வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 10,225 
 

மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும் லாரியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, சாரலாய் அவன் மேல் அடித்தது.

குண்டும் குழியுமான ஆரோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நீள்போக்கில் பயணப்படும் சாதாரண பாதசாரிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரன அதோ கதிதான் அவனுக்கு ஏற்பட்டது. இது இரவு நேரம். நல்ல நேரங்களிலேயே காணாமல் போகும் அரசு மின்சாரம் ராகுகால எமகண்டங்களில் இயற்கை அல்லது செயற்கை மரணங்களுக்கு தப்பிவிட முடியாது. அப்படி மின்சாரம் மரணமெய்திய மழை இரவில் வேக லாரியின் மூச்சிறைப்பில் மேல் சொரிந்த நீர் சாக்கடை என்பதை நாற்றம் மூலம் அறிந்தான் அவன்.

“சனியன் புடிச்ச நாயீ…”

யார் யாரையோ ஒற்றை வரியில் திட்டினான். அந்த சாக்கடையில் உச்சிநுனி முடிவரை ஈரம் சொட்ட முழுதும் நனைந்தான். அவனை சுற்றிக் கிடந்த அந்த போர்வை பலப்பல கிழிசல் கண்டாலும் பலப்பல தையல் கொண்டாலும் வெய்யிலிலும் மழையிலும் பாதுகாத்தது போலவே தற்போது இந்த சாக்கடையில் இருந்தும் இவனை காப்பாற்றியது உண்மை என்றாலும் சாக்கடை நாற்றம் முழுதும் அந்த போர்வைமேல் கிடப்பதால் அந்த சாக்கடையீரப் போர்வையை எட்டாய் மடித்து கக்கத்தில் அமர்த்தினான்.

சொக்காய் நனையவில்லை. கால் சட்டை…? மீண்டும் எதிர்ப்பட்ட லாரி வெளிச்சத்தில் குனிந்து கால்சட்டையை பார்த்தான். எடுத்த புதிதில் வெள்ளையாய் இருந்த அந்த உடுப்பு அவன் மனைவியின் சோப்பு போடாமலே துவைக்கும் அசாத்திய கைவண்ணத்தில் செந்நாய் நிறத்தில் இருந்தது. அந்த செந்நாய் நிற கால் உடுப்பின் மீது சாக்கடை அடித்து வழிந்திருப்பது ஏனோ அவனுக்கு கொக்கு எச்சமிருந்த ஏரியோரப் பாறையை ஞாபகப்படுத்தியது. லாரி வெளிச்சத்தில் அந்த கொக்கெச்ச சாக்கடையையே பார்த்து துடைத்துக் கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த அவனுக்கு லாரி பெரிய ஊதலுடன் அருகே வரவரத்தான் அது உறைத்தது. சுதாரித்துக் கொண்டு லாரி அடிக்கப்போகும் நீருக்கு தப்ப நினைப்பதற்குள்ளாக அவன் மேலே போட்டிருந்த மருதாணி நிற சொக்காயும் ஏரியோரப் பாறை மேல் கொக்கு கழிந்தது போல் ஆயிற்று.

தூறல் பிசுபிசுக்கும் மழை நெடுஞ்சாலைகளின் ஓரமாய் இரவு நேரத்தில் குருடன் கூட எளிதாய் கடந்து விடலாம். ஆனால் கண்ணுள்ளவனின் கண்களை பொய்க்கண்களாக்கும் சாலை வாகனங்களின் வெளிச்சத்தில் குழியெது தேங்கிய நீர் எது என்று அவதானித்து பிரயாணிப்பது ஒரு சாகசம். குழியில் இருக்கும் நீரை வாரி லாரி மேலடிப்பதிலிருந்து தப்பிப்பதும் இல்லாமல் சொந்த முயற்சியில் குழியில் கால் விடாமலும் சென்று வீட்டை அடைந்தால் உட்கார்ந்து முழு பீடி சந்தோசத்துடன் அடிக்கலாம். இப்படித்தான் தினமொரு சாகசம் இந்த ஒரு வார மழையில் அவன்; செய்கிறான்.

“பீட புடிச்ச நாயீ…”

நெடுஞ்சாலையில் இருந்து தான் செல்ல வேண்டிய சந்து திரும்பியதும் ஒரு ஏக வசனம் விட்டான். பின்,; சந்தை நீண்ட நோட்டம் விட்டான். அந்த மின்சாரம் மரித்துப்போன சந்து நின்ற இடத்திலிருந்து ஒரேஏஏ… இருட்டாக இருந்தது. இதுதானா அந்த சந்து என்று சந்தேகம் வந்தது.

இன்னொரு லாரி வரும் வரை காத்திருந்தான். லாரி வெளிச்சத்தில் அந்த சந்து இவன் சந்துதான். லாரியின் அந்த சிறு வெளிச்சத்தில் சந்தின் தற்போதைய குழி நிலவரத்தை மனதில் வைத்துக் கொண்டான். ஒன்றிரண்டு எட்டுக்களையும் வைத்துவிட்டான். லாரி வெளிச்சம் லாரியோடு போனபின்பு மீண்டும் அந்த சந்து ஒரேஏஏ… இருட்டு.

“சந்தெது அறியேன்
நீவசிக்கும் தலமும்அறியேன்
என்பொந்தெதுஅறியேன்
போக்கிடமும் அறியேன்
சாஸ்வதமே… இருள் அறுக்க
சிறுவெளிச்சம் தா
சிவனே… பேயிருட்டின் மகனே…”

சிறு வயதில் பட்டினத்தார் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவனிடம் மிஞ்சியிருப்பது இது போன்ற தனக்குத்தானே இயற்றிய தான்தோன்றிச் சித்தர் பாடல்கள் மட்டும் தான். அப்படி ஒரு பாடலை அந்த இடத்தில் வாய்க்கு வந்த வேகத்திலேயே பாடியபடி நடை பழகினான். அந்த சந்து அவனுக்கு ஐந்து வருட பழக்கம்.

பகலில் என்றால் அந்த சந்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு கூட யார் கையையாவது பிடித்தபடி வீட்டுக்கு போய் விடுவான், அவ்வளவு பழக்கம். நல்ல சீரான சந்து. போன வாரம் ஒரு முப்பத்தியெட்டு வயது இளைஞன், பிறந்தது முதல் இந்த சந்திலேயே வளர்ந்தவன், பட்டப் பகலில் குழியில் விழுந்து மூன்று நாள் எலும்பு முறிவிற்காக உயர் மருத்துவமனையில் படுத்திருந்தது இவனுக்கு ஞாபகம் வந்தது. இன்று காலையில் நொண்டி நொண்டி இதே சந்தில் அந்த இளைஞன் நடந்து வந்த சரித்திரம் கொண்ட பகல்நேர நடை பாதுகாப்பும் அற்றதுதான் இந்த சந்து. இதில் மழைநாளின் ஈரக்குழி பேயிருட்டில் இதோ ஐந்தாம் நாள் சாகசம் செய்கிறான் இவன். கடவுளே….

இருட்டில் எல்லாம் கரேரென்று தெரிய சற்று நேரம் அசையாமல் நின்று விட்டான். இருளிள் கண்கள் பழக வேண்டுமானால் கண்களை மூடி சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தால் மசமச பார்வை மங்கல் பார்வையாக தெரியுமென்பது அவன் அனுபவம். கண்ணை மூடி பின் திறந்தான். ஒரேஏஏஏ… இருட்டு. நிலவிருந்திருந்தால் வெளிச்சமிருக்கும் ஆடிப்பாடி போயிருப்பான். மழைக்கால மேகம் மறைத்தால் என்றைக்கும் அமாவாசைதான்.

விட்டு விட்டு பெய்யும் மழை மீண்டும் தூற ஆரம்பித்தது. கொஞ்சம் நீண்ட சந்துதான். சந்தின் முடிவில் ஒரு வளைவும் வளைவை ஒட்டி ஒரு இறக்கமும் இருக்கும். அதில் இறங்கி பின் ஏறி குகைபோன்ற இடுக்கில் நுழைந்தால் இவன் வீடு வந்துவிடும். மின்சாரம் இருந்தால் இவனுக்கு பிரச்சினையே கிடையாது. கரண்ட் கம்பத்தில் ஒரு குண்டு பல்ப் இருக்கும். வெளிச்சம் வாரி இறைக்காது என்றாலும் அந்த வெளிச்சத்தை அடையாளமாக வைத்து வளைவில் சரியாக வளைந்து போய்விடுவான். மின்சாரம் இல்லாத நேரத்தில் அந்த குண்டு பல்ப் இருந்தாலென்ன எவனாவது திருடிக் கொண்டு போயிருந்தால் என்ன என்று சலித்தபடி சிறுசிறு அடியாய் எடுத்து வைத்தான்.

ஒருவன் வேலை முடித்து வீட்டிற்கு போகிற நேரம் இரவாய் இருந்து, போகிற வழியில் மழைபிடித்து, மழையினால் மின்சாரமும் இல்லாமல் போய், முழுங்காலளவு தண்ணீரும் வீதியெங்கும் வெள்ளமாய் ஓட, இருட்டில் வழி தடவிக் கொண்டிருக்கையில்; சுத்தி நின்று நாயும் கத்தினால் ஒரு மனிதனுக்கு எப்படி இருக்கும்.

நேற்றைக்கு அப்படித்தான் ஆயிற்று. மூன்று நாய்கள் அவனை இரவு நேரத்தில் படுத்திய பாடு பெரும்பாடு. சந்தின் ஆரம்பத்தில் இருந்து இவன் பொந்து வளைவு வரை மொத்தம் ஏழு நாய்கள் இருப்பது இவனுக்கு நன்றாகத் தெரியும். ஏழு நாய்கள். தெருநாய்கள். அதுவும் நோஞ்சான் நாய்கள். பகலில் பார்த்தால் பாவமாய் இருக்கும் பார்ப்பவர்கள் செத்துப்போய்விடுமோ என்று டீக்கடையில் ரொட்டி வாங்கித் தருவார்கள். இரவில் இவை படுத்தும் பாடுகள். சொல்ல மாளாது. மனிதன் பேய்க்கு கூட பயப்படாமல் இருக்கலாம் நாய்க்கு பயப்படாமல் இருக்க முடியாது போல. ராக்கால நாலுகால் எமன்கள்.

சந்தின் ஆரம்ப முனையிலேயே நின்று நேற்று நடத்திய நாய்விரட்டை யோசித்து யோசித்து பயந்தோசித்தான். ஆனாலும் பிரயோசனமில்லை. போய்த்தான் ஆகவேண்டும். அவன் யோசித்ததைவிட மழை அதிகமாக பெய்ய யோசித்தது. பின் பலம் கூட்டி பெய்ய ஆரம்பித்தது. சட்..சட்..சடசட..சட்.. ஏகத்திற்கும் உறுதியாக மழை பிடித்துக் கொண்டது. கக்கத்தில் மடித்து வைத்திருந்த போர்வையை எடுத்து போர்த்தினான். நாற்றம். பின் எட்டாய் மடித்து கக்கத்திலேயே வைத்துக் கொண்டான்.

மழை பெய்தாலும் நடந்து தானே ஆகவேண்டும். மழையை சபிப்பதா இல்லை வரவேற்பதா என்று தெரியாத ஞானக் குழப்பத்தில் முணு முணுத்தபடி முதல் எட்டு வைத்தான். பின் இரண்டாம் எட்டு… மூன்றாம் எட்டில் எகிறி துள்ளி நின்றான். பெரிச்சாளி ஒன்று அவன் கால் வழிச்சந்தில் நுழைந்து வீட்டிற்கு அதாவது சாக்கடை பொந்தில் நுழைந்தது. பயந்துபோனான். இதயத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான். பயம் விலகாமலே சிரித்தான். “கர்மண்டா… இம்மாம் பெரிசா இருக்கும் இது…”

பின் நான்காம் எட்டு வைத்தான். ஐந்தாம் எட்டில் சரியாய் முழுங்காலளவு குழியில் ‘சளப்’ என்று காலை விட்டுக் கொண்டான். குழியில் முன்புறமாய் விழப்போனவன் சமாளித்துக் கொள்ள முனைய இரண்டு கைகளையும் அதே குழியில் சளப்பென்று விட்டுக் கொண்டான். பின்பு முழு ஆளுமே அதே குழியில் சளப்பென்று விழந்து காணாமல் போனான்.

அந்த சந்தில் சின்ன சின்ன குழிகள் தான் உண்டு. இவ்வளவு பெரிய ஆள் விழுங்கும் குழி இவன் அப்பாவிற்கு இவனின் நினைவு தெரிந்த நாளில் இருந்தே கிடையாது. பின் எப்படி? ஆள் முழுவதும் சளப்பென்று மூழ்கிய பிறகு அந்த கும்மிருட்டில் கைகொண்டு தடிவியபோது சுவர் தட்டுப்பட்டது. இது சுவரோர சாக்கடை. நேராய் நடப்பதாய் நினைத்துக்கொண்டு போதைக்காரன் நண்டுபோல் நடந்த கதையாக இவன் சரியாக சாலை ஓர சாக்கடையில் வந்து சளப்பிக்கொண்டு விழுந்துவிட்டான். அந்த சாக்கடையில் மழை அடித்த வேகத்தில் நீர் ஜலஜலவென்று ஓடியது. சாக்கடையிலிருந்து மேலேறினான். சம்பிரதாயமாய் நொண்டினான்.

கக்கத்தில் எட்டாய் மடித்து வைத்திருந்த போர்வை சாக்கடையிலே போயிற்று. போர்வை நீச்சல் பழகப்போயிருப்பதாக மனைவியிடம் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்காக தலையில் அடித்துக் கொண்டான். முழு நீல சாக்கடையில் விழந்ததன் நினைவாக ஒரு ஒப்பாரி பாடலை முணுமுணுத்தபடி நடந்தான். நேர்கோட்டு நடைதான். என்றாலும் நொண்டிக்கால் வலிக்கத்தான் செய்தது அவனுக்கு.

“உர்ர்ர்.. குர்ர்ர்” இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. இந்த தேசத்தில் நாய்கள் இருக்கிறது இல்லையா? நாய்கள். சரியாக ஏழு நாய்கள். நேற்று நான்கு நாய்கள் விடுமுறையில் இருந்தது. இன்றைக்கு எத்தனை நாய் இருக்கிறதோ தெரியிவல்லை.

தைர்யமாய் முன்னேறினான். முதல் உர்… பின் தொடர இன்னொரு குர்… முன் பத்கத்தில் எதிரொலிக்க முன்னேறினான். சற்று கூடுதலாக உர்ரிட்டபடி நாய்கள் பின் தொடந்ந்தன. இந்த இருட்டில் சத்தம் வரும் மையத்தை வைத்துதான் நாய் இருக்கும் இடத்தை ஊர்ஜிதப்படுத்த முடிந்தது அவனால். “ஊய்…” என்று கத்தினான். ஓடியிருக்க வேண்டிய நாய்கள் பயப்படாமல் கத்த ஆரம்பித்தன. அவனைவிட சுதியை அதிகமாக்கி கத்தவும் இவனுக்குத்தான் பயமதிகமானது. உர்ரென்று ஆரம்பித்த நாயின் மிரட்டல் வள்ளென்று பரிணமிக்க மொத்தம் ஏழு விதமான வள்வள்கள். சுத்திநின்று சகலவாத்திய முழுக்கம் போல் வித வித ஸ்தாயில் ஒலிக்க இவன் ஜடம்போல் ஒரு இடத்தில் நின்று காதை இறுக்கமாய் மூடிக்கொண்டான்.

இவனுக்கும் இந்த நாய்கும் ஜென்மப்பகை இல்லை என்பது இவனுக்கு தெரிந்த அளவுக்கு நாய்களுக்கு தெரியாது போல் இருக்கிறது. இரவில் இந்த நாய்கள் பொழுது போக்கிற்காக குரைப்பதாகவே இவனுக்கு பட்டது. ஆனாலும் அவை விடும் ஓலத்துடன் கூடிய குரைப்பு ஜென்ம எதிரிக்கெதிரான “நாசமாய்ப் போக கோசம் போலவே ஒலித்தது.

பகல் நேரத்தில் தின்றது போக மீதியிருக்கும் தின் பண்டங்களை இந்த நாய்களுக்கு போட்டு நீவியும் விட்டிருக்கிறான். இரவு நேரத்தில் வந்தால் அடையாளம் தெரிந்து வாலாட்டாவிட்டாலும் குரைக்காமலாவது இருக்கும் என்று. நாய்கள் நன்றியுள்ளவை என்று யார் சொன்னது. பாருங்கள். இந்த உண்ட நாய்கள் தினமும்தான் இவனை பார்தது குரைக்கின்றன. நாளுக்கு நாள் அதிக சத்தமாக வேறு குரைக்கிறது.

உடம்பின் சாக்கடை ஈரம் சொட்ட சொட்ட அந்த இருள் கவிந்த இருட்டில் நாய் கேட்டு அவன் நடுங்கியபடி நின்றது உண்மை. இந்த நாய் சத்தத்திற்கு சந்தின் இருபுறமும் உள்ள அநேக வீட்டில் அநேகம் பேர் விழித்திருக்கக் கூடும். எவரும் எழுந்து வந்து இவனை காப்பாற்ற மாட்டார்கள். இந்த நேரத்தில் எந்த நாய் எந்த நாயிடம் மாட்டிக்கொண்டால் என்னவென்று அவிழ்ந்திருக்கும் ஆடைகைள போர்வைக்குள் ஒழித்துக்கொண்டு தொடை நடுவே கைவைத்து குளிருக்கு இதமா தூங்க ஆரம்பித்திருப்பார்கள். வந்து காப்பாற்றும் தர்மவான்கள் யாராவது இருந்தால் அவர்கள் மணிக்கொருதரம் இந்த நாய்களிடமிருந்து யாரையாவது காப்பாற்றியபடி கோட்டானாய்த்தான் விழித்திருக்க நேரும்.

நாய் எழுப்பிய சத்தத்தில் வெல வெலத்துப் போய் எவர்கதவையாவது தட்டலாமா என்று யோசித்தான். கதவு எங்கே தெரிகிறது. கதவை தேடி தட்டப்போய் முன்பு விழந்த அந்த சாக்கடை நதிப் பிரவாகத்தில் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் தட்டும் எண்ணத்தை கைவிட்டான்.

குரைத்த நாய்களில் ஒரு நாய் தைர்யமாய் இவன் பக்கம் வந்து. இவன் கால்முகர்ந்தது. ஒரு நாய் தூரத்தில் நின்றபடி வரட் வரட் என்று தரையில் கால் தேய்த்தது. இன்னொரு நாய் கத்தியபடி எங்கோ எதிர் திசையில் ஓடியது. எல்லாம் காதுகளில் தான் அவனுக்கு தெரிந்தது. கண்ணில் ஒரே… இருட்டு.

நின்றவன் நின்றபடியே இருக்க நாய் சத்தம் ஒரு வழியாக குறைந்து அடங்கியது. இவன் நடக்கத் தொடங்கினான். நாய்கள் பின்தொடர்ந்தன. நாய்களுக்கு இருட்டில் நன்றாக கண் தெரியுமா? கொஞ்சம் வேகமாக நடை போட்டான். நாய்கள் வேகமாக பின்தொடர்ந்தன. ஒரு நாய் வள் என்றது. இன்னொன்றும் வள்ளென்றது. பிறகு ஏழு வள் வள் பெரிதாகி வலுத்தது. என்றைக்கும் இல்லாமல் இவன் துரித நடையை ஓட்டமாக்கினான். நாய்புத்தி தெரியாதா? ஓடும் நாய் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்… எட்டு பத்து இடங்களில் கடிபட்டு வளைந்து பள்ளத்தில் சறுக்கி விழுந்து சாக்கடை தாண்டி மூச்சு முட்ட இவன் குகை சென்று கதவை தட்டினான். நாய்கள் அதன் எல்லையிலே நின்று மிரட்டிக் கொண்டிருந்தன.

கதவை பயத்தினால் விடாமல் தட்டினான். தட்டிய சத்தத்தில் எழுந்த குழந்தையின் வீல் சத்தத்துடன் கண் சிவக்க கதவை திறந்தாள் மனைவி.

“மழைக் காலம் முடியிற வரையில நான் வேலைக்கு போகல என்றபடி வீட்டிற்குள் இவன் போனான்.அவள் தடீர் என்று கதவை அறைந்து தாழ் போட்டாள்.

“என்ன சொன்ன..?”

“மழை முடியிற வரையில நான் வேலைக்கு போகலன்னு சொன்னேன்”

“வேலைக்கு போகலையா…? என்ன புடுங்க போற இங்க, ஊட்டுல கிடந்து?”

யுத்தத்திற்கு அவன் மனைவி தயாராகிவிட்டாள். எட்டு பத்து நாய்களுக்கு இருப்பதைவிட இவளுக்கு சற்று கூடுதலான பற்கள். நாய்கடி விளையாட்டில் இதை மறந்து போய் எசகு பிசகான நேரத்தில் இவன் வேலையை ஒத்திப்போடுவதாய் முன்மொழிய அண்டை வீட்டுக்காரர்கள் வழக்கமான தலைவலியுடன் புரண்டு படுக்கப்போகும் இவன் மனைவியின் யுத்தத்திற்கு இவனே காரணமானான்.

“வேலைக்கு போகாம சாப்பாட்டுக்கு எங்க போவே…இதோ இந்த சாவடிக்கிற உன் புள்ளைகிட்டே சொல்லு என்ன வழின்னு…”

ஆறு மாத அழுது அடம்பிடிக்கும் பிள்ளையை உலுக்கி சமாதானம் செய்தபடி இவனிடம் யுத்தத்திற்கு வந்தவளுக்கு பக்கம் வந்ததும் தெரிந்தது கணவனின் கோலம். அவனின் கருத்த நிறம் சாக்கடையில் விழுந்து மேலும் கருத்திருக்க கீழுடை கிழிபட்டு சொட்டாய் ரத்தம் சொட்ட ஈரப்பதமாய் விழி விழி என்று நீரில் விழுந்த கோழிக் குஞ்சாய் விழிபிதுங்கிக் கிடந்தான். அவன் தானா இவன். இவள் புருசன்.

“என்னய்யா இது…”

“சாக்கடையில விழந்து… அதனால இல்லே…நாய் கடிச்சி… கால் வலிக்குது… தெரியுமா”

அய்யோபாவமென்று அரவணைக்க மாட்டாளா மனைவி. ஏன்யா எங்களுக்காக இத்தனை கஷ்டப்படனுமா என்று கதற மாட்டாளா மனைவி. புருசனே உனக்கு இந்த கதியா என்று சாக்கடை நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு கட்டிப்பிடித்து அழு மாட்டாளா மனைவி… மாட்டாளே… அவள் மாட்டாளே…

“தடத்தில கிடக்கிற நாய்கிட்டே உனக்கென்னய்யா வம்பு… ஊர்ல இருக்கிறவன உட்டுட்டு உன்னை மட்டும் புடுங்குமா அந்த நாயீ… வேலைக்கு போகாததுக்கு இது ஒரு சாக்காய்யா உனக்கு…”

அவன் கீழுடைய கழற்றி கடிபட்ட இடத்தை வெளிச்சத்தில் பார்த்து ஆடித்தான் போய்விட்டாள். ஏழு நாய் கடித்த கால். ஆனாலும் மனைவியையும் குழந்தையையும் காப்பது இவன் கடமைதானே. நாய்களுக்காக புருசன் கடமையில் இருந்து பின்வாங்கினால் வாங்கிய கடனுக்கு வழி என்ன. அடுப்பு எரியவேண்டாமா? அடுப்பெரிக்கும் வீட்டுக்காரனின் வாடகை தரவேண்டாமா? மீண்டும் யுத்தம் தொடர்ந்தாள்.

“இன்னைக்கு நாய்க்கு பயப்படுவே. நாளக்கு பூனைக்கு பயப்படுவ. அப்புறம் எலி பூரான் புழுவுக்கெல்லாம். பயப்படுவ… பெத்துக்க தெரியதே… காப்பாத்த வக்கிருக்கனுமில்ல… போ.. போய் குளிச்சிட்டு வந்து படு. சாக்கட நாத்தம் கொடல புடுங்குது.”

அப்புறம் குழந்தைக்கு உறிஞ்சக்கொடுத்து மாராப்பை மூடி இன்னும் இன்னும் பேசினாள். குளித்து கிழித்த போர்வைக்குள் இவன் வலிமுனகளோடு புரண்டான். அவளைச் சொல்லி குற்றமில்லை. இவன் குறை. வாங்கிய வரம் என்பார்களே அந்த வரம். இவன் வேலைக்கு போனால் தானே சோறு, தினக்கூலி. போனால்தான் கூலி. போகாவிட்டால் காலி.

“பகலில் வந்து இதைவிட அதிகமா வேலை செய்யறேன் சார்..” என்று இவன் மேனேஜரிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டான்.

“இல்லையா… ராத்திரியில் தான் வேலை.. இஷ்டமிருந்தா வா…” பிறகென்ன ராவானால் போ.

பால்கொடுத்தபடி குறட்டைவிட்டுக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தான். வாழ்க்கை கனவு காய்ந்து மாய்ந்த மரமாய் பிள்ளை அருகே தூங்கிக் கொண்டு இருக்கிறாள். சகட்டு மேனிக்கு சண்டைக்கு வருகிறாள். நாய் கடித்த பரிதாபம் கூட இல்லை. இவன் தப்பா? இவனா நாய் கடிக்க கால் தந்தான். அவள் அய்யோ என்று ஒரு வார்த்தை பரிதாபப் பட்டால் ஒரு மாதம் வேலைக்குப் போக மாட்டான். பிறகு பிழைப்பு? வலி வலிக்க தூங்கினான்.

மறுநாள். வழக்கமான ஏழாம் மணி எழுந்தான். கால் வலித்தது. நாய் கடித்தது, மனைவி கடித்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. அவள் ஆக்கிவிட்டு, குளித்துவிட்டு இவன் கால்சட்டையின் நாய் கிழிசல்களை தைத்துக் கொண்டிருந்தாள். கடித்தாலும் மனைவிதான் தைக்க வேண்டும். நாயா தைக்கும்.

“எழுந்து மொகம் கழுவிட்டு வந்து சாப்பிடுயா…”

எழுந்து கால் பார்த்தான். நாய் கடித்த இடத்திலெல்லாம் வெள்ளை வெள்ளையாய் சுண்ணாம்பு இருந்தது. இவன் தூங்கும்போது அவள் வைத்தது.

“சாப்டுட்டு கௌம்பு. தருமாஸ்பத்திரி போயி ஊசி போட்டுட்டு வந்திடலாம்.”

ஊசி போட்டுக் கொண்டான். மாலை வந்தது. மனைவி துரத்த ஆரம்பித்தாள். “போய்யோ.. வேலைக்கு போ… இங்க ஒரு புடுங்கலும் இல்லை உனக்கு…”

பிறகென்ன… போனான். வந்தான் போனான். வந்தான். சமீபத்தில் அவனுக்குள் இருக்கும் அந்த தான் தோன்றி சித்தர் ஒரு பழமொழீ சொல்கிறார். “வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *