கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 18,440 
 

குதிரை கணைத்தபடி சுவரோரம் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. குதிரை மீது குந்தியிருந்த வீரனுக்குத்தான், இடைஞ்சலாய் தலையில் கூரை இடித்தபடி தோள் மீது மக்கிய கருப்பஞ்செத்தைகள் கிடந்தன. சுழி சுத்தம் பார்க்கிறமாதிரி தங்கராசுவும் முருகவேலும் முன்னும் பின்னுமாய் பக்கவாட்டத்தில் வந்து குதிரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குந்தி குந்தி மண்பாண்டங்கள் செய்து கூன் விழுந்த உடம்பு. குனிந்தவாக்கில் இவர்களைப் பார்த்துக்கொண்டே வாசலில் சேற்றை மிதித்துக் கொண்டிருந்தார். காலை வெயிலில் வழுக்கைத் தலை வேர்த்து வடிந்தது. கோவணமும் நனைந்திருந்தது. பக்கத்தில் சுற்றவிட்டு பாண்டங்கள் செய்யும் மண் சக்கரத்தின் மைய்யத்தில், குடித்துவிட்டு மீதம் வைத்த தண்ணீரோடு பித்தளை குண்டு செம்பு கலசமாய் குந்தியிருந்தது.

வெளுத்த தலை. மெலிந்த உடம்பில் ஒப்புக்குத் துணியைச் சுற்றியிருந்த கிழவி. வீட்டுக்குள்ளிருந்து சுடாத சட்டி, பானை, உலை மூடி, உண்டியல், சோடிக் குருவி, அரவான் என வளை தோண்டும் எறும்பாய் வாசலில் ஒவ்வொன்றாய் கொண்டுவந்து வைத்தபடியிருந்தாள். ஒவ்வொரு நடைக்கும் கிழவரையும் குதிரையைப் பார்த்தபடி நிற்கும் அவர்களையும் பார்த்தவள் கடந்து கேட்டாள். “நாலு கடமொளப்புதான். பல்லப்புடிச்சி வேண்ணா பாருங்களன்” சிரித்தாள்.

கிழவர் சேற்றுக் கால்களோடு கிட்ட வந்தார். ஒடிந்துவிடுவதாய் வளைந்திருந்த முதுகில் வியர்வை தேங்கி நின்றிருந்தது. குதிரையை கூரையைவிட்டு எட்ட நகர்த்தி வைத்தார். “இன்னம் சுடுல. அதான் நெறம் மங்கலா இருக்கு.” வீரனின் தோள் மீது கிடந்த செத்தைகளை தள்ளினார்.

சலாபத்தாய் நாலா பக்கமும் சுற்றிப் பார்த்தார்கள். எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத குதிரையின் நேர்த்தி. கழுத்தில் இரு வரிகளாய் சதங்கை வெண்டையங்கள். எடுப்பான நெற்றிச்சுட்டி. சேணம் பூட்டிய நிலையில், நிச ரூபமாய் நின்று கொண்டிருந்தது. குதிரையின் மீது குந்தி இருகைகளாலும் கடிவாளத்தைப் பிடித்திருந்த வீரனின் மீசையில் இருக்கிற வலு உடம்பில் இல்லையென்றாலும், தெறிக்கிற அவன் பார்வை, எதிர்வீட்டுத் தோட்டத்தில் சூளைக்கு குவித்து வைத்திருக்கும் காய்ந்த தென்னம்பாளைகளின் பட்டறையையே எரித்துவிடுகிற மாதிரி உக்கிரம் கொப்பளித்தது.

மௌனமாய் நின்றுகொண்டிருந்த முருகவேலைப் பார்த்து தங்கராசு கேட்டான். “அப்புறம் என்னாடா குதிரலாம் பொருத்தமாதான் இருக்கு.” அலைச்சல் இல்லாமல் வேலை முடிந்த நிறைவில் சொன்னவனை, முருகவேல் அமர்த்தினான். “இருடா அவசரப்படாத. நமக்கு வெறும் குதிரதான் வேணும். வீரன் இருக்கற குதிர இல்ல…”

கிழவனுக்கும் கிழவிக்கும் முகம் செத்துப் போய்விட்டது. சொடுங்கிப் போய் சேற்றின் மீது ஏறினார், கிழவர். வாசலில் காய்கிற பாண்டங்கள் கூடவே தானும் அப்படியே வெயிலில் குந்திவிட்டாள், கிழவி. தங்கராசு ஏமாற்றத்தை மறைக்க பெறாக்கு பார்த்தான். எல்லா வீடுகளின் முன்னாலும் மண்பாண்டங்கள்தான். தண்ணீர் தேங்கிய நடைபாதையில் மேடாக, உடைந்த ஓட்டாஞ்சில்லுகளே மோதாக போடப்பட்டிருந்தன. ஆனால் இந்த கிழவர் வீட்டைத் தவிர, எந்த வீட்டிலும் குதிரை இல்லை. தேக்கமான குரலில், கேட்டான். “என்னா சொல்ற முருகவேலு… வெறுங்குதிரையா..”

“ஆமண்டா. வெறும் குதுரதான்னு காலையில கூட அமுதா சொல்லுச்சி. இத மீறி வீரனோட குதிரய கொண்டுவிட்டுப் போயி நின்னா, அவ்வளவுதான். குதிரையும் நானும் வெளியிலதான் நிக்கணும்” கொஞ்சம் பதற்றமாக சொன்னான்.

“பத்து பவுனுக்கு கம்மியா போடற எடமா பாத்துருந்தா நாம சொல்றத அதுவோ கேக்கும். நொள்ள நாலு முந்திரிச் செடி இருக்குங்கறதுக்காக முப்பது பவுனுக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் ஆசப்பட்டுட்டம். வெளியில நின்னுதான் ஆவணும். “நேரங்காலம் தெரியாமல் தங்கராசு வார்த்தையை விட்டு சிரித்தான். அவனுக்கும் மோட்டார் சைக்கிள் சீதனம் வந்ததுதான். வீட்டில் அவனும் கைக்கட்டி சாமிதான்.

பட்டென்று, சுட்டுப் போட்ட அடுப்பு மாதிரி குந்தியிருந்த கிழவி எழுந்தாள். அவளுக்கு அந்த காந்தாளம் எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. “அட நீ வேற தம்பி. முப்பது பவுனும் மோட்ரு சைக்கிளும் கொண்டாந்ததுதாங்கறது இல்ல. வெறுங்கையை வீசிகிட்டு விறோலங்கெட்டுப் போயி வந்ததுகூட அடிக்கிற மொட்ட ராங்கி இருக்க..”

கிழவர் பட்டென்று மிதிப்பதை நிறுத்திவிட்டு, கொளுத்திவிடுகிற மாதிரி கிழவியை பார்த்தார். “ஒனக்கு ஒந்தங்கச்சி மொவ பேர் நாமத்து கதய எடுத்தா தாங்காத. இந்த வெத்து மெப்பக்குதான் இந்த தள்ளாத வயிசில, மண்ணக் கொழப்பி வவுத்துல பூசிகிட்டு ஓட்றம்…” கிழவி முணறிக்கொண்டே குந்தினாள். கீரியும் பாம்புமாய் ஆனார்கள், கிழவனும் கிழவியும்.

தங்கராசு ஏன் அந்த வார்த்தையை எடுத்தோம் என்கிற மாதிரிப் போய்விட்டது. மிதிக்க தொடங்கியிருந்த கிழவர் கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு கேட்டார். “பெரும்பாலும் வீரனோடதான் குதிரை வைக்கறதா வேண்டிப்பாங்க. நீங்கதான் அதிசயமா வெறுங்குதிர வேணுங்குறீங்க…”

“இல்லிங்க, வெறும் குதிரதான். முதன செம்பைய்யனாருக்கு எடுத்து வைக்கறதா வேண்டுதல” முருகவேல் சொன்னான்.

“சரி என்னைக்கு வேணும்…”

“நாளைக்கே வேணுங்க. பங்குனி உத்தரத்துல வைச்சிப் படைக்கனும்”

“சரி இது ஆவாத கத. வேற எடத்துல பாருங்க..”

“வேற எங்கதாங் கெடைக்கும்” இவர்களும் விடவில்லை.

என்ன நினைத்தாரோ, கிழவர் மீண்டும் சேற்றைவிட்டுக் கீழே இறங்கினார். “இங்கியே வேற ஒண்ணு இருக்கு. கொஞ்சம் வேல செய்யணும். ஒங்களுக்கு சம்மதப்படுமான்னு தெரியில. தயக்கத்தோடு வீட்டுக்குப் பின்னால் மறைவாய் இருந்த குதிரையைக் காட்டினார். கொஞ்சம் பழையதாக இருந்தாலும், சொடுக்கமில்லாமல் நிமிர்ந்திருந்தது. ஆனால் முன்னங்கால் ஒன்று துண்டாய் ஒடிந்து கீழே கிடந்தது. குந்தி, காலை எடுத்து ஒட்டி வைத்தபடி சொன்னார். “அப்படியே அடையாளந்தெரியாம மண்ணவைச்சிப்பூசி ஒட்டிக்குடுக்கறன். ஒண்ணும் ஆவாது. பயப்படாத எடுத்துக்கிட்டு போவலாம்.”

ரெண்டு பேருக்கும் அது சரியாகப் படவில்லை. “இல்ல தாத்தா. சாமிக்கி வைக்கறது. விண்ணங்கம் இருக்கக் கூடாது.” வண்டிக்கிட்ட வந்தார்கள். கிழவருக்கு விடவும் மனசில்லை.

இறங்கி வந்தார். “வேண்ணா, ஒங்குளுக்காக இந்த குதிர மேல இருக்கற வீரம் பொம்மைய காயப்பேடாம கத்தியால சீண்டி எடுத்துட்டு பூசி, சுட்டுத்தர்றன். காலையில எடுத்துக்குங்க…”

ஏறிய அவர்கள் இறங்கவில்லை. “வேற எங்கியாவுது கெடைக்குதான்னு பாத்துகிட்டு வர்றம்…”

சோமாசிப் பாளையம் குயவர் தெருவைத் தாண்டி வடக்கில் திரும்பியது. பெறாக்கு பார்த்தபடி பின்னால் குந்தியிருந்த முருகவேல் பட்டென்று தோளைப்பிடித்து இறுத்தியபடி “நிறுத்துடா” என்றான். ரோட்டுக்கும் கிழக்கால பக்கம். தனித்த வீடு. வாசமெல்லாம் சூட்டடுப்புகள், பாதி வைத்த நிலையில் காய்ந்து கொண்டிருந்தன.

இவர்களை பார்த்துவிட்டு, அடுப்பு பூசிக் கொண்டிருந்தவர் எழுந்தார். வளைத்துக் கட்டியிருந்த கைலி சுருங்கி புடைத்தது. மயிர்களடர்ந்த அவரின் மார்பில் பளிச்சென்று ஒரு சேற்றுக்கிறல் மின்னியது. வண்டியிலிருந்து இறங்காமலேயே கேட்டார்கள். “வேண்டுதலுக்கு வைக்கிற குதுர வேணுங்க..”

“அச்சாரம் குடுத்துட்டுப் போங்க. செஞ்சி வைக்கறம். எப்ப வேணும்.”

“நாளைக்கே வேணுங்க..” ஒருவாய்ப் பட்ட மாதிரி சொன்னார்கள். அவர் பதிலேதும் சொல்லாமல் அடுப்பிடம் போய் குந்தினார். எங்கு போவது எனத் தெரியாமல், வண்டி வடக்கே போய்க் கொண்டிருந்தது.

கிழக்கு மேற்காய் போகிற பண்ருட்டி – கெடிலம் சாலை. வாகனங்கள் அரிபிரியாய் போய்க் கொண்டிருந்தன. சாலையில் ஏறப்போகிற நேரம், மேற்கிலிருந்து மிதிவண்டியில் கொய்யாப் பழக் கூடையோடு ஒருவன் வந்தான். பார்த்து கேட்டார்கள். இந்த பக்கம் சட்டிப்பான செய்றவங்க யாராவது, இருக்காங்களா…

நிறுத்தி ரொம்ப பொறுப்பாக மேற்கே கையைக் காட்டி சொன்னான். “இப்பிடியே மேற்கபோயி வடக்க திரும்பினிங்கன்னா மூணு மைலுல செறு கெராமம்னு வரும்…”

நாலு மைலுக்கும் மேல் இருந்தது. மலை மலையாய் அட்டிப்போட்டு சட்டியும் பானைகளுமாய் குவித்து வைத்திருந்தார்கள். அவர்களும் அதே பாட்டைதான் “அச்சாரம் குடுத்துட்டுப் போங்க” பாடினார்கள். வெறுத்துவிட்டது. பசிவேறு காதை அடைத்தது. கந்தல் சாக்கு தொங்கவிடப்பட்ட ஒரு இட்லிக்கடையின் ஒட்டுத் திண்ணையில் குந்தினார்கள். நெல் விளைகிற ஊரிலும் கூட, அரசாங்கத்தின் பெரியகடை அரிசியில் தான் இட்லிக்குப் போட்டிருந்தார்கள். கல்லாடிப் போயிருந்த இட்லியை உடைத்து நொறுக்கி சாம்பாரில் பிசைந்து உருண்டையாய் உள்ளே தள்ளினார்கள். காசு கொடுக்கும்போது, வலிந்து வாயைப் பிடுங்கிதான் கடைக்காரன் பண்ருட்டியில் பார்த்ததாய் ஞாபகம் என்றான். சாப்பிட்ட தெம்பு, கிளம்பி விட்டார்கள்.

கிழக்கே பண்ருட்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். காற்றைக் கொண்டு வந்து முகத்தில் அறைந்தவாறு பேருந்துகள் கடந்து போய்க் கொண்டிருந்தன. முருகவேலுக்கு எரிச்சலாக இருந்தது. இதில் இவ்வளவு சிரமம் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மண்குதிரைதானே காசுக்கு ஒன்றும் பிசுக்குக்கு நான்குமாய் சுட்டு வைத்திருப்பார்கள். போனால் தூக்கி தோள்மேல் வைத்துக்கொண்டு வந்துவிடலாம் என, அகித்தியமாய் முந்திரிக்கு கிளம்பிய தங்கராசுவையும் கூட்டி வந்தது எவ்வளவு தவறாய் போய்விட்டது.

எல்லாமும் ஒன்றுகூடி கோபம் அமுதா மேல் திரும்பிவிட்டது. சாமி விஷயந்தான் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. ஆனால் நாளைக்குக் கல்யாணம், இன்னைக்கிப் புடிடா பாக்கை என்றால்…? அதுவே தண்ணிமொள்ளப் போகிற இடத்தில் கேள்விப்பட்டு, ராத்திரி படுக்கையில் வந்து மூட்டையை அவிழ்க்கிறாள். “நாளைக்கி மறாநாளு பங்குனி உத்திரம். குதுர செஞ்சி பங்குனி உத்தரத்துல வைக்கிறன்னு செம்பைய்யனாருக்கிட்ட வேண்டிக்கிட்டன். அதுவும் இந்த பங்குனி உத்தரத்துக்கே…”

இதையே பத்து நாளைக்கு முன்பு சொல்லியிருந்தால் இவ்வளவு அலைச்சல் தேவையில்லை. பொட்டாட்டம் அச்சாரம் கொடுத்துவிட்டு ஆற அமர வந்து வாங்கிப் போயிருக்கலாம். அலைந்து கொண்டிருக்கிற வெறுப்பில் நினைக்க நினைக்க குமுறியது. ஆனால் எதையும் அவளிடம் காட்டிவிட முடியாது. இதுதான் சாக்கென்று ஒரேடியாய் மோடி வைத்துக்கொண்டு படுத்துவிடுவாள். இல்லையென்றால் இதற்கு ஒரு கதை வளர்த்திவிடுவாள். “சூத்துக்கழுவ தெரியாதவன் ஏரிமேல கோச்சிக்கிட்ட கதையா, நாலு ஊரு போயி வெசாரிச்சி வாங்கியாற துப்பு இல்ல. நடந்தாப் போவப் போற. பாஞ்சி மூட்ட முந்திரிக் கொட்டயப் போட்டுட்டு, எங்க அம்மா ஊட்ல அம்பதாயிரத்துக்கு வண்டி வாங்கி குடுத்துருக்காங்க. அதுல போயி பாக்கறதுக்கு கசக்குத. பத்து நாளைக்கி பின்ன சொல்லியிருந்தா அப்பிடியே நாலு மூணுமா கொண்டாந்து கிழிச்சிருப்பாராம்.”

“என்னாடா பேசாம வர்ற…” தங்கராசு கேட்டான். பேச்சை மாற்றினான். “இல்ல. பையனுக்கு சளி புடிச்சிருந்துது. என்னா பண்ணிச்சோ தெரியில. அதான்.”

“நாளைக்கி குதிரய கொண்டுபோயி வுட செம்பையா கோயிலுக்கு போறம்ல்ல. அப்ப பூசாலிய ஒரு விபூதி புடிச்சி போடச் சொல்லும்.”

முருகவேல் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “எனக்கென்னமோ குதுர ஆப்புடறமாதிரி தெரியில.”

பட்டென்று அடிக்கிறமாதிரி தங்கராசு சொன்னான். “அவுரு கெட்டாரு புடி. நாளைக்கி குதிரய வைச்சி நாம படைக்கறம்.”

இப்படி குதிரை கிடைக்காமல் போய்க் கொண்டிருந்தது முருகவேலுக்கு என்னவோ போலிருந்தது. பண்ருட்டியிலாவது கிடைக்க வேண்டும் என செம்பைய்யனாரை வேண்டிக் கொண்டான். இதுவேறு குதிரை கிடைக்காமல் போய், சாமி குத்தம் ஆகி திரும்பவும் பையனுக்கு ஏதாவது சிக்கல் கொண்டு போய் விட்டு விடுமோ என பயந்தான்.

போன மாசந்தான். அமுதா வீட்டை கழுவி விட்டுவிட்டு வெளியே தண்ணி மொள்ள வந்திருக்கிறாள். வராந்தாவில் நடைவண்டி ஓட்டிக் கொண்டிருந்த பையன் என்ன நினைத்தானோ கூடத்து ஈரத்தரைக்கு வண்டியோடு வந்தவன், பறக்கிறான். இவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போவதற்குள், எட்டி வண்டியை பிடிக்கிறேன் என எழுந்தவன் எப்படி விழுந்தானென தெரியவில்லை. பின் மண்டையில் வலுத்த அடி. தூக்கி நிறுத்தினால், போதை கொண்டவன் மாதிரி ஆடுகிறான். அள்ளிக்கொண்டு விருத்தாலம் கோவிந்தசாமிக்கிட்ட ஓடினார்கள். பயமில்லை. தேறிக் கொண்டான். இருந்தாலும் இவன் செம்பைய்யனாரிடம் வர்ற பங்குனி உத்தரத்துக்கே குதிரை எடுத்து வைப்பதாய் வேண்டிக் கொண்டாள். வேண்டிக் கொண்டதில் தப்பில்லை. ஆனால் அதை உடன் மறந்து, திடுமென குறுகலில் இப்போது நினைவுக்கு வந்ததுதான் அலைச்சலில் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

வண்டி சேமக் கோட்டையைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தபோது இவன் சொல்லாமலேயே புளியமரத்தடியில் ஓரங்கட்டினான்.

“எறங்குடா ஒண்ணுக்கு உட்டுட்டுப் போவும்.”

அடி மரத்து மறைவின் கைலியை ஒதுக்கிக் கொண்டு குந்தி `இருந்த’ நேரம், முருகவேல்தான் காட்டினான். ரோட்டுக்கும் வடக்கால புறம். வீரனாராகத்தான் இருக்க வேண்டும். கோயில் இல்லை. வேப்ப நிழல்தான். சாமிக்கு எதிரே இருபுறமும் ஏகப்பட்ட குதிரைகள். எதிரே இவர்களை நோக்கியபடி வரிசையிட்டிருந்த குதிரையில், ஒரு புதிய அழகான, இவர்கள் தேடிக் கொண்டிருக்கிற அத்தனை அம்சங்களுடன் பொருந்திய குதிரை. அந்த குதிரையைக் காட்டி முருகவேள் சொன்னான். “தா, இருக்கு பார்ரா. அதே மாதிரி குதிரதாண்டா நமக்கு வேணும்!

`வாயன். அரவந்தெரியா ஒரு சாக்கப்போட்டு முடி வண்டியிலத்தூக்கி வைச்சிக்கிட்டுப் பூடுவம். அலைச்சலும் மிச்சம். செலவும் இல்ல”. சிரித்தபடி தங்கராசு சொன்னான்.

“சேமக் கோட்டையான் எவனாவது பாத்தான்னா முதுவ டின்னுக் கட்டிடுவான். சும்மா ஒரு பேச்சுக்கு அந்த மாதிரி குதிரன்னா…’

வண்டி வெகுதூரம் போகிற வரையிலும் திரும்பித் திரும்பி அந்த குதிரைகளையே பார்த்துக் கொண்டு வந்தான். அதுவும் அந்த புதிய குதிரை அங்கு செட்டிப்பாளையத்தை தொடுகிற வரையில் கண்ணுக்குள் வந்து கொண்டேயிருந்தது.

நெரிசலில் கிடந்தது பண்ருட்டி. நுழைந்து காடாம்புலியூர் போகிற ரோட்டில் திரும்பினார்கள். தூரத்தில் குறுக்கிட்ட பேருந்து, லாரிகளைத் தாண்டி, ரோட்டு பிருவத்தில் குவித்து வைத்திருந்ததைக் கண்டதும் இவர்களுக்கு படபடப்புக் கூடியது. கிட்டப்போய் நிறுத்தினார்கள். கண்ணைப் பறிக்கிற செம்மண் நிறம். கூடவே எள்ளும் பச்சரிசியும் கலந்ததாய் கருப்பு நிறத்தில் கருஞ்சூலை சட்டிப் பானைகளும் இருந்தன. சட்டிப் பானைகளை கடந்து, முதலில் குதிரைகள் ஏதேனும் இருக்கிறதா என ஓடிய பார்வை ஏமாற்றமாய் திரும்பியது.

அந்த புழுதி இரைச்சலில் ஓர பூங்கன்றின் நிழலில் அவள் கண்ணசந்திருந்தாள். இறங்கிப் போய் கேட்டார்கள். “கோயிலுக்கு நேந்துகிட்டு, வைக்கிற குதிர மாதிரி இருக்குங்களா…”

கண்நோவு கொண்ட புலியாய், பிசுக்கு பிசுக்கென பார்த்தபடி சொன்னாள்.“ஒண்ணே ஒண்ணு ரொம்ப நாளா விக்காமக் கெடந்தது. நேத்துதான் மெட்ராஸ்காரன் ஒருத்தன் வந்து வாங்கிகிட்டுப் போனான். அதுவும் படு ஏதாளங்கெட்ட ஈன வெலைக்குக் குடுத்தம்.”

விக்கித்துப் போய் வண்டிக்கிட்ட வந்தார்கள். “என்னாடா ஓம்பொண்டாட்டி வேற யாராவது எதிர்ல வந்தா சைனத்தடங்கலாப்பூடும்னு, அதுவே எதுத்தாப்ல வந்து போய்ட்டு வாங்கன்னு, காலையில அனுப்பிவுட்டது. இங்க என்னாடான்னா ஆப்பையும் டாப்பாக்கூடுமா அலைஞ்சிப்பாக்கறம். போற எடம்பூரா, வெறுங்கையாதான் வரவேண்டிதா இருக்கு…”

வெடுக்கென்று “அதலாம் ஏண்டா ஞாபகப்படுத்திக்கிட்டு, அடுத்தது என்னா பண்றதுன்னு பாரு” சொன்னான்.

“வேற ஒண்ணும் பண்றதுக்கு இல்ல. நேரா கெழவங்கிட்ட சரணாகதிதான். வர்றப்ப வீரன எறக்கிட்டு தர்றன்னான். அத வுட்டா வேற வழி எதுவும் இல்ல.”

அரைமனதாய்தான் முருகவேலும் சம்மதப்பட்டான். “அப்பிடி வீரன எடுத்துட்டு தர்றதாயிருந்தா, கிட்ட இருந்து நாம பாக்கணும். இல்லன்னா அவசரத்துல எதையாவது ஒடைச்சிட்டு, மண்ணவைச்சி பூசி மறைச்சி ஊனக் குதிரையா குடுத்துடப்போறான்.”

“சரி வா, மொதல்ல வண்டிக்கு எண்ணப் போடுவம். பாவம் அந்த கெழவன் கெழுவிய வேற நகநட்டு அது இதுன்னு சொல்லி காலையிலேயே வேகப்படுத்தி வுட்டுட்டு வந்துட்டம். எனுமா கெடக்கோ தெரியல.”

உச்சி வெயிலில் போய் திரும்பவும் சோமாசிப்பாளையத்தில் வண்டியை நிறுத்திய அவர்கள் அசந்துபோய் விட்டார்கள். அவ்வளவு நெருக்கமாய் வேலியோர மர நிழலில் குந்தி பெரிய பெரிய சாலுங்கரக பானைகளுக்கு வண்ணந்தீட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களை பார்த்துவிட்டு கிழவிதான் சிரித்தபடி சொன்னாள். “நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும். ஏன்னா இந்த பண்ருட்டி ஏரியாவுல இந்த கூனங்கெழவங்கிட்டியே குதிரைக்கு தட்டுப்பாடுன்னா, வேற எங்கியும் கெடைக்கவே கெடைக்காது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிழவனுக்கு பூரிப்புத் தாங்கவில்லை. நெகிழ்ந்து போய்விட்டான்.

வாசலில் கணகணவென சட்டிப் பானைகள் காய்ந்து கொண்டிருந்தன. மிதித்து புளிக்க வைத்த சேறுமீது சாக்கைப் போட்டு மூடியிருந்தார்கள். கூரையோரம் அனல் பறக்கிற வேகத்தில், குதிரையில் வீரன் சவாரிப்போய்க் கொண்டிருந்தான். கிழவியிடம் தங்கராசுதான் கேட்டான். “என்னா ஆயா. காலையில தாத்தா மொறைச்ச மொறப்புக்கு சென்மத்துக்கும் கிட்டப் போவவே மாட்டன்னு பாத்தன்.”

பானைகளுக்கு சுண்ணாம்பு பூசியபடி சொன்னாள். “ம்… மொறம் பீய்ய தின்னாச்சி, முச்சிப் பீயில என்னாக் கெடக்குங்குற மாதிரி, வேகந் தட்ட வேண்டிய வயசிலலாம் மூணாம்பேருக்குத் தெரியாம குடும்பம் நடத்திட்டு வந்தாச்சி. இந்த சாவப்போற வயசில வேகந்தட்டி என்னா வாரிக்கப் போறம். மொன்னு முழுங்கிட்டுப் போவ வேண்டியதுதான்!” கிழவிக்கு குரல் கம்மியிருந்தது.

மௌனமாய் கிழவர் நீலவண்ணத்தில் சுண்ணம்பூசிய பானைகளுக்கு இலைகளுடன் கூடிய கொடிகளும், கிளிகளுமாய் படம் போட்டுக் கொண்டிருந்தார். பேச்சை வளர்த்தாமல் தங்கராசு கேட்டான். “சரி அந்த வீரன, லெகுவா எறக்கிட்டு, குதிரய குடுங்க எடுத்துக்கறம்.”

கிழவியின் முகம் பட்டென்று பூத்தது. எழுந்து உள்ளே போனாள். கிழவனும் அதற்குமேல் இழுக்கவில்லை. “சரி குதிரைய இப்பிடி தூக்கியாந்து வையுங்க.”

குதிரை இருந்த இருப்புக்கு கணம் இல்லை. தூக்கி வந்து வைத்தபடி தங்கராசு கேட்டான். “என்னா வெல தாத்தா…”.

கையில் சூரக்கத்தியை எடுத்துக்கொண்டு வெளிய வந்த கிழவி சொன்னாள்!! என்னா ஆன வெல குதிர வெல சொல்லப்போறம். பாத்து குடுத்தா சரிதான்.”

நாய் குந்தலாய் குதிரையையொட்டி நெருங்கி குந்தினார். குதிரையின் உடலை ஒட்டி அணைத்துப் பிடித்திருந்த வீரனின் கால்களை மெல்ல கத்தியால் கீறி இடைவெளி கொடுத்து நெம்பினார். சுடாத குதிரையாக இருந்ததால் உள்பக்க ஈரநைப்பு, உடைவு ஏற்படாமல் நீக்கு நிலைக்கு இடம் கொடுத்தது. பிறகு குதிரையில் குந்தியிருந்த வீரனின் சூத்தாம்பட்டை, குதிரையின் இருபக்க கடைவாயிலும் நுழைந்து, தாடைகளில் பதிந்திருந்த கடிவாளம் என மெல்ல நீக்கியதில் இறுதியில் குதிரைக்கும் தனக்குமாய் பாந்தமில்லாமல் போனார் வீரனார். மெல்லத் தூக்கி மரத்தடியில் சார்த்தினார். கைகால்களை நீட்டியபடி குந்தமுடியாமல் பரிதாப நிலைக்கு ஆளானார் வீரனார்.

இவர்களுக்கு ஆச்சரியமாய் போய்விட்டது. லேசாய் தண்ணீர் தொட்டு கீறிய இடத்தை பூசியதும், குதிரை மீது வீரன் இருந்த அடையாளமே தெரியவில்லை. செம்பைய்யனாரி சவாரிக்கு தோதான, தனிக்குதிரை, சிலிர்த்துக்கொண்டு நின்றது. காலையிலேயே இந்த வேலையை செய்யச் சொல்லியிருக்கலாம் என்று கூட தங்கராசுக்கு பட்டது.

தொடைகளில் புதைந்திருந்த உடம்பை பின்னுக்கு வாங்கி, கைகளை பின்னால் ஊன்றியபடி நிறைவாய் நிமிர்ந்து சொன்னார் “சரி தம்பி காலையில வாங்க. சாயந்திரமா சுட்டு வைச்சிருக்கன். அப்புறம் வர்றப்ப வித்திக் கல்புறம், பொங்க வைக்கறதுக்கு பச்சரிசி, நாலு மொழத்துல ஒரு துண்டு எல்லா எடுத்தாங்க. குதிரைக்கு கண்ணுத்தொறந்துதான் குடுக்கணும்.”

மனசுக்குள் வித்தி கற்பூரம், துண்டு என மனசுக்குள் பதிந்து கொண்டு வந்த முருகவேல் திரும்பிக் கேட்டான். “பச்சரிசி எம்மாம் எடுத்தார்றது.”

பட்டென்று கிழவியின் குரல் உடைந்து நொறுங்கியது. “இம்மான்னு கணக்கா இருக்கு. ஒரு வயிசி ஆன கொசவனுக்கு பின்னம் ரெண்டு படி கொண்டாந்து குடுத்தாக்கூட, நெறமா நாலு நாளைக்கி கஞ்சிவைச்சி குடுப்பன். அப்பறம் ஒங்க சவுரியம்.”

வண்டியைத் தள்ளிக்கொண்டே தெருவுக்கு வந்தார்கள். முருகவேல் முகத்தில் லேசாய் குழப்ப ரேகைகள். சொடுக்கமாய் சொன்னான். “இந்த வீரன எறக்கனது போனதெல்லாம் அமுதாக்கிட்ட சொல்லாதடா. போச்சி மோசம்னு அதுக்கு ஒரு கத வளத்துவா!

வண்டியில் ஏறியபடி தங்கராசு சொன்னான். “அதான பாத்தன் நா வேற, வீரன் ஏறன குதிரையாச்ச. செம்பைய்யனாரு ஏத்துப்பாரோ எனுமோங்கற பயத்தில இருக்கியோன்னு பாத்தன்.”

பின்னிருக்கையில் குந்தி பெருமூச்சு விட்டபடி சொன்னான், “சாமிவுளுக்குலாம் நம்ப படற கஷ்ட நஷ்டம் புரியும்ண்டா,” இந்த ஏம்மொவளுவோதான்…”

Print Friendly, PDF & Email

2 thoughts on “வாகனம்

  1. கெடைக்கிறதை நமக்கேத்த மாதிரி மாத்திக்க வேண்டியதான சமாளிப்பில் தான் மனுஷ வாழ்வு…. இல்ல… கெடைக்கிறதுக்கு தக்கன நம்மள மாத்திக்க வேண்டியதும் தான்…..

  2. கிராமிய கலைகளை எப்படி மனிதன் தனக்கு ஏற்றவாறு
    மாற்றி கொண்டான் என்பதை தன்னுடைய வட்டரா மொழியில்குணசேகரன் எழுதிய சிறுகதைகள் நல்ல அருமையான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *