தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,312 
 

தலையில் இடி விழுந்தாற்போல், நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் பரசுராமன். மகாவுடன் வாழ்ந்த, 40 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கை, இப்படி சட்டென ஒரு நொடியில் முடிந்துவிடும் என, அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
சாதாரணக் காய்ச்சல் என்று தான், மகாலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தார் பரசுராமன். பரிசோதனைகள் செய்ததில், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அவருடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்து வருவதாகவும், அதை தொடர்ந்து, மற்ற முக்கிய உள் உறுப்புகளும் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும், மருத்துவர்கள் சொன்னபோது, அதிர்ந்து போனார் பரசுராமன்.
வழித்துணைஅறுவை சிகிச்சைகள் பலனளிக்காது. அறுவை சிகிச்சையின் போதே, மகாலட்சுமி இறந்துபோகும் வாய்ப்பு அதிகம் என்று, டாக்டர்கள் அறிவித்த போது, அவர் துடித்துப் போனார்.
உணர்விழந்த நிலையில், ஐ.சி.யு.,வில் மகாலட்சுமி.
நினைவிற்கு வந்த கடவுள்களையெல்லாம், மனதிற்குள்ளாக வேண்டிக்கொண்டவாறு, மருத்துவமனையே கதி எனக் கிடந்தார் பரசுராமன்.
நாள் கணக்கு போய், மணிக்கணக்கும் போய், எந்த நிமிஷமும் மகாவின் உயிர் பிரியக்கூடும் என, டாக்டர்கள் கை விரித்து விட்டனர். அவர்கள் விதித்த கெடுப்படியே, மகாலட்சுமி சுய உணர்வு திரும்பாமலேயே உயிர் நீத்தாள். கதறி அழுத பரசுராமனை, யாராலும் ஆறுதல் சொல்லித் தேற்ற முடியவில்லை.
அவருக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அவரவர்களுக்கு, அவரவர்களுடைய குடும்பம், பிரச்னைகள். மூத்தவன் முரளி அமெரிக்கவாசி. அடுத்தவன் சங்கர்; அவனுக்கு டில்லியில் வேலை. அங்கேயே ஒரு சீக்கியப் பெண்ணைக் காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டவன். மூன்றாமவன் ரவியும், கடைக்குட்டி மகள் கனகாவும், கல்யாணமாகி, சென்னையிலேயே செட்டிலாகியிருந்தனர். பரசுராமனும், மகாவும்; தனியே ஒரு அபார்ட்மென்ட்டில், ஒருவருக்குகொருவர் துணையாக வசித்து வந்தனர்.
அம்மா இறந்த செய்தி கேட்டு, பிள்ளைகள் பதறி அடித்து ஓடி வந்தனர். தாயின் பிரிவு, மகன்களைவிட, மகளையே அதிகம் பாதித்தது. பெண் பிள்ளையாயிற்றே!
அம்மாவின் உடலைக் கட்டிப்பிடித்துக் கதறிக் கதறி அழுதாள் கனகா. பரசுராம், கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல், அழுது கொண்டிருந்தார். அவளுடைய இழப்பை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“அடியே மகா… எத்தனை சுயநலமடி உனக்கு? நீ சுமங்கலியாய் போகணும்கறதுக்காக, என்னை இப்படி அநியாயமாக கவனிப்பாரற்றுத் தனியே விட்டுட்டுப் போயிட்டியே!
“உனக்கு இன்னும் அறுபது வயது கூட ஆகலேயே. அதுக்குள்ளே என்னடி அவசரம்? எல்லாரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாய்ப் போயிட்டியே… போறதுதான் போனே உன்னோடு, என்னையும் கூட்டி போயிருக்கக் கூடாதா?’ கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருந்தார் பரசுராமன்.
பந்தம், பாசம், காசு, பணம், நகை, நட்டு, வீடு, வாசல் இவையெல்லாவற்றையும், நிமிஷத்தில் உதறிவிட்டு, போய்விட்டாள் மகா. “திருமணமான நாள் முதல், 40 ஆண்டுகளாய், உயிருக்கும் மேலாய் நேசித்த என்னை, தனியே விட்டுட்டுப் போக, உனக்கு எப்படி மனசு வந்ததென…’ மனதிற்குள்ளாய் அழுது தீர்த்தார் பரசுராமன். மகா இல்லாத வாழ்க்கையை நினைக்கவே, அவர் மனம் நடுங்கியது. அவளே போய்விட்ட பின், இனி அவருக்கு என்ன இருக்கிறது? இந்த கேள்விக்கு விடை தெரியாமல், தடுமாறித் தவித்தார் பரசுராமன்.
மகாவோடு வாழ்ந்த காலத்தில், அவர், அவளை அழைத்துப் போகாத இடமில்லை; அனுபவிக்காத சந்தோஷமில்லை; வாங்கிக் கொடுக்காத ஆடையணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் இல்லை. ஒரு நாளும், அவர், அவளை கடிந்து பேசியதில்லை.
வசதியான குடும்பப் பின்னணி. எடுத்த எடுப்பில் பெரிய பதவி. இவற்றால், அந்தஸ்து, கார், பங்களா, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேலையாட்கள் என, எதற்கும் குறைவு இல்லை. மகாவைக் கைப்பிடித்த நாளிலிருந்து, இந்த நிமிஷம் வரை, பரசுராமன், அவள் மீது வைத்திருந்த அன்பு, பாசம், நேசம், காதல் இம்மியளவும் குறையவில்லை.
மகாவின் ஒவ்வொரு அங்குலத்தையும், அவர் நேசித்தார். மகாவும், அவருக்கு சளைத்தவள்இல்லை. பரசுராமனின் குறிப்பறிந்து, தேவை அறிந்து, ரசனையறிந்து செயல்பட்டாள். பரசுராமனையும், மகாவையும் அறிந்தவர்கள், அவர்களை ஒரு ஆதர்ச தம்பதியாகவே நினைத்தனர். பிறர் பார்த்துப் பொறாமைப்படும் படியாகவே அவர்கள் வாழ்ந்தனர்.
அந்த மகா இப்போதில்லை. மகாலட்சுமி என்ற அந்த தெய்வம் குடியிருந்த கோவில், இப்போது வெறுமையாகிப் போயிருந்தது. வாழ்க்கையே சூன்யமாகிப் போனது போலிருந்தது பரசுராமனுக்கு.
மகாவுக்கு, எப்பவுமே மனசுக்குள் ஒரு ஆசை. பூவும், பொட்டுமாய் சுமங்கலியாய் போய்விட வேண்டுமென்று.
“உங்களுக்கு முன்னாடியே நான் போய்ச் சேர்ந்திடணுங்க…’ என்பாள்.
பரசுராமனுக்கும், மனசுக்குள்ளே அ@த எண்ணம் தான். “மகாவை நல்லபடியாய் வழியனுப்பிவிட்டு, தான் போக வேண்டுமென்று. அவருக்குப்பின், நம் பிள்ளைகள் எப்படி இருப்பர்? சூழ்நிலைகள் யாரை எப்படி மாற்றும் என்று, யாரால் சொல்ல முடியும்?’ என்று நினைத்தார்.
ஆனால் இப்போது… மகாவின் இழப்பு, அவரை அதிர வைத்திருந்தது. ஒளிவெள்ளத்தில் திளைத்திருந்தவரை, திடீரென்று கரிய இருள் சூழ்ந்து கொண்டதைப்போல இருந்தது. தவித்து தான் போனார்.
மகா என்ற மகாலட்சுமியின் காரியங்கள் முடிந்தன.
வந்தவர்கள் எல்லாரும் போயாயிற்று. மகன்களும், மகளும் தான் பாக்கி. கொஞ்ச காலத்தில் வீடே வெறிச்சோடிடும்.
“மகா… நீ இல்லாத இந்த வாழ்க்கை, இனி எனக்கு எப்படி இருக்கும்?’ மகாவும், அவரும் வாழ்ந்த அறையில், ஈசிச்சேரில் அமர்ந்து மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார். ஹாலில் மகன்களும், மகளும் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது, அவர் காதில் விழுந்தது. அவரைப் பற்றிய பேச்சு என்பதால், கவனம் அதில் பதிந்தது.
“”முரளி அண்ணா… அப்பாவை இப்ப என்ன செய்றது? இனிமே அவரை யார் பார்த்துப்பா?” அண்ணனைப் பார்த்தபடி, மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் சங்கர்.
“”என்ன பண்றது? அதைத்தான் நானும் நேற்றிலேர்ந்து யோசிச்சுட்டுருக்கேன்.” பதிலளித்தான் முரளி. அவர்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கிய அப்பா, திடீரென்று அவர்களுக்கு ஒரு பிரச்னையாகிப் போனார்.
“”இதில் யோசிக்க என்னண்ணா இருக்கு… பேசாம அப்பாவை நீ ஒரு ஆறு மாசத்திற்கு உன்னோடு அமெரிக்கா கூட்டிட்டு போய் வச்சுக்கோ. அவருக்கும், ஒரு மாற்றமாய் இருக்கும். அதன் பின், என்ன செய்லாம்ன்னு முடிவு செய்வோம்,” யோசனை சொன்னார் சங்கர்.
“”நோ… நோ… என்னடா பேசற நீ… அப்பா ஏற்கனவே ஹார்ட் பேஷன்ட். ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டிருக்கார். அவரை, அவ்ளோ தூரம் கூட்டிட்டு போறது சரியாப் படலே எனக்கு. அங்கத்திய சூழ்நிலை அவருக்கு ஒத்துக்காது. ஏன், நீ தான் அப்பாவைக் கொஞ்ச நாளைக்கு உன்னோட டில்லிக்கு கூட்டிட்டு போயேன்.”
“”ஆமாமா… அதுவும் சரியான யோசனை தான் சங்கர் அண்ணா. அப்படியே செஞ்சுடு,” ரவி ஆமோதிக்க, “”என்னங்கடா… நிலைமை புரியாம பேசறீங்க. என் மனைவி பஞ்சாபி பொண்ணு. அவளுக்கு நம்ம ஊரு மாதிரி எல்லாம் சமைக்கத் தெரியாது. அவ எதையாவது சமைச்சுப் போட, அப்பா அதை சாப்பிடப்போய், ஒண்ணுக் கிடக்க ஒண்ணு ஆச்சின்னா… எங்க வீடு அவருக்கு சரிப்பட்டு வராது,” பஞ்சாபி மனைவி மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொண்டான் சங்கர்.
“”அப்ப இதுக்கு என்னதான் தீர்வு?” அப்பாவின் நிலை பற்றிய உண்மையான கரிசனத்தோடு கேட்டாள் கனகா.
“அப்பா இருந்த இருப்பென்ன… வாழ்ந்த வாழ்க்கை என்ன… இப்படி ஒரு நிமிஷத்துல எல்லாம் மாறிப்போய் விட்டதே. நினைத்துப் பார்த்திருப்பாளா அம்மா?’ மனசுக்குள் மருகினாள் கனகா.
“”ரவி அண்ணா… நீ ஒருத்தன்தான் பாக்கி. நீ என்ன சொல்லப்போறே?” கடைசி அண்ணன் என்ன சொல்லப் போகிறானோ என்ற கவலையோடு, அவனைப் பார்த்துக் கேட்டாள் கனகா.
“”என்ன கனகா… ஒண்ணும் தெரியாத மாதிரி பேசற… என் மனைவிக்கு இப்பத்தான் ஆபீசரா பிரமோஷன் கிடைச்சிருக்கு. காலை எட்டு மணிக்குப் போனா, ராத்திரி எட்டு மணிக்குத்தான் வர்றா. ஆபீஸ்லே, அவளுக்கு வேலை அவ்ளோ டைட். ஆபீசராயிட்டதால, பெரிய பொறுப்பு. எனக்கோ, ஊர் சுத்தற மார்க்கெட்டிங் வேலை. என் பொழப்பே நாறிட்டு இருக்கு…
“”இந்த லட்சணத்துல, அப்பாவை நான் எப்படி… வேணும்னா அப்பாவை டீசன்ட்டான ஒரு முதியோர் இல்லதுல சேர்த்திடுவோமா… நல்லா கவனிச்சுப்பாங்க. அப்பாவுக்கும், கம்பெனி கொடுக்க அங்கே நிறைய பேர் இருப்பாங்க. நான் நேரம் கிடைக்கும் போது, அப்பப்போ அப்பாவைப் பார்த்திட்டு வர்றேன். என்ன ஓ.கே.,யா?” பிரச்னைக்குப் ஒரு தீர்வை கண்டுவிட்ட மாதிரி, மற்றவர்களின் ஒப்புதலை எதிர் நோக்கினான் ரவி.
“”நல்லா இருக்குண்ணா உன் யோசனை. நாம் பேசுவது, நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கின அப்பாவைப் பற்றி. யாரோ வீதியில் போற, வக்கத்த மனுஷரைப் பற்றி இல்லே. அப்பாவோட அந்தஸ்து என்ன. நிலை என்ன… அவர் நினைச்சா, ரெண்டு மூணு முதியோர் இல்லங்களையே கூட, வைத்து நிர்வகிக்கலாம்…
“”அவருக்கு இப்ப தேவை, ஒரு முதியோர் இல்லம் இல்லே. நம்முடைய பரிபூரண அன்பும், ஆதரவும், பாசமும், அரவணைப்பும் தான். அம்மா போன பின், தனி மரமா நிக்கற அப்பாவுக்கு, பிள்ளைகள் நீங்க ஆதரவாயிருக்க வேண்டாமா? இப்படி ஆளாளுக்கு சாக்கு சொல்லி நழுவப் பார்க்கறீங்களே… நீங்க எல்லாம் என்ன பிள்ளைகள்? வெளியிலே தெரிஞ்சா வெட்கக்கேடு.”
ஆத்திரம் தாங்கமாட்டாமல், கண்ணீருக்கிடையே கத்தி விட்டாள் கனகா.
“”போதும் நிறுத்துடி… இவ்வளவு பேசறீயே, அப்பாவை நீதான் கொண்டு போயி வச்சுக்கறது. நீயும் அவருக்கு மகள்தானே… எங்களுக்கிருக்கிற கடமையும், பொறுப்பும் உனக்குமிருக்குதானே?” கோபத்தோடு திருப்பிக் கேட்டான் அமெரிக்க அண்ணன்.
“”கரெக்டா சொன்னேண்ணா!” மற்ற இரு அண்ணன்மார்களும், அதை ஆமோதித்தனர்.
“”எனக்கும் பொறுப்பு இருக்குண்ணா. ரொம்பவே இருக்கு. இந்த நிமிஷமே அப்பாவை நான் கூப்பிட்டுப்போகத் தயாராவே இருக்கேன். “உங்கப்பாவை இந்த நேரத்துல தனியா விட்டுட்டுப் போறது சரியில்லை. அவரை உன்னோடு நம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடு’ன்னு, என் வீட்டுக்காரர் சொல்லிட்டுத்தான் போனார்.
“”ஆனா, தடிதடியா மூன்று பிள்ளைகளிருக்கும் போது, பொண்ணு வீட்ல போயி அப்பா தங்கினா, ஊர் உலகம் என்ன சொல்லும்? அப்பாவோட தன்மானம்தான் அதுக்கு இடங்
கொடுக்குமா?”
தங்கை கனகாவின் கேள்விக்கு, பதில் சொல்லத் தெரியாமல், மூன்று அண்ணன்மார்களும் மவுனமாயினர்.
“”இப்போ அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நல்லா யோசிச்சு, காலையில் ஒரு முடிவுக்கு வரலாம்,” என்று பிரச்னைக்கு தற்காலிகமாக, ஒரு கமா போட்டான் முரளி.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பரசுராமன், துடித்துப் போனார்.
மறுநாள் காலை, அப்பாவைத் தேடி, கையில் ஒரு பெட்டியுடன், கால் டாக்சியில் வந்திறங்கிய அந்தப் பெண்ணுக்கு, மகாவின் வயதுதானிருக்கும். பார்க்க லட்சணமாக இருந்தாள்.
“”அப்பா இருக்காரா?” மிக உரிமையோடு கேட்டபடி, உள்ளே நுழைந்த அவரை வரவேற்று, அமரச் சொன்னாள் கனகா.
“”அப்பா… உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க.”
“”வாங்க யமுனா,” வந்தவரைக் கரம் கூப்பி வரவேற்றார் பரசுராமன். அந்தப் பெண்ணும், எழுந்து நின்று, வணக்கம் கூறினார்.
“”கனகா… இவங்களுக்கு காபி கொண்டு வா. அப்படியே, முரளி, சங்கர், ரவியையும் வரச் சொல்லு.”
அனைவரும் வந்து அமர, பரசுராமன் பேச ஆரம்பித்தார். அவருடைய முகத்தில், அசாதாரணத் தெளிவும், உறுதியும் தெரிந்தது.
“”இவங்க யமுனா.” அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து பேசினார் பரசுராமன்.
“”யமுனா, என்னுடைய பழைய காலேஜ் மேட். விதிவசமா பல வருஷங்களுக்குப் பின், சமீபத்தில் லைப்ரரியில இவங்களை சந்தித்தேன். இவங்களோட கணவர், ஆர்மியில் லெப்டினண்ட் கர்னல். காஷ்மீரில் நடந்த சண்டையில், ஹி லாஸ்ட் ஹிஸ் லைப். நோ சில்ட்ரன். சோ, ஷீ இஸ் அலோன்.” சொல்லி விட்டு, சற்று நிறுத்தினார்.
“”இவங்க ஒரு விதவை. நான் ஒரு விடோயர். ஒரே நிலைமையில் இருக்கிற நானும், யமுனாவும், ஏன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழக்கூடாதுன்னு தோணிச்சு. யாருக்கும், ஒரு சுமையா இருக்க நான் விரும்பல. “என்னடா, அம்மா போயி ஒரு மாசம் கூட ஆகல்லே, அதுக்குள்ளே அப்பா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காரே… அப்படீன்னா, அம்மாவோட இவ்வளவு காலமா அவர் வாழ்ந்த வாழ்க்கை பொய்யா… அப்பா இப்படிப்பட்ட ஒரு சுயநலவாதியா? இந்த வயசுல அப்பாவுக்கு ஒரு பெண்ணின் துணை தேவைப்படுதான்’னு கூட நீங்க நினைக்கலாம்.
“”எத்தனை பிறவி எடுத்தாலும், என் மனசுல, உங்கம்மா மகாவைத் தவிர, வேற எந்த ஒரு பெண்ணுக்கும் இடமில்லை. ஆனால், மகா இல்லாமல், தனியா இனிமே நான் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு, ஒரு வழித்துணை எனக்குத் தேவையில்லையா? அதுக்கு, ஏற்கனவே நன்கு அறிமுகமான யமுனாவை, நான் தேர்ந்தெடுத்ததில், தவறில்லைன்னு என் மனசுல பட்டது. யமுனா அண்ட் மி ஆர் பிரண்ட்ஸ்…
“”நெட்டில் எங்களுடைய உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். ரொம்பவும் யோசனைக்குப் பின், யமுனாவும் இதற்கு ஒப்புக்கொண்டாங்க. எங்களுடைய நட்பு, ஆத்மார்த்தமானது; அறிவுப்பூர்வமானது; வி ஆர் ப்ரெண்ட்ஸ். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ். மியூச்சுவலி டிபென்டென்ட் ப்ரெண்ட்ஸ் பார் எவர்…
“”நீங்க எல்லாருமே ரொம்பப் படிச்சவங்க. பேப்பர்ல படிச்சிருப்பீங்க. “மனைவியை இழந்த ஒரு ஆணும், கணவனை இழந்த பெண்ணும், ஒரே வீட்டில், “லிவிங் இன் பார்ட்னரா’ சேர்ந்து வாழ நினைப்பது, அதன்படியே வாழறதும் சகஜம் தான்’னு…
“”நீண்டதூரம், பஸ், ரயில், விமானத்தில் தன்னந்தனியாய் பயணிக்கும் போது, அக்கம்பக்கத்தில் அமர்ந்திருப்பவரோடு அளவளாவிக் கொண்டிருக்கையில், பயணத்தின் சலிப்பும், சோர்வும் நமக்குத் தெரியாது. உங்க அம்மா மகா இல்லாமல், தனியா நான் போகவிருக்கும் நெடும்பயணத்தில், யமுனா மேடம் என்னோடு பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணிக்கிற ஒரு சகபயணி. ஒருவருக்கொருவர் ஆதரவாய், வழித்துணையாய் இருப்போம். அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை!
“”நான் எடுத்திருக்கிற இந்த முடிவை, என் மகாவின் ஆத்மாவும், மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளும் என, நான் உறுதியாய் நம்புகிறேன். அவள் இல்லாம, நான் தனியா கஷ்டப்படறதை அவளால் தாங்கிக்க முடியாது…
“”அப்பாவை என்ன பண்றது என்ற கவலை ஏதுமில்லாம, இனிமே நீங்க நிம்மதியா, சந்தோஷமா அவங்கவங்க வேலைகளைப் பார்க்கலாம் ஓ.கே.,”
ஏராளமான குற்ற உணர்வு, மனதை வாட்டினாலும், அப்பா சரியான நேரத்தில், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்று நினைத்த பிள்ளைகளின் மனதில், அப்பா பரசுராமனைப் பற்றிய மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

– சுதா ரவிசந்தர் (டிசம்பர் 2012)

வயது : 40
படிப்பு : எம்.பி.ஏ.,
சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இது தவிர, சங்கீதம், விளையாட்டு, யோகா போன்றவற்றில் விருப்பம் உள்ளவர். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *