ரோஸிக்கான தேடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 2,562 
 

அன்று சனிக்கிழமை,எனக்கு நன்றாக நினைவுள்ளது. நானும் என் தங்கை விஜியும் வீட்டிற்குள் தாயம் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மா மளிகை சாமான் வாங்குவதற்காக கடை வீதிக்குச் சென்றிருந்தார். செல்லும்போதே அவர் என்னிடம், ”டேய் ஜகன்,ரெண்டு பேரும் சண்ட போடாம விளையாடனும் சரியா”, அம்மா கடைக்குப் போயிட்டு சீக்கிரம் வந்துருவேன் என்று என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.

நானும் விஜியும் அம்மா சொன்னதை தட்டாமல் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வாசலில் ஒரு சத்தம், “டேய் ஜகன் எதோ சத்தம் கேக்குதுடா வெளிய “ என்று விஜி சொல்ல, நானும் மெல்ல கதவை திறந்து எட்டிப் பார்த்தேன். என் மனதுக்குள் ஒருவித சந்தோசம். கண்களைக் கூட திறக்க முடியாத நிலையில் அழகிய பூனைக்குட்டி ஒன்று வீட்டு வாசலில் முனகிக் கொண்டிருந்தது. ஐய்யோ பாவம் ! என்று பாவம் பார்க்கும் வயதில்லை எனக்கு. அய்ய் பூனை ! என்று பூரிக்கும் வயது.

அப்படி பூரித்துக்கொண்டே அதன் கால்களை பிடித்து தூக்கி என் நெஞ்சின் மேல் வைத்தேன். அதை பூனைக்குட்டி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பார்ப்பதற்கு அப்படியே சிறுத்தையின் குட்டியைப் போலவே இருந்தது. சிறுத்தையினுடைய அதே நிறம், ஆங்காங்கே கரும்புள்ளிகள், இரு கண்களுக்கும் இடையே பிளவுபடும் கருமைநிறக் கோடுகள். அப்படியே டிஸ்கவரி சேனலில் நான் பார்த்த குட்டியைப்போலவே இருந்தது. ஆனால் என்ன, அது ஆணா இல்லை பெண்ணா என்று தான் எனக்கு கண்டுபிடிக்க தெரியவில்லை.

அப்படி நான் அந்த குட்டியை பார்த்துக் கொண்டிருக்க வெளியே வந்த விஜி “அய் பூனை! எவ்ளோ அழகா இருக்கு”, டேய் அதை என்கிட்ட குடுடா என்று பிடுங்க முயற்சித்தால். ம்ம் போ தரமாட்டேன் ! என்று பதிலுக்கு நான் சொல்ல இருவரும் சண்டை போடத் தொடங்கினோம். பாவம் எங்களிடம் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டியோ மியா மியா என்று கதறியது. இருவரும் சண்டை போட, அந்த நேரம் பார்த்து சரியாக அம்மா வர, “ டேய் உங்கிட்ட என்னடா சொல்லிட்டு போனேன்”, சண்ட போடாம இருன்னு சொன்னேன்ல என்று சொல்லி fm ரேடியோவை திருகுவது போல் காதை பிடித்து திருகினார். ஏய் விஜி என்னடி கையில பூனை யாரு குடுத்தா? அம்மா எனக்கு தெரியாது அண்ணாதான் வச்சிருந்தான் என்று போட்டு குடுத்தா கழுத. சரி சரி அத ஓரமா இறக்கி விட்டுட்டு ஒழுங்கா வீட்டுக்குள்ள வாங்க ரெண்டுபேரும். உடனே நான் ‘அம்மாஅம்மா இந்த பூனை ரொம்ப அழகா இருக்கு’, ப்ளீஸ்மா நம்ம கூடவே இருக்கட்டும் என்றேன். அம்மாவோ நோ நோ அதெல்லாம் வேணாம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். என் தாயோ நாய் பிரியர், பூனையென்றாலே அவருக்கு ஒருவித அலர்ஜி. அது ஒரு திருட்டு ராஸ்கல் என்று அடிக்கடி சொல்லுவார்.

என்ன செய்வதென்று தெரியாமல் நான் விஜியை பார்க்க அவள் என்னை பார்க்க இருவரும் தெருவே பார்க்க வாசலில் நின்று கத்தி கூச்சல் இட்டோம் “எனக்கு பூன வேணும் எனக்கு பூன வேணும்” என்று. அம்மாவுக்கோ வேறு வழியில்லாமல் ‘சரி கத்தி ஊர கூட்டாதிங்க அத தூக்கிட்டு வந்து தொலங்க ‘ என்று அனுமதி கொடுத்து விட்டார்.

அய் ஜாலி ஜாலி ! என்று பூனைக்கு முத்தமிட்டபடியே விஜியும் நானும் வீட்டிற்குள்ளே சென்றோம். இருங்க உங்க அப்பா வரட்டும், எல்லாம் அவரு குடுக்குற செல்லம் என்றார் அம்மா. அதற்கு நாங்களோ “அப்பா எங்கள திட்ட மாட்டாரே “ , அவருக்கு பூனனா ரொம்ப பிடிக்குமே என்று நானும் விஜியும் கோரஸ் பாடினோம்.

ஆமா உங்க அப்பாவுக்கு எனக்கு எது பிடிக்காதோ அதுதானே பிடிக்கும் என்று சொல்லி , “ டேய் ஜகன் இங்க வா ! இந்தா இந்த பால கொண்டுபோய் அதுக்கு வை”, பிசாசு கத்திகிட்டே இருக்கு என்று ஒரு கிண்ணம் நிறைய பாலை ஊற்றினார். ஊற்றிய பாலை கொண்டுபோய் பூனையின் அருகில் நான் வைக்க, அதுவோ பாலை குடிக்க மறுத்துவிட்டது.

அம்மா ! பால குடிக்க மாட்டுது.

டேய் ! பால தொட்டு அது நாக்குல வச்சு விடுடா குடிக்கும்.

நானும் பாலைத் தொட்டு அதன் நாக்கில் வைக்க, அது பாலை குடிக்கவேயில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது கபோர்டில் இருந்த பால்புட்டி ஒன்று என் கண்களுக்கு தென்பட்டது. கிண்ணத்தில் இருந்த பாலை பால்புட்டியினுள் நிரப்பி பூனையின் வாயில் திணிக்க , அதை சட்டென்று தன் வாயில் கவ்விக் கொண்டது. எனக்கோ ஆச்சர்யம்! குழந்தை பாலைக் குடிப்பது போலவே இருந்தது அந்த காட்சி என் கண்களுக்கு. அகோரப் பசியில் இருந்திருக்கும் போல, புட்டியில் இருந்த பாலை சொட்டு விடாமல் தீர்த்தது. பின்பு அதை தூக்கி என் மெத்தையில் போட்டு மெல்ல என் கைகளால் தடவிக்கொடுத்தேன். அதன் கண்கள் லேசாக சொக்கத் தொடங்கியது .

அப்போது வாசலில் அப்பாவின் பைக் சத்தம் கேட்க , விஜி வாசலை நோக்கி ஓடினாள். நானும் அவள் பின்னே ஓடி “ அப்பா நம்ம வீட்டுக்கு புதுசா பூன வந்துருக்குப்பா என்றேன்.

அப்படியா, ஏதுடா ஜகா பூன ? யாரு குடுத்தா.

அப்பா அது ரோட்டுல கடந்துச்சுப்பா பாவம் ! என்று விஜி கூற, சரி வாங்க வாங்க பூனையை போய் பார்ப்போம் என்று சொல்லி அப்பா உள்ளே கூட்டிச் சென்றார். நுழையும்போதே அம்மா “ஏங்க உங்க புள்ளைங்க வரவர அடங்கவே மாட்டுதுங்க. ரோட்டுல நின்னுகிட்டு பூன வேணும்னு அடம் பிடிக்குதுங்க என்று பற்றவைத்தார். சரி விடுடி உன் புள்ளங்க உன்னைய மாதிரிதானே இருக்கும். ஹ்ம்ம் இந்த மனுஷனுக்கு இதுகள ஏதாச்சும் சொல்லிட்டா போதும் உடனே என்னய வம்புக்கு இழுத்துருவாரு என்று முணுமுணுத்தார் அம்மா. ஆனால் அப்பாவோ அம்மா பேசுவதை பொருட்படுத்தாமல் மெத்தையில் இருந்த பூனையை தூக்கி, ம்ம்ம் அழகா இருக்கே! இதுக்கு என்ன பேரு வைக்கலாம் என்று யோசித்தார்.

அப்பா இது பையனா இல்ல பொண்ணா? என்றாள் விஜி.

இது உன்ன மாதிரியே அழகான பொண்ணுடா விஜி என்று அப்பா சொல்ல, அய் சூப்பர்! அப்படின்னா இதுக்கு “ரோஸின்னு” நேம் வைப்போமா ? என்றால் விஜி.

ஓ ரோஸி ! நல்லா இருக்கு விஜி இந்த பேரு, அப்படியே வச்சுருவோம்.

ரோஸி ! ரோஸி ! ரோஸி ! என்று மூவரும் ரோஸி காதில் சத்தமாக பாடினோம்.

ஆறு மாதங்கள் கடந்தது. ரோஸி இப்போது பால் புட்டியை மறந்துவிட்டாள். பசி எடுத்தால் போதும், என் அம்மாவின் கால்களையே சுற்றி சுற்றி வருவாள். அம்மாவும் ரோஸிக்கு சாப்பாடு வைத்த பின்பு தான் மறுவேலை பார்ப்பார். தன் வீட்டின் கடைக்குட்டியாகவே ரோஸியை அம்மா செல்லமாக பார்த்துக்கொண்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென்று நாங்கள் வேறு இடத்திற்கு இடம்போக நேர்ந்தது. வீட்டு சாமான்களையெல்லாம் அப்பா வேலை ஆட்களை வைத்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார். அம்மா சட்டி பாத்திரங்களை மூட்டை கட்டிக் கொண்டிருந்தார். நானும் விஜியும் ரோஸியை தேடிக்கொண்டிருந்தோம். ரோஸி ! ரோஸி ! என்று விஜி அழுதவாறே கத்த, ரோஸியோ எதிர் வீட்டு மரத்தின் உச்சியில் அமர்ந்தவாரு சாமான்கள் ஏற்றுவதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

நாம் மனிதர்கள் ! புது இடத்திற்கு எப்படியோ நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம். ஆனால் விலங்குகள் அப்படி அல்ல, அவைகளை இடம் மாற்றுவது சற்று கடினமான வேலைதான்!

நானும் விஜியும் எத்தனையோ முறை ரோஸியை அழைத்தோம். ஆனால் அவள் எங்கள் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. விஜி அழுதுகொண்டே அப்பாவிடம் சொல்ல, அப்பாவோ ரோஸியின் சாப்பாட்டு தட்டை எடுத்து வந்து அதில் பாலை ஊற்றி, “ ரோஸி கம் கம் கமான் “ என்று விசில் கொடுத்தார். ரோஸி மெல்ல மரத்திலிருந்து கீழே இறங்கினாள். கோழியை பிடிப்பது போல சட்டுனு கழுத்தை பிடித்து என் கையில் கொடுத்து, “ டேய் ஜகா பாத்து பத்திரமா பிடிச்சுக்கோ! விட்டுடேனா ஓடிரும் திரும்ப வராது“ என்று பயம் காட்டினார்.

எதிர் வீட்டு பாட்டியோ, “அய்யா பூனைய சாக்கு பையில போட்டு கொண்டு போங்க”. அதுக்கு கண்ணு தெரியக்கூடாது, தெரிஞ்சா எங்க கூட்டு போனாலும் திரும்ப இங்கயே வந்துரும் என்று பயம் காட்டினார். நானும் தேடிப்பிடித்து சிமெண்ட் சாக்கு ஒன்றை எடுத்து வந்து ரோஸியை சாக்கினுள்ளே திணிக்க முயற்சித்த போது அதன் கூறிய நகங்களால் என் உடலை வரிக்குதிரையை போல மாற்றியது. நீண்ட நேரம் போராடி ஒருவழியாக ரோஸியை சாக்கினுள் திணித்து நானும் விஜியும் வேனில் ஏறினோம். அப்பாவும் அம்மாவும் பைக்கில் எங்களை பின்தொடர்ந்தார்கள். சிறிது நேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் புது வீட்டை வந்தடைந்தோம். வேலையாட்கள் சாமான்களை இறக்கி வைத்து கூலியை வாங்கிச்சென்றனர். அவர்கள் சென்றவுடன் வீட்டிலிருக்கும் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, சாக்கில் கட்டியிருந்த ரோஸியை அவிழ்த்து விட்டேன். விட்ட மறு நொடி, பயங்கரமான கூச்சல். மியாவ் மியாவ் என்று கத்தி வீட்டையே ரெண்டாக்கியது .

இப்போது குடியேறிய வீடோ மாடி வீடு, ரோஸி கீழும் மேலுமாக அலை பாய்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவளே தானாக அடங்கிவிட்டாள். சத்தமில்லாமல் கட்டில் அடியில் சென்று படுத்துக்கொண்டாள். போக போக ரோஸிக்கு புது வீடு செட் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் காலையில் அம்மாவை எழுப்பி விடுவதே ரோஸிதான். பால்காரன் வந்துவிட்டால் போதும் அம்மாவுக்கு சிக்னல் கொடுத்து, பாலை கிண்ணத்தில் ஊற்றும் வரை ரோஸியின் சத்தம் ஓயாது.

நாங்கள் புதிதாக குடியேறிய வீட்டின் எதிரே தேவாலயம் ஒன்று இருக்குறது. எங்கள் வீட்டு பால்கனி இரும்பு கம்பிகளால் மூடப்பட்டிருக்கும். அதன் வழியே நானும் என் தங்கை விஜியும் அங்கு நடக்கும் ஆராதனை கூட்டத்தையும், திருமண நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்போம். ரோஸியும் எங்களோடு சேர்ந்து தேவாலயத்தை ரசிப்பாள். அவள் ரசிப்பது அங்கு நடமாடும் மனிதர்களை அல்ல, மாறாக அங்கு நடமாடும் புறாக்களைக் கண்டு . இதுவரை பாலும், பால் சோறும் மட்டுமே உணவாக இருந்த ரோஸிக்கு லேசாக ரத்த வாடை வீசத்தொடங்கியது.

ரோஸி எப்போதும் பால்கனியில் உள்ள சிறு ஓட்டை வழியாகத்தான் வெளியே சென்று ஊரை சுற்றிவிட்டு வருவாள். அன்று ஒரு நாள் அப்படி வரும்போது அவளை பார்த்து என் நெஞ்சம் படபடத்து போனது. ரோஸியின் வாயில் சாம்பல் நிறத்தில் ஒரு புறா, அதன் உடலில் எவ்வித அசைவும் இல்லை, ஆனால் கண்களில் உயிர் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஏய் ரோஸி ! அத விடு விடுன்னு சொல்றேன்ல என்று கத்திக்கொண்டே ஓடி போய் அம்மாவை அழைத்து வந்தேன். அம்மாவும் அவர் பங்கிற்கு “ஏய் ரோஸி அத கீழ விடப்போறியா இல்லையா ? என்று தொடப்பத்தை கையில் எடுத்தார். ரோஸியோ எங்கள் இருவரின் குரலுக்கும் செவி சாய்க்கவில்லை.

புறாவின் ரத்தத்தை ருசி கண்டவாறே அதைக் கவ்விக்கொண்டு சிலிண்டர் வைத்திருக்கும் கபோர்ட்டின் உள்ளே நுழைந்தாள். எங்கள் கண்களோ ரோஸியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் கடக்க ரோஸி தன் வாயின் இடும்பில் இருந்த இரத்தத்தை நாக்கால் நக்கியவாறு கபோர்டை விட்டு வெளியே வந்தாள். அந்த தருணம் டிஸ்கவரி சேனலில் வரும் சிறுத்தை தான் என் நினைவுக்கு வந்தது.

அப்பா வந்தவுடன் த்ரில்லர் மூவியின் கதையை சொல்வது போல நடந்ததை அப்படியே சொன்னேன். ஆனால் அப்பாவோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஜகா ! “ பூனைனா புறாவை சாப்பிடதாண்டா செய்யும்” என்று சிம்பிளாக முடித்துவிட்டார். காரணம் அப்பாவோ அவரது சிறுவயது முதலே பல பூனைகளை வளர்த்தவர். அதனால் அவருக்கு அந்த நிகழ்வு பெரிதாக தெரியவில்லை. சரி போகட்டும் என்று நாங்களும் விட்டுவிட்டோம்.

ஆனால் ரோஸியின் வேட்டையோ முடிந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு புறாவை வேட்டையாடி வீட்டிற்கு கொண்டுவந்தாள். இப்படி தொடர்ந்து கொண்டே இருக்க, வழக்கம்போல ஒரு நாள் காலை வேலை பால்கனியில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக தன் இரையைத் தேடி வெளியே போனாள். போனவள் போனவள்தான்! எங்கு போனாளோ யாருக்கு இரை ஆனாளோ எனக்கு தெரியவில்லை. அவளை நான் தேடாத இடம் இல்லை .

எல்லோரும் பெண் பூனை வீட்டில் தாங்காது ஜகன்! என்று எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால் என் மனமோ அதை ஏற்கவில்லை. என் ரோஸி என்னை தேடி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்றும் என் வீட்டு வாசலில் ஏதோ ஒரு பூனையின் சத்தம் கேட்டால் போதும், அது என் ரோஸியாக இருக்க கூடாதா என்று என் மனம் ஏங்கும். இன்றும் என் கண்கள் அவளையே தேடுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *