Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வானவில் வாழ்க்கை

 

“ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று கிடைத்து விட்டது.

வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும் சோறு, மாமரத்து ஊஞ்சல் எல்லாம் போரடிக்க ஆரம்பித்து விட்டது.

எல்டிசி என்றால் எனக்கு மாயவரம் தான். அங்கேதான் என் அம்மாவைப் பெற்ற தாத்தா இருக்கிறார். பூர்வீக வீடு இருக்கிறது. மூன்று கட்டு வீடு. உள்ளே நுழைந்து விட்டால் செல்போன் சிக்னல் கூடக் கிடைக்காது. அவசர அழைப்பு என்கிற பெயரில் வங்கி நிர்வாகம், என் விடுப்பை பாதியில் முறிக்க இயலாது.

அதோடு கூடப் படித்த சின்னச்சாமி தகவல் தெரிந்தவுடன் ஓடோடி வருவான். கையில் மல்லாட்டை மூட்டையும் அப்போது பறித்த மாவடுகளும் இருக்கும்.

சின்னச்சாமி நாலாப்பு வரை என்னோடு படித்தவன். பேர்தான் சின்னச்சாமி. ஊரில் அவன் பெரிய சாமி. அவன் அப்பா அந்த காலத்திலேயே தலையாரி! இவனும் கையெழுத்து போடவும் நாலு எழுத்து படிக்கத் தெரிந்தால் போதும் என்று கல்வியை விட்டு விட்டான். அதோடு சரசுவை அவன் காதலித்ததும் ஒரு காரணம்.

சரசு! உள்ளூர் பலசரக்குக் கடை கோவிந்தனின் மகள். பெரிதாக சாதி வித்தியாசம் இல்லை. கொஞ்சம் வசதி வித்தியாசம் இருந்தது. சரசு தான் தன் மனைவி என்றான, பின் சின்னச்சாமி தன் வீட்டுக்கு வேண்டியவைகளையும், தன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு வெண்டிய பொருட்களையும் கோவிந்தன் கடையிலேயே வாங்குவான். என்னையும் அங்கேயே வாங்கச் சொல்வான்.

சின்னச்சாமி சரியாக ஒரு மணிக்குத்தான் கோவிந்தன் கடைக்குப் போவான். அப்போதுதான் கோவிந்தன் சாப்பிட வீட்டிற்குப் போவார். சரசு கடையில் இருப்பாள்.

சின்னச்சாமிக்கு கடையின் பொருட்கள் இருக்குமிடம் அத்துப்படி! மேல் வரிசையில் இருக்கும் பொருட்களையே முதலில் கேட்பான். இழுத்து செருகிய பாவாடையுடன் சரசு மேலேறி எடுக்கும்போது வாளிப்பான அவளது இடுப்பில் அவனது கண்கள் மொய்க்கும். அவன் கிறங்கிப் போவான்.

சரசுவுக்கும் அவனது பார்வை தெரியும். ஆனாலும் அவளுக்கு என்னமோ அது பிடித்திருந்தது. சின்னச்சாமியின் காதல் தனக்குப் பிடிக்கிறது என்பதை அவள் எப்படி சொல்வாள்? வேறு எப்படி? பொருட்களோடு கொஞ்சம் ஆரஞ்சு மிட்டாய் கட்டி வைப்பாள். மறுநாள் அதை திருப்பும் சாக்கில் சின்னச்சாமி அந்த பொட்டலத்தில் கொஞ்சம் மல்லாட்டை போட்டு வைப்பான்.

காலப்போக்கில் சின்னச்சாமிக்கு கல்யாண வயது வந்ததும், டவுன் வியாபாரியின் மகள் பேசி முடிக்கப் பட்டதும் நடந்தது.

சின்னச்சாமி தீர்க்கமாக சொன்னான்.

“ உள்ளூர் யாவாரி இருக்கும்போது டவுன் யாவாரி எதுக்கு? எனக்கு சரசுவைப் பிடிச்சிருக்கு. தோதுபடுமான்னு அவ அப்பாவைக் கேளுங்க”

“ யாரு? சரசுவா? லட்சுமியாட்டம் இருக்குமே பொண்ணு “ என்று ஆதரவு கொடுத்தாள் அப்பம்மா! அதுக்கு அப்புறம் எதிர்ப்பு இல்லை. கோவிந்தன் கடை நிர்வாகம் இப்போது சின்னச்சாமி கையில். மதிய சாப்பாட்டிற்கு அவன் வீட்டிற்கு போவதில்லை. கடைப் பையனே அதை இங்கு கொண்டு வந்து விடுவான். ஏன்? சின்னச்சாமிக்கு வயது வந்த இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்!

“ மைசூர் பக்கம் தான்.. ஆனா மூணு மணிநேரம் பயணிச்சாதான் சேர முடியும்“

ஒரு வாரத்தில் அந்த ஊரைப்பற்றி முழு விவரமும் விரல் நுனியில் வைத்திருந்தாள் செல்லம்மா.

“மலை கிராமமாம்.. பழமும் தேனும் மலிவாக் கெடைக்குமாம்”

“ ஆனா அரிசி சோறு கெடைக்காது.. அதுக்கு மலையிறங்கி நாப்பது கிலோமீட்டர் போகணுமாம் “ என் கவலை எனக்கு.

“ அதென்னங்க பிரமாதம்.. மூட்டையா வாங்கிப்போட்டா அது பாட்டுக்கு கெடக்குது.. “ எனக்கு முன்னால் போய் விடுவாள் போல அவளுக்கு ஆர்வம் கொப்பளித்தது.

அரங்கல் துர்க்கம் என்று பெயர் கொண்ட அந்த மலைக் கிராமத்தில் ஏன் வங்கிக் கிளை திறந்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது புள்ளி விவரக் கணக்கில் பின் தங்கிய மலைக்கிராமங்களில் வங்கிச் சேவை என்று ஏதோ ஒரு நிதி அமைச்சர் மைய மக்கள் மன்றத்தில் படித்திருக்கலாம். அதை நிறைவேற்ற திறக்கப்பட்டிருக்கலாம்.

நாற்பது மைல் மலைப்பாதையில் வளைந்து வளைந்து கொண்டு போய் சேர்த்தது நாங்கள் போன ஜீப்.

“திண்டி ஏதும் சிக்கல்லா.. கீளே போனா ஒந்து ஓட்டல் இதே.. இட்லி சென்னாகிதே.. அஷ்டே!”

வழி நெடுக இது மாதிரி அரிய தகவல்களைத் தந்து பீதீயை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார் ஜீப் டிரைவர் பெத்தண்ணா. மலைப்பாதைப் பயணத்தை விட, அவர் சொன்ன தகவல்களே வயிற்றைப் புரட்டி எடுத்தது.

ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்ததாக இருந்தது அந்த வீடு. ஒரு தேர்ந்த ஓவியனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த, ஒரு தலை சிறந்த ஓவியம் போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது, பின்னால் தெரிந்த நீல வானம். முதல் பார்வையிலேயே, மனதினை அள்ளிக் கொண்டு போவதான ஒரு தோற்றம். சிறிய படிகள் தரையிலிருந்து அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றன. அந்த வீட்டைப் பொறுத்தவரையில், என்னை முதலில் ஈர்த்த விசயம் அதன் கூரையில் கட்டப்பட்டிருந்த ஒரு வெண்கல மணிதான்.

முன்னால் பணியிலிருந்த மேலாளர் அந்த வீட்டை எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், நான் குடும்பத்தோடு அங்கு வந்து சேர்ந்தேன். குடும்பம் என்றால், என் துணைவி செல்லம்மாள், பத்து வயது மகள் சௌபர்ணிகா, இரண்டு வயது அப்பு குள்ளன், அறுபது வயதான என் தாயார்.

அந்த வீட்டைக் கட்டியவன் ஒரு சிறந்த ரசனைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படிகள் வெள்ளை நிறப் பூச்சு அடிக்கப் பட்டிருந்தன. அந்தக் குன்றின் தன்மைக்கு ஏற்றவாறு அவை வளைந்து நெளிந்து மேலேறின. கொஞ்சம் எட்டி நின்று பார்க்கும் போது, பச்சைப் புல்வெளி நடுவில் ஒரு ஓடை ஓடுவது போலவே அவை காட்சியளித்தன.

சாமான்கள் போட்டது போட்டபடி இருக்க, வாண்டுகள் வீட்டைச் சுற்றி வர ஆரம்பித்தார்கள். கூடவே சரமாரியான கேள்விகள். அப்பு மழலை வினாடி வினாவே நடத்திவிட்டான்.

அந்தப்பக்கமாகப் போன சில பழங்குடியினர் நின்று, நிதானித்து, தயங்கி, ஏறிட்டார்கள். தூணுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு, அப்பு எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சௌபா பெரியவள். உள்ளூர பயம் இருந்தாலும், ஓட எத்தனிக்கும் கால்களுடன், கதவருகில் நின்றிருந்தாள்.

பழங்குடியினர் வண்ண மயமான ஆடைகளில் இருந்தார்கள். சிவப்பு அவர்களது விருப்பத்திற்கேற்ற நிறமாக இருந்தது. ஆண்கள் மேலாடை இன்றி திறந்த மார்புடன் காட்சியளித்தார்கள். உழைப்பு அவர்களது உடலில் திரட்சியான தசைகளாக மாறி இருந்தது. பெண்கள் மார்பினை மறைக்கும் கச்சைகளும், சிறிய பாவாடைகளும் அணிந்திருந்தார்கள். அவர்கள் மாராப்பு மறுக்கப் பட்ட சமூகத்தவர் என்பது பார்வையிலேயே புரிந்தது..

ஏதோ மொழியில் பேசினார்கள். கன்னடம் போலிருந்தது அது. என் மனைவி பெங்களூர்காரி. “ செல்லம் “ என்றழைத்தேன் நான். “ என்னங்க “ என்றபடியே ஒரு கையில் கரண்டியுடன் வந்தாள் அவள்.

“ என்னாவோ பேசறாங்க. கன்னடம் மாதிரியிருக்குது “

சிறிது நேரம் உற்றுக் கேட்டுவிட்டு “ அது கன்னடம் இல்லைங்க. துளு” என்றாள். அவள் குரலில் ஒரு மகிழ்ச்சி துள்ளல் தெரிந்தது. கொஞ்ச நேர உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் போய்விட்டார்கள். செல்லம் ஏகப்பட்ட தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளே வந்தாள்.

நான் சன்னல் வழியாக அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒற்றை வரிசையில் அவர்கள் நடந்து போவது, சரிவில் ஒரு சர்ப்பம் நெளிந்து போவதைப் போலவே இருந்தது.

மாலை நான்கு மணியிருக்கும். மதிய உணவும், உணவுக்குப் பின்னான உறக்கமும் ஒரு வித மந்த உணர்வைக் கொடுத்திருந்தது. நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்க்கப்புறம் இம்மாதிரி மாலைகள் எனக்குக் கிடைக்குமா என்று சந்தேகம். அதனால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

வாசற்படிகளுக்கு முன்னால் இரண்டு மூன்று நாற்காலிகளைப் போட்டுக் கொண்டு உட்காரும் அளவிற்கு கொஞ்சம் இடம் இருந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய வீடாயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்களது வீடுகளில்தான் இது போன்று ·ஃபோயர் என்று ஒரு இடம் இருக்கும். அந்த இடம் மாலையின் ரம்மியத்தை அனுபவிக்க சிறந்த இடமாகத் தோன்றியது. குழந்தைகள் குதூகலத்தில் துள்ளிக் கொண்டிருந்தார்கள்.

“என்னா? என்னமோ பேசிகிட்டிருந்தயே. யாராம் அவுங்க. எங்கிருக்காங்களாம்“ என்றேன்.

“ பக்கத்து கிராமமாம். மலசாதி சனங்க. முன்னால ஒரு பொண்ணு நின்னுகிட்டிருந்திச்சே. அதும்பேரு கங்கம்மா. வூட்டு வேலைக்கு வரட்டுமான்னு கேட்டுச்சு. நாளையிலேர்ந்து வரச் சொல்லியிருக்கன்.”

“ முன்ன பின்ன தெரியாத ஊரு. எப்படி வூட்டுக்குள்ளாற வுடறது “ என்றாள் அம்மா.

“ சூது வாது தெரியாத வெகுளி சனங்க. என்னாத்த எடுத்துப்பிட போறாங்க. “

அம்மா வாயடைத்துக்கொண்டாள்.

ஆமா! மேலே மணி ஒண்ணு இருக்குதே. இன்னாத்துக்காம். “

“ஆனையெல்லாம் நடமாடற எடமாம் இது. ராவுல இப்படி அப்படி போவுமாம். அதனால் வாச வெளக்கை அணைக்கக் கூடாதுன்னு கங்கம்மா சொல்லிச்சு. ஆளில்லாத வூடுன்னா ஆனை புகுந்துடுமாம்.”

எனக்கு கொஞ்சம் உதறலெடுத்தது. பழைய மேலாளர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. வெளி மாடத்தில் இரவு எப்பொழுதும் விளக்கேற்றி வைப்பார்கள் அவர்கள் வீட்டில். எல்லாம் ஆனை பயம்தான். விளக்கெரிப்பதற்கென்றே மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணை பழங்குடியினரிடம் கிடைக்குமாம். அதன் வாசனையில் ஆனைகள் வராதாம்.

தீடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. அதை மழை என்று கூட சொல்ல முடியாது. கொஞ்சம் தூறல் நிறைய காற்று. ஆனாலும் நகரவாசிகளான எங்களுக்கு இது கூட மழைதான்.

ஆதவன் மலை முகடுகளின் பின்புறம் மறைந்து கொண்டிருந்தான். ஆயிரம் கரங்களுடைய வீரன் ஒருவன், தன் உருவிய வாட்களை உறைகளில் இட்டுக் கொண்டே, பின்வாங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது அது. உலகத்துடனான அன்றைய போர் முடிந்து விட்டது அவனுக்கு. ‘இன்று போய் நாளை வா’ என்று உலக மக்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அவன் தன் இருப்பிடத்திற்கு போகிறான்.

திடீரென்று ஒரு வானவில் பளிச்சென்று தோன்றியது வானில். ஒரு பிரம்மாண்ட திரையில் ஒரு அறுபதடி ஓவியன் தன் வண்ணங்களை தீற்றிக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது அது. அதன் ஊடாக பெரிய காதுகளை உடைய ஒரு யானை மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தது.

“ ஆனை “ என்றான் அப்பு குள்ளன்.

“ மள ‘ என்றாள் என் கான்வெண்ட் மகள்.

“ மழை “ என்று திருத்தினேன் நான்.

“ அவ நாக்குல வசம்பை வச்சி தேக்கணும் “ என்றாள் என் மனைவி.

“ சின்ன வயசிலேர்ந்து பாக்கை அள்ளிப் போட்டுக்கும். படிக்கிற புள்ள பாக்கு துன்னக்கூடாதுன்னு தலைபாடா அடிச்சிகிட்டேன். கேட்டுச்சா. இப்ப நாக்கு தடிச்சி போச்சி. எப்பிடி ள வரும் “ என்றாள் அம்மா.

பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. எந்த வசம்பை வைத்து என் அம்மா நாக்கில் தேய்ப்பது. 

தொடர்புடைய சிறுகதைகள்
பட்டினப்பாக்கத்திலிருந்து கோட்டூர்புரம் செல்லும் போது பேருந்தில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலைக் பலமுறை கடந்திருக்கிறான். உள்ளே எப்படி இருக்கும் என்கிற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை. அதெல்லாம் அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் பெயர் தனசேகர். தான்யா என்கிற புனைப்பெயரில் ஏதாவது ...
மேலும் கதையை படிக்க...
பால்ய சிநேகிதன் சாரதிதான் சொன்னான்: “ நம்ம கூட படிச்சானே கண்ணன்? அவன் ரொம்ப மோசமான நிலையிலே இருக்கானாம். “ என் நினைவுகள் தன் கோப்புகளைப் புரட்ட ஆரம்பித்தது. சட்டென்று என் நினைவுக்கு வரவில்லை கண்ணன் என்பதை என் முகம் காட்டிக் கொடுத்தது. “ என்னடா ...
மேலும் கதையை படிக்க...
சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, யாசிக்காத வைராக்கியம் அவரை இன்னும் படுக்கையில் கிடத்தி விட்டது. இருந்த ஒரே ஓட்டுவீட்டின் வாசற்திண்ணையில் யாராவது கொஞ்சம் அரிசி ...
மேலும் கதையை படிக்க...
தனாவின் ஒரு தினம்
வளையம்
ஆலிங்கனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)