யுக புருஷன்

 

மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது… பிராமணர்களிடம் சிக்கி விட்டார்களோ?

சந்திப்பதாகச் சொல்லி வைத்திருந்த ஆலமரத்தடியில் ஒதுங்கினான். உள் விழுதுகளுக்கிடையே குழி தோண்டியிருந்தான். இரவாகி விட்டால், விடியும் வரை குடும்பத்துடன் குழியில் பதுங்கிக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தான். எங்கே இன்னும் காணோம்? கரையத் தொடங்கிய நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். நெருக்கமாய் விழுதுகள். ஒரு விழுதைப் பிடித்து மேலேறினான். உயரமான இடத்தில் பக்கத்து விழுதோடு இணைந்திருந்த துணிப்பையைப் பார்த்து வியந்தான். அம்புறாத் துணி. பையுள் நிறைய அரசமுத்திரைப் பொற்காசுகளும், இரண்டு தங்கப்பிடி வாட்களும் இருந்தன. அப்படியே விட்டு, விழுதைப் பிடித்தபடிச் சுற்றிலும் நோட்டமிட்டான்.

மாலை மான்குட்டியை விழுங்கத் தொடங்கியிருந்தது இரவு மலைப்பாம்பு. கூவிக் கொண்டும் அலறிக் கொண்டும் கூடு தேடிப் பறந்தது புள்ளினம். எதிர் விழுதில் தலைகீழாகத் தொங்கின சில வௌவால் குஞ்சுகள். புழுதிப் படர்ந்தப் புதர்வெளிகளில் பதுங்கிப் பதுங்கி ஓடிய முயல்களைப் பிடிக்க, சிறு நரிகள் துரத்தின. சற்றுத் தொலைவில் ஒரு முயல்குட்டியைப் பிடித்துவிட்டச் சிறு நரி, குதூகலத்தில் ஊளையிட்டது. ‘பாரம்மா, பார், என் முதல் வேட்டை’ என்று பின்வந்தத் தாய் நரியிடம் பெருமை பேசியது. பிடிபட்ட முயலுக்காக வருந்திய முகுந்தன், திடுக்கிட்டான். பதுங்கி வந்த ஒரு ஓனாய், தாய் நரியை தாவிக் கவ்விக் கொன்றது. முயலைத் தொலைத்தச் சிறு நரி, தாயையும் மறந்து அலறி மறைந்தது. இறந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடிய ஓனாய் சிலையாய் நின்றது. எதிரே இரண்டு புலிகள். முகுந்தன் நடுங்கினான். விழுதைக் கவனமாகப் பிடித்துக் கொண்டான். புலிகளைப் பார்த்த ஒனாய், தான் தனியாக இருப்பது புரிந்தோ என்னவோ, இரையைத் துறந்து ஓடியது. துரத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல் தயங்கிய புலிகள், அப்பொழுது இறந்த நரியின் இரத்தம் கசியும் இரைச்சியை முகர்ந்தவுடன், ஓனாயை மறந்தன. நரியிரைச்சியை உண்ணத் தயாரான புலிகள், பெரும் ஓசை கேட்டுத் தயங்கின. முகுந்தனும் நடுங்கினான். சிங்கத்தின் கர்ஜனை. ‘யாரடா, என் காட்டில் என் உணவை எனக்குத் தெரியாமல் உண்பது?’ என்பது போல், வானைப் பிளக்கும் கர்ஜனை. பசி வந்திடப் பத்தும் பறக்க விட்ட புலிகள், ‘நாம் இருவர், சிங்கம் ஒருவன். ஒரு கை பார்த்து விடலாம்’ என்பது போல் பதிலுக்கு உறுமின. உறுமல்கள் உரசினால் தீப்பொறி தோன்றுமா? முகுந்தனுக்குக் குழம்பியது. விழுதின் பத்திரத்தில் கண்களைத் தொலைவில் தீர்க்கப்படுத்தினான். சிங்கத்தின் கர்ஜனை இன்னும் அதிகமானது. கால்களைத் தரையில் ஊன்றி மண்ணையும் தூசியையும் கிளப்பியது. புலிகளோ, உறுமலோடு நிற்காமல் சிறிது இடம்வலமாய்ப் பாய்ந்து காட்டின. தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் வாலைச் சுழற்றி இன்னும் கோரமாகக் கர்ஜித்தது சிங்கம். காட்டுச் சட்டம். கர்ஜனை வென்றது. புலிகள் வாலை முடக்கி ஓடி மறைந்தன. சிங்கம் ஒரே தாவலில், நரியிரைச்சியைக் குதறியது. அடுத்த கணம், அம்படி பட்டுச் சுருண்டது. வலியோடு கர்ஜனை செய்து விட்டு இறந்தது. சற்று தொலைவில் இன்னொரு மரத்தின் பின் பதுங்கியிருந்த ஒரு வேடன் வெளியே வந்து, விழுந்து கிடந்த சிங்கத்தை நோக்கி நடந்தான். மானிடச் சட்டம்.

முகுந்தன் திகைத்தான். நெஞ்சு துடிக்க மறக்கும் போலிருந்தது. மனைவி மக்களுடன் இந்தக் காட்டில் எப்படி இரவைக் கழிக்கப் போகிறேன்? எப்படி இந்நிலைக்கு ஆளானேன்? கண்களை ஒரு கணம் மூடிக் கொண்டான்.
“ஏனம்மா, என்னை அவர்களுடன் வேதம் ஓதவும் வித்தை கற்கவும் சேர்க்க மாட்டார்களா? ஒதுக்கி விட்டார்களே?” என வருந்தியவனைக் கருணையோடு பார்த்தாள் சோதகி. கண்ணுக்கு அழகாக இருந்த தன் எட்டு வயது மகனுக்கு என்ன சொல்வது என்று தோன்றாமல், உண்மையைச் சொன்னாள்.

“இல்லையடா முகுந்தா. அவர்கள் உயர் குலத்தவர்கள். அவர்களோடு நீ பழக முடியாது. நாம் தனியாகவே இருக்க வேண்டும்”

“ஏன்? நான் பிராமணணுக்குப் பிறந்தவன் தானே? நீ தானே சொன்னாய் வாமதேவர் என் தந்தை என்று?”

“ஆமாம். ஆனால் நான், உன் தாய், பிராமண குலத்தில் பிறக்கவில்லை. சூத்திர குலத்தில் பிறந்ததனால் உனக்கு ஒரு பிராமண உரிமையும் கிடையாது”

“நான் அவர்களுடன் படிக்கவும் விளையாடவும் விரும்புகிறேன், அம்மா. அதற்குப் பெயர் உரிமையா?”

“ஆமாமடா. இனி நீ அங்கே போகாதே”

“ஏனம்மா, நான் அவர்களை விட எந்த விதத்திலாவது குறைவானவனா?”

“இல்லையடா, உனக்கென்ன குறை? நீ சிங்கம். தேவன். கடவுளின் அவதாரம். அவர்களுக்குத்தான் இன்னும் புரியவில்லை. புரியும் வரை அவர்களுடன் பழகாதே. சொன்னால் கேள்”

அவன் கேளாது ஓடினான். வேலியைத் தாண்டிக் குதித்து அங்கே விளையாடிக் கொண்டிருந்தப் பிராமண, சத்திரியக் குலப் பிள்ளைகளுடன் கலந்தான். “நானும் வருகிறேன், விளையாட. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றான்.

“போடா” என்று விரட்டினர்.

“என்னுடைய தந்தை வாமதேவர். நானும் பிராமணன் தான். நான் கடவுளின் அவதாரம் என்று கூட என் அம்மா சொன்னார்” என்று வாதாடினான்.

“பிராமணனா? கடவுளின் அவதாரமா?” என்று பிற பிள்ளைகள் கைகொட்டிச் சிரித்தனர். முகுந்தனை நோக்கித் துப்பினர். “நீ பன்றி மேய்க்கும் சூத்திரன். போ, போ” என்று அவனை விரட்டினர்.

“போக மாட்டேன். போக மாட்டேன், என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்”

“போகாவிட்டால் உன் கதி என்னவாகும் பார்!” என்று அந்தப் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து முகுந்தனைக் கீழே தள்ளினர். அலறிக்கொண்டு வந்தத் தாயைக் கவனிக்காமல் கீழே கிடந்தவனை அடித்து உதைத்தனர். “பிராமணனுக்குப் பிறந்து விட்டால் பிராமணனாகி விடுவாயா?” என்று அவனை முறை போட்டுத் தாக்கினர். தாக்கப்படும் மகனைத் தாங்கத் துடித்தத் தாய், குல வேலியைத் தாண்ட முடியாமல் கூச்சலிட்டாள். உதவிக்கு யாரும் வரவில்லை.

அடித்து உதைத்து ஓய்ந்து போன பிள்ளைகள், “இந்தா, உன் பிள்ளையை எடுத்துக் கொண்டு போ” என்று வேலியைத் திறந்து அவளுக்கு வழி விட்டு விலகினர். “இனி பிராமணன் என்ற எண்ணமே வரக்கூடாது இவனுக்கு”. துடித்துப் போன தாய், குருதிப் பரவிக் கிடந்த மகனைப் பார்த்தாள். பிள்ளைகளைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஊழியின் தீவிரம். சூத்திர சாபம் பலிக்குமா என நினைத்தாள். ‘சீ!’ எனக் கலைந்து மீண்டும் மகனைப் பார்த்தாள். நினைவிழந்த மகனை மடியேந்தி முகம் துடைத்தாள். மென்மையாகத் தட்டியெழுப்ப முனைந்தாள். கண்ணே, முகுந்தா, என்னைப் பாரடா! இறந்து விட்டானோ? என் மகன்… என் தலைவன்… என் இறைவன் இறந்து விட்டானோ?

வாமதேவர் இறந்தபோது முகுந்தனுக்குப் பதினாறு வயது. சொத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்தளித்த ஊர்ப் பஞ்சாயத்து, அவனுக்கும் அவன் தாய்க்கும் எதுவும் தரவில்லை. முகுந்தனுக்குக் கோபம் வரவில்லையென்றாலும் தன்னுடையத் தாயின் பொருட்டாவது நீதி கோரத் தோன்றியது. ஊர்ப் பஞ்சாயத்தை அழைத்து நியாயம் கேட்டான்.

“நானும் அவர் பெற்ற பிள்ளை, எனக்கு வாமதேவர் சொத்தில் உரிமை உண்டு. எனக்காக இல்லாவிட்டாலும் என் தாய்க்காக… அவள் வாழ்விற்காக… வாமதேவப் பிராமணருக்கு அவள் செய்த அனைத்துச் சேவைகளுக்காக… தியாகங்களுக்காக… அவள் செய்த எல்லையில்லாச் சேவைகளின் சின்னமாக, வரம்பு மீறியத் தியாகத்தின அடையாளமாக.. இதோ நான் இருக்கிறேன், அதற்காக…சொத்தில் பங்கு கொடுங்கள்”

பஞ்சாயத்தில் சிரித்தனர். ஒரு பிராமணர் சைகையால் அவையடக்கிப் பேசினார். மனுநீதிப்படி சொத்து பிரிக்கப்பட்டதென்றார். “பிராமணனுக்கு பிராமணப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு முழுச் சொத்திலும் பங்கு உண்டு. சத்திரியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு அரைச் சொத்தில் பங்கு உண்டு. வைசியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்குக் கால் சொத்தில் பங்கு உண்டு. சூத்திரப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு ஒன்றும் கிடையாது. பிராமணராகப் பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அவர் தான் இறந்து விட்டாரே, உனக்கு ஒன்றும் கிடையாது. போ, போ” என்றார்.

மறுமொழி பேசாமல் நின்றவனைக் கேலி செய்தனர். பஞ்சாயத்துப் பிராமணர் தொடர்ந்தார். “இது மனு ஸ்ம்ருதி. மனுநீதியின் ஒன்பதாவது பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாகப்பிரிவினை நியமம். நாங்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை. உனக்கு ஒன்றும் கிடையாது. நேரத்தை வீணாக்காமல் போய்ச்சேர்” என்று அவையைக் கலைத்தார்.

“நீங்கள் யார் நீதி சொல்வதற்கு?” என்றான் முகுந்தன், ஆத்திரத்துடன்.

“நானா? நான் இந்தப் பஞ்சாயத்தின் மூத்தப் பிராமணரில் ஒருவன். நாங்கள் நீதி சொல்லவே பிறந்தவர்கள். நான் ஒரு வேதம் படித்த பிராமணன். அதோ இருக்கிறாரே மூத்தவர், அவர் இரண்டு வேதங்களையும் படித்திருக்கிறார். உனக்கு இதெல்லாம் புரியாது. போ, போய் பிழைக்கும் வேலையைப் பார்” என்றார் பிராமணர்.

அவன் நகராமல் நின்றது, கூட்டத்துக்கு எரிச்சலூட்டியது. “அவனை அடித்து விரட்டுங்கள். மூத்தப் பிராமணரையா எதிர்த்துப் பேசுகிறான்?” என்றது கூட்டத்தில் ஒரு குரல்.

“அவனை விடுங்கள். அவனை இப்படிப் பேச வைத்திருக்கும் அவள் தாயை அடித்து நொறுக்குங்கள். பிள்ளையை வளர்க்கும் விதம் தெரியவில்லை? பிராமணரையா எதிர்த்துப் பேசுவது?” என்றது இன்னொரு குரல்.

எதிர்பாராமல் ஒரு சிறு கல் முகுந்தனின் தாய் முகத்தில் பட்டுக் கீறியது. தொடர்ந்து வந்த கல் மழையை, அவன் தன் தாயின் முன் நின்றுத் தடுத்தான். “வேண்டாம், என் தாயை விட்டு விடுங்கள். நான் போகிறேன். அவளுக்குப் புகலிடம் கொடுங்கள், ருதுவுக்கு ஒரு சேலை, வேளைக்கு ஒரு பிடி சோறு கொடுங்கள், அது போதும்” என்று கெஞ்சினான்.

“ஒன்றும் கிடையாது. சூத்திரக் கூட்டமே ஓடுங்கள்” என்று அவர்களை விரட்டினர். தாயை இழுத்துக் கொண்டு ஓடினான். ஓட ஓட விரட்டினர் ஊரார்.

ஓடி வந்தப் புது மனைவியைத் தடுத்து நிறுத்தினான் முகுந்தன். “என்ன, ஏன் பதறுகிறாய்?” என்றான்.

“குடி கெட்டது. பழைய பேரரசர் கொடுத்தக் காணி நிலைத்தைப் பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டார்கள்.”

“யார்?”

“புது அரசர். கேட்பாரில்லையா? நீங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர் தானே? அரசனிடம் முறையிட்டுப் பாருங்களேன்?”

“ஒரு பிராமணனின் வேட்கை தணியப் பிறந்தவன் என்பதோடு சரி, குல உரிமை எனக்கு ஒன்றுமில்லையே கண்ணே” என்று, அழுது கொண்டிருந்த மனைவியின் கண்ணீரைத் துடைத்தான். புதிய அரசனைப் பார்த்துப் பேச மனைவியோடு விரைந்தான்.

அவையில் அவமானம். சிற்றரசன் சிரித்தான். “பதரே!” என்றான். “உன் அரசன் குடும்பத்தோடு காட்டுக்குத் துரத்தப்பட்டது தெரியாதா? அவன் சொத்து எல்லாவற்றையுமே சூதாடித் தோற்று விட்டான். அவன் நாடு, இனி என் மாமன்னர் சொத்து. அவன் மண், இனி என் மாமன்னர் சொத்து. அவன் மக்கள், இனி என் மாமன்னர் சொத்து. என் மாமன்னருக்காக நான் அரசாளும் முறையில், இனி என் சொத்து. உனக்கு ஒரு தகுதியும் கிடையாது. ஓடு”

“அரசே, இவர் பிராமண குலத்தில் பிறந்தவர். இவருக்குத் தீங்கு செய்யாதீர்கள். நாங்கள் பிழைக்க வழி செய்து கொடுங்கள்”, கெஞ்சினாள் மனைவி.

“நீ யார்? இவன் மனைவியா? இனி நீயும் எனக்குச் சொந்தம்” என்றான் அரசன். “இவளைப் பிடியுங்கள். என் மாமன்னன் செய்தது போல் துகிலுரிக்க ஆசைப் படுகிறேன். எவன் பொழிகிறான் இவளுக்கு ஆடை மழை என்று பார்ப்போம்” என்று எக்காளமிட்டான்.

“வேண்டாம், இவள் என் மனைவி” என முன் நின்றுக் காவலர்களைத் தடுத்தான் முகுந்தன். அரசன் காலில் விழுந்தான். “அரசே, இது முறையல்ல”

“என்ன முறை கண்டுவிட்டாய்? உன் பழைய அரசன், மனைவியை ஐவருடன் பகிர்ந்து கொள்ளவில்லையா? அவனை அரசன் என்று கொண்டாடினீர்களே? நான் மட்டும் என்ன கேட்டுவிட்டேன்? என்னுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாதா? நான்தானே உன் அரசன் இப்போது?”

“அரசே, இது கடவுளுக்கும் அடுக்காது, எங்களை விட்டுவிடுங்கள், நிலம் வேண்டாம். பிச்சை எடுத்தாவதுப் பிழைத்துக் கொள்கிறோம்”

“பிடியுங்கள் அவளை” என்று கட்டளையிட்டான் அரசன். அருகிலிருந்த ஆஸ்தான குருவிடம் “அரசனுக்கு உரிமை உண்டா இல்லையா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.

ஆஸ்தான குரு அவசரமாக, “ராஜா தெய்வ ரூபம். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு” என்றார்.

அரசன் சிரித்தான். “பிராமணரே சொல்லி விட்டார். எனக்கு உரிமை உண்டு. நேற்றுப் பழுத்த மாங்கனி போல் இருக்கிறாள் உன் மனைவி. மன்னனுக்கு வழங்கி விடு. உடனே, உடனே” என்று எழுந்தான். காவலர்களை அழைத்து, “இவளை என் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றான்.

“வேண்டாம், விட்டுவிடுங்கள். இந்தப் பாவம் உங்களுக்கு வேண்டாம்” என்று அழுதாள் மனைவி.

“பாவமா? என்ன சொல்கிறாள் இவள் குலகுருவே?” என்று ஆஸ்தான குருவைப் பார்த்தான். பிறகு சிரித்தான். “நான் யார் தெரியுமா? அரசன். ராஜா. தெய்வரூபம். எனக்குப் பாவபுண்ணியமில்லை. இது ராஜநீதி” என்று அவையைக் கலைத்தான். முகுந்தனைப் பார்த்து, “உனக்கு நிலம் வேண்டுமா, அல்லது உன் மனைவி வேண்டுமா?” என்றான்.

“நிலமெல்லாம் வேண்டாம், அரசே. எதுவுமே வேண்டாம். நாங்கள் நாட்டை விட்டே ஓடி விடுகிறோம். என் மனைவியை விட்டுவிடுங்கள்”, வெட்கம் விட்டுக் கெஞ்சினான்.

“பிழைத்தீர்கள். இவள் இன்றிரவு என்னுடன் இருக்கட்டும். நாளை வந்து அழைத்துக்கொள். இவனை அவையிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்” என்றான். மனைவியைக் காவலர்கள் கதறக் கதற அழைத்துச் சென்றது காதில் விழ, அவனை அவையிலிருந்து அகற்றினர். அரசனைக் கொலை செய்யத் தோன்றியது முகுந்தனுக்கு.

“கொலை செய்தீர்களா? திருடினீர்களா?” அலைபாய்ந்தாள் முகுந்தனின் மனைவி.

“கண்ணே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளும் மனைவியும் பசிக் கொடுமையில் வாடும் நிலையைப் பொறுக்க முடியவில்லை. இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லையே, என் தேனே!”, இயலாமை பொங்க அழுதான். “ஆறு பொன்முடிகளைத் திருடினேன். எடுத்து உள்ளே வை. விடிந்ததும் தெற்கே எங்கேயாவது ஓடிவிடலாம்” என்றான்.

“பொன்முடிகளா? எப்படி எங்கே ஒளிப்பேன்?” என்று அஞ்சிய மனைவியை அமைதிப் படுத்தினான். “அன்பே, எனக்கொன்றும் தோன்றவில்லை. நாடெங்கும் கேடு தலை விரித்தாடுகிறது. குருட்சேத்திரப் போரில் இருதரப்பு மன்னர்களும் சேனைகளும் நாசமானதும், இங்கே அரசாளவோ நீதி பேசவோ எவருமில்லை. எங்கும் நாசம். சத்திரியர்கள் குலமே நாசமாகிவிட்டது. அவர்களுக்காகப் போராடிய அப்பாவிச் சூத்திரர்களும் பெரும்பாலும் அழிந்து விட்டார்கள். எஞ்சியிருப்பது பிராமணர்கள் மட்டுமே. வெற்றி பெற்ற ஐவரும் இன்னும் சோகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பழையபடி அரசாளப் போவதில்லை. இனி எங்கேயும் அராஜகம் தான். நாம் இங்கிருந்து தெற்கே ஓடிவிடலாம்”

“தெற்கா? அது எமனின் திசையாயிற்றே? பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு தெற்கே ஏதாவது கேடு வந்து விட்டால்?”

“இப்போது மட்டும் என்ன உயர்ந்து விட்டது? பிராமணனுக்குப் பிறந்ததிலிருந்து படிப்பைப் தொலைத்தேன். இளமையைத் தொலைத்தேன். தாயைத் தொலைத்தேன். தாரத்தைச் சோரம் போக்கினேன். இனிப் பிள்ளைகளின் வாழ்வையும் தொலைக்க விரும்பவில்லை. அரசுக்குச் சொந்தமான தங்கத்தை எடுத்துச் சென்ற இரண்டு காவலர்களைக் கொன்று, இந்தப் பொன்முடிகளை எடுத்து வந்தேன். என்னை மன்னித்து விடு”

“கொலையா? பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு இந்தப் பாவம் ஏன்?” அவள் ஆற்றாமையால் அழுதாள்.

அவன் தேற்றினான். “பாவமாவது புண்ணியமாவது? நான் பிராமணனில்லை. ஒரு பிராமணக் காமவெளிப்பாட்டின் அடையாளம், அவ்வளவுதான். கண்ணே, கேள். யாதவ குலமெல்லாம் அழிந்து விட்டதாம். கடவுள் என்று எல்லோரும் கொண்டாடிய கண்ணன் கூட இறந்து விட்டானாம். சூத்திர வேடனின் அம்புக்குப் பலியாகி விட்டானாம். அரசர்கள் துறவு பூண்டு விட்டார்கள். போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தப் பிராமணர்கள், கண்ணனின் மரணத்துக்கும் அதனாலேற்பட்ட அரசத்துறவுக்கும் காரணமானதால் சூத்திரக் குலத்தையே எரிக்கத் துணிந்துவிட்டார்களாம். மூன்று திசைகளிலிருந்தும் பிராமணர்கள் கூடி வருகிறார்களாம். புது யுகம் வருகிறதாம். பெரிய பூகம்பம் ஒன்று எந்தக்கணமும் நிகழப்போகிறது என்று அரசவையிலும், மடங்களிலும், கோவில்களிலும் பேசுகிறார்கள். பலர் தெற்கே ஓடத் திட்டமிட்டிருக்கிறார்கள். நாமும் ஓடிவிடலாம். குழந்தைகளுடன் நீ ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தடிக்கு, அந்தி மயங்கும் நேரத்தில் வந்துவிடு. இன்றிரவு காட்டில் பதுங்கியிருப்போம். விடிந்ததும் பயணம்” என்று புறப்பட்டான்.

“சற்று பொறுங்கள், எங்கே போகிறீர்கள்?”

“நான் இங்கிருந்தால் உங்களுக்கு ஆபத்து. பொன்னைத் தொலைத்தவர்கள் என்னைத் தேடி வருமுன் நான் ஓட வேண்டும்” என்றவனை ஆறத்தழுவினாள். “பிள்ளைகளுடன் வருகிறேன் கண்ணாளா” என்று அவன் கண்களில் முத்தமிட்டாள்.

கண்ணைத் திறந்தபோது, வேடன் சிங்கத்தை அறுத்து மூட்டை கட்டியிருந்தான். குழி வெட்டி, கழி நட்டு, தீ மூட்டி நரியிரைச்சியை வாட்டிக் கொண்டிருந்தான். சிதறிக்கிடந்த சிறு மாமிசத் துண்டங்களைப் புதருக்குள்ளிருந்தும் பூமிக்குள்ளிருந்தும் வந்தச் சிறு முயல்கள் தின்றன. முயலில் தொடங்கி முயலில் முடிந்த நிகழ்ச்சிகளை நினைத்து வியந்தான் முகுந்தன்.

தீப்பந்தங்களின் ஒளி தொலைவில் தெரிந்தது. கூச்சல், ஆரவாரம். ஆபத்தின் வாடை அறிந்த வேடன் இரைச்சியை அங்கேயே விட்டு ஓடினான். தீப்பந்தம் பிடித்து வந்த ஆட்கள், ஆலமரத்தருகே நின்றனர். முகுந்தன் விழுதுகளின் இடையில் ஒளிந்து கொண்டு பார்த்தான். வந்தவர்கள் தன் மனைவியையும் இரண்டு மக்களையும் கட்டி இழுத்து வருவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“எங்கே உன் கணவன்? திருடன்?” என்று ஒருவன் அவன் மனைவியைச் சாட்டையால் அடித்துக் கேட்டான். மனைவியும் மக்களும் வீறிட்டலறியதும், முகுந்தனுக்கு நாடி நரம்பெல்லாம் துடித்தன. “எங்கே சூத்திரன்?” என்று இன்னொருவன் அவள் கன்னத்தில் அறைந்தான். முகுந்தனுக்கு வயிற்றில் குருதி கட்டியது. ஆற்றாமையால் தவித்தான். கோபம் பொங்கியது. ‘வேண்டாம், சொல்லிவிடாதே’ என்று கோழை போல் நினைத்தான்.

“இவளைக் கேட்டால் சொல்வாளா? குழந்தைகளில் ஒன்றைக் கொன்று நரிகளுக்குத் தீனி போடுவோம். அப்போது சொல்வாள்” என்றான் ஒருவன். “ஒழிந்தது ஒரு சூத்திரப் பிள்ளை” என்று சிலர் கூச்சலிட்டனர். அவளிடமிருந்து குழந்தைகளைப் பிடுங்கினர்.

“வேண்டாம், வேண்டாம்…அதோ, அந்த ஆலமரம். அங்கேதான் ஒளிந்திருக்கிறார் என் கணவர். என் குழந்தையை விட்டு விடுங்கள்.. ஐயா.. என் குழந்தைகளை விட்டு விடுங்கள்… உயிர்ப்பிச்சை.. உயிர்ப்பிச்சை..” என்று கதறியழுதாள் முகுந்தனின் மனைவி. குழந்தையின் முன்னால் கணவனும் பொருட்டில்லை தாய்க்கு. கணவனைக் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் அழுதாள். முகுந்தன் இருந்த திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள். ‘என்னை மன்னித்து விடுங்கள். நான் கோழை’ என அவள் மனதுள் வெம்பிக் கதறியதை முகுந்தனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

கூட்டத்தினர் தீப்பந்தங்களை உயர்த்தினர். முகுந்தன் இன்னும் நெருக்கமாக ஒளிந்து கொண்டான். தன்னைப் பார்த்து விட்டார்கள் என்று புரிந்தது.

“அதோ! கொலைகாரன்! பிடியுங்கள்” என்று ஆரவாரித்தபடி ஓடி வந்த கூட்டத்தைப் பார்த்தான். “கொல்லுங்கள், எரியுங்கள்” என்று கூச்சலிட்டபடி வந்தவர்களைப் பார்த்தான். தன் மனைவியையும் மக்களையும் மிதித்தபடி ஓடி வந்த வெறியர்களைப் பார்த்தான். தவித்தான். என் கண்ணே! கண்மணிகளே! முகுந்தனின் மனம் பதைத்தது. கூட்டத்திலிருந்து யாரோ விட்டெறிந்த தீப்பந்தம் ஒன்று அவனுக்கு அருகே வந்து கீழே விழுந்தது. மரத்தடிக்கு வந்துவிட்டார்கள். முகுந்தன் இன்னும் உயர ஏறத் தொடங்கினான். அம்புறாத் துணி! ஏதோ தோன்ற, அதிலிருந்த வாட்களை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பொற்காசுகளோடு மூட்டையைக் கழுத்தில் அணிந்தான். உயர ஏறினான். சிலர் மரத்தில் ஏறத் தயாரானார்கள். சிலர் கத்திகளையும் தீப்பந்தங்களையும் உயர வீசினார்கள். உயர ஏறிக்கொண்டே இருந்தான். “உயிரோடு கொளுத்துங்கள்” என்ற கூச்சல். உச்சத்துக்கு வந்து விட்டான். இனி ஏற முடியாது. வேறு வழியில்லாமல் உயரத்திலிருந்து கத்தினான். இரண்டு விழுதுகளில் இரண்டு கால்களையும் பின்னிக் கொண்டு, இரண்டு கைகளிலும் வாளேந்திக் கத்தினான். பொருளற்ற ஓசை.

தீப்பந்தங்களின் ஒளியாட்டத்தில் முகுந்தன் வானத்தையும் பூமியையும் அளந்து நிற்பது போல் இருந்தது. ‘ஹே’ என்று மறுபடி உயிரைப் பிழிந்துக் கத்தினான். அவன் குரல், சிங்கத்தின் கர்ஜனை போல் காதைப் பிளந்தது. கருகிக் கொண்டிருந்த இரைச்சியின் மணம் எங்கிருந்தோ வந்தக் காற்றில் கலந்து விபரீத உணர்வூட்டியது. காற்றில் விழுதுகள் அசைய, நிலையில்லாது முகுந்தன் இன்னும் சிலிர்த்து அலறினான். கழுத்திலிருந்த அம்புறாத்துணிக் கலைந்து விலகி பொற்காசுகள் பூமியில் பரந்து விழுந்தன.

நிமிர்ந்து பார்த்தக் கூட்டத்தினர், திகைத்தனர். தீப்பந்தங்களையும் ஆயுதங்களையும் எறிந்தனர். தரையில் விழுந்து வணங்கினர்.

- 2011/06/25 

தொடர்புடைய சிறுகதைகள்
சப அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ஆள் துணை சேர்த்துக் கொண்டு, கூட்டமாக மணல் மேட்டிற்கு வந்த போது இருட்டத் தொடங்கிவிட்டது. அமைதியாக இருந்தது இடம். நடந்து முடிந்த விபரீதத்திற்கான அடையாளமோ, தடயமோ தெரியவில்லை. "இங்க தாங்க" என்றாள், விசும்பியபடி. "என்னம்மா யாரையும் காணோமே? இன்ஸ்பெக்டரும் ...
மேலும் கதையை படிக்க...
திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் - ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக் கூட்டமில்லை. வெனிஸ் அறையில் பதினைந்து பேர் இருக்கலாம். வழக்கமாக வரும் சாமி நாதன், சாய் பிரபு, நெடுமாறன். அருகில் புதிதாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மாடியிலிருந்து லியோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலர் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள். தெரிந்த முகங்களிடையே புரிந்த அன்பின் அடையாளம் விரவியிருக்கும் என்று எண்ணிய லியோவுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் ஏசிக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருந்தது வருத்தமாக இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன். வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த பதவி, பெயருக்குத் தான். காசாளர் வேலை, பிலாஸ்டிக்கா பேப்பரா என்று கேட்டு பொட்டலம் கட்டுவது, ஸ்டாக் ரூமில் மளிகை அடுக்குவது, காய்கறி ...
மேலும் கதையை படிக்க...
"அப்பா.. நீயும் அம்மாவும் திடீர்னு செத்துப் போயிட்டா எங்க கதி என்ன ஆகும்?" இரவின் தனிமையில் கார் ஓட்டிக் கொண்டிருந்த ரகுவுக்கு, பதிமூன்று வயது வேதாவின் கேள்வி நினைவுக்கு வந்துத் தாக்கியது. வருமான வரி இலாகாவிற்கு எதிரான வழக்கில் கம்பெனிக்கு ஆதரவாக வெளிவந்தத் தீர்ப்பைக் ...
மேலும் கதையை படிக்க...
மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா. ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் ...
மேலும் கதையை படிக்க...
"அரிகாதொ". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான். "மடா இகிமாசு". திரும்பி வருவதாகச் சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
அடுத்த சில கணங்களில் என்னை விசாரிப்பார்கள். புதிய விசாரணைக் குழுவின் மூத்தவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்கப்படாத அறிக்கை ஒன்று அவர்கள் கையில் படபடத்துக் கொண்டிருந்தது. இந்த முறையாவது அறிக்கை எதிர்பார்த்தபடி அமையுமா? என் பெயரின் களங்கம் நீங்கி என்னைப் பழையபடி பயணங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். "மன்னா.. மன்னா" "என்னா?" "நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?" "பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா" "உங்களால் ...
மேலும் கதையை படிக்க...
'இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு' என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல். நிலவொளி இனம் புரியாதபடி அச்சமூட்டியது. தேசிய நெடுஞ்சாலை 94ல் சீராகச் சென்று கொண்டிருந்தது அவனுடைய பால்வண்டி. விடிவதற்குள் மினியெபொலிஸ் சேர்ந்துவிடலாம் என்று ...
மேலும் கதையை படிக்க...
வருகை
காசிருந்தால் கல்யாணம்
மகிழ்ச்சி எந்திரம்
வாலன்டியர்
தந்தைசொல்
அதர்மு மாமா
கோமதீ
காதல் தாது
வந்தவளை – எங்கள் சவடால் 2K+11
கடைசி வண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)