மெட்ராஸ் டூ தில்லி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 3,452 
 

வருடம் : 1992 இடம் : மெட்ராஸ் சென்டரல் ரயில் நிலையம், நேரம் : இரவு 10:00மணி

வண்டி எண் ‘2621’ புது தில்லி வரை செல்லும் “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் “ இன்னும் சற்று நேரத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்-என பெண்மணியின் அழகிய குரலுடன் ஒலித்தது. குடும்பத்துடன் முன்னரே வந்து தகவல் பலகையில் பிளாட்பாரம் எண் அறிந்து, தயாராக நின்றிருந்த முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்து விட்டோம். வண்டி புறப்பட இன்னும் 15 நிமிடங்கள் இருப்பதால்

நான் மட்டும் வண்டி புறப்படும் வரை சிறுது நேரம் காற்றோட்டமாக நிற்கலாம் என்றெண்ணி இருக்கையிலிருந்து எழுந்து இரயில் பெட்டியின் அருகில் வெளியே நின்றிருந்தேன்.

பல பயணிகளுக்கிடையே, ஒரு குடும்பமும் அவசரமாக எங்கள் கோச்சில் ஏறியது.

“…… “

பாலா…. வாப்பா வண்டி கிளம்ப போகுது – என என் அம்மாவின் குரல் கட்டளையாக ஒலித்தது.

பதிலுக்கு “நான் “

இருங்க அம்மா, சிக்னல் இன்னும் போடவேயில்லை என்றேன். இரண்டு, அல்லது மூன்று விநாடிகளில் எங்கிருந்தோ விசில் சத்தம் கேட்டது. முன்புறமாக சிக்னல் எரிவதும் தெரிந்தது, பின் நோக்கி பார்த்தேன் பச்சை கொடியை அசைத்து கொண்டிருந்தார் ஒருவர். வண்டியும் மெல்ல, மெல்ல நகர துவங்கியது., . ஜன்னலை பார்த்தபடி ஏறினேன்.

அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி உள்பட அனைவரும் பதட்டமுடன் எட்டி பார்த்தார்கள். என்னை தான் தேடுகிறார்கள் என்பதை ஊர்ஜிதம் கொண்டு குரல் கொடுத்தேன்.

அம்மா…. ஏறிட்டேன். பயப்படாதீங்க, என்றபடி கதவருகே பேசின்பிரிட்ஜ் வரை நின்றுகொண்டே பயணித்தேன்.

இன்னும் என்னடா…? வந்து உட்காரேண்டா என அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது. அதற்குள்..

அப்பாவும்…. அம்மா, எவ்வளவு நேரம் கூப்பிடுறா, நாங்க எல்லாரும் உட்கார்ந்து இருக்கோம் நீ மட்டும் அங்கு என்ன பண்ணுற? வாடா என அழைக்க,

அண்ணன் மட்டும் , “விடுங்க, அவன் என்ன சின்ன குழந்தையா? அதான் ஏறிட்டான்ல. அதோ… நிக்கிறான். வரட்டும், என்ன அவசரம். என்றதால் அமைதியாயினர்.

நான் கதவருகே நிற்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மயிலாப்பூர் வீட்டில் இருந்து சென்டரல் ஸ்டேஷன் வரும் வரையிலும், புகைப்பிடிக்க முடியவில்லை, இரவிலும் முடியாது என்பதால் யாருக்கும் தெரியாமல் லாவகமாக இரண்டு சிகரெட்டை பிடித்து முடித்திருந்தேன். இனி நெடுநேரம் இங்கு நின்றிருந்தால், அப்பா திட்டுவார் என்பதால் சீட்டில் வந்து அமர புகைப்பிடித்த வாடை வந்து விடும் என்ற காரணத்தால் . மவுத் fresh ஆன tit bits இரண்டை வாயில் போட்டு அமர்ந்தேன். நான் அம்மா, அப்பா, வரிசையாகவும், எதிர்சீட்டில் அண்ணன், அண்ணியும், அம்மா வயதுடைய ஒரு பெண்மணியும், அமர்ந்திருக்க .

சைடு சீட்டில் இரண்டு இளம் பெண்களும், அவர்களுக்கு பின்புறமாக இவர்களது தந்தையும் குடும்பத்தினராக அமர்ந்திருப்பது தெரிந்தது.

புறப்படும் முன்பாக வீட்டிலேயே இரவு டின்னரை முடித்துவிட்டதால், சென்னை எல்லை தாண்டும்வரை முழித்திருந்தவர்கள், அனைவரும் படுக்க ஆரம்பித்தனர். TTE வரும் வரை நின்றிருந்து நானும், அவர் வந்து போன பின்னர் upper birth ல் ஏறி படுத்தேன். தூக்கம் வரவில்லை. கையில் கொண்டு வந்திருந்த ஒரு நாவலை எடுத்து படிக்க தொடங்கினேன். என்னைபோலவே …. சைடு upper ல் படுத்திருந்த அந்த இளம் பெண்ணும் ஏதோ படித்து க்கொண்டுவருவது தெரிந்தது.

“…. “

கண்கள் சொருக கடிகாரத்தை பார்த்தேன் மணி 12:15 ஆகியிருக்க, எங்கேயோ சிலரின் பேச்சுக்கள், சிரிப்புகள், குழந்தையின் அழுகுரல் – என ஒலிக்க இரயிலின் தாலாட்டோடு உறங்க ஆரம்பித்தேன்.

“….. “

காபி… காபி… சாய், சாய் – என்ற சத்தம் அழுத்தமாக கேட்ட போது, முழித்து பார்த்தேன் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள். கடிகாரத்தில் மணி 8:00 ஐ காண்பித்தது. இரயிலும் ஏதோ ஒரு இடத்தில் நிற்கிறது. இது எந்த ஊரென்று தெரியவில்லை. ஆனால் இது ஆந்திர பிரதேசத்தின் எல்லை என்பது மட்டும் தெரிந்தது. நானும் birth ல் இருந்து இறங்கி, கதவருகே இருந்த wash sinkல் பல் தேய்த்து விட்டு வந்து இருக்கையில் அமர்ந்தேன்.

காபி விற்பவரை அழைத்து…

குடும்பத்தினரிடம் காபி சாப்பிடலாமா? என்றேன்.

எல்லோரும், வேண்டாம்… , வேண்டாம். நாங்க குடிச்சாச்சு, வேணும்னா நீ மட்டும் குடி என்றாள் அம்மா.

அம்மாவிடம் ‘நான்’

என்னம்மா காபி நல்லாயிருந்துதா?

கருமம்… கருமம், காபியாடா இது? ஏண்டா வாங்கி குடிச்சோம்னு இருக்கு. இவன் எந்த தண்ணியில வெச்சானோன்னு தெரியல, என்றதும்.

‘அப்பா ‘ – என்ன நம்ம ஊருன்னு நினைச்சியா? இங்கு அப்படி தான் இருக்கும். என முடிப்பதற்குள் அண்ணன் குறுக்கிட்டு,

இது…..வீடோ, ஹோட்டலோ, இல்ல, ட்ரெயின் மா, அப்படி தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகனும். வேறு வழியில்ல, இல்லை…. காபி குடிக்காமல் இருக்கணும்.

அண்ணி தொடர்ந்தார்..

எங்களுக்கு எப்படி தெரியும்? குடிச்சு பார்த்தால் தானே தெரியும்!

‘நான்’… இந்த காபிக்கு என்ன குறைச்சல் நல்லா தானே இருக்கு? என்றதும் அண்ணன் குறுக்கிட்டு , “டேய்” இது ரொம்ப ஒவர்டா, நான் ஏதோ அம்மாவுக்காக… சொன்னேன். நீ ஏதோ “ராயர் மெஸ்”காபி ரேஞ்சுக்கு பேசுற எல்லாம் நீ பேசல, அந்த நார்த் இந்தியன் பழக்கம் பேசுது. என்றவரை மறித்து

‘அம்மா’ – அங்கே கண்டதையும் திண்ணு, காபி, டீ ங்கிற பேர்ல, கண்டதையும் குடிச்சி, வாயை கெடுத்து வச்சிருக்கான். அதான் இவனுக்கு எல்லாமே நல்லா இருக்குற மாதிரி தெரியுது. என்றதும், ஏதோ பெரிய ஜோக் சொன்னது போல் நால்வரும் சிரித்தனர்.

அண்ணி பக்கத்திலிருந்த அந்த பெண்மணி நாங்கள் பேசிக்கொள்வதை கவனித்திருப்பார் போலும். எல்லோரும் சிரிப்பதை பார்த்தவர் மெல்ல புன்னகைத்து, அம்மாவிடம் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார்.

என்னங்க….? நார்த் இந்தியால சாப்பிட எதுவும் நல்லாயிருக்காதுன்னு யார் சொன்னது.? இங்கே! ட்ரெயின்ல வேணா நல்லாயில்லாம இருக்கலாம். ஊர்ல நல்லா தான் இருக்கும்.என வட இந்திய உணவுக்கு வக்காலத்து வாங்கி க்கொண்டிருந்தார். அந்த பெண்மணி.

பொழுது போகவேண்டுமே… தொடர்ந்தது பேக்சுக்கள்.

ஏதேதோ பேசியபடி இருந்தனர். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

பெண்மணி எங்களிடம் பேசிக்கொண்டிருப்பதை அவருடைய இரு மகள்களும் சேர்ந்து கவனிக்க, நான் அவர்களை நோக்கினேன். அம்மாவும், அந்த பெண்மணியும், பொது விஷயங்களை விடுத்து, தற்போது குடும்ப விவரங்களை பரிமாறி கொண்டிருந்தனர்.

ஆமா…. நீங்க எங்கே போறீங்க என்றார்?

நான் “ தில்லி “-க்கு செல்வதாக சொன்னேன்.

அப்படியா? சொந்த ஊர் தில்லியாக இருக்காதுன்னு தெரியுது, நீங்க எந்த ஊரு மெட்ராஸ் தானா?

‘அம்மா தொடர்ந்தார்’. ஆமாங்க மெட்ராஸ் தான் முகப்பேர்.-ல இருக்கோம் நானும் எங்க வீட்டுக்காரரும், ஈரோடு பக்கத்தில் இருக்கிற பவானி. மெட்ராஸ் வந்து முப்பது வருஷம் ஆச்சு. பசங்க இரண்டு பேருமே மெட்ராஸ் – ல பிறந்தவங்க தான்.

ஆமா…. நீங்க எந்த ஊரு? – என்றதும்.

நான் காரைக்குடி…. அவர் மதுரை பக்கத்துல இருக்கிற திருப்புவனம். கல்யாணத்து முன்னாடியே எங்க வீட்டுக்காரர் தில்லிக்கு வேலைக்கு வந்திட்டார். மத்திய அரசாங்க வேலை தான். நான் கல்யாணத்து அப்புறமா தில்லி வந்து எனக்கு இதுவே சொந்த ஊராக போச்சு. அங்கேயே… சின்னதாக வீடு ஒன்னு வாங்கிட்டோம். இந்த இரண்டு பொம்பள பசங்க அங்கே தான் பிறந்தாங்க – என்றவரை

எனது ‘ அண்ணி’.. ஆச்சர்யமா இருக்குங்க இத்தனை வருஷமா தில்லியில் இருந்திட்டு தமிழை நல்லா பேசுறீங்க.

அதற்கு அவர் என்னங்க? நம்ம தாய் மொழியை எப்படி மறக்கிறது ? . நாம பிறந்ததிலிருந்தா அங்கே இருக்கோம். இன்னொன்னு…. நாங்க வீட்ல தமிழில் தானே பேசிப்போம்.

“அண்ணி “தொடர்ந்தார். – சென்னையில யார் இருக்கா?

எனது மூத்தார் அவரோட அண்ணன், அயனாவரத்துல இருக்கார். அவர் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் போன வாரம் மண்டபத்துல வெச்சு நடந்தது அதுக்காக வந்தோம். த்தோ.. இப்போ கிளம்பிட்டோம். சின்னவள் ஸ்கூல் லீவு போட்டு தான் வந்திருக்கா, இந்த வருஷம் பத்தாவது. வரமாட்டேன்னு சொன்னாள் பொம்பள பிள்ளையை தனியா எப்படி விட்டு வருவது? வா… மா. போயிட்டு வந்திடலாம்னு அழைச்சிட்டு வந்திட்டோம்.

பெரியவ.. என்ன படிக்கிறா ? – இது ‘அம்மா’

அவள்… படிப்பை முடிச்சிட்டாள். வேலைக்கு போகனும்ங்கிறாள். அவள் அப்பாவும் சரிங்கிறார். நான் தான் விடாப்பிடியாக வேண்டாம் காலம் கெட்டு கிடக்கு நல்ல இடமா வந்தா கட்டிக்கொடுத்திடலாம்னு பார்க்கிறேன். என்றார்

மணி அப்போது காலை 10:30

“பல்ஹர்ஷா” என்னும் ஊர் வந்ததும் ரயில் நின்றது, நான் இறங்கி தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து, யார் கண்ணிலும் படாமல் லாவகமாக ஒரு தம் புகைத்து விட்டு வண்டி ஏறினேன்.

வண்டியும் புறப்பட்டு விட்டது.. சாப்பிடலாமா? என்றேன்

ம்… சாப்பிட லாம் கோரஸாக கூற

இரவு வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த சப்பாத்தியையும், தக்காளி தொக்கையும் அண்ணி பரிமாறிக்கொண்டிருந்தார். சாப்பிட ஆரம்பித்தோம்.

நீங்க…. சாப்பிடலையா? அம்மா அந்த பெண்மணியிடம் கேட்க

இதோ.. என்றபடி. அவர்களும் ஏதோ கொண்டு வந்ததை சாப்பிட்டு க்கொண்டிருந்தார்கள்..

கோச்சில் பலர்…. 8,9 மணிக்குள்ளாகவே சாப்பிட்டு முடித்திருந்தார்கள். சிலர் எங்களைப் போல்.

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும். இடம் மாறி அமர்ந்துகொண்டோம். நானும் எனது அண்ணனும் சைடு சீட்டில் அமர, அந்த இளம் பெண்கள் அவர் அம்மாவின் அருகே போய் உட்கார்ந்து கொண்டனர். பின் சீட்டில் இருந்த இவர்களது அப்பாவும், இக்குழுவில் இணைந்து கொண்டார்.

என் அப்பாவும், அந்த இளம் பெண்களின் அப்பாவும்அறிமுகமாகி ஏதேதோ பேசிகொண்டு வந்தனர்.

தொடர்ந்தது பெண்களின் அரட்டை.

அண்ணன், கோதாவில் கலக்காமல் தான் கொண்டு வந்த புத்தகத்தை படிக்க தொடங்கியிருந்தார்

நானும் நேற்று படித்து பாதியில் விட்ட இடத்திலத்திருந்து நாவலை தொடர்ந்தேன். அவ்வப்போது… இவர்கள் பேசுவதையும் காதில் விழ தான் செய்தது.

ஆமா.. என்ன விஷயமா தில்லி வரீங்க? யாராவது சொந்த காரங்க இருக்காங்களா? வினவினாள் அந்த பெண்மணி

இல்லை… இல்லை என வேகமாக தொடங்கிய எனது அம்மா, என்னை காட்டி சின்ன பையன் படிச்சு முடிச்சிட்டு, ஒரு மருந்து ஏற்றுமதி கம்பெனியில பெரிய பதவில இருக்கான். இவன் தான் ஒரு வருஷமா தில்லியில இருக்கான். இன்னும் கல்யாணம் ஆகலை ., வரன் பார்த்துட்டு தான் இருக்கோம். எதுவும் அமையல…

மடிப்பாக்கத்துல ஒரு வரன் வந்தது, பொண்ணை போட்டோவுல பார்த்தோம், நல்லாயிருக்கு, ஆனால்…. ஜாதகம் சரியில்லை. ,தரகர் நிறைய ஜாதகத்தை யும், போட்டோவையும் கொடுத்திருக்கார் நாங்க பார்க்கிறதோட, பையன் பார்த்தால் தான் சரியா இருக்கும்ன்னு சொல்லி இவனை கூப்பிட்டோம். வந்தால்….. எல்லாத்தையும் பார்க்கலாம், எது ரொம்ப பிடிச்சிருக்கோ அதையே முடிச்சிடலாம்ன்னு கூப்பிட்டோம், இவனுக்கு லீவு கிடைக்காம, இப்போ தான் பத்து நாள் லீவு போட்டு வந்தான். ஆனால் எதுவுமே செட்டாகவில்லை,ஜாதகம் சரியாக இருந்தால் பொண்ணு நல்லாயில்லே, பொண்ணு நல்லாயிருந்தால் ஜாதகம் சரியில்லே என்ன பண்றது? இவனும்…. கொஞ்சம் நாள் போகட்டும் பார்க்கலாம்னு சொல்லிட்டான். நாங்களும் சரின்னு இருக்கோம்.

வந்தவன்….. ஊர் சுற்றி காண்பிக்கிறேன் வாங்க ன்னு கூப்பிட்டான். நாங்க இன்னொரு முறை வருகிறோம் னு சொன்னாலும் கேட்கல, அப்புறம் குளிர் காலம் வந்திடும், உங்களால குளிர் தாங்க முடியாது இப்பவே. கிளம்பி வாங்கன்னு சொல்லி, டிக்கெட்டும் போட்டுவிட்டான்.

என் அண்ணனை காண்பித்து மூத்த பையன், இந்தியன் வங்கியில மேனேஜராக இருக்கான், அண்ணியை அறிமுகப்படுத்தி அவன் பொண்டாட்டி – என்று தொடர்ந்தார். ——–

. லீவு கிடைக்காததனால, அப்பாவையும், அம்மாவையும், தில்லியிலிருந்து தனியாக எப்படி மெட்ராஸுக்கு அனுப்புவது. அண்ணனும், அண்ணியும் கூடவே வந்தால் இவர்களும் ஊர் சுற்றி பார்த்தது போலிருக்கும், அப்படியே….. எங்களுக்கு துணையாக இருக்கும்ன்னு நினைத்து ‘வா….’ அண்ணான்னு கூப்பிட்டான்.

சரின்னு அவனும் லீவு போட்டு கிளம்பிட்டாங்க.

அதுவும் சரிதான் – என அந்த பெண்மணி சொல்ல, இருவரும்

“புன்னகைத்துக்கொள்கிறார்கள்”

இந்த நேரம்…. இரயில்

பகல் 1.30 மணியளவில் “நாக்பூர்”- ஜங்ஷன் வந்தடைந்தது. சிறுது நேரம் இரயில் நிற்கும் என்பதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள கீழிறங்கி ஓரமாக நின்று புகைத்து கொண்டிருந்தேன்.

அண்ணனும் கீழே இறங்கி வாழைப்பழங்கள் வாங்கியிருப்பார் போலும் அதை நான் கவனிக்கவில்லை, பழங்களோடுவண்டியில் ஏறியதை. பார்த்த போது தான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது “நாம தம் அடிப்பதை பார்த்திருப்பாரோ? “-என சந்தேகம். நானும் எதையும் கண்டுக்காதது போல் இருக்கையில் அமர்ந்து விட்டேன்.

சாப்பிடலாமா? – என அண்ணன் கேட்க

சரி…. மணி 1.30 ஆகுது சாப்பிட்டு கொஞ்ச நேரம் சாயலாம் உட்கார்ந்து, உட்கார்ந்து உடம்பு வலிக்குது, என்ற அப்பாவிடம்

அந்த பெண்மணியின் கணவரும், இளம் பெண்களின் தந்தையுமான “ கண்ணன்” நமக்கு வயசாகுதில்ல என்றார்.

தயாராக வீட்டில் இருந்து பார்சலாக கட்டி வந்த புளியோதரை, தயிர் சாதத்தையும், பிரித்து பரிமாறினார் அண்ணி.

அந்த குடும்பம்…. ரயிலில் முன்பதிவு செய்திருந்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட தொடங்கினார்கள்.

இரயிலும் நகர தொடங்கியது…

உண்ட மயக்கத்தை விட, அலுப்பினால் கொஞ்சம் அனைவரும் படுத்தோம்.

“…… “

மாலை : 5:00 ரயிலில் விற்ற டீயை நானும், அப்பா, அண்ணன் மூவரும் வாங்கி குடித்தோம்.. அம்மாவும், அண்ணியும் வேண்டாம் என்றார்கள். நான் கதவருகே சென்று ஒரு தம் அடித்து நின்றிருந்தேன்.

பெண்கள் பேச துவங்கினால் வாய் ஓயும் வரை பேசிக்கொண்டிருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அதை இப்போது தான் கவனித்தேன்.

இளம் பெண்கள் அண்ணியுடனும், அம்மாவும் அந்த பெண்மணியும்.

இதன் நடுவில்….. அப்பா, அண்ணன், மற்றும் அந்த பெண்களின் அப்பா கண்ணன் ஒரு குழுவாக. பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றி அப்பா ஏதோ அந்த கண்ணன் அவர்களிடம் சொல்லியிருப்பார் போலும். என்னிடம் விசாரிக்க தேடினர். நான் இவர்களின் பின்புறமுள்ள கதவருகே நின்றிருப்பதை எட்டி பார்த்து, அண்ணன், கைசாடை செய்து அழைக்க. சைடு சீட்டில் வந்தமர்ந்தேன்.

என்ன தம்பி.. தில்லியில எங்கே தங்கியிருக்கீங்க? – என கேள்வி கேட்ட கண்ணனிடம்.

“தியாக ராஜ் மார்கில்”

ஓ… அப்படியா? அப்ப நாங்க 15,அல்லது 16 கி மீ தள்ளி தான் இருக்கோம் என்றார் என் அப்பாவிடம்.

தொடர்ந்தது இவர்களின் அரட்டை கச்சேரி.

எதிர்புற சீட்டு காலியாகவே இருக்கவே . நான் இரண்டு கால்களையும் சீட்டில் மீது நீட்டி ‘ஹாயாக ‘ஜன்னலில் தலை சாய்த்து வழக்கம் போல கொண்டு வந்த நாவலை எடுத்து மும்முரமாக படித்துக்கொண்டிருந்தேன்.

“எக்ஸ்க்யூஸ் மீ”- என ஒரு குரல்

படிப்பதை நிறுத்தி, யாரென்று பார்த்தேன். ‘அந்த இளம் பெண் ‘ அவள் இடத்தில் நான் உட்கார்ந்திருப்பதால். Oh sorry என சட்டென எழ முற்பட்டேன். அவ்ளோ… No… No. பரவாயில்லை, உட்காருங்க. ச்சும்மா பேசலாம் தான் வந்தேன் என்றாள். எனக்கு பதட்டமாகியது. பதட்டம் என்பதை விட கூச்சம். ஏனெனில் அறிமுகமில்லாத ஒரு பெண் பேசலாம் என்கிறாளே. அலுவலகத்தில் பெண்களிடம் பேசுவது வேறு, இம்மாதிரி பொது வெளியில் பேசுவது வேறு. போதாகுறைக்கு இருவரது குடும்பத்தினரும் இருக்கும் போது. ஒகே! பெண்ணே தைரியமா பேசலாங்கிறாள், நமக்கு என்ன ? சும்மா பேச தானே போறோம். என உள்மனது சொல்லியது. பொதுவாகவே வட இந்திய பெண்கள் கூச்சம் எதுவுமில்லாமல் சகஜமாக பழககூடியவர்கள். என்னும் நினைப்பிலும் பேச ஆரம்பித்தேன்.

“Halo”

Halo… நான் “பாலா “என்றேன், அவள் கை குலுக்கி பதிலுக்கு” ரேவதி “ என்றவள் ‘தொடர்ந்து’

எல்லாருமே பேசிட்டே இருக்காங்க, நீங்க மட்டும் எதுவுமே பேசாம புத்தகம் படிச்சிட்டே இருக்கீங்க. என கேட்டவளிடம்

நீங்களும் தான்.. யாருக்கிட்டேயும் பேசவில்லை, உங்க அப்பா, எங்க அப்பா, அண்ணன் கிட்டேயும், உங்கள் அம்மா, எங்கள் அம்மா, அண்ணிக்கிட்டேயும், பேசிக்கிட்டு இருக்காங்க. உங்கள் தங்கை அவங்க எல்லாம் பேசறதை கவனிச்சிட்டிருக்காள்.. என்றதும்

ஏன். ? உங்க அண்ணிக்கிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு தான் இருந்தேன்.

பேசுனீங்க… ஆனால் அங்கே பாருங்க எல்லோரும் மும்முரமாக பேசிக்கிட்டு தானே இருக்காங்க. நீங்க அந்த meeting ல இப்போ கலந்துக்கலையே – என்றேன்

என்னங்க நீங்க.. பெரியவங்க என்னமோ பேசிக்கிட்டு இருக்காங்க, நான் போய் என்னத்த பேசுறது? அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன். என்றவளிடம்

தாராளமாக பேசலாம்… குரலை உயர்த்தி ‘கிண்டலாக’

No objection over talk என்றேன்.

சிரித்தாள்.. இந்த நேரம் தென்றல் என்னை தழுவி சென்றது போல் இருந்தது

“.. தொடர்ந்தார் “…

என்ன புத்தகம் இது? படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்குமா? என வினவினாள்

இது தமிழ் நாவல் பாலகுமாரன் எழுதியது. டைம் பாஸ் பண்ண இது தான் எனக்கு பொழுதுப்போக்கு. நான் தில்லியில் தனியா தானே இருக்கேன். வேலைக்கு போயிட்டு, சாப்பிட ஏதாவது தயார் செய்து வெச்சதுக்கப்புறம், இந்த புத்தகங்கள் தான் துணை. எனக்கு ஆபிஸ் நண்பர்கள் தவிர, வேறு நண்பர்கள் கிடையாது. புத்தகம் தான் எனது நண்பர்கள், குறிப்பாக தமிழ் புத்தகம் தான். பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜெயமோகன் நாவல்கள், இதில்லாம கல்கி, ஆனந்த விகடன். – என சொல்ல, சொல்ல குறிக்கிட்டவள்.

ஆமா… சாப்பிட ஏதாவது தயார் செய்வேன்னு சொன்னீங்களே? என்ன பண்ணுவீங்க.?

Free இருக்கும் நேரத்தில் சமைப்பேன்.

What? சமைப்பீங்களா. என ஆச்சரியமாக கேட்டாள்.

நல்லா சமைப்பேன், தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில், கற்றுக்கொண்ட பாடம் . இல்லை… இல்லை. இது ஒரு “ கலை”-எனக்கு வாத்தியார்கள் எங்க அம்மாவும், அண்ணியும் தான் என்றேன்.

உங்கள கட்டிக்க போற மனைவி கொடுத்து வைத்தவள். – என்றவளை

உங்களுக்கு சமைக்க தெரியுமா? என்றேன்

என்னது சமையலா? ச்சுத்தம் (!)…. நான் அடுப்பங்கரைக்கூட போனதே இல்லை. எல்லாம் அம்மா தான். நான்…. நல்லா சாப்பிடுவேன். என்றாள்

கல்யாணம் ஆகி போனா என்ன பண்ணுவீங்க என கேட்டு முடிப்பதற்குள்

உங்கள மாதிரி சமையல் தெரிந்த புருஷனா பார்த்து கட்டிக்கிறேன். என்றபோது

பாவம் ங்க உங்க புருஷன் ‘என்றேன் ‘கொல்லென சிரித்தாள்.

தொடர்ந்தன பேச்சும், அதற்குள் அவள் தங்கையும், அக்கா ரேவதியுடன் சேர்ந்து ஒரே சீட்டில் அமர்ந்து கொண்டாள்…

நீங்க…. நிறைய சிகரெட் புடிப்பீங்களோ? – கேட்டவளை

என்னங்க…?

என்னது…. என்னங்க ன்னு ! ரேவதின்னு கூப்பிடுங்க கட்டளையிட்டாள்

ரேவதி…. இதையெல்லாம் இவ்வளவு சத்தமாகவா கேட்கிறது?

Oh sorry.. ஆனால் அவங்க யார் காதிலேயும் விழுந்திருக்காது, விழாது அங்கே பாருங்க என்ன மாதிரி மும்முரமாக பேசுறாங்க. அப்படி என்னத்தை தான் பேசுவாங்களோ? தெரியல என்றவளிடம்.

இருக்கட்டும்…. “நான் “ புகைப்பிடிக்கிறதை எப்படி தெரிஞ்சுக்கிட்டே?

உலக அதிசயமா இது? நீங்க அடிக்கடி எந்திரிச்சி கதவுக்கிட்ட நிற்கும் போதே தெரியாதா? அதுவும் இல்லாம நேற்று நைட் ட்ரெயின்ல நாங்க ஏறும் போது வாசல்ல புடிச்சிட்டு இருந்தீங்க,

என்ன பண்றது காலேஜ் படிக்கும் போது கத்துக்கிட்டேன். இப்போ தில்லி க்கு வந்ததுக்கப்புறம் குளிர் ல நிறைய அடிக்க ஆரம்பிச்சேன். இப்போ அதுவே பழக்கமாயிடுச்சு. என்றேன்

இருந்தாலும்.. அளவுக்கு அதிகமாக குடிக்காதீங்க என இவள் கேட்டு க்கொண்டது மனதை தைத்தது போலானது..

மணி : இரவு 8:30 ஆக

இரயில் “ போபால் “ வந்தடைந்தது.

அனைவரின் பேச்சுக்களும் சுபமாக முடிந்தது போலும், அவரவர் இருக்கைக்கு திரும்பினர்.

என் வீட்டாரிடம் ‘ சாப்பிடலாமா ‘, ஏதாவது வாங்கி வரவா? என கேட்டு கீழிறங்கினேன் ஏனோ புகைப்பிடிக்க தோணவில்லை, (?) பிரட், கொஞ்சம் பிஸ்கட்டுகள் வாங்கி வண்டிக்குள் ஏறினேன்.

நான் வாங்கி வந்த பிரட்டில், அண்ணி வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த கிஸான் ஜாமை தடவி ஆளுக்கு இரண்டாக கொடுக்க, சாப்பிட்டு, பிஸ்கட்டையும், ——– சிம்பிளாக டின்னரை சாப்பிட்டு முடித்தோம்.

அம்மா…. இந்த ஊரு தான் “போபால்”1984 ல இந்த ஊர்ல ஒரு கம்பெனியில விஷவாயு தாக்கி பல்லாயிர கணக்கானவங்க செத்து போனாங்க, என நடந்த கதையை சொல்லி முடிக்க. மணி சத்தம் கேட்டது.

அண்ணன் காலையில் வாங்கி வந்த வாழைப்பழத்தை எடுத்து தர அதையும் ஆளுக்கொன்றாக சாப்பிட இரயில் நகர்ந்தது.

ரேவதி வீட்டினர்.. சப்பாத்தி சாப்பிட்டதாக அறிகிறேன்.

மணி இரவு : 9 ஐ நெருங்க படுக்கையை விரித்தோம். நேற்று போல் upper birth ல் படுத்து புத்தகம் எடுத்தேன். யாரோ லைட்டை நிறுத்தியதால். முடியாமல் தலை மேல் கை வைத்து படுத்ததும். ரேவதியிடம் பேசியது நினைவில் வந்து போயின. எதிர் சைடு அப்பர் பெர்த்தில், shawl கொண்டு போர்த்தி உறங்கி கொண்டிருந்தாள். ‘ அவளும் ‘

“…. “

நேரம் : காலை 6 : 00 மணி. நான் எழுந்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் தில்லி வந்து விடும் என்பதால் இப்போதே குடும்பத்தினரை எழுப்பி, தயார்ப்படுத்த ஆரம்பித்தேன்.ஏனெனில் அப்போது தான் பல்துலக்கிவிட்டு, டாய்லெட்போவதென்றால் சென்று வருவார்கள் , இறங்க சௌகரியமாக இருக்கும் ——–என்பதால்

கொண்டு வந்த லக்கேஜ்களை எடுத்து முன்வைத்து அவரவர் சீட்டில் அமர்ந்திருந்தோம். ———-

ரேவதி குடும்பத்தினரும் தயார் நிலையில் இருந்தனர்

“….. “

‘இந்நேரம்’ யாரும் பேசிக்கொள்ளவில்லை

காலை : 7 15 மணி “ ஹசரத்”-என்னும் நிலையத்தில் இரயில் நின்றது. நான் இம்முறை வழக்கம் போல எழுந்திடாமல் சீட்டில் அமர்ந்திருக்க, இரயிலும் இரண்டு நிமிடத்தில் புறப்பட்டு விட்டது.

ரேவதியின் அப்பா என்னிடம் பேச்சை துவக்கினார்.

தம்பி…. ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க, அம்மா, அப்பா அண்ணன், அண்ணி எல்லோரையும் அழைச்சிட்டு வாங்க, என்றார்

சரி சார்… என்றேன்

அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி நால்வரையும் பார்த்து கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க, வந்து… நம்ம வீட்ல சாப்பிடனும். பெண்கள் மூவரும் உரிமை யோடு அழைத்தனர்

எங்கள் வீட்டினரும் பின்னே…. வராமலா? ‘ கண்டிப்பாக வரோம். என்றதும் கண்ணன் சார் தன் பாக்கெட்டில் இருந்த சின்ன டைரியிலிருந்த பேப்பரை கிழித்து தனது முகவரியை எழுதி என்னிடம் கொடுத்தார். பதிலுக்கு என்னுடைய முகவரியையும் எழுதி கொடுத்தேன்.

“….. “

“புதுதில்லி”- என்னும் கொட்டை எழுத்தில் மஞ்சள் கல் பலகை தெரியவர, அனைவரும் இறங்க பரபரபாகினர்

மணி காலை :7 :40 ஆகியிருந்து

இரண்டு நாட்களில், இரண்டாயிரம் மைல் கடந்த நட்பு இரண்டு நிமிடத்தில் பிரிய இருப்பதால் அம்மாவின் உணர்விலிருந்து புறப்பட்டது கண்களில் நின்றது. தனது புடவை முந்தானையில் துடைத்து கொண்டார்.

இறங்கி… விடைப்பெற்றுக்கொண்டோம்.

நான் குடியிருக்கும் வீட்டுக்கு வந்ததும், இன்றைய நாள் முழுவதும் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். இரண்டாவது நாளில், அண்ணி மற்றும் அம்மா சமையலை சாப்பிட்டு வேலைக்கு போய்க்கொண்டிருந்தேன். சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிராவல்ஸில் புக் செய்து, லக்ஷ்மி நாராயணன் கோயில், தீன் மூர்த்தி பவன், பார்லிமென்ட் ஹவுஸ், ராஷ்ட்ரபதி பவன், இந்திய கேட், குதுப்மினார், ரெட்போர்ட் இப்படி சுற்றி காண்பித்து மகிழ்வித்தேன்.

“….. “

குடும்பத்தினர் வந்து பத்து நாட்களாகிறது, அண்ணணுக்கு லீவு கிடைக்காது, நாளை மறுநாள் மெட்ராஸ் திரும்புவதற்கு இரயிலுக்கு முன் பதிவு செய்தாகிவிட்டது. இப்போதே தில்லியில் சில பொருட்களோடு பேக்கிங் செய்து ரெடியாக தான் இருந்தார்கள்.

அனைவரும்…. தம்பி நாளைக்கு நம்ம கண்ணன் சார் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம், அவ்வளவு தூரம் சொல்லிட்டு போனாங்க, போகலைன்னா நல்லாயிருக்காது, நாளை மறு நாள்… ஊருக்கு வேறு போகனும் என்றார்கள்.

சரி….. போயிட்டு வாங்க என்றேன். (ஏனெனில் அண்ணன், அண்ணி இருவரும் படித்தவர்கள். அண்ணன் வங்கியில் பணிபுரிவதால் கொஞ்சம் இந்தியும் பேசுவார் தனியாக முகவரி கண்டு பிடித்து போய் வருவார் என்ற நம்பிக்கையில் சென்னேன்.

நீ…. வரலைன்னா எப்படி டா தம்பி ? – என்றார் அண்ணன்.

இல்லன்னா என ஆபிஸ்ல தலைக்கு மேலே வேலை இருக்கு. வேணும்னா….. நான் உங்களை அங்கே கொண்டு விட்டுட்டு போகட்டுமா? கேட்டேன்.

சரி… சரி… வேலை இருந்தால், நீ பாரு. நாங்க…. ‘ச்சும்மா’ பார்க்க தானே போறோம், நாங்களே போயிட்டு வந்திடுறோம்.

“மறுநாள்”.

சொன்னது போல் தனியாகவே கண்ணன் சார் வீட்டுக்கு போய்விட்டு மாலையில் வீடு திரும்பியிருந்தார்கள். நான் அலுவலகம் சென்று விட்டு வந்து அங்கு சென்று வந்த விபரத்தை மட்டும் கேட்டறிந்தேன். நாளை மாலை இந்நேரம் புறப்பட்டு இருப்பீர்கள். என சொல்ல அம்மா என்னை நினைத்து கண்கலங்கினார்.

நீங்களும், அப்பாவும் ஒரு மாதம் வேண்டுமானால் இருங்கள், நானே கொண்டு மெட்ராஸில் விட்டு விடுகிறேன் என்றேன்

வேண்டாம் பா…. பாஷை தெரியாத ஊர்ல, நீயும் வேலைக்கு போயிட்டீனா, எங்களால தனியாக இங்கு இருக்க முடியாது. என்றாள் அம்மா அவசரமாக.

உணவருந்தி விட்டு படுத்துறங்கி, ‘காலையில்

இன்று ஒரு நாள் அலுவலகத்து விடுமுறை எடுத்து மகிழ்ச்சியுடன் களித்து, இரவு 9.00 மணியளவில் இவர்களை இரயில் ஏற்றிவிட்டு, வீடு திரும்பினேன்.

.ஒருவாரம் குடும்பத்தினரிடம் சந்தோஷமாக இருந்து , தற்போது யாருமில்லாமல் வீடு வெறிச்சோடிருந்ததால், மனது என்னமோ? போல் இருந்தது.

மூன்று நாட்களுக்கு பிறகு அண்ணனிடமிருந்து கடிதம் வந்ததில் மகிழ்ச்சியுடன் பிரித்து படித்தேன். நலமாக ஊர் வந்த செய்தியை பகிர்ந்திருந்தார். கூடவே சில அறிவுரைகள் புகை பிடிப்பதை தெரிந்துக்கொண்டாராம், உடல் நலத்திற்கு கேடு என்பதால் இனிமேல் குறைத்து பின்பு முழுவதும் நிறுத்திக்கொள்ள உத்தரவு.

நான் பதிலுக்கு…. ஊர் சேர்ந்த விஷயத்துக்காக மகிழ்ச்சி தெரிவித்து, அண்ணனிடம் புகைப்பிடித்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்டும் ——–கடிதம் எழுதினேன். கடிதங்களும் தொடர்ந்தன எப்பவாவது அண்ணன் வங்கியிலிருந்து எனது ஆபிஸூக்கு STD போட்டு போன் பேசுவார்.

“….. “

“சில மாதங்களுக்கு பின்.”-

வீட்டில் இருந்து கடிதம் வந்தது அதில் எனக்கு பெண் பார்த்திருப்பதாக, தகவல் தெரிவிக்க, நான்.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என பதில் அளித்திருந்தேன்.

‘ பதில் கடிதமாக ‘. – அப்பா எழுதியிருந்தார். பிடிவாதம் பிடிக்காமல் திருமணம் செய்து தான் ஆக வேண்டும் . பெண் அழகாக இருக்கிறாள், ஜாதகமும் பொருந்தியுள்ளது. பெண் வீட்டார் அவசரப்படுகிறார்கள், மெட்ராஸிலேயே சின்னதாக மண்டபம் பிடித்து நிச்சயதார்த்தம் வைத்து க்கொள்ளலாம் என்கிறார்கள். நாங்களும் சம்மதம் சொல்லிவிட்டோம். ஒரு பத்து, பதினைந்து நாள் விடுப்பு எடுத்து வரவும். என நீண்டது கடிதம்.

நான் மறுநாள் அண்ணன் வங்கிக்கு STD போட்டு பேசினேன்.

என்ன அண்ணா…. திடுதிப்புனு? நான் தான் சொன்னேன்ல, கொஞ்சம் நாள் போகட்டும். அதுக்குள்ள என்ன அவசரம்?

ஏன்டா… உனக்கும் வயசாகுது, தனியா இருந்து கஷ்டபடுறே, நம்ம பெத்தவங்களுக்கும் வயசாகுது, உனக்கு கல்யாணத்தை பண்ணி பார்க்க ஆசையிருக்காதா?

அது சரிண்ணே!… பொண்ண நான் பார்க்க வேண்டாமா?

ஏன் எங்கள் மேலே நம்பிக்கை இல்லையா?, அப்படியா

உனக்கு அசிங்கமான பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்,

அதுக்கில்லண்ணே…. என நான் இழுக்க

நீ.. கிளம்பி வாடா, எனக்கு வேலை இருக்கிறதென்று போனை டக்கென வைத்து விட்டார்.

“….. “ வேறு வழியில்லாமல்….. டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அலுவலகத்தில் விஷயத்தை சொல்லி, விடுப்பு எடுத்து , அம்மா வீட்டுக்கு வந்திருந்து

வீட்டிலுள்ளோரிடம்…. பெண்ணை பற்றி விபரம் கேட்கையில்., இரண்டு நாள் பொறுத்திரு, பெண்ணை வீட்டில் நேராக போய் பார்ப்போம் என்றார்கள்.

மூன்றாவது நாளில் டாக்ஸி ஐ, பிடித்து குடும்பத்துடன், பெண் பார்க்க அயனாவரம் ——–சென்றோம்.

வீட்டினுள் செல்ல ஒரே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி yes… நீங்க நினைப்பது போல தான். பல மாதங்கள், முன்னர் இரயிலில் சந்தித்த அதே கண்ணன் சாரும், அவரது அண்ணன் குடும்பத்தாரும் எங்களை இன்புற்று வரவேற்றனர்.

நான் நினைத்து கூட பார்க்கவில்லை, அந்த இளம் பெண் “ரேவதி” என் மனைவியாக வருவாள் என்று.. ஆனால்…… அவளுக்கு தெரிந்துள்ளது நான் தான் கணவராக வர போகிறவனென்று. இதை அவளிடம் தற்போது பேசும் போது தெரிந்துக்கொண்டேன்.

கண்ணன் சார்… ஸாரி….. என் மாமனார் தொடர்ந்தார்

என்ன தம்பி? எதிர்பார்க்கல இல்லை. உங்களையும், உங்கள் குடும்பத்தையும், முதல் முறையாக பார்க்கும் போதே, என் மனைவிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, அப்புறமாக உங்க அப்பா, அம்மா அண்ணன், அண்ணி எங்க வீட்டுக்கு வந்து பேசும் போது தான் தெரிஞ்சது நீங்களும்… எங்க சாதிக்காரங்கன்னு, அப்புறம் என்ன? நீங்க தான் மாப்பிள்ளைன்னு முடிவாச்சு, எங்கள் சொந்தம் எல்லாம் பெரும்பாலும் இங்கே தான் இருக்காங்க. வர ஆவணி மாதத்துல, அண்ணன் பொண்ணு கல்யாணம், உங்கள் கல்யாணத்தையும் ஒன்னா… ஒரே முகூர்த்ததில் முடிச்சிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்.

அண்ணன் குறிக்கிட்டு.. கொஞ்சம் suspense ஆக இருக்கட்டும், பெண்ணை பற்றி தெரிவிக்காமல் இங்கு வந்து தெரிஞ்சுக்கட்டும்னு முடிவானது. நாங்க… அவங்க வீட்டுக்குப்போயிருந்தப்பவே, ஜாதகம் வாங்கிட்டு வந்தோம். வந்து பார்த்ததும் சரியாக இருந்தது. நாங்க உன்னோட ஜாதகத்தை அனுப்பி வெச்சோம். சரியாக இருக்குனு சொல்லி முடிவு சொல்லிட்டாங்க.

பொண்ணு, மாப்பிள்ளையும் ஏற்கனவே பார்த்துக்கிட்டதால. Direct ஆ நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்னு நெனச்சோம் formaltyக்கு இந்த பொண்ணு பார்க்கிற விஷயம். இப்போ நடத்திட்டிருக்கு. – என்றபோதே

மனைவியாக வரபோகிறவள்.. “ரேவதி” இரண்டு வாழைக்காய் பஜ்ஜியையும், டம்ளர் காபி கொண்டு வந்து கொடுத்து, சத்தியமா இந்த பஜ்ஜி நான் தாங்க செய்தேன். காபியும் நான் தான் போட்டேன் என்றாள்.

அனைவரும் சத்தமாக “ சிரித்தனர் “

ஐயயோ… நம்பி பஜ்ஜியை சாப்பிட்டு, காபியை குடிக்கலாமா? என்றேன்.

சிரிப்பு சத்தம் இன்னும் அதிகமாகியது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *