மோகன் அண்ணா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 8,189 
 

எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எந்த பையனும் தலைநீட்ட வீடுகளில் அனுமதிக்கப்படாது என்பதால் மற்றக்கிழமைகளில் வந்து வெட்டிவிட்டு ரெண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ வாங்கிச் செல்வார்.

எனக்கு முடிவெட்டும் போது தலையை அசைத்துக்கொண்டே இருப்பேன். அவருக்கு வாகாக தலையை காட்டமாட்டேன். “சாவுற காலத்துலே சங்கரா, சங்காரான்னு கெடக்க வேண்டிய வயசுலே இவங்கிட்டே அவஸ்தைப் படுறேன்!” என்று புலம்பிக்கொண்டே வெட்டுவார். முடிவெட்டி முடித்ததும் கண்ணாடியைப் பார்த்து நொந்துவிடுவேன். அம்மா “ஷாட்டா வெட்டுங்க” என்று தான் கன்னியப்பனிடம் சொல்லியிருப்பார். கன்னியப்பனோ கிட்டத்தட்ட மொட்டையே அடித்துவிடுவார். மீண்டும் முடி வளர்ந்து ஒரு நிலைக்கு வர கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிடும். ஒருநாள் திடீரென்று அந்த கன்னியப்பன் இறந்துப் போனார். கன்னியப்பனுக்கு நான்கு மகன்கள் என்பதாக நினைவு. கன்னியப்பனின் இரண்டாவது மகன் தான் மோகன் அண்ணா. மற்ற மகன்கள் வேறு வேறு தொழில்களுக்கு மாறிவிட மோகன் அண்ணா மட்டும் அப்பாவின் தொழிலை தொடர்ந்தார்.

கன்னியப்பன் வீடு வீடாக சென்று நாவிதம் செய்து பெரியதாக சொத்து எதுவும் சேர்த்துவிடவில்லை. சம்பாதித்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் குடித்தே அழித்தார். மோகன் அண்ணா இளைஞராக இருந்ததால் கொஞ்சம் புத்திக் கூர்மையோடு செயல்பட்டார். கூட்ரோடில் ஒரு கடை வாடகைக்கு பிடித்து சுழலும் நாற்காலி போட்டார். கண்ணாடிக்கதவு போட்டு பச்சைக்கலர் ட்யூப் லைட்டை பொருத்தி நவீன மோஸ்தரில் ஒரு கடையை உருவாக்கினார். கன்னியப்பன் போல ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கெல்லாம் முடிவெட்டாமல் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை தன் வேலைக்கு கூலியாக வாங்கினார் மோகன். ஊர் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கே சென்று முடிவெட்டி விட்டு வருவார். மடிப்பாக்கத்தில் முதன்முதலாக சலூன்கடை வைத்தது மோகன் அண்ணா தான் என்று நினைக்கிறேன்.

சலூன்கடை வைத்திருந்தது மட்டுமல்லாமல் மோகன் அண்ணாவுக்கு வேறு பணிகளும் இருந்தது. ஊரில் யார் இறந்தாலும் மரண அறிவிப்பினை ஊர்முழுக்க சொல்வது மோகன் அண்ணாவுக்கு சாதிரீதியாக கொடுக்கப்பட்ட பணி. அவர் தந்தை செய்துவந்த இந்தப் பணியை மோகன் அண்ணாவும் எந்த முகசுளிப்புமின்றி தொடர்ந்து செய்துவந்தார். கூடுதல் வருமானம் இதில் கிடைத்ததும் கூட அவர் இந்த பணியை விரும்பி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.

இழவு விழுந்த வீட்டில் செய்யவேண்டிய கருமாந்திரப் பணிகள் அனைத்தையும் மோகன் அண்ணா செய்யவேண்டியிருந்தது. தாசரி அழைத்துவருவதிலிருந்து பாடை கட்டுபவன், பறைமோளம் அடிப்பவன், பல்லாக்கு அலங்காரம் செய்பவன் என எல்லோரையும் ஒருங்கிணைத்து சுடுகாட்டில் பிணம் எரியும்வரை மோகன் அண்ணாவின் கடமைகள் தொடரும். பதினாறாவது நாள் காரியத்துக்கான ஏற்பாடுகளும் கூட மோகன் அண்ணாவின் மேற்பார்வையில் தான் நடக்கும். காரியத்துக்கு என்றிருக்கும் அய்யரை கூட்டிவருவதிலிருந்து குளத்தங்கரை மண்டபத்தை புக் செய்வது எல்லாமே மோகன் அண்ணாவே செய்வார்.

யார் வீட்டுப் பக்கமாவது மோகன் அண்ணாவை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், எங்கேயோ எழவு விழுந்திருக்கிறது என்று. அய்யர் வீடுகளின் மரணம் ஏற்பட்டால் மோகன் அண்ணாவின் சாங்கியரீதியான வேலைகள் எதுவும் தேவைப்படாது என்றாலும் இறந்தவர் கொஞ்சம் ஊரில் பிரபலமான அய்யராக இருந்தால் எல்லோருக்கும் போய் துக்கச்செய்தி சொல்லுவார். இதற்காக அவர் காசு எதுவும் அய்யர் வீடுகளில் வாங்கமாட்டார். அவரவர் விருப்பப்பட்டு குவார்ட்டரோ, ஹாஃபோ வாங்கிக் கொடுத்தால் அது போதுமானது.

சுபகாரியங்களின் போதும் மோகன் அண்ணாவின் தேவை மடிப்பாக்கம் வாசிகளுக்கு தேவைப்பட்டது. அதிகாலையில் மணமகனுக்கு எண்ணெய் நலங்கு வைப்பது போன்ற சடங்குகள் எல்லாம் மோகன் அண்ணாவுக்கு தான் எப்படி முறைப்படி செய்வது என்று தெரியும். கல்யாணத்தில் வண்ணாத்திக்கு துணி கொடுப்பது போன்ற சடங்குகள் கூட உண்டு. மடிப்பாக்கத்தில் யாருக்கு வண்ணான் – வண்ணாத்தியை எல்லாம் தெரியும்? மோகன் அண்ணா தான் எங்கேயோ போய், யாரையோ கூட்டி வருவார்.

ஊரில் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டு மரணவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க அவரால் அவர் தொடங்கிய சலூன் கடையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதும் கடையை மூடிவிட்டு சாவு செய்தி சொல்லும் வேலையில் பிஸியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மற்ற முடிவெட்டும் நிலையங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மோகன் அண்ணாவுக்கு குடிப்பழக்கமும் உச்சநிலைக்கு போயிருந்ததால் தொழில்நேரத்தில் குடித்துவிட்டு சொதப்பவும் ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவரால் சலூன் தொழிலை தொடர்ந்து செய்யமுடியவில்லை. கடையை இழுத்து மூடிவிட்டு தெரிந்தவர்களுக்கு மட்டும் அவரது அப்பாவைப் போல வீட்டுக்கு போய் சவரம் செய்ய ஆரம்பித்தார். நல்லவேளையாக அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொந்தவீடு வாங்கியிருந்தார். இதன்பிறகு முழுக்க முழுக்க எங்காவது எழவு விழுந்தால் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது, சுபகாரியங்களில் வருமானம் ரொம்ப கம்மி. எப்போதாவது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களுக்கு தெரிந்த இடங்களை காட்டிவிட்டு மிகக்குறைவான கமிஷன் வாங்குவார்.

குடிக்க கையில் காசில்லாத நேரத்தில் அவரது தொழில்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு டிவிஎஸ்50யில் ஊரை ரவுண்டடிப்பார். “என்ன நாயக்கரய்யா தாடி விட்டிருக்கீங்க? திருப்பதி போறீங்களா?” என்று எதிர்படுபவரை கேட்பார். “அட அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நேரமில்லே” என்று சொன்னால் உடனே கிடைக்கும் இடத்தில் உட்காரவைத்து ஷேவிங் செய்துவிடுவார். கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வார். ஒரு ‘கட்டிங்’குக்கு தேவையான துட்டு கிடைத்ததும் நேராக மதுக்கடைக்கு வண்டியை விடுவது அவர் வழக்கமாக இருந்தது. மோகன் அண்ணாவுக்கு அதிர்ஷ்டவசமாக பிறந்தது ரெண்டுமே பையன்கள். பையன்கள் சுமாராக படித்து, வளர்ந்து ஏதோ வேலை, வெட்டிக்கு போய் சம்பாதிக்கிறார்கள். அப்பா, தாத்தா செய்த தொழிலை தொடர அவர்களுக்கு விருப்பமில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன் அண்ணா செத்துப் போய் விட்டார். யார்யாரோ செத்தப் போதெல்லாம் ஊருக்கே செய்தி சொன்ன அவர் செத்துப் போனதை அக்கம்பக்கத்துக்கு சொல்லக்கூட ஆளில்லை. எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கமாக போனபோது தான் எனக்கே தெரிந்தது. மோகன் அண்ணாவுக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள் வயதிருக்கலாம். கொஞ்சம் ஒல்லியாக இருப்பார். எவ்வளவு தண்ணி அடித்திருந்தாலும் அண்ணன் சுறுசுறுப்பாக கில்லி மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார். எனக்குத் தெரிந்து அவர் வாழ்நாளில் ஒரு லட்சம் லிட்டராவது மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். “இவ்ளோ தண்ணியடிக்கிறீங்களே? ஒடம்புக்கு ஏதாவது ஆயிடாது?” என்று கேட்டால் “தண்ணியால நான் சாவமாட்டேன்டா” என்பார். இப்போது கூட அவர் செத்ததற்கு மஞ்சக்காமாலையை தான் காரணமாக சொல்கிறார்கள்.

மோகன் அண்ணா மரித்துப் போனதற்காக ஊரே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, “இனிமே யாராவது செத்தா இழவு வேலையை எல்லாம் யாரு பார்க்குறது?” என்று.

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *