விடியலின் வெளிச்சம்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 4,591 
 

தெருவிளக்கின் மங்கலான ஒளியில், நிழல் பின்னோடு ஓடிவர, ஓட்டமும் நடையுமாய்
வந்தாள் கல்பனா. சைதாப்பேட்டையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிசைப்
பகுதிகளில் இருந்து வீசும் நறுமணமான துர்நாற்றம் அவளை சிறிதும் பாதித்ததாக
தெரியவில்லை. முகத்தில் வியர்வைத்துளிகள் மெதுவாய் கீழ் நோக்கி வழியத்துவங்கின.
சேலை தலைப்பில் அதனை துடைத்தபடி நடையை வேகப்படுத்தினாள். உடுத்தியிருந்த
காட்டன் புடவை, வியர்வை ஈரத்தை உறிஞ்சி உடலோடு ஒட்டிக்கொண்டது. பஜார்
தெருவினை வந்தடைந்தவளின் பார்வை, இருபுறமும் இருந்த நடைபாதைகளை
துழாவியது. ஒரு ஓரத்தில் நாய் ஒன்று படுத்திருக்க, மற்ற நடைபாதை பாதி உடைந்து,
மீதியில் குப்பை சுமந்து இருந்தது. தூரத்தில் இருந்த பெட்டிக் கடையில் வெளிச்சம்
தெரிய, மறுபடியும் ஓட்டமும் நடையுமாய் தொடர்ந்து கடையை அடைந்தாள்.

“அடடே ! வாம்மா கல்பனா .. என்னம்மா எதாவது வேணுமா ? சீக்கிரம் சொல்லு
கடைய மூடணும் ..”

“இல்லங்க .. நான் அவரை தேடி இங்க வந்தேன்.. ”

“யாரு பாண்டியனா ? ” புருவம் சுருக்கி யோசித்தவர் ” மத்தியானம் பார்த்தேன்னு
நினைக்கிறேன்.. ஏம்மா இன்னும் வீட்டுக்கு வரலை ? ”

“இல்லங்க .. அதுக்கப்புறம் நீங்க பாக்கலையா ? ”

“இல்லம்மா.. நீ வேணும்னா மார்கெட்டுக்கு அந்தப்பக்கம் போய் பாரு .. ஒருவேளை
அங்க இருக்கலாம்..”

“சரிங்க .. ” என்றபடி தொடர்ந்தாள்.

“ஏய் உன்னத்தான் .. என்ன பண்ற அங்க ? ”

“இதோ வந்துட்டேன்.. ” சோற்று பாத்திரத்தை களைந்தபடி வந்தாள் கல்பனா.

“என்ன வேணும் ?”

“எனக்கு ஒரு அம்பது ரூபா வேணும் ..”

“எதுக்கு இப்போ அவ்வளவு காசு ? ”

“கேள்வி எல்லாம் கேக்காத .. குடுன்னா குடு ..”

“ராத்திரிக்கு ஊத்திக்க தானே .. மாட்டேன்.. இத வேற செலவுக்கு … ”

“என்னடி பெரிய செலவு.. நான் சம்பாரிச்சு கொண்டாரும் போது உன்னாண்ட இந்த
மாதிரி கையேந்திட்டா இருந்தேன்..ராஜா மாதிரி இருந்தேண்டி.. பாழாப்போன லாரி
என் கால்ல ஏறலைன்னா இன்னிக்கு உன்னாண்ட கையேந்த வேணாம்.. எல்லாம்
என் நேரண்டி..”

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு சத்தம் போடற ? அம்பது ரூபா நெஜம்மா வேற
செலவுக்கு வேணும்யா .. ”

“அப்டியா ? அப்டி என்ன செலவு மகராணிக்கு ? தெனம் நீ வேலைக்கு போவறதுக்கு
முன்னால சீவி சிங்காரிக்கற்து நான் பாக்கலைன்னு நெனைக்கிறியா ? புருஷன் கால்
அவுட்.. இனிமே ப்ரயோசனப்பட மாட்டான்னு நெனச்சிட்டியா ? ” என்றவன், அவள்
அனல் பார்வை அவன் மேல் திரும்ப, வேறு திசையில் வெறிக்கத் துவங்கினான். அவள்
இன்னும் அவனை வெறிப்பதை நிறுத்தவில்லை. உணர்ந்தவனாய், “இப்போ கடைசியா
இன்னா சொல்ற ? முடியுமா முடியாதா ? என்றவனுக்கு பதில் ஏதும் வராமல் போக
திரும்பிப் பார்த்தான்.

கல்பனா அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு, அடுப்பை மூட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏய் என்னாடி நான் கேட்டுகினே இருக்கேன் .. நீ பாட்டுக்கு உன் வேலைய
பாத்துனுக்கிற ? முடியுமா , முடியாதா ? ”

“முடியாது” தெளிவாய் பதில வந்தது.

கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து வீசி எறிந்தான். பின் கைகளால் வேகமாய்
உந்தித்தள்ளி சக்கரம் வைத்த பலகையின் உதவியோடு வீட்டைவிட்டு வெளியே
வந்தான். எதிர்குடிசையில் லோகு இவனை பார்த்ததும் மெதுவாய் எழுந்து வந்தான்.

“என்னப்பா ! ஊட்ல சண்டையா .. சத்தம் கேட்டிச்சி ? ”

“என்னிக்கி கேக்கல ?” என்றவன் “ஒரு பீடி இருந்தா குடேன் ..”

கொஞ்சம் யோசித்து, கட்டிலிருந்து ஒரு பீடியை உருவினான் லோகு. “இந்தா..”
அவனே பற்றவும் வைக்க, மெதுவாய் புகையை உறிஞ்சி ஆகாயம் நோக்கியபடி
புகையை வெளியே விட்டான் பாண்டியன்.

“என்னப்பா , என்ன சொல்து கல்பனா ? ” என்றுவிட்டு உள்ளே பார்த்தான்.

ஏதும் பேச விரும்பாதவனாய் முகம் திருப்பிக்கொள்ள ” நான் கேட்டுந்தான் இருந்தேன்.
அது சொல்றதும் நியாயந்தானே ? என்ன நா சொல்றது ?”

பாண்டியனுக்கு எரிச்சலாய் வர, “லோகு .. நீ இதெல்லாம் கொஞ்சம் கண்டுக்காம இரேன்..”

“சரி பா.. உனக்கு புடிக்கலைன்னா வாணாம்.. ”

கல்பனா வெளியே வர” என்ன கல்பனா .. நல்லா கீறியா ? ” என்றபடி பான் பராக்
கரை தெரிய சிரித்தான் லோகு.

“அங்கயே கேளு.. நல்லா இருக்கனா இல்லையான்னு.. ” என்றபடி நடந்தாள்.

அவள் தெருக்கோடியில் மறையும் வரை பார்த்திருந்தவன், “பாத்தியா லோகு.. வேலை
செஞ்சி ஊட்டையும் புருஷனையும் காப்பாத்தராளாம்.. அந்த மெதப்பு.. ரெண்டு
மாசத்துக்கு முன்னால எங்க போச்சி இந்த மெதப்பு ? அப்ப நான் துட்டு கொண்டார
சொல வாங்கி சொருவிக்க தெரிஞ்சிச்சு. இப்ப காலு போனதும் நானும் செல்லாக்காசா
பூட்டேன்.. இது தான் நேரன்றது..” என்றபடி நொந்தவனை பார்த்து ” உடுபா.. ”
என்றான் லோகு.

“அக்கா உன் புருஷனுக்கு அடிப்பட்டு நாலு மாசம் ஆவாது இத்தோட ? ”

“ம்ம்.. ” என்றாள் கல்பனா.

“ஆமா அது என்ன செய்து இப்போ ? ”

“ஊட்ல தான் இருக்கு.. ”

“அப்ப உன் சம்பாத்தியத்த வச்சி தான் பொழப்பு நடக்குதா ? ”

“ம்ம்..”

“உக்காந்தபடி ஏதாவது செய்ய சொல்ல வேண்டியது தானே ? ”

“அதான் ஏற்கனவே செய்யுதே.. உக்காந்தபடி நல்லா தண்ணி போடற்து..
உக்காந்த வாக்குல சாப்பாடு.. உக்காந்த வாக்குல பீடி .. ”

அப்போது தான் கல்பனா சைடில் நின்று கொண்டு தன்னையே வெறித்துக்
கொண்டிருந்த மேஸ்திரியை பார்த்தாள். அதை பார்த்த மேஸ்திரி, “அங்க என்னம்மா
கதை அளக்கறீங்க.. வேலைய பாருங்க” என்றபடி கிட்ட வந்தார்.

“திலகம் .. ரெண்டாவது மாடில கூட மாட ஒத்தாச செய்ய ஒரு ஆள் கொறையுது..
போ” என்று விரட்டாத குறையாய் சொன்னார். அவள் போகும் வரை காத்திருந்துவிட்டு”
என்ன கல்பனா , உன் புருஷனுக்கு எப்படி இருக்கு ? ” என்று விட்டு தேவையில்லாமல்
சிரித்தார்.

கல்பனாவுக்கு அவரை பார்க்க எரிச்சலாய் வந்தது. “புருஷனுக்கு ஒடம்பு சரியில்லைன்னு
தெரிஞ்சி கேக்கும் போது எதுக்கு சிரிக்கணும்” என்று நினைத்தவள்…” இப்ப
பரவால்ல… ” என்றாள்.

“வருமானம் எல்லாம் நீ தான் பாத்துக்கிறியாமே ? ”

“ம்ம் ” என்றபடி சிமெண்ட் மணல் கலவையை மிதித்தாள்.

“இந்த ஒரு வருமானத்த வச்சு எப்படி சமாளிக்கற ? கட்டுப்படியாவுதா ? ”

“ம்ம்.. ”

அவள் ஏதும் பிடி கொடுக்காமல் பேச, அவர் முகத்தில் சிறிது ஏமாற்றம். பின்னர்
ஏதோ நினைத்தவராய் “உனக்கு ஏதாச்சும் பணம் கிணம் வேணும்னா சொல்லு கல்பனா..
வேத்து மனுஷனா நினைக்காதே என்ன … ” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.

கல்பனாவுக்கு தன் நிலையை நினைக்க எரிச்சலாய் வந்தது. வீட்டில் எப்போதும்
அடைந்து கிடக்கும் புருஷன். வெளியே புருஷனாகத் துடிக்கும் இப்படியும் சிலர்.
யோசித்தபடி நின்றவளை திலகம் வந்து உலுக்கினாள்.

“என்னக்கா நின்னபடி தூங்கற ? ”

“ஒண்ணும் இல்ல திலகா.. ”

“வழக்கம் போல நம்ம மேஸ்திரி தன் வேலைல எறங்கிட்டாரா ? ” என்று
கண்ணடித்தவளை “போடி பைத்தியம் .. நிலமை தெரியாம நீ வேற..” என்றாள்.

“நான் சும்மா தான் கேக்கறேன்.. நீ எத்தினி நாளைக்கு தான் இப்படி கஷ்டப்படுவ ?
உன் புருஷனை ஏதாச்சும் வேலைக்கு போவச் சொல்லுக்கா.”

“அந்தாள் நிலமை உனக்கு தெரியாததில்ல.. இந்த நிலமைல யார் திலகா வேலை
குடுப்பா ? ”

“போக்கா நீ வேற.. கால் இல்லாத, கண் இல்லாத எத்தன பேரை நம்ம ரயில்வே
ஸ்டேஷன்ல போன் பூத்துலையும், சின்ன சின்ன சாமான் விக்குற இடத்துலேயும்
பாக்கல.. எல்லாம் முயற்சி செஞ்சா முடியும் .. நீ தான் சொல்ற விதத்துல எடுத்து
சொல்லணும் .”

“என்னத்த எடுத்து சொல்றது.. உனக்கு தெரியாது இந்த மாதிரி நான் முன்னால
ஒரு வாட்டி பேசி, வாங்கி கட்டிகிட்டது. நம்ம இங்க நாய் பாடு பட்டு அம்பதோ
நூறோ சம்பாரிச்சு கொண்டு போவ, அங்க அந்தாளு குடிச்சுட்டு உழுந்து கிடப்பான்..
உக்காந்த நிலையிலேயே எல்லாத்தையும் நான் செய்யணும் , பின்ன வேலைக்கும்
வரணும்.. முன்னல்லாம் ஏதோ வேலைக்கு போவுச்சி அதுனால கொஞ்சம் சுளுவா
காசு பாக்க முடிஞ்சுச்சி. இப்ப நான் ஒருத்தி தான்.. ஒண்ணும் இல்லை திலகம்,
வேற ஏதும் வேணாம். இம்புட்டு செய்யறேனேன்னு கொஞ்சம் பரிவு இருக்குதா.. ?”
என்றுவிட்டு வானத்தை பார்த்தாள். விழிகளின் விளிம்பில் நீர் தேக்கம் கொள்ள
ஆரம்பித்தது. சுதாரித்து “என்ன தான் ஆனாலும் என்னிக்காவது எனக்கு விடியும்..
அந்தாளுக்கு ஒறைக்கும்.. அப்படீன்னு ஒரு நம்பிக்கை .. ஓடுற வரைக்கும் ஓடட்டும்..
மத்தது நம்ம கையில இல்ல ” என்றபடி சிமெண்ட் மணல் கலவையை மிதிக்கும்
அவளை பரிதாபத்துடன் பார்த்தாள் திலகம்.

“மணி என்னங்க ” என்று எதிரில வந்த ஒருவரிடம் கேட்டாள் கல்பனா.

“ஏழாவுதும்மா .. ”

“சரிங்க ” என்று விட்டு நடையை வேகப்படுத்தினாள். அவளுடன் ஈடுகொடுக்க முடியாத
திலகா” என்னக்க அவசரம் ”

“மணி ஆறாவுதாம்.. இப்ப நான் போயி அந்தாளை சண்டை போட்டாவது புடிச்சி வச்சா
தான் குடிக்கப் போகாம தடுக்கலாம்.. அதான்..”

“ஏன்கா.. காலையில தானே இதப்பத்தி நம்ம பேசிகிட்டிருந்தோம்.. அதுவா நினைக்கற
வரைக்கும் உன்னால ஏதும் செய்ய முடியாதுக்கா.. ”

“போடி பைத்தியம்.. அதுக்காக நம்ம முயற்சி செய்யாம இருந்தா மட்டும் எல்லாம்
மாறிடுமா ? ஏதோ முயற்சி செஞ்சி பாக்குறது.. என்னிக்காவது ஒரு நாள் விடியாதா”
என்றபடி போகிறவளை வியப்புடன் பார்த்தாள் திலகம்.

“உன்ன நினைச்சா எனக்கு ஆச்சர்யமா இருக்குக்கா.. சரி நான் வரேன்” என்று
இடைப்பட்ட சந்தில் வெளிப்பட்டாள்.

கல்பனாவுக்கு அவள் திலகத்திடம் சொன்னதை நினைக்க உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.
“என்ன நம்பிக்கை ! எட்டு வருஷமா குடும்பம் நடத்துறதுல இது ஒண்ணு தான் மிச்சம்
இருக்கு.. சொல்லப் போனா இந்த எட்டும் வருஷமும் இந்த நம்பிக்கைல தான்
ஓடிச்சுன்னு சொல்லணும்.. ”

ஏதேதோ நினைத்தபடி நடந்தவளை திலகத்தின் குரல் கலைத்தது.

“அக்கா.. நில்லு ” என்றபடி மூச்சிரைக்க ஓடிவந்தாள்.

“என்னடி என்ன விஷயம் ? ”

கொஞ்சம் மூச்சு வாங்கி பின் ” உன் புருஷனை பஜார்ல அடிச்சிட்டாங்களாம்.. ”

செய்தியை கேட்டதும் கல்பனாவுக்கு அதிர்ச்சிக்கு பதில் எரிச்சலும் , ஆத்திரமுமே
வந்தது. சமாளித்து “எங்கடி .. என்ன ஆச்சு ” என்றாள்.

“நம்ம மூர்த்தி சார் சொன்னார்கா.. அவர் அந்த வழியா வர்றப்போ பாத்திருக்கார்..
என்ன பாத்ததும் விஷயத்த சொன்னார்.. அது வந்து… ” என்று தயங்கும் அவளை”
என்னடி மென்னு முழுங்குற.. முழுசா சொல்லு.. ” என்றாள்.

“வந்து உன் புருஷன், நம்ம மருது இல்ல.. அதான்கா உன் புருஷன் மாதிரியே கால்
இல்லாம இருக்குமே .. படமெல்லாம் வரையுமே.. அது வரைஞ்சு வச்சிருந்த படத்து
மேல போட்டிருந்த காச உன் புருஷன் எடுக்க, தகராறாகி .. ” என்று தயங்கி “உன்
புருஷனை மருதுவும் அது கூட ஒண்ணு இருக்குதே அதுவும் சேர்ந்து அடிச்சிருச்சாம்..
இத பாத்த நம்ம மூர்த்தி சார் பயந்து போயி இத என் கிட்ட சொல்லி உன்கிட்ட
சொல்ல சொன்னார்.. ” என்றாள்.

கல்பனா பஜாரின் மறுமுனைக்கு வந்திருந்தாள். நடைபாதையில் பாண்டியன் விழுந்து
கிடப்பது தெரிந்தது. வேகமாய் அவனை நோக்கி ஓடினாள்.”இப்படி நினைவு போற
மாதிரியா அடிச்சாங்க ” அவள் வயிற்றில் ஏதோ செய்தது. தரையில் ராமர் படம்
இருக்க, அவன் முகத்தை நாய் ஒன்று முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, ஓடிச்சென்று
அதை விரட்டினாள். மெதுவாய் அவனை எழுப்பினாள். முகத்தை அருகில் கொண்டு
வந்ததும் குப்பென்று சாராய வாடை அடிக்க, அவன் முகத்தை உலுக்கினாள். அவன்
மெதுவாய் கண்ணைத் திறந்தான். பின்னர் குழறியபடி “கல்பனா..அந்த மருது பய
வரட்டும் அவன ரெண்டுல ஒண்ணு பாக்காம நான் இங்கருந்து வர மாட்டேன்..”
என்றபடி தடுமாறினான். எதிரே வந்த சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்தினாள்.
ரிக்ஷாக்காரரின் உதவியோடு அவனை அதில் ஏற்றி தானும் ஏறிக்கொண்டாள். அவள்
தோளில் சாய்ந்தபடி அவன் “அவன பாத்துட்றேன்.. ” என்று முனகினான். “என்னிக்காவது
எனக்கு விடியும் ..” காலையில் அவள் சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்திற்கு
வந்தது. கண்களில் நீர் தேங்கத் துவங்க வெட்டவெளியை வெறித்தபடி புன்னகைத்தாள்.

– ஸ்ரீனி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *