Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வா… மருமகளே வா ! –

 

ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி, இறங்கினாள் பவித்ரா. வயது 26; உயரம் 165 செ.மீ., ஐரோப்பிய பெண்கள் போல் கனத்த, உயர உடல்வாகு; மாநிறம்; அறிவு வீசும் கண்கள்; ஒற்றை பொட்டு மூக்குத்தி. அரசுடைமை வங்கியில் பணிபுரிபவள். தொட்டால் சுருங்கி மனோபாவம் கொண்டவள். பவியின் தோழிகள் பவியை, “டைனோ’ என்றும், “ஜெர்ஸி’ என்றும் அழைப்பர். பவியை, பெண் பார்க்க வரும் வரன்கள், பவியை பின்வரும் காரணம் கூறி நிராகரிப்பர்.
“பொண்ணு, பழைய நடிகர் நீலுவுக்கு, பொம்பிளை வேஷம் போட்ட மாதிரி இருக்கு!’
வா... மருமகளே வாசமையற்கட்டில் நின்று மிளகாய் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்த அம்மாவை, பின்னுக்கு இருந்து கட்டிக் கொண்டாள் பவித்ரா. மகளிடமிருந்து வரும் டியோடரன்ட் கலந்த வியர்வை வாசனையை ரசித்தாள் உமா.
உமாவுக்கு 50 வயது. பவித்ரா தான் மூத்தவள். இரண்டாவது மகன், முதுகலை மின்பொறியியல் படித்து முடித்திருக்கிறான். மூன்றாவது மகள், இளங்கலை செவிலியம் படிக்கிறாள். <உமாவின் கணவர் பி.எஸ்.என்.எல்., ஊழியர்.
“”என்ன பவி… இன்னைக்கி ரொம்ப சந்தோஷமா இருக்க?”
“”உலகத்துல சில பேருக்கு, என்னை பிடிக்கதாம்மா செய்யுது!”
“”விளக்கமா சொல்லு!”
“”நான் பணிபுரியும் வங்கியோட மேனேஜர், என் மேல பாசமா இருக்காரும்மா. என்னை பாத்த மொத நாளே, “அம்மா… நீ தபு மாதிரி, ஜெயஸ்ரீ மாதிரி, சுஷ்மிதா சென் மாதிரி இருக்க. நீ இந்தியாவில் பிறக்க வேண்டியவளே இல்லை. நீ ஒரு அமெரிக்க அழகு. நீ என் மருமகளா இருக்கக்கூடாதான்னு ஏங்குறேன்,’ என்றார்!”
“”இம்!” உமாவின் முகம் இருண்டது.
“”அதுக்கு பின்னாடி, இந்த நாலு மாசமா என்னை வாய் நிறைய, “மருமகளே… மருமகளே’ன்னுதான் அழைக்கிறார். அதோட பல டிப்ஸ் தருகிறார்…
“உடல் பருமன் தெரியாம இருக்க, இப்டி இப்டியான ஆடைகளை அணி. உயரம் தெரியாம இருக்க, ஹை ஹீல்ஸ் தவிர். சதா <உம்முன்னு இருந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு காட்டாதே. கலகலப்பாய் சிரி. தலைக்கு போடும் எண்ணெயை குறை…’
— இப்படி பல அறிவுரைகளை அள்ளிக் கொட்றார். மதியான நேரத்ல, என் டிபன் பாக்சை வாங்கி, “மருமக சாப்பாட்டை மாமா நான் சாப்பிடுறேன்… மாமா சாப்பாட்டை மருமக நீ சாப்பிடு…’ எனக் கூறி சாப்பிடுறார்.”
எரிச்சலான முகபாவம் காட்டினாள் உமா.
“”உன் மேனேஜர் பெயரென்ன?”
“”கண்ணாயிரம்!”
“”வயசு என்ன இருக்கும்?”
“”அம்பத்தியஞ்சு இருக்கும்!”
“”கருத்தேள் கண்ணாயிரம் எப்படி இருப்பான்னு, கொஞ்சம் வர்ணி!”
“”என்னம்மா… எங்க மேனேஜரை அவன், இவன்ற!”
“”சரி… வர்ணி!”
“”என்னை விட <உயரம் கம்மி; கறுப்பு கலர். தலைமுடிக்கு டை அடிச்சு, நடு வகிடு எடுத்து சீவியிருப்பார். புருவத்தை பியூட்டி பார்லர் போய் திருத்தியிருக்கிறார். கபடி ஆடும் கண்கள். அய்யனார் மூக்கு, ஐப்ரோ மீசை, நிக்கோட்டின் உதடுகள். பட்டை பெல்ட். டக்-இன் பண்ணின ப்ளெய்ன் சட்டை. செங்குத்து கோடுகள் கொண்ட பேன்ட், இடது கையில் மட்டும் மருதாணி.”
“”சரிதான்… அந்தாளோட பொண்டாட்டி என்ன பண்ணுதாம்? பொண்டாட்டிய பத்தி இடை இடையே பேசுவானே?”
“”பொண்டாட்டி ஹவுஸ் ஒய்ப்தானாம். ஆனா, சைக்கோ மாதிரி, இவரை படாதபாடு படுத்துமாம். ஊருக்காகத்தான் அந்த பொம்பளையை சகிச்சுக்கிட்டுருக்காராம்!”
“”பிள்ளைகள்?”
“”இல்லையாம்!”
“”உன் மொபைல் போன் நம்பர் கேட்டு, தன் மொபைல் நம்பர் குடுத்திருப்பானே…”
“”அட… ஆமாம்!”
“”டெய்லி பிரண்ட்ஷிப் எஸ்.எம்.எஸ்., அனுப்புவானே…”
“”ஆமாமா!”
“”இந்த நாலு மாசத்தல உனக்கு எதாவது காரணம் சொல்லி பிரசன்ட்கள் செய்தானா?”
“”ஆமா… இருமுறை!”
“”அந்தாளை பத்தி வங்கிப் பெண்கள் என்ன பேசிக்கிறாங்க?”
“”வங்கிக் கிளைல என்னையும் சேத்து ஆறு பெண்கள். சில பெண்கள் அவரை நல்லவர்ன்றாங்க; சில பெண்கள் அவரை கெட்டவர்ன்றாங்க!”
“”உன்னைத்தவிர வேறெந்த பெண்ணையும், “மருமகளே…’ன்னு கூப்பிடுறானா?”
“”இல்லையே…”
“”அவங்களை எல்லாம் எப்படி கூப்பிடுறான்?”
“”அவங்க பேருடன் மிஸ் அல்லது மிஸஸ் இணைச்சு கூப்பிடுறார். சில பெண்களை பதவியின் பெயர் வைத்து கூப்பிடுகிறார்!”
“”உன்னுடன் பேசும் போது அந்தாளோட கண்கள் எங்கு பார்க்கும்?”
“”கவனிச்சதில்லை!”
“”நீயும், அந்தாளும் பேசிக்கிற சந்தர்ப்பங்கள் எப்படி அமையும்?”
“”பல சமயங்கள்ல என் சீட்டருகே வந்து கைய கட்டி நிப்பார். சிலசமயம் இன்டர்காம்ல என்னை தன் அறைக்கு கூப்பிடுவார்.”
“”அவர் பேசின டயலாக்குகளில் மிகமிக வித்தியாசமான டயலாக் எது?”
“”ஒரு தடவை, “எனக்கு முப்பது வயசு குறைஞ்சிருக்கக் கூடாதா? என் கல்யாணத்துக்கு முன் உன்னை சந்தித்திருக்கக் கூடாதா…’ன்னு புலம்பினார்!”
ஆங்காரமாய் சிரித்தாள் உமா.
“”எலி ஏன் ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு ஓடுதுன்னு இப்ப புரியுது. ஊருக்கெல்லாம் கவுளி சொல்லும் பல்லி, கழனி பானைக்குள்ள போய் விழுந்த மாதிரி இருக்கு உன் கதை. மொத்தத்துல கிழவன் உன்கிட்ட சென்டிமென்ட் தூண்டில் போட்டுக்கிட்டுருக்கான். நீ காக்கா; அவன் நரி. வடை சுடும் பாட்டி நான். வடை உன் கற்பு!”
“”ஓவரா பேசறம்மா!”
“”உண்மையைத்தான்டீ சொல்றேன். “உன் அங்கிள் மாமா…’ கருந்தேள் கண்ணாயிரம் நல்லவன் இல்லடீ… “மருமகளே…’ன்னு ஒரு மூகமுடி வார்த்தையை வச்சு, உன்னை ஈவ்-டீசிங் பண்றான்டீ!”
“”இருக்காதும்மா!”
“”நேரடியா அவன் <உன்னை பார்த்து, “நீ அழகாயிருக்க… உன் புடவை அழகாயிருக்கு…’ அப்டி, இப்டின்னு சொன்னா செம டோஸ் விடுவ. தொடர்ந்து அவன் கிட்ட பேச மாட்ட. அதனால, “மருமகளே மருமகளே…’ன்னு கூப்பிட்டு கவிழ்க்கப் பாக்கறான்… ஏமாந்துராத!”
“”அட்லீஸ்ட் அந்த கிழவன் கண்களுக்காவது, நான் அழகா தெரியுறேன்தானே?”
“”ஆண்கள் இருவித அளவுகோல் வச்சிருக்காங்க. கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு அளவுகோல்; செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு எப்படி ஒரு பெண் தேவை என்பதற்கு ஒரு அளவுகோல். இதை அவதானிக்காத பெண்கள் தலைகீழாய் கவிழ்ந்து போகின்றனர்!”
யோசிக்க ஆரம்பித்தாள் பவித்ரா.
“”கண்ணாயிரத்துக்கு கல்யாண வயதில் மகன் இருந்தால், அவன் உன்னை மருமகளேன்னு கூப்பிட மாட்டான்; மாற்று உபாயங்கள் நாடியிருப்பான்!”
“”அம்மா… விட்டா பேசிக்கிட்டே போற… பாக்காத ஆளைப் பத்தி இவ்வளவு யூகம் தேவையா? உண்மையான வாஞ்சையுடனேயே அவர் என்னை மருமகள்ன்னு கூப்பிட்டிருந்தா?”
“”வீட்டுக்குள்ள பாம்பு வந்திட்டா, அது விஷ பாம்பா, தண்ணி பாம்பான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்ருக்கக் கூடாது. கம்பை தூக்கி, “நச்’ன்னு ஒரே போடு போட்ர வேண்டியது தான்.” என்றாள் அம்மா.
அம்மாவின் கோபத்தை வெகுவாக ரசித்தாள் பவித்ரா.
“”இப்ப என்ன தான் பண்ணச் சொல்ற?”
சில நொடிகள் யோசித்தாள். பின் தனக்குத்தானே பேசிக் கொண்டாள். எடுத்த முடிவு சிறப்பானது என, தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள்.
“”காதைக் கொண்டா!”
அம்மா சொல்லச் சொல்ல பவித்ராவின் முகம் ஜொலி ஜொலித்தது.
“”குட்மார்னிங் அங்கிள்,” என்றபடி, மேனேஜரின் அறைக்குள் பிரவேசித்தாள் பவித்ரா.
“”வா… மருமகளே வா… இன்னைக்கு நீ கட்டியிருக்ற புடவை தூள்; டாப் டக்கர். மகாலட்சுமி மாதிரி இருக்க. என் கண்ணே பட்ரும் போலிருக்கு. என் காலடி மண்ணு எடுத்து உனக்கு திருஷ்டி சுத்திப்போடு!”
“”அங்கிள்… அங்கிள்!”
“”என்னம்மா… என்ன வேணும்?” கொஞ்சினார்.
“”உங்களுக்கு அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கச்சிகள் உண்டா?”
“”என்ன அப்படி கேட்டுட்ட? எங்க பேமிலி ரொம்ப பெருசு. எனக்கு ஒரு அண்ணன்; ஒரு தம்பி. ஒரு அக்கா; ரெண்டு தங்கச்சி உண்டு!”
“”அவங்களுக்கு மகன்கள் கல்யாண வயசில உண்டா?”
“”உண்டுண்டு. அண்ணனோட ரெண்டாவது பையன் எம்.சி.ஏ., படிச்சிட்டு இன்போசிஸ்ல வேலை பாக்றான். அக்கா மகன், ஆர்க்கிடெக்ட்டா இருக்கான். ஒரு தங்கச்சி மகன் மரைன் இன்ஜினியரா இருக்கான். இன்னொரு தங்கச்சி மகன் பாரஸ்ட் ஆபிசரா இருக்கான். ஏன்ம்மா இதெல்லாம் கேக்ற?”
“”உங்க பேச்சை, உங்க பிரதர், சிஸ்டர், பேமிலி தட்டாம கேப்பாங்களா?”
“”கேட்பாங்க. நான் கிழிச்ச கோட்டை ஒரு நாளும் தாண்ட மாட்டாங்க!”
“”அங்கிள்… நாலு மாசமா எனக்கு தூக்கமே இல்லை!”
“”ஏன்?”
“”அங்கிள் நம்பளை மருமகளாக்கிக்க விரும்புறார்; ஆனா, அவருக்கு மகன் இல்லை. எப்படி அவரோட ஆசையை நிறைவேத்தி வைக்றதுன்னு விழுந்து விழுந்து யோசிச்சேன். அப்பத்தான் இந்த ஐடியா வந்துச்சு. உங்க சிஸ்டர், பிரதர் மகன்கள நான் கட்டினாலும் உங்களுக்கு நான் மருமகதான? அன்அபிஷியலா கூப்டுறதை அபிஷியல் ஆக்கிருவம்ன்னு தீர்மானிச்சேன். பிரதர், சிஸ்டர் பையன்கள்ல நீங்க யாரை காட்டினாலும், அவனை நான் கல்யாணம் செஞ்சிக்கிறேன். நாளைக்கே உங்க பிரதர், சிஸ்டர் கிட்ட இதுபத்தி பேசுங்க!”
யோசிக்க ஆரம்பித்தார் கண்ணாயிரம்.
“”மாமா… இந்தாங்க ஜாதகம். ஜாதகப் பொருத்தம் பார்க்க உதவும்!”
“”மாமாவா?”
“”அங்கிள்னு இங்கிலீஷ்ல கூப்பிட்டா ஒரு இன்டிமசி கிடைக்க மாட்டேங்குது. தமிழ்ல கூப்பிட்டாதான் ஒரு டீப் அட்டாச்மென்ட் கிடைக்குது!”
அசடு வழித்தார் கண்ணாயிரம். “”ட்… ட்… ட்ரை பண்றேன்ம்மா!”
“”அப்படி சொல்லக்கூடாது. சம்பந்தம் பேசி முடிச்சிட்டு வறேன்னு சொல்லணும். எனக்கு கல்யாணம் முக்கியமில்லை. உங்களை உரிமையா, உறவா, அதிகாரப்பூர்வமா மாமான்னு கூப்டுறதுதான் முக்கியம்!”
“”உஹ்!”
“”நான் சீட்டுக்குப் போறேன் மாமா. இன்னைக்கி சாயந்தரமே பேச வேண்டியதை பேசி, காலைல சுபசெய்தியோட வாங்க மாமா.” இருக்கை திரும்பினாள் பவித்ரா.
அடுத்த ஒரு வாரத்துக்கு மருத்துவ விடுப்பில் சென்று, எட்டாம் நாள் பணிக்கு திரும்பியிருந்தார் கண்ணாயிரம்; ஆனால், பவித்ராவை பார்ப்பதை தவிர்த்தார்.
உணவு இடைவேளையில் இவளது டிபன் பாக்சை உருட்ட அவர் வரவில்லை.
மாலை நான்கு மணி வரை பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு, தானே அவரது அறைக்குப் போனாள் பவி.
“”வணக்கம் மாமா…” என சொல்லப் போனவளை தடுத்து, “”இந்த எஜுகேஷன் லோன் பைலை எடுத்திட்டுப்போய் டாக்குமென்ட்ஸ செக் பண்ணுங்க மேடம்… குயிக் குயிக்… வங்கியில், வங்கிப் பேச்சு மட்டுமே பேசுவோம் மேடம். டு யூ அண்டர்ஸ்டாண்ட்?”
பவித்ரா பைலை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள். மேனேஜர் திட்டியதற்காக கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது. “அம்மா… நீ ஒரு படிக்காத மேதைம்மா!’

- ஆர்.சூரிய நாராயணன்(நவம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணில் குருதி வழிந்தோடி வானுயர்ந்து இருக்கும் புத்தர் சிலையை, மண்ணோடு மண்ணாக்க காடு மேடு எல்லாம் தாண்டி ஓடி வருகின்றேன். என்னுடன் ஓடிவருபவர்கள் பிண்டங்களாய் சிதறி விழுந்தாலும் ரத்தசகதியில் நான் மட்டும் ஓடிவருகின்றேன். இதோ இன்னும் சில அடிதூரம்தான். புத்தர் சிலையை ...
மேலும் கதையை படிக்க...
பிறகு
Après : பிறகு மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி "கண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்.", பாட்டியம்மா சொன்னார்கள். மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்துக் கதவைத் தாழிட்டான். வீடு என்று கூற முடியாது, ஓர் அறை மட்டுமே. அதுவும் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாகக் காட்சியளித்தது. தோளில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பையைக் கழட்டி கட்டிலில் வைத்தான். அருகிலிருந்த பாட்டிலில் கடைசிச் சொட்டு தீரும் ...
மேலும் கதையை படிக்க...
அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த ...
மேலும் கதையை படிக்க...
அன்று வீடு அமர்க்களப்பட்டது . திவ்யா நாணமும், புன்சிரிப்புமாய் அமர்ந்திருக்க, தங்கை நித்யா அவளை கிண்டலடித்து சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள். 'அக்கா, நீ இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருக்க...... டாலடிக்கிற போ' 'ச்சீ போடி' என சிணுங்கினாள் திவ்யா. திவ்யாவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள். ...
மேலும் கதையை படிக்க...
Cry of Buddha
பிறகு
திருப்புமுனை
திற
இனி எல்லாம் சுகமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)