கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 4,603 
 

போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும்கூட.

இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர்.

இந்த நாடு நம்மை எங்கே அழைத்துக்கொண்டு போகிறது என்று யோசித்தார். சந்தேகமில்லாமல் சுடுகாட்டுக்குத்தான் என்று சொல்லிக்கொண்டார்.

போத்திநாயுண்டு மற்றப் பேர் மாதரி இல்லை; கொஞ்சம் படிச்சவர். உலகநடப்பு தெரிஞ்சவர்; பத்திரிகைகளுங்கூட படிக்கிறது உண்டு. ஓரனேர் விவசாயியுங்கூட.

இவர் இப்பொழுது நினைக்கிறதையெல்லாம் எழுதுகிறது என்றால்.”ஏர் எழுபது” பாடிய கம்பன் வந்தாலுமே முடியாது. அந்தக் கம்பன் இப்பொ எதிர்க்கெ வந்து நின்றால் கையிலிருக்கும் சாட்டைக் கம்பால் அடிவாங்காமல் போகமாட்டான்! அவனுடைய வார்த்தையிலேயே சொல்லுவதானால் ‘அடி சவ்வள நச்சி எடுத்துரு’வார்.

இந்தப் புலவன்மார்கள், பெண்டுகளைப் புகழ்ந்து பாடிப்பாடி ஏமாத்துனதுபோல விவசாயிகளையும் புகழ்ந்து பாடி ஏமாத்திட் டான்கள் என்று நினைத்தார்.

அண்ணைக்கு மட்டுந்தானா இது, இண்ணைக்கும் இந்த நவீன அரசியல் புலவன்மார்கள் தேர்தல் வரும்போதெல்லாம் நாக்கில் தேனைத்தடவிக்கொண்டே புகழவில்லையா. அம்புட்டும் வஞ்சகப் புகழ்ச்சி.

நாயுண்டுவுக்கு ரெண்டு பொம்பளைப் பிள்ளைகள். ஒரு பிள்ளை யைக் கட்டிக் கொடுத்தாச்சி மனைவியின் நகை நட்டுகளைப் போட்டு ஒப்பேத்தி. இன்னொண்ணு ‘மேசராகி’ ரொம்பநாளா வீட்லெதான் இருக்கு. அவளைக் கரையேத்த வழியைத்தான் காணலை.

அம்மா இருக்கும்போது சொல்லுவா “ஏலே, எப்பவும் ஒரு பொதி பருத்தி என்ன விலையோ அதே விலைதான் ஒரு பவுன் விலையும்; நல்லா கேட்டுக்கோ”

(ஒண்ணேகால் குவிண்டால் எடையை ஒருபொதி என்று சொல்லலாம்)

இப்பொ பருத்திவிலைக்கும் பவுன்விலைக்கும் ஏணி போட்டாலும் எட்டுமா?

துணிவிக்கிற இப்போதய விலைக்கணக்குப்படி பருத்திக்கு விலை போட்டுக்கொடுத்தா சம்சாரிகளுக்குக் கட்டுபடியாகும். ஆனா, அரசியல்காரன்தான் மில்லுக்காரனுக்கு அடிமை ஆகிவிட்டானே; அந்த விலையைக் கொடுத்து பருத்தியை வாங்குண்ணு மில்லுக் காரனைப் பாத்துப் பல்லுமேலே நாக்குப்போட்டுச் சொல்ல இவனுக்கு ஆயுசுக் காணுமாண்ணேன்?

விலை கிடைக்காத சணல் விவசாயிகள் வயத்தெரிச்சலோடு நடுத் தெருவிலெ சணலைப்போட்டு தீயை வச்சிக் கொளுத்தினமாதரி பருத்தியையும் போட்டுக் கொளுத்தவேண்டியது வந்துருமோ என்று பயந்தார்.

கரிசல்காட்டில் பருத்தி வெடித்து வர்ரதுக்கும் “கரண்ட் கட் வர்ரதுக்கும் சரிய்யா இருக்கும். அப்படி ஒரு அற்புதமான மின்சார அமைப்பு நம்ம நாட்டிலெ.

ஒரு நாள் போத்திநாயுண்டு தாலுகா ஆபீஸுக்குப் போகும் போது சுவரில் எவனோ ஒரு விஷமி கரியினால் இப்படி எழுதியிருந்தான். “மின்சார இலாகா திட்ட அதிகாரிகளே எங்கேயாவது கழுதை மேய்க்கப் போங்களேன்” சிரிப்பு வந்துவிட்டது இவருக்கு. எம்புட்டு வயத்தெரிச்சல் இருந்தா இப்படி எழுதத்தோணும்?

“கரண்ட் கட்”டைச் சொல்லியே பருத்தியை தவிடுரேட்டுக்கு வாங்குவான்கள் – தவிடுகூட விலை ஒசந்து போச்சி – பருத்தி இவ்வளவுமலிவா இருக்கே இந்த சமயத்திலெ கொஞ்சம் மாட்டுக்கு பருத்திவிதை வாங்கிவச்சிகிடுவோம்ண்ணு போனா… அதே பருத்தி விலையையே பருத்தி விதைக்கும் சொல்லுவான் யாவாரி.

“என்னய்யா புருத்திவிலை குறைஞ்சிருக்கே”ண்ணு கேட்டா “என்னா பண்றது; கரண்டுக் கட்டு; சரியா அறவை இல்லை அதனாலெ விதைவிலை கூடிப்போச்சி”ம்பான். ஒரு கல்லுலெ ரெண்டு மாங்கா என்ன நாலு மாங்காயைக்கூட விழுத்தட்ட முடியும் யாவாரிகளால்.

கரண்ட் கட் நீங்கின பிறகும்கூட பருத்தி விலை கூடப்போகாம லிருக்க தந்திரம் அவர்களுக்குத் தெரியும். “வெளிநாட்டிலிருந்து பஞ்ச இறக்குமதி” என்று ஒரு செய்தியை அவர்களால் அவர்களுடைய பத்திரிகைகளில் வெளியிடச் செய்ய முடியாதா! என்று நினைத்தார். ஆக மிளகாய் அறைக்க அம்மி என்னத்துக்கு சம்சாரி தலையே போதும்.

இப்போதெல்லாம் கரிசல்க்காட்டில் அவுரி பயிரிடும் தொழில் நல்லமுறையில் இருக்கு. பருத்திப் பயிரைமாதரி இதை ‘உத்து உத்துப் பாக்கவேண்டாம். ஆனா இதிலேயும் ஒரு மோசடி இருக்கு, நாலைஞ்சி ஏற்றுமதிக்காரன்கள் கூடிப்பேசி அவுரியை ரொம்ப மலிவா அடிச்சி வாங்குறதுண்ணு ஏற்பட்டுப் போச்சி,

இந்த அவுரி ஏற்றுமதியை சர்க்கார் ஏத்துக்கிடப் போறதுமில்லை; நியாயவிலையும் நிர்ணயிக்க போறதுமில்லை. ஆக இதுவும் முட்டுலெ கட்ன தாலிதான்.

சம்சாரி உற்பத்தி செய்யிற எதுவும் விலையில்லாமலும் சம்சாரி வாங்குகிற எதுவும் அகாத விலையில் இருப்பதுக்கும் யார் காரணம்? எல்லா லகானும் சர்க்கார் கையிலெ இல்லாமல் நம்ம பாட்டனார் கையிலெயா இருக்கு.

“தென்காசியில் மிளகாய் விலையும் வெங்காய விலையும் வீழ்ச்சி”

நேற்றுதான் பேப்பரில் படிச்சார் நாயுண்டு.

விலையை நிர்ணயிக்கிற சக்தி இந்த வியாபாரிகளிடம் இருக்கிற வரை சம்சாரி பாப்பர்தான் என்று நினைத்தார். ஊராந்தோட்டத்திலெ விளைஞ்ச வெள்ளரிக்காய்க்கு வெள்ளைக்காரன் விலை நிர்ணயம் செய்து விக்கச் சொன்னதைப்பற்றிய ஒரு நையாண்டி நாடோடிப் பாடல் அவருக்கு நினைவுக்கு வந்தது. –

அப்போது நாயுண்டுவின் மனைவி ‘வெறுங்கையோடு’ வருவதைப் பார்த்து அவர் “போனது என்னாச்சி?” என்று கேட்டார். “கிடைக்கலை; ஒரு ஆள்கூட கிடைக்கலை” என்றாள் அந்த அம்மாள்.

ஊருக்குள் விவசாயக்கூலி என்று இருந்தவர்கள் எல்லோரும் அனேகமாய் தீப்பெட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளைக்கூட விடியமுன்னே மோட்டார்க்கார்கள் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுகிறது தீப்பெட்டி ஆபீஸ்களுக்கு. களையெடுக்கவோ தொழுவேலைக்கோ இதர விவசாய வேலைக்கோ ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.

மூணாவது வருஷமும் போனவருஷமும் காட்டில் களையெடுக்க முடியாமல் மாசூல் பெருத்த நஷ்டம். இப்போதெல்லாம் புஞ்சைக் காடுகள் விதைக்காமலேயே தரிசுகள் விழுந்துபோகிறது. வருஷா வருஷம் இந்த தரிசுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. லட்சக் கணக்கான கரிசல்க்காட்டு விவசாயிகளும் அவர்களது குடும்பமும் போண்டியாகிக்கொண்டு வருகிறார்கள். இந்த நெருக்கடி எந்த அர சியல்க்காரனின் கண்ணிலேயும் பட்டதாகத் தெரியலையே. அவன் களுக்கு வேண்டியதெல்லாம் ஓட்டு; சுபீட்சமல்ல என்று வருத்தத்தோடு நினைத்தார்.

அந்த நேரத்தில் அங்கே வெங்கடாசலக் கவுண்டர் வந்தார். “வாங்க வாங்க” என்றார் நாயுண்டு.

“வாங்க வாங்கக் கடன் தான்” என்றுகொண்டே வந்தார் கவுண்டர். எப்பவும் கிரித்திரியம் பேசுவதில் கொஞ்சம் விருப்பம் அவருக்கு. பக்கத்து ஊர்க்காரர். இது தாய்கிராமம் ஆனதால் அப்படியே இவரையும் பார்த்துவிட்டுப் போவார்.

“என்ன – உங்க விவசாயங்களெல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டார் நாயுண்டு.

“விவசாயம், பன்னி, நாயேண்ணு இருக்கு”

பன்னியையும் நாயையும் அழுத்திச் சொன்னார் கவுண்டர்; அவ்வளவுக்கு மனம் நொந்த பேச்சு.

“என்ன கவுண்டர்வாள், ரொம்ப பயமா இருக்கே ஐயா” என்றார் நாயுண்டு.

“என்னத்துக்கு பயப்படணும்; என்னத்துக்கு பயப்படணும்ண் ணேன்?”

“அதென்ன அப்பிடி லேசாச் சொல்லிட்டீர்” “நீங்க ஒண்ணு; நாம என்ன களவாண்டமா கன்னம் வச்சமா இல்லெ ஊர் மொதுலை அமுக்கீட்டமா. அப்பிடியாப்பட்டவங்களே மேவேட்டியெ தோள்ளெ ஏத்தாப்புப் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமித்தி அலையும்போது நமக்கு என்னய்யா!”

“அப்படி இல்லை கவுண்டர்வாள், சர்க்கார் நம்மை ரொம்பக் ‘கேலி’ பண்ணுது”

‘ங்….! ஏங்கேலி பண்ணாது; ஓட்டுகளைப்போட்டு பதவியிலே ஏத்தி வச்சதுக்கு அவ்வளவாவது செய்ய வேண்டாமா. பிரம்பைக் கொண்டு வந்து கொடுத்த பையனைத்தான் முத கையை நீட்டச் சொல்லுவாராம் படிப்பிக்கிறவரு!”

இரக்கப்பட்டு புலியைக் கூண்டிலிருந்து விடுவித்த பிராமண னுடைய கதை ஞாபகத்துக்கு வந்தது நாயுண்டுக்கு. கவுண்டர் ஓங்கிச் சொன்னார், “சர்க்காரைப் பாத்து பயந்தது ஒரு காலம் இருந்தது. இப்பொ அஸ்ஸாமைப் பாரும். அது நமக்கும் ஒரு பாடம், சர்க்காருக்கும் ஒரு பாடம்; பாடங்களைக் கத்துக்கிடாதவன் அர சியல்வாதி இல்லை” என்றார் வெங்கடாசலக்கவுண்டர்.

நாயுண்டுவின் பாரியாள் ரெண்டு பேருக்கும் மோர் கொண்டு வந்து தந்தாள். சாப்பிட்டுக்கொண்டே கொஞ்சநேரம் நடப்பு விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு நாயுண்டு எழுந்து மாடுகளை அவிழ்த்து தண்ணி காட்டினார். கவுண்டர் விடை பெற்றுக்கொண்டார்.

மாடுகள் சரசரவென்ற சத்தத்துடன் கோட்டேரை இழுத்துக் கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தது. நாயுண்டு அதுப்பின்னால் தலையில் கஞ்சிக்கலயத்தைச் சுமந்துகொண்டும் கையில் தார்க் குச்சியை ஏந்திக்கொண்டும் நடந்துபோனார்.

மாடுகள் நீர்விட்டுக்கொண்டே போனது. அதன் கோணல் மாணலான தடத்தைப் பார்க்கும்போதெல்லாம் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் வாத்தியார் சொன்னகதை ஞாபகத்துக்கு வந்துவிடும்.

ஒரு சமயம் கம்பரிடம் ஒரு மாடு மேய்க்கிற பையன் மாடு மேய்க்கும் கம்பால் இப்படி தரையில் கோணல்மாணலாய் கீய்ச்சிக் காண்பித்து, “இது என்னதுண்ணு சொல்லும் பாப்போம்” என்று கேட்டானாம். கம்பர் திகைச்சிப் போய் “என்னதுண்ணு தெரியலையே தம்பி”ண்ணாராம். “ஹெய், இது தெரியாதா இதுதான் நடைமாடு மோண்ட தடம்”ண்ணானாம்! இதைச் சொல்லிவிட்டு பிள்ளை களோடு வாத்தியாரும் சேர்ந்து சிரிப்பார்!

வாஸ்தவம்தான்; “ஏர் எழுபது” பாடிய கம்பருக்கும் பல விஷயங்கள் தெரியத்தானில்லை என்று நினைத்துக்கொண்டே நடந்தார் போத்திநாயுண்டு.

– நாற்றங்கால், 23 செப்டம்பர் 80

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *