Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வாடகை வீடு

 

வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக் கடக்கும்போது, உயிர் ஒரு நிமிடம் உதறல் எடுத்து ஓய்ந்தது. நல்லவேளை, கதிர் அவளது கையைப் பற்றி இருந்தான். பிரதான வீதியில் இருந்து அந்த அபார்ட்மென்ட் இருக்கும் சிறு வீதியினுள் இறங்கியதுமே ஆசுவாசமாக உணர்ந்தார்கள்.

அதற்கு, சாலையின் இருமருங்கில் இருந்தும் கிளைக் கைகளை நீட்டி ஒன்றையன்று பற்ற முயன்றுகொண்டு இருந்த மரங்கள் காரணமாக இருக்கலாம். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்துவிட்டு திடீரென நினைத்துக்கொண்டாற்போலக் காற்று இலைகளை விசிறியது. வெயிலில் வந்த களைப்பை, காற்றின் தடவல் துடைத்துப்போட்டது. இத்தனை அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக நல்லதொரு வீடு கிடைக்கவிருக்கும் நிம்மதி கதிரின் முகத்தில். வீடு தேடி அலைந்த இந்த மூன்று வாரங்களில் அவன் மேலும் இளைத்துவிட்டதுபோல் இருந்தது சுமதிக்கு.

வீட்டுச் சொந்தக்காரர் இரண்டு மணிக்கு வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். கதிர், வேலைக்கு அரை நாள் லீவு சொல்லிவிட்டு வந்திருந்தான். இந்த வீட்டை மூன்று நாட்களுக்கு முன் வந்து பார்த்திருந்தார்கள். காவலாளியிடம் சாவி இருந்தது நல்லதாகப் போயிற்று. வாடகை உட்பட எல்லா வகைகளிலும் வீடு பிடித்திருந்தது.

அபார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தார்கள். காவலாளி அரைத் தூக்கத்தில் இருந்தார். பின்மதியங் களுக்கே உரித்தான சோம்பலும் வெயிலும் வீதியை வெறிச்சிடப் பண்ணியிருந்தன.

இப்போது இருக்கும் வீட்டைவிட்டு வரவே மனதில்லை சுமதிக்கு. இந்த மூன்று வாரங்களில் 30 தடவையாவது அதைக் குறித்து வருந்தி இருப்பாள். தனி வீடொன்றின் முதல் தளம். அகலமான வராந்தாவும் வெளிச்சம் வாழும் அறைகளும் வேம்புகள் இழைந்து இழைந்து செல்லம் கொஞ்சும் பால்கனியுமாக அந்த வீட்டை எங்கோ கிராமத்தில் இருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து வைத்தாற்போல் ஒரு நிறைவு. காலையில் நாற்புறம் இருந்தும் ஜன்னல்கள் வழியாக வெயில் இறங்கி வந்து கோலமிடும் அழகே தனி. கூப்பிடு தூரத்தில் கடல். மழைக் காலத்திலே அலைகள் சளக்சளக் என்று கரை மோதும் சத்தம் வீடு வரை கேட்கும். விடிகாலையில் படுக்கை அறையை ஒட்டி இருந்த பூவரசில் குருவிகள் கெச்சட்டமிடும் ஓசை இடைவிடாமல் ஒலிக்கும். அங்கிருந்து கிளம்பி கடற்கரைச் சாலையில் கால் மிதித்த பிறகே, நகரத்தின் பைத்தியப் பரபரப்பை உணர முடியும்.

எல்லா சுகங்களும் கதிரை கே.கே.நகர் அலுவலகத்துக்கு இடம் மாற்றும் வரைதான் நீடித்தது. இரண்டு மாதங்களாகப் பேருந்தில்தான் அலுவலகம் போய் வருகிறான். அண்மைய நாட்களில் பயணக் களைப்பு அவனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டு இருக்கிறது. வெயில் காலத்தில் பேருந்துகள் நெருப்பினால் வேயப்பட்ட தகரச் சிறைகளாகக் கொதித்தன. அனல் உலைகளாக ஆளை உருக்கின. முன்பெனில் வேலையில் இருந்து திரும்பியதும் புத்தகத்தோடு அமர்ந்துவிடுவான். இப்போதோ ஓரிலையும் ஆடாமல் மௌனத் தவம் இயற்றும் மரங்களை, புல் கருகி அனல் பறக்கும் வெளியை வெறிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டு இருக்கிறான். பிறகு, மாலை கருகியதும் தூங்க ஆரம்பிப்பவன் இரவு ஒன்பதரைக்கே எழுந்திருக்கிறான். இரவு உணவு முடிந்ததும் மறுபடியும் தூக்கம். அவனுக்கு மிகப் பிடித்தமான புத்தகங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.

சுமதிக்கு வருத்தமாக இருந்தது. நிரம்பவும் யோசித்த பிறகு அவள்தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

“நாம வேணா கே.கே.நகர் பக்கமே போயிடலாங்க.”

அவனது கண்கள் மலர்ந்து முகம் விகசித்தது. “உனக்கொண்ணும் சிரமம் இல்லையே?”

“எனக்கென்னங்க, புள்ளைங்களுக்குக்கூட நல்ல பள்ளிக்கூடம்லாம் அங்க இருக்காம்.”

அவனது முகத்தில் எப்போதாவது மலரும் அந்த அபூர்வமான புன்னகை பரவியது. சிரிக்கும்போது அழகாகத் தோன்றாத மனிதர்கள் இல்லவே இல்லை என்று சுமதி நினைத்துக்கொண்டாள். கல்யாணமான புதிதில் அவள் வீட்டில்கூடக் கேட்டார்கள். “என்னது, ஒம் புருசன் சிரிக்கிறதுக்கும் பேசுறதுக்கும் காசு கேப்பாராக்கும்?”

‘பேசி என்ன வாழ்ந்தது?’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். சொல்லவில்லை. ஒரு சிரிப்போடு நகர்ந்துவிட்டாள். பேச்சு பெரும்பாலான சமயங்களில் பாவனைப் பூச்சுக்களோடு இருப்பதை அவள் அறிவாள். சளசளவென்று பேசுவதைவிட பேசாமலே இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. விளக்குகள் அணைத்தும் அணைக்கப்பட்டுவிட்ட பிற்பாடு இரவு சிந்தும் மெல்லிய ஒளியில் அவன் மார்பினுள் ஒடுங்கும் நேரம், கூந்தலுள் நுழையும் அந்த விரல்கள் சொல்லாததையா வார்த்தைகள் வெளிப்படுத்திவிடப்போகின்றன? நோய்வாய்ப்பட்டு மரணத்தின் கத்தி நூலிழையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, அருகிருந்து இரவெல்லாம் ஒளி சிந்திக்கொண்டு இருந்த கண்களின் கனிவொன்று போதாதா அவளுக்கு? அவன் அதிகம் பேசுவதில்லை என்பதில் அவளுக்கு ஒரு குறையும் இல்லை.

அவன் அதிகம் பேசிச் சிரிக்கும் ஒரே நபர் உண்டென்றால், எப்போதாவது கிராமத்தில் இருந்து வந்து போகும் சுப்பிரமணியுடன்தான். தமிழ் சினிமாக்களில் காண்பிப்பதுபோல அவன் பலாப்பழத்தோடோ, வாழைத்தாரோடோ வந்து இறங்குவது இல்லை. புத்தகங்களாக அள்ளிக்கொண்டு வந்து சேர்வான். சிறு வயது முதற்கொண்டு சிநேகிதன்.

“இதைப் படிச்சுப் பாருடா மாப்ள. ஐயோ! என்னமா எழுதிஇருக்கான்.”

அந்த ‘ஐயோ’வின் பரவசம் கண்களின் மினுக்கத்தில், உதடுகளின் துடிதுடிப்பில், தனக்குப் பிடித்த பக்கத்தைப் பிரித்துப் பிடித்த விரல்களின் மெல்லதிர்வில் தெரியும். “புத்தகம் படிக்கிறது இருக்கட்டும்டா… ஒம் பேர்ல இருக்கிற பிள்ளையைத் தூக்கிடலாமா? அதென்ன சுப்பிரமணியம்பிள்ளை?” – வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பான்.

“அது கெடக்கு மாப்ள, ஒம் புள்ளைகளுக்குக் கல்யாணம் காட்சின்னு வரும்போது சாதி குறுக்க வரும்லா… அப்ப பேசிக்கிறேன்.”

“சாதியென்ன பூனையா குறுக்க வர்றதுக்கு? என் ரெண்டு பிள்ளைங்களும் யாரைக் கூட்டிட்டு வந்தாலும், அவங்க என் மருமகள்கதான்.”

‘இவரு என்ன உலகந் தெரியாத ஆளா இருக்காரு’ என்று சுமதி நினைத்துக்கொள்வாள். ஆனாலும், ‘உலகந் தெரியாத’ ஆட்கள்தான் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிறையத் தெரிந்தவர்கள் அல்லது அப்படிப் பாவனை பண்ணுகிறவர்கள் ஏதோ சேட்டை பண்ணுகிற குரங்கைப் பிடித்துத் தலையில் ஏற்றிவைத்துக்கொண்டு இருக்கிறவர்களைப்போல விழி பிதுங்கித் திரிவதைக் கண்டிருக்கிறாள்.

அவன் ஒற்றைப் பிள்ளை. ஊரில் சொந்த வீடு இருந்தது. சென்னைக்கு வந்ததில் இருந்து ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரை சாவி கையில் வாங்கும்போது பார்த்ததுதான். முதலாம் திகதி தவறாமல் வாடகைப் பணம் வங்கிக் கணக்குக்குப் போய்விடுகிறது. எப்போதாவது தொலைபேசியில் ‘இன்னும் அங்கேதான் இருக்கீங்களா?’ என்பதாக ஒரு குரல் கேட்கும். அவருடனான தொடர்பு அவ்வளவே.

இந்த வீடு தேடும் படலம் ஆரம்பித்ததில் இருந்து அவன் கண் எதிரில் விரிந்த உலகம் அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. வாடகை விளம்பரங்கள் வரும் பத்திரிகையில் இருந்து சில தொலைபேசி இலக்கங்களைக் குறித்துவைத்துக்கொண்டு அழைத்தான். முதலாவது அழைப்பிலேயே கசங்கிவிட்டது முகம்.

“வெஜ்ஜா… நான் வெஜ்ஜா? அதை மொதல்ல சொல்லுங்கோ. அப்பறம் வீட்டைப்பத்திப் பேசலாம்” என்றார் தொலைபேசியை எடுத்தவர்.

“நான் வெஜ்தாங்க.”

“நான் வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு குடுக்க முடியாது”- முகத்தில் அறைந்தாற்போல வந்தது பதில்.

அவன் படக்கென்று தொலைபேசியை வைத்துவிட்டான். “ஏதோ அவர் வீட்டை எம் பேருக்கு எழுதிக் குடுக்கச் சொல்ற மாதிரில்ல பேசுறாரு.”
“கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம் பக்கம்லாம் பிராமின்ஸ்தான் நெறையப் பேர் இருக்காங்க” என்றாள் சுமதி.

“இப்பிடியா பதில் சொல்றது? எல்லாத்துக்கும் ஒரு வகை முறை உண்டில்லையா?” என்றான் அவன். குரல் சுரத்திழந்து இருந்தது.

“தனி வீடா? அபார்ட்மென்ட்டா?” சுமதி கேட்டாள்.

“அபார்ட்மென்ட்தாம்மா.”

அடுத்துப் பேசியவரின் குரல் அத்தனை தன்மை. “வந்து பாருங்களேன்… பிடிச்சிருந்தா முடிச்சுடலாம்” என்றார்.

தனி வீடு. இரண்டு பெரிய அறைகள், இரண்டு குளியலறைகள், கிணற்றடித் துவை கல். வாடகை 12 ஆயிரம் சொன்னார். தென்னை ஒன்று குனிந்து கிணற்றைப் பார்த்துக்கொண்டு இருந்தது. துவை கல்லில் சுமதி தன் பால்ய நாட்களைக் கண்டாள். குழந்தையின் குதூகலத்துடன் அதில் அமர்ந்து பார்த்தாள்.

“பிடிச்சிருக்குங்க” – கதிர் இறந்த கால ஞாபகங் களில் மினுங்கும் சுமதியின் கண்களைப் பார்த்தபடி சொன்னான்.

“சரி, வீட்டுக்குப் போய் யோசிச்சிட்டு போன் பண்ணுங்க” என்றார் அவர்.

அன்றிரவே தொலைபேசியில் அழைத்தார்கள். அவரது தொனி மாறிப்போய் இருந்தது.

“வேற பார்ட்டி 13 ஆயிரத்துக்குக் கேக்குறாங்க… உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க எடுத்துக்குங்க.”

“விளம்பரத்துலயே 12 ஆயிரம்னுதான போட்டிருக்கீங்க?”

“இப்ப எல்லாம் விலை ஏறிப்போச்சு. வீட்டு வாடகை மட்டும் அப்பிடியேவா நிக்கும்?”

“மொதல்ல சரின்னீங்க?”

“ஆமாம் சரின்னேன். இப்ப இல்லைங்கிறேன்.”

கதிர் தொலைபேசியைப் பட்டென்றுவைத்தான். ‘பேராசை… பேராசை’ அவனது உதடுகள் முணுமுணுத்தன. கிணற்றின் ஆழத்தில் விழுந்துகிடந்த தென்னங்கீற்று முளைத்தெழுந்து வந்து கழுத்தைச் சுற்றிக்கொள்வதாக சுமதி விடிகாலையில் கனவு கண்டாள்.

மரங்களுக்காக மனம் ஏன் இத்தனை ஏங்கிச் சாகிறது என்று அவள் தன்னையே கடிந்துகொண்டது உண்டு. எத்தனை பார்த்தும் சலிக்காத, பச்சைக் காற்றில் மென்னடனிக்கும் நளினம், வெள்ளி வெயிலில் பகட்டி அழைக்கும் சாகசம், மழைக் காலத்தில் இலைகளின் அதீதப் பச்சையைக் கடித்துச் சாப்பிட்டுவிடலாம்போல் இருக்கும் அவளுக்கு.

நான்கு நாட்களுக்கு முன்னால் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது என்று பார்க்கப் போனார்கள். போகும் வழியில், முகப்பில் பெரிதாகப் பெயர் பொறிக்கப்பட்ட அந்த அபார்ட்மென்ட் தென்பட்டது. வாசலில் அத்தனை மரங்கள். ‘டு லெட்’ என்று எழுதப்பட்ட அட்டை, மரம் ஒன்றின் இடுப்பில் தொங்கியது.

“கேட்டுப் பாக்கலாம்ப்பா.”

“இங்கெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது சுமதி” என்றவன், ஏமாற்றம் கவியத் தாழ்ந்த அவளது கண்களில் சரிந்தான். ‘நாம வேலைக்குப் போயிடுறோம் அவதான நாள் முழுக்க வீட்ல இருக்கப்போறவ’ என்ற நினைவு பிடரியில் உந்த, அந்தக் கட்டட வளவினுள் நுழைந்தான்.

வயதான காவலாளி தொப்பியைத் தலை மேல் அழுத்திக்கொண்டே எழுந்து வந்தார்.

“இங்க வாடகைக்கு வீடு இருக்கா சார்?”

“ஆமா இருக்கு. நீங்க நான் வெஜ் சாப்பிடுவீங்களா?”

“ஆமாங்க, அப்பப்ப சாப்பிடுவோம். ரொம்பல்லாம் இல்லை.”

“அப்ப கெடைக்காதுங்க.”

“ஏன்?”

“இங்க 120 வீடு இருக்கு. அதுல 90 பர்சன்டேஜ் பிராமின்ஸ். இந்த ஹவுஸ் ஓனர் பிராமின் கெடயாது. ஆனா, பிராமின்ஸ் தவிர வேற யாருக்கும் வாடகைக்குக் குடுக்கக் கூடாதுன்னு இங்க இருக்கிறவங்க சொல்லிஇருக்காங்க சார். அவர் என்ன பண்ணுவார் பாவம்” – காவலாளி தொப்பியைக் கழற்றிக் கையில் எடுத்தபடி மீண்டும் அந்த நாற்காலியில் போய் அமர்ந்து அசிரத்தையாக வீதியை வெறிக்க ஆரம்பித்தார்.

“கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்” – கதிர் குறுகிப்போனவனாக உணர்ந்தபோதிலும் அருகில் போய்க் கேட்டான்.

“எனக்கு நல்லாத் தெரியுங்க சார். இங்க நான் நாலு வருஷமா வேலை பாக்குறேன். நீங்களாவது பரவால்ல, எப்டியாச்சும் வீடு கிடைச்சுடும். இந்த சினிமால வேலை பாக்கிறவங்க, சிலோன்காரங்க, முஸ்லிம் பாய்ங்க இவங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு எடுக்கப் படுற பாடு இருக்கே” – பழி தீர்ப்பதுபோலக் காய்ந்துகொண்டு இருந்த வெயிலைப் பார்த்தபடி சொன்னார். காங்கை பறந்தது.

பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே சுமதியின் கற்பனையில் அந்தக் காவலாளி எப்போதாவது நடந்து திரியும் மரமாக மாறித் தெரிந்தார். ஒரே இடத்தில் இருந்துகொண்டே இருப்பதைக் காட்டிலும் கொடுமை என்ன இருக்கிறது?

அசோக் நகரில் இருந்து சுமதியோடு பேசிய பெண்ணுக்கு சிநேகிக்கும் குரல். அந்தக் குரலுக்குரிய முகத்தை அதைப் பார்க்காமலே நேசிக்க முடிந்தது. ‘தோ… நாம பல்லாங்குழி ஆடுனதை மறந்துட்டியா?’ என்று செல்ல அதட்டல் போடுகிற குரல்.

“வீடு உங்களுக்குத்தான? புரோக்கர்ஸ் இல்லையே?”

“இல்லைங்க எங்களுக்குத்தான்…. ஒரு விசயம் கேக்கணும்.”

“கேளுங்க.”

“ஒங்க வீட்ல நான் வெஜ் சமைக்கலாம் இல்லையா?”

“ஓ யெஸ். தாராளமா மேல ரெண்டு வீடு. கீழ ரெண்டு வீடு. கீழ் வீட்ல ஒண்ணுதான் காலியா இருக்கு.”

“எதிர் போர்ஷன்ல யார் இருக்காங்க?” சுமதி தயங்கியபடி கேட்டாள்.

“அவங்க பிராமின்ஸ்தான். ஆனா, நீங்க ஒங்க வீட்ல என்ன சமையல் பண்ணாலும், அவங்க கண்டுக்க மாட்டாங்க. ரொம்ப நல்ல டைப்.”

கதிரிடம் சொன்னபோது ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் வேண்டாம் என்றான். “அவங்களுக்குப் பிடிக்காத வாடையை அவங்க சகிச்சுக்கிட்டு இருக்கணும். நமக்கும் சமையல் பண்ணும்போதெல்லாம் உறுத்தலா இருக்கும். அது சரியா வராது.”

அத்தனை அலைச்சலுக்குப் பிறகு இந்த வீடு கிடைக்கவிருப்பதில் இருவருக்கும் மகிழ்ச்சியே. வீதி நெடுகிலும் மஞ்சள் பூக்களை உதிர்த்தபடி மரங்கள் நின்றன. இரவு எட்டு மணிக்குப் பிறகு அந்தத் தெருவில் கதிரோடும் குழந்தைகளோடும் நடந்துபோவது மனதின் திரையில் அடிக்கடி தோன்றி மறைந்துகொண்டு இருந்தது.

மணி இரண்டைத் தாண்டிவிட்டது. வெயிலை ஊடுருவி வீதியைப் பார்த்துச் சலித்திருந்தன கண்கள். கதிரின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த ஆவலின் ஒளி மங்கி இருந்தது. சுமதிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குப் போய்விடலாமா என்றிருந்தது. ஊரில் வயல் இருக்கிறது. சோற்றுக்குப் பஞ்சம் இல்லை. பிள்ளை களின் படிப்பு…

ஓர் அடர் சாம்பல் நிற கார் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தது. காவலாளி எழுந்து ‘சல்யூட்’ வைத்தான். காரில் இருந்து இறங்கியவர் வெயில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். உயரமும் அகலமுமான மனிதர். முகத்தில் பணத்தின் செழுமை தெரிந்தது. இவர்கள் அருகில் போனதும் கதிரின் பெயரை விளித்துக் கைகுலுக்கினார்.

“முதலாம் தேதி வீடு ரெடியாகிடும். வொய்ட் வாஷ் பண்ணிக் குடுத்துடுறேன்” என்றார்.

“ரொம்ப அலைஞ்சுட்டோம் சார்” என்றான் கதிர் பொதுவாக. குரலில் அத்தனை களைப்பு.

“இந்த ஏரியால வீடு கிடைக்கிறது கொஞ்சம் சிரமந்தான். எனக்கும் குடும்பமா நல்ல ஆட்களாக் கிடைக்கணுமேன்னுதான் இத்தனை நாளா வந்தவங்களை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தேன். நான் புரோக்கர்ஸ்ட்ட ஒரேயரு கண்டிசன் போட்டிருந்தேன்.”

“என்ன சார் அது?”

“பாய்ங்களுக்கு, அதாங்க முஸ்லிம்களுக்கு வீடு காட்டக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன்.”

கதிரின் முகம் சுருங்கியது. அவனது உணர்ச்சியற்ற கண்ணாடிக் கண்கள் அவரை ஒருகணம் வெறித்துப் பார்த்தன. சுமதி அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாள். அலைந்த அலைச்சல்களெல்லாம் நினைவில் வந்தன. அதற்குள் கதிரிடம் இருந்து அந்த வார்த்தைகள் புறப்பட்டு வந்து விழுந்துவிட்டன.

“உங்க வீடு வேண்டாங்க.”

அவர் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போனவராக ஒரு கணம் நின்றார். மறுகணம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். திகைப்பில் இருந்து கோபத்துக்கு மாறிக்கொண்டு இருந்தது முகம். அவரைத் தாண்டிக்கொண்டு கதிர் வெளியே வந்தான். அவனது கைகள் சுமதியின் கைகளை இறுகப் பற்றின. ஏதோ பிரளயத்தில் இருந்து தப்பித்து ஓடுபவனைப்போல பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகவேகமாகப் போனான்.

மதியவேளையாதலால் இருக்கைகள் காலியாக இருந்தன. ஏறி அமர்ந்துகொண்டபோது உடலும் மனமும் பிடித்து உலுப்பினாற்போல் இருந்தன. உலகம் சட்டெனக் குறுகிச் சிறுத்துவிட்டதுபோலவும் அதில் எல்லோரும் பூச்சிகளாக மாறி ஊர்ந்து திரிவதுபோலவும் கதிர் உணர்ந்தான்.

“நான் பஸ்லயே வேலைக்குப் போய்ட்டு வந்துடறேன்மா. எனக்கொண்ணும் சிரமமில்லை… எல்லாம் பழக்கந்தான!”

அவள் அவனது விரல்களைப் பிடித்து தனது மெலிந்த கைகளுக்குள்வைத்து அழுத்திக்கொண்டாள். வேப்ப இலைகள் இழைந்து அழைக்கும் பால்கனியைப் பிரியவேண்டியது இல்லை என்ற நினைப்பே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அயர்ச்சியோடு கதிரின் தோளில் சாய்ந்து கண்ணயர ஆரம்பித்தவளின் கனவில் அடித்துப் பொழியத் தொடங்கியது மழை!

யாவும் கற்பனை அல்ல!

- மே 2010 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)