கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 14,147 
 

“ரெலிவிஷனில் நேரம் நான்கு மணி எனக் காட்டியது. வாசலில் அப்பாவின் மோட்டார் பைக் ஒலி கேட்டு சுவாரஸ்யமாக, ரீவி பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை சுனந்தா ஆச்சரியத்தோடு எழுந்து நின்றாள்.எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

காலையில் அப்பா வேலைக்குப் போனால் பின்னேரம் வழக்கமான வேலை முடிந்த பிறகு ஓவர்ரைம் செய்து விட்டு நேரே மதுக்கடைக்குப் போய் உயர்ந்த ரகமாய் ஒரு கிளாஸ் அருந்தி விட்டு எட்டு மணீக்குப் பிறகுதான் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நேரத்தில் அவர் என்றுமே வீட்டுக்கு வந்ததாய் எனக்கு நினைவிலில்லை. மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு, வீட்டுப்படியில் அவர் கால் வைக்கும் போது, சுனந்தா ஓடிப் போய் அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஹாய்! அப்பா! இண்டைக்கு நேரத்தோடை வந்திட்டீங்க. கோல் பேஸுக்குப் போவமா?அல்லது புதுப் படம் வந்திருக்கு .பார்க்கப் போவமா?”
“சுதர்ஸனோடைஎத்தனையோ விஷயங்கள் கதைக்க வேணுமெண்டுதான் என்ரை வேலையை நிறுத்துப் போட்டு வந்தனான்.. இன்னொரு நாளைக்கு கோல்பேஸ் சினிமா டிராமா எல்லாத்துக்கும் போவம்” சுனந்தாவிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்தார் அப்பா

“சுதர்ஸன்! உன்னோடை கதைக்க வேணும். இருந்து கொள். டிரஸ் மாத்திட்டு வாறன்”

என் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. அப்பா என்னோடு பேசுவதற்காகத் தன் வழக்கங்களை நிறுத்தி விட்டு நேரத்தோடு வந்திருக்கிறாரே என்று நினைக்கையில், ஏக்கம் படர்ந்திருந்த என் மனதுக்கு இதமாயிருந்தது.
என் பெற்றோருக்கு நான் மூத்த மகன் பெயர் சுதர்ஸன் அண்மையில் தான் என்ஜினியர் ஆகப் பட்டம் பெற்றவன்.
முதல் தரமாய் சித்தியடைந்த எனக்குத் தேடி அலைய வேண்டிய தேவையில்லாமல், வேலையும் வலியக் கிடைத்தது.. முதலாம் திகதியிலிருந்து, நான் வேலையில் சேர்வதாகத்தான் எண்ணியிருந்தேன். ஆனால் அப்பாவின் திட்டம் வேறாக இருந்தது
“சுதர்ஸன்! மனதிலே எத்தனையோ ஆசைகளைத் தேக்கி வைச்சுக் கொண்டுதான் உன்னைப் படிக்க வைச்சனான். நீ வெளிநாட்டுக்குப் போனால் தான் எங்களுடைய அபிலாஷைகள் நிறைவேற முடியும்.. உன்ரை திறமைக்கும் அறிவுக்கும் லண்டன் அமெரிக்கா போலை பெரிய நாடுகளில் வேலை செய்தால் தான் பெருமை” அப்பா முடிவாய்ச் சொல்லி விட்டார். தம்பி நிரோஷன் சுனந்தா இவர்களெல்லோருமே நான் வெளிநாட்டுக்குப் போக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசைகள் எனக்கு ஏற்கனவே தெரிந்தவை தான்.

அம்மாவின் ஆசை, இந்தக் கொழும்பு மாநகரில், சொந்தமாய் ஒரு வீடு வாங்கிக் குடியிருக்க வேண்டுமென்பதுதான் அது நியாயமான ஒரு விருப்பமாகவே எனக்குப்பட்டது. வாடகை வீட்டில் குடியிருப்பதில் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியும் .அப்பா இங்கு ஒரு கொம்பனியில் வேலை பார்ப்பதில் , எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கொழும்பு வாசம் தான்.. ஆண்டுக்கு ஒரு தடவை ஊருக்குப் போய் வருவோம். ஐந்தாறு வருடங்களாய் அதுவுமில்லை. இது வரை எத்தனை வீடுகள் மாறினோம் என்றே கணக்குத் தெரியாது. சில சந்தர்ப்பங்களில் வீடு வசதிக் குறைவாக இருக்கிறதேயென்று., நாங்களே மாறியிருக்கிறோம்.. சில வேளைகளில் வீட்டுச் சொந்தக்காரரே, வீட்டைக் காலி பண்ணும்படி, வற்புறுத்தி எங்களை எழுப்பியிருக்கிறார். வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க அப்பாவுக்கு நேரம் கிடையாது. ஒவ்வொரு தடவையும் வீட்டுச் சாமான்கள்களை ஏற்றி இறக்குவதில், அம்மாதான் சிரமப்பட்டிருக்கிறாள். அதனால் தான் எங்களுக்கென்று ஒரு வீடு வாங்கி அதில் குடியிருக்க வேண்டுமென்ற ஆசை அம்மாவின் மனதில் முளை விட்டது. அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதில், எனக்குச் சம்மதம்தான். தங்கை சுனந்தா தனக்கென்று ஆசை எதுவும் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்வதில்லை, ஆயினும் அவளைப் பொறுத்தவரை பெரிய பொறுப்பு எனக்கிருக்கிறது அவளது கல்யாணத்துக்குத் தேவையான எல்லாம் நான்தான் தேடிக் கொடுக்க வேண்டும்.

தம்பி நிரோஜனுக்கும் என்னால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆசை ஒன்றுண்டு அவன் விரும்பிக் கேட்கும் உடைகள்,, பாடசாலைக்கு விளையாட்டுக்கு வேண்டிய உபகரணங்கள், அத்தனையும் அப்பா குறைவில்லாமல் வாங்கிக் கொடுக்கிறார்.. அவற்றையெல்லம் விட அவனுடைய ஆசை கலர் ரெலிவிஷனில் பார்க்க வேண்டுமென்பது. எங்கள் வீட்டில் இருப்பது பிளாக் அண்ட வைற் ரீவிதான். நிரோஷன் கலர் ரீவி வாங்கும்படி அடிக்கடி அப்பாவை நச்சரிப்பான். அப்போதெல்லாம் அப்பா சொல்வார்” சுதர்ஷன் சம்பாதிக்க ஆரம்பிக்கட்டும் கலர் ரீவி வாங்கலாம்/ ஆகவே தம்பிக்குக் கலர் ரீவி வாங்கவேண்டுமென்பதும் என் கடமைப் பட்டியலில் இடம் பெற்ற ஒன்றாகிவிட்டது.

இவர்களது ஆசைகளை விட அப்பாவும் தனக்கொரு ஆசை இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்வார்.. புத்தம் புதிதாய் ஒரு கலர் கார் வாங்கி, அதில் வேலைக்குப் போய் வர வேண்டுமாம். ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மாவையும் முன் சீற்றில் இருக்க வைத்து கொழும்பு நகர வீதியெல்லாம் சுற்றி வர வேண்டுமாம்.. எங்களை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்குவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிற அப்பாவின் ஆசையைப் பூர்த்தி செய்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அப்பா ஓய்வில்லாமல் தான் உழைக்கிறார். சம்பளத்தோடு ஓவர்ரைம் போனஸ் என்று எத்தனையோ வரும்படிகள். ஆயிமும் வீட்டு வாடகை மின்கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் சிலவேளை கடனும் வாங்கியிருக்கிறார்.. கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கிய கடன் சேர்ந்து ஒரு தொகையாய் நிற்கிறது. இந்தக் கடனையும் தீர்த்து இவர்களது ஆசைகளையும் விரைவாகவே பூர்த்தி செய்ய வேண்டுமென்று எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது.. அப்பா சொல்வது போல் இங்கு சம்பாதிக்கிற ரூபாய்களால் அந்தப் பெரிய காரியங்களைச் சாதிப்பது சிரமம் தான்.. நான் வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்து பவுண்ஸ் அல்லது டொலராய் சம்பாதித்தால்தான் இவற்றைச் சீக்கிரமாய்ச் செய்யமுடியும் என்பது எனக்குப் புரிந்தது.

அப்பாவின் விருப்பம் போல் ,வெளிநாட்டுக்குப் போவதற்கு நான் சம்மதித்தேன்.. தன்னோடு வேலை செய்யும் நண்பர்களின் உதவியுடன், எல்லா ஒழுங்குகளும் செய்து முடித்தார் அப்பா.. என் நண்பன் ஒருவன், ஆறு மாதங்களுக்கு முன்பே, வெளிநாட்டுக்குப் போகிறேன் என்று ஆரம்பித்தவன் இன்னும் போகவில்லை அப்பாவோ ஒரு சில நாட்களிலேயே பயணத்தை ஒழுங்கு செய்து விட்டார்.. இரண்டு நாட்களில் நான் வெளிநாட்டுக்குப் பயணமாக வேண்டும்.. வீட்டில் எல்லோரிடத்திலும் ஒரு குதூகலம் தெரிந்தது.. தங்கள் ஆசைகள் நிறைவேறப் போகின்றனவே என்ற சந்தோஷத்தில் பரபரத்தார்கள்.. அவர்களைப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்த வீடு புதுக்கார் கலர்ரீவி தங்கையின் கல்யாணம் என்று ஒவ்வொன்றாய் என் கற்பனையில் தோன்றிக் களிப்பூட்டின. அதேநேரம் இவர்களைப் பிரியப் போகிறேனே, என்ற ஏக்கமும் என் இதயதைக் கெளவிக் கொண்டிருந்தது.. இந்தக் கவலை உணர்ச்சியில் நான் படப்டத்துக் கொண்டிருந்த போது,, அப்பா “ “சுதர்ஸனோடை கதைக்கிறதுக்காக நான் நேரத்தோடு வந்திருக்கிறன்” என்றது என் மனதை வருடிக் கொடுப்பது போலிருந்தது.

அப்பா உத்தியோக உடையிலிருந்து சாரம் சேட்டிற்கு மாறியவராய் என்னருகே வந்தார்./ கையில் ஒரு பைல் இருந்தது. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு என்னோடு நெருக்கமாய் உட்கார்ந்தார்… அம்மா எங்களுக்குத் தேனீர் கொண்டு வந்து தந்து விட்டு பக்கத்தில் அமர்ந்தார்
“நிரோஜ்! ரீவியை ஓவ் பண்ணு இந்தச் சத்தத்திலை நான் கதைக்கிறது விளங்காது” தம்பி அப்பாவின் வார்த்தைக்குக் கீழ்படிந்தான்.

“லேற்றாய் வந்தால் நீ படுக்கப்போயிடுவாயென்று வேளைக்கே வந்தனான்.உன்ரை பிரண்ட்ஸ் எல்லோருக்கும் பயணம் சொல்லிப் போட்டியா?”

“இல்லையப்பா நாளைக்குத் தான் பிரண்ட்ஸை மீற் பண்ணலாமென்றிருக்கிறன்” என்றேன்.

“வெளிநாட்டிலை போய் தன்னந்தனியனாய் திக்குத் திசை தெரியாமல் நிக்கப் போறேனேயென்று பயப்பிடாதை சுதர்ஸன். என்னோடை வேலை செய்யிற தேவராஜன்ரை மருமகன் நீ போய் இறங்கின உடனே உன்னை றிசீவ் பண்ணி வேண்டியதெல்லாம் செய்வார்.” அப்பா சொன்னதைக் கேட்டு எனக்கு நிம்மதியாக இருந்தது /உடனே வெளிநாட்டுக்குப் புறப்படலாம் போல , ஒரு துணிவும் ஆவலும் ஏற்பட்டது.”. “அப்ப சுதர்ஸனுக்குச் சாப்பாட்டுப் பிரச்சனையும் இருக்காது” அம்மாவும் சந்தோஷப்பட்டாள் அப்பா பைலை விரித்தபடி என்னிடம் சொன்னார்”

“இண்டைக்கு நீ ஒரு பெரிய என்ஜினியர் ஆயிட்டாய் . உன்னை என்ஜினியர் ஆக்கிறதுக்காக நான் எவ்வளவு பணம் சிலவழிச்சிருக்கிறன் என்று உனக்குத் தெரியாது. .என்ன. உன் படிப்புக்குச் சிலவழித்த பணத்துக்கெல்லாம் கணக்கெழுதி வைச்சிருக்கிறன் பார்” நாலைந்து பேப்பர்களை என்னிடம் நீட்டினார் அப்பா. அவர் ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று கொள்கையுடையவர்.. எல்லாச் செலவுகளுக்கும் கணக்கெழுதி வைப்பவர் தான். ஆயினும் தான் பெற்ற பிள்ளையின் படிப்புக்குச் செலவழித்ததைக் கணக்கெழுதி வைத்ததோடு , அதை நான் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியது எனக்குக் கசப்பாக இருந்தது.

“சரி சரி நீ இப்ப பார்க்க வேண்டாம். உன்ரை பெட்டியிலை வைச்சு விடுறன்.. பிறகு ஆறுதலாய்ப் பாரன்” என் மனதைப் புரிந்து கொண்டவர் போல் அப் பைலை மூடி வைத்தார்.. பேச்சை வேறு பக்கம் திருப்பினாள் அம்மா.. நாட்டுப் புதினங்கள், தெரிந்த மனிதர்களைப் பற்றிய விஷயங்கள் என்று பலதும் பத்தும் பேசியதில் அந்தக் கணக்கு விஷயத்தை மறந்து விட்டேன்.. அப்பாவும் பிறகு அந்தப் பேச்சே எடுக்கவில்லை. நண்பர்கள் தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போய் பயணம் சொல்லிக் கொண்டதில் அடுத்த இரண்டு நாட்களும் பறந்து விட்டன. பயண நாளன்று முக்கியமான ஒருவரைச் சந்திக்கத் தீர்மானித்திருந்தேன்.

எங்கள் புரொபெஸர் சற்குணம் . அவரிடம் தான் அன்றைக்கு இங்கு வேலை கிடைத்த உடனும் முதலில் சொன்னேன்,. பாராட்டி வாழ்த்தினார். .பயணமாகும் போதும் அவரிடம் ஆசீர்வாதம் பெற விரும்பினேன்.. இரவு பத்து மணிக்குத் தான் பிளைற். நிரோஜனும் சுனந்தாவும் என்னை வழியனுப்புவதற்காகப் பாடசாலைக்கே போகாமல் நின்றார்கள். அப்பா மத்தியானத்தோடு லீவு போட்டு விட்டு வருவதாகச் சொல்லி வேலைக்குப் புறப்பட்டார். அவர் வந்ததும் லஞ்ச் முடித்துக் கொண்டு எல்லோருமாக விமான நிலையத்திற்குப் போவதாக ஏற்பாடு.
அதற்குள் புரொபெஸரைச்சந்தித்து விட்டு வரலாமென்று புறப்பட்டேன். அனுமதி பெற்றுக் கொண்டு அவரிடம் போன போது தனியாகத் தான் இருந்தார்.

“வாரும் சுதர்ஸன் வேலை எப்பிடி” என்று வரவேற்றார்.

“நான் இங்கை வேலைக்குப் போகேலை வெளிநாட்டுக்குப் போகப் போறன்”
“மேற்படிப்புக்கு ஸ்கொலஷிப் ஏதும் கிடைச்சிருக்கா?”முகம் மலர்ந்து சிரித்தபடி கேட்டார்.

“இல்லை சேர். எனக்குக் கொஞ்சம் பொறுப்புகளிருக்கு.. வெளிநாட்டிலை போய் வேலை செய்யச் சொல்லி அப்பா தான் அரேஞ் பண்ணியிருக்கிறார்,”

“சரி நீர் போகலாம்” அவர் எழுந்து நின்றார்… குரலில் வெறுப்புத் தொனித்தது.. எனக்குப் பெரிய துக்கமாய் இருந்தது. நான் போகாமல் தயங்கி நின்றேன்.

“சேர் நீங்க கூட வெளிநாடுகளுக்கெல்லாம் போய் வந்திருக்கிறீங்கள்.. எனக்கு ஏதாவது அட்வைஸ் பண்ணுவீங்களென்றுதான் வந்தன்”

“நான் வெளிநாடுகளுக்குப் போனது என்ரை அறிவை வளர்த்துக் கொண்டு வாறதுக்காக . என் அறிவும் திறமையும் இங்கை தான் பயன்படுகுது. ஆனால் நீ உன் திறமையை இன்னொரு நாட்டுக்கு அடகு வைக்கப் போறாய். ஒரு திறமையான மூளை இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறதென்றால் அது எனக்குக் கவலையான் விஷயம் தான்.”
புரொபஸரின் முகத்தில் உண்மையான கவலை தெரிந்தது.. நான் கூச்சத்தோடு சொன்னேன்
“இந்தளவுக்கு நான் சிந்திக்காமல் விட்டிட்டன். இந்த நிலையிலை நீங்கள் எனக்குத் தரக்கூடிய அட்வைஸ் என்ன சேர்?”
“ எல்லாம் அரேஞ் பண்னிப் போட்டு வந்து அட்வைஸ் கேட்கிறாய் ரூலேற். பரவாயில்லை நான் யூனிவேசிற்றியிலை லெக்சர் பண்ணினால்,நீ கவனமாய் நோட்ஸ் எடுப்பாய். இப்பவும் நான் உனக்கு ஒரு விஷயம் லெக்சர் பண்னப் போறன். எடுக்கிறது விடுகிறதும் உன் விருப்பம்.. என்ஜினியர் முதலானோர் தம் படிப்பு முடிந்ததும், வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்கின்றனர். இது மூளை வெளியேற்றம் எனப்படும்.. இவர்களது கல்வியிம் பொருட்டு ஒரு நாடு குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்திருக்கையில் அந்த முதலீட்டின் பயனை இன்னொரு நாடு பெறுகிறது.”

சொல்லி முடித்து விட்டு என் முகத்ததைப் பார்த்தார்.. என் அகத்தில் விஷயம் பதிவாகி விட்டதைக் கண்டு கொண்டாரோ, என்னவோ அவர் முகத்தில் கோபம் விலகி அமைதி தெரிந்தது.

“ ஓகே சுதர்ஸன் எனக்கு வேலையிருக்கு. போய் வாரும் பெஸ் ற் ஒவ் லக்” விடை பகர்ந்தார் புரொபெஸர்
அவர் சொன்ன மூளை வெளியேற்ற விஷயம் `என் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது.. இந்த நாடு என் கல்விக்காக என்ன செய்ததென்று சிந்தித்தேன். இலவசக் கல்வி, இலவச பாடப் புத்தகம் இப்படி எத்தனையோ நினைவுக்கு வந்தன… தான் பெற்ற பிள்ளையாயிருந்தும் என் கல்விக்காகச் செலவழித்த பணத்திற்கு அப்பா கணக்கெழுதிக் காட்டுகிறார்.. ஆனால் இந்த நாடு எனக்குக் கணக்குக் காட்டவில்லை. நான் பணிபுரிய வேறு நாட்டுக்குப் போகப் போகிறேன் என்றவுடன் அதற்கும் தடை விதிக்கவில்லை. இந்த நாடு. உண்மையில் என்னை என்ஜினியர் ஆக்கியதில் இந்த நாட்டிற்குத் தான் அப்பாவிலும் பார்க்கக் கூடிய பங்கிருப்பதாக நான் நினைத்தேன்.. .முதலில் என் பணியும் சேவையும் இந்நாட்டிற்குதான் கிடைக்க வேண்டியது நியாயம் என என் மனச்சாட்சி உறுதிப்படுத்தியது.

வெய்யிலில் வியர்த்துக் களைத்து நான் வீட்டுக்கு வந்த போது , நேரம் பன்னிரண்டு மணியைத் தாண்டி விட்டது.

அப்பா அம்மா நிரோஜன் சுனந்தா எல்லோரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“இண்டைக்கு வீட்டிலிருந்து றெஸ்ற் எடுத்திருக்கலாம் .நல்லாய் வேர்த்துக் களைச்சு வாறாய்” அப்பா சொன்னபடி என்னை நோக்கி வந்தார்” “ரைம் ஆயிட்டுது சுதக்கண்ணா சாப்பிட்டிட்டால் புறப்படலாம். உனக்காகத் தான் வெயிற் பண்ணிக் கொண்டிருக்கிறம்”

அப்பாவிடம் இப்படியொரு கெஞ்சலை நான் கண்டதில்லை. .என் தோளை அணைத்தவாறு, டைனிங் ரேபிள் அருகே கூட்டிக் கொண்டு வந்தார்.

“இண்டைக்குச் சுதர்ஸனுக்குப் பிடிச்சதெல்லாம் சமைச்சிருக்கிறன்” அம்மா பரிமாற ஆரம்பித்தாள் ”நான் போகேலைஅம்மா” என்றேன் திடீரென்று

“ ஆ……..!~ யாருடைய குரலென்று தெரியவில்லை . எல்லோருமாய்ச் சேர்ந்து சொல்லியிருக்க வேண்டும். அப்பா முதலில் அதிர்ந்தாலும் பின் சமாளித்துக் கொண்டார்.
“சுதர்ஸன் எனக்கு விஷயம் விளங்குது எங்களைப் பிரிஞ்சு போறது உனக்குப் பெரிய கஷ்டமாயிருக்குது என்ன. எனக்கும் உன்னைப் பிரியிறது சரியான வேதனை தான். நாலு நாளிலை எல்லாம் சரியாய்ப் போயிடும் எயர்போட்டிலை எத்தனை பேர் அழுதழுது தங்கடை ஆக்களை வழியனுப்புவினம்.” அப்பா சொல்வது உண்மைதான் என்பதை அவரது தழுதழுத்த குரல் காட்டியது, அம்மா தம்பி தங்கை எல்லோருக்கும் இந்தப்பிரிவுத் துயர் இருக்கத் தான் வேண்டும் .தம் ஆசைகள் நிறைவேறப் போகிறதே என்ற சந்தோஷத்தில் அதை அடக்கி வைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. என் மனதில் இந்தப் பிரிவுணர்ச்சி இப்போது இல்லை.

புரொபெஸர் சொன்ன மூளை வெளியேற்றம் பற்றிய விஷயம் தான் என் மனதில் நிறைந்திருந்தது. அப்பா அம்மா தம்பி தங்கை எல்லோருக்கும் புரியும்படியாக அந்த விஷயத்தை விளக்கினேன்.

“ அடேயப்பா இதுக்கா இப்படி யோசிக்கிறாய். இப்ப நீ போய் உழைச்சு எங்களுக்குப் பணம் அனுப்பிறதாலை, இந்த நாட்டுக்கு நன்மை இல்லையா. அந்நியச் செலாவணி என்று ஒரு லாபம் கிடைக்கும் தானே
இங்குள்ளவர்கள் வெளிநாட்டுக்குப் போய் உழைக்கிறதாலை இந்த நாட்டுக்குப் பெருந்தொகையாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.. இந்த அந்நியச் செலாவணியை அதிகம் படிக்காத ஒரு சாதாரண தொழிலாளியாலும் ஈட்டிக் கொடுக்க முடியும். நானும் படிக்காதவனாய் சாதாரண உழைப்பாளியாயிருந்தால் அப்பா சொன்ன சமாதானத்தை நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்..ஆனால் நான் என்ஜினியர். என்னால் கிடைக்கப் போகிற அந்நியச் செலாவணியிலும் பார்க்க என் மூளையும் அதனால் கிடைக்கக் கூடிய பணியாற்றலும் தான் கூடிய நன்மை தரும் என்பது உண்மை. நான் ஒரே முடிவாய் அழுத்தமாய்ச் சொன்னேன்.

“ நான் இங்கை தான் வேலை செய்யப் போறன் இங்கையும் ஒரு கணிசமான ஊதியம் கிடைக்கும் தானே. சுனந்தாவின் கல்யாணம் என்ரை பொறுப்பு உங்கள் எல்லோரினது ஆசைகளையும் படிப்படியாய் நான் நிறைவேற்றுவேன்”

யாருடைய பதிலையும் எதிர்பாராமல் நான் சாப்பிட ஆரம்பித்தேன் என் மனதில் புதுமையாய் ஒரு சந்தோஷம் நிறைந்தது.

– வீரகேசரி (28.02.1993)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *