வாஸக்டமி

 

எனக்கும் மேகலாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் நேற்றுடன் முடிந்தது.

மேகலா என் அக்காவின் மகள். நான் அவளுக்கு மாமா முறை. என்னை மாமா என்றுதான் கூப்பிடுவாள். என்னைவிட பத்து வயது சிறியவள். கணவன் என்கிற அந்தஸ்தைவிட மாமா என்கிற அக்கறைதான் என்மேல் அவளுக்கு அதிகம்.

அவள் என்னைவிட அழகானவள். துடிப்பானவள். அவளுக்கு நிறைய நண்பிகள், நண்பர்கள் உண்டு. அனைவரிடமும் கலகலப்பாக பேசுவாள். அவர்களுடன் முகநூல், வாட்ஸ்ஆப்பில் எப்போதும் தொடர்பில் இருப்பாள். பெரும்பாலான வேலைகளை தன்னுடைய ஸ்மார்ட் போனிலேயே முடித்துக் கொள்வாள். கெட்டிக்காரி.

நாங்கள் குடியிருப்பது நங்கநல்லூரில். நான் சென்னை ஏஜி ஆபீஸில் பணி புரிகிறேன். வீடு விட்டால் ஆபீஸ்; ஆபீஸ் விட்டால் வீடு; ஹிந்து பேப்பர்; டிவியில் நியூஸ் என நான் உண்டு என் வேலை உண்டு என்று நேர்கோட்டில் தேமேன்னு வாழ்பவன்.

எங்களுடைய பத்து வருட மண வாழ்க்கையில், இரண்டு பையன்கள்; ஒரு பெண் குழந்தை. கடைசியாகப் பிறந்த பெண் குழந்தைக்கு எட்டு மாதங்கள்தான் ஆகிறது.

என் இல்லற வாழ்க்கை என்கிற சிறிய படகு பிரச்னை எதுவும் இல்லாமல் சுகமாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள் என் மூத்த மகனுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் மூர்த்தியிடம் அழைத்துப்போய்க் காண்பித்தேன். டாக்டர் எனக்கு தூரத்து உறவு.

“என்ன முரளி, உனக்கு இரண்டு பையன்கள்தானே?”

“மூணாவதா இந்த மார்ச் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு டாக்டர்.”

“மூணு போதும் நிறுத்திக்கொள்… இந்தக் காலத்தில் எல்லாரும் ஒரு குழந்தையோட நிறுத்திக்கிறா…”

நான் பதில் சொல்லாது மையமாகச் சிரித்தேன்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை என்னிடம் வந்து வாஸக்டமி செய்துகொள்.”

“என் ஒய்ப்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுவிட்டு போன் பண்ணுகிறேன் டாக்டர்…”

“யார்… மேகலாதானே! நான் சொல்லிக்கொள்கிறேன் அவளிடம், நீ சண்டே எட்டு மணிக்கு வந்துவிடு.”

வீட்டுக்கு வந்து மேகலாவிடம் சொன்னேன். நான் வாஸக்டமி செய்து கொள்வதில் மேகலாவுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவளுக்கு வாஸக்டமி பற்றி விளக்கமாகச் சொல்லி சம்மதம் பெற்றேன்.

ஞாயிற்றுக்கிழமை டாக்டர் மூர்த்தியிடம் சென்று வாஸக்டமி ஆபரேஷன் செய்துகொண்டேன். ஆனால் மேகலாவுக்கு மட்டும் ஏனோ நான் ஆபரேஷன் செய்துகொண்டது பிடிக்கவில்லை. ஒரு மாதிரியாகவே இருந்தாள்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும்…

ஒரு ஞாயிறு காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பாத்ரூமில் மேகலா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று என்ன என்று பார்த்தேன்.

வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவியபடி, “ஊரிலிருந்து அப்பா அனுப்பிய வேர்க்கடலையை நிறையத் தின்றுவிட்டேன்.” என்றாள்.

சிறிது நேரத்தில் மறுபடியும் வாந்தி எடுத்தாள். எனக்கு கவலையாகிவிட்டது. அருகிலிருந்த லேடி டாக்டரிடம் அவளை அழைத்துச் சென்றேன்.

லேடி டாக்டர் சொன்ன விஷயத்தில் என் மூச்சே நின்றுவிட்டது.

மேகலா குழந்தை உண்டாகி இருக்கிறாளாம். எனக்குத் திகைப்பாக இருந்தது, இது எப்படிச் சாத்தியம்? குழப்பத்துடன் வீட்டுக்கு வந்தோம்.

இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. டாக்டர் மூர்த்தி வாஸக்டமி ஆபரேஷனில் கோட்டை விட்டுவிட்டாரா? அல்லது மேகலா ஏதாவது தப்பு செய்துவிட்டாளா? என் மனம் புழுங்கியது.

எனக்கு மிகவும் நெருக்கமான ஆபீஸ் நண்பன் ஜெயராமனிடம் ரகசியமாக என் தவிப்பைச் சொன்னேன்.

“முரளி…யானைக்கும் அடி சறுக்கும். மிஸ்டேக் டாக்டர் மூர்த்தியின் ஆப்பரேஷனில்தான். மனசை போட்டுக் குழப்பிக்காதே. முதலில் அந்த டாக்டரைப் போய்ப்பார்” என்றான்.

மறுநாளே லீவு போட்டேன். மேகலாவிடம் டாக்டர் மூர்த்தியைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

பயந்துகொண்டே டாக்டர் மூர்த்தியைப் போய்ப் பார்த்தேன்.

“என்ன முரளி….எப்படியிருக்கே?”

தயங்கியபடி, “டாக்டர் மூன்று மாதங்கள் முன்னாடி உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டேனே!” என்றேன்.

“என்ன ஆபரேஷன்?”

“வாஸக்டமி..”

“சரி, இப்போ அதுக்கென்ன?”

எனக்கு கைகளும், கால்களும் லேசாக நடுங்கின.

“நவ் மை ஒய்ப் மேகலா இஸ் கேரியிங் டாக்டர்… இஸிட் பாஸிபிள்?”

“வெரி வெரி ரேர்… ஆனா வாஸக்டமிக்குப் பிறகு ஒரு ஆளுக்கு ட்வின்ஸ் பொறந்ததா ஒரு மெடிகல் ஜேர்னல்ல படிச்சிருக்கேன். இதுக்கு நீ என்ன சொல்ற?”

நான் தெம்புடன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“டோன்ட் வொரி…இப்பவே செமன் எடுத்து டெஸ்ட் பண்ணிடலாம்.”

என்னிடம் ஒரு கண்ணாடி ப்ளேட்டைக் கையில் கொடுத்து, பாத்ரூம் போகச் சொன்னார்.

பத்து நிமிடங்கள் கழித்து ஏராளமான வியர்வையுடன் வெளியே வந்து டாக்டரிடம் கண்ணாடிப் ப்ளேட்டைக் கொடுத்தேன். ‘கண்றாவி இதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி பண்ணது…’ மனதுக்குள் பொருமினேன்.

டாக்டர், என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு, ப்ளேட்டுடன் சோதனைக் கூடத்திற்குள் சென்றார்.

பத்து நிமிடத்தில் வெளியே வந்து, “ஸாரி முரளி…ஐ யாம் ரியலி ஸாரி…நான் செய்த ஆபரேஷன் சரியில்லை. அதற்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

எனக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.

வியர்வையைத் துடைத்தபடியே, “பரவாயில்லை டாக்டர், ஏதோ என்னோட போறாத நேரம், இப்படியொரு அவஸ்தை…” என்றேன்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு மனதில் நன்றி சொன்னேன்.

“நல்லவேளை உடனே என்னிடம் வந்து டெஸ்ட் பண்ணிப் பார்த்துவிட்டாய். அப்படி என்னிடம் வராமல் உன் பெண்டாட்டி மேல் சந்தேகப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நான் செஞ்ச தப்புக்கு ஒரு குடும்பத்தையே சந்தேகப் பேய் ஆட்டிப் படைத்திருக்குமே! மை அப்பாலஜீஸ்…”

டாக்டரிடம் நன்றிகூறி விடை பெற்றுக்கொண்டேன்.

மேகலாவை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

சந்தோஷத்துடன் வீட்டை நோக்கி விரைந்தேன்.

பையன்கள் கூடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை தூளியில் தூங்கியது.

மேகலா பெட்ரூமில் படுத்திருப்பது தெரிந்தது. கூப்பிட்டேன். பதில் இல்லை. அருகில் போய்ப் பார்த்தேன். கண்கள் மூடி இருந்தன. அவள் பகலில் படுக்கவே மாட்டாள். எனக்குள் திடீரென ஒரு உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. உடனே அவளைத் தொட்டு உலுக்கினேன். உலுக்கியபோது அவளருகில் இருந்த ஒரு சிறிய காலி பாட்டில் உருண்டு விழுந்தது.

அடப்பாவி, விஷம் குடித்திருக்கிறாள்.

இடது கையில் ஒரு சிறிய காகிதம் மடித்து வைத்திருந்தாள்.

அவசரத்தில் அதை எடுத்து சட்டைப் பையில் திணித்துக் கொண்டேன்.

பதட்டத்துடன் மேகலாவின் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தபோது மெல்லிய சுவாசம் இருந்தது. உடனே விரைந்து அவளை பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தேன்.

டாக்டர் என்னிடம், “விஷத்தால் குழந்தை இறந்துவிட்டது. நல்லவேளை, நீங்கள் ஒரு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் உங்கள் மனைவி பிழைத்திருக்க முடியாது.. பெரிய உயிரை மட்டும்தான் எங்களால் காப்பாற்ற முடிந்தது… ரிசப்ஷனில் வெயிட் பண்ணுங்கள்” என்றார்.

ரிசப்ஷனில் அமர்ந்திருந்தபோது, அவள் மடித்து வைத்திருந்த காகிதம் நினைவுக்கு வர, சட்டைப் பையிலிருந்து அதை நிதானமாக எடுத்து பிரித்துப் படித்தேன்.

“நான் ஒழுக்கம் கெட்டு சோரம் போய்விட்டேன் மாமா. என்னை மன்னித்துவிடுங்கள்…” 

தொடர்புடைய சிறுகதைகள்
காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம் சேர்ந்து காளிமுத்துவை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன. சென்னையில் வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும் ஹோட்டல்கள் என்னென்ன, எந்தப் பகுதிகளில் இருக்கின்றன என்பதெல்லாம் காளிமுத்துவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்தில், 'காதம்பரி இன்டஸ்ட்றீஸ் சேர்மேன் அன்ட் மானேஜிங் டைரக்டர் சுகுமார் மாரடைப்பால் மரணம்' என்ற செய்தியைப் படித்த டாக்டர் வத்சலா அதிர்ந்து போனாள். உடம்பு பதறியது. சுகன்யாவின் நிலமையை எண்ணி கலக்கமுற்றாள். சுகன்யா... டாக்டர் வத்சலாவின் க்ளினிக் பெங்களூரில் ...
மேலும் கதையை படிக்க...
மாலை மணி ஏழு. கட்டிலின் மீது அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர். அவனுக்கு இப்போது ரிசல்ட் தெரிந்து விடும். அதனால் மிகவும் பதட்டத்துடன் இருந்தான். அலுவலகம் விட்டு அப்போதுதான் திரும்பிய ரூம்மேட் ரமணன், “என்னடா மச்சி ரூம்லேயே அடைஞ்சு கிடக்க...உன் லவ்வு ஊத்திக்கிடுச்சா, நீ ...
மேலும் கதையை படிக்க...
மாரிமுத்து வாத்தியார் இறந்துவிட்டாராம். ஊரிலிருந்து என் நண்பன் சுடலைமுத்து மொபைலில் போன் பண்ணிச் சொன்னான். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சென்னையிலிருந்து உடனே திம்மராஜபுரத்திற்கு கிளம்பினேன். மாரிமுத்து வாத்தியாரிடம்தான் நான் படிக்கும்போது நல்ல பண்புகளையும், சிந்தனைகளையும் கற்றுக்கொண்டேன். அவரால் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். ...
மேலும் கதையை படிக்க...
அபிதாவுக்கு சம்யுக்தா அக்காதான் எல்லாமே. அவளுடைய அப்பா ஸ்ரீரங்கம் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் நாற்பது வருடங்களாக அதே வேலையைச் திரும்பச் திரும்பச் செய்து ரிடையர்ட் ஆனவர். அதன்பிறகு தற்போது அனைவரும் சென்னை வாசம். அவர் செய்தது அம்மாவுடன் ஒழுங்காக குடித்தனம் நடத்தி நான்கு பெண்களைப் ...
மேலும் கதையை படிக்க...
கடைசி விலை
வாடகைத் தாய்
மயில் கழுத்து நிறப் புடவை
அஞ்சலி
முனைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)