வா… சுகி!

 

இவள் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் எகக் கூட்டம் விபத்தா? ஊர்வலமா? மேடைப் பேச்சா? வேடிக்கை பார்க்கும் இந்தக் கூட்டத்துலு நிச்சயமாக ஓர் அறிவு ஜீவி ஒளிந்திருப்பான்.

ஆட்டோ நின்றுவிட்டது. ஆட்டோ ஓட்டுநர் விசாரிக்க இறங்கிப் போனார். இவள் காத்திருந்தாள். வாழ்க்கையையே காத்திருப்பில் கழிப்பவளுக்கு இந்தக் காத்திருப்பு விநாடிகள் பாரமாகத் தெரியவில்லை. திரும்பி வந்த ஆட்டோக்காரர் கூறிய செய்தி இதுதான். ஸ்கூட்டர் ஆக்ஸிடண்ட்.. குடி மயக்கத்தில் வண்டி ஓட்டியவர் நடு வீதியின் ஸ்கர்ட்டிங்கில் மோதியதால் தூக்கி எறியப்பட்டு…

வா... சுகி

இவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள். எத்தனை விளம்பரங்கள் குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகரங்கள்… சிகரட்டும் மதுவும் வாழ்வை அழிக்கும் என்கிற எச்சரிக்கை அறிவிப்புகள்… யார் வாசகங்களைப் பார்க்கிறார்கள்?

அரைகுறை ஆடையில் ஆடும் நடனமாதுவின் ஆபாச அங்க அசைவுகளில் கண்களையும் கருத்துக்களையும் பதிக்கிறவர்கள் ஃப்ளாஷ் செய்திகளையா பார்க்கப் போகிறார்கள்? காமம் இருக்கும் கண்களில் கருத்துக்களா பதியப் போகின்றன? “வெற்றி என்பது பெற்றுக் கொள்வது தோல்வி என்பது கற்றுக் கொள்வது’ – என்பார்கள்.
நாம் கற்றதும் பெற்றதும் எதுவும் இல்லை. எப்படியோ ஆட்டோக்காரர் அந்தக் கூட்டத்தின் நடுவில் நீந்திக் கடந்து மெல்ல சென்று கொண்டிருந்தார்.

இவள் திரும்பிப் பார்த்தாள். விபத்துக்குள்ளானவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஸ்ட்ரெச்சரிலிருந்து வெளியே வந்து விழுந்த அந்தக் கைகள்…? அதில் அணிந்திருந்த அந்த மோதிரம் அந்தக் கை…? இவள் நம்பிக்கையுடன் கைப்பற்றிய அதே கரம்..? அந்த மோதிரம்…? இவள் டிஸைன் பார்த்துச் செய்து பரிசளித்த அதே மோதிரம்… பவள மோதிரம்.

“உங்களுக்கு செவ்வாய் தசை. ஏழில் செவ்வாய் இருந்தால் களத்திர தோஷம்… களத்திரம்னா மனைவி நான் நல்லா இருக்க வேண்டாமா? அதான் இந்த மோதிரம்…’

“தோஷம் உனக்கில்லை எனக்கு…’

“எப்படி?’

“உன் பேர் வாசுகி. வாசுகின்னா பாம்பு, விஷமுள்ள பாம்பு. இனிமே உன்னை வா… சுகின்னு பிரிச்சுக் கூப்பிடப் போறேன். தோஷம் தீரும்.’ அவர்கள் சிரித்தார்கள்.

“என்னம்மா, கூப்பிட்டீங்களா?’

ஆட்டோக்காரர் கேட்டார். சட்டென்று தன் நிஜ நிலைக்கு வந்தாள் இவள்.

“ஓ… ஒண்ணுமில்லை.. பழக்க தோஷம்…’

ஆட்டோ வேகம் எடுத்தது.

“என்ன முடிவு பண்ணினே?’

“இன்னும் முடிவு பண்ணலை.’

“நீ டாஜ் பண்றே?’

“இல்லை தீபக் என்னை நம்பு… எனக்குக் கொஞ்சம் டயம் கொடு…’

“எதுக்கு டயம்? முடிஞ்சுபோன பழைய வாழ்க்கையை உன்னாலே அழிக்க முடியலை அப்படித்தானே?’

“இல்லை தீபக், பழைய வாழ்க்கை அழிஞ்சு போச்சு.. ஆனா சில நினைவுகள் இன்னமும் மிச்சமிருக்கு. எல்லாத்தையும் துறந்து வரக் கொஞ்ச நாளாகும்.’

“டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினே… ஆறு மாச செபரேஷன் பீரியட் முடியப் போகுது. இந்தக் கால அவகாசம் போதாதா?’

இவள் பேசவில்லை. “நீ ஏதோ முடிவோட இருக்கேன்னு நினைக்கிறேன்.’

“இல்லை முடிவும் முதலும் அந்த அந்த இடத்திலே தான் இருக்கு. ப்ளீஸ் ஒரு வாரம் டயம் தா’

“சரி அடுத்த சன்டே இதே டயம் வருவேன். முடிவு உன் கையில், நல்ல முடிவோடு காத்திரு’

காத்திருப்பது எனக்குப் பழக்கமானது தான்.

எதிரி எப்போதும் எதிரிதான். நண்பன் தான் பரிசீலிக்கப்பட வேண்டியவன் என்பார்கள். புன்னகைத்துப் பார்த்தால் நட்பு கிடைக்குமாமே… இவளின் ஒவ்வொரு புன்னகைக்கும் கிடைத்தது நட்பல்ல துரோகம். தன் கணவன் தன்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக நினைத்தாள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் கிடைத்த பதில்தான்…? தேவயானி. இவள் இந்திரன் மகள் அல்ல.. ஆனால் தந்திரமாக இவள் வாழ்வில் புகுந்தவிட்ட சாரைப் பாம்பு.
நாகமும் சாரையும் இணைந்த பின் இவள் ஏன் நடுவில் புக வேண்டும்? விலகிவிட்டாள். நட்பு உறவாகி, உயிராகி உடலால் ஒன்றுபட்ட பின்புதான் தனித்து நின்ற அவலம் புரிந்தது. கள்ளம் என்று வந்துவிட்டபின் இல்லம் இனிக்குமா என்ன? டூர், தனிமை ஏகாந்த ஏக்கம், இடையில் கிடைத்த நட்பு, இதம்… இனிமை, இப்படிப் பல காரணங்கள் சொல்லலாம்.

இதே காரணங்கள் எல்லோருக்கும் உண்டல்லவா? தேவயானி அவனுக்காகப் பரிந்துரை செய்ய வந்தாள். பேச வந்தவளை வாசலோடு அனுப்பி வைத்தாள். இவள் கணவனுக்கு வக்காலத்து வாங்க அவள் யார்? முதலிடமும் இரண்டாம் இடமும் எதற்காக மோதிக் கொள்ள வேண்டும்?

அன்றே குடும்ப நலக் கோர்ட்டுக்குப் போனாள்.

இன்று…

கோர்ட் வழங்கிய ஆறு மாதப் பிரிவின் கெடு முடிகிறது. இந்நிலையில்தான் கூடப் பணிபுரிந்த தீபக்கின் அறிமுகம். காலத்திற்காக இருவரும் காத்திருந்த நேரம் அது. இன்று முடிவு இவள் கையில். இவளின் ஆன்மா விலை போகும் நேரமா? அன்று ஞாயிறு தீபக் வரும் நாள். இவள் முடிவெடுக்க வேண்டிய கடைசி நேரம்.

காலிங்பெல் கூப்பிட்டது.

கதவு திறந்தாள்.

வந்தது?

தேவயானி…

“வா… வாங்க’ குழறினாள்.

“இல்லை, நான் உள்ளே நுழையலை, வாசலோடவே போயிடறேன். என்னை “வா’ன்னே கூப்பிடற உரிமை உங்களுக்கு உண்டு. உங்க உரிமையை உங்ககிட்ட ஒப்படைக்க வந்தேன்…’

இவள் வாசலை எட்டிப் பார்த்தாள்… ஒருவேளை…?

“அங்கே யாருமில்லை அக்கா, அவர் என் மனசிலே இருக்கார். நீங்க அவருக்கு பரிசா தந்த பவள மோதிரத்தை உங்ககிட்ட ஒப்படைக்கத்தான் வந்தேன். ஆஸ்பத்திரியிலே எங்கிட்டே கழட்டிக் கொடுத்துட்டாங்க. ஏன்னா இறந்து போனவங்க உடைமைகளை சொந்தக்காரங்க கிட்டத்தானே ஒப்படைக்கணும்.

ஏற்கெனவே இதைப் பத்தி அவர் எங்கிட்டே நிறையச் சொல்லி இருக்கார். அவரையே உங்ககிட்ட ஒப்படைக்க வந்த என்னைத் தடுத்துட்டீங்க. தப்புதான்… ஆனா ஒரு நாள் கூட அவர் என் கூட சந்தோஷமா இல்லை, இது சத்தியம்.

உங்களை நினைச்சு அழுவார். இதோ இந்த மோதிரத்தை முத்தமிடுவார். உங்களை நினைச்சு நினைச்சுக் குடிச்சுக் குடிச்சு கடைசியிலே…’

தேவயானி தொடர்ந்தாள்.

“கடைசி நேரத்திலே கூட இந்த மோதிரத்தை அவர் கையிலே இருந்து கழட்ட முடியலை. அடிபட்டு விரல் வீங்கி.. கடைசியில் மோதிரத்தை வெட்டி… மன்னிச்சுடுங்க அக்கா… அவர் ஞாபகார்த்தமா எங்கிட்டே எதுவும் இல்லை… ஆனா சில நாட்கள் கூட வாழ்ந்த நினைவுகள் இருக்கு. நினைவுகளில் வாழ்வதிலும் வாழ்க்கை இருக்கு அக்கா….’

தேவயானி போய்விட்டாள். வாசுகியின் விஷம் அவனைத் தீண்டிவிட்டதா?

தீபக் பைக்கில் வந்து இறங்கினான்.

உன் முடிவு உன் கையில்.

ரத்தம் தோய்ந்த பவள மோதிரம் இவள் கையில். ரத்த சாட்சியாக கூட வாழ்வதில் மட்டும் வாழ்க்கை இல்லை. நினைவுகளோடு வாழ்வதிலும் வாழ்க்கை இருக்கிறது. இவள் தீபக்கை சலனமின்றி வரவேற்கத் தயாராகிறாள்.

- ஜூலை 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
வேலை
அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன? ""என்னால இந்த ஆபீஸிலே வேலை செய்ய முடியாது. நேத்து வந்த பய எல்லாம் அதிகாரம் பண்றான். எனக்குக் கீழே இருந்தவன் எல்லாம் எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
பிறந்த நாள்
வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. "ஹேப்பி பர்த் டே டு நேத்ரா' என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட... "ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்'. கற்பகத்தின் மகள் நேத்ரா. பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் ...
மேலும் கதையை படிக்க...
தாயாகி வந்ததொரு தனிக் கருணை!
""என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?'' அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு போட்டுக் கொண்டிருந்த பானு நிதானமாகச் சொன்னாள். ""ஆமா உங்கம்மாவுக்கு சிஷ்ரூசை செய்ய நான் வேலையை மாத்திக்க முடியாது'' கோபத்தை அடக்கிக் கொண்டு அசோக் சொன்னான். ""சேர்ந்து இருந்தா ...
மேலும் கதையை படிக்க...
அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று பாயஸமோ, சர்க்கரைப் பொங்கலோ, இல்லை ஏதாவது ஒரு சித்ரான்னமோ படைப்பாள். பயபக்தியாகக் கற்பூர ஆரத்தி வரை காத்திருந்து, பட்டாபிஷேக ராமருக்கு ...
மேலும் கதையை படிக்க...
காதல் மொழி விழியா? விலையா?
ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. இவள் ...
மேலும் கதையை படிக்க...
வேலை
பிறந்த நாள்
தாயாகி வந்ததொரு தனிக் கருணை!
கண்டேன் ராகவா!
காதல் மொழி விழியா? விலையா?

வா… சுகி! மீது ஒரு கருத்து

  1. Usha Jagadish says:

    அருமையான சைட். ரொம்ப நன்றி. இனிக்க இனிக்க திரட்டிப்பால் சாப்பிட்ட திருப்தி. இன்னும் படிக்க வேண்டி ஆசை. முழு novel இது மாதிரி படிக்க ஆசை. upload செய்ய முடியுமா. Will be thanking you profusely if you can do that also. Thanks a lot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)