வாழ்க்கை மரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 11,214 
 

“மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள்.

மஞ்சுவுக்கு வேதனைக்குள்ளும் சிரிப்பு ஊடுருவியது. அம்மாவுக்குத்தான் எத்தனை விடா முயற்சி.

அவளுக்கு நம்பிக்கையில்லை எத்தனையோ வரன்கள் வந்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுப் போய் லெட்டர் எழுதுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவர்களை இன்றுவரை காணவில்லை.

இன்று வரும் மாம்பலத்துக்காரன் மட்டும் என்ன வரதட்சணை கேட்காமலா மஞ்சுவின் மனசுக்காக சம்மதம் சொல்லப் போகிறான்.
ஒரு மணி நேரம் மானேஜரிடம் பர்மிஷன் கேட்டதும், அலுவலகம் முழுவதும் அனுதாபப் பார்வை பார்த்தது. சே! இது என்ன பிழைப்பு! சலிப்பும், கோபமும் அவளை எரித்தது.

சிந்தனையோடு அவள் நடந்தாள். எதிரில் வந்த கார்த்திக்கை அவள் பார்க்கவில்லை “என்ன மஞ்சு சீக்கிரம் கிளம்பிட்டே,” கார்த்திக் கேட்டான்.
கார்த்திக் பக்கத்துத் தெரு பட்டதாரி. நல்ல சிநேகிதன். அவரவர் பிரச்னைகளை மனம் விட்டுப் பேசிக் கொள்வார்கள். நம்பிக்கைக்கு உரியவன், வழக்கம்போல்தான் இன்னைக்கு மாம்பலத்துக்காரர். அது சரி நீ எங்கே இங்கே?”

“அப்ளிகேஷன் அனுப்பிட்டு வரேன்.”

“கார்த்திக் நீ அப்ளிகேஷன்னு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது நேற்றைய ஹிண்டு பேப்பரிலே உனக்குத் தகுந்த மாதிரி ஓர் அப்பாயிண்ட்மெண்ட் பார்த்தேன்.”

“ஆமாம் மஞ்சு, நான்கூட இன்னிக்கு மாட்ரி மோனியலில் உனக்குத் தகுந்தாற்போல் வரன் பார்த்தேன்.

“கார்த்திக்…’ பதற்றத்துடனும் கோபத்துடனும் நிமிர்ந்து அவனைப் பார்த்த மஞ்சுவின் உதடுகள் துடித்தன.

‘ஸாரி… மஞ்சு உன்னை காயப்படுத்தணும்கிறதுக்காக இதை நான் சொல்லலே. இரண்டுமே கண்துடைப்புத்தான்னு சொல்ல வரேன். இரண்டுக்குமே பணம்தான் தேவையே தவிர, தகுதியும் திறமையும், அழகும், அல்ல. ஆனா ஒண்ணு நாம இரண்டு பேருமே கரைசேரப் போறதா எனக்குத் தோணலை வருத்தத்துடன் சொன்னான்.

“ஆமா… கார்த்திக் படிக்கிற காலத்தில் எலந்த மரத்திலே நாம இரண்டுபேரும் சேர்ந்து தானே கல்லெறிவோம். அதே நிலை இப்பவும் தொடருது பார்த்தியா?’

“அதுல ஒரு விஷயம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே மரத்திலே கல்லெறிஞ்சதினாலே ஒருத்தருக்கு பழம் கிடைச்சா ஒருத்தர் பகிர்ந்துகிட்டோம். ஆனால் இது அப்படியல்லவே நீ கல்யாணமரத்துக்கும், நான் வேலை மரத்துக்கும் இல்ல கல்லெறிகிறோம்.

அவன் பேச்சின் யதார்த்தம் அவளை சடாரென்று நிமிர வைத்தது. நெஞ்சு அடைத்துக் கொண்டது . “வாஸ்தவம்!” குரல் கிணற்றிலிருந்து வருவதுபோல் ஒலித்தது.

“சரி,… மஞ்சு உனக்கு நேரமாகிவிட்டது. பெஸ்ட் ஆப் லக் நான் வரேன் “ போனான்.

அவன் போய்விட்டாலும் மஞ்சுவின் மனசு மாத்திரம் அவன் பேசிய பேச்சிலேயே நின்றது.

அம்மாவுக்காக மாப்பிள்ளை வீட்டார் முன் வந்து வணங்கினாள்.
வழக்கம்போல், போய் எழுதுகிறோம் பதில் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாமல் அம்மா அழுதாள்.

“நானே வருத்தப்படாத போது நீ ஏம்மா அழறே! உன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும் அதுதானே. உன் கடமையிலிருந்து நீ தவறலேன்னு ஊருக்குக் காட்டணும் அதுதானே, இரு நான் போய் மாப்பிள்ளையை தேடிட்டுவரேன். உன் திருப்திக்காக நான் திருமணம் செய்து கொள்கிறேன் கவலைப்படாதே.”

அவள் தீர்மானத்துடன் எழுந்து போனாள். தன் எதிரில் நின்றவளைப் பார்த்து திகைத்தாலும் பின் சமாளித்து கேட்டான் கார்த்திக்.

“அடேடே மஞ்சுவா? என்ன இந்த நேரத்திலே? ஏதாவது உதவி வேணுமா?”

“உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன். வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

“என்ன மஞ்சு புதிர் போடறே, விஷயத்தைச் சொல்லு?”

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா கார்த்திக்!”

“மஞ்சு… நீ… என்ன சொல்றே!” அதிர்ந்தான் கார்த்திக்.

“நீ ஒண்ணும் பேச வேண்டாம். நீ எறிஞ்ச கல்லுக்கு என்னிடமும், நான் எறிஞ்ச கல்லுக்கு உன்னிடமும் தகுதியிருக்கு. வாழ்க்கையை பகிர்ந்துக்குவோமே கார்த்திக். நீ விரும்பலையானா நான் கட்டாயப்படுத்தலே. மற்றவர்களைப் போல யோசிச்சுச் சொல்றேன்னு சொல்ல உனக்கும் உரிமை இருக்கு என்ன சொல்றே?”

அவன் பிரமை பிடித்தவனாய் நின்றான்.

“ஒரு நல்ல சிநேகிதியை, மனைவியா ஏத்துக்கிறதான்னு நீ யோசிக்கிறது புரியுது கார்த்திக். என்ன செய்ய அம்மாவுக்காகவாவது நான் திருமணம் செய்து கொண்டே ஆகணும், தெரியாதவனை விட தெரிந்த நீ தேவலாம்னு நினைச்சுத்தான் கேட்டேன் தப்பா இருந்தா மன்னிச்சுடு; நான் வரேன் கார்த்திக்”

எழுந்த அவன் கையைத் தன் கைகளுக்குள் பற்றிக் கொண்ட கார்த்திக் “உன்னிஷ்டம் மஞ்சு”. என முணு முணுத்தான்.

– தினமணிகதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *