்து போகிற தன் குரலைத் தானே அனுபவித்துக் கொண்டு, அதே சத்தத்தில் பதில் சொல்கிறதும், கந்தன் டூரிங் டாக்கீஸில் மழை பெய்கிற பழைய பிரிண்டில் ‘நாடோடி மன்னன் ‘ பார்த்து, ஒற்றைப் புரஜக்டரில் பிலிம் சுருள் மாற்ற விளக்கு போடும்போது, பெண்கள் பகுதியில் யாரெல்லாம் வந்திருக்கிறது என்று நோட்டமிடுவதும், ரயில் பாலத்தில் நான்கைந்து பேராக உட்கார்ந்து சினிமா, சினிமா என்று உலகத்தில் சினிமாவைத் தவிர வேறு எல்லாம் அஸ்தமித்துப் போனது போல சினிமாக் கதை பேசுவதும் .. இந்தத் தடவை வாய்க்கவில்லை. அடுத்த தடவை வருகிறபோது எல்லாம் நிச்சயமாகச் செய்ய வேண்டும். அடுத்த தடவை எப்போது ?

கடைசி முத்தும் உதிர்ந்து இரண்டு நாளாகியது. வேப்பிலைச் சருகுகள் உதிர்ந்து படுக்கையெல்லாம் அப்பிக் கிடந்தது. அம்மா முற்றத்தில் மணை போட்டுக் கிழக்குப் பார்த்து உட்கார வைத்தாள்.

‘தண்ணி விடணும். ‘

விரல் சூப்பிக் கொண்டு பக்கத்து வீட்டுக் குழந்தையொன்று சுவாரசியமாக வேடிக்கை பார்க்க, அம்மா வென்னீரும் வேப்பிலையுமாக மொண்டு மொண்டு ஊற்றினாள். உள்ளே வந்தபோது உடுத்திக் கொள்ளத் தயாராகப் புதிதாக எட்டு முழ வேஷ்டியும் துண்டும்.

‘ஜட்ஜாத்திலே தீபாவளிக்கு வேலைக்காராளுக்குக் கொடுக்கறதுக்கு வச்சிருந்ததிலே மீந்ததுன்னு கொடுத்தார். ரிடயராகி இங்கேயே வந்துட்டாலும் ஆள் அம்புக்கு ஏது குறைச்சல் ? ‘ – அம்மா தனக்கே வந்த பெருமை மாதிரிச் சொன்னாள்.

‘சமையல் மாமி, மாமின்னு ஜட்ஜிலேருந்து அவாத்து மாமி, லீவிலே வந்து போற பசங்க வரை நன்னாப் பிரியமா மரியாதையாப் பழகறா. ‘

ரிடையர்ட் ஜட்ஜ் வீடுதான் சோறு போடுகிறது. இவன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை அனுப்புகிற நூறும் ஐம்பதும் எந்த மூலைக்குப் போதும் ?

‘உங்கப்பா பணத்தைச் சேர்த்து வச்சுட்டுப் போகலை. ஊருக்கெல்லாம் சமைச்சுட்டு ஓஞ்சுபோய்க் கரண்டியைத்தான் கையில் ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார். நீயாவது நன்னா வரணும் .. வா, வந்து சாப்பிட உட்கார் .. ‘

பரங்கிக்காய்ப் பால்கூட்டு, எலுமிச்சை ரசம், வாழை இலையில் ஆவி பறக்கக் கவிந்த சாதம். கண் நிறைந்து போனது. இந்த ஒருநாள் போதும். ஊருக்குத் திரும்பும்போது மனது அசை போட இது போதும். அம்மா பக்கத்தில் உட்கார்ந்து பனை ஓலை விசிறியால் விசிறினாள்.

‘இலையப் பார்த்துச் சாப்பிடுப்பா ‘

‘சொக்கு இப்ப என்ன பண்றாம்மா ? ‘

‘அதை ஏன் கேக்கறே போ .. அவன் துபாய்க்குப் போய் இந்த வைகாசி வந்தா ஒரு வருஷம் ஆறது. போன விசாகத்துலே பால்குடம் எடுத்துட்டுக் கிளம்பினவன் தான். அவன் அம்மா நகையெல்லாம் சுப்பையா செட்டியார்கிட்டே அடகு வச்சுப் பணம் புரட்டி அனுப்பி வச்சா. இந்தப் பிள்ளை அங்கே போய்ச் சரிவரக் கடிதாசும் போடறதில்லையாம். பணமும் அனுப்பறதில்லையாம். யாரோ சினேகிதன்கிட்டே வேலை இன்னும் சரியா அமையலேன்னு சொல்லி அனுப்பிச்சானாம். சொக்கு அம்மாதானே ஜட்ஜ் ஆத்துக்குப் பால் ஊத்தறா .. அன்னிக்கு மாமிகிட்டேயும் என்கிட்டேயும் சொல்லிக் கண்ணீர் விட்டா .. பாவம். மாமி கூட என்னைக் கேட்டா, உங்க பிள்ளை கூட இவ பிள்ளையாண்டனுக்குச் சிநேகிதனாமே .. அவன் என்ன பண்ணிண்டிருக்கான்னா .. அவன் நல்ல வேலையிலே பம்பாயிலே சேர்ந்திருக்கான். உத்யோகம் ஸ்திரமானதும் என்னை வந்து அழச்சுண்டு போயிடுவான்னு சொன்னேன். சரிதானேடா ? ‘

‘சரிதான்ம்மா. ‘

அம்மா இன்று ஜட்ஜ் வீட்டுக்குச் சமைக்கப் போகவில்லை. ‘பிள்ளையோட இருக்கணும், லீவு தாங்கோன்னு கேட்டுண்டு வந்துட்டேன். பாவம் மாமி என்ன பண்றாளோ .. தோசைக்கு மாவு அரச்சு வச்சிருந்தேன். உப்புப் போட்டுக் கரைச்சுக்கச் சொல்ல மறந்தே போயிடுத்து .. ‘

இருட்டுகிற வரையில் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தான். ‘எங்க பாக்டரியிலே எல்லாத்துக்கும் என்னைத்தான் நம்பி இருக்கா. பதினஞ்சு நாளைக்கு மேலே ஒரு நாள் கூட லீவு தரமுடியாது. உடனே வந்துடுன்னு திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பிச்சார் எங்க மேனேஜர். வேலை ஸ்திரமாயிடும் கொஞ்ச நாள்லே. ‘

ஆயிற்று. இன்று திரும்ப வேண்டும். வைத்தியலிங்கம் குதிரை வண்டி கொண்டு வந்தான். அம்மா இவனுக்காகப் பெட்டியை அடுக்கிக் கொடுத்தாள். ஏதோ மருந்துப் பொடியைத் தேனில் குழைந்துக் கொடுத்தாள்.

‘சீக்காக் கிடந்த உடம்பு சீக்கிரம் தேறணும் .. நன்னாப் பசியெடுத்துச் சாப்பிட வைக்குமாம் இது. ஜட்ஜாத்து மாமி கொடுத்தா .. லேசாக் கசக்குமாம் … பரவாயில்லை .. முழுங்கிடு .. ‘

வழிக்குக் குடிக்க வென்னீரைப் பாட்டிலில் எடுத்து வைத்துக் கண்கலங்கினாள்.

‘சீக்கிரம் வந்து கூட்டிண்டு போறேம்மா. ‘

‘கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம். முடிஞ்சா சாதம் வடிச்சு, தயிரோ மோரோ கலந்து, கொஞ்சநாள் சாப்பிடு. உடம்புக்குக் கெடுதல் பண்ணாது. பருப்புப் பொடி, சுக்குப்பொடி எல்லாம் உன் பெட்டியில் எடுத்து வச்சிருக்கேன். ஜட்ஜாத்து மாமி பெரிய பொட்டலமாக் கொடுத்தா. அவாத்துப் பொண்ணு போன மாசம் லீவுக்கு வந்துட்டுப் போனபோது இங்கே இதெல்லாம் கிடைக்காத மாதிரி அள்ளிண்டு வந்தாளாம். டின்னிலே அடச்சா எல்லாம் ஒசந்த சரக்காயிடறது பார்.. மாமி, உங்க கைமணம் வேறே எதிலேயும் இல்லே. இது சுத்தமா இருந்தாலும் வேண்டாம்னு பொண்ணு ஊருக்குப் போன அப்புறம் தூக்கி வச்சுட்டா. நான் கேட்டு வாங்கிண்டு வந்தேன். பெட்டியிலே மேலேயே வச்சிருக்கேன். வீணாக்காம உபயோகிச்சுக்கோ. ‘

ரயில்வே ஸ்டேஷன். தூங்கி விழித்த வண்டிக் குதிரைகள் மெல்லக் கனைக்கும் சத்தம். முன்னிரவு. ஒற்றை விளக்குத் தூணோரம் சிமிட்டிப் பெஞ்சில் தலைசாய்த்து, ஊர் திரும்பக் காத்திருக்கிறான்.

‘எஸ்.எஸ்.எல்.சி புத்தகத்தை எடுத்து வைக்கச் சொன்னேனே .. அம்மா எடுத்து வச்சாளோ .. பாவம் .. இன்னும் எத்தனை நாள் கஷ்டப்படுவா ? நமக்கு விடியாதா சீக்கிரமா ? வந்து கூட்டிண்டு போயிடணும். ‘

பெட்டியைத் திறந்து எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் இருக்கிறதா என்று பார்த்தான். மஞ்சள் துணிப்பையில் பத்திரமாக இருந்தது. பெட்டியில் மேலோடு ஒரு பொட்டலம். லேசாக எண்ணெய் கசிந்து கொண்டிருந்தது. சணல் கயிற்றை நீக்கித் திறந்து பார்க்க, உள்ளே பருப்புப் பொடி. மிளகாய்ப்பொடி. திடார் ரசப்பொடி. அப்புறம் அவனுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று – அவன் கம்பெனி எலுமிச்சை ஊறுகாய் பாட்டில்.

– ‘ஆதம்பூர்க் காரர்கள் ‘ தொகுதி – ஞானச்சேரி வெளியீடு – 1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *