Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரஜினியும் அப்பாவும்

 

ரஜினிக்கும் என் தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு.

சாத்தூர் வேல்சாமி நாயக்கர், அப்பாவின் பால்ய நண்பர். இருவருக்கும் அப்படியரு நெருக்கம். ஒருவருக்கொருவர் கலந்துகொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்டிக்கொள்ள பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. வேல்சாமி நாயக்கர், அப்பாவைவிட ஐந்து வயது சிறியவர். வேறு ஊர்க்காரர். தெலுங்கர். இருவரும் தீப்பெட்டி கம்பெனி ஒன்றில் ஃபோர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப் பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். அப்பாவோ உள்ளூரிலேயே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து, சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

என்னதான் கோடீஸ்வரர் என்றாலும் நட்பென்று வந்துவிட்டால், வேல்சாமி நாயக்கர் பிசிராந்தையாருக்கே சவால் விடுகிற ஆசாமி. எத்தனை பெரிய வேலை என்றாலும், அப்பாவுக்கோ எங்களுக்கோ ஏதாவது பிரச்னை என்றால், உடனே ஓடி வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது, நேற்று வரை!

வேல்சாமி நாயக்கரின் தொழில் வட்டாரத்தில் நெருங்கிய சக தொழிலதிபர்கள், ரஜினிக்கு

அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும் வேடிக்கைப் பேச்சும் ரஜினியை ஈர்த்திருக்கிறது. இருவரும் சந்தித்துப் பேசும்போதெல்லாம், வேல்சாமி நாயக்கரின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்துச் சொல்லும் விஷயங்களில் சுவாரஸ்யமான ரஜினி, அப்பாவைச் சந்தித்தாக வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில், ரஜினி ஒரு வெடி வியாபாரி போல வேடமிட்டு, அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த என் அப்பாவிடம், “வேல்சாமி நாயக்கர் எங்களை அனுப்பி வெச்சார். ஒரு திரு விழாவுக்கு வெடி செய்யக் கொஞ்சம் மருந்து வேணும்!” என்றார். குழம்பிப்போன என் அப்பா, “வேல்சாமி அப்படிச் சொல்லியிருக்க மாட்டானே. சட்டத்துக்குப் புறம்பான எதையும் அவன் பேசக்கூட மாட்டான். சரி சரி… வந்தது வந்துட்டீங்க. வேல்சாமி பேரைச் சொன்னதுக்காக, ராத்திரி இங்கே தங்கிட்டு, காலைல முதல் பஸ்ல ஊரைப் பார்க்கக் கிளம்புங்க” என்று சொல்லி, அவர்களுக்கு அந்த நட்டநடு ராத்திரியில் உப்புமா செய்து கொடுத்துவிட்டு, உறங்கப் போனார். தம் வாழ்நாளில் ‘மிஸ்ஸியம்மா’ தவிர, வேறு படங்கள் பார்த்தறியாத அவருக்கு ரஜினியை எப்படித் தெரியும்? அதிகாலை காபியோடு எழுப்பிய அப்பா, ஒரு ரிக்ஷாவை அமர்த்தி அவர்களை அனுப்பிவைத்தார்.

மறுநாளே வேல்சாமி நாயக்கரைச் சந்தித்த ரஜினி, அப்பாவின் விருந்தோம்பல் பண்பையும், எத்தனை பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத ஒழுக்கத்தையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். முன்பின் அறியாத நபரையும் அப்பா உபசரித்தபாங்கில் அசந்துபோன ரஜினி, அடுத்த முறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, ஒரு நாள் நள்ளிரவில் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் எங்கள் வீடு வந்து சேர்ந்தார். கதவைத் திறந்த அப்பாவிடம், “நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். இந்தப் பக்கம் ஒரு ஷ¨ட்டிங்குக்கு வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்குத் தெரிந்தால் கூட்டம் கூடிவிடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். மீண்டும், அதே உப்புமா… அதே காபி. ஏழைக் குடியானவர்களுக்கே உரிய அதே எளிய உபசாரங்கள். பெரியோரை வியத்தலும் இலமே…. சிறியோரை இகழ்தலும் இலமே!

உண்மையில், பணக்காரர்களிடம் பழகுவதை அறவே வெறுப்பவர் அப்பா. ஒரே விதிவிலக்கு வேல்சாமி நாயக்கர்தான். ரஜினிதான் வம்படியாக அப்பாவை நண்பராக்கிக்கொண்டார். ரஜினி எத்தனை முறை அழைத்தாலும், அப்பா அவரது வீட்டுக்குச் செல்வதில்லை. ஆனால், தொழில் நிமித்தமாக சென்னை செல்ல நேர்ந்தால், லதா ரஜினிகாந்த்துக்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்குக் கோவில்பட்டி கடலை மிட்டாய், தடியங்காய் அல்வா (சௌந்தர்யாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்) வாங்கிச் செல்லத் தவறியதே இல்லை.

ரஜினி வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்கவே மாட்டார். யார் என்ன சொன்னாலும், அவசர வேலை என்று நழுவிவிடுவார். ஒருமுறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது, எதிர்ப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், “ரஜினி என்ன சொன்னார்?” என்று கேட்டதற்கு, “உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்கச் சொன்னார்” என்று வேடிக்கையாகப் பதில் சொல்லிவிட்டு வந்தார். அப்பாவுக்கு தினமணி பேப்பர் என்றால், அவ்வளவு பிரியம். ‘கை கொடுக்கும் கை’ படத்தில் ரஜினியின் நடிப்பு அருமை என்று தினமணி பாராட்டி எழுதியதற்குப் பிறகுதான் அப்பா ஒப்புக்கொண்டார், ரஜினி நல்ல நடிகரென்று!

ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது, “குழந்தைகளை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்துக்கே சொல்லிக் கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கார் உங்களை” என்று அடிக்கடி சொல்வார். வெகு அரிதாக சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த், எங்களுக்காக நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அவர் எவ்வளவு வற்புறுத்தி எங்களிடம் இனிப்பைத் திணித்தாலும், அப்பாவின் கண்ணசைவு இல்லாமல், அதை நாங்கள் வாயில் வைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது, “திருவிழாச் செலவுக்கு வெச்சுக்கோங்க” என்று எங்கள் பையில் பணத்தைத் திணிப்பார் லதா. அவர் ஊருக்குக் கிளம்பும் வரையில் பொறுமையாக இருந்துவிட்டு கிளம்பும் சமயத்தில், “அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்’’ என அவரது கையில் திணித்துவிட்டு, ஓடி ஒளிந்துகொள்வோம்.

பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களான சமயத்தில், ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தன. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம்.

தனது தனிமை, நிம்மதி இரண்டும் கெடுவதாக அப்பாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருந்தினார் ரஜினி. அவருக்கு ஆறுதல் அளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும் நாங்களுமாக பதினைந்து பக்கத்துக்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்பப் பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில், ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும் அர்ச்சனை செய்வதும் தொடர்ந்…….

பேப்பர் சரேலெனப் பிடுங்கப்பட்டது. “என்னடா… மறுபடி கதை எழுத ஆரம்பிச்சுட்டியா?” – ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல், தலை குனிந்தபடி இருந்தான் பாஸ்கர். “டேய்… உன் வயசுல பத்து வீட்டுக்குக் கட்டை சுமந்து, குடும்பத்தைக் காப்பாத்தினேன்டா! தறுதலைப் பயலே, எப்பப் பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டுத் திரியிறது, கிழட்டுப் பயக கூட எலக்கியம், மண்ணாங்கட்டின்னு பேசிட்டுத் திரியிறது. உருப்பட மாட்டேடா… உருப்படவே மாட்டே!’ – மூச்சிரைக்கப் பேசியவர், கதையைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தார்.

ஆர்வத்தை ஆத்திரமா தடுத்துவிடும்?!

சரி… ரஜினி ராசியில்லை. நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சித்துப் பார்க்கலாம் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான் பாஸ்கர்.

- 21st நவம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
எதிர்க்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை அப்படியே நிறுத்திவிட்டு வேஸ்ட் காட்டனில் க்ரீஸ் கரங்களைத் துடைத்துக்கொண்டான் கணேசன். முதலாளியிடம் விபரம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியாகவேண்டும். போனவாரம்தான் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
தினசரி டார்கெட்டை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி, டீ குடிக்கக் கிளம்பியபோது, நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன்! ''கொஞ்சம் உடனே கிளம்பி, ராயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியுமா?'' என்று பதற்றக் குரலில் கேட்டதில், ஏதோ பெரிய பிரச்னை என்று புரிந் தது. ...
மேலும் கதையை படிக்க...
மயக்கமென்ன
செல்லெனப்படுவது…

ரஜினியும் அப்பாவும் மீது ஒரு கருத்து

  1. vishnupriya says:

    நல்ல கற்பனை. வாழ்துக்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)