மூச்சுத் திணறல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,316 
 

(இதற்கு முந்தைய ‘புது மாப்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

கல்லிடைக்குறிச்சியில், ராஜலக்ஷ்மி அவளுடைய பக்கத்துவீடு எஸ்தர் டீச்சர் வீட்டில் எதோவொரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள்.

மகளுக்கு இரட்டை ஜடை பின்னி ரிப்பன்களால் தூக்கிக் கட்டிய எஸ்தர், “அகிலா அக்கா வீட்ல போய் வெளையாடிட்டு வா… எனக்கு தலைக்குமேல வேலை இருக்கு. மீனு கழுவி அறுக்கணும்” என்று மகளை விரட்டினாள்.

“என்ன மீனுக்கா?”

“சாளை வாங்கலாம்னு பார்த்தேன். ஆனா நெத்திலிதான் கெடைச்சுது. சரின்னு வாங்கிட்டேன். ஆஞ்சு கழுவினா எம்புட்டு மிஞ்சுமோ? ஆமா ஒன் கல்யாண சேதி சொல்லிட்டாங்களா?”

“ஆமாக்கா. சொல்லிட்டாங்க. தேர்தல் அன்னிக்கி நெல்லையப்பர் கோயில்ல கல்யாணம்”

“அவுங்க அய்யரு மாதிரி சுத்த சைவமாமே? நெசமா?”

“ஆமாக்கா… ஒங்களுக்கு காது வலி சரியா போச்சாக்கா?”

“அது எங்கே போகும்… சவம் என்னைக் கெடத்திட்டுத்தான் போகும்! ராத்திரி பூரா தூங்க முடியல. விண் விண்ன்னு ஒரே வலி. அந்த மனுசன் என்னடான்னா நிம்மதியா தூங்கறாரு. என்னவோ போ, பொட்டச்சிங்களுக்கு கல்யாணம் கட்டிக்காமலும் இருக்க முடியல. என்னதான் பண்ணிப்போடு, ஆம்பளைங்களுக்கு நன்றியே கிடையாது. சேக்காளி வீட்டுச் சோறு கிடைக்காதான்னுதான் புத்தி அலையும். பெறவி அப்படி.”

ராஜலக்ஷ்மி வெறுமே புன்னகை செய்தாள்.

“நீ என்னடான்னா ரொம்ப தைரியமா ஒன்னைவிட முப்பது வயசுப் பெரியவரை கட்டிக்கிறேன்னு ஒத்துக்கிட்டே. என்னால நம்பவே முடியலை. எனக்குத் தெரிஞ்சு ஒனக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது.”

ராஜலக்ஷ்மி வேதனையான ஒரு மெளனம் காத்தாள்.

பணம் இல்லாமல் வாழ்க்கையில் பட்டிருக்கும் ரணமான அவஸ்தைகள் அவளுக்கு நன்கு புரிந்திருந்தன. விருப்பப்பட்ட எதைப் பெறவும் பணம் அவளுக்குப் பிரச்னையாக இருந்தது. நல்ல நல்ல கதைப் புஸ்தகங்கள் ஒன்று விடாமல் வாங்கிப் படிக்க அவளுக்கு அப்படியொரு ஆர்வம் உண்டு. ஒருவேளை மட்டும் சமைத்து உண்ணுகிற அவள் குடும்பத்தில், புஸ்தகம் வாங்கிப் படிப்பது என்பது குதிரைக்கொம்பு. பக்கத்து வீடுகளில் கிடைக்கின்ற புத்தகங்களை அவ்வப்போது ஓசியில் வாங்கிப் படிப்பாள். தீராத வாசிக்கும் ஆர்வத்தை சிறிது மட்டும் தணித்துக் கொள்வாள்.

அதேபோல அழகழகான உடைகள் வாங்கி அணிய ஆசை. ஆனால் விலை குறைந்த முரட்டுக் கைத்தறி சேலைகளுக்கு மேல் அவளால் எதையும் வாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அழகான செருப்புகள்; கைப்பை; ரிஸ்ட் வாட்ச்; நெயில் பாலீஷ் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள முடியவில்லை.

மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி, அவளுக்கு இது வெறும் விலை குறைந்த, விலை ஜாஸ்தியான என்கிற பண ரீதியான விஷயம் மட்டும் இல்லை. மென்மையும், நளினமும் கலந்த வேலைப்பாட்டு துணிகள்; நளினமே இல்லாத கச்சாவாக நெய்யப்பட்ட துணிகள் என்ற ரசனைப் பார்வையில்தான் ராஜலக்ஷ்மியின் ஆடை ஆர்வங்கள் அமைந்திருந்தன.

இதற்கும் மேல் அவளுக்கு சங்கீத ஆர்வம் இருந்தது. முறைப்படி பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் ஊறிப்போய் கிடந்தது. தவிர, நாட்டியத்தின் மேலும் ஆசை. இவை எல்லாவற்றுக்குமே பணம் தேவைப்பட்டது. பணம், பணம்தான் பிரதானம் என்கிற உண்மை அவளுக்குள் புரிபட்டது.

ஆனால் ராஜலக்ஷ்மியின் இந்த ஆசைகளுக்கும், ரசனைகளுக்கும் அவள் மிக அழகாக இருப்பதுதான் காரணம் என்று அவளின் அம்மாவும்; அண்ணன் பெரியசாமியும் நினைத்தார்கள். மற்றவர்களைவிட, தான் உயர்ந்தவள் என்று காட்டிக்கொள்ளும் ஆசையும் இதற்குக்காரணம் என்று அவர்கள் நினைத்தார்கள். யாரோடும் அதிகம் பேசாமல் இருப்பதும்; சப்தமாக சிரிக்காமல் இருப்பதும் கூட ராஜலக்ஷ்மியின் அழகால் வந்த மெளனமான செருக்குத்தான் என்றும் அவர்கள் அபிப்பிராயம் வைத்திருந்தார்கள்.

அவளுடைய தங்கச்சிகள் அங்கே இங்கே என்று வெளியில் போய்வரலாம். ஆனால் ராஜலக்ஷ்மி எங்கேயும் போக முடியாது. அவளுக்கு அதற்கு அனுமதி கிடையாது. பக்கத்தில் இருக்கும் ஐந்தாறு வீடுகளுக்கு மட்டும் அவள் போய் வரலாம் – அதுவும் அந்த வீடுகளில் ஆம்பளைகள் இல்லாதபோது மட்டும்.

அடிக்கடி வெளியில் போக அனுமதித்தால் ராஜலக்ஷ்மியின் அழகு அவளை தவறான பாதைகளுக்கு இட்டுச் சென்றுவிடும் என்று அவளுடைய அண்ணன் பெரியசாமி பயந்தான். ராஜலக்ஷ்மிக்கோ ரயிலில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு ஊர் ஊராகப் போக ஆசை… இப்படி எல்லாமே அவளுக்கு நிறைவேறாத ஆசைகள்தான்…

பிறந்த வீட்டில் அவள் ஒரு கைதியைப் போலத்தான் இருந்தாள். எந்தக் கைதிக்குமே எதிர்பார்ப்பு விடுதலைதான். இந்தச் சிறையின் கதவுகளைத் திறக்க ராஜலக்ஷ்மிக்கு கல்யாணம் என்ற சாவி தேவைப்பட்டது. அந்தச் சாவி கிடைப்பதற்கும் பணம் தேவைப்பட்டபோது, அவளுடைய உணர்வுகளில் பணத்திற்கான தாகமும் தாபமும் கனல்போல மூண்டு போயிருந்தன. ஆனால் அவளுடைய இந்தப் பண தாகத்திற்கும் அவளின் பேரழகுதான் காரணம் என்று பெரியசாமி முடிவு செய்ததைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

விரும்பும் சிலவற்றைப் பெற பணம் வேண்டும் என்று நினைப்பது வேறு; பெரும் பணக்காரியாக வேண்டும் என்று பேராசைப்படுவது வேறு என்று வாய் கிழியப் பேசி பெரியசாமிக்கு புரிய வைப்பதற்கு ஒரு திறமையான வாய் வேண்டும். ஆனால் நம்மிடையே பெரும்பாலான கன்னிப் பெண்கள் தேவையான நேரத்தில் வாயைத் திறக்காது மெளனம் காக்கிறார்கள். ராஜலக்ஷ்மியிடமும் அந்த திறமையான வாய் இல்லை. அப்படி வாயே திறக்காமல் இருந்ததற்கும் அம்மாவிடமும் அண்ணனிடமும் இருந்து அவளுக்குக் கிடைத்த பெயர் – ரொம்ப அழுத்தக்காரி.

‘பெரும்பாலான கன்னிப் பெண்கள் பிறந்த வீட்டில் கிடந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அவசரப்பட்டு எவனாக இருந்தாலும் சரி கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு பிறந்த வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கலாம் என்கிற மன வேகத்தில் காத்திருக்கிறார்கள்’ என்பது எஸ்தர் டீச்சரின் ஆதங்கம். ஆனால் போய்ச் சேர்ந்த இடத்திலும் அவர்களுக்கு வேறு மாதிரியான மூச்சுத் திணறல்கள் என்பது வேறு மாதிரியான சோகம்.

எஸ்தர் டீச்சரின் ஆதங்கங்களையும், பொருமல்களையும் ராஜலக்ஷ்மி பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்பாள். உள்ளொன்று வைத்து வெளியே வேறுவிதமாகப் பேசாத எஸ்தர் டீச்சரின் நேர்க்குணம்தான் ராஜலக்ஷ்மியை அவளிடம் மிகவும் நெருக்கமாகி விட்டிருந்தது…

ஆனால் அவளின் இந்த நெருக்கம்கூட பெரியசாமிக்கு எரிச்சலான விஷயம். ராஜலக்ஷ்மி சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் பிடிக்காது அவனுக்கு. “ஒனக்கும் டீச்சருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ!” என்று எத்தனையோ சர்ந்தர்ப்பங்களில் ராஜலக்ஷ்மியைப் பார்த்து அவன் கேட்டிருக்கிறான். இப்படி எதையாவது கேட்டுக்கொண்டிருப்பது பெரியசாமியின் வழக்கம் என்றால், பதிலே சொல்லாமல் இருப்பது ராஜலக்ஷ்மியின் வழக்கம். “வாயைத் தொறந்தா முத்து உதிர்ந்து விடுமோ?” என்பான் எரிச்சலாக.

அவள் சம்பந்தப்பட்ட எல்லாமே எரிச்சலானதுதான் என்று இருக்கும்போது, அவளைக் கல்யாணம் செய்து கொடுப்பதென்பது எவ்வளவு பெரிய எரிச்சலானதாக இருக்கும், அதுவும் கையில் துட்டு இல்லாத நிலையில்? அதனால்தான் முதல் தாரத்தை இழந்தவனாக இருந்தாலும் பரவாயில்லை; பணம் இருக்கிறவனாகப் பார்க்க வேண்டியிருந்தது.

ராஜலக்ஷ்மிக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படுவதில் ஆட்சேபனை எதுவும் கிடையாது. ஆனால் வருகிறவருக்கு முதல் மனைவியின் மூலம் குழந்தைகள் இருக்க வேண்டாம் என்பது அவளுடைய விருப்பம். ஆனால் அப்படி முன் வந்தவர்கள் எல்லோருக்கும் ஒன்றோ இரண்டோ குழந்தைகள் இருந்தார்கள். அம்மாதிரி ஆண்களை ராஜலக்ஷ்மி மறுத்து விட்டாள். நாற்பது வயதோ அதற்கு அதிகமாகவோ இருக்கிற பண வசதி உள்ள ஒருத்தருக்கு மனைவியாவதற்கு அவளின் மனம் தயாராக இருந்தது. ஆனால் சட்டென ஒருத்தரின் குழந்தைகளுக்கு ரெடிமேட் அம்மாவாகிவிட அவளின் உணர்வுகள் மறுத்தன. அவளுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்குத்தான் அவளால் அம்மாவாக முடியும். அம்மா என்பது ஒரேநாளில் அவள்மேல் சுமத்தப்பட்டதாக இருக்கக்கூடாது. இதைச் சொன்னதற்கு பெரியசாமி, “இன்னொருத்தியோட புருஷன் உனக்குப் புருஷனாகலாம்; ஆனா அவளோட புள்ளைங்க ஒனக்குப் புள்ளைங்க ஆயிடக்கூடாதோ?” என்று எரிந்து விழுந்தான்.

இப்படி இருந்தபோதுதான் அய்யாச்சாமி சபரிநாதனின் ஜாதகத்தைக் கொண்டுவந்தார். எல்லோருமே அவரின் வயசுக்காகத்தான் யோசித்தார்கள். வயசு ஒரு பிரச்னையா என்று ராஜலக்ஷ்மி தீவிரமாக யோசித்தாள். ஆனால் பதில் தெரியவில்லை அவளுக்கு. அதேநேரம், மூன்று சபரிநாதனிடம் இருந்த சில சாதகங்களை அவளால் அலட்சியப் படுத்த முடியவில்லை. முதலாவதாக அவரின் ஏராளமான பணம்; அடுத்ததாக இரண்டு மகள்களும் கல்யாணமாகி வெகு தூரத்தில் இருந்தார்கள். பிள்ளைகளும் பெற்றுக்கொண்டுவிட்ட அவர்களிடம் அம்மா போல இருக்க வேண்டியதும் இல்லை. சபரிநாதனை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால் முடிவெடுத்துவிடலாம் என்கிற எண்ணத்தில் அவரை பெண்பார்க்க வரச்சொன்னாள்.

பெண் பார்க்கவந்த சபரிநாதன் அவளுக்கு வயதான பணக்காரர் போல இருந்தாரே தவிர, வயசான ஆம்பளை போல் தெரியவில்லை. சபரிநாதன் அவள் அழகில் சொக்கிப்போய் உடனே சரியென்று சொன்னாலும், இவள் மூன்று நாட்கள் நன்கு யோசித்தாள். நான்காம் நாள் அவரைக் கல்யாணம் செய்துகொள்ள பூரண சம்மதம் என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு ராஜலக்ஷ்மி எப்போதும் போல மெளனமாக இருந்துவிட்டாள்… இந்த மெளனம்தான் அவளின் சீலம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *