கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,317 
 

கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத்.
ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க அறிஞர்கள், இமாம் என, எல்லாரும் கூடியிருந்தனர்.
பள்ளிவாசல் கணக்குப் பிள்ளை மைதீன், வழக்கின் சாராம்சத்தைப் பார்த்தார்.
வடக்கு ஜமாஅத்தைச் சார்ந்த பொறியாளர் ஷம்சுதீன்; வயது 30. பனவிளையைச் சேர்ந்த ஆசிரியை ரீமா; வயது 25. இருவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன், இரு ஜமாஅத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, நசீரா என்ற, இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
ரீமாஷம்சுதீன், குடித்துவிட்டு வந்து, தன்னை அடிக்கிறார் என்றும், குழந்தைக்கும், தனக்கும் செலவினங்களுக்கு பணம் தருவதில்லை என்றும், அதனால், தனக்கு கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனவும் கோரினார் ரீமா.
அதற்கு ஷம்சுதீன் மறுக்க, குலா முறையிலாவது தன்னை விவாகரத்துச் செய்ய வேண்டும் என, ரீமா வேண்டி கொள்ள, அதற்கு, ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என நிபந்தனை விதித்தார் கணவர்; அதைச் செலுத்தி, குலா முறையில் விவாகரத்துப் பெற்றார் ரீமா.
இந்நிலையில், அவர்களுக்குப் பிறந்த நசீரா, யாருக்குச் சொந்தம் என்பது தான் வழக்கு…
வழக்கின் சாராம்சம் படித்து முடித்ததும், ஷம்சுதீனை அழைத்தார் தலைவர்.
“”இங்க வா ஷம்சு…. குழந்தை விஷயமா என்ன சொல்றே?”
“”குழந்தைக்கும், எனக்கும் சம்பந்தமில்லை!”
“”என்ன சொல்றே?”
“”குழந்தை எனக்குப் பிறக்கல!”
“”இது அபாண்டம்… அநியாயம்!” பெண்கள் பகுதியில் இருந்த ரீமா, கத்தினாள்.
“”ஏம்மா… நீ சும்மா இரு; உன்னைக் கேட்கும் போது, நீ பேசலாம்.”
“”நீ என்னப்பா சொல்றே?”
“”இந்த குழந்தை, எனக்கு பிறக்கல; எனக்கும், அதுக்கும் சம்பந்தம் இல்ல.”
“”இது உண்மையா?” – ஷம்சுதீன் குடும்பத்தினரை நோக்கிக் கேட்டார் தலைவர்.
“”இல்லீங்க… அந்த பொண்ணு மேலே உள்ள கோபத்துல இப்படி பேசறான்.”
“”அதுக்காக இப்படியா பழி போடுறது?”
“”நல்லா கேளுங்க!” – ரீமா குறுக்கிட்டாள்.
“”ஏம்மா… நீ சும்மா இருக்க மாட்டீயா?” – அதட்டினார் தலைவர்.
“”ஏம்பா ஷம்சு… நீ சொல்றது எவ்வளவு பெரிய பாவம்ன்னு உனக்குத் தெரியுமா? பத்தினிப் பெண்கள் மேல இட்டுக்கட்டறது பெரும் பாவம்ன்னு, நம்ம நபி சொல்லியிருக்காங்க. அவ மேல உள்ள வெறுப்புல, இதைச் சொன்னாலும் பாவம் தான்.”
“”முடிவா என்ன சொல்றே?”
“”அந்த குழந்தை எனக்கு வேணாம்.”
“”நீ என்னம்மா சொல்றே… இப்ப சொல்லு?”
“”அந்த ஆளோட குடித்தனம் நடத்தினதுல, இந்த குழந்தையைத் தவிர, வேறு எந்த நன்மையும் இல்லை. பெரிய இன்ஜினியர்ன்னு பேரு; கிரியேட்டிவிட்டி கிடையாது. இவரோட ஜூனியர்கள் தயவுல தான், வண்டி ஓடுது. வீட்டு நிர்வாகத்துல சரியான தத்தி. ஆரம்பத்துல அன்பா இருந்தவரு, அடியோட மாறிட்டாரு. முதல் மாசத்துல ஒரு நாள், பார்ட்டின்னு குடிச்சிட்டு வந்தவரு, சமீபத்துல தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சாரு. சிகரெட்டால, உடம்புல சூடு வைக்க ஆரம்பிச்சாரு. அதையெல்லாம், இந்த குழந்தைக்காக பொறுத்துக்கிட்டேன்.
“”ஒரு நாள் என்னை, பக்கத்து வீட்டுக்காரரோட இணைச்சிப் பேசினாரு; அடிக்கடி சந்தேகப்பட்டாரு. போக, போக சரியாயிடும்ன்னு நெனைச்சேன்; சரியா வரல. அது, ஒரு நோயா மாறிப் போய் தினம், தினம் என்னை சித்ரவதை செய்ய ஆரம்பிச்சாரு.
“”என்னை தலாக் விடுங்க… குழந்தையோட நிம்மதியா இருந்துட்டுப் போறேன்னு சொன்னேன்; அதையும் கேட்கல. அப்பத்தான் அந்த முடிவெடுத்தேன்.
“”எங்க ஊரு இமாம்கிட்டே போய், என்னோட நிலைமையை விளக்கினேன். கணவர்கிட்டேயிருந்து பிரியறதுக்கு வழி இருக்கான்னு கேட்டப்போ, “குலா’ முறையை விளக்கினாரு.
“”குலாங்கறது, கணவன் தன்னை விவாகரத்து செய்யும்படி மனைவி கேட்பது. விவாகரத்துச் செய்ய கணவன் ஏதாவது நிபந்தனையிட்டால், அதை, மனைவி ஏற்றுக் கொள்வது. இந்த மாதிரி செய்துக்கலாம்ன்னு சொன்னப்போ, இதை, அவருகிட்ட தெரிவிச்சேன். அவருக்கு அப்ப இருந்த பண நெருக்கடியில, ஒரு லட்சம் ரூபாய் கேட்டாரு; கஷ்டப்பட்டு கொடுத்தேன். குழந்தையை கேட்டப்போ, தர மாட்டேன்னு சொல்லி, என்னை கன்னத்துல அடிச்சி, வீட்டை விட்டு துரத்தினாரு. இப்ப அவரு, வேற ஒரு திருமணம் செய்துக்கப் போறதாகவும், அதுக்கு இடைஞ்சலா இருக்கிற குழந்தையை என்கிட்ட ஒப்படைக்கப் போறதாகவும் கேள்விப்பட்டேன். அன்னிக்கி நான் கெஞ்சிக் கேட்டப்போ, என்னோட குழந்தையை தராம அவமானப்படுத்தினதால, இப்ப நான் ஒரு முடிவோட இருக்கேன்.”
“என்ன முடிவு?’ – கூட்டம் உன்னித்தது.
“”எனக்குக் குழந்தை வேண்டாம்!”
கூட்டம் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தலைவர் வாய் விட்டே கேட்டு விட்டார்…
“”என்னம்மா சொல்ற… அது, உன் குழந்தை!”
“”அது என்னோட குழந்தைதான்; அது, எனக்குத் தெரியும். உலகத்துல உண்மையான தந்தை யாருன்னு அம்மாவுக்குத் தான் தெரியும். அவ சொல்லித்தான், மத்தவங்களுக்குத் தெரிய வரும். இது, என்னோட குழந்தையா, இல்லையாங்கிறது பிரச்னையில்ல… குழந்தை யாருகிட்டே இருக்குங்கறது தான் பிரச்னை. நான் இப்பவும் சொல்றேன்… அது, என்னோட குழந்தை தான்; ஆனா, அது எனக்கு வேணாம்.”
“”பொம்பள புள்ளே, அம்மாகிட்டே வளரணும்; அது தான் ஊர் வழக்கம்,” – ஷம்சுதீன் குறுக்கிட்டான்.
“”பொல்லாத ஊர் வழக்கம். ஒழுங்கா குடித்தனம் பண்றது தான் ஊர் வழக்கம். நீ அதை செஞ்சியா? இதைச் சொல்ல உனக்குத் தகுதியே இல்லை!” – கத்தினாள் ரீமா.
“”நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டா, அப்புறம் இந்த கோர்ட் எதுக்கு? நீ பேசாம இரு ஷம்சு. ரீமா… நீ சொல்லு!” – அதட்டினார் தலைவர்.
“”முடிவா சொல்றேன்… எனக்கு குழந்தை வேணாம்.”
“”ஏம்மா… அது பெண் குழந்தை… அதை மனசுல வச்சுப் பேசு!”
“”எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றேன்.”
“”அவன் இன்னொரு கல்யாணம் செய்துக்கப் போறான். புதுசா வர்றவ, உன்னோட பொண்ணை கொடுமைப்படுத்தினா என்ன செய்வே?”
“”அது, எனக்கு மட்டும் குழந்தையல்ல; அவருக்கும் தான். சொல்லப் போனா, நம்ம மார்க்கச் சட்டத்துல, தகப்பனுக்குத் தான் குழந்தை சொந்தம். குழந்தை மேல அக்கறை இருந்தா, நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செஞ்சிக்கிடட்டும்; இல்லன்னா, அந்த குழந்தையோட தலைவிதி போல நடக்கட்டும்.”
“”இது தான் உன் முடிவா?”
“”ஆமா!”
“”அடுத்து என்ன செய்யப் போற?”
“”என்னோட இந்த பிரச்னை முடிஞ்சதும், வீட்ல பெரியவங்க பார்த்திருக்கிற, காய்கறி வியாபாரியை கல்யாணம் செய்துக்கப் போறேன்.”
ரீமாவின் முடிவைக் கேட்டு, ரொம்பவே ஆடிப் போனான் ஷம்சுதீன். குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் வரதட்சணை வாங்கி, புதுப்பெண்ணை திருமணம் முடித்து, ஜாலியாய் இருக்கலாம் என கணக்குப் போட்டவனுக்கு, இது பேரிடியாய் அமைந்தது.
“”அப்ப அடுத்து என்ன செய்ய?” – தலைவர் ஷரீஅத், கோர்ட்டைக் கேட்டார்.
“”குழந்தையை இரண்டு பேரும் வேண்டாம்ன்னு சொல்றாங்க. இதுல மார்க்கக் கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கலாமே!”
வழக்கறிஞர் சொல்ல, மார்க்க அறிஞர்கள் முன்வந்தனர்.
“”மறுமணம் செய்யாத வரைக்கும், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை தாய்க்குத் தரலாம் என, மார்க்கம் சொல்கிறது. இந்த வழக்கில், தாய் மறுமணம் செய்துக்கப் போறதாலயும், தகப்பனுக்குத் தான் குழந்தை சொந்தம் என்பதாலயும், குழந்தை, ஷம்சுதீனிடம் வளர்வது தான் சிறந்தது. குழந்தையை வளர்க்கும் விஷயத்துல, அவரு அல்லாஹ்வை பயந்துகிடணும்.”
மார்க்கக் கருத்தை கேட்டு முடித்த தலைவர், “”மார்க்கத்தின் முடிவுப்படி, குழந்தையை ஷம்சுதீனிடம் இக்கோர்ட் ஒப்படைக்கிறது,” என அறிவித்தார்.
கோர்ட் கலைந்ததும், கனத்த இதயத்தோடு, குழந்தையின் அருகில் வந்தாள் ரீமா. அழுந்த முத்தமிட்டு அனுப்பினாள். வேறு வழியின்றி, குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தான் ஷம்சுதீன்.

ரீமாவின் வீடு —
கனத்த மவுனத்தில் பெற்றோரும், உறவினர்களும்.
தனியறையில் இருந்தாள் ரீமா; கூடவே, தோழி சலீமா.
“”என்னடி… யாரு அந்த காய்கறி வியாபாரி?”
– சலீமா கேட்டாள்.
“”என்னோட மாமா மகன்.”
“”அவரை கல்யாணம் செய்துக்கப் போறீயா?”
“”என்னோட பெற்றோருக்காக சம்மதிச்சிருக்கேன்.”
“”அது சரி… அநியாயமா இப்படி, குழந்தையை தூக்கிக் கொடுத்துட்டு வர்றியே!”
“”அது ஒரு காரணமாகத்தான்.”
“”என்ன காரணம்?”
“”போகப் போக புரிஞ்சுப்பே!” – ரீமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அலைபேசி அழைத்தது. எதிர்முனையில், ஷம்சுதீனின் அம்மா. ஸ்பீக்கரை ஆன் செய்தாள் ரீமா; உறவுகள் சூழ்ந்து நின்றன.
“”சொல்லுங்க மாமி… நான் ரீமா.”
“”ரொம்ப நன்றிம்மா!”
“”ஏன் மாமி, இதுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டு!”
“”இல்லம்மா… உலகத்துல எந்த தாயும் செய்யத் துணியாத தியாகத்தை, நீ செஞ்சிருக்க… என்னோட மகனை திருத்தறதுக்காகவும், எனக்குத் துணையாகவும், உன்னோட குழந்தையை, நான் சொல்லிக் குடுத்தது மாதிரி நடிச்சு, விட்டுட்டுப் போயிருக்க…”
“”அது, உங்க பேத்தி தானே!”
“”இருக்கலாம்… ஆனாலும், ஒரு குடிகார அப்பன் கிட்ட தூக்கிக் கொடுக்க மனசு வரணுமே!”
“”நான் இப்பவும் சொல்றேன் மாமி… அவருக்காக கொடுக்கல… உங்க முகத்துக்காக, பெத்த மகளைப் போல என்னை நடத்தின விதத்துக்காக, இதை செஞ்சேன். என்னோட மகளுக்கு எப்ப பிரச்னையானாலும் சரி… ஒரு போன் போடுங்க… உடனே வந்து, தூக்கிக்கிட்டு வந்திடுவேன். நான் கட்டிக்கப் போறவர் கிட்ட, இதைப் பற்றி பேசியிருக்கிறேன். அவரும் நல்லா கவனிச்சுப்பார்.”
“”உன்னோட நல்ல குணத்துக்கு, ஒரு குறையும் வராது!”
“”சரி மாமி… துஆ செய்யுங்க…”
“”இறைவன், உனக்கு சிறப்பான வாழ்க்கையைத் தருவான். அப்புறம், எனக்காக இன்னொரு உதவியும் செய்யணும்…”
“”உங்க பையனோட வாழறதை தவிர, வேறு எது வேணாலும் கேளுங்க மாமி!”
“”அவன் மேல உள்ள கோபத்தால, அவனை சபிக்கக் கூடாது.”
“”சரிங்க மாமி…”
விழியோரம் துளிர்த்த நீரை, ரகசியமாய் துடைத்துக் கொண்டாள் ரீமா.
நள்ளிரவு —
தூக்கம் வராமல், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ரீமா. வாசல் கதவை, எலி சுரண்டுவது போல, “கிரக், கிரக்’ ஓசை கேட்டது.
யோசனை செய்தவாறே, எழுந்து கதவைத் திறந்தாள்; தூக்கி வாரிப் போட்டது. தலையெல்லாம் கலைந்து, அழுது வீங்கிய முகத்துடன், இரண்டு வயது மகள் நசீரா நின்றிருந்தாள்!
மகளை கண்டதும், ஓடிப் போய் கட்டிக் கொண்டாள் ரீமா.
“”எப்படிம்மா வந்தே?”
“”நடந்து, நடந்து வந்தேன்… என்னை ஏம்மா அத்தாகிட்ட விட்ட?”
பதில் சொல்லாமல் அழுதாள் ரீமா. மகளின் முகத்தை, புடவை நுனியால் துடைத்து விட்டாள்.
“”அத்தா மேல நாறுதும்மா… அத்தா கண், தக்காளி பழம் மாதிரி இருக்கும்மா. அத்தாவா அது, பூச்சாண்டி… என்னை எந்த பூச்சாண்டி கிட்டயும் விடாதம்மா; எனக்கு பயமா இருக்கு. என்னை கட்டிப் பிடிச்சுக்கம்மா…”
முன்னாள் மாமியாருக்கு செய்து கொடுத்த அர்த்தமற்ற சத்தியத்தையும், தன் வீட்டாரின் திருப்திக்காக செய்ய இருந்த மறுமண எண்ணத்தையும், இதயத்திலிருந்து துடைத்தெறிந்தாள் ரீமா.
“”இனி, நீ தான் எனக்கு எல்லாம் செல்லக்குட்டி… உனக்கு தாய்ங்கிற சந்தோஷத்தை விட, வேற எதுவும் எனக்கு வேணாம். இறைவன் என் மன உறுதியை, ஆயுளுக்கும் நீடிக்க வைக்கட்டும்!” என்றபடியே மகளை இறுக தழுவிக் கொண்டாள்.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *