ரங்கராட்டினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 6,298 
 

காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர் ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது…

என்னன்னா…இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே…..உடம்பு என்னத்துக்காறது….ஒருநாளப்போல இதற்கு வா…இங்க வா…அங்க வா…ன்னு அவா உங்களை இப்படி….அலைக்கழிக்கறாளே..! வயசானவாளாச்சேன்னு கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத…அக்ரீமென்ட்டைப் போட்டோம்மா…. கையெழுத்தப் வாங்கினோமான்னு விடாமல்…வெய்யில் எல்லாம் உங்க தலைலன்னு எழுதி வெச்சா மாதிரி….!

வாங்கோ…. நாழியாறது….வந்து சாப்பிடுங்கோ…பவானி மனைப்பலகை

யைப் போட்டு…இலையை விரித்து….தண்ணி டம்பளர் வைக்கவும்…அப்பப்பா…என்ன வெய்யில் கொளுத்தறது…. வெளியில்…பசி வேற..வயித்தைக் கிண்டறது….இரு வரேன்…ன்னு சொல்லி பால்கனியில் இருக்கும் சிமெண்டுத் தொட்டியிலிருந்து ஜலத்தை மொண்டு கை,கால், முகம் அலம்பி…..மனம் குளிர…துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே…வெளில தான் வெய்யில்…வீட்டுக்குள்ளே மட்டும் என்ன….கரண்ட்டு கட்டாகி செங்கல் சூளைக்குள்ளே…பொசுங்கத்தானே செய்யறது….. எப்போ கூடங்குளம் மின்சார உற்பத்தி ஆரம்பிச்சு …எப்போ நமக்கு ஒழுங்கா கரண்டு வந்து….இதெல்லாம் நடக்குமா……?

எண்டே…குருவாயூரப்பா…ரக்ஷிக்கணமே….சாப்பிட பலகை மேல் அமர்ந்தார்…மணிஐயர்.
என்னடீது…கம கமன்னு மணத்துக் கொட்டறது…ஏற்கனவே பசி…..பஞ்சபட்சம் பரமானந்தமா…..!

ஏ…….அதொண்ணுமில்லை… வெறுமனே….ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக்கும்….ஒரு தோரன், சீரக ரசம்,பருப்புத் துவையல்….சம்பாரம் கரைச்சேன்……அவ்ளோதான்..!

எதேஷ்டம்…எதேஷ்டம்…..கடைசி காலம் வரைக்கும் இது கிடைச்சாலே தேமேன்னு இருக்கலாமோல்லியோ…
ஈஸ்வரோ….ரக்ஷதோன்னு…!

அதுசரி…போன காரியம் என்னாச்சு…..பேசி முடிச்சேளா…ஒரு வழியா..இல்ல….இன்னைக்கும் மீதம் வெச்சுட்டு வந்தேளா…?

சொல்றேன் கேளு……இன்னங்கொஞ்சம்….ரசம் கையில்… விடேன்….நன்னாருக்கு….குடிக்க….உறிஞ்சிக் குடித்துக் கொண்டே…என்னதான் சொல்லு…உன்னோட கைமணம்…நம்மாத்து ரெண்டு பொண்களுக்குமே…. வல்லையாக்கும்.
அவா சமைச்சா….ஏதோ….கடனேன்னு தான் சாப்பிடணும்…நன்னாச் சமைக்க சொல்லித் தரப் படாதோ…நோக்கு..?
ம்க்கும்…பெரியவள் சரோ…புலாவ் பண்ணினால்….அதுல வெங்காயம் இருக்கும்….பூண்டு இருக்கும்னு சாப்பிட மாட்டேள்..
சின்னவள் சுபத்ராவுக்கு… அவ்வளவா போறாது…கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருப்பாள்…என்னவோ போங்கோ…ரெண்டையும் பக்கத்து பக்கத்துல கல்யாணதப் பண்ணிக் கொடுத்தாச்சு….இனி அவாவா….ஆத்துகாரர் பாடு….!.

ஆனாலும் இப்போக் கூட இங்க வந்தா ரெண்டு பேருமே சமையல் கட்டுப் பக்கம் வரதே இல்லையேடி…..சாதத்தை அழுத்தி பிசைந்து கொண்டே …… இன்னும் கொஞ்சம் மோர் விடு.

பொண் குழந்தைகள் அப்படித்தான்னா…பொறந்தாத்துக்கு வந்தா எல்லாம் அம்மாப் பார்த்துப்பாள்ன்னு சீரியலே சரணம்னு…..உட்கார்ந்துடுவா..!
நேக்கு சாப்பிடரச்சே இந்த வீட்டை விட்டுப் போகணும்னு சொல்ல மனசே வரலையாக்கும்.நாப்பது வருஷமா இங்க சந்தோஷமா நிம்மதியா வாழ்ந்தாச்சு…இதை இப்படி திடுப்புன்னு விட்டுட்டு போகணும்னா கொஞ்சம் மனசுக்கு சாந்தி இல்லை.நோக்கு எப்படித்தான் மனசு வரதோ புரியலை கேட்டபடியே நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார்.

நேக்கும் அப்படித் தான் இருக்கு..கல்யாணம்..குழந்தைகள்…குழந்தைகளோட கல்யாணம்…பேரக்குழந்தைகள் வரைக்கும்ன்னா….. பார்த்து ஆகிவந்த வீட்டை விட்டுட்டு ஒரேயடியாப் போறதுன்னா…. தானே மனசுக்கு கஷ்டம்…
அந்த ஆர்.ஜே.பில்டர்ஸ் தான் இதே இடத்தில் அழகா புது பிளாட் கட்டித் தரேங்கராளே….கூடவே முப்பது லட்சம் பணம் வேற ரொக்கமாத் தரேங்கரா….. இந்த இடத்தில் பல அடுக்கு மாடி வீடுகள் கட்டி முடிக்க ஒன்றரை வருடங்கள் தான் ஆகுமாம்…அதுவரைக்கும் நாம குடி இருக்கக் கூட எதிர்த்தாற்போல கட்டி முடித்த அவாளோட புது அடுக்குமாடி வீடுகளில் நமக்கு ஒரு வீடு தராளாம்….வாடகையே இல்லாமல்…ஒண்ணரை வருடங்கள் ஓடற ஓட்டம்..அப்பறம் நமக்கு நம்ம வீடு மூன்று பெட்ரூமோட நன்னாக் கிடைச்சிடும்…மறுபடி இங்கயே நாம வந்துக்கலாம்….அவர்களோட திட்டம் எல்லாம் நன்னாத் தான் இருக்கு.

அதனாலத் தானே ஆர்.ஜே.பில்டர்ஸ் விரித்த வலையில் இந்த ஹவுசிங் போர்டில் வசிக்கும் அத்தனை வீட்டுத் தலைவர்களும் பொத் பொத் தென்று விழறதில் ஆச்சரியமே இல்லையாக்கும்.

அசடே… அசடே …..இதில் அவாளுக்கு கொள்ளை லாபம் தெரியுமோ….நோக்கு…நம்ம ஆறு வீட்டை…இடித்து பதினெட்டு வீடுகளா கட்டி….நமக்கு ஆறு வீடுகள் போக மீதி பன்னெண்டு வீடுகள் அவாளுக்கு தானே சொந்தம்…அவா ஒவ்வொரு ப்ளாட்டையும் ஒரு கோடிக்கும் மேல வித்துப்பாளாம்…

பின்ன சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன….? அந்தக் காலத்தில் வெறும் முப்பதாயிரம் முதலாப் போட்டு வாங்கிய ஹவுசிங் போர்டு வீடுகள்..மாதத் தவணையா வெறும் முன்னூறு ருபாய்… அதுவும் மூணே வருஷம் தான் கொடுத்தோம்..வீடு சொந்தமாச்சு..அதுக்குத் தான் இப்போ ஏக டிமாண்ட்….பின்ன..கே.கே.நகர் ன்னா…சும்மாவா..குரலில் பெருமை ததும்பியது அவருக்கு..

சாப்பிட்டு விட்டு கை அலம்பும் போது…சிமெண்டும் சுண்ணாம்பும் பெயர்ந்த சுவர்கள் செங்கல் கைகளை வெளியே நீட்டி என்னைப் பார்…நான் எப்போ வேணா விழுந்துடுவேன்….என்னைக் காப்பாத்துன்னு கெஞ்சுவது போலிருந்தது.

நல்லவேளையா…இப்படியாவது இந்த வீட்டுக்கு ஒரு விமோசனம் கிடைத்ததே…இல்லாட்டா நாம போடற பட்ஜெட்ல எந்தக் காலத்திலயுமே கை விட்டு செலவழித்து ஒரு வொயிட் வாஷ் கூட பண்ண முடியாது…இப்போ இருக்கற விலைவாசியில்….இப்போவே சாண் ஏறினா முழம் சறுக்கறது…..உங்கள் பென்ஷன் பணத்தில் வேறென்ன செய்ய முடியும்…ஏதோ…நமக்கு..யார்ட்டயும் கை ஏந்தாத நிலைமையில் அந்த பகவான் வெச்சுருக்கார்….
இல்லையான்னா….பவானியின் குரல்..!
அதுவும் சரிதான்…நீ சொல்றது…எல்லாம் நல்லபடியா நடத்தித் தரட்டும் அந்த குருவாயூரப்பன்…..!

அதான்……இந்தாத்து டாக்குமெண்ட உடனே எடுத்துண்டு வரச் சொல்லிருக்கா அவாட்ட தரணுமாம்…வேற புதுசா ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடணும்….போட்டதும் …கையில் முப்பது லட்சத்தையும் ரொக்கமாத் தந்துடுவா….நாமும்… இந்த வீட்டை காலி பண்ணி தந்துட்டு எதிர்த்தாப்போல உள்ள வீட்டுக்கு மாத்திக்கணும்…

சரோவையும்..சுபத்ராவையும் உதவிக்கு போன் பண்ணி விஷயம் சொல்லி கூப்பிடு..அவா வந்தாத் தான் சௌகரியமா இருக்கும்.

அதுவும் சரிதான்….ரெண்டு பெரும் வந்து ஒரு நாலு நாள் இருந்து உதவி செய்து தந்துட்டு போகட்டும்…என்று சொல்லிக் கொண்டே கைபேசியில் அழைத்து அவர்களுக்கு விஷயம் சொல்லி அவர்களை உடனடியாகக் கிளம்பி வரச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்த நாள் முழுவதும் அன்று தங்களது அந்த வீட்டின் பழைய நினைவிலேயே கழிந்தது இருவருக்கும். இப்போ இத்தனை பேர் வந்தால் வீடு தாங்குமா…இன்னும் .வேண்டாத பழைய சாமான்களை எல்லாம் தூக்கிப் போடுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்..சரோ… திருவனந்தபுரத்திலும்…இரண்டாவது பெண் சுப்ரஜா திருச்சூர்லயும் இருக்கறது நல்லதாப் போச்சு….ஒருத்தருக்கொருத்தர்.…துணையா இருந்துக்கலாம்..
இரண்டே நாட்களில்….சொன்னாற்போல ரெண்டு பெண்களும் மாப்பிள்ளையும் பேரக் குழந்தைகளுமாக வீடு நிறைந்தது….பவானிக்கும்…அவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது…தனது மாப்பிள்ளைகளிடம் “இந்தப் பழைய வீட்டுக்கு புனர்ஜென்மம் கிடைக்கப் போறது” என்று சொல்லிப் பெருமை பட்டுக் கொண்டார்கள் இருவரும்.
“ஒ….இது நல்லதொரு விஷயமாக்கும்….கேரளாவில் எல்லாம் இந்த மாதிரியொண்ணும் கிடையாது..” அப்பா…இதெல்லாம் பணம் சம்பந்தப் பட்ட விஷயம்…நீங்க மட்டும் தனியா இருந்தா அவ்வளவு சரியாய் இருக்காது அதனால் தான்…நாங்கள் எல்லாருமே சேர்ந்து கிளம்பி வந்தோமாக்கும்….நாம கொடுத்து வெச்சுருக்கோம் அதான் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு நம்மைத் தேடி வரது…இல்லாட்ட இந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்குமா…? என்றெல்லாம் மகிழ்ந்தபடி இருந்தனர்…பெண்களும்….மாப்பிள்ளைகளும்.
பின்ன… வரண்டாமா….நீங்கள் எல்லாரும் வந்தது நேக்குப் பரம சந்தோஷம்…..நாளைக்கு நான் தனியாப் போய் அவாளண்ட பணம் வாங்க நிக்கண்டாமே..எல்லாம் என் மாப்பிள்ளைகள் பார்த்துப்பா…ன்னு….இருக்கலாமே…என்ன சொல்றாய் பவானி…சரி தானே..?
சரி..தான்…சரிதான்.. என்ற பவானி முகத்திலும்… குரலிலும்…. பரவசம்…தனது நிறைந்த குடும்பத்தைப் பார்த்து குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் என்னவெல்லாம் செய்து தரலாம் என்ற எண்ணத்தில் இருந்தவள் …அடுத்த வருஷம் எல்லாம் வீடும் பெரிதாக நன்னா இருக்கும்….எல்லாரும்…. இங்க லீவுக்கு வந்து சந்தோஷமா இருந்துட்டு போலாம்… குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மணி அய்யர் வீட்டுப் பத்திரத்தோடு மாப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கே.கே.நகரில் இருந்து கிளம்பினார்…மந்தவெளியில் இருக்கும் ஆர்.ஜே.பில்டர்ஸ் ஆபீசுக்கு.

ஆட்டோவில்…போகலாம்னு ஆட்டோவை அழைக்க…சரோ சிரித்துக் கொண்டே சொன்னாள்….வரும்போது காரில் வாங்கோப்பா என்று…..
” சொந்தமா கார் வாங்கி அதிலயே வந்தாலும் வருவார் அப்பா….”…சுப்ரஜா…..தொடர…அங்கே சந்தோஷ அலைகள்…தொடர்ந்தது..
பவானி சமயலறையில் இதை எதையும் காதில் வாங்காமல் சமைத்துக் கொண்டிருந்தாள். பேரக் குழந்தைகள் இரண்டும்….டிவி யில் ” சோட்டா..பீம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த நான்கு மணி நேரத்தில்….பூஜை அலமாரியில் .குருவாயூரப்பன் படத்தின் முன்பு முப்பது லட்சத்தைத் தாங்கிய பணப் பொட்டலம் கிண்ணுனு இடம் பிடித்திருந்தது.

மாப்பிள்ளைகள் இரண்டு பேரும் ஆர்.ஜே.பில்டர்ஸ் இன் புராணம் பாடிக் கொண்டிருந்தனர்…மாமி…இந்த இடத்தை அப்படியே ஒரு பிரம்மாணடமான இடமா…..மாத்தப் போறாளாம்…வரை படங்கள் எல்லாம் காண்பித்தா….பிரமாதமா இருந்தது…”ஆர்.ஜே.வைரம்” ன்னு இந்த அபார்ட்மெண்டுக்கு பேர் வைக்கப் போறாளாம். இன்னும் பக்கத்துல….. பக்கத்துல ஒண்ணொண்ணா..இது போல மாறுமாம்…இன்னும் பத்து வருஷத்துல இந்த ஏரியா அப்படியே மாறிப் போகப் போறது நிஜம்…. பாருங்கோ…”உங்கள இனி பிடிக்க முடியாது…! ” பெரிய மாப்பிள்ளை சொல்லி…
“ததாஸ்து..” சின்னவர் முடித்தார்.

ஆர்.ஜே.பில்டர், அவாளாலத் தான் இப்படிப் பிரம்மாண்டமா கட்ட முடியும்…..இல்லாட்டா…..நம்மால ஒண்ணும் முடியாது…தனியா இந்தச் சாயம் போன வீட்டை யாரும் வாங்கவும் மாட்டா.எது நடக்கணுமோ அது தான் நடந்திருக்கு…இல்லையா…? இப்ப நமக்குத் தந்ததெல்லாம் அத்தனையும் கறுப்புப் பணம்…தானே…சரோ தன கணவரிடம் கேட்கிறாள்….தலையை ஆமாம் ஆமாம் என்று ஆட்டிக் கொண்டிருந்தார் அவர்.
எப்படியோ எல்லாம் நல்ல விதமா முடிஞ்சாச்சு…எதிர் வீட்டு சாவியும் நம்ம கிட்ட வந்தாச்சு…உடனே அங்கே ஒரு பாலைக் காய்ச்சி குடிச்சுட்டு குடி போயாகணும்….எவ்ளோ சீக்கிரம் முடியறதோ அவ்ளோ சீக்கிரம்….சுப்ரஜாவின் கணவன் சொல்லிக் கொண்டிருந்தார்..

இவ்வளவு பணம் ஒரு சேர வெச்சுண்டு இருப்பது ரங்கராட்டினம் மேல ஏறுவது மாதிரி…..மனசு ஜிவ்வுன்னு…..ஒரு புது உலகத்தை நோக்கிப் போகும்….எங்கேயோ உயரத்தில் கொண்டு போல் நிறுத்தி வைக்கும்….அங்கிருந்து எதைப் பார்த்தாலும் புள்ளியாய்த் தெரியும்….அது போலத் தான் பணம் வந்ததும் மனம் ரங்கராட்டினம் ஏற ஆரம்பிக்கும்……கூடவே நிம்மதி….இறங்கித் தொலைந்து போகும் …என்றார் மணி ஐயர் .

சரியாச் சொன்னேள்….இது அம்மா….!

அப்போ…நாளைக்கு நாள் நன்னாருக்கே…பாலைக் காய்ச்சிட்டு அங்கு குடி போயிடலாம்…..அங்கயும் எடுத்து வைக்கணும்…குழந்தைகள் ஊருக்குப் போகணும்….இல்லையா….அம்மா கேட்க…சரோவும்…சுப்ரஜாவும் ஆமாமா….என்றார்கள்..

அன்று மதியம் பவானியின் சமையலில் வீடு கல்யாண வீடானது. அனைவரும் திருப்தியாக உண்டு களைப்புத் தீர உறங்கி எழுந்தனர்.

மாலையில்….மனியய்யர் சரோ…..சுப்ரஜா அன்று அழைக்க…இதோ வந்தோட்டோம்பா….என்று ஆஜர் ஆக…

சரோ…நீ பகவான் க்ருபையால நல்ல இடத்தில் ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாத இடத்தில் வாக்கப் பட்டு போயிருக்கே..உனக்கும் அங்க சொந்த வீடு வாசல்னு எல்லாம் இருக்கு…..எங்களுக்கு ரொம்ப திருப்தி…!

சுப்ரஜா…நீயும் நல்ல இடத்தில் தான் இருக்கே…என்ன ஒண்ணு…நீயும் வேலைக்குப் போனாத்தான் ஆகும்னு இருக்கு…எல்லாம் சரியாயிடும்..நல்ல பேங்க் உத்தியோகம் தானே…உனக்கு….விடாமல் பாரு….நீயும் லீவப் போட்டுண்டு வந்தே…உடனே ….ரொம்ப சந்தோஷம்….

ம்ம்…அதனால என்னப்பா…நம்பாத்துக்கு நாங்க.. செய்யாமல் எப்படிப்பா….?

சரி..இப்போ ரெண்டு பேரும் ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்கோ……ரொம்ப நாளாச்சு உங்களோட பாட்டைக் கேட்டு…
சொன்னதும்….சுபத்ரா….” ஸ்ரீமன் நாராயண….ஸ்ரீமன் நாராயண……ஸ்ரீமன் நாராயண…ஸ்ரீ பாதமே சரணம்……” பாடி முடிக்க…
சரோ…..”அதரம்…மதுரம்……வதனம்…. மதுரம்…….நயனம் மதுரம்…” மதுராஷ்டகம் பாட….கண்மூடி ரசித்தார் மணிஐயர் .
இந்த வீட்டில் இறுதியாக இந்த நிகழ்வும் ஒரு மதுரமான நிகழ்வாக இருக்கட்டும் என மனதில் பதித்துக் கொண்டார்கள் அனைவரும்.

இருந்தாலும்….எங்கள் பணம்..சொத்து இதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் தான் சேரும்..அதனால நாங்கள் இருக்கும்போதே சந்தோஷமா உங்க ரெண்டு பேருக்கும் தரணும்னு நினைக்கிற பணத்தை இப்போவே தந்துடறோம். மாப்பிள்ளையோட, சௌக்கியமா ரெண்டு பேரும் தீர்க்க சுமங்கலியா மகிழ்வா..நிறைவா…இருக்கணும்..….!
இந்தாங்கோ ஆளுக்கு பத்து லட்சம்….எடுத்துக்கோங்கோ…என்று நீட்ட….ரங்கராட்டினத்தின் உச்சியில் இருந்து இரண்டு படி கீழே குதித்து…இறங்கினார்….மணி ஐயர்.
இப்போது….சரோவும்….சுப்ரஜாவும்…..கையில் பணத்துடன்….உச்சியில்…..மகிழ்ச்சியில்…!
இந்தா… பவானி…இந்த பத்தை எடுத்து பத்திரப் படுத்து…..என்று கொடுக்க….பவானி..அத்தனைப் பணத்தை ஒரு சேர என்றுமே பார்த்ததில்லை…..கையில் வாங்கியதுமே ….மனசுக்குள் ஒரு ஜிவ்வ்…..தானும் கொடை ராட்டினத்தில் ஏறிய மயக்கம்….! அவர் சொல்வது எவ்வளவு நிஜம்…நினைத்துக் கொண்டே அலமாரிக்குள் பகவானைப் பிரார்த்தனை செய்து.. பணத்தை லாக்கரில் வைத்து பூட்டினாள்.

சுபத்ரா …..மெல்ல அம்மாவிடம்…என்னதான் அப்பா பத்து லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தாலும்மா….இத வெச்சுண்டு ஒரு சிங்கிள் பெட் ரூம் வீடு கூட அங்கே வாங்க முடியாதும்மா…சரோட்ட தான் அவா மாமனார் கொடுத்த வீடு இருக்கு சொந்தமா….அவ பாரேன்…இந்தப் பணத்தில் படாடோபமா ஒரு கார் வாங்கிப்பா…அவளுக்கு கார் வேணும்னு ஒரே ஆசை…என்று சொல்லி அங்கலாய்த்தாள்.

பவானி சிரித்துக் கொண்டாள். நீயும் தான்….கண்டதையும் வாங்கி வைக்காதே…பூமியில் , தங்கத்தில் பணத்தைப் போட்டால் பிற்காலத்தில் உபயோகப் படும் கொஞ்சம் சாமர்த்தியமா புத்தியோட இருங்கோ….ரெண்டு பேரும்..நான்
உங்களோட எந்த விஷயத்திலும் தலையிடலை ….என்று சொல்லி நகர்ந்தாள்.

ஆயிற்று…..புது வீட்டுக்கு குடித்தனம் வந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்து…சரோவும் சுபத்ராவும் ஊருக்கும் கிளம்பி போயாச்சு. வீடே வெறிச்சோடி இருக்கு இல்லையா ன்னு பவானி கேட்க…மணி ஐயர் “எல்லாமே….அந்தந்த நேரத்துக்குத் தான்…” அவாவாளுக்கு வீடு…வாசல்..பொறுப்புன்னு வந்தாச்சோல்லியோ….என்றார்.

ஆமா…கேட்கணும்னு நினைச்சேன்…..என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லாத… ஒரே நிமிஷத்தில் அத்தனை பணத்தையும் குழந்தைகளுக்கு தூக்கிக் கொடுத்தேளே…. அப்படி என்னாச்சுன்னா.. உங்களுக்கு..? பவானி கேட்க..

பவானி….அவா ரெண்டு பேருமே…..நம்ம குழந்தைகள் தானேடி. நாம தராமல் அவாளுக்கு வேறு யார் தருவா நீயே சொல்லு. நாம நம்ம சின்ன வயசுல நூறு ரூபாய் நோட்டுக்களைக் கூட கண்ணால் பார்க்கலை.எப்பப் பாரு பட்ஜெட்…பற்றாக்குறைன்னு…..குழந்தைகளை வெச்சுண்டு பிச்சு தின்னுண்டிருந்தோம்…என்னதான் அவர்கள் வேலைக்குப் போனாலும் அங்கேயும் கணக்காத் தான் சிக்கனமாத் தான் செலவு பண்றா.
நாம இருக்கும்போதே அவா ரெண்டு பெரும் நன்னா இருக்கறதை பார்க்கலாமேன்னு தான்…உனக்கும் ஒரு ஆச்சரியமான சந்தோஷமா இருக்கட்டுமேன்னு தான் உன்கிட்ட கூட சொல்லாமல்
இப்பவே தந்தாள் அவாளுக்கும் உபயோகமாயிருக்கும்….இருந்துட்டுப் போகட்டும்..சின்னஜ்சிறுசுகளுக்குத்தான் செலவுக்கு பணம் வேண்டும். நீயும் நானும் அவ்வளவு பணத்தை வெச்சுண்டு என்னத்தப் பண்ணப் போறோம்?
ஆமாம்னா….அதுவும் சரிதான்…குழந்தைகளுக்கும் ரொம்ப சந்தோஷம்..தான்.!

நோக்கு எதாவது வேணுமோ….மனசுக்குள்ளே ஆசை வெச்சுண்டு இருக்கியோ….நகை…நட்டு…பட்டுப் புடவை…இத்தியாதின்னு….மனச விட்டு சொல்லேன் வாங்கிடலாம்….
போறுமே…நேக்கொண்ணும் வேண்டாம்…இருக்கறதா வெச்சுக் காலம் தள்ளினாப் போறாதோ…?
உங்களுக்குத்தான் தங்கத்தில் ருத்ராக்ஷ மாலை ஒண்ணு வாங்கிப் போட்டுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை…வேணா வாங்கிக்கோங்கோ..!

அட…ஆமாம்…..மறந்தே போச்சு பார்த்தியோ….நல்லவேளை நியாபகப் படுத்தினே….இன்னும் ரெண்டு நாள்ல அக்ஷய திருதி வரதே…அப்போ போயி வாங்கிக்கலாம்… நாம ஒரு அம்பதாயிரம் ஒரு முதியோர் இல்லத்துக்கு கொண்டு கொடுக்கணும்…அப்படியே குழந்தைகள் காப்பகத்துக்கும் கொடுக்கணும்…..தரலாமா? பேஷாத் தரலாம்….அவ்ளோ தானே..நீ சொல்லி நான் ஏதாவது வேண்டாம்னு சொல்லிருக்கேனா?

போதும்னா…இதுவே போதும்….

அன்றாடங்காய்ச்சியாய்…மாத பென்ஷன் பணத்தில் பட்ஜெட் போட்டு வாழ்ந்த பொது இருந்த நிம்மதி…எல்லாம் போயி சதா சர்வ காலமும் பணத்தைப் பற்றியே…எண்ணம் …மிகுதியாக இருக்க…..தான் ஏறி இருக்கும் ரங்கராட்டினம் தனது ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு புது அனுபவத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது..பணமெனும் பரம மயக்கத்தில் தான் அமிழ்ந்து விடாமல் இருக்க ..நாமும் எதாவது செய்ய வேண்டுமே…ஆழ்மனத்தில்…உன்னத எண்ணங்கள் உயிர் கொண்டு எழுந்தது…அவருக்கு.

இரண்டு நாட்கள் எப்படியோ….வேகமாகக் கழிந்தது.

பவானி…..இன்னைக்கு அக்ஷய திருதி…நல்ல நாள்..வீட்டில் பூஜையை முடிச்சுண்டு ..அப்படியே முதியோர் இல்லத்துக்கு போய்….நீ சொன்னாபோல….நம்மால முடிஞ்ச தொகையை நன்கொடையாய் கொடுத்துட்டு…ஆளுக்கு நாலு ஆரஞ்சுப் பழம், ஒரு துண்டு..கைவிசிறி,,இதெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வரலாமா..வரும்போது அப்படியே…..ஜோஸ் ஆலுகாஸ் போய்…..அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கீண்டு..வந்துடலாம்.
பணம் இருந்தாலும் நாள் இருக்காது….நல்லதை நினைத்ததும் செஞ்சுடணும்….தள்ளிப் போடக் கூடாது.

நினைத்தபடியே…இருவரும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினர்.

ஒரு வழியாப் நினைத்தபடியே எல்லா இடங்களுக்கும் சென்று விட்டு நகைக் கடைக்கும் சென்று…. பார்த்துப் பார்த்து வாங்கிய நகையோடு…ஆட்டோ பிடித்து வரும் வழியில்….மணி அய்யரின் மனம் வேறெங்கோ பறந்தது….

இளமையில் மட்டுமல்ல…முதுமையிலும் வறுமை…கொடுமை தான்…! இன்று சென்று வந்த இடத்தில் கிடைத்த அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை…உணர்ந்தவரின் காதில் அசரீரியாக….மீண்டும் கேட்டது…ஒரு முதியவர் சொன்ன விஷயம்..

“ஐயா….நான் இங்கு வந்து சேர்ந்து மூன்று வருடங்களாகிறது….இதுவரை எனக்கென சொந்தமோ..பந்தமோ…பெற்ற
பிள்ளை வீடு என்ற உரிமையோ எடுத்துக் கொண்டு எங்கேயும் வெளியில் போனது கிடையாது. அனேகமா இங்கே இருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் இது தான்.இந்த இடத்திலேயே….அடைபட்டு சிறகொடிந்த பறவைகளாக
ஒரே இடத்தில் அமர்ந்து ..ஒரு புண்ணியவான் கொடுத்த தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து
கொண்டிருக்கிறோம். இந்த ஆட்டமும்…பாட்டமும் எங்களுக்கு பிடிப்பதும் இல்லை. புத்தகங்கள் படிக்க மனமிருந்தும்…..விரும்பினாலும்….எங்களுக்கான ஒரு நூலகமும் இல்லை…எங்களுக்கு என சென்று வர ஒரு இடமும்…எங்களை வா என்று யாரும் இல்லை…….வயோதிகமே….வேதனையாக இருக்கிறது…என்ன செய்ய…அதான்…வேளா வேளைக்கு பசிக்கும் வயிற்றை மட்டுமே கவனிச்சுட்டு வரோம்…”
வல்லவனுக்குக் கிடைத்த ஆயுதமாக….அந்த முதியவரின் குரல்….மணி அய்யரின் மனதுக்குள் கங்கு போல் கனன்றது……வீடு வந்து சேரும் வரையில்…!

வீட்டு வாசலில் நிழலாடியதைக் கண்டவர்…..மனதுக்குள்…
யாராயிருக்கும்…..அலமுவா? நேக்கென்னமோ அலமுவா இருக்குமோன்னு மனசுக்குப் படறது……என்றார்…

பவானியோ…..ஆமாம்னா அலமுவே… தான்….!

இருவர் முகத்திலும் ஒளி…!

அட…அலமு…..எப்படி இருக்கே……?

அதற்குள் அலமு ஓடோடி வந்து…அண்ணா….. மன்னி……எங்கேயாக்கும் போயிருந்தேள்…நல்லவேளை…நானும் இப்போ தான் வந்தேன்…பழைய வீட்டு செக்யூரிட்டி சொன்னான்….இப்போ தான் சரோஜாவுக்கு போன் பண்ணி விஷயம் கேட்டுண்டு இருந்தேன்..அதற்குள் நீங்களே வந்துட்டேள்.
வீட்டில் கதவைத் திறந்தபடியே குசலம் விசாரித்தவர்….நீ அப்படியே தான் இருக்கே….உன்னை நாங்கள் சுப்ரஜா கல்யாணத்தில் உன்னைக் கடைசியாப் பார்த்தது. உன் பிள்ளை என்ன படிக்கிறான் இப்போ…மத்தபடி மாமியார்….மாமனார்……உங்காத்துக் காரர்……எல்லாரும்….சௌக்கியம் தானே..?
எல்லாரும் சௌக்கியம்…நான் தான் கேவிப்பட்டேன்…..வீட்டை வித்துட்டியாமே….அதான்….கடைசியா…அந்த வீட்டைப் பார்த்துட்டுப் போகலாம்னு….நல்லவேளை எதிர்தாபப்லாயே வீடு அமைஞ்சுடுத்து….!
மன்னி….உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…..!
அலமு…அண்ணாட்டயே… கேளேன்…..

ம்ம்ம்…பையனை இன்ஜினியரிங் ல சேர்க்கணும்…ஒரு ரெண்டு லட்சமாவாது வேண்டி இருக்கும்…இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கட்டணுமாம்…அதான் உன்னண்ட கேட்டு பார்க்கலாம்னு வந்தேன்….தர முடியுமா…?
எங்கேயும் சுத்தாமல் நேரா விஷயத்திற்கு வந்தால் அலமு…

பவானி…நோக்கு அலமு கேட்கறது காதில் விழறதோன்னோ….இல்ல அலமு…பவானியும் ஒரு ஸ்கூல் ல வேலை பார்த்தவள் தான்….படிப்போட அருமை அவளுக்கும் தெரியும்…நன்னாப் படிச்சு பெரிய காலேஜுல வேலை பார்த்துண்டு இருந்தவள்….கல்யாணம், குழந்தை ன்னு தன்னோட எதிர் காலத்தையே நினைச்சுப் பார்க்காமல் எனக்காகவே வளைய வந்தவள்…அவளைக் கேட்காமல் நான் ஒண்ணும் பண்ணறதில்லை…அதான்…!

பால் ஆற்றிக் கொண்டே வந்த பவானி….ம்ம்ம்…கேட்டுது….அலமு…உன் அண்ணாட்ட நீ பணம் வாங்கிக்க என்னோட அனுமதி எதுக்கு….?பகவான் கடாட்சத்தில் நீ இப்போ கேட்கறதைக் தரும் நிலைமையில் நாங்க இருக்கோம்..உனக்கு உன் மகன் தலை எடுத்து வரணம். எல்லாரும் நன்னா இருக்கணும். அவனை இன்ஜினியரிங் ல சேர்த்துப் படிக்க வை…நன்னா வருவான் குழந்தை.
அதற்குள் அவரும் பிளாஸ்டிக் கவரில் பணத்தைப் போட்டு தங்கைக்கு தர…

கண்ணீர் மல்கும் கண்களோடு…கொடுக்கற மனசு இந்தக் காலத்தில் எல்லாருக்கும் வருமா? ஏதோ நான் பண்ணிய புண்ணியம் உங்களோட கூட பிறந்திருக்கேன் என்றபடி கவரை வாங்கி பத்திரப்படுத்தினாள்.

மன்னி….உங்க தங்கை ஜானகி எப்படி இருக்காள்…?அவளோட பொண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்த்தாச்சோ…என்று சம்பிரதாயக் கேள்வி அடுக்கி கொண்டிருந்தவளைப் பார்த்து…பவானி…

தெரியலையே அலமு….அவளைப் பார்த்து ஆறு மாசத்துக்கும் மேல ஆறது.அவ பொண்ணுக்கு கல்யாண வயசு தான்…பார்த்தாசோ….. என்னவோ…ஒன்னும் தகவல் இல்லை…எல்லாம்,,,அந்தக் குருவாயூரப்பன் பார்த்துப்பான்….!

அலமு ஊருக்குக் கிளம்பிப் போனதும்…பவானி….உன் தங்கை ஜானகிக்கும் தகவலை சொல்லி ஒரு நடை வந்துட்டு போகச் சொல்லு…அவ பெண்ணுக்கு எப்போ கல்யாணம் நு கேளு…நாம ஒரு ரெண்டு லட்சம் தரலாம்னு இருக்கிறோம்…. சொல்லு….அவளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்….

வேண்டாம்னா…..அவள் பார்த்துப்பாள் …பொட்டுக்கடலைக் காரன் பொட்டலம் போட்டா மாதிரி இன்னும் மீதி இருக்கறதை கொடுத்துட்டா….அப்பறம் நமக்கு ஒண்ணுன்னா….. யார் செய்வா? மனசில வெச்சுக்கோங்கோ….பவானி யதார்த்த்தை எடுத்து சொல்ல…

எல்லாம் பகவான் பார்த்துப்பான்….இதெல்லாம் நடக்கும்னு நீயோ நானோ நினைச்சொமா? என்று வாயடைத்தார்…மணியார். ஜானகி பெண் கல்யாணத்துக்குன்னு கொடுக்கற இந்தப் பணத்தை நீ தான் பத்திரமா எடுத்து வெச்சு குழந்தைட்ட சேர்க்கணும்….

அலமு வந்து போனதில் இருந்து….அவளுக்கு சமயத்தில் உதவினோம் என்னும் திருப்தி இருவருக்கும் நிம்மதியைத் தந்தது .ஒரு ஆறு பிரிந்து பிரிந்து சென்று பல நிலங்களை வளம் செய்வது போல …..தன்னிடம் இருக்கும் செல்வமும் தன்னைச் சேர்ந்திருக்கும் சுற்றங்களுக்கு உதவுவதால்…மனசுக்குள்…… ஒரு சுகம்…. ஈதல்..இன்பம் என்ற சொல்லின் அர்த்தத்தை முழுதும் உணர்ந்தார் மணி அய்யர்.
அடுத்த நாள் காலை ஜன்னல் வழியாக…கண்ணீர் மல்க கைகள் நடுங்க அந்தக் காட்சி மணி அய்யரின் மனதை உலுக்கி கொண்டிருந்தது.

சாஸ்வதம்னு நினைச்சுண்டிருந்த வீடு புல்டோசர் உதவியால் தரை மட்டமாகிக் கொண்டிருந்தது. இவரின் எத்தனையோ நிகழ்வுகளைத் தாங்கிய செங்கல் சுவர்கள்…நான் வெறும் சுவரல்ல…உங்களது இதயத்தில் என்றும் நிலைத்துக் காக்கும் நினைவுச் சுவர் என்று சொல்லிக் கொண்டே சரிந்தது.

தாங்க முடியாமல்…கனத்த இதயத்தோடு ஈஸிசேரில் சாய்ந்தார் …அருகில் இருந்த அன்றைய நாளிதழ் ஆறுதல் சொன்னது. எழுத்துக்களுக்கும் இன்னல்களைப் போக்கும் சக்தியை உணர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும்….திகைத்தார்….அட…இப்படியும் ஒரு உன்னத…உயர்ந்த ஆன்மாவா…என்று எண்ணியவர்…பவானி…பவானி…..இங்க கொஞ்சம்…வாயேன்…இந்தா இதைப் படி…முதல்ல….என்று அந்தப் பக்கத்தை அவளிடம் நீட்டினார்…அதில்….
” தமிழ் – இலக்கியம்- வாழ்க்கை என்ற முக்கோணத்தில் மட்டும்
வாழ்ந்து, தன்னுடைய சொத்து முழுவதையும் ( 11 கோடிகள்) அனாதை பிள்ளைகளுக்கு
எழுதி விட்டு சென்ற மறைந்த எழுத்தாளர் ஆர். சூடாமணி, இலக்கிய உலகிலும் சரி, சமுதாய வாழ்விலும்…கூட அணையா விளக்காக் திகழ்கின்றார்.”. அவரது படத்துடன் வெளியாகி இருந்ததைப் பார்த்த பவானி….

அட…ஆர்.சூடாமணி….பிரபல எழுத்தாளர்….இவர்களோட பரம ரசிகை நான்…இவர் எழுதிய எத்தனை கதைகளை நான் படித்திருக்கிறேன்….

தன் வாழ்நாளில் சேமித்த சொத்துக்கள்..தன் உற்றார் உறவினர் என அவர்களுக்குள்ளேயே சுற்றி வராமல்….திறமைகள் இருந்தும்….முன்னுக்கு வர தடை கல்லாக நிற்கும் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து படிக்க வைத்து… வெற்றிப் படிக்கட்டில் ஏற்றி… .அவர்களது வாழ்வில் அணையா விளக்கு ஏற்றும்… இவரின்….நல்ல மனசு யாருக்கு வரும்…

பதினோரு கோடி…ரூபாய்கள்…எத்தனை குழந்தைகளை ஏணி போல வாழ்க்கையில் உயரத்திற்கு ஏற்றி விடும்….ரொம்ப நல்லது செய்திருக்கிறார்….ஒரு சாரதா அம்மையாரைப் போல…ஒரு அன்னை தெரசாவைப் போல..! இவரைப் போல இருப்பது எல்லாராலும் முடியாதுன்னா…என்கிறாள்….

ஆயாசத்துடன்….நம்மளால நினைக்கத் தான் முடியும்…வெறுமென நினைத்தால் போதுமா….செயல் படுத்த நம்மால் முடியுமா….? ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேயக்கன்னு சும்மாவா சொன்னா……..இது மாதிரின்னா ஓடறது..நமக்கு வாழ்க்கை….பத்திரிகையை திரும்ப தந்துவிட்டு அறைக்குள் சென்று மறைகிறாள் பவானி. அவளது இயலாமை அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டு திரும்பியது.

பகவான் நம்மைத் தேர்ந்தெடுத்து நமக்குக் கொடுத்து நாம் என்ன செய்கிறோம் என்று அங்கிருந்து கண்காணித்து கொண்டே இருக்கிறார்..

மனதிலும் அவரது ஆசையை நமக்குள்ளே எண்ணமாகத் திணித்து நாம் நிறைவேற்றுகிறோமா… என்றும் பார்கிறார்….நான் பகவான் செய்ய நினைக்கும் காரியத்துக்கு ஒரு கருவி…..என் மூலம் அவர் நடத்த இருப்பதை….என்னால் தடுக்க முடியுமா? தெய்வம் மனுஷ்ய ரூபேணா…..இல்லையா?

குருவாயூரப்பா…நீ நினைத்ததை நடத்திக் கொள்….நான்…. என்று இங்கு யாருமில்லை…எல்லோரும் நீயாப் போனதால்….தெளிந்த மனதோடு ஆர் ஜே பில்டரைப் பார்க்கப் புறப்பட்டார்…தனக்கு கொடுக்கப்படும் வீட்டில் தங்களுக்கென ஒரு அறையை ஒதுக்கி விட்டு மீதமிருக்கும் அத்தனை இடத்தையும் விஸ்தாரமாக ஒரு நூலகமும்….ஒரு பிசியோதெரபி அறையுமாக முறைப்படி அதற்ககாந மாற்றியும்….கட்டித் தர வேண்டுமாய் முன்கூட்டியே சொல்வதற்கு.

இத்தனை ஆண்டுகளாக இல்லாத எண்ணங்கள் இன்று புதிதாக உதிப்பதன் காரணம் தான் என்ன..?ஒரு காரணம் இல்லாது ஒரு காரியம் நடக்காது என்பதன் தாத்பரியம் இது தானோ…..?தனக்கு பின்னால் தன் வாரிசுகளுக்கு என்று எண்ணியிருந்த எனது எண்ணம் இன்று யாரால் மாறியது…எப்படி மாறியது மனம்…இதெல்லாம் தான் அவனின் லீலை…

ஒரு குறுகிய வட்டத்தில் சுழன்று கொண்டிருந்த என்னை ஒரு ரங்கராட்டினத்தில் ஏற்றி எங்கள் சாதாரண மனதுக்குள் ஒரு கனல் பொறியை உண்டு பண்ணி..அதை வைத்து ஒரு அசாதாரண நிகழ்வை நடத்திக் காட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் திறன் அவனன்றி எவருக்கு உண்டு…? மூடிய கண்களுக்குள் பவானி மகிழ்வோடு சிரித்தாள்.

நாளைக்கு நான்…அவள் …. இருந்தாலும்….இறங்கிவிட்டாலும்…..இந்த ரங்கராட்டினம் யாரையோ…ஏற்றிக் கொண்டும்…. , இறக்கி விட்டும்…….தன போக்கில்…இன்னும் பல நல்ல விஷயங்களைத் தாங்கி…சுற்றிக் கொண்டே இருக்கும்…..வடலூர் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு போல்.
“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே..நீ…. நதி போல ஓடிக் கொண்டிருக்கு..”..எங்கிருந்தோ… பாடல் நல்ல சகுனமாக தவழ்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *