ரிஸ்ட் வாட்ச்

 

அறுவை சிகிச்சை முடிந்து பதினைந்து நாள் நர்ஸிங்ஹோம் வாசத்திற்குப் பிறகு சரஸ்வதி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள்.

மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டி, உதடுகள் உலர்ந்து தளர்வாகக் காணப்பட்டாள். மெல்லிய குரலில் கணவனிடம், “எல்லாம் எடுத்துக் கொண்டீர்களா? பில் செட்டில் பண்ணியாச்சா?” என்றாள்.

“செட்டில் பண்ணியாச்சு, எல்லாத்தையும் எடுத்துண்டாச்சு. டாக்ஸி ரெடியா இருக்கு நீ கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.”

“ஆயாக்களுக்குப் பணம் கொடுத்தீர்களா?”

“அதான் முப்பதாயிரத்துக்கு பில் செட்டில் பண்ணியாச்சே. ஆயாக்களுக்கும் சேர்த்துதானே பணம் கட்டினோம், பின்ன எதுக்கு தனியா நாம பணம் தரணும்?”

“என்னங்க நீங்க புரியாம பேசறீங்க, இந்தப் பதினைந்து நாட்கள் ராத்திரி பகலா எனக்கு டிரிப்ஸ் மாத்தி, என் மலம் மூத்திரம் கழுவி, மாற்றுடை அணிவித்து என்னை எவ்வளவு நல்லா கவனிச்சாங்க? அவங்களுக்கு ஒரு ஐம்பது ரூபா குடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க… எதுலதான் சிக்கனம்னு ஒரு விவஸ்தை கிடையாதா?” தொடர்ந்து பேசியதில் சரஸ்வதிக்கு மூச்சிரைத்தது.

“அவங்க ட்யூட்டியைத்தான செஞ்சாங்க சரசு. இதுக்கெல்லாம்தான் அவங்களுக்கு சம்பளம் தராங்க.” சந்தானம் சற்று கண்டிப்புடன் கூறியதும் மேற்கொண்டு தர்க்கம் பண்ண திராணியற்று மெளனமானாள் சரஸ்வதி.

திருமணமான கடந்த இருபது வருடங்களாகவே சரஸ்வதிக்கு சந்தானத்தின் இத்தகைய கஞ்சத்தனம் ஒரு தீராத மனக்குறைதான்.

ஹோட்டலுக்குச் செல்வான். ஆனால் சர்வருக்கு காலணா டிப்ஸ் வைக்க மாட்டான். ஸ்கூட்டரை பார்க்கிங்கிலிருந்து எடுக்கும்போது ஓடி வந்து காசு கேட்கும் பையனுக்கு ஒரு பைசா தர மாட்டான். “சார் சார்” என்று அவன் பின்னாலேயே பையன் ஓடி வந்தால், “உன்னை யார்ரா என் ஸ்கூட்டரைப் பார்த்துக்கச் சொன்னது” என்று விதண்டாவாதம் பேசுவான். பதை பதைக்கிற வெய்யிலில் இரண்டு மாடி ஏறி காஸ் சிலிண்டர் டெலிவரி செய்தவனுக்கு ஒரு வாய் நீர் மோர் கொடுத்தால், “அவனுக்கு எதுக்குடி மோர், இங்க என்ன கொட்டியா கிடக்கு? அவனுக்குத்தான் சம்பளம் தராங்க இல்ல?” என்று சண்டைக்கு வருவான்.

எல்லாம் எடுத்தாகிவிட்டதா என மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்ட பிறகு சந்தானம் ஆயாவை அழைக்க, வெள்ளைச் சீருடையில் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தாள் ஆயா.

ஆயா சரஸ்வதியை மிகவும் ஜாக்கிரதையுடன் நாற்காலியில் அமர்த்தி, அறையை விட்டு வெளியே கொண்டுவந்தாள். சர்வீஸ் லிப்டின் கதவைத் திறந்து நாற்காலியை மெதுவாக உள்ளே தள்ளியதும், சந்தானமும் லிப்டில் நுழைந்து கொள்ள கதவைச் சாத்தி பட்டனை அமுக்கினாள்.

ரிசப்ஷன் ஹாலைத் தாண்டி போர்ட்டிகோவில் டாக்ஸி தயாராக நிற்க, அதனருகில் நாற்காலியை தள்ளிச் சென்றாள் ஆயா.

சரஸ்வதி கண்கள் கலங்க ஆயாவின் கைகளைப் பற்றிக்கொண்டு, “ரொம்ப நன்றி வடிவு, ஒரு தாயைப் போல என்னைக் கவனித்துக் கொண்டாய். உன்னோட அன்பும் முகம் கோணாமல் என்னைப் பார்த்துக்கொண்ட பரிவும்…” குரல் உடைந்து கண்களில் நீர் முட்டியது.

“என்னம்மா நீங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு, உடம்பை நல்லா பார்த்துக்குங்கம்மா, அடிக்கடி செக்கப்புக்கு வாங்க.” சரஸ்வதியை கைத்தாங்கலாக அணைத்து டாக்ஸியினுள் அமர வைத்தாள். சக்கர நாற்காலியை தள்ளி நிறுத்தினாள்.

சந்தானம் சரஸ்வதியின் அருகில் அமர டாக்ஸி கிளம்பியது.

ஆயா வடிவுக்கு டிப்ஸ் தராதது சரஸ்வதிக்கு ஒரு பெரிய குறையாகப் பட்டது. அரற்றிக் கொண்டே வந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் சரஸ்வதியை கட்டிலில் தளர்வாக படுக்க வைத்தான் சந்தானம். சட்டென்று நினைவு வந்தவளாக, “என்னங்க என்னோட ரிஸ்ட் வாட்சை ஆஸ்பத்திரியில் தலையணைக்கு அடியில் வைத்திருந்தேனே. எடுத்து வந்தீர்களா?” என்றாள்.

சந்தானத்திற்கு முணுக்கென்று கோபம் வந்தது. “நான் ஷெல்ப், டேபிள் டிராயர் எல்லாம் பார்த்தேன். நீ தலையணைக்கு அடியில் வைத்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? புத்தம் புதிய ரிஸ்ட் வாட்ச்… யாராவது எடுத்திருப்பாங்க, நிச்சயம் அது கிடைக்காது. உனக்கு கொஞ்சமேனும் அக்கறை இருந்தாத்தானே…” எரிந்து விழுந்தான்.

“எனக்கு அங்கு வச்சது மறந்தே போச்சுங்க” மன்னிப்பு கேட்கும் குரலில் வருந்தினாள்.

‘சரி சரி, நான் மறுபடியும் நர்ஸிங் ஹோமுக்கு உடனே போய்ப் பார்க்கிறேன். ஆயிரம் ரூபாய் வாட்சு, ஒரு மாசத்துக்கு முன்னாலதான் வாங்கியது. இவளோட பெரிய ரோதனையாப் போச்சு.”

முணுமுணுத்தபடி வெளியே வந்து தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.

நர்ஸிங் ஹோம்.

ஸ்கூட்டரை அவசர அவசரமாகப் பார்க் செய்துவிட்டு, ரிசப்ஷனைத் தாண்டி லிப்டை நோக்கி விரைகையில், “சார், சார்” என்று எவரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

“சார், உங்க வீட்டம்மா ரிஸ்ட் வாட்சை மறந்து விட்டுட்டாங்க, ரூம கிளீன் பண்ணும்போது பார்த்தேன்… எடுத்து ரிசப்ஷன்ல கொடுத்திருக்கேன்… வாங்கிக்குங்க” புன்னகையுடன் சொன்னாள் ஆயா வடிவு.

டியூட்டி முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தாள். கலர் புடவையில் மாறியிருந்தாள்.

ரிசப்ஷன் சென்று ரிஸ்ட் வாட்சைப் பெற்றுக்கொண்ட சந்தானம், நர்ஸிங் ஹோமைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஆயா வடிவை பரபரப்புடன் நெருங்கி, தன் பர்ஸை எடுத்து ஐம்பது ரூபாய்த் தாளை உருவி, “இந்தாங்க இதை வெச்சிக்குங்க” என்று நோட்டை நீட்டினான்.

“எனக்கு எதுக்குங்க இதெல்லாம்” மறுத்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராது, அருகிலிருந்த பஸ் நிலையத்தை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.

ஆயாவின் நேர்மையை எண்ணி வியந்தான்.

சந்தானத்துக்கு எதுவோ புரிய மிகவும் வெட்கிப் போனான். வடிவு தனக்கு எதையோ உணர்த்தி விட்டதாக நினைத்தான். ரிஸ்ட் வாட்ச் கிடைத்த சந்தோஷம் அடிபட்டுப் போய், மனம் தொய்ந்த நிலையில் ஸ்கூட்டரை எடுத்தபோது, பார்க்கிங் பையன் அருகில் வந்து நின்றான்.

சந்தானம் நிதானமாக பர்ஸைத் திறந்து கையில் கிடைத்த நாணயங்களை அள்ளி எடுத்து, பையனிடம் கொடுத்தான்.

- ஓம் சக்தி, ஆகஸ்ட் 2005 

தொடர்புடைய சிறுகதைகள்
தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் நடிகர் பிஸ்வஜித்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர்தான் தமிழகத்தின் தற்போதைய உச்ச நடிகர். மிகவும் பண்பானவர். கோடி கோடியாக சம்பாத்தித்தாலும், திரைப்படத் துறையில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்களுக்கு நிறைய வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் நலம்பெற வாழ ...
மேலும் கதையை படிக்க...
அந்தச் சின்னைக் கிராமத்தில் 1970 களில் ஒரு அக்கிரஹாரம் இருந்தது. ஆனால் இப்போது அதில் பல ஜாதியினரும், ஏன் பல மதத்தினரும் கூட குடியேறி விட்டனர். அது அக்கிரஹாரமாக இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் காவியுடை அணிந்த ஒரு வயதான சாமியார் தன்னுடைய ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில் இருக்க முடியாது. உலகின் மற்ற பிரபல கணினி நிறுவனங்கள் அவரை தன் பால் இழுக்க முயன்றாலும், டாக்டர் ஹர்ஷவர்த்தன் மிகப் ...
மேலும் கதையை படிக்க...
டாடா நகர், பெங்களூர். இரவு பத்து மணி. உடம்பை வருடும் குளிருடன் மழை தூறிக் கொண்டிருந்தது. அரைகுறை இருட்டில் வாசலில் வந்து யாரோ “சார்” என்று அழைப்பது போன்றிருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று அவன் திகைத்தான். வாசற்கதவை திறந்து எட்டிப் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
பாண்டிய அரசன் பராந்தகப் பாண்டியன் (கி.பி 880-900) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அறிவாளியான அந்த அரசனுக்கு ஒருநாள் இரவு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை உடனே தன் மனைவியும், நாட்டின் அரசியுமான வானவன் மாதேவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
எழுச்சி
சம்ஸய ஆத்மா விநஸ்யதி
மேகக் கணிமை
உதவி
வேசியிடம் ஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)