வாடகை மனைவி வீடு….!

 

தன்னந்தனிமையாய் இருக்கும் தன் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறும் ஆளைக் கண்டுவிட்டான் தங்கசாமி.

உடல் குப்பென்று வியர்த்து டாஸ்மாக்கில் கொஞ்சமாய் ஏற்றியபோதை சடக்கென்று இறங்கியது. வேட்டி முனையால் முகத்தைத் துடைத்து……உடன் .உள்ளுக்குள் எழுந்த கோபம், ஆத்திரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து வீட்டிற்குள் சென்றான்.

அறையில் மனைவி கட்டிலில் அமர்ந்து அவள் புடவை, ஜாக்கெட்டுகளை மடித்து இயல்பாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

இவன் அமைதியாய்ச் சென்று அவள் எதிரில் கட்டிலில் அமர்ந்தான். அவள் நேர்த்தியாய் மடித்து அழகாய் அடுக்கி இருக்கும் புடவை ஜாக்கெட்டுகளைப் பார்த்தான். அப்படியே… அவள் மடிப்பதையும் பார்த்தான்.

அவள் இவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் வேலையில் இருந்தாள்.

”சரசு..!” மெல்ல அழைத்தான்.

”சொல்லுங்க..? ”

” நி…நீ பண்ணற காரியம் எனக்குப் பிடிக்கலை. ” தட்டுத்தடுமாறிச் சொன்னான்.

”ஏன் நல்லாத்தானே மடிச்சு ஒழுங்கா அடுக்கி இருக்கேன்.”

”தெரியாது மாதிரி நடிக்காதே. நான் இதைச் சொல்லலை. அர்ஜீனன் இங்கே அடிக்கடி வந்து போற விசயத்தைச் சொல்றேன்.”

”…………………………….”

”வேணாம் விட்டுடு.”

”ப்ச்! வேற பேச்சு பேசுங்க.”

”சரசு…!!!” அவள் அலட்சியம். இவனுக்குள் கோபத்தைத் தூண்டி குரலை உயர்த்தியது.

”எதுக்கு வீண் கோபம்.? என்னைப் போல பொறுமையாய்ப் பேசுங்க. அவர் இங்கே வர்றது போறது என் விருப்பம். ” எழுந்து அருகில் அலமாரியைத் திறந்து மடித்த துணிகளை அடுக்கினாள்.

”இதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லே.?!” சீறினான்.

”வெட்கத்தைப் பத்தி பேச உங்களுக்கு அருகதை இல்லே. அவரை முதன் முதலா எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சதே நீங்கதான்!”

”அது அன்னையோடு முடிஞ்சி போயிருக்கனும். திரும்பத் திரும்பத் தொடரக்கூடாது!”

”அதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? ”

”சொல்லத் தெரியலை. அ…அருவருப்பா இருக்கு…..!” முகத்தைத் திருப்பி வெறுப்புடன் சொன்னான்.

”அட….! இந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம்கூட தெரியுமா ? ”

”சம்பாதிக்கிற திமிர்ல ரொம்ப எகத்தாளமாய்ப் பேசாதே! மரியாதையும் குறையுது!”

”ஓ…! ஆம்பளைக்கான ரோசமும் வருதே. வரப்படாதே! ” வந்து அமர்ந்தாள்.

”சரசு…ஊ!!”

”வீணா அதட்டாதே.! நீ உழைச்சி சம்பாதிச்சி ஒரு பைசாவாவது இந்த குடும்பத்துக்குச் செலவழித்திருந்தால்…எனக்கு இந்த நிலை வந்திருக்காது. இதையும் நானா ஏத்துக்கலை. நீ தேடி கொடுத்தே. வீட்ல வறுமை, கஷ்டமானாலும் அக்கம் பக்கம் கடன் வாங்கி, புருசன் கொடுக்கிறதுதான் ஆம்பளை சுகம்ன்னு உன்னைத்தவிர ஒருத்தனையும் நெனைக்காம சும்மா இருந்தேன். அதையும் கெடுத்தே. வெட்கம், மானம் பார்க்காம யோசிச்சுப் பாரு.” சரசு வார்த்தைகளில் சாட்டை எடுத்துச் சொடுக்கினாள்.

தங்கசாமிக்குள் வலி வர தலை குனிந்தான்.

”நீ நம்ம சாதி, உறவுல படிச்சவன், அழகானவன்னு ஆசை ஆசையாய்க் கட்டிக்கிட்டேன். அந்த ஆசைக்கு அடையாளமாய் ஒன்னுக்கு ரெண்டு புள்ளையையும் கொடுத்தே. பெத்தேன். ஆனா…உடலை வளைச்சி உழைச்சி சல்லி சம்பாதிக்க முடியாம குடும்பத்தை வறுமையில தள்ளி என்னையும் கெடுத்தீயேடா பாவி….! ” சொல்லும்போதே அவள் குரல் உடைந்து நொறுங்கியது.

”ஏய்ய்! அபாண்டாமாய்ப் பேசாதே. நான் உழைக்காமலா இந்த குடும்பம் நடந்துச்சி. நீ புள்ளைங்களெல்லாம் சோறு தின்னீங்க ? ”

”ம்ம்…. சம்பாதிச்சி கிழிச்சே! நான் தினம் கத்தி கத்தி துரத்த, நீ என் தொல்லை தாங்க முடியா நாலு நாளைக்கு வேலைக்குப் போய் நாப்பது நாளைக்கு உடல் வலிக்குதுன்னு வீட்ல சும்மா இருந்தே. சும்மா இருந்த நீயாவது சும்மா இருந்தீயா. பொழுதுக்கும் கதவைச் சாத்தி என்னை ஒரு மனுசின்னு நெனைக்காம மிரட்டி, உருட்டி பொண்டாட்டி சுகம். உழைச்சி களைச்சி வர்ற புருசனோடு இருக்கத்தான் பொண்டாட்டிக்கு ஆசை. வீட்ல தூங்கி, தண்டச் சோறு திங்கிறவ ஆளிடமெல்லாம் அப்படி இருக்க ஆசை வராது. மனசு மட்டுமில்லாமல் உடம்பும் வெறுத்து மரக்கட்டையாய்ப் போகும். அப்படித்தான் இருந்தேன். அதுவும் உனக்குப் பொறுகலை.” நிறுத்தினாள்.

தங்கசாமி தாக்குதல் தாங்க முடியாமல் வெளியேற எழுந்தான்.

”உட்கார்.! செவனேன்னு இருந்தவளை உசுப்பி விட்டுட்டே. எல்லாத்தையும் கேட்டுட்டுப் போ.” சரசு அவனை அதட்டி அடங்கினாள்.

அவனும் வழி இல்லாமல் அமர்ந்தான்.

”ஊரைச் சுத்தும் உதவாக்கரைங்களுக்கெல்லாம் உதவாக்கரை யோசனை, உருப்படாதவனுங்க பழக்க வழக்கம் அதிகமாய் இருக்கும் என்கிற உண்மைக்குத் தக்கப்படி…..உன் யோசனைப்படியோ, இல்லே… எவன் சொல்படியோ… ஒரு பேப்பரைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தே. ”மாசக்கணக்கா மனைவியை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறாங்களாம். பேப்பர்ல போட்டிருக்கான் பாரு!” ன்னு சொல்லி பெரிய யோக்கியன் மாதிரி என் முன்னால அதைத் தூக்கிப் போட்டே. படிச்ச எனக்கு குமட்டுச்சி.”

”ராத்திரி பன்னிரண்டு மணிக்கு டகான்னு என் காலைப் பிடிச்சு, நம் வாழ்க்கைக்கு நீ மனசு வைச்சா மார்க்கமுண்டுன்னு சேதி சொன்னே. அப்போதான் நீ அந்த பத்திரிக்கை எடுத்து வந்த விசயமே புரிஞ்சிச்சி. பத்து நாளாய் மூளைச் சலவை செய்து என்னைச் சம்மதிக்க வைச்சே. புள்ளைங்களுக்கு விசயம் தெரியக் கூடாது என்கிறதுக்காக அதுங்களை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்தே. இப்போ சொல்லு. இந்த வாழ்க்கைக்குக் காரணம் நானா, நீயா ?” பார்த்தாள்.

”……………………”

”உனக்கும் உழைச்சி , ஊரானுக்கும் உழைக்கிற….எனக்கு ஒரு ஆள் வேணாமா ? அதான் அர்ஜூனன்.”

”அர்ஜூனன்! அர்ஜூனன்! பல முறை கண்டிச்சும் நீ அவனை வரவழைக்கிறே. எல்லாரையும் விட அவன் எதுலடி உசத்தி ? ”

”நாசூக்காச் சொல்லனும்ன்னா அவன் எல்லாரையும்விட எனக்குத் திருப்தி. பச்சையாய்ச் சொல்லனும்ன்னா….அவனைத் தவிர நீ உட்பட மத்தவங்களெல்லாம் எனக்குக் குப்பை!.”

சரியான இடி நேரடியாகத் தாக்கியதில் தங்கசாமி நிலைகுலைந்தான்.

தனக்காக தினம் இருக்கும் இவளை, இதையே மூலதனமாக்கி சம்பாதித்தால் என்ன என்கிற யோசனையில் இறங்கியதன் விளைவு… கோரம்!! முதலுக்கே மோசாம் ! தெரிய….

”சரி தொழிலும் வேணாம். எதுவும் வேணாம். அவனும் வேணாம் விடு. நான் சம்பாதிச்சுப் போடுறேன்.” காட்டமாக சொன்னான்.

சரசு அதிரவில்லை. மாறாக….”சந்தோசம்.! எல்லாம் விடலாம். எனக்கு அவன் வேணும்.”

தங்கசாமி அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

”அப்படின்னா நமக்குள் உறவும் வேணாம் ஒட்டுதலும் வேணாம். விவாகரத்து முடிச்சிக்கலாம்.” என்றான்.

சரசு இதற்கும் அதிரவில்லை. ”தாராளமா இப்பவே முடிச்சிக்கலாம். எனக்கு நீ வேணாம்.” பொறுமையாகச் சொன்னாள்.

”என்கிட்ட விலகி அவனோட போய் வாழத் திட்டமா ? ”

”அதை நான் மனசால நெனைக்கலை. அப்படி வாழவும் நான் விரும்பலை. காரணம்….அவர் பொண்டாட்டி புள்ளை உள்ளவர். என்னால அவர் குடும்பம் கெடக்கூடாது. நான் உன்னோட விவாகரத்து ஆகி தனியே போனாலும் இப்போ நாங்க எப்படி இருக்கோமோ அப்படியே வந்து போவார்.”

”இந்த வாடகை தொழில்…? ”

”அதுவும் நடக்கும்.”

”கனவு காணாதே சரசு. கழுத்துல தாலி இருந்தால்தான் அது நடக்கும்.”

”ஏன் ? ”

”ஆம்பளைக்குத் தேவை பாதுகாப்பான தாம்பத்தியம் மட்டுமில்லே. அதுக்கு அடியில் அடுத்தவன் மனைவியை அனுபவிக்கனும், ஆக்கிரமிக்கிறோம் என்கிற ஆசை பிரதானம். தாலி இல்லேன்னா உன்னை எவனும் திரும்பிப் பார்க்க மாட்டான்.”

”அதுக்கு அதுதான் காரணம்ன்னா தானாக் கட்டிப்பேன். பார்க்கிறவனுக்குத் தாலி தெரியுமேயொழிய யார் கட்டினதுன்னு தெரியாது. அவனுக்குத் தேவை அந்த அடையாளம். அதுக்குப் புருசனைக் காட்டனும்ன்னு அவசியசம்ன்னா வீட்டுக்கு எவனாவது ஆம்பளையை வரவழைச்சு சமாளிச்சுக்கலாம். வர்றவன்….கல்யாண ஆல்பம் எடுத்து சரி பார்க்க மாட்டான்.”

சரசு இப்படியெல்லாம் பேசுவாள் என்று தங்கசாமி எதிர்பார்க்கவே இல்லை. இந்த அஸ்திரமும் தோல்வியைத் தழுவ….

”கடைசியாய் இப்போ என்னதான் உன் முடிவு ? ” தன் தோல்வியை மறைக்க வீராப்பை விடாமல் கேட்டான்.

”முடிவு என் கையில் இல்லே தங்கசாமி உன் கையில்தான் இருக்கு.”

திடுக்கிட்டு’ அவளைக் குழம்பமாகப் பார்த்தான்.

”புரியலை…?! சொல்றேன். சின்னவயசிலேர்ந்து நீ சோம்பேறித்தனத்தில் சுகத்தைக் கண்டுட்டே. அது தெரியாமல் நான் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன். இனி நீ உழைச்சி சம்பாதிக்கிறதென்பது முடியாத காரியம். நீ என்னை விட்டு அடுத்தவளைக் கட்டினாலும்….இப்படித்தான் அவளையும் வைச்சு ஏய்த்துச் சாம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுவே. அதுக்கு, நீ இப்பவே எதையும் கண்டுக்காம வழக்கம் போல் இருக்கலாம். உனக்குப் பணத்துக்குப் பணம். எனக்கு அர்ஜூனன்.! அதான் முடிவு.” சொன்னாள்.

மனைவியின் சத்தியபூர்வமான தங்கசாமி செவிட்டில் அறைந்தது.

தோல்வியில் துவண்டு, எதுவும் பேசாமல் மௌனம்….சம்மதத்திற்கு அடையாளமாக வருத்தத்துடன் தலை குனிந்து அறையை விட்டு வெளியே வந்தான்.

‘இந்தக் கசட்டுக் கலாச்சாரம் என் தலையோட போகனும்டா சாமி. புள்ளைங்களைத் தொடரக் கூடாது!’ நினைத்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
'' நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! ...இல்லே ... நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு பேரையும் சுட்டு அந்த காரியத்தைச் செய்யவா. ..? '' - கேட்ட..... வரதராசனுக்கு வயது 50 .சோபாவில் கால்மேல் கால் போட்டு ...
மேலும் கதையை படிக்க...
'' வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! '' - செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில் எங்களைப் போல் ஓய்வு. '' உண்மையா..?? ! '' நம்ப முடியாமல் தகவல் சொன்ன நண்பரைப் உற்றுப் பார்த்தேன். '' சத்தியம்ப்பா...! '' அவர் ...
மேலும் கதையை படிக்க...
' இந்தக் கூடையில் உள்ள வெள்ளரிப் பிஞ்சுகள் இரு நூறு ரூபாய்க்குத் தேறுமா. .? ' - என்று நினைத்து கண்களாலேயே அளந்து பார்த்தான் சிங்காரு. ' தேறும் ! ' என்று மனசு சொல்லியது. ' இதை இரு நூறு ரூபாய்க்கு விற்றால் ...
மேலும் கதையை படிக்க...
மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது, ‘‘ஐயா !’’ பவ்விய குரல் கேட்டு நிமிர்ந்தேன். வெள்ளை வேட்டி சட்டையில் எதிரில் ஐந்தடிக்கும் சற்று குறைவான குள்ள உருவம். கருத்த மேனி. பழகிய ...
மேலும் கதையை படிக்க...
பெரியம்மா இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி விடுவாரென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவள் இறப்பு இத்தனை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சொத்துக்கு எவ்வளவு போட்டி. .? எனக்குள் வியப்பு, திகைப்பு. அப்பா வீட்டுக் கொடுக்கலாம். எதிராளியும் தழைந்து போய் ஒருவருக்கொருவர் சமரசம் ...
மேலும் கதையை படிக்க...
தப்புக்குத் தண்டனை…!
சக்திலிங்கம்..!
பிஞ்சு..!
ரோசம்…
பெரியம்மா சொத்து…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)