வயிறு

 

அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையற்கார அம்மாள் பரிமாற வந்தாள். எனக்கு அவளை அங்கு பார்த்தும் ஒரு ‘ஷாக்’. அவள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் காமாட்சி… ‘காமு’ என எல்லோராலும் அறியப்பட்டவள். அவளும் என்னை அங்கு பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள். முகத்தில் சற்று வெட்கம் கலந்த சோகம். நான் என்னை சமாளித்துக் கொண்டு, “அடி காமு, நீ எப்படியடி இங்கு வந்தாய்?” என்று கேட்டேன். காமு, “வயிறு இருக்கிறதே!” என்று பதில் சொன்னாள். கமலம் மாமி, “இவரை உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். “தெரியும், எங்கள் கிராமம்தான். தூரத்துச் சொந்தம்கூட” என்றேன். காமுவின் முகம் மலர்ந்தது.

வீட்டுக்கு வந்த பிறகு, எனக்குக் காமுவின் நினைவாகவே இருந்தது. அவள் தகப்பனார் பஞ்சு சாஸ்திரிகள் வைதீகம். ஏதோ கொஞ்சம் நிலபுலம், இருக்க வீடு என்று இருந்தது. எங்கள் வீட்டில் என் தகப்பனார் செய்யும் சிரார்த்தத்தில் பஞ்சு சாஸ்திரிகளும் ராமசாமி ஐயரும்தான் பிராமணார்த்தம் சாப்பிட அழைக்கப்படுவார்கள். ஏனெனில், என் தகப்பனாருக்கு நன்கு தாங்கிச் சாப்பிடுபவர்களைத்தான் அழைக்கப் பிடிக்கும். (இவர்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள்.) கொறிப்பது போல் சாப்பிடுபவர்களை கூப்பிடமாட்டார். ரசித்து, ருசித்து திருப்தியாக அவர்கள் சாப்பிடுவதை என் தகப்பனார் பிரம்மானந்தமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.

பஞ்சு சாஸ்திரிகளுக்கு காமு ஒரே மகள். பிள்ளைகள் மூவர். மூவரும் படித்து வேலை பார்த்துக் கொண்டு அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். சாஸ்திரிகள் அவர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. காமுவை நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று இப்படி சந்திக்க நேர்ந்தது.

சில நாட்கள் சென்றிருக்கும். காமு என் வீட்டுக்கு வந்தாள். ‘‘வா’’ என்றேன்.

“மாமி, அன்று உங்களைப் பார்த்ததும் எனக்கு மனதில் ‘திக்’கென்று ஆகி விட்டது. ஆனால், நீங்கள் மிக சகஜமாக என்னைத் தெரியுமென்றும், நான் உங்கள் உறவினள் என்றும் அந்த அம்மாளிடம் சொன்னது எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இவ்வளவு வசதி படைத்த நீங்கள் என்னை உறவினள் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது என்றால் உங்கள் மனசு எவ்வளவு விஸ்தாரமானதாக இருக்க வேண்டும்!”

“இதில் என்னம்மா அதிசயம்? இன்று நீ சமையற்காரியாக இருப்பதனாலேயே உறவு இல்லையென்று போய்விடுமா? சரி, அதை விடு. உன்னை நல்ல இடம் பார்த்துத்தானே உன் தந்தை மணம் செய்து கொடுத்தார், பின் ஏன் இந்த நிலை?”

“புக்ககம் இன்றும் வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் அங்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. பத்து வருடம் வாழ்ந்தேன். என்றாலும் ஒரு குழந்தைக்குத் தாயாகும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. கணவர் இறந்தபின் பிறந்தவீடு வரவேண்டியதாகி விட்டது. புக்ககத்தார் எனக்கு ருபாய் 25 ஜீவனாம்சமாகக் கொடுக்கிறார்கள். அப்பா உயிரோடு இருந்தவரை சிரமம் தெரியவில்லை. என் ஜீவனாம்சத் தொகையைக் கூட சேர்த்துத்தான் வைத்தார். அவர் உடல் நலம் கெட்டதும் அந்தப் பணம் வைத்தியச் செலவில் தீர்ந்துபோய் விட்டது. அப்பா சாகும்வரை எட்டிக்கூடப் பார்க்காத பிள்ளைகள் அவர் இறந்த பிறகு நிலத்தை பங்கிட்டுக் கொண்டு போய் விட்டார்கள். ஏதோ பெரிய மனது செய்து வீட்டை விற்காமல் நான் உயிருடன் இருக்கும் பரியந்தம் அதில் வசித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு என்னைப் பற்றி விசாரிப்பது கூடக் கிடையாது. என்ன செய்வது? பிரும்மா தோண்டின வயிற்றை தூர்க்க முடியுமா? சௌகர்யமானவர்களுக்கு சாண் வயிறு என்றால், எனக்கோ சர்வாங்கமும் வயிறாக இருக்கிறது.”

“கமலம் மாமி வீட்டில் உனக்கு வசதியாக இருக்கிறதா?”

“எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டில் எல்லாம் ரொம்பக் கணக்கு கச்சிதம். அவர்கள் எல்லோரும் சாப்பாட்டைக் கொறிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், ஹார்லிக்ஸ், பால், பழம் எல்லாம் அவர்களால் சாப்பிடமுடிகிறது. அவர்களெல்லாம் மூன்றே தோசையோடு எழுந்துவிடும்போது நான் மாத்திரம் அதிகம் சாப்பிட முடியுமா? தட்டின் முன் உட்கார்ந்தால் வயிறு நிறைய சாதம் பரிமாறிக் கொள்ள எனக்கே வெட்கமாக இருக்கு. பாடுபட்டும் வயிறார பசிதீர சாப்பிட முடிவதில்லை. ஊருக்கே போய்விடலாம் என்று இருக்கிறேன். வரும் ஜீவனாம்சத்தில் குருணைக் கஞ்சியானாலும் வயிறு நிறைய, சங்கோஜப்படாமல் குடித்துக் கொள்ளலாம் அல்லவா?” 

தொடர்புடைய சிறுகதைகள்
வீட்டு சொந்தக்காரர் வாடகை வாங்க வந்தபோது, “என் பெண் வரப் போகிறாள். இந்த ஊரில் சில மாதம் தங்க வேண்டுமாம். ஆகையால், வீட்டை அவளுக்காக காலி செய்ய வேண்டி வரும். நீங்கள் ஒரு மாதத்திற்குள் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாத ...
மேலும் கதையை படிக்க...
‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு ...
மேலும் கதையை படிக்க...
இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு கண்ணுக்கு இதமாகத்தான் இருக்கிறது. தெருத் தெருவாக சுற்ற ...
மேலும் கதையை படிக்க...
ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர்களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறுவிதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
சாவு
முதுமை
துளசி
கால மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)