மேக ரேகை

 

தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

இருசாரியிலும் சப்தவர்ணங்கள் விதவிதமாய்க் குவிந்து வழிந்தன. நீலக்குன்றுத்தொடர் வானை அளாவியது. நீலக்குன்றுகள் மேல் மஞ்சள் மேகங்கள் தவழ்ந்தன. பிஞ்சும் பூவுமாய்ப் பச்சைப் பயிர் , சுற்றிப் பொங்கியது . நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைத் தீட்டி, பாம்பின் ‘சொரே ‘லுடன் சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடி யென இளம் வெய்யிலில் பளபளத்தது. ஊதா வானில் நீலக்குன்றுகள் மேல் தவழும் மஞ்சள் மேகங்களி னின்று வெள்ளி ஜரிகைகள் நாடாநாடாவாய்த் தொங்கின. பச்சைப்பயிரில் காய்கனிகளில் உற்ற சிவப்பும் செந்தூரமும் பருவப்பெண்ணின் வெட்கம் போல் மிளிர்ந்தன.

தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனை நோக்கி நான் முன்னேறிக் கொண்டிருந்தேன்.

என்னைச் சூழ்ந்த இயற்கையின் உவகை என்னுள் புகுந்ததும் அதன் களிவெறி என்னின்று சிரிப்பாய்ப் பீறிட்டது. அதன் ஒலி ஆகாய வெளியில் மோதி நக்ஷத்திரம் போல் உதிர்ந்தது. என் சிரிப்பினின்று உதிர்ந்த அக்கரு முத்தைக் குனிந்து பொறுக்கி, உவகை வெறியில், உயர வீசியெறிந்தேன். கவண் கல் போல் அது கிளம்பிச் சென்று நேரே தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனில் போய் வீழ்ந்தது. கண்ணில் தூசு பட்டாற் போல் சூரிய கோளம் குலுங்கிற்று.

ஆச்சரியம்! அச்சிறு உமி, கண் இமைக்குமுன் கண்ணுக் கெதிரே பெரிதாக்கிக்கொண்டே உதய சூரியனை விழுங்குவது கண்டேன். இன்னமும் திரண்டு, ஆகாய வீதியை அடைத்துப் படர்ந்தது. மஞ்சள் மேகங்கள் விண்டு குழைந்து கருகி ஒன்றாயின . அம் மாமேகம் குன்றுகளின் நீலத்தையழித்துக் கொண்டு அவைமேல் கவிந்து இறங்குகையில், குன்றின் உச்சிகளிலிருந்து ரத்த ஆறு பெருகி வழிந்து அங்கங்கே ரத்தக்கட்டிகள் இறுகிக் கறுத்தன. பயிர்கள் வதங்கிக் கருகிச் சருகாய்ச் சாய்ந்தன.

அந்த ராக்ஷஸ மேகம் இப்போது என்னை நோக்கி விரைந்து என்னை விழுங்க ஆரம்பித்தது. தப்ப வழி யில்லை. முடியவில்லை. ஏற்கனவே நாச தரிசனத்தில் கைகால்கள் செயலிழந்துவிட்டன. அதை உதற கைகால்கள் உதைகையிலேயே , இடுப்புவரை அதனுள் அழுந்தி, இன்னும் புதைந்து கொண்டிருந்தேன். நான் உளையுள் மோவாய் வரை மூழ்கிக் கொண்டிருக்கையிலேயே நாடா நாடாவாய் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த வெள்ளி ஜரிகை அம்மேகத்திற்குக் கரைகட்டிக் கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டேன். என் வாயிலிருந்து ஒரு அலறல் கிளம்பிற்று.

விழித்துக் கொண்டேன். மேல் போர்வையைப் பிராண்டிக் கொண்டிருந்தேன். பயத்தால் வேர்வையில் தலைமயிர் நனைந்து நெற்றியில் அடையாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தக் கனவை இரண்டாந்தடவை காண்கிறேன். போனதரம் ஆபரேஷன்போது மயக்க மருந்தின் போதை யில் இமைத்திரையில் முதன் முதலாய்ப் படிந்தது மறுபடியும் நேற்று இரவு, மறுமுறையும் ஒரு மாறுதலும் மின்றித் தோன்றியது வியப்பாயிருந்தது.

“எப்படியிருக்கிறாய்?”

இன்று காலை காப்பியுடன் தம்பி வந்திருந்தான், ஹாட்டையும், சூட்டையும், பூட்டையும் மாட்டிக்கொண்டு முகத்தை முழ நீளம் தொங்கப் போட்டுக் கொண்டு.

“ஆமாம், வருஷப் பிறப்பாய் இருந்தால் என்ன, வீட்டில் இறப்பாய் இருந்தால் அவனுக்கென்ன கடன்காரன் , நான் மாத்திரம் வரணும் என்று உத்தரவு: போட்டுவிட்டான். இந்த வயிற்றுப்பாடு , அண்டிப் பிழைப்பதென்று ஏற்பட்டு விட்டால் என்னதான் அதிகாரம் என்று எல்லையே கிடையாது. வெள்ளைக் காரன் கொள்ளை நல்லவன், கோவிலில் சூடம் ஏற்றிச் சொல்வேன். நம்மவன் கொடுமைதான் தாங்க முடிய வில்லை. விடுமுறை நாளானாலும் அன்றைக்கு ஒரு மணி நேரமாவது வரப்பண்ணி விடுமுறை உணர்வையே கெடுத்தால் தான் அவனுக்குத் திருப்தி. இதெல்லாம் பார்த்தால் தோணறது, மூணு மாஸம் படுத்தபடுக்கை யாய்க் கிடந்தாலே தேவலை. நோய் இருந்தாலும் ஓய்வு இருக்குமல்லவா?”

வாஸ்தவந்தான், ஒரு நாளா ரெண்டு நாளா? கடந்த ஒன்றரை வருஷங்களாய் நான் படுத்ததிலிருந்து சுமை, முழுதும் அவன் தலையில் தான். என்னோடு போகவில்லை. என் பெண்டாட்டி இருக்கிறாள்.

அவளை சும்மா சொல்லத்தகாது. அண்ணா , மன்னி மேல் அலாதி வாஞ்சைதான். அம்பிக்குக் கையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை. அதற்கு வயிற்றில் கட்டி. மூன்று மாதங்களாய் அவன் மனைவி ஸ்னானம் பண்ணவில்லை; தவிர தாயாச்சு குட்டித் தங்கையாச்சு என் மனைவியாச்சு. நான், என் ஆஸ்பத்திரி, மருந்து செலவாச்சு. அத்தனையும் தம்பி தருமம்!

வியாதிவக்கை கட்டி மேய்க்க பணக்காரனுக்குத்தான் சரி. அவன் வைத்திய செலவுதான் அவன் கௌரவத்தின் எடை. ஆனால் நம்மைப் போன்றவர்களைத் தேடித்தான் ராஜரோகம் வருகிறது. நம் -

“என்னா அண்ணா யோசனை பண்ணுகிறாய்?”

குற்றஞ் செய்தவனைப்போல் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஒண்ணுமில்லையப்பா; ஒண்ணுமில்லை. வியாதி யாய்ப் படுக்க வேணுமென்று ஆசைப்படாதே. நான் ஒருத்தன் இருக்கிறேனே போதாதா?”

“இல்லேண்ணா என்னை மன்னிச்சுடு அண்ணா!”

என் கண்முன் என் கனவின் கருமேகம் எழுந்து, இருண்டு பரவிற்று. நான் அதனுள் புதைந்து போய்க் கொண்டிருந்தேன்.

“என்ன ஸார் , how do you feel?” என்று கேட்டுக் கொண்டே, என் கை நாடியைப் பிடித்தபடி டாக்டர் கட்டிலோரத்தில் உட்கார்ந்தார்.

“என்னைக் கேட்பானேன் , உங்களுக்குத் தெரியாதா?’ ‘எனக்குத் தெரிகிறதிருக்கட்டும், உங்களுக்கெப்படித் தோன்றுகிறது? தேவலையாய்ப்பட்டால் சிகிச்சை முறையாய் இருக்கிறதென்று தெரியும். சௌகர்யமாய் இல்லையானால், மருந்தையோ, சிகிச்சையோ மாற்றுவது பற்றி யோசிக்கலாம்.’

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘என்ன டாக்டர், சின்னக் குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்து ஏமாற்றுகிறீர்களா? நானும் இங்கு வந்து ஒரு வருஷமாய்க் கிடக்கிறேன். வந்தது முதற்கொண்டு நீங்கள் தான் பார்க்கிறீர்கள். இதுவரை ஐந்து ஆபரேஷன்கள் செய்தும், நீங்கள் என் சதையை அறுத்து அறுத்து; எறிந்தும் என் உடல் ரத்தமெல்லாம் இன்னமும் சீழாய்த் தான் மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் ஆறாவது ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். என்னை உடம்பு எப்படி என்று கேட்கிறீர்கள்!”

அவர் முகம் சுண்டிற்று. “இப்படி நம்பிக்கையை இழந்து பேசினால் என்ன செய்கிறது? உடம்பு குணமாக வேண்டாம் என்றா இத்தனை ஆஸ்பத்திரி கட்டி வைத்திருக்கிறார்கள்? வைத்யத்திற்கு நாங்கள் எல்லாம் படிக்கிறோம்? இன்னும் பரிசீலனை செய்கிறோம்? புதுப் புது மருந்துகள், சிகிச்சைகள் கண்டு பிடிக்கிறோம்?

எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. சாய்ந்திருந்தவன், நான் எழுந்து உட்காந்தது கூட எனக்கு நினைப்பில்லை.

“என்னைக் கேட்காதேயும், நீங்கள் புகழ்ந்து மகிழும் ஆஸ்பத்திரியை ஒட்டினாப்போல் கட்யடிசவக் கிடங்கில், பனிக்கட்டி பரப்பி, அடுக்கடுக்காய் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை, துப்பட்டியில் சுருட்டி, சேர்த்து இறுகக்கட்டி சேமித்து வைத்திருக்கும் உங்கள் சொத்துக் களை ஒவ்வொன்றாய்ப் புரட்டி முகத்தை மூடியிருக்கும் துணியை விலக்கி அவைகளைக் கேளுங்கள் : “உங்களுக் காகத்தானே நாங்கள் ஆஸ்பத்திரி கட்டிவைத்திருக் கிறோம்? உங்களுக்காகத்தானே வைத்ய பரிசீலனை செய்கிறோம், புதுப்புது மருந்துகள், சிகிச்சைகள் கண்டு பிடிக்கிறோம்?” அவை வாய் திறந்து பதில் சொல்லா விட்டாலும் சாகுந்தறுவாயில் விதவிதமான விகாரங்களில் நிலை குத்திப்போன அவைகளின் விழிகளில் நீங்கள் படிக்கும் சேதியை மறவாமல் என்னிடம் வந்து சொல்லும் …… புக்புக் – லொக்கு லொக்கு.”

இரும ஆரம்பித்துவிட்டது.

“Damn-” என்று மொணமொணத்துக் கொண்டே டாக்டர் எழுந்து போய்விட்டார்.

எனக்குக் களையிட்டுவிட்டது. தலையணையில் சாய்ந்தேன். வேர்வை ஜலகண்டமாய்க் கொட்டிற்று. நான் அவைகளுடன் போய்ச்சேர இன்னமும் எத்தனை நாளாகும்? எப்போது அது நேரும்? ஒருவரும் பக்கத்தில் இல்லாத வேளையிலா? நள்ளிரவிலா? நைட் நர்ஸ் மேஜை மேல் தூங்கிவிழுகையிலா? பட்டப்பகலில் அத்தனை பேரும் பக்கத்திலிருக்க ஆபரேஷன் டேபிளிலேயா? கொடுத்த மயக்கத்திலிருந்து தெளியாமலேயா? (எண்ணுங்கள் மிஸ்டர் – ஒண்ணு ரெண்டு மூணு ஆஞ்சு … அறுபத்தி அஞ்சு , நூற்றி …… நூற்றி…)

மார்வாடித் திண்டு போல், உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை சுருட்டி, மூடி, தைத்து, தலைப்பக்கம் முடிச்சில் மிஞ்சிய துணி குடுமிபோல் விசிறிக்கொண்டு, உள்ளே நான் முழு நினைவுடன், குற்றுயிராய் -

“எப்படியிருக்குடா?”

டாக்டரிடம் எறிந்து விழுந்தாற் போல் இவளிடம் விழ முடியுமா?

அம்மாவை நினைத்தால் தான், நினைக்கப்படவில்லை. நெஞ்சு இடிகிறது. அம்மா இன்னும்பட உன் தலையில் இன்னும் என்ன எழுதி வைத்திருக்கிறது?

“இந்தா, முன்னைக்கு முன்னால் இந்த வேப்பம்பூ பச்சடியைத் தொட்டு நாக்கில் வெச்சுக்கோ , யமனுக்கு வேம்பாய் இருப்பாய்-”

அம்மா, அடுத்த வருஷப் பிறப்புக்கு நான் ஆஸ்பத்திரி யில் இருக்கமாட்டேன். வீட்டிலும் இருக்கமாட்டேன்.

ஆனால் விட்டு உன்னிடம் சொல்ல எனக்குத் துணிவு இல்லையே! அம்மா , உன் அபார நம்பிக்கையும், நம்பிக்கை யில் இருக்கும் நம்பிக்கையும் என்னை உன்னிடம் கோழையாக்குகிறது. உன்னை ஏமாற்ற என்னை ஏமாற்றிக் கொள்கிறேன். எனக்கு ஓசையடங்கி, உணர்ஷ ஓய்ந்து, மூச்சு முரடி, முரடு நூலாகி, நூல் இழையாகி, இழையடங்கிக் கொண்டிருக்கும்போது கூட, நான் இறந்து போய்க் கொண்டிருக்கிறேன் என்றால் நம்பமாட்டாள். கையைப் பிசைந்துகொண்டு , ‘ டாக்டர், என் குழந்தையை எனக்குக் காப்பாற்றிக் கொடுங்களேன்! மருந்தை மாற்றுங் களேன் – அநுமாரே! அன்னிக்கு சஞ்சீவி மருந்து கொண்டு வந்து படையையே உயிர்மீட்டையே, என் குழந்தையை எனக்குத் திருப்பிக்கொடேன்!” என்று, அலறுவாள்.

அவள் நினைவில் எனக்கு அழிவில்லை. பெற்ற வயிறின் பலம் அப்படி. செத்த பின்னும் அங்கு நான் சூளையிருப்பேன் அவள் என்னை எண்ணும் போதெல் லாம், ஒவ்வொரு தடவையும், அவள் வயிற்றில் ஒரு வண்டி நெருப்பை வாரியிறைத்துக் கொண்டே , அதன் தகிப்பில், கணகணவென்று ஜ்வலித்துக் கொண்டு கிளம்புவேன். நான் அமரத்வம் அடையும் முறையே இப்படித்தான்.

ஐயோ !

“தோ பார், உன் கேள்வியை நான் முந்திக்கிறேன், உடம்பு எப்படி என்று என்னைக் கேட்காதே. இன்றைக்கு இந்தக் கேள்வியே எனக்கு எரிச்சல் உண்டு பண்ணுகிறது.”

திகைப்புற்ற அவ்விழிகளில் பயம் எட்டிப் பார்த்தது. அவளைக் கண்டு என் மனம் தவித்தது.

“என்னை மன்னித்துவிடு”

அவள் உதடுகள் நடுங்கின. அவள் கை என் மணிக்கட்டைப் பற்றியது.

“ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? யார் யாருக்கு மன்னிப்பு?”

“இல்லை, என்னை மன்னித்துவிடு!”

“மறுபடியும் பாரேன்!”

“இல்லை, தப்பெல்லாம் என்னுடையதுதான். உன் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்.”

“ஐயோ இம்மாதிரியெல்லாம் என்னை ஒண்ணும் சொல்லாதேயுங்களேன் ! வேணுமானால் என்னைக் கோபியுங்கள், ஆனால் என்னை மன்னிப்புக் கேட்காதே யுங்கள் -”

அவள் கண்களில் கண்ணீர் மாலையாய்ப் பெருக்கெடுத்தது. அவள் அப்படி அழுகையில், அப்படி அழவிடுவதில் எனக்கு எங்கேயோ ஒரு ஆறுதல் கூட உணர்கிறேன். எனக்காக ஒருத்தி அழுகிறாள். நாளடைவில் இவ்வழுகை மறைந்து விடும்; மறந்தும் போய்விடும். “பாவி, என் தலையில் கல்லைப் போட்டு விட்டுப் போனானே!” என்ற சீற்றம்கூட வரும். ஆனால் இன்று ஒருத்தி எனக்காக அழுகிறாள். அன்று இவள் முகம் கண்ணீரில் நனையக் காண்கையில் எனக்கு அமைதி கூட உண்டாகிறது.

ஒன்றரை வருஷங்களுக்கு முன்னால் எவ்வளவு அழகா யிருந்தாள் ! இப்பவும் தான் என்ன குறைவு! ஆனால் இன்னமும் இளமையாயிருந்தாள்.

“நீ அழுவதில் என்ன லாபம் சொல்! நடக்கப் போவதை எவராலும் தவிர்க்க ஆகாது. நான் நேற்று ஒரு கனவு கண்டேன். உடனே நீ கண்டதாய்ச் சொன்ன கனவும் ஞாபகம் வந்தது.”

அவள் கீழுதடு பிதுங்கிற்று. “ஒரு கனவுதானா? எத்தனையோ கனவுகள்!”

“நான் படுக்க ஒரு மாதத்திற்கு முன் அக்கனவை எனக்குச் சொன்னாய். அன்றிரவு நாமிருவரும் ரொம்பவும் சந்தோஷமாயிருந்தோம். திடீரென :

“என்ன யோசனை பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டாய்.

“நான் உன்னை இறுகத் தழுவிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாய். இருவர் மனமும் நிரம்பிய இந்த உடல் நிலையிலேயே சாவு; சித்தித்தால் அதைவிடப் பதவி உண்டோ?” என்றேன்.

உன் உடல் என் அணைப்புள் குலுங்கிற்று. என் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு விக்கிவிக்கி அழுதாய்.

நீ தேம்பினாய் :

“இன்று பகல் கண்ணயர்ந்து போய் ஒரு கனாக் கண்டேன். நான் ஏதோ ஒரு தோட்டத்தில் ஒரு மேடை மேலிருக்கிறேன். மாலை ஒன்று தொடுத்துக்கொண்டிருக் கிறேன். ரொம்பவும் ஆசையாய்த் தொடுக்கிறேன், சுறுசுறுப்பாய் தனி உயிர் பெற்றாற்போல் அது என்’ கைகளினிடையில் உருவாவது காண அலுப்பற்ற வியப்பா யிருக்கிறது. நீங்கள் என்னெதிரில் வருகிறீர்கள். உங்கள் கழுத்தில் ஆசையாய் மாலையைப் போடுகிறேன். போட்டதுதான் தாமதம், உடனே பிணமாய்த் துவண்டு நீங்கள் என் மடியில் விழுகிறீர்கள் …. அதுமுதல் மனசே சரியாயில்லை …”

“அட அசடே, அப்படியானால் நான் சிரஞ்சீவி தான்!” என்று உன்னை நான் தேற்றினேன், ஞாபக மிருக்கிறதா?

அவள் முகம் அவள் கைகளில் புதைந்திருந்தது.. தோள்கள் குலுங்கின.

நேரமாகிவிட்டது. விளக்குகள் அவிந்தாகிவிட்டன. தாழ்வாரத்தில் மாத்திரம் ஒன்று எரிகிறது. எனக்கு. அரைத் தூக்கத்தில் (தூக்கமா மயக்கமா ) கண்கள் சொருகின. ஏதேதோ நினைவுகள் பொருந்தி பொருந்தி எடுக்கும் படங்களாய் மாறுகின்றன.

சின்ன வயதில் என் தம்பியும் நானும் ஒரே பாயில் கட்டிப் புரண்டது. அவனுக்குக் குளிருமோ எனும் பரிவில், இழுத்து இழுத்துப் போர்த்தப் போர்த்த, தூக்கத்தில் அவன் உதறி உதறி எறிகிறான்.

நான் எஸ். எஸ். எல்.சி. தேறின தற்கு, அம்மா கொழுக் கட்டை போடுகிறாள். அவள் விரல்களின் துடிப்பின் கீழ் மாவுச் சொப்புகள், பூரணத்தை ஏந்துவதற்காக என்ன வேகமாய், பூக்கிண்ணங்கள் போல தவிதவிக்கின்றன! பார்க்கவே ஆசையாயிருக்கிறது. நானும் ஒன்றேனும் செய்யப் பார்க்கிறேன். ஆனால் மாவுதான் அழுக்காகி வீணாகிறது.

பாவம்! அடுத்தாற்போல் மேல்படிப்புக்கு அடுத்த கப்பலில் நான் சீமைக்குப் பயணமாவதாய்த்தான் அம்மாவுக்குத் தியானம், தடபுடல்.

காக்ஷி மாறுகிறது.

கலியாணமாகிய புதுத் தம்பதிகள், இன்னும் கழற்றாத மாலையுடன், வண்டி விட்டிறங்கி வீடு நுழைந்ததுமே அம்மாவை நமஸ்கரிக்கிறோம். அம்மா மருமகளை ஆசீர் வதிக்கிறாள். “பதினாறும் பெற்று, தோளோடு தாலி தொங்கத்தொங்கக் கட்டிண்டு தீர்க்காயுசாயிரு!”

ஆபீஸிலிருந்து வருகிறேன். என் சின்னத் தங்கை ஓடிவந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு “அண்ணா, நேக்கு சாக்கலேட் வாங்கிண்டு வந்தையோ?” என்கிறாள்.

திடீரென்று ஒரு சபலம் உதிக்கிறது. ஒரு வேளை -

நான் மேகத்தில் புதைந்து கொண்டிருக்கையிலேயே அதைச் சுற்றிக்கட்டிய வெள்ளிரேகை நினைவு வந்தது.

நான் ஒருவேளை, மறுபடியும் -

தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதய சூரியனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

- பச்சை கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும்போதே இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு. ஆனா மத்தநாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவே யிருந்தது. புரியல்லே. அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந் தான். நெடுநெடுன்னு ...
மேலும் கதையை படிக்க...
முதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு ...
மேலும் கதையை படிக்க...
சுமார் முப்பது வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி மலரில் இந்தக் கதை வெளிவந்ததும் இது அடைந்த பிரபலம் ஒருபக்கம் இருக்கட்டும். இதில் விவரிக்கப்படும் கூட்டுக் குடும்பம் என்ற ஸ்தாபனமே இப்போது முறிந்து போய் ஆயிற்று. கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் ...
மேலும் கதையை படிக்க...
மணையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிஷம் :சாவித்ரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேரத்திற்கு ஒரு முறை மாடிக்கும் கீழுக்குமாய் நடமாடிக்கொண் டிருந்தாள். கல்யாணத்தில் ஆயிரம் ஜோலி இருக்கையில், இந்தச் சாஸ்திரிகளுக்கு என்ன வேலை? சமையல்காரன் சாம்பாரை என்ன பண்ணிண்டிருக்கானோ தெரியவில்லை. (அண்டா ஈயம் போதாதென்று ...
மேலும் கதையை படிக்க...
1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் ...
மேலும் கதையை படிக்க...
பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம் அவளுக்குத் தாளவில்லை. சின்னம்மாவைக் கூப்பிட்டுச் சாய்வு நாற்காலியை எடுத்துவரச் சொன்னாள். "என்னம்மா பண்ணப்போறே?" "கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ." திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள். "என்னம்மா சொல்றே? ஐயா ...
மேலும் கதையை படிக்க...
வெளியே தென்னை அசைந்தாடிற்று. சலசலக்கும் மட்டைகளினிடையே பதுங்கிய இளநீர் முடிச்சை நோக்கிக்கொண்டிருந்த பூரணி ஒரு முடிவுக்கு வந்தவள் போலும் பெருமூச்செறிந்து, அப்பொழுதுதான் அறைவாசல் வழி சென்ற தன் பேரனைக் கையைச் சொடுக்கி அழைத்தாள். “என்ன ஆத்தே” என்று இழுத்துக்கொண்டே பையன் உள்ளே வந்தான். ...
மேலும் கதையை படிக்க...
விழிப்பு தன் சுழிப்பிலிருந்து தானே வெளிவருமுன் ஏதோ சத்தத்தில் வெடுக்கெனக் கலைந்து முழுமையில் கூடிக்கொண்டது. பழக்கத்தில் பார்வை சுவர்க் கடியாரத் தின் மீது பதிந்ததும் அடித்துப் புரண்டு எழுந்தாள். ஐயோ ரொம்ப நேரமாச்சே ! உடனே நினைப்பு வந்தது. இன்றைக் குப் ...
மேலும் கதையை படிக்க...
[ஓம் ' பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.] பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸமி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டியின் சிறப்பு ...
மேலும் கதையை படிக்க...
ஸ்ரீமான் பாஸ்கரன், வழக்கப்படி, விடிவெள்ளி வேளையில் சிந்தாமணி படித்துறையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில், தண்ணிரில் காலடியில் கெட்டியாகத் தட்டுப்பட்டு, அதை எடுத்துப் பார்த்தால்-விக்ரஹம்: அன்று வெள்ளிக்கிழமை. பாஸ்கர் புல்லரித்துப் போனார். வீடு திரும்பியதும், ரேணு வழக்கம்போல் அப்போது தான் காப்பியடுப்பைப் பற்ற ...
மேலும் கதையை படிக்க...
ராசாத்தி கிணறு
எழுத்தின் பிறப்பு
பாற்கடல்
சாவித்ரி
சிந்தாநதி
கொட்டு மேளம்
பூரணி
ஸ்ருதி பேதம்
நெற்றிக்கண்
கறந்த பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)