கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,317 
 

நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக இருக்கும் குடிசைகள். அதில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்னச் சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட். அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர். வேகமாக வண்டியில் வருபவ0ர்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர்.
“சார் நிறுத்து நிறுத்து உள்ளே யாரும் இல்ல, சீப்பா முடிச்சித் தரேன்…” என்று ஒருவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வண்டியில் வந்தவர்கள் மதிக்காமல் அவர்களை தாண்டிச் சென்றனர்.

இருவரும் திரும்பப் போய் ஆட்டத்தில் சேர்ந்தனர்.

அங்கு ஒருவன் “என்ன மாமே ஆச்சு” என்றான் தாயத்தை உருட்டிக் கொண்டு.

“எங்க மச்சான் மடக்கலான்னு பார்த்தா, கசுமாலம் போய்க்கினே இருக்குது, சரி இப்ப உய்து பார் தாயம், அடிங்கொப்பன் டாடி” என்று சொல்லிக் கொண்டு தாயபாஸை உருட்டினான்.

பைக்கை நிறுத்தி விட்டு ரங்காவும் அவனுடைய நண்பனும் இறங்கி ஒரத்தில் இருந்த அறையை நோக்கி நடந்தனர். அது ஒரு சிறிய அறை. கூட்டமாக அனைவரும் ஒன்று சேர எதோ கேட்டுக் கொண்டு இருந்தனர். ரங்கா அந்த அறையின் வாசலில் வந்து நின்றான். அந்த இடத்தின் கவுச்சி வாடையும், ரோஜாக்களின் வாசனையும் சேர்ந்து வயிற்றை புரட்டிக் கொண்டு வந்தது ரங்காவின் நண்பனுக்கு அடக்கிக் கொண்டு கூட்டத்திற்குப் பின் நின்றான். அப்பொழுது ஒரு குரல்

“ஏங்க இப்படி வந்து நின்னா, நான் எப்படி வேலை செய்ய முடியும்? அப்புறம் சர்டிபிக்கேட்ல பேர் தப்பா எழுதிட்டா உங்களுக்கு தான் பிரச்சனை. யோவ் முனுசாமி எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நிக்கவையா. அதுவும் நானே செய்யுனுமா” என்றது ஒரு குரல்.

முனுசாமி கூட்டத்தினரை நோக்கி “சார் எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நில்லுங்க! எல்லாரும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணா சீக்கிரம் வேலை முடிஞ்சிறும்” என்றார்.

அனைவரும் ஒழுங்காக வரிசையில் நின்றார்கள். அப்பொழுது தான் நடுவில் உக்கார்ந்து இருந்த அதிகாரி வெளிப்பட்டார். அறை முழுவதும் மங்கலான வெளிச்சம். வெள்ளை நிற சுண்ணாம்பு சுவர்கள் கருப்பு நிறத்தில் மாறி இருந்தது. இரண்டு உடைந்த நாற்காலி, ஒரு உடையப் போகும் மேஜை, அதன் மேல் கொஞ்சம் பைல்கள். ரங்காவிற்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை; வரிசையில் நின்றான். பதற்றத்துடன் மணியைப் பார்த்தான், கையில் வடிந்த வேர்வையில் கடிகாரம் நனைந்து இருந்தது. அதை துடைத்து விட்டுப் பார்த்தான். மணி 1.30.

வெளியில் தப்பான இடத்தில் குயில் அழகாக கூவிக்கொண்டு இருந்தது, ரசிக்க ஆள்தான் இல்லை. சமாதியின் மேல் மதிய உணவு உண்ணும் பெரியவர், பள்ளம் தோண்டி கிடைத்த எலும்புக்காக சண்டையிடும் நாய்கள், சமாதியில் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள், அனைவரும் அவர்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். யார் குயிலின் கூவலை ரசிப்பார்கள். மணி 1.45 ரங்கா கடைசியாளா அதிகாரியின் முன் நின்றான்.

“என்னப்பா எரிக்கனுமா? புதைக்கனுமா?” என்றார் பேப்பரில் எதோ எழுதிக் கொண்டே ரங்காவை பார்க்காமல் கேட்டார்.

“புதைக்கனும் சார்”.

“குடும்ப வழக்கமா புதைக்கிற எடம் எதாவது இருக்கா, இல்ல நல்லதா நானே ஒரு எடம் தரட்டா, கொஞ்சம் செலவு ஆவும் அத பத்தி பொறவு பேசிக்கலாம்” என்றார் அதிகாரி.

“இல்ல சார் நேத்தே வந்து எங்க மாமா எல்லா ப்ரோசிஜர் முடிச்சாச்சு. டாக்டர் சர்டிபிக்கேட் தர வந்தோம்” என்றான் ரங்கா அவசரமாக.

“அப்புறம் எதுக்கு லைன்ல நின்ன, நேரா வர வேண்டியது தானே. சரி எந்த ஏரியா பாடி” என்று அலுத்துக் கொண்டே மேஜையில் இருக்கும் பைல்களை புரட்டினார்.

“பேரு சுகுமார், வயசு 56..” என்று ரங்கா மணி பார்த்துக் கொண்டு சொல்ல.

“யப்பா ஏரியா பேர சொல்லு”

“கா. . .காந்தி நகர்”

“ஓ. . .காந்தி நகர் பாடியா, இரண்டு, மூணு டிடைல் எழுதாம போய்ட்டார் உங்க சித்தப்பா”

“சித்தப்பா இல்லைங்க மாமா” என்றான் ரங்கா.

“ரொம்ப முக்கியம், உக்காந்து சீக்கிரம் எழுது மணி இப்பவே இரண்டு ஆவப்போது ராவுகாலத்துக்கு முன்னாடி பாடி எத்து வந்துருவாங்க (ரங்காவிடம் படபடப்பு அதிகமானது) கடைசி நேரத்துல வந்து மாமா சித்தப்பான்னு தமாஸ் பண்ற,…………….. என்ன பேனா இல்லையா இந்தா போறப்ப மறக்காம குடுத்துட்டு போ” என்று பேனாவை மேஜை மேல் வைத்தார்.

ரங்கா எதையும் காதில் வாங்காமல் காகிதத்தில் விட்டுப்போன இடத்தை பூர்த்தி செய்தான். வீட்டு விலாசம், வயது, ஆனால் ஒரு இடத்தில் அவனுடைய கையும் பேனாவும் உறைந்து நின்றது. அது இறந்தவரின் பிறந்த தேதி?.

“யப்பா ஏய் எக்ஸாமா எழுதர, இவ்வுளவு நேரமா? என்ன தேதி தெரியலையா, வீட்டுல போன்ன போட்டு இறந்தவருடைய பையன் இல்ல பொண்ணுக் கிட்ட கேளு” என்றார் அதிகாரி.

ரங்காவின் கண்களில் கண்ணீர் கசிந்தது “நான் தான் அவருடைய பைய. . . ., இல். . . என்னுடைய அப்பா சார் அவரு” என்று மேலே எதுவும் சொல்ல முடியாமல் நிறுத்தினான்.

“அப்பா பிறந்த தேதி உனக்கே தெரியாதா!!!!!!!!!! சுத்தம்! சரி மகன்னு சொல்ற, நீ எதுக்கு வந்த கடைசி நேரத்துல, சாங்கியம் எல்லாம் நீ தான் செய்யுனும். கிளம்பு கிளம்பு” என்றார். ரங்கா அந்த அறையை விட்டு புறப்பட்டான்.

“யோவ் முனுசாமி பார்யா இந்த காலத்து பசங்கள, நாம அவுங்களுக்காக தான் பொணத்தோட பொணமா இங்க வேந்து சாவுறோம். ஆனா பார் கடைசியில ஒரு நாள் அழுவையோட நம்ம கதை முடிஞ்சுடுது” என்றார்.

“அத ஏ சார் கேக்குற? என் பையன் நேத்து என்ன செம அடி அடிச்சுட்டான் சார், பொண்டாட்டிய அடிச்சதுக்கு”

“எதுக்குயா, நீ தான் எப்பவும் அவளை அடிப்பியே”

“ஆமா சார், நேத்து குடிச்சுட்டு என் பொண்டாட்டின்னு நன்ச்சீக்குனு, பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சா உடுவானா அதான் போறட்டிடான்”

“பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சதுக்கு ஏன் பையன் உன்ன அடிச்சான்”

“பக்கத்து ஊட்டுல அவன் தான் கூடியிருக்கான், நா அடிச்சது அவன் பொண்டாட்டியை”

“ச்சீ போய் டீக்கடையில ஒரு வடை வாயினு வா” என்று எழுந்த அதிகாரி தண்ணி பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நண்பர்கள் இருவரும் வேகமாக வண்டி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்கள்.

“தம்பிகளா யாராவது ஒருத்தர் குழி தோண்டர இடத்துல இருந்தா நல்லது” என்றார் அதிகாரி கையை கழுவிக் கொண்டு.

புறப்படத் தயாராக இருந்த ரங்காவும் அவனது நண்பனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “மச்சா நான் இருக்கேன், நீ சீக்கரம் கிளம்பு” என்று ரங்காவை அனுப்பி விட்டு அதிகாரியை நோக்கிச் சென்றான் ரங்காவின் நண்பன்.

“சார் எங்க எங்களுக்கு எடம் ஒதுக்கி இருக்கீங்க” என்றான் அதிகாரியை பார்த்து.

“கடைசியில மாசானம் ஒருத்தன் குழி வெட்டினு இருப்பான் பார் அதான் உங்களுது. எங்க இன்னிக்கு மட்டும் எட்டு பாடி. எடமே இல்ல, பாரு எல்லா வேலையும் முடிச்சிட்டு இப்பதான் சாப்பிட போறேன்” என்று அதிகாரி உள்ளே சென்றார்.

இவனும் அந்த இடத்தை நோக்கி நடந்தான். வழியெங்கிலும் சமாதிகள், பளிங்கால் இழைத்த பணக்கார சமாதி பக்கத்திலே பூமியோடு அமுங்கிபோன ஏழையின் சமாதி என்று பல காட்சிகளை கடந்து அதிகாரி சொன்ன இடத்தை அடைந்தான்.

“ஏம்ப்பா நீ தான் மாசானமா” என்றான் அங்கு குழி தோண்டிக் கொண்டு இருந்தவனைப் பார்த்து.

“அவன் அங்க தோண்டினு இருக்கான் பார்” என்று திரும்பிப் பார்க்காமல் தோண்டிக் கொண்டே சொன்னான்.

அதற்குள் எதிர்த் திசையில் இருந்து ஒரு குரல் வந்தது “சாமி இங்க வாங்க தோ இருக்குது நம்ம எடம்”

குரல் வந்த திசையை நோக்கி சென்றான். “ஏம்பா ஆபீஸர் அந்த இடத்திலன்னு சொன்னார், நீ இங்க தோண்ற” என்றான்.

“.. .. .. அவன் சொல்லுவான் நோவாம! தோன்றவனுக்குத் தான் கஷ்டம் தெரியும், அதவிட இது நல்ல எடம் சாமி, காத்தோட்டம் சூப்பரா இருக்கும்” என்று சிரித்தான்.

“யோவ் என்ன நக்கலா, எடத்தை மாத்திட்டு சிரிக்கிற! இரு நான் போய் ஆபிஸரை பார்த்துட்டு வரேன்” என்றான் கோபமாக.

“சரி சீக்கிரம் போய்ட்டு வா. உனுக்கு தான் டையம் வேஸ்டு, இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி வந்துடும். ஓரமா எறக்கி வச்சுட்டு தோண்டி முடிக்கிறவடையும் ஒக்கார்ந்துன்னு இரு” என்றான் மாசானம் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு.

இவனுக்கு சங்கடமாகி விட்டது. ரங்காவுக்கு உதவி செய்ய வந்து உபத்திரம் செய்து விடக்கூடாது என்று அமைதியாக பள்ளத்தை நோக்கி வந்தான்.

“என்ன தோண்ட வா வானாமா, சீக்கிரம் சொல்லு நாத்திக் களம சாந்திரம் வந்து பேஜார் பண்ணாத” என்று சலித்துக் கொண்டு புகையை விட்டான்.

“சரி சரி ஒழுங்கா தோண்டு” என்று அமைதியாக நின்றான்.

“சாமி கவலப்படாத சூப்பரா பண்ணிடலாம்” என்று பீடியைத் தூக்கி எறிந்தான்.

மாசானம் பள்ளதில் இறங்கி கிடு கிடு என்று தோண்ட ஆரம்பித்தான். திடீர் என்று நிறுத்தியவன் உள்ளே மண்ணில் இருந்து வந்த புடவையை எடுத்து வெளியில் போட்டான். இதைப் பார்த்த ரங்காவின் நண்பன் அதிர்ச்சியுடன்

“யோவ் என்னயா இது, புடவ வருது. அதுக்குதா இந்த குழி வேண்டா சொன்ன”

“சாமி இதுலயாவது புடவ, அதுல இப்ப தான் எலும்பெல்லாம் எடுத்து அவன் வெளியே போட்டான் நீ கவலப்படாம அப்படி போய் நில்லு சாமி” என்றான்.

வாசலில் தாரை தப்பட்டை சத்தம் கேட்டது ரங்கா தீச்சட்டியை முன்னால் தூக்கிக் கொண்டு வந்தான். சடலத்தை இறக்கினார்கள்.

“சாமி பாடையைத் திருப்பி போடுங்க, சரி கோழி எங்க சாமி” என்றான் மாசானம். அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“நான் அப்பவே நினச்சன்பா” என்றார் பெரியவர்.

“நினச்சா சொல்ல வேண்டியது தான” என்றான் ஒரு சிறுசு.

“என்ன சாமி சனிக்களம செத்தா ஒரு கோழி பாடையில கட்டினு வரணும் தெரியாதா? சனிப் பொணம் தனியா போவாதுன்னு சொல்லுவாங்க.. உங்க வீட்டு ஆளுங்க நல்லதுக்கு தான் சொல்றேன் சாமி. கோழிய அறுக்கும்போதே அந்தத் தீட்டும் போய்டும், சரி பரவாயில்லை வெளிய நம்ம ஆளு கடை இருக்கு. போய் யாராவது வாய்யினு வாங்க” என்று அதற்குள் குழி தோண்டி முடித்தான்.

கோழியும் வந்தது. சாங்கியம் அனைத்தும் செய்து விட்டு, அந்தக் கோழியை இறந்தவரின் கால் பக்கத்தில் வைத்தான். அப்புறம் எட்டுக் கட்டையில் அலங்கோலமாக ஒரு பாடலைப் பாடி கோழியின் உயிரையும் வழித்துணையாக அனுப்பினான். கோழியை அறுத்து ரத்தத்தை குழி சுற்றி தெளித்தான். ரங்கா மண்ணைத் தூவினான். அனைவரும் கடைசியாக முகத்தைப் பார்த்தார்கள். மாசானம் மண்னை குழியில் தள்ளிக் கொண்டு கடைசியில் அந்த அறுபட்ட கோழியையும் மேலே புதைத்தான். அனைவரும் கற்பூரம் ஏற்றி விட்டு நகர்ந்து போக ஆரம்பித்தனர்.

உடனே மாசானம் “எல்லாரும் எதாவது காசை அந்த அரிசித்துணில போட்டு, அப்படியே திருப்பிப் பாக்காம போங்க சாமி” என்றான்.

ரங்கா தேம்பி தேம்பி அழுது கொண்டு சென்றான். அனைவரும் அவனை சமாதானம் செய்து கொண்டே சென்றனர். மாசானம் அதையே அவர்கள் போகும் வரை பார்த்துக் கொண்டு நின்றான். பின்பு பெருமூச்சுடன் சமாதியில் சில்லரையுடன் இருந்த அரிசித் துணியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு, மேலாக புதைக்கப்பட்ட கோழியைத் தோண்டி எடுத்து மண்ணை உதறிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *