யதார்த்தம்

 

நந்தினி B.Sc. கம்ப்யூட்டர் ஸயின்ஸ் முடித்து விட்டு அடுத்ததாக M.Sc. பண்ணலாமா, MBA பண்ணலாமா இல்லையென்றால் வேலைக்கு முயற்சி செய்யலாமா என்று யோசித்து முடிவுக்கு வர முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

“நந்தினிம்மா, உனக்கு போஸ்ட்!” தபால்காரரின் குரலில் மகிழ்ச்சியும் பரபரப்பும் இருந்தன. ஆச்சரியத்தோடு வாசலுக்கு விரைந்தாள். அந்த தபால்காரர் பல வருடங்களாக அந்த ஏரியாவிலேயே இருப்பவர். நந்தினியை பள்ளியில் சேர்க்கும் பருவத்துக்கு முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருப்பவர். அந்த ஏரியாவில் இருக்கும் ஒவ்வொருவர் வீட்டைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பவர், ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவரிடல் புறம் பேசும் வழக்கமில்லாதவர். படிப்பறிவில்லாத ஏழை மக்களுக்கு பொறுமையாக அவர்களின் சந்தோஷங்களை, கவலைகளை, உள்ளக் குமுறல்களை பொறுமையாகக் கேட்டு கடிதமாக வடித்துத் தருவார். அதற்கோ அல்லது மணியார்டர் பட்டுவாடாவிற்கோ காசு கொடுத்தாலும் வாங்க மாட்டார். பொதுவாக எல்லோரது மதிப்பையும் பெற்றவர்.

முகமெல்லாம் புன்னகையாகத் தபால்காரர்! “என்ன பாப்பா, பெரிய ஆளாய்ட்டிங்களா? கதை எல்லாம் எழுதறீங்க போல இருக்கு. அதுவும் நம்ப ‘கல்கி’யிலயே வந்திருக்குன்னா, விஷயமில்லாம இருக்குமா? இந்தா பாப்பா, இந்த வார புத்தகத்தையும் கூடவே செக்கையும் அனுப்பி இருக்காங்க போல. என் மச்சான் நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி எடுத்திருக்கான். அதனால கல்கி, விகடன் எல்லாம் நான் கடையில வரதுக்கு முன்னாடியே படிச்சிடுவேன். உன் கதையும் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கும்மா! நான் பார்த்து வளர்ந்த பிள்ளை பெரியாளானா எனக்கும் சந்தோஷம்தானெ!” அவர் குரலில் கலப்படமில்லாத மகிழ்ச்சி தெரிந்தது. “ஹையோ! என்ன அங்கிள், இப்பதான் முதல் முதலா ஒரு கதை வந்திருக்கு, அதுக்குள்ள ரொம்ப அவசரப்படறீங்களே!” என்று சிணுங்கினாள் நந்தினி.

இதற்குள் நந்தினியின் தாய் உள்ளே இருந்து ஒரு இருபது ரூபாய்த் தாளை எடுத்து வந்து தபால்காரரிடம் நீட்டினார். ஒரு நிமிடம் அதிர்ந்து போன தபால்காரர், “என்னம்மா இது, என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? நான் என்னிக்காவது யாருகிட்டயாவது காசு வாங்கி இருக்கேனா? நல்லா தெரிஞ்ச நீங்களே இப்படிச் செய்றீங்களே” என்று மிகுந்த வருத்தத்தோடு கேட்டார். “உங்களைப் பத்தி தெரியாம என்ன? ஏதோ சந்தோஷத்தைப் பகிர்ந்த்துக்கலாம்னுதான் குடுத்தேன். தவறா நினைச்சுக்காதீங்க!” தன்னுடைய செயல் அவரை காயப்படுத்தியதை எண்ணி வருந்தினார் நந்தினியின் தாயார்.

“ஏன் அங்கிள்! நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சிட்டே இருந்த்தேன். நீங்களா காசு கேட்டாதானே தப்பு, யாராவது அவங்களா விருப்பப்பட்டு குடுத்தா வாங்கிக்கலாமே” என்ற நந்தினியின் வாதத்திற்கு ஒரு புன்சிரிப்போடு பதிலளித்தார் தபால்காரர். “தப்பை தானா செஞ்சாலும் தப்புதான், மத்தவங்க தூண்டி விட்டு செஞ்சாலும் தப்புதான். வீடு வீடா தபால் பட்டுவாடா பண்றது என்னோட வேலை. அதுக்குதான் கவர்ன்மெண்ட்ல எனக்கு சம்பளம் தராங்க. என்னோட வேலையை செய்யறதுக்கு எனக்கு எதுக்கும்மா மத்தவங்க காசு கொடுக்கணும்? அது மட்டுமில்லாம உங்க அம்மா சொன்னதைக் கவனிச்சீங்களா? தன்னோட சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கறதுக்காக காசு கொடுத்ததா சொன்னாங்க இல்லையா? அப்போ மணியார்டர் வந்ததுக்கோ, லெட்டர்ல நல்ல சேதி வந்ததுக்கோ ஒருத்தரோட சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க காசு வாங்கறதானா, அவங்களை வருத்தப்பட வைக்கற, துக்கத்துல ஆழ்த்தற செய்தி வந்தா அதை எப்படிம்மா பகிர்ந்துக்க முடியும்? காசு வாங்கறவங்க அதுக்கு ஏதாவது நியாயமான காரணம் கூட வெச்சிருக்கலாம். அது அவங்க இஷ்டம். என்னைப் பொறுத்த வரைக்கும் காசு வாங்காம இருக்கறதை நான் கொள்கையா கூட நினைக்கல, அது என்னோட இயல்பு. அவ்வளவுதான். உங்க திருப்திக்காக வேணா கொஞ்சம் சர்க்கரை குடுங்க. அதை சாப்பிட்டு எல்லாருமா சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கலாம்” என்று முடித்தார்.

அவர் கூறியதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட நந்தினி பதிலேதும் பேசாமல் ஒரு தட்டில் இனிப்பும், சில்லென்று மோரும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இது போதும்மா, இதை விட என்ன வேணும்?” மன நிறைவோடு அவற்றை எடுத்துக்கொண்டார். “வரேன்மா, இன்னும் 2 மணியார்டர் இருக்கு… பொன்னம்மாக் கிழவி பாவம் எதிர்பார்த்துகிட்டே இருக்கும், அடுத்த தெருவில இருக்கற ரவித்தம்பிக்கு வேற ஏதோ கம்பெனியில இருந்து ஒரு லெட்டர் வந்திருக்கு. ரொம்ப நாளா வேலை தேடிக்கிட்டிருக்கு அந்தத் தம்பி, இந்தத் தபால்லயாவது அதுக்கு நல்ல சேதி வந்தா சரி!” என்று அனைவரைப் பற்றியும் கவலைப்பட்டவாறு கிளம்பினார் தபால்காரர்.

கதையைப் படித்து முடித்த தபால்காரர் கந்தசாமி “ஹ்ம்ம்ம் பரவால்ல, நல்லாதான் கதை எழுதியிருக்கு இந்தப்புள்ள!” என்றவாரே புக் போஸ்டில் வந்த புத்தகத்தை எடுத்தது தெரியாமல் மடித்து வைத்தார். மற்ற தபால்களையும் எடுத்துக்கொண்டு அன்றைய பட்டுவாடாவிற்கு கிளம்பினார்.

“பாப்பா! உங்களுக்கு தபால். என்னம்மா கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கு! கல்கியில வேற வந்திருக்கு! அப்போ நல்ல சன்மானமும் வரும்”ஆரவாரித்துக் கொண்டே அந்த வார புத்தகத்தை தீபிகாவிடம் கொடுத்தார். ஒரு சின்னச் சிரிப்போடு அதை வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பிய தீபிகாவை “என்ன பாப்பா நம்பளை கண்டுக்காமல் போறே!” என்ற கந்தசாமியின் குரல் நிறுத்தியது. “இதோ வரேன்” என்று உள்ளே சென்று ஒரு பத்து ரூபாய்த்தாளோடு திரும்பினாள். “நிறைய எழுது பாப்பா! அப்போதான் அடிக்கடி புத்தகத்துல வரும், எனக்கும் ஏதாவது கிடைக்கும்” என்று ஒரு அசட்டுச் சிரிப்போடு அடுத்த வீட்டை நோக்கிச் சென்றார் தபால்காரர்.

- ஜூன் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்று முதல் வகுப்புக் கிடையாது என்பதால் சற்றே தாமதமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா. வாசலில் கேட் உலுக்கப்படும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் முகம் சுழித்தாள். "அம்மா! உன்னோட வளர்ப்புப் பையன் வந்தாச்சு, போய்ப் படையல் வை!" என்று எரிச்சலோடு ...
மேலும் கதையை படிக்க...
ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக் கொண்டு தன் பெரிய கருவண்டுக் கண்களில் பயமும் ஆர்வமும் கலந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் மேல்தான் இருந்தது. நெல்மணி ...
மேலும் கதையை படிக்க...
"ஸ்... ஆ ஆ!" மெலிதாய் கூவினாள் கவிதா. ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு விரைந்தான். "என்ன ஆச்சு கவி?!" "ஒண்ணுமில்லேப்பா, இட்லி குக்கர் திறக்கும்போது ஆவி கைல பட்டுடுச்சி" விரலை ஊதியவாறே சொன்னாள் கவிதா. "ஹையோ, என்னம்மா இது, பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
ஸ்வேதா அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள். "அம்மா என் டிபன் பாக்ஸ் எங்கே? டைமாகுதும்மா!" என்று குரல் கொடுத்தாள். "ஏண்டீ கத்தறே! நேத்து நான் படிச்சிப் படிச்சி சொன்னதெல்லாம் மறந்து போச்சா? இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வராங்க! அரை நாள் லீவு ...
மேலும் கதையை படிக்க...
பைத்தியம்!
தமிழ்
முரண்
கறுப்பினழகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)