மெழுகுவர்த்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 9,799 
 

“வாடா ரமேஷ், வாடா”, ..என்று வரவேற்றான் கௌதம்.

“ரம்யா, ரம்யா, யார் வந்திருக்காங்க வந்து பாரேன்” தலையை துவட்டியபடியே சொன்னான்.

என்ன ரமேஷ், திடீர்னு ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்கே? மேரேஜ் என்ன பிக்ஸ் ஆயிடுச்சா? கிண்டலாக கேட்டான்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல்லே..உனக்கு தெரியாம அதெல்லாம் நடந்துடுமா என்ன?

அதானே பார்த்தேன்.. எனக்கு தெரியாமல் போய்டுமா என்ன?
ஒரு குட் நியூஸ். என்னை இங்கே சேலம் பிராஞ்சுக்கே மாத்திட்டாங்க. நேத்துத்தான் டூட்டிலே ஜாயின் பண்ணினேன். நீ இந்த ஊர்லே வொர்க் பண்றது தெரிஞ்சது. அப்படியே பாத்துட்டு போலாம்னு வந்தேன்..என்று சோபாவில் சாய்ந்தபடியே சொன்னான்.

நல்ல காரியம் பண்ணினே… ரம்யா..ரம்யா..

இதோ வந்துட்டேங்க… சமயலறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள்.

பார்த்ததும் திடுக்கிட்டாள். அவளுக்கு மிகவும் அதிச்சியாக இருந்தது. இவன் எப்படி இங்கே? ஒரு வேளை எல்லாம். சொல்லியிருப்பானோ? மனதில் ஆயிரம் புயல்கள் அடித்து அவளை நிலைகுலையச் செய்தது. அப்படியே மரம் போல் நின்று விட்டாள்.

என்ன? அப்படியே திகைச்சு போய் நின்னுட்டே? நான் அடிக்கடி சொல்வேனே, க்ளோஸ் பிரண்டு ரமேஷ்.. சார் தான் அது. கிண்டலாக அறிமுகப்படுத்தினான்.

“வணக்கம்”

“வணக்கம்” அவள் சொல்லும் போது அவளையறியாமல் நா குழறியது. கை கூப்பிவிட்டு வேகமாக உள்ளே போனாள்.

சாரி, ரமேஷ் என் ‘வைப்புக்கு’ கொஞ்சம் கூச்ச சுபாவம்..அதிகமா ஆண்களிடம் பேச மாட்டாள்..சமாளித்தபடியே சொன்னான்.

அதுதான் தமிழர் பண்பாடு. நீ கொடுத்து வச்சவன். கண்ணுக்கு அழகான மனைவி எல்லாருக்கும் கிடைக்குமா? ‘கௌதம் யூ ஆர் எ லக்கி மேன்.’ ஒகே..நான் வரட்டுமா?
என்ன, விளையாடறியா? ரம்யா, காபி கொண்டு வா, அப்படியே டிபன் ஏற்பாடு செய் என்று மட மடவென்று சொன்னான்.

வேண்டாம்.. அதெல்லாம் எதுக்கு? இன்னொரு நாள் பார்த்துக்கலாம். எனக்கு ஆபிஸ்லே கொஞ்சம் வேலையிருக்கு..

நோ..நோ. நோ..நீ இன்னைக்கு சாப்டுட்டுத்தான் போகணும். உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? வாடா.. மாடிக்கு போலாம்.. உங்கிட்டே நிறைய பேசணும்..ரம்யா.. டிபனை மாடிக்கு கொண்டு வந்துடு என்ன?,.சொல்லிக்கொன்டே மாடியில் ஏறினார்கள்.

அவங்களுக்கு ஏண்டா சிரமம் கொடுக்கிறே?

இதுலே சிரமம் என்ன இருக்கு? நீ பேசாம மாடிக்கு வா என்று மாடிக்கு அழைத்துச் சென்றான்.

அவளுக்கு வேலையே ஓட வில்லை. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மனதினில் ஆயிரம் சிந்தனைகள் தோன்றி மறைந்தது. .எல்லாம் சொல்லி இருப்பானோ? ஒருவேளை நம்மை ஆழம் பார்க்கிறாறோ? குழப்பத்துடன் சமையல் செய்யத் தொடங்கினாள்.

ஐயா..

யாரு? ஓ ராமையாவா? என்ன விஷயம்? கேட்டான் ரமேஷ்.

ஐயா.. அது வந்துங்க ஐயா..அது வந்து..

சொல்லுங்க.. ஏதோ சொல்ல வர்றீங்க..ஏதாவது லோன் விஷயமா நான் ஏதாவது உதவணுமா?

அதெல்லாம் வேணாங்க ஐயா.

இதோ பாருங்க, ராமையா, நீங்க வயசுலே பெரியவர், இந்த ஆபீஸ்லே சீனியர் ஸ்டாப் நீங்க..எப்பவும் ஒப்பனா பேசுவீங்க .. தயக்கம் இல்லாம சொல்லுங்க..ராமையா..

ஐயா.. நீங்க தப்பா நினைக்கலேன்னா சொல்றேன்..தயங்கியபடியே கேட்டான்.

ராமையா.. என்ன ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்க ? புன்சிரிப்புடன் கேட்டான்.

ஐயா..நம்ம ரமேஷ் ஐயா..

ஏன் அவனுக்கென்ன?

ஐயா, இரண்டு நாளைக்கு முன்பு நம்ம கேண்டீன்லே காபி குடிச்சிக்கிட்டிருந்தப்போ நம்ம ரம்யா அம்மாவைப் பத்தி ரொம்ப தப்பு தப்பா பேசிக்கிட்டிருந்தாருங்கையா..உன்ங்க கிட்டே அப்பவே சொல்லலாம்னு நினைச்சேன். நீங்க தப்பா நினைப்பீங்கன்னு சொல்லலை. இருந்தாலும் என் மனசு கேட்கலைங்க ஐயா..எதுக்கும் ரமேஷ் ஐயாகிட்டே ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன் ஐயா..

ரம்யாவைப் பத்தியா பேசினான்? உனக்கு நல்லா தெரியுமா?
ஆமாங்கையா..நம்ம ரம்யா அம்மாவைப் பத்திதான் ரொம்ப நம்ம ஸ்டா•ப்களிடம் பேசிக்கிட்டிருந்தாரு.எனக்கு மட்டும் இள வயசாயிருந்தா அப்பவே கொலை பண்ணிட்டு போயிருப்பேன்யா. .உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.
சரி, ராமையா, நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன். சொல்ல, ராமையா கிளம்பினான் . சேரில் சாய்ந்தபடியே யோசித்தான். ராமையா சொல்றது உண்மையா இருக்குமோ? ரமேஷ் அப்படிப்பட்டவனா? இருக்காது. ரமேஷ் எனக்கு துரோகம் செய்ய மாட்டான்.கல்யாணதுக்கு முன்னே ஒருதலைக்காதல் ஒருத்தன் பண்ணினான்னு ரம்யா சொன்னாளே.. ஒரு வேளை அவன் இந்த ரமேஷாக இருக்குமோ? மனதில் ஆயிரம் அலைகள்..

டேபிள் மேலிருந்த தன்ணீரை குடித்துவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து விட்டு சேரில் சோர்வுடன் சாய்ந்து உட்கார்ந்தான்.

“சார்”

என்ன?

சார், உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்குது சார். ப்ரம் அட்ரஸ் இல்லை. பாருங்க சார்..டெஸ்பாட்ச் க்ளார்க் நீட்டினான்.

எனக்கா ? வாங்கிப் பார்த்தான். அவன் முகவரி மிகத்தெளிவாக எழுதியிருந்தது.கவரை திருப்பி திருப்பி பார்த்தான். சரி, நீங்க போலாம்..

‘தேங்க்யூ’ சார் என்று கிளம்பினான்.

வெளியில் போனது உறுதியானதும் கவரை கையால் வேகமாக கிழித்தான். உள்ளே ஏழெட்டு போட்டோக்கள், சில கடிதங்களும் இருந்தது.போட்டோக்களைப் பார்த்ததும் அவன் அதிர்ச்சியடைந்தான்.

காலிங் பெல் அடித்தது.

பேப்பர் படித்தபடியே இருந்தவள் யோசித்தபடியே கதவை திறந்தவள் அதிர்ந்தாள்.

நீயா?….என்றாள் அதிர்ச்சியுடன்…

நானே தான். உன்னையே நினைச்சி நினைச்சி உருகின ரமேஷ்தான். என்னை நீ எதிர்ப்பார்க்கலையில்லே? விஷமத்தனமாக கேட்டான்

‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினாள். அவள் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது.

நீ… .நீ இங்கே எதுக்கு வந்தே? மரியாதையா வெளியிலே போயிடு..இல்லே! சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடட்டுமா..ஆத்திரமாக பேசினாள்.

இதோ பார் ரம்யா..நாம காலேஜ்லேபடிக்கும்போது உன்னை தீவிரமா காதலிச்சேன் .நீ மறுத்துட்டே. இந்த ரமேஷ் விரும்பின எதையும் அடையாம இருந்ததில்லை.ஏதோ சந்தர்ப்பம் சூழ்நிலை நம்மை பிரிச்சிடுச்சி..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன். என் •பிரண்டு கௌதம்தான் உன்னை கல்யாணம் பண்ணியிருக்கான். ஓகே..நோ ப்ராப்ளம்..எல்லாம் ஒன்றுதான்..வா..என்று அவள் கையைப் பிடித்தான்.

சீ..விடுடா கையை..நீயேல்லாம் ஒரு மனுஷனா? நண்பனின் மனைவின்னு தெரிந்தும் இப்படி நடுந்துக்கறியே..உனக்கு வெட்கமா இல்லே?இந்த நிமிஷமே நீ வீட்டை விட்டு வேளியிலே போ.. இல்லே..சத்தம் போட்டு ஆளுங்களை கூப்பிட வேண்டி வரும்…உடம்பெல்லாம் அதிர்ந்தபடியே பேசினாள்.

கூப்பிடுடி..நீ எனக்கு எழுதிய லெட்டரை எல்லாரும் படிச்சி தெரிஞ்சுக்கட்டும்…அப்புறம் பார் யார் மானம் போகுதுன்னு..பார்க்கலாம்..என்று. மிரட்டினான்.

வெளியிலே போடா நாயே..! இல்லே நான் கொலைகாரியாயிடுவேன் ..ஆவேசமாக கத்தினாள்.
போறேன்டி..போறேன்..உன்னை சும்மா விடமாட்டேன்டி..நீ எப்படி வாழ்ந்துடறேன்னு பாத்துடறேன்.. என்று கோபத்துடன் கிளம்பினான்

கௌதம் அலுவலகத்திலிருந்து வந்தான்.

“ரம்யா” குரலில் மாற்றம் தெரிந்தது.

“வாங்க” இப்பத்தான் வர்றீங்களா?…இருங்க..காபி கொண்டு வர்றேன்..என்று சமயலறை பக்கம் போக..

“நில்” ரம்யா..உன் கிட்டே கொஞ்சம் பேசணும்..அதிகார தோரணையில் பேசினான்.

திக்கென்றது அவளுக்கு. இதயம் படபடவென்று அடித்தது. முகத்தில் வியர்வைத்துளிகள் முத்து முத்தாய் கொப்பளித்தது

ரொம்பவும் அழுத்தக்காரிடி நீ..என்ன துணிச்சல் இருந்தால் இந்த விஷயத்தை மறைத்து உன் அப்பன் உன்னை எனக்கு கட்டி வச்சிருப்பான்? இது பாருடி..என் மானமே போகுது..கோபத்துடன் கடிதங்களையும் ஒரு சில போட்டோக்களையும் அவள் முன் போட்டான்.

எடுத்து பார்த்தாள்.

சத்தியமா இது நான் எழுதியது இல்லை. ப்ளீஸ் என்னை நம்புங்க..தழுதழுத்த குரலில் சொன்னாள்.

போதும் நிறுத்துடி. உன்னை இது நாள் வரைக்கும் நம்பினது போதும். சரி, இந்த நிமிஷத்திருந்து இந்த வீட்டுலேஇருக்கக்கூடாது..கிளம்பு.. என்றான் உறுதியுடன்.
இந்த ராத்திரி நேரத்துலே வெளியிலே போன்னு சொன்னால் நான் எங்கேங்க போவேன்? அழுதபடியே கேட்டாள்.

எங்காச்சும் போடி..உன் காதலன் உனக்காக காத்துக்கிட்டிருப்பான். அங்கே போடி..

என்ன பேச்சு பேசறீங்க?

என்ன பண்றது? புது எலைன்னு வாங்கினேன். ஆனா அது வேறொருத்தர் சாப்பிட்ட இலைன்னு இப்பதானே தெரிஞ்சுது. என்னை கொலைக்காரன் ஆக்காதே..”கெட் லாஸ்ட்” என்று கோபமாக அவளை பிடித்து வெளியே தள்ளி கதவை கோபமாக சாத்தினான் கௌதம்..

“சந்திரா, சந்திரா”…

யாரு ? உள்ளேயிருந்து குரல் வர’ நான் தான் ரம்யா..

ரம்யாவா ? என்னடி இந்த நேரத்திலே?.. சரி, சரி, உள்ளே வா பேசிக்கலாம்..என்று கையை பிடித்தபடியே உள்ளே அழைத்து வந்தாள்.

யாரு? அடடே..ரம்யாவா! என்னமா இந்த நேரத்துலே வந்திருக்கியே? தங்கம் அன்பாக கேட்டாள்.

ரம்யா நடந்ததை சொல்லி முடித்தாள்.

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்..கெஞ்சினால் மிஞ்சுவாங்க, மிஞ்சினால் கெஞ்சுவாங்க. நீஒன்றும் கவலைப்படாதே..நீ இங்கே எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். இது உன் வீடு..என்றாள் சந்திரா அன்புடன்.

நீ என்னமா சொல்றே..ரம்யா இங்கே இருக்கிறதுலே உனக்கு கஷ்டம் எதுவுமில்லையே? அம்மாவைப் பார்த்து கேட்டாள்.

எனக்கு என்னமா கஷ்டம்..உன்னை மாதிரியே ரம்யாவும் எனக்கு பிறக்காத மகள்தான்..தாராளமா இரும்மா..

அம்மா நீங்க என் தெய்வம்..அப்பா அம்மா இல்லாத எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கீங்களே..உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்? என்று நா தழுதழுத்தபடியே கட்டிக்கொண்டாள்.

சந்திரா..வீட்டுலே சும்மா இருந்தால் ரம்யாவுக்கு போர் அடிக்கும்..அதுவும் படிச்சப் பொண்ணு, படித்தது அடுத்தவர்களுக்கு உபயோகமா இருக்கணும். நீ போற ஸ்கூல்லே ஏதாச்சும் ‘டீச்சர்’ போஸ்ட்’ இருந்தால் ஏற்பாடு செய்யேன்..

சரிம்மா..நான் சொன்னால் எங்க மேடம் கண்டிப்பாக கேட்பாங்க. நாளைக்கே இது பத்தி மேடத்துக்கிட்டே பேசறேன். ரம்யா..நடந்ததை நினைச்சி வருத்தப்பட்டிருக்காதே. வா சாப்பிடலாம்..என்று ஆறுதல் சொல்லி சந்திரா அவளை உள்ளே கூட்டிச் சென்றாள்.

அது ஒரு தனியார் பள்ளி. இரும்பு கேட்டில் ‘விவேகானந்தா வித்யாலயா’ என்ற பெயர் தாங்கிய போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. .மாடியில் செயல் பட்டுக் கொண்டிருந்தது.பாதிப் பள்ளி செங்கல் கட்டிடத்திலும், பாதிப் பள்ளி ஒட்டுக் கட்டிடமாக இருந்தது.

‘குட்மார்னிங்’ மேடம்..

குட்மார்னிங்..சந்திரா..இவங்க.. ரம்யாவைப் பார்த்து கேட்டார்..

மேடம்..நான் சொல்லியிருந்தேனே..ரம்யா..பி.ஏ.பி.எட். .(ஹிஸ்டரி) கோல்டு மெடலிஸ்ட்என் காலேஜ் மேட்..நம்ம ஸ்கூல்லே ஏதாச்சும் போஸ்டிங் போட்டுக் கொடுத்தால் நல்லா இருக்கும் மேடம். .பணிவுடன் சொன்னாள்.

ஓகே ரம்யா, அடுத்த வாரம் நம்ம ஹிஸ்டரி மிஸ் சாந்திக்கு மேரேஜ் ஆகப்போகுது இல்லே..அவங்க சீட்டுலே அப்பாயிண்ட் பண்ணிடலாம்..

சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்குறீங்க..ரம்யா?.

நீங்க பார்த்து எவ்வளவு குடுத்தாலும் சரிங்க மேடம்..மிகவும் பணிவாக சொன்னாள்.

இது சின்ன ஸ்கூல். படிச்ச படிப்புக்கு தகுந்த மாதிரி சம்பளம் கிடைக்காது..சந்திரா மிஸ்க்காக நான் உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..எதுக்கும் யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லுங்க. நீங்க போலாம்..

‘தேங்க்ஸ்’ மேடம்.. என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்கள்.இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக்கொண்டார்கள்.

நாட்கள் நகர்ந்தது. நர்சரி ஸ்கூல் மெட்ரிக்குலேஷனாக மாறி, பின்பு அது மேல்நிலைப்பள்ளியாக வளர்ந்து விட்டிருந்தது.ரம்யாவே அப் பள்ளிக்கு பிரின்ஸ்பாலாக மாறிவிட்டிருந்தாள். அந்த கால கட்டத்திற்குள் எம்.ஏ., எம்.எட்.,எம்.•பில்., என்று தன் தகுதியை உயர்த்திக்கொண்டாள்.

தினமும் காலை எட்டு மணிக்குள் குளித்து டிபன் எடுத்துக்கொண்டு கிளம்பி பஸ் பிடித்து ஸ்கூல் போய் மாலை மிகவும் களைப்பாக வீட்டுக்கு வருவதைப் பார்க்க தங்கத்துக்கே மிகவும் பாவமாக இருந்தது.

‘என்ன லேட்டா இன்னைக்கும்?…பரிவுடன் கேட்டாள்.

‘ஆமாம்மா, ஸ்கூல்லே ‘ஸ்டா•ப்’ மீட்டிங். அதுதான் லேட்’ என்று சொல்லிக்கொண்டே ஹேண்ட் பேக்கை எடுத்து மேஜைமேல் வைத்தாள்.

சந்திரா எங்கேமா போயிட்டாள்?

‘எதிர் வீட்டுக்காரங்களோட புடவை எடுக்க போயிருக்காள். இப்ப கொஞ்ச நேரத்துலே வந்துடுவாள்

சரிம்மா..உடம்பு இப்ப தேவலையாம்மா..பரிவுடன் விசாரித்தாள்

பரவாயில்லை..அப்புறம் ரம்யா…நிறுத்தினாள்.தங்கம்.
என்னமா.. என்ன விஷயம்..

உங்க வீட்டுக்காரர் வந்திருந்தார்..மெதுவாக சொன்னாள்.
அவளுக்கு முகம் சிவந்தது. “குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் தம்ளரை “லொட்’ என்று கோபமாக வைத்தாள்.அந்த மனுஷனைப் பத்தி எதுவும் என்கிட்டே எதுவும் சொல்லாதீங்கம்மா..அப்பா, அம்மா இல்லாத என்னை கட்டின துணியோட வீட்டை விட்டு துரத்தினப்போ, நீங்கதான் என்னை உங்க சொந்த மகளா ஏத்துக்கிட்டு ஆதரிச்சீங்க..இல்லேன்னா, குளம், குட்டைன்னு எப்பவோ போயி சேர்ந்திருப்பேன்.ப்ளீஸ்..தயவு பண்ணி அவரைப் பத்தி என் கிட்டே எதுவும் சொல்லாதீங்க..அவரைப் பொறுத்தவரை ரம்யா எப்பவோ செத்துட்டாள்.. என்று சொல்லி விட்டு வேகமாக உள்ளே போனாள்.

என்ன பெண் இவள்..இவ்வளவு வைராக்கியமா பேசுகிறாளே…மனம் அந்த அளவு புண் பட்டிருக்கிறது என்பதை தங்கம் நன்றாகவே புரிந்து கொண்டாள்.

‘வணக்கம் மேடம்” என்றாள் சந்திரா..

இந்த கிண்டல்தானே வேண்டாங்கறது..மரியாதை எல்லாம் ஸ்கூலோடு சரின்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என்று செல்லமாக அடித்தாள்

என்ன மூட் அவுட்டா? அம்மா எல்லாம் சொன்னாங்க..
அதெல்லாம் ஒண்ணுமில்லே..சரி, விஷயத்துக்கு வருவோம்.நம்ம மாதர் சங்க மீட்டிங் வர்ற புதன்கிழமைதானே?

ஆமாம்..எதுக்கு கேக்குறே?

நம்ம மாதர் சங்கத்துல வெள்ளத்தாலெ பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ நாம ‘பப்ளிக்’ கிட்டேயிருந்து ‘கலெக்ட்’ செய்த துணிமணிகள், பணம், இதையெல்லாம் நம்ம சங்கம் சார்பா கலெக்டர்க்கிட்டே எப்படி ஒப்படைக்கலாங்கறதைப் பத்தி ‘மீட்டிங்’லே பேசணும்.

“ரம்யா, உனக்குத்தான் எவ்வலவு நல்ல மனசு?”

சந்திரா..வெள்ளத்தாலே பாதிக்கப்பட்டவர்கள் நமது சகோதர சகோதரிகள் இல்லையா? அவர்களுக்கு நாம கட்டாயம் உதவணும்..அது நம் கடமை இல்லையா?

அம்மா தாயே..உன்கிட்டே பேசி என்னாலெ ஜெயிக்க முடியாது..உன் விருப்பம் போல செய்..இப்ப எனக்கு பசிக்குது சாப்பிடலாம் வா..என்று அழைத்துப் போனாள்.

அன்றைக்கு மாதர் சங்கம் ஜே, ஜே என்று கூட்டம் களை கட்டியிருந்தது.. கூட்டத்தின் தலைவியான ரம்யா நடுவில் உட்கார்ந்திருந்தாள் .இரு பக்கமும் மற்ற முக்கிய உறுப்பினர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

ரம்யா பேச எழுந்தாள்.

கூட்டம் அமைதியானது.

மதிப்பிற்குரி¢ய உறுப்பினர்களே, எனக்கு முன்னே பேசியவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும், சமூகப்பணி செய்ய வேண்டும் என்று பேசினார்கள். எனக்கும் அதில் மாற்றுக்கருத்து இல்லை. இங்கே நான் மிக முக்கியமாக இரண்டு கருத்துக்களை மட்டும் பேசலாம் என்றிருக்கிரேன்.முதலாவதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் சங்கம் மூலம் சேகரித்த துணிமணிகள், பணம், மற்ற பொருட்களை நம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளிக்கலாம் என நினைக்கிறேன். அது பற்றிய கருத்துக்களை உங்களிடம் பெற விரும்புகிறேன்.

இரண்டாவதாக, நமது சங்கம் சார்பாக ஒரு முதியோர் இல்லம் கட்டலாம் என நாங்கள் நினைக்கிறோம் என்று.சொல்லும்போதே பலத்த கைத்தட்டல் எழுந்தது..என்னைக்கேட்டால் முதியோர் இல்லமே இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால் இப்போதுள்ள இளைய சமுதாயம் வீட்டில் உள்ள பெரியவர்கள், அதாவது வயதான பெற்றோர்களை அதிகம் மதிக்காத காலம் இது. ஒரு சராசரி மனிதனாகக்கூட அவர்களை மதிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று நினைத்து இந்த முதியோர் இல்லம் கட்ட வேண்டும் என நினைக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் ஆதரவு கொடுத்தால் ஒழிய இந்த திட்டம் செயல் படாது என தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்ந்தாள்.
என்னம்மா..நீங்க சொல்லி நாங்கள் எப்போதாவது மறுத்து பேசியிருக்கோமா? உங்கள் முடிவே எங்கள் முடிவு.. என்று உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். செல்போன் அடித்தது.

வாம்மா ரம்யா..உன்னைப் பார்க்க ரொம்ப நேரமா காத்துக்கிடிருக்காரு. எனக்கே ரொம்ப பாவமா இருந்துச்சி. அதுதான் நான் போன் பண்ணினேன். போய் பேசும்மா..
அவள் தயங்கினாள்.

பயப்படாதே, போம்மா..என்று அனுப்பிவிட்டு சோபாவில் சாய்ந்தாள்.தங்கம்.

உள்ளே கௌதம் உட்கார்ந்திருந்தான். முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. மிகுந்த சோகத்துடன் உட்கார்ந்திருந்தான்.
இங்கே எதுக்கு வந்தீங்கே? ஏன் இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு செய்றிங்க?.. கோபத்துடன் கேட்டாள்.
ரம்யா..நீ கோபப்படுறதுலே தப்பில்லைதான். நடந்தது என்னன்னு இப்பத்தான் முழுசா தெரிஞ்சுது. உன்னைப் பத்தி நான் தப்பா நினைச்சதுக்கு முதல்லே என்னை மன்னிச்சிடு. ரமேஷ் நீ எழுதினமாதிரி லெட்டரையும், கிரா•பிக்ஸ் போட்டோக்களை காட்டி நம்பவைத்து துரோகம் செய்துட்டான். நான் செய்தது தப்புத்தான். நான் அப்படி உன்கிட்டே நடந்திருக்கக்கூடாதுதான்.என்னை மன்னிச்சிடு..ரம்யா..வா..நம்ம வீட்டுக்கு போலாம்..பழைய வாழ்க்கை வாழலாம்..வா.. உருக்கத்துடன் சொன்னான்.

“மன்னிக்கணும் . .நீங்கள் என்கிட்டே நடந்துக்கிட்ட முறை எனக்கு ஒரு பாடத்தை கத்துக்குடுத்திடுச்சி. என்ன நடந்ததுன்னு சொல்லக்கூட எனக்கு வாய்ப்பு நீங்கள் தரல்லே..நான் இந்த பெண்கள் சமுதாயம் முன்னேற,உழைப்பதற்காக கல்விப்பணி மூலமாக அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.அதுலே இருந்து மாறும் எண்ணம் கொஞ்சம் கூட மாரும் எண்ணம் எனக்கில்லை.தயவு செய்து என் வழியிலே போக விடுங்க..சந்தேகம் என்பது ஒரு மிகப் பெரிய நோய். அதை வீட்டுக்குள்ளே வரவிடக்கூடாது.அப்படி வந்துவிட்டால் குடும்பம் எப்படி பாழாகுங்கறத்துக்கு நானே ஒரு எடுத்துக்காட்டாய் இருந்துட்டுப்போறேன். ஒரு விதத்துலே நீங்க எனக்கு நல்லதுதான் செய்துதான் இருக்கீங்க..நீங்க போலாம்..கோபமாக சொன்னாள்.

ரம்யா..

ஆமாங்க. .அன்றைக்கு நீங்க மட்டும் என்னை வெளியிலே அனுப்பாம இருந்திருந்தால் ஒரு சாதாரண தன்னம்பிக்கை குறைந்த ரம்யாவாத்தான் இருந்திருப்பேன். இப்படி ஒரு சமூகத்துலே ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்க முடியுமா?சமுதாயத்துலே என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை எப்படி புரிந்து கொண்டிருக்க முடியும்? நான் இந்த சமுதாய முன்னேற்றத்துக்காக ஒரு மெழுகுவர்த்தியாக இருக்கப் போறேன்.அதற்கு உதவிய உங்களுக்கு என் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.போயிட்டு வாங்க..எழுந்து கை கூப்பினாள்.

கௌதம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *