கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 17,140 
 

குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. ‘ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்… ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, ‘ஆமாமா… நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ்.

அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸுக்கு பைக்கில் வரும்போது, எதிர்ப்புறம் பைக்கில் ஒருவனின் முதுகில் கை வைத்தபடி சென்ற ஒரு தேவதை, இவனைப் பார்த்து தெள்ளத் தெளிவாகச் சிரித்தாள். ஒரு விநாடி இவன் பைக்கின் பேலன்ஸைத் தவறவிட்டு, அடுத்து வந்த யு டர்னில் வெகுவேகமாகத் திரும்பி, அந்தப் பெண்ணை சுமந்து செல்லும் பைக்கைத் தொடர்ந்தான். சென்னையின் சபிக்கத்தக்க டிராஃபிக் அவன் பொறுமையைச் சோதிக்க, பல கார்களையும் பஸ்களையும் கடந்து அவளை நெருங்கிச் செல்லும்போது, அவள் மறுபடியும் இவனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்த, இவன் நாடி நரம்புகள் தடதடத்தன. விடாமல் தொடர்ந்தான்.

வள்ளுவர் கோட்டம் அருகே வந்த குப்பை லாரியின் சதியால் அவள் சென்ற பைக்கைத் தவறவிட்டு, ஆபீஸுக்குத் தாமதமாக வந்து ஸீட்டில் உட்கார்ந்தான். ஒருமணி நேரம் தாமதம். எனவே அரை நாள் லீவாகக் கணக்கிடப்படும். ஆனால், அதற்காகச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அந்தப் பெண்தான் தன்னைப் பார்த்து எவ்வளவு அழகாகச் சிரித்தாள்! நேருக்குநேர் கண்கள் பார்த்து ஓர் ஓவியப் புன்னகை! எத்தனை மாதச் சம்பளமும் அதற்கு ஈடாகாதே? இந்த மாதிரியான அங்கீகாரத்துக்குத்தானே ஆணாகப் பிறந்த பாவிகள் எல்லாரும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

காலையில் தன்னைப் பார்த்து புன்னகைத்த அந்தப் பெண்ணை மறுபடியும் பார்க்க நேர்ந்தால், காதலைச் சொல்லிவிட வேண்டும். வாய்ப்பு இல்லையென்றால், அவள் கைகளைப் பற்றி நன்றியாவது சொல்ல வேண்டும். இப்படி ஒரு சிரிப்பைச் சிரித்து 30 ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தப்படுத்தியதற்காக!

குமார், இப்படி வெட்டியாக யோசித்து நினைவுச் சுகத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது, போன் அடித்தது. எடுத்தான்.

”அலைகடல் பத்திரிகை ஆபீஸுங்களா?”

”ஆமா, உங்களுக்கு யாரு வேணும்?’

”சப் எடிட்டர் குமார்?”

”நாந்தான்… சொல்லுங்க!”

”அய்யா, என் பேர் தங்கராஜ். நான் உங்களுக்கு ஒரு பேட்டி குடுக்கணும். எம் போட்டோ உங்க புஸ்தகத்துல வரணும். உங்க நம்பரை சோமு குடுத்தாப்ல…”

”எந்த சோமு?’

”விநாயகா ஃபைனான்ஸ் சோமு…”

யாக்கை

குமாருக்கு சோமு யாரெனச் சுத்தமாகத் தெரியவில்லை. செய்தி சேகரிக்கச் செல்லும்போது, யார் கேட்டாலும் மொபைல் நம்பரைக் கொடுத்துவிடுவது குமாரின் வியாதி. அதனால் விளைகிற சங்கடம் இது.

”சரி… நம்பர் யார் வேணா குடுத்திருக்கட்டும். உங்க பேட்டி பத்திரிகையில வரணும்னா, நீங்க ஏதாவது பண்ணி இருக்கணுமே… எந்த பேசிஸ்ல உங்களை நான் பேட்டி எடுக்கறது?’

”நான் சிலை எல்லாம் செய்வேன் சார்!”

”சிற்பிங்களா… ஸ்தபதியா?”

”இல்லைங்க… ஸ்தபதி எல்லாம் பெரிய வார்த்தை. என்னை நான் அப்படிச் சொல்லிக்க மாட்டேன். ஆனா, எல்லா சிலைகளையும் சரியான அங்கலட்சணங்களோடு செய்வேன். நல்லா படம் வரைவேன். எல்லாமே சுயமா கத்துக்கிட்டேன். என் பேட்டியை நீங்க போட்டிங்கன்னா, என்னைப் பத்தி யாருக்காவது தெரியும். ஏதாச்சும் சான்ஸ் கிடைக்கும். ரொம்பக் கஷ்டத்தில இருக்கேன்.” இதுவரை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த குமாரின் முகம் மாறியது.

”சார்… நீங்க உங்களை விளம்பரப்படுத்திக் கிறதுக்கு எல்லாம் நாங்க பத்திரிகை நடத்தலை… புரியுதா? அதுமாதிரி பண்ண முடியாது. போனை வைங்க.”

”ஏன் சார்? இந்த வாரம் விதவிதமா பூட்டை உடைக்கிற ஒரு திருடன்கிட்ட பேட்டி எடுத்திருக்கீங்க. அவன் எப்படி எல்லாம் திறமையா பூட்டை உடைப்பேன்னு உங்ககிட்ட பெருமையா சொல்லி இருக்கான். போட்டோவோட அதைப் போட்டிருக்கீங்க. நான் ஒரு கலைஞன். என்கிட்ட பேட்டி எடுக்க முடியாதா?” – அந்த நபர் குரலில் ஓர் ஆற்றாமை தெரிந்தது. ஆனாலும், குமாருக்கு கடுப்பாகிவிட்டது.

”ஏங்க… அந்தத் திருடன் போலீஸ் குவார்ட்டர்ஸுக்குள்ள வீடு வீடா உடைச்சுத் திருடியிருக்கான். அது சென்சேஷன். அதனால அவன் பேட்டியைப் போட்டோம். புரியுதுங்களா?”

”அப்ப என் பேட்டி வரணும்னா, நானும் திருடணுமா?” என்றதும் குமார் பொறுமை இழந்தான்.

”சார்… உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. போனை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

”திருடனைப் பேட்டி எடுக்கிற… கலைஞனை இன்சல்ட் பண்ற. என்னா ஜர்னலிஸ்ட் நீ? இந்த நாடு வெளங்குமா? நீ எல்லாம் ஒரு

சப் எடிட்டரா? மடப்பயலே.”

”இதுக்கு மேல பேசினா, நல்லா இருக்காது. போனை வைங்க.”

போனை கட் செய்த குமாரின் முகத்தில் சுத்தமாகச் சிரிப்பு இல்லை. ‘சரியான லூஸா இருக்கான்’ என எரிச்சலுடன் எழுந்து போனான். ஒருமணி நேரத்தில் அந்த ஆளை மறந்துவிட்டான்.

அடுத்த நாள், ரிசப்ஷனில் ஒரு பெண் அவனுக்காகக் காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ரிசப்ஷனுக்குக் கீழே இறங்கும்போதே அவளைப் பார்த்துவிட்டான். நேற்று பைக்கில் சென்றவள். இவனைப் பார்த்துச் சிரித்தவள்!

குமாரின் கை-கால்கள் எல்லாம் ஜிவ் என்னும் உணர்வு பரவ, உடல் லேசானது. நாக்கு லேசாக உலர, தன் உடம்பு முழுவதும் பரபரப்பான ஒரு சூடு பரவியது. காய்ச்சல் போல… ஆனால் காய்ச்சல் இல்லை. இங்லீஷில் ‘எக்ஸைட்டட்’ என சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழில் நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன என ஒரு சப் எடிட்டர் யோசனை மனதுக்குள் ஓட, அவளை நெருங்கினான். அவள் இவனைப் பார்த்ததும் எழுந்தாள். அவள் மட்டுமா எழுந்தாள்?! அவளுடன் கொஞ்சம் இசையும், கொஞ்சம் சுகந்தமும், கொஞ்சம் வெப்பமும் எழுந்தன.

”ஹலோ சார்!”

”ஹலோ… நீங்க..?”

”என் பேர் பாவை.”

பாவைதான். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் வரும் தேவிகாவைப்போல, மதுபாலாவைப் போல இருக்கிறாள். என்ன கொஞ்சம் பழைய பெயராக இருக்கிறது. குமார், பாவையை இப்போது நன்றாக உற்றுக் கவனித்தான். பாவைக்கு வயது 30 இருக்கலாம். எளிமையான காட்டன் சேலை. கழுத்தில் ஒரு பாசிமாலை. சாதாரண செருப்பு எனத் தள்ளுபடியாகவும், கண்களும் முகமும் சிரித்த சிரிப்பில் அள்ளும்படியாகவும் இருந்தாள்.

”நல்ல பேருங்க…”

”என் அப்பா வெச்சது.”

”சூப்பருங்க… இப்பல்லாம் யாரு இந்த மாதிரி பேர் வைக்கிறாங்க” – பாவை சிரித்தாள்.

”ஆக்ச்சுவலா நான் உங்களை ஏற்கெனவே பார்த்திருக்கேன்.”

”நேத்து பைக்ல பார்த்தீங்க; சிரிச்சீங்க.”

”கரெக்ட்… ஆனா, அதுக்கு முன்னாடியே ஒருநாள் ஒரு மீட்டிங்ல உங்களைப் பார்த்தேன். பட், அப்ப நீங்க என்னைப் பார்க்கலை.”

குமார் மனதில் அதற்குள் ஒரு கதைச் சுருக்கம் தோன்றிவிட்டது. பாவை, குமாரை எங்கோ பார்த்திருக்கிறாள். கண்டதும் காதல். இப்போது விசாரித்து வந்துவிட்டாள். கூட்டிப்போய் காதலைச் சொல்லப்போகிறாள்.

இவன் இப்படி நினைக்கும்போதே பாவை கேட்டாள்… ”டீ சாப்பிடலாமா?”

குமார் மனதுக்குள் கன்றுக்குட்டிகள் ஓடின.

”வாங்க போகலாம்.”

டீ குடிக்கும்போது பாவையின் சொற்களுக்காகக் காத்திருந்தான் குமார். பாவை சொன்னாள்… ”அன்னைக்கு ஃபங்க்‌ஷன்ல நீங்க யாரையோ பேட்டி எடுத்துக்கிட்டு இருந்தீங்க… அப்ப சோமுதான் உங்களைக் காமிச்சாரு.”

”எந்த சோமு?”

”விநாயகா ஃபைனான்ஸ் சோமு.”

குமாரின் மனதுக்குள் ஒரு குரல் ஒலித்தது. யார் இந்த விநாயகா ஃபைனான்ஸ் சோமு? இந்தப் பேரை எங்கே கேட்டோம்? நேற்று வந்த போன். அந்தக் கிறுக்குப் பயல்… சிற்பி!

பாவை புன்னகையுடன் பேசினாள், ”நேத்து அப்பா பேசினாராம். நீங்க பேட்டி எல்லாம் எடுக்க முடியாதுனு சொன்னீங்களாம். அதான், ‘நேர்லயே நீ போய் சாரைப் பார்த்துக் கேளும்மா’னு அப்பா சொன்னார். அதான்…”

குமார் மனதுக்குள் ஓர் அணு உலை வெடித்து புல் பூண்டுகள் பொசுங்கின.

30 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக தன்னைப் பார்த்து ஒருத்தி சிரித்தாள் என்கிற பெருமிதம், அவள் ஒரு காரியம் வேண்டித்தான் சிரித்திருக்கிறாள் என உணர்ந்ததும் நொடியில் ஆவியானது. முகம் சுருங்கினான்.

குமாரின் முகம் மாறியதை பாவை படித்துவிட்டாள். கெஞ்சலான குரலில் பேசினாள் ”ஸாரி சார். நீங்க எரிச்சலாவீங்கனு தெரிஞ்சுதான் வந்தேன். இதை ஒரு உதவியா நினைச்சு செய்ங்க. நீங்க பேட்டி போடறது ரெண்டாவது. முதல்ல வந்து என் அப்பாவைப் பாருங்க சார். அவர்கிட்ட பேசுங்க… ப்ளீஸ்!”

‘இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு’ என சொல்ல எத்தனித்து தலைநிமிர்ந்த குமார், பாவையின் கண்களைப் பார்த்தான். தேவிகாவும் மதுபாலாவும் கண்களில் நீர் கோக்க பார்வையால் இறைஞ்சும்போது கதாநாயகனால் என்ன செய்ய முடியும்?

”வர்றேங்க.”

யாக்கை2

திருவல்லிக்கேணியின் சல்லடை சந்துகளின் வழியாக நடந்துபோய், ‘இங்கே சிறுநீர் கழித்தால் செருப்படி கிடைக்கும்’ என்ற ஒரு சுவரைக் கடந்து, ஒரு சின்ன கேட்டைத் திறந்து சந்துக்குள்ளே போனதும் அந்த வீடு இருந்தது. திருவல்லிக்கேணி கிராமமாக இருந்தபோது உருவான வீடாக இருக்க வேண்டும். ஹாலின் மேல்புறம் திறந்திருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழ் தங்கராஜ் உட்கார்ந்திருந்தார். 55 வயது இருக்கலாம். பாவையுடன் குமார் உள்ளே நுழைந்ததும், எழுந்து நின்று கை கூப்பி வணங்கினார். மூக்குப்பொடியும் வெற்றிலையும் கலந்த ஒரு வாசம் அவரைச் சூழ்ந்திருந்தது.

குமார் அவர் எதிரே அமரவும் பாவை உள்ளே போய்விட்டாள். குமார் தனது பத்திரிகைப் பார்வையால் அந்த வீட்டை அளந்தான். அவரது மனைவியின் படம் மாலை போட்டு மாட்டி இருந்தது. அந்த வீட்டின் வறுமையை உடனடியாக அவனால் உணர முடிந்தது. சுருட்டி வைக்கப்பட்ட கிழிந்த பாயும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் வாசமும், அறையின் மூலையிலேயே வைக்கப்பட்டிருந்த சொற்ப பாத்திரங்களும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டன. குமாரின் பார்வையைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கராஜ் பேச ஆரம்பித்தார்.

”நேத்து கோவமாப் பேசிட்டேன். மனசில வெச்சுக்கிடாம வந்திருக்கே. சந்தோஷம். எல்லாம் ஒரு ஆத்தாமையில பேசறதுதான். பாரிஸ்ல என்னை மாதிரி ஒருத்தன் இருந்தா, அவன் கோடீஸ்வரன். ஆனா, நான் திருவல்லிக்கேணியில இருக்கேன். பாரதியாரையே அலையவிட்ட ஊர்ல இது” – குமார் அவரைப் பார்த்துச் சிரித்தான்.

”சாருநிவேதிதா மாதிரி பேசறீங்க. என்ன படிச்சிருக்கீங்க?”

”அப்ப ப்ளஸ் டூ கிடையாது. பி.யூ.சி-னு சொல்வாங்க. அதுவரைக்கும் படிச்சேன். படிப்பில புத்தி போகலை. வீட்டுல சண்டை போட்டுட்டு ஓடிப்போய் ஊர் ஊரா அலைஞ்சேன். நல்லா படம் வரைவேன். சிலதெல்லாம் பிறவியிலேயே வருமில்லையா? பானை செய்யுற ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள் இருந்தேன். அந்தாளு கோயில் திருவிழாவுக்கு ரூபம் எல்லாம் செய்வாரு. அவர்கிட்ட கொஞ்ச நாளு, அப்புறம் ஆந்திராவில் ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள்னு இருந்து கத்துக்கிட்டதுதான் இந்தத் தொழில். முறைப்படி படிக்கலை. ஆனா, எப்படியோ எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆல்பம் பாக்கிறியா?”

ஓர் அலமாரியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து வந்தார். ஆயிரக்கணக்கான தடவை புரட்டிப் புரட்டி ஆல்பம் நொந்துபோய் இருந்தது. அதன் பக்கங்களை குமார் புரட்டினான். அவன் கண்கள் பிரகாசித்தன.

எல்லாம் மங்கிய புகைப்படங்கள். ஆனால், அவற்றில் இருந்த சிலைகள் அனைத்தும் அவ்வளவு திருத்தமாக இருந்தன. இந்த மனிதனா இவற்றை வடித்தான் என்கிற சந்தேகம் தோன்றும் அளவுக்கு அழகாக இருந்தன.

”இந்தச் சிலை எல்லாம் எங்கே?”

”இது எல்லாமே நான் ஒரு ஏஜென்ட்டுக்கு செஞ்சுக்கொடுத்தது. ரொம்ப சொற்பமாத்தான் காசு தருவான். நான் எல்லாரையும் நம்பிருவேன். அதனால இழந்தது நிறைய. ஏமாந்ததுக்கு அளவே இல்லை” – பாவை உள்ளே வந்தாள். கையில் இருந்த தூக்கில் இருந்து காபி ஊற்றிக்கொடுத்தாள்.

”கடையில வாங்கினேன். இனிப்பு போதுமா?”

குமார் அவளை நிமிர்ந்து பார்த்தான். 30 வயது ஆகியும் அவளுக்குத் திருமணம் ஆகாதது ஏன் எனப் புரிந்தது.

‘இங்க வாப்பா’ என தங்கராஜ் அவனை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையின் மூலையில் இருந்த பழைய மரப் பெட்டியைத் திறந்தார். உள்ளே 10, 20 சிலைகள் கிடந்தன. ஒரு அடி, அரை அடி உயரமுள்ள பல்வேறு சிலைகள்.

”இது எல்லாமே நான் பண்ணதுதான். மண்ணுல பண்ணுவேன். அப்புறம் பித்தளையில, ஐம்பொன்ல எல்லாத்திலயும் பண்ணுவேன். அச்சு பண்ணி ஊத்தி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல பண்ண புத்தர் இது. பாருங்க.”

தங்கராஜ் ஒரு புத்தரின் சிலையை எடுத்து நீட்ட, குமார் அதைப் பார்த்து அசந்துபோனான். அவன் இதுவரை கண் மூடிய புத்தர் சிலையைத்தான் அதிகம் பார்த்திருக்கிறான். இந்தப் புத்தர் கண்களைத் திறந்திருந்தார். மென்மையாக இமைகளை விலக்கியும் விலகாமலும் கருணை வழியும் கண்கள். கண்களை மூடியிருக்கும் புத்தரின் சிலையில் காணும் அதே சாந்தமும், தியானத்தில் லயித்த அழகிய புன்னகையும் அற்புதம். தங்கராஜை வியப்புடன் பார்த்தான் குமார். அவர் இவனது பிரமிப்பைக் கண்டுகொள்ளாமல் மற்றொரு சிறிய சிலையை எடுத்து, தனது வேஷ்டியில் துடைத்து அவனிடம் நீட்டினார்.

”இந்த அம்மனைப் பாருங்க… ஃபைபர்ல பண்ணது. பன்னிரண்டு வருஷங்கள் ஆச்சு.”

குமார், அதை கையில் வாங்கினான். மிகவும் லேசாக இருந்தது. மீனாட்சி அம்மன். ஒரு அடி உயரம்தான் இருக்கும். கையில் இருக்கும் கிளியும் டாலடிக்க, மின்னும் மூக்குத்தியுடன், அழகிய பச்சை நிறத்தில்… அந்தச் சிலையில் தென்பட்ட உயிர்ப்பு, குமாரைப் பிரமிக்கவைத்தது.

”என்ன சார் சொல்றீங்க… இது ஃபைபர்ல பண்ணதா?!”

”ஆமா தம்பி… அச்சு பண்ணி மோல்டு எடுத்துப் பண்ணது. ஃபைபர். பொதுவா மோல்டு எடுத்துப் பண்ணா, அது அவ்வளவு சிறப்பா இருக்காதுனு சொல்வாங்க. ஆனா நான் பண்ணது, செதுக்கினது மாதிரி இருக்கும். அதுதான் நம்ம தனித்திறமை. நீங்க பெங்களூரு போயிருக்கீங்களா?’

”போயிருக்கேன்.”

”அங்க தும்கூர் போற ரூட்ல ஒரு தீம் பார்க் இருக்கு… தெரியுமா?”

”தெரியாதுங்க.”

”அந்த தீம் பார்க்ல நிறைய அனிமல்ஸ் வெச்சிருக்காங்க. ஒவ்வொண்ணும் 20 அடி,

30 அடி உயரம். எல்லாமே நான் செஞ்சது. ஃபைபர்ல பண்ணது. போட்டோ பாருங்க.”

மற்றோர் ஆல்பத்தை எடுத்துக் காட்டினார். அதில் டைனோசர், யானை, திமிங்கலம் ஆகியவை பிரமாண்டமாக உயிர்பெற்றிருந்தன.

”இதுக்கெல்லாம் நான் காசே வாங்கலை. ‘குழந்தைகளுக்காக பண்ணிக்கொடுங்க’னு கேட்டாங்க. ‘சரி’னு பண்ணிக்கொடுத்தேன்.”

”சார்… நீங்க உங்க தொழில்ல திறமையானவர்தான். அதுல இப்ப எனக்கு சந்தேகம் இல்லை.”

”தொழில் இல்லை தம்பி… கலை. நான் கலைஞன். இன்னமும் அப்படித்தான் நினைக்கிறேன். தொழிலா நினைச்சுப் பண்ணியிருந்தா, நிறையக் காசு சேர்த்திருப்பேனே.”

”சரிங்க… இப்ப நான் என்ன செய்யணும்?’

அவர் பெருமூச்சுவிட்டார். போனில் பேசியபோது தென்படாத ஒரு தயக்கம், இப்போது அவர் முகத்தில் இருந்தது. பாவைதான் பேசினாள்.

”சார்… சில வருஷங்களாவே அப்பா வேலையில்லாம சும்மா இருக்கார். நைட்ல தூங்க மாட்டேங்கிறாரு. சமயத்தில தனியா உக்காந்துக்கிட்டு அவராவே பேசிக்கிட்டு இருக்காரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதான் ஒரு பேட்டி எடுத்துப் போட்டீங்கன்னா, ஏதாச்சும் வேலை வரும்னு…”

குமார், தங்கராஜைப் பார்த்தான். உடனே அவசரமான குரலில் பாவை பேசினாள்.

”இது நான் சொன்ன ஐடியாதான். நேத்து நான் கம்ப்பெல் பண்ணதாலதான் போன்ல உங்ககிட்ட பேசினாரு. இப்பப் பாருங்க… பேசாம நிக்கிறதை…”

தங்கராஜ் லேசான குரலில் பேசினார். ”இவ சொல்றா. ஆனா, எனக்கு கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு. நேத்துக்கூட போன்ல ஒரு வேகத்தில பேசினேனே தவிர, என் சுபாவம் அது கிடையாது. பேட்டி எல்லாம் வேணாம். விட்டுத்தள்ளுங்க கழுதையை.”

குமார், பாவையைப் பார்த்தான். அவள் கண்களில் இருந்த சோகமும் கெஞ்சலும் குமாரை உருக்கின. தங்கராஜைப் பார்த்து தீர்மானமான குரலில் சொன்னான்

”நான் உங்களைப் பேட்டி எடுக்கிறேன் சார்!”

பேட்டி எடுத்துக்கொண்டு எடிட்டரிடம் போனான் குமார். வாங்கிப் பார்த்தார்.

”இதை எதுக்கு நாம போடணும்?”

”நல்லா சிலை செய்றார் சார். கஷ்டப்படுறார்.”

”தொழில் நல்லாத் தெரிஞ்சவன்… சிரமப்படுறவன் லட்சம் பேர் இருக்கான் நம்ம ஊர்ல. எல்லாரையும் நாம பேட்டி எடுக்க முடியுமா?”

”நீங்க படிச்சுப் பாருங்க சார். படிச்சுட்டு டிஸைட் பண்ணுங்க.”

அவர் படிக்கத் தொடங்கினார். குமார் பிரமாதமாக எழுதுவான். தங்கராஜ் அவரே பேசுவதுபோல் அந்தப் பேட்டியை எழுதியிருந்தான். எடிட்டர் படித்துவிட்டுப் புன்னகைத்தார்.

”இதை நான் போடுறேன், இந்த ஆளுக்காக இல்லை; உன் அருமையான ரைட்டிங்குக்காக.”

அடுத்த வாரமே பேட்டி பிரசுரமானது. அச்சாகி வந்த புத்தகத்தை எடுத்துக்ªகாண்டு குமார் போனான். தங்கராஜ் புத்தகத்தை வாங்கியதும் கண்களில் நீர் கசிய, அதை மறுபடி மறுபடி படிக்கத் தொடங்கினார். குமார், பாவையைத் தேடினான். வீட்டுக்குப் பின்னால் இருந்த அடிபம்ப்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தாள். குமார், அவளிடம் கண்களில் காதலை வெளிப்படுத்தியவாறு பேசிக்கொண்டிருந்தான். அவள் தண்ணீர் அடித்தபடி புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். சூட்சுமமானவள். அவளுக்கு குமாரின் காதல் புரிந்துவிட்டது.

அடுத்த ஓரிரு தினங்களில் மறுபடியும் அந்த வீட்டுக்குப் போனான். அப்போது தங்கராஜ் வீட்டில் இல்லை. ஸ்வீட் வாங்கிக்கொண்டு போயிருந்தான்.

”ஜஸ்ட் இந்தப் பக்கம் வந்தேன். உங்களைப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு” என்றவனைப் பார்த்து பாவை சிரித்தாள்.

”சார்… உங்ககிட்ட ஓப்பனா பேசலாமா?”

”தாராளமா.”

”நீங்க என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க?” – குமார் உடல் லேசாகச் சிலிர்த்தது. சொல்லிவிட வேண்டியதுதான்.

”ஆமா பாவை. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.”

”என்னை லவ் பண்றீங்களா?”

குமாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்களில் மையல் வழிய, ”ஆமா பாவை. நீங்க பைக்ல என்னைப் பார்த்து சிரிச்சீங்க இல்லையா… அதுல இருந்து என் மைண்ட் ஃபுல்லா நீங்கதான்…’ – பாவை சிரித்தாள்.

”இந்த வீடு, நிலைமை எல்லாத்தையும் பார்த்த பிறகுமா?”

”இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை பாவை.”

”இன்னொரு மேட்டர் இருக்கு.”

”என்ன மேட்டர்?”

பாவையின் குரலில் லேசான தயக்கம் தெரிந்தாலும், இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதுபோல் மெல்லிய குரலில் சொன்னாள்.

”எனக்கு வயசு 31. அப்பாவுக்கு வருமானம்னு ஒண்ணு வந்து கிட்டத்தட்ட நாலைஞ்சு வருஷங்கள் ஆகிருச்சு. எனக்கு கல்யாணம் ஆகலையே தவிர, ஒருத்தர்கூடத்தான் நான் இருக்கேன். அவர்தான் இந்தக் குடும்பத்தை சப்போர்ட் பண்றாரு.”

குமாரின் உடல் எங்கும் லேசான பதற்றம் பரவியது.

”என்ன சொல்றீங்க?”

”விநாயகா ஃபைனான்ஸ் சோமுனு சொன்னேனே… அவர்தான். வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர். அவருக்குக் கல்யாணம் ஆகி ப்ளஸ் டூ படிக்கிற பசங்க இருக்காங்க. அதனால கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டாரு. எனக்கும் வேற வழி இல்லாம இப்படி இருக்கேன். ஆக்ச்சுவலா இந்த மேட்டர் அப்பாவுக்கும் ஓரளவு தெரியும்” – குமார் அதிர்ந்தான்.

”அவருக்கும் தெரியுமா?”

”ம்… நீங்க என்கிட்ட ‘ஐ லவ் யூ’னு என்னத்தையாவது சொல்றதுக்கு முன்னாடியே இதைச் சொல்லிடணும்னு நினைச்சேன். அதான் சொன்னேன். ஸாரி…” -குமாருக்கு உள்ளுக்குள் தோல்வியும் அழுகையும் பீறிட்டன.

”நான் கிளம்பறேன்” எனத் தடுமாற்றத்துடன் சொன்னவனின், முகத்தை அவள் கவனித்தாள்.

”ஏன் இவ்வளவு அப்செட் ஆகணும்? ஜஸ்ட் மூணு தடவைதானே பாத்திருக்கோம்.”

குமார் அவள் கண்களைப் பார்க்காமல் சொன்னான், ”அது அப்படித்தான்… ப்ச்! வர்றேன்’ – திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டான் குமார்.

அடுத்த வாரம் தேர்தல் அறிவிக்கப்பட, அதன் பின் பத்திரிகை வேலைகளில் மும்முரமாகி மெள்ள அவர்களை மறந்துவிட்டான். சில மாதங்களுக்குப் பின்னர் கர்நாடகாவுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது தும்கூர் செல்லும் பாதையில் அந்த தீம் பார்க்கைப் பார்த்தான். தங்கராஜ் நினைவு வந்தது. தீம் பார்க்குக்கு உள்ளே போனான்.

முகப்பில் இவன் போட்டோவில் பார்த்த சுறா மீனும் யானையும் டைனோசரும் உயரமாக நின்றிருந்தன. என்ன ஒரு நேர்த்தி. அதைத் தொட்டுப்பார்த்தான். கல்லில் செதுக்கியதுபோல சின்னச் சின்ன நெளிவுகளும் நுட்பங்களும் தங்கராஜின் திறமையை, அர்ப்பணிப்பைச் சொல்லின. ஒரு பெண்ணின் சிலையையும் தங்கராஜ் வடித்திருந்தார். அதன் வடிவும் வனப்பும் உயிர்ப்பும் இவனுக்கு பாவையை நினைவுபடுத்தின. ஊருக்குப் போனதும் அவர்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.

சென்னை திரும்பியதும் காலையிலேயே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வீட்டை அடைந்து உள்ளே நுழைந்தான். வீடு அமைதியாக இருந்தது. குரல்கொடுத்தான். தங்கராஜ் பின்னால் இருந்து வந்தார்.

”வாங்க தம்பி வாங்க… உக்காருங்க” இவன் அமர்ந்தான்.

”நல்லா இருக்கீங்களா?”

”இருக்கேன் தம்பி…”

”பாவை இல்லீங்களா?”

”அவ இப்ப இங்க இல்லை” என்றவர் குரலில் சின்னத் தடுமாற்றம். பிறகு சொன்னார்.

”சோமுனு தெரிஞ்சவர் ஒருத்தர்…” எனத் தயங்கினார்.

”தெரியும் சார். சொல்லுங்க…”

”அவர் ஒய்ஃப் திடீர்னு செத்துப்போச்சு. அடுத்த மாசத்துல இருந்து இவளை அவர் கூட்டிக்கிட்டுப் போய்ட்டார். அவருக்கு பெரிய பசங்கள்லாம் இருக்கு. அதனால தனி வீடு எடுத்துவெச்சிருக்கார்…’ – தங்கராஜின் குரலில் கூச்சமும் குற்றஉணர்வும் அப்பட்டமாகத் தெரிந்தன. குமார் மறுபடியும் ஏதோ ஓர் இழப்பை உணர்ந்தான்.

”அந்தாளு ஒய்ஃப் எப்படிச் செத்தாங்க?”

”சூஸைட்னு சொல்லிக்கிறாங்க…’

சிறிதுநேரம் கனத்த மௌனம் நிலவியது. அவர் பேச்சை மாற்றினார்.

”ரொம்ப நன்றி தம்பி. எனக்கு உங்களால மறுபடியும் வேலை வந்திருச்சு.”

”அப்படியா..? பரவால்லையே… சிலை செய்யிறதுக்குக் கூப்பிட்டாங்களா?”

”இல்லை… இது வேறமாதிரி வொர்க்கு. இதைப் பாருங்க.”

பின்புறம் கூட்டிப்போனார். அங்கே சின்னச் சின்னதாக மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன. இதயம், நுரையீரல், மூளை, கை, கால்…

”இதெல்லாம் நான் செஞ்சது. மாணவர்களுக்குச் சொல்லித்தர்றதுக்காக ஒரு கம்பெனி இதைத் தயார் பண்ணுது. எல்லாம் ரியல் சைஸ். இதைப் பாருங்க… எல்லாமே கரெக்ட்டா ஃபிக்ஸ் பண்ற மாதிரி பண்ணிருக்கேன்.”

அவர் கட கடவென இதயம், நுரையீரல், கல்லீரல் என எல்லாவற்றையும் எடுத்துப் பொருத்தினார்.

”பாத்தீங்களா? மனுஷனோட மார்புக்கூடு. இது மூளை. பசங்களுக்கு இதைவெச்சு சொல்லித்தர்றது ரொம்ப ஈஸி. என் வேலை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. மாசாமாசம் இனிமேல் காசு பிரச்னை இல்லை. மெள்ள மெள்ள கடனை எல்லாம் அடைக்கணும்.”

குமார் அவரை வியப்புடன் பார்த்தான்.

”என்ன பாக்குறீங்க?”

”இல்லை… நீங்க செஞ்ச புத்தர், மீனாட்சி அம்மன்… அந்த தீம் பார்க் யானை, டைனோசர்லாம்…”

”எனக்கும் அது மாதிரி செய்யத்தான் ஆசை. என்ன பண்றது தம்பி? வாழ்க்கைதான் நம்மளைப் பிச்சுப்போட்டுருச்சே. மூளை, இதயம், குடல், குந்தாணினு அக்கக்கா பிரிச்சுப்போட்டுருச்சே? என்ன பண்றது..?”

அவர், தான் இணைத்த உடல் உறுப்புகளை தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கினார்.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

3 thoughts on “யாக்கை

  1. கலைஞர்கள், கலைகளுக்கான மரியாதை நம் சமூகத்தில் என்னவாக இருக்கு. பெண்கள் பொருளாதார ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் உள்ளாக்கப்படும் ஆணாதிக்க சுரண்டலை சொல்லும் சிறுகதையாக என் பார்வை.

  2. நல்ல, சரளமான நடை. கதையை விட கதை சொன்ன விதம் அருமை…

  3. நல்ல, சரளமான நடை. கதையை விட கதை சொன்ன விதம் அருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *