யாரிடம் சொல்வேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 7,589 
 

மும்பையில் அனிதா பாண்டே யின் வீட்டில் கிட்டி பார்ட்டி களை கட்டியது. அவர்கள் குழுவில் மொத்தம் ஆறு பேர். மாதாமாதாம் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். பின் குலுக்கல் முறையில் யாருடைய பெயர் வருகிறதோ அவருக்கு முழுப்பணம் ஆறாயிரம் கொடுக்கப்படும். அடுத்த மாதம் குலுக்கல் சீட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு ஐந்து பேர்களின் பெயர்கள் மட்டுமே எழுதப்படும். இங்ஙனம் வருடத்திற்கு இருமுறை அனைவருக்கும் பணம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மற்றனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கவேண்டும். விருந்தின் முடிவில் கிடைத்தபணத்தை எப்படிச் செலவு செய்யப்போகிறார் என்ற தீர்மானத்தையும் அறிவிக்க வேண்டும்.

இன்று அனிதாவின் முறை.

சமையல் காரி சுட்கிக்கு ஆணைகள் பறந்தன.

சீக்கிரம் பிரட் பக்கோடா பண்ணு.

எல்லாருக்கும் பிளேட்ல சுடச்சுட பிரட் பக்கோடாவும் பன்னீர் ஜிலேபியும் பரிமாரணும்,

கூடவே இருந்து கவனிச்சுக்கோ. அப்போதான் இந்த பார்ட்டிய பத்தி எல்லாரும் பெருமையாப் பேசுவாங்க.

அனைவரும் உண்டு முடித்தவுடன் சிறிதுநேரம் பாட்டுக்கு பாட்டு விளையாடினர்.

பின் தோழி ரேஷ்மியின் விருப்பத்துக்கிணங்க டேப் ரிக்கார்டரில்அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் களித்தனர்.

மற்ற நாட்களில் கீழிருக்கும் சிறிய பூங்காவில் ஒன்றமர்ந்து பேசிக்கொண்டிருப்பர். காலையில் வேலைக்காரியும் , சமயல்காரியும் வந்து போனவுடன் ஒன்றாகச் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்வர்.

மதிய வேளைகளில் சமயல்காரி சமைத்துச் சென்ற சப்பாத்தியையும் , காய்கறியையும் உண்டபின் சிறிய உறக்கம். அதன்பின்பூங்காவில் பொழுதுபோக்கு.

மாலை ஆறு மணியிலிருந்தே சமயல்காரிக்கான காத்திருப்பு. அதன்பின் இரவு உணவு, உறக்கம். இல்லத்தரசிகளான அவர்களின் இனிய பொழுது போக்கு இப்படித்தான்.

விருந்தில் களைப்புற்றிருந்த அனைவரும் அனிதா உட்பட அவளின் பிள்ளை சமன்யு பள்ளியிலிருந்து வந்ததைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

வணக்கம் ஆன்ட்டி என கைகூப்பி

அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.

சமைத்து வைத்திருக்கும் உணவை உண்டுவிட்டு வீடியோ கேம் விளையாடுவது அவன் வழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமன்யு மற்றவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.

அறையின் பேச்சுச் சத்தம் அவன் காதுகளிலும் விழுந்தது.

சுட்கி கொண்டு வந்த டிபனைச் சாப்பிட்டுக் கொண்டே காதுகளைத் தீட்டி அம்மாவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தான் சமன்யு.

அனிதா தன் ஒரே பிள்ளையான சமன்யுவை பார்த்துப்பார்த்து வளர்ப்பதாக பெருமையடித்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் அதே பாட்டைத் தான் பாடிக் கொண்டிருந்தார்கள். நேற்று பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கூட அவள் தன் வகுப்பு ஆசிரியையிடம்

எங்க சமன்யுக்கு வீட்ல முழு சுதந்திரம் கொடுத்திருக்கோம்.

அவனுக்கான தனி அறையில் அவன் விருப்பப்படி இருக்க அனுமதிக்கிறோம்.

இங்க இருக்கற மத்த பெற்றோர்கள் போல படிப்புக்கு பின்னாலேயே ஓட்டப் பந்தயம் மாதிரி ஓடச்சொல்றதுல எங்களுக்கு விருப்பம் இல்லாததால அவனுடைய மன மகிழ்ச்சிக்காக கீ போர்ட் , வீடியோ கேம்ஸ், ஐ பாட் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்.

அவனுடைய உடல் நலத்துக்காக தினமும் சாயங்காலம் யோகா, தியானப் பயிற்சி.

மாஸ்டர் வீட்டுக்கே வந்து சொல்லிக் கொடுக்கிறார்.

இன்னும் அவளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

இது போல் பல இடங்களில் அம்மா பெருமையடித்துக் கொள்வதை அவன் பார்த்திருந்தாலும் தன் பள்ளியிலுமா. ..

அவள் பேசி முடித்தவுடன்

அங்கிருந்த ஒருசில பெற்றோருடன் தன் மதிப்பிற்குரிய ஆசிரியரும்சேர்ந்து அவளைப் புகழ்ந்தது ஆச்சர்யத்தை அளித்தது.

அப்பாவோ வேலை நிமித்தம் காரணமாக எதைக் கேட்டாலும் நேரமில்லை என்பார்.

அம்மாவோ சுதந்திரம் என பிதற்றிக் கொண்டு வேலைக் காரியின் மூலம் அவனின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகிறாள்.

வர வர வீடு அவனுக்கு உயர் ரக நட்சத்திர ஓட்டலைப் போல் தோன்றியது.

எனது சிறிய சிறிய வெற்றிகளையும் , வருத்தங்களையும் யாரிடம் பகிர்வேன். போன வருடம் பிறந்த நாளைக்கு அப்பா அநாதை இல்லத்திற்கு கூட்டிச் சென்றது ஞாபகத்திற்கு வந்தது. அங்கு கூட தன் வயதொத்த நண்பர்கள் சிரித்து மகிழ்ந்து கலகலவென்று இருந்தது போல் தோன்றியது.

எனக்கு நண்பர்கள் னு யாருமில்ல. அம்மாவோட தற்பெருமை கலந்த பேச்சு எனக்கு வருத்தத்த கொடுக்குது..

என் கூட உக்காந்து பேசி அரட்டை அடிச்சி , மார்க் காக சண்டை போட்டு, உணவு ஊட்டிவிட்டு,

சில நேரம் எனக்காகவே அழுது, சில நேரம் என் வெற்றிகளுக்காக சந்தோஷப்படற மிகச் சாதாரணமான ஒரு அம்மா தேவை. எங்கேயாவது கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும் .

‘ எனக்குன்னு வேற யார் இருக்காங்க. உன்னைத் தவிர.

நீயே கேட்டுக்கோ’

என ஐ பேடில் தெரியும் பொம்மையிடம் புலம்பிக் கொண்டிருந்தான் சமன்யு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *