வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,048 
 

துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி.

‘எப்படி…எப்படி… இப்படி ..? ‘ ஒரு விநாடிக்குள் எனக்குள் ஓயாத கேள்விகள்.

மைதிலி என் தாய்மாமன் மகள். என் அம்மாவிற்கு மூன்று அக்காள்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. இதில் அண்ணன், அக்காள்கள் எல்லாம் எப்போதோ காலி. எஞ்சிய இருவரில் இப்போது தங்கை சாவு. 80 வயது என் அம்மா இப்போது அவள் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.

திடீரென்று ”அம்மாயி!…… ” என்று குரல் கொடுத்து வந்து கதறி என் தாயைக் கட்டிப் பிடித்து அழுது அமர்ந்த மைதிலியைப் பார்த்த எனக்குத்தான் அந்த பேரதிர்ச்சி.

மைதிலி என் அம்மாவின் மூத்த அக்காள் மகள் வயிற்று மகள் – பேத்தி. என் தாய் மாமன் மகள். அதனால்தான் இந்த அம்மாயி கதறல்.

இவள் பிறந்தபோது எனக்கு இரண்டு வயது. மனைவி வயிற்றிலிருந்து இவள் பெண் குழந்தையாய்ப் பிறந்து விழுந்ததுமே என் மாமன், ”என் மகள் என் தங்கை அன்பரசி மகன் ஆறுமுகத்திற்குத்தான் !” என்று அப்போதே வாய்வழி சொல்லி நிச்சயம் செய்து விட்டார்.

ஐந்து பெண்களுக்கு ஒரே ஆண் வாரிசான அவருக்கு எல்லாரையும் விட என் அம்மா அன்பரசி மேல் அளவு கடந்த அதீத பாசம். அதனால் அவளைத் தூரக் கட்டிக்கொடுத்து நான்கு பிள்ளைகள் பெற்ற பின்னாலும் அழையா விருந்தாளியாய் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து என் அம்மாவை,” அன்பரசி! பாப்பா! பாப்பா!” என்று பாசமாய் அழைத்து வளைய வளைய வருவார். அவர் கொள்ளிட அணைக்கரையில் பெரிய மிராசு, விவசாயி என்பதால் அங்கு விளையும் கம்பு, காராமணி, சோளம், கேழ்வரகு, நிலக்கடலை தானியங்களையெல்லாம் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்து வந்து தங்கை வீட்டில் கொட்டி கொண்டாடுவார்.

”என் சொத்துபத்தையெல்லாம் என் தங்கையும், தங்கைமகனும்தான் ஆண்டு அனுபவிக்கனும் !” என்கிற உறுதியில் அவர் மைதிலியைத் தவிர்த்து வேறு குழந்தை பெறாதது அவர் பாசத்தின் உச்சம் என்பது ஊரில் எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

மைதிலி பிறக்கும் போது எப்படி இருந்தாளோ எனக்குத் தெரியாது. உயிரினத்தில் குட்டி, குழந்தைகளாய் இருக்கும்வரை எல்லாமே அழகு. வளரத்தானே மாறுபாடு, முகம் வேறுபாடு?!

”ஆறுமுகம்! இவள்தான்டா உன் மாமன் பொண்ணு மைதிலி. உனக்காகப் பிறந்து வளர்றவள். இவளைத்தான் நீ கட்டிக்கனும்!” என்று என் எட்டு வயதில் ஆறு வயது சிறுமியான இவளைக் காட்டி பாட்டி அறிமுகம் செய்த போது அவள் மூக்கொழுகி, பல் எடுப்பாய், குதிரை முகமாய், முகம் எண்ணெய் வடிய, ரொம்ப அசிங்கமாயும் அருவருப்பாயும் இருந்தாள்.

”இவளா…?! ” நான் அசூசைப்பட…..

”இப்போ இப்படித்தான்டா இருப்பாள். வயசாகி வரும்போது நல்ல அழகா இருப்பாள். இந்த மூக்கொழுகியான்னு நீ அப்போ ஆச்சரியப்படுவே!” பாட்டி அதற்கும் மறுமொழி சொன்னாள்.

ஆரம்பமுதலே அவள் அழகாக இல்லாததினால் அவள் வளர வளர அப்படித்தான் இருந்தாள். தெத்துப்பல் மேலும் வெளியில் வந்து முகத்தைக் கூராக்கி கோரமாக்கியது. மேலும் பள்ளிக்கூடத்தில் விட்டால் தன் பச்சைக்கிளிக்குப் பங்கம் வந்து, கனவு தகர்ந்துவிடும் பயத்தில் பெற்றவர்கள் அவளைப் பள்ளிக்கு அனுப்பி படிப்பறிவு காட்டாததினால் முகத்தில் அறிவுக்களை அழகிற்கு எள்ளளவு இடமில்லை. ஏழு எட்டு வயது பெண்ணாலும் முகத்தில் எண்ணெய்வடிதல், மூக்கொழுகளும் நிற்கவில்லை. அதிக எண்ணெய்த் தடவி, படிய தலை சீவி, தாறுமாறாக பவுடர் பூசி…..அவள் இஷ்டத்திற்கு பெற்றவர்கள் அவள் மனம் கோணாமல் செல்லமாக வளர்த்தார்கள். அவள் வயசுக்கு வரும் பக்குவத்திலும் மறைப்புத் துணியான மாராப்பையும் ஒழுங்காகப் போடத் தெரியாமல் தாறுமாறு. பாவாடை தாவணியும் அள்ளிச் சொருகல்தான்.

எனக்கு ஆரம்பமுதலே இவளைப் பிடிக்காததினால் மைதிலி, மாமா, அத்தையெல்லாம் எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாய் வந்து, ”மாமா!, மாப்பிள்ளை!” என்று அழைத்தால் என் காதிற்குள் நாராசூரம் புகும் கொடூரம். பொத்திக் கொள்வேன்.

”மாப்பிள்ளை இப்போ அப்படித்தான் இருப்பார். கலியாணம் ஆனா எல்லாம் சரியாகிடுவார்!” இதையும் அவர்கள் சமாதானமாக ஏற்று சால்சாப்பு சொல்லி சரியாக்கிக் கொள்வார்கள்.

என் கல்லூரிப் படிப்பின் முதலாண்டு துவக்கத்தில்தான் கத்தி கழுத்திற்கு வந்தது.

மகள் வயசுக்கு வந்த மறுநாளே அவளை வீட்டில் உட்கார வைத்துவிட்டு மாமாவும் அத்தையும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
”கலியாணத்தை எப்போ வைச்சுக்கலாம் மச்சான் ? ” என்று என் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து உட்கார வைத்துக் கேட்டார்கள்.

என் மனம் புரிந்த அவர்கள் அருகில் இருந்த என்னை கலக்கமாகப் பார்த்தார்கள்.

பின்…. ”அது அவன் விருப்பம் !” என்றார் அப்பா மெல்ல.

அவரை அடுத்து தைரியமாய், ”நான் படிக்கனும்….!” சொன்னேன்.

”கலியாணம் முடிச்சுட்டுப் படி.” மைதிலி அம்மா என்னைப் பார்த்து வாஞ்சையாய்ச் சொன்னாள்.

”இந்த வயசுக்கெல்லாம் கலியாணம் முடிக்கக் கூடாது.”

”அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உனக்கு என் பொண்ணைப் பிடிக்கலை சாக்கு போக்கு சொல்றே ? ” என்றாள் அவள்.

”ஆமாம் அப்படியே வைச்சுக்கோ. அதான் உண்மை.!” என்றேன் அதிரடியாய்.

இந்த அதிரடியில் அவர்கள் ஆடவில்லை. மாறாக….

”இதோ பாரு தம்பி. நான் உனக்கு அத்தை இல்லே. அக்கா. பெரியம்மா மகள்.! ரத்த முறுக்குல இப்படியெல்லாம் பேசாதே. இந்த பொண்ணும் எங்க சொத்தும், என் தங்கச்சி, தங்கச்சி மகன்தான் அனுபவிக்கனும்ன்னு என் புருசன் அதான் நம்ம தாய்மாமன் முடிவெடுத்து அடுத்தது பெத்துக்காம பொண்ணையும் பொருளையும் பாதுகாப்பாய் வைச்சிருக்கார். எனக்கும்… தம்பி படிச்சப்புள்ள, நீ அனுப்பவிக்கனும்ன்னு ஆசை. நீ என்னதான் பெரிய படிப்பு படிச்சு வேலைக்குப் போனாலும்….நாங்க வைச்சிருக்கிற அளவுக்கு சொத்து சேர்க்க முடியாது. சொத்து எங்களுது மட்டுமில்லே….பாட்டன் முப்பாட்டன்னு மொத்தக் கலவை. நீ என் பொண்ணைக் கட்டிக்கிட்டு வயல்ல உழுது சேத்துல பொரள வேணாம். கரையில நின்னு ஆட்களை விட்டு வேலையைப் பார்.” சொன்னாள்.

”எனக்கு உங்க சொத்தும் வேணாம் பொண்ணும் வேணாம்.”

”என் மகள் உன் அழகுக்கு ஏத்தவளில்லேன்னு அப்படியெல்லாம் உதறி அடிக்காதே. நான் இந்த நிமிசம் கைத்தட்டினால் போதும்…. அழகுக்காக இல்லேன்னாலும் ஆஸ்திக்காக என் பொண்ணைத் தங்கத் தாம்பளத்துல ஏந்த ஆயிரம் பேர் காத்திருக்கான்.”

”என் கால்ல விழாதே! அப்படியே செய்.” சொல்லக்கூடாத வார்த்தை என் வாயிலிருந்து ஆத்திரத்தில் அனிச்கையாய் வந்து விழுந்துவிட்டது.

அவ்வளவுதான் அக்காள் கோபத்தின் உச்சிக்குப் போனாள்.

”உனக்காகக் காத்திருந்த எங்களுக்கு இந்த செருப்படி போதும். எண்ணி எட்டு நாள்ல என் பொண்ணை எந்த இடத்தில் கலியாணம் பண்ணி வைக்கிறேன் பார்.!” சவால் விட்டு கணவனுடன் விருக்கென்று வெளியேறினாள்.

என் அப்பாவும் அம்மாவும் யாருக்கும் எதுவும் பேச முடியாமல் இடிந்தார்கள்.

அக்காள்… தான் எடுத்த சபத்தை முடிக்க… உள்ளூரிலேயே கோபால் என்கிற வரனைப் பார்த்தாள். அவனும் எனக்குச் சொந்தம் ஒன்றுவிட்ட உறவில் அண்ணன் முறை. படிப்பறிவு இல்லாமல் விவசாய வேலை. என்னைவிட நான்கு வயது மூத்த ஆளுக்குப் பேசி முடித்து ஒரே வாரத்தில் திருமணம்.

எங்கள் குடும்பத்திற்குப் பத்திரிக்கை இல்லை, அழைப்பில்லை, பேச்சில்லை, மூச்சில்லை.

அவர்கள் மொத்த உறவும் சுத்தமாக அறுந்து வாழ்வு சாவிற்குக் கூட அழைப்பில்லாமல் போனது. எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அதனால் பாதிப்பில்லை. சுபம், சுகம்.

இதோ ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு…. அதுவும் இழவு வீட்டில் சந்திப்பு.

‘மைதிலியின் கணவர் இருக்காரா, இல்லையா.? எப்போது எப்படி செத்தார். யாரைக் கேட்க….? ‘ உறுத்தல்கள் என்னை உட்கார விடாமல் தாக்க….வாடகை நாற்காலியிலிருந்து எழுந்து அந்த கூட்டத்தை விட்டு மெல்ல வெளி வந்தேன்.

”தம்பி…! ” பின்னால் மெல்லிய ஆண் குரல்.

யாரென்று பார்க்க….அதிர்ச்சி. மைதிலி கணவன் கோபால்.!

வேட்டி, நீல நிற சட்டை, முகம் கைகால்களில் சுருக்கம். வயது, உடலுழைப்பால் ரொம்ப தளர்ந்து போயிருந்தார்.

விட்டுப்போன உறவு. வெகு வருடங்களுக்குப் பின் சந்திப்பு.

”அ…அண்ணே…! ” குரல் என்னையுமறியாமல் பாசமாக வந்தது.

”நல்லா இருக்கியாப்பா ? ”

”இருக்கண்ணே..! ” சொன்ன எனக்குள்….’கணவன் உயிரோடு இருக்கும் போது மனைவி விதவைக் கோலம். சண்டை, பிரிவு, விவாகரத்தா ?! வெகு கால சந்திப்பிற்குப் பின் சம்பந்தப்பட்ட இவரிடமே நேரில் எப்படி கேட்க….? முடியாது! யாரைகக் கேட்டு எப்படி விசாரித்து…இதற்கான விiடாய பெற..? ‘ மண்டைக் குடைச்சல் அதிகமாகியது.

என் தவிப்பு, தடுமாற்றத்தை இன்னும் அதிகப்படுத்துவது போல்….அழுகை முடித்து பெண்கள் கூட்டத்திலிருந்து வெளியே வந்த மைதிலி…..

”மாமோவ்…!” தன் புருசனை அழைத்தாள்.

”என்ன புள்ள ? ” கோபால் இங்கிருந்தே கேள்வி கேட்டார்.

”அத்தைக்கு பொறந்த இடத்து வாய்க்கரிசி எடுக்கனும். காசு கொடு.” கேட்டாள்.

”இதோ…! வர்றேன் தம்பி!” சொல்லி அவர் தன் மடியை அவிழ்த்துக் கொண்டு அவளிடம் சென்றார்.

‘கணவன் மனைவிக்குள் கோபம், தாபம், வருத்தம், விவாகரத்து எதுவுமில்லை. ஆனாலும் மைதிலி விதவைக் கோலம்! எங்கே சிக்கல்.? விகிதாச்சாரமே முழுமை இல்லை குறை. அதில் இவர்கள் எப்படி? ‘ என் கால்கள் நகர…

”வணக்கம் ஆறுமுகம்!” குரல் கலைத்தது. அருகில் அதே ஊர் அணைக்கரை அர்ச்சுனன். மாமாவீட்டிற்கு அடுத்த வீடு. சிறு வயதில் நான் அம்மா பிறந்த ஊருக்கு வரும்போதெல்லாம் இவன் என் தோழன். ஒத்த வயது. விளையாடச்செல்வோம்.

”ஆளே அடையாளம் தெரியலைப்பா. செவசெவன்னு கார்ல வந்து பெரிய பணக்காரத்தனமா இருக்கே. நானே நீ என்னை மதிச்சி பேசமாட்டியோ…சந்தேகத்தில் வந்தேன்.” என்றான்.

”ச்சேச்சே! அதெல்லாமில்லே. எனக்கு வெளியூர்ல வேலை. மாமா உறவும் அறுந்ததினால அந்த ஊருக்கு வந்து உன்னைச் சந்திக்க முடியலை. எப்படி இருக்கே ? ” உருகி விசாரித்தேன்.

”நல்லா இருக்கேன். விவசாயம்தான் ஒன்னும் நல்லா இல்லாமல் அடிமேல் அடிவிழுந்து நஷ்டப்படுத்திக்கிட்டிருக்கு. இருந்தாலும் வழி இல்லாமல் உழன்றுகிட்டிருக்கேன்.” என்றான்.

‘மைதிலி காரணத்தைக் கேட்க இவன்தான் சரியான ஆள் ! ‘ மனதுக்குள்பட….சிறிது நேர பேச்சுகுப் பின்…

”என் மாமன் மகள் மைதிலி ஏன் வெறுங்கழுத்தாய் தாலி இல்லாமல் விதவைக் கோலத்தில் இருக்காள் ? ” கேட்டேன்.

”அந்த சமாச்சாரம் உனக்குத் தெரியாதா ?! ” என்றான் அவன்.

”உறவே விட்டுப்போனதால் ஒன்னும் தெரியலை. அவள் புருசன் கோபால் அண்ணன் கூட இப்போ வலிய வந்து பேசி ஆச்சரியப்படுத்தினார்.” என்றேன்.

”அப்படியா ?! ” என்று ஆச்சரியப்பட்டவன், ” அது நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்தக் கதை. கோபால், iமைதிலிக்கு ரெண்டு பெண், மூணு ஆண் வாரிசு. பெண்ணெல்லாம் வெளியூர்ல நல்ல இடத்துல கட்டிக் குடுத்து புள்ளைக்குட்டிங்களோட நல்லா இருக்காங்க. ரெண்டு பையன்களும் அப்படி. மூனாவது பையனுக்குத்தான் வெளியூர்ல பெண்ணெடுத்து ரெண்டு பேரக் குழந்தைகளோடு வீட்டோடு வைச்சு கூட்டுக்குடித்தனம். திடீர்ன்னு அவனுக்கு வெளிநாடு போக யோகம் வந்து போனான். ரெண்டு வருசம் சம்பாதிச்சு வந்து உடம்புக்கு முடியாமல் படுத்து, ரத்த வாந்தி எடுத்து திடீர்ன்னு செத்தான். அவன் மனைவிக்குத் தாலி அறுப்பு சடங்கு நடந்த அன்னிக்கு….மைதிலி, ”என் புள்ளைப் போனதே பெரிய இழப்பு. அதைவிட இந்த சின்ன வயசுல என் மருமகள் எல்லாத்தையும் இழக்கிறது கொடுமை. அவளுக்கு முன்னாடி நான் பூவும் பொட்டுமாய் இருந்தால் அவளுக்கும் வலிக்கும் எனக்கும் உறுத்தும். தேவை இல்லே.!” சொல்லி கழட்டிட்டாள்ப்பா. அதுக்கு அவள் புருசன் அந்தக் கோபாலும் மறுப்புச் சொல்லலைங்கிறது பெரிய விசயம்.!” சொன்னான்.

‘மனிதனை மனிதன் மிதிக்கும் இந்த கலியுகத்தில்….அதுவும் படிக்காத பாமர மைதிலி கோபாலுக்கு என்ன ஒரு பரிவு, பச்சாதாபம், மனிதாபிமானம், முடிவு ! ‘சிலிர்க்க….அவர்கள் என்மனசுக்குள் நெருங்கி மடமடவென உயர்ந்தார்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!

  1. வித்யாசமான சிந்தனையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *