முளையும் – விளைவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 3,052 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“விளையும் பயர் முளையிலே தெரியும்” என்று சொல்லப்படுகிறது. பயிர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கலாம். மனித வாழ்க்கையில் இந்த விதி பொய்த்துப் போகும்.

போகும் என்ன போகும் முழுக்க முழுக்கப் பொய்த்தே விட்டது. பொய்யாகிக் கொண்டே இருக்கிறது! சிந்தித்துச் சினந்து சீறியது ஞானப்பிரகாசம் அவர்களின் அறிவு.

அவருடைய அறிவுக்கு, அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவரது உள் ஒளிக்கு, பலத்த அடிபட்டிருந்தது, நிமிர்ந்து நிற்க வலு இல்லாமல் செய்கிற சரியான வர்ம அடி” அதுதான் அவருடைய சிந்தனைக்கும் சினத்துக்கும் காரணமாகும்.

அவருக்கு எப்போதும் தனது உள்ஒளி மீதும், அறிவின் திறமைமேலும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதனால் எழும் ஒரு கர்வம்.

“யார் எப்படிப் பட்டடவன் என்பதை அவன் முகத்தைப் பார்த்தே சொல்லிப் போடுவேன். ஒருவன் குணத்தை கொஞ்சநாள் ஆராய்ந்துவிட்டால், அவன் வருங்காலத்திலே என்ன ஆவான், எப்படி இருப்பான் என்று திட்டமாய் சொல்வேன். நான் சொன்னால் சொன்னபடி நடக்கும். நூத்துக்கு நூறு கரெக்டாக அமையும்” என்று தன்னகங்காரத்தோடு பேசுவதில் அவருக்கு ரொம்ப திருப்தி.

அவருடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி. “உம்ம குணவிசஷம் இப்படி, நீர் இப்படி இப்படி நடந்து கொண்டிருப்பீர். இனி இந்த மாதிரி நடப்பீர்” என்று ஓங்கி அறைவது ஞானப்பிரகாசப் பொழுது போக்குகளில் ஒன்று.

அவர் முகராசியும், அவர் பேசுகிற தோரணையும், அட்டகாசமாய் சிரிக்கிற தொனியும் அவருடைய பெரிய மனித தோற்றமும், ஆக எல்லாமும் கூடி, எதிரே கேட்டிருப்பவர்களை தலையாட்டி பொம்மைகளாகவும், பல் இளிச்சான் சாமிகளா கவும், மறுத்துரைக்கத் தெம்பு இல்லாத ஊமைக் கோட்டான் களாகவும் ஆக்கிவிடும்.

இந்த விதமான வெற்றிகள் பல பெற்று அவருடைய தன்னம்பிக்கையும் தற்பெருமையும் கொழுப்பேறி வளர்ந் திருந்தன.

அவருடைய நண்பர் கனகசபை பள்ளி ஆசிரியர். அவர் மாலை வேளைகளில் வீட்டில் வைத்து அநேக பிள்ளைகளுக்கு “பிரைவேட்டாகப் பாடம் கற்பிப்பது உண்டு. அப்போதும் சுமார் இருபது பிள்ளைகள் சேர்ந்து; அவர் வீடே ஒரு தனிப் பள்ளிக்கூடம் மாதிரித் தோன்றும்.

ஞானப்பிரகாசம் மாலை உலா போய்விட்டுத் திரும்புகிற வழியில், பொழுதுபோக்காக அந்த இடத்தில் கணிசமான நேரத்தைக் கழிப்பது வழக்கம். நண்பர் பாடம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பார். படிக்கிற பிள்ளைகளை கவனிப்பார். ஆசிரியரோடு பேசிக்கொண்டு இருப்பார்.

“வருவதை முன்கூட்டியே உரைப்பது பற்றி ஒரு நாள் பேச்சுத் திரும்பியது. அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவராய் பேசினார் கனகசபை, அப்போது ஞானப்பிரகாசத்துக்கு சூடு பிடித்துவிட்டது, ஆவேசம் வந்தவர்போல் கத்தினார் –

“ஒய், நான் இன்னைக்கிச் சொல்லுதேன். இங்கே இருக்கிற பிள்ளைகள் இன்னும் பத்து வருஷங்களுக்குப் பிறகு எப்படி இருப்பாங்க, என்ன ஆவாங்கன்னு நான் சொல்லுதேன். சோசியம் இல்லே, இவங்க குணங்கள், போக்குகளை ஒரளவுக்கு நான் ஸ்டடி பண்ணியிருக்கேன். அதை வச்சும் அவங்க முகத் தைப் பார்த்தும் சொல்லுதேன். வேணுமின்னா. வரிசையாய் பெயர்களை எழுதி நான்சொல்வதையும் எழுதி வச்சுக்கிடு வோம். அப்புறம் பத்து வருஷம் – ஏன், ஒரு வியாழவட்டம், பன்னிரண்டு வருஷமே போகட்டுமே – அதுக்குப் பிறகு, நாம அதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நான் சொன்னது சொன்னபடி நடக்குதா இல்லையான்னு பார்த்துப் போடுவோமே! என்றார்,

“அதெல்லாம் எதுக்குங்ஙேண். சும்மா பேச்சை விடுங்க. ஏதோ பொழுது போக்காப் பேசுறோம்.” என்று நண்பர் இழுத்தார்.

ஞானப்பிரகாசத்துக்கு ஆங்காரம் வந்துவிட்டது. இந்த ஞஞ்ஞமிஞ்ஞ விவகாரமே வேண்டாம். இது ஒரு சவால்” என்று சொல்லி, தாளும்பேனாவும் எடுத்து, ஒவ்வொரு பிள்ளையின் பெயரையும், அப்பா பெயர், வயசு முதலிய விவரங்களையும் கேட்டு எழுதினார். ஒவ்வொருவருக்கும் அடையாளமாகச் சில குறிப்புகளையும் இணைத்துக் கொண்டார்.

அங்கே பதினாறு பிள்ளைகள் இருந்தார்கள் ஆண்களும் பெண்களுமாக, பத்துவயசு முதல் பதினைந்து வயசு வரை உள்ளவர்கள். அவர்களை நன்கு கவனித்து, விவரங்களைக் கேட்டறிந்து, பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆவார்கள், என்ன நிலைமையில் இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாகக் கூறி, அப்படியே எழுதியும் வைத்துக்கொண்டார் அவர்.

அப்புறம் இது விஷயமாக அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

விரைவிலேயே ஞானப்பிரகாசம் அந்த ஊரை விட்டுப் பிரிந்து போக நேர்ந்தது. வாழ்க்கைப் பாதையில் எங்கெங்கோ அலைந்து திரிய நேரிட்டது. அவ்வூரிலிருந்து செய்திகள் எட்ட முடியாத தொலைவிலே அவர் பல வருடங்கள் தங்க வேண்டியதாயிற்று. முதலில், அபூர்வமாக எப்போதாவது கனகசபையிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. போகப் போக அவரும் எழுதுவதை நிறத்திவிட்டார்.

“அங்கே ஒரு தடவை போய் வரணும்” என்று ஞானப்பிர காசம் வருடம்தோறும் நினைப்பது உண்டு. ஆனாலும் வாழ்க்கை நிலைமைகளும், சந்தர்ப்பங்களும் பிறவும் அவருக்கு உதவி புரியாததனால், அந்த யாத்திரை சுலபத்தில் சித்திக்காத ஒரு லட்சியம் போலவே அமைந்து கிடந்தது.

அவர் அந்த ஊரையும், அவ்வூர் பிள்ளைகளையும் மறந்து விடவில்லை. “எல்லாரும் நல்ல படியாகத் தான் இருப்பார்கள். நான் சொன்ன மாதிரி வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்கும்” என்று அவர் எண்ணிக் கொள்வார். “போகணும், பத்து வருடங்களுக்கு மேலேயே ஆச்சுதே, எல்லோரும் எப்படி இருக்காங்க என்பதை அறிவதற்காகவாவது ஒரு தடவை அந்தப் பக்கம் போய் வரத்தான் வேண்டும்” என்று நெஞ்சோடு புலம்பிக் கொள்வார்.

ஒருநாள், வாழ்க்கை உண்மை ஒரு அதிர்ச்சி மாதிரி அவரை எதிர்கொண்டது.

அவர் வசித்த பெருநகரத்தின் முக்கிய ரஸ்தா வழியாக அவர் நடந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இளைஞன் அவரைப் பார்த்தான். நின்றான். முகம் மகிழ்ச்சியுற, “வணக்கம் ஐயா” என்று கும்பிட்டான், “என்னைத் தெரியுதா ஐயா?” என்று கேட்டான்.

அவர் அவனை கவனித்தார். அவனைப் பார்த்திருந்ததாக அவருக்கு நினைவு இல்லை. “தெரியலியே. யாரு?” என்றார்.

”மறந்திருப்பீங்க. பத்து பதினொரு வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. அப்ப நான் சின்னப் பையனாக இருந்தேன். ஆனால் உங்களை இனம் கண்டு கொள்றது சிரமமாக இல்லை. நீங்க அப்படியே தான் இருக்கீங்க” என்றான் அவன்.

“இவன் யாரு இவன்? ரொம்பத் தெரிஞ்சவன் மாதிரிப் பேசுதானே” எனற தயக்கத்தோடு நின்ற பெரியவருக்கு தெளிவு ஏற்படுத்தும் விதத்தில் அவன் சொன்னான்.

“கனகசபை வாத்தியார் வீட்டிலே நான் பாடம் படிக்கையிலே நீங்க அடிக்கடி வருவீங்க. என் பேர் நடராஜன்….”

“ஒகோ, அப்படியா ரொம்ப சந்தோஷம். வாத்தியார் எப்படி இருக்கார்? நீ இங்கே என்ன பண்ணுறே? எப்போ வந்தே?” என்று உற்சாகத்தைக் கொட்டலானார் அவர்.

“நீங்க அப்புறம் அந்தப் பக்கம் வரவே இல்லையே, ஐயா. எங்க ஊரையும் எங்களையும் அடியோடு மறந்துட்டீக போலிருக்கு!”

“மறக்கவாவது ஒண்ணாவது! நேரமே கிடைக்கலே தம்பி. போகணும், கண்டிப்பா ஒரு தடவை போக வேண்டியது தான். அந்த ஊரும் ஆட்களும் இருக்கிற நிலையை பார்க்கப் போகணும்கிற தவிப்பு எனக்கு எப்பவும் இருக்கு நேரம்தான் கிடைக்கலே” என்று பெரியவர் அங்கலாய்த்தார்.

“நீங்க சொன்ன ஒரு வியாழவட்டம் சீக்கிரமே ஆகிவிடும். அப்போ போய் பாருங்க!” என்று சொன்ன நடராஜன் ஒரு மாதிரிச் சிரித்தான்.

“என்னடே, என்ன விஷயம்?” என்றார் அவர்.

“அதை எல்லாம் நீங்களே கண்டறிவதே நல்லது” என்று அவன் சொன்னான்.

“ஆமா, நீ என்ன செய்வதாகச் சொன்னே?”

இங்கே ஒரு கம்பெனியிலே குமாஸ்தா வேலை பாக்கிறேன்”

“எது வரை படிச்சே?”

“எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தேன். மேலே படிக்க வசதி இல்லே, வேலை தேடி அலைஞ்சேன்.”

*குமாஸ்தா வேலைக்காக இவ்வளவு தூரம் வரணுமா? என்று கேட்டார் அவர்.

“இப்போ இந்த வேலை கிடைப்பதே பாக்கியம்னு தோணுதே. குமாஸ்தா வேலைக்காக டில்லி, பம்பாய், கல்கத்தான்னு போறாங்களே! எனக்கு இங்கேயே கிடைத்தது நல்வாய்ப்புதான்!” என்றான் இளைஞன். “உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நான் போய் வாறேன்” என்று வணங்கிவிட்டு நகர்ந்தான்.

”நல்ல பையன்” எனப் பாராட்டியது அவர் மனம்.

அவர் தனது இருப்பிடம் சேர்ந்ததும், முதல் காரியமாக புத்தகப்பெட்டியைத் திறந்து ஒரு பழைய டயரியினுள் பத்திர மாக வைத்திருந்த காகிதத்தை எடுத்து, அவசரம் அவசரமாக ஆராய்ந்தார்.

“உம். வி. நடராஜன் ஆமா சரிதான் இவன் தான. கெட்டிக்காரப் பையன், வகுப்பில் முதல். எல்லாப் படங்களிலும் நல்ல மார்க். ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்பவும் முதல் மார்க்குதான். அப்போது வயசு 12. சரி குறிப்பு என்ன? கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, நல்ல உத்தியோகம் அடைவான். ஊங்? அப்படியா சங்கதி!”

ஞானப்பிரகாசம் தலையைச் சொறிந்தார். அடடா, அவன் எங்கே தங்கியிருக்கான்னு கேட்காமப் போனோமே! அவன் கிட்டே மேலும் பல தகவல்களை விசாரித்து அறிந்திருக்கலாமே!” என்றொரு வருத்தம் அவர் உள்ளத்தில் குத்தியது.

சந்தர்ப்பம் அவருக்குச் சிறிது உதவியது. சில தினங்களுக்குப் பிறகு நடராஜனை அவர் மறுபடியும் சந்திக்க நேரிட்டது. ஒரு பஸ் ஸ்டாப்பில்.

“உனக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?” என்று விசாரித்தார்.

“கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி நான்யோசிக்கவே இல்லை. குடும்ப நிலைமை, பொருளாதார நிலை, மற்றும் பல நிலைமைகளை கவனித்தபோது, என் நிலைமையில் உள்ளவன் தனியாக இருந்துவிடுவதே நல்லது என்று தோன்றுகிறது.” நம்பிக்கை வறட்சி அவன் குரலில் ஒலித்தது.

“பெரிய ஸினிக் ஆக இருக்கான் பையன். பாவம், வாழ்க்கை இவனை ரொம்பவும் சோதிக்குதுபோல் தெரியுது” என்று அவர் மனம் பேசியது.

“ஸார்வாளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். கனகசபை வாத்தியார் கிட்டே ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தவங்களிலே சிவகாமின்னு ஒரு புள்ளே இருந்தது. அழகா, சிவப்பா. அதோட பத்தாவது வயசிலே நீங்க பார்த்தீங்க. பிறகு ரொம்ப அற்புதமா வளர்ந்து நின்னுது. நீங்க கூடச் சொல்லியிருந்தீங்க இந்தப் புள்ளை முகத்திலே லட்சுமிகளை கொஞசி விளையாடுது. இது ராஜரீகமா வாழப்போகுது. பெரிய இடத்திலே மருமகளாகப் போய், ராணி மாதிரி இருக்கும் இன்னிங்க. அந்தப் புள்ளைக்கு கல்யாணமாக ரொம்பக் கஷ்டப்பட்டுது, அழகை யாரு பார்த்தாங்க? நகை பல ஆயிரம், ரொக்கமாச் சில ஆயிரம் வேணுமின்னு எல்லா இடத்திலும் கேட்டாங்க. பதினேழாவது வயசிலே கல்யாணமாச்சு. அவ்வளவா வசதி இல்லாத குடும்பம். மாமியார் ரொம்பக் கஷ்டப்படுத்தினா, புருசன் அதுக்கு மேலே, சந்தேகப் பேர்வழி. அழகான பொண்ணு, எவன் எவன் மேலேயோ ஆசைப்பட்டு கண்டபடி அலைவான்னு அவனுக்கு நெணைப்பு. அவன் கரடி மாதிரி இருப்பான். அதனாலே அவளை அடிஅடியின்னு அடிப்பான். அவ குழந்தை உண்டாகியிருந்த சமயம் அவன் எட்டி உதைச்சு, பேயறை அறைய, அவள் இசை கேடாக விழுந்து படுத்த படுக்கையாகி செத்தே போனாள். அவள் அழகாக இருந்து லட்சுமிபோலே விளங்கி, நல்லவளாக வாழமுயன்று என்னத்தைக் கண்டாள்? வாழ்க்கை எப்படி எப்படியோ இருக்குது. நம்ம சமூக நிலைமைகள் மகா மோசம்.”

அவனுக்கு அன்று மனப்புழுக்கம் போலும். பெரியவர் அன்பாகவும் அனுதாபமாகவும் பேசத் தொடங்கவும் அவன் சொல்மழை கொட்டித் தீர்த்தான். ஒரு பஸ் வந்ததும் ஏறிக்கொண்டு பறந்தான்.

ஞானப்பிரகாசம் பெருமூச்செறிந்தார். “இரண்டாவது தோல்வி” என்று பழைய குறிப்பில் பதிந்து கொண்டார். “பத்துக்கு ரெண்டு அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லாமே பொய்த்துப் போகும்னு எப்படிச் சொல்ல முடியும்?” என்று அவர் மனம் வாதிட்டது. இதை நிச்சயம் செய்து கொள்வதற்காகவாவது அந்த ஊருக்குப் போயாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அந்த விருப்பம் செயலாக முடிவதற்கு அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. “பரவால்லே. நாம் சொன்னதுபோல, ஒரு வியாழ வட்டம் கழித்துத் தான் இங்கே வர முடிஞ்சிருக்கு இதை சரி பார்த்துக் கொள்ள ஏற்ற தருணம் தான்” என்று அவர் எண்ணிக் கொண்டார்.

அவ்வூரில் பிரமாத மாறுதல்கள் எவையும் புகுந்துவிட வில்லை. தெருக்களில் மின்சார விளக்குகளும், குடிநீர் குழாய்களும் புதிதாகச் சேர்ந்திருந்தன. மற்றப்படி குட்டிச் சுவர்கள், இடிந்து கொண்டிருக்கும் சிறு வீடுகள், பழுது பார்க்கப்படாத பெரிய வீடுகள். கட்டை மண்ணை வேலிகளாகக் கொண்ட வெறும் தோட்டங்கள் எல்லாம் “பழைய கறுப்பனே கறுப்பன் என்ற நிலையில் தான் காட்சி தந்தன. மனிதர்களில் சிலர் செத்துப் போயிருந்தார்கள். சிலர் பிழைப்புத் தேடி வெளியூர் போய் விட்டார்கள். வறுமையும் முதுமையும் நோயும் ஊரோடு இருந்தவர்களின் உடலையும் உள்ளத்தையும் வெகுவாக பாதித்திருந்தன. முன்பு சின்னப்பிள்ளைகளாகத் திரிந்தவர்கள் இப்போது பெரியவர்கள் ஆகியிருந்தார்கள். ஆனாலும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் நிறையவே தெருக்களில் தென்பட்டன.

ஒடிய காலம் கனகசபையின் உடலில் பாதிப்புகளைப் பதித்திருந்தது. வயது முதிர்வும், சில பகுதிகளில் அதிகமான அநாவசியமான – சதையும், தலையில் வழுக்கையும் தோன்றி யிருந்தன. வாழ்க்கையின் சுமைகள் அவரை வெகுவாக அழுத்திக் கொண்டிருந்ததால், அவரே உற்சாகமற்று, வயசுக்கு மீறிய கிழத்தனம் பெற்று, சோர்வுடன் தோற்றம் அளித்தார். எனினும், “வராது வந்த நண்பரை மனநிறைவோடும் முகமலர்ச்சியோடும் வரவேற்று உபசரித்தார்.

அவர்கள் ஓயாது பேசிக் கொண்டேயிருந்தார்கள். எல்லாரை யும், எல்லா விஷயங்களையும் பற்றித்தான்.

நடராஜனை சந்தித்தது பற்றி ஞானப்பிரகாசம் சொன்னார்.

“ஆமாம். கெட்டிக்காரப் பையன். அவனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். படிப்பில் ஆர்வம் உள்ள, திறமையும் அறிவுக் கூர்மையும் உள்ள பையனுக்கு மேற்கொண்டு படிக்க வசதி இல்லை, அவன் கிளார்க் வேலைக்குப்போக வேண்டிய தாச்சு, நம்ம சமூக நிலைமை அப்படித் தானிருக்கு, அவனைப்போல எத்தனை யோ பேர். இவனாவது ஏதோ பிரைவேட் கம்பெனியில் குமாஸ்தாவாகப் போயிருக்கான். அங்கே சுயமுயற்சிகளுக்கும் தன்முனைப்புக்கும் ஏதாவது வழிவகை தென்படலாம். எனக்குத் தெரிந்த ஒரு பிரைட் ஸ்டுடன்ட். நல்ல அறிவாளி. ரொம்பவும் முன்னுக்கு வந்திருக்க வேண்டியவன். ஆனால் வாய்ப்புகள் இல்லை. சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலே கிளார்க் ஆகும் வாய்ப்புதான் அவனுக்குக் கிடைத்தது. ஈயடிச்சான் காப்பி என்பாகளே, அது மாதிரி, இயந்திர ரீதியாகப் பார்த்து எழுதிக்கிட்டே இருக்கிற வேலை. அவன் மூளையும் ஆற்றலும் துருப்பிடிச்சு, எதுக்கும் உதவாமல் போயிருக்கும். நாம் எவ்வளவோ ஆசைப்படு கிறோம். இளம் தலைமுறையினரிடம் எவ்வளவோ எதிர்பார்க் கிறோம். நம்பிக்கையோடு இப்படி எல்லாம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கிறோம். ஆனால் அவை நடப்பது இல்லை. ஏறுமாறாக நடந்து விடுது. அதுக்கெல்லாம் காரணம், தனிப்பட்ட அந்த இளைஞர்களின் போக்குகளோ பண்புகளோ அல்ல. குடும்பங்களின் பொருளாதார நிலை, சமூகநிலை, நாட்டு நிலை முதலியனதான் முக்கிய காரணங்கள்.”

நாம் அதிகம் பேசிவிட்டோம் என உணர்ந்தவர் போல், கனகசபை சடக்கென்று பேசை நிறுத்தினார். மெளனத்தில் ஆழ்ந்து விட்டார்.

அவர் பேச்சில் உண்மை இருப்பதை ஞானப்பிரகாசம் உணர்ந்தார். அப்படித்தானே ஆச்சு! அவர் எண்ணி, எதிர் பார்த்து, உறுதியாக அறிவித்தது என்ன? பன்னிரண்டு வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் என்ன? இத்தகைய விளைவுகளை அவர் எதிர்ப்பார்க்கவே இல்லையே நடராஜனை யும், சிவகாமியையும் வாழ்க்கை வஞ்சித்திருந்தது போலவே, அவர் பட்டியலில் குறித்து வைத்திருந்த இதரர்களில் பலபேரையும் வஞ்சித்து விட்டது. ஒரு சிலர் வேறு விதத்தில் முன்னேறியிருந்தார்கள்! அதையும் அவர் முன்கூட்டியே கணிக்க முடிந்தது இல்லை தான்.

“உள்ளதைத் தின்னு போட்டு ஊரைச் சுத்திக்கிட்டு இருப்பான்” என்று அவரால் மதிப்பிடப்பட்ட பெரிய வீட்டுப் பையன் ஒருவன், பணபலத்தால் என்ஜினிங் காலேஜில் இடம் பெற்று, வருடங்களைக் கழித்து, பட்டமும் பெற்று விட்டான்: ஆனால் வேலை கிடைக்கவில்லை. சுமாராகக் கல்வி கற்று, வீட்டில் இருந்தபடி விவசாயத்தை கவனிக்கிறேன் என்று சோம்பல் வாழ்வு வாழ்வான் என்று குறிப்பிடப்பட்ட, மத்தியதர வர்க்கத்துப் பையன் ஒருவன், எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அவனுக்கு வேண்டிய ஒருவரோடு பிசினஸில் ஈடுபட்டு, இருவரும் சேர்ந்து சுரண்டி, சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்து, லாபகரமாக முன்னேறி கொண்டிருந்தான். சுமாராக இருப்பான், சுத்த மண்டு என்று கருதப்பட்ட ஒருவன் குடித்து, சூதாடுவதிலும் சிறு திருட்டுகளில் வெற்றி காண்பதிலும் பிரசித்தி பெற்றுவிட்டான். குடியும் குடித்தனமுமாய் இருப்பாள் என்று அவரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் கல்யாணமாகி, கிடைத்த வாழ்வில் திருப்தி அடையாமல், ஸ்டைல் மாஸ்டர் ஒருவனோடு ஒடிப்போய் விட்டாள். ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவே இல்லை. அவள் மெலிந்து இளமை இன்பங்களை நுகர முடியாமல் போன ஏக்கத்தினால் ஹிஸ்டீரியா நோயில் சிக்கி அவதிப்பட, அவளுக்குப் “பேய் பிடித்திருக்கிறது; பைத்தியம் கண்டிருக்கிறது” என்று கடுமையான சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

“போதும்! போதும்” என்று அலறியது ஞானப்பிரகாச உள்ளம். அப்பொழுதுதான் அவருடைய சிந்தனை சீறியது. “விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது சரியாக இருக்கலாம். ஆனால், மனித வாழ்க்கையில் இது பொய்த்துத் தான் போகும்!” என்று. மனிதருக்கு வாழ்வு நல்ல வாழ்க்கையாக அமைவதற்கான பெரும் மாற்றங்கள் ஏற்படாத வரையில் இது இப்படித்தான் முடியும் என்றும் அது முனகிக் கொண்டது.

– சாந்தி 1970

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *