மொபைல் விமர்சனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 10,704 
 

திருச்சிக்கு போகும் பகல் பேருந்தில் ஏறியதிலிருந்து, ராதாவுக்கும்,அவள் கணவன் ராஜுவுக்கும் அமைதி போயிற்று. காரணம், பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்போனில் உரக்க யாரிடமோ பேசி அறுத்துக் கொண்டிருந்த நபர்.

பேசுவது தவறில்லை. ஆனால் அவன் தன் மனைவியைப் பற்றி அல்லவா கண்டபடி விமர்சனம் செய்து கொண்டிருந்தான். அவளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்தே தனக்கு நிம்மதி இல்லை என்றும் ஒப்புக்கு அவளோடு வாழ்வதாகவும் என்னென்னவோ அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டு வந்தவனைக் கண்டு எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது ராதாவுக்கு. தாம்பத்தியம் என்பது எவ்வளவு புனிதமானது என்பதை அறியாத இவனை என்ன செய்வது? ஆயுள் பரியந்தம் எல்லாவற்றிலும் உறுதுணையாக நிற்கும் மனைவியின் அருமை தெரியாது அவளைக் கேவலமாகப் பேசும் அவனை மனிதனாகவே எண்ணத் தோன்றவில்லை.

திருச்சி பேருந்து நிலையத்தை அடைந்ததும் செல்போனில், பேசிக் கொண்டிருந்தவனும் அவர்களோடு இறங்கி வேகமாகச் சென்றுவிட்டான். ராதாவுக்கு அவனை நிறுத்தி நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கலாமா என்றிருந்தது.

திருச்சியில் ராதாவின் சிநேகிதி ரமா வெகுநாட்களாக வரச்சொல்லி கூப்பிட்டுக் கொண்டு இருந்தாள். இரண்டு வருடம் முன்புதான் அவளுக்குத் திருமணம் ஆனது. ராதா அப்போது மும்பையில் இருந்ததால் திருமணத்துக்கு வரமுடியாமல் போனது. பத்து நாள் விடுமுறையில் சென்னைக்கு வந்தவள,் ரமாவைப் பார்த்துவிட்டு அவளுடன் இரண்டு நாட்கள் தங்கிப்போகலாம் என்று கணவனுடன் வந்திருக்கிறாள். ஆட்டோவில் இருவரும் ரமாவின் வீட்டை அடைந்ததும், அங்கு இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ரமா, ராதாவை மகிழ்ச்சியோடு கட்டிக்கொண்டு அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் கூட்டிப்போனாள்.

‘என்ன ரமா எப்படி இருக்கே? உன் கணவர் எங்கே?” என்று கேட்ட ராதாவிடம், ”ம்… அவரும் இப்போதுதான் ஊரிலிருந்து வந்தார்”என்றவள், ”என்னங்க, வெளியே வாங்க.”என்று அழைத்ததும், வெளியே வந்தவனைப் பார்த்து ராதாவுக்கும் ராஜுவுக்கும் அதிர்ச்சி. அவனுக்கும்தான்
.
”நீ…நீ ..நீங்களா?”என்று அவனும், ”இ..இவரா?”என்று ராதாவும் கேட்டுவிட, ஆச்சர்யம் அடைந்த ரமா, ”ராதா, இவரை முன்னமே உனக்கு தெரியுமா?” என்றதும் ”அ…அ.அது..அது வந்து இவரும் நாங்கள் வந்த பேருந்தில்தான் வந்தார்… அப்போ பார்த்தோம்” என்றாள் ராதா.

”அ..அ..ஆமாம், ரமா அப்போதுதான் நானும் இவர்களைப் பார்த்தேன்” என்று சமாளித்தவன், “எ..என்..பேர் ரவி’, ‘என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

”ராதா, இவர் என்மேல் உயிரையே வைத்திருக்கிறார் தெரியுமா? ஊருக்குப் போனால் கூட என்னை நினைத்துக் கொண்டால் ஓடி வந்திடுவார்”என்று வெட்கத்துடன் கணவனைப் பற்றி பெருமையாய்ச் சொன்ன ரமாவைப் பரிதாபமாய்ப் பார்த்த ராதா, ”நீ சொன்னது சரிதான் ரமா, உன்னைப் பற்றித்தான் யாரிடமோ மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே வந்தார் உன் கணவர்” என்றாள் சற்று கேலியுடன். ரவியின் முகம் இருண்டு விட்டது. அவன் கண்களில் கெஞ்சல் இருந்தது ”என்னைப் பற்றியா? என்ன சொன்னார்?” என ஆவலோடு கேட்ட ரமாவிடம், ”உன்னைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டது அவர் செய்த பாக்கியமாம்.”என்று சொல்லி விட்டு ரவியைப் பார்த்த பார்வையில், பிழைத்துப் போ என்று எழுதி இருந்தது.

தன் தவறை உணர்ந்தவனாய்த் தலை குனிந்தான் ரவி.

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *