முற்றவெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 3,493 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஹை , ஹை!…த்தா!…த்தா ! சூ…! சூ…!” என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடுகளை சின்னக் குட்டியன் வரிசைப் படுத்தித் தனது க்ட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் பகீரத முயற்சி செய்தான். அவனது அதட்டல்களைப் பொருட்படுத்தாது ஒன்றிரண்டு மாடுகள் கட்டுக்கு அடங்காமல் வீதியில் சிதறி ஓடத்தான் செய்தன.

கையிலுள்ள தடியை உயர்த்தி ஓங்கியபடி மீண்டும் கால்களைச் சாய்த்துச் சாய்த்து ஓடினான் அவன். அப்படி ஓடும்போது அவனைப் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். தராசுத் தட்டில் நிறுவைப் பொருட்களைப் போட்டுக்கொண்டு, திடீரெனப் படிக்கல்லை மற்றொரு தட்டில் தூக்கிப் போட்டால் தராசு நிலை கொள்ளாமல் மேலும் கீழுமாகத் தாழ்ந்து-உயர்ந்து, உயர்ந்து- தாழ்ந்து எப்படி ஒரு நிலையற்று ஆடுமோ அதை நினைவூட்டியது அப்போ தைய’ அவனுடைய நடை. பிறப்புவாசியாகவே அவனது இடது காலும் இடது கையும் சூம்பிக் கோணிப் போய், மறு கால் கையைவிடச் சற்றுக் குட்டையாக, ஒரு வகையில் செயலற்றதாகவே இருந்தன. வீதிகளில் அவன் நடக்கும்போது அவனுடைய விசித்திரமான, புராணம் கண்ட அஷ்டவக்கிரக முனிவனைப்போல ஒரு பக்கம் கோணலாகச் சாய்வுற்று, கால் கள் நிலத்தில் பாவாது நடக்கும் அந்த நடை என்னமோ போலிருக்கும். மடிந்து, . வளைந்து, சவண்டு உள் பாதம் பக்கவாட்டில் சாய்ந்து, மேல் பாதத்தின் முக்கால் பாகத்தை நிலத்தில் ஊன்றி நடக்கக் கூடியதான, பிறவி ஊனமாக இருந்தன அவனிரு பாதங்களும். மடிந்த மேல் பாதங் களைப் பாதுகாக்க, காதறுந்த பழைய செருப்பிரண்டை எடுத்து சணல் கயிறு கொண்டு ‘ரிப்பேர்’ என்கிற பெயரால் சில சீர்திருத்தங்கள் செய்து, காலுக்கு அளவாகப் பாத ரட்சைகளை எப்படியோ உருவாக்கி அணிந்து கொண்டிருந் தான், சின்னக்குட்டியன்.

அவை செய்யும் சேவையின் நாதம்தான் ‘சர்…சர்… என்று இப்பொழுது ஒலிக்கும் அந்த ஓசை.

அவன் மாடுகளுக்குப் பின்னால் மனிதனாக ஓடிக்கொண்டிருக்கிறான்.

சின்னக்குட்டியன் நல்ல கறுவல். நல்லெண்ணெய்க் கறுவல் என்பார்களே அதுமாதிரி. ஒருவித வாளிப்பான – தேகம். வெயிலில் அலைவதே அவனது பிழைப்புமாகிவிட்ட தால், கருமை இன்னும் ஆழ ஊன்றி இருட் கறுப்பாக மாறி – விட்டது. வெற்றிலை அடிக்கடி போடுவதால் பற்களில் காவி நிரந்தரமாகக் குடியேறி, பல்லின் சுயத்துவமிழந்து – அவை காணப்பட்டன. தாடி வளர்ந்து, சடைத்து முகத்தின் அமைப்பையே மாற்றிவிட்டிருந்தது. நெற்றிமேல் அடிக்கடி விழுந்து கண்ணில் பட்டு, பார்வையை மறைக்கும் தலைமயிர்க் கற்றைகளைத் தடுப்பதற்காகக் கறுப்புக் கைக்குட்டையை மடித்து மயிரின் முன்பாகத்தை அழுத்திக் கட்டியிருந்தான். சிரிக்கும்போது முகத்தில் சுடர்விடும் அசட்டு அப்பாவித் தனம் வேறு அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.

திடீரென்று இளம் கன்றுக்குட்டி ஒன்று “…ம்மா!” என்று குரல் கொடுத்த வண்ணம் துள்ளிக் குதித்தபடி தொலைவில் ஓடியது. அதன் மேலெழுந்து வளைந்த குஞ்சம் போன்ற வாலும், நேர்த்தியான முகமும், மின்னல் ஓட்டமும்……..

“ஹேய்!…ஹேய்…!” பார வண்டிக்காரர்கள் வண்டி மாடுகளை முடுக்கி ஓட்டுவதற்காக வாலை முறுக்கி, நாக்கை மடித்து அண்ணத்தில் ஒட்டவைத்து, கொடுப்புப் பற்களைக் கடித்து ஒருவகை ஒலி எழுப்புவார்களே அதைப்போல, வாயால் – ஓசையுண்டாக்கி மாடுகளை மீண்டும் வீதியோரமாக ஒழுங்குபடுத்தி ஓட்ட முயற்சிக்கிக்கிறான், சின்னக் குட்டியன்.

அந்த மாட்டு மந்தையை மடக்கி, வீதியின் ஓரமாகத் திருப்பி, நேர்வழியில் செலுத்தி விரட்டுவதற்கு அவன் பட்டுவிட்ட பாடு இருக்கிறதே…… அப்பப்பா!…… – – மலாயாப் பெஞ்சனீயர் மாணிக்கத்தம்பியின் வீடு நாற்சந்தியைக் கடந்ததும் கூப்பிடு தூரந்தானிருக்கும்.

“ஓ!….அம்மா …!” என்று குரல் கொடுத்தான் சின்னக் குட்டியன். தொடர்ந்து மீண்டுமொரு முறை குரல் கொடுத்து வைத்தான். ‘நான் வந்து கொண்டிருக்கிறேன் மாடுகளை அவிழ்த்து விடுங்கள்’ என்பதுதான் அவனது சங்கேத பாஷையில் அதற்குரிய உண்மையான அர்த்தம்.

இந்தக் குரல் இருக்கிறதே இது யாழ்ப்பாணப் பட்டினத்தின் ஒதுக்குப் புறமாகவுள்ள பெருமாள் கோயிலடியில் வாழ்பவர்களுக்கு நன்றாகத் தெரிந்த, புரிந்த, பழகிப்போன குரல் தான்! கொட்டில்களில் கட்டிப்போட்டு இருக்கும் பசு மாடுகளை-அடைபட்டிருக்கும் கன்று குட்டிகளை வெளியே ஓட்டிச் சென்று புல் பரந்துள்ள திறந்த வெளிகளில் மேயவிட்டுத் தண்ணீர் காட்டி சாயங்காலங்களில் திரும்பவும் அதன் வீடுகளுக்கு ஓட்டி வந்து மாட்டுக்குரியவர்களிடம் ஒப்படைப்பது தான் அவனுடைய தினசரித் தொழில்; நித்தியக் கடமை. மாதாமாதம் மாட்டுக்குரியவர்கள் ஏதோ படியளப்பார்கள். இத்துடன் அவன் திருப்திப்பட்டுவிட வேண்டியது தான்.

அவனது வாழ்க்கை அதுவாக-அதன் நெளிவு சுழிவு களைக் கவனிக்காது ‘ஏன்? எதற்கு?’ என்பது பற்றிய சிந்தனைகளுக்கு இடங் கொடுக்காத ஒன்றாக ஓடுகிறது. காலமென்ற மணிக்கூண்டின் கம்பிகளில் நின்றுவிடாத சுயத்துவம் அவனது வாழ்க்கையை அப்படியே கப்பிக் கிடக்கிறது. யாழ்ப்பாண முற்றவெளிப் பக்கமாகவுள்ள பரந்த பசுமையான புல்வெளிதான் அவன் வரைக்கும் அவனது வயிற்றுக்கு வழிகாட்டும் விடிவெள்ளி; மூலதனம்; வேட்டைக்காடு எல்லாமே…எல்லாமே…

அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு அவன் மாடு மேய்ப்பவன் என்பதுதான் தெரியும். அந்த நினைப்பில் அவன் மிகக் குறைந்த-சமுதாயத்தில் தம்மைவிட மிக மிகப் பின் தங்கிய- ஒருவகைப்பிரகிருதி என்ற இளப்பம் கலந்திருக்கும். மாட்டுச் ‘சொந்தக்காரர்களின் உதட்டில் என்ன தான் நடிப்புப் புன்னகை மலர்ந்திருந்தாலும் அவர்களது வீட்டில் அவனுக்கு இரகசியமாக இட்டிருக்கும் பெயர் ‘நொண்டியன்’, முகத்துக்கு முகம் நேராகக் கூப்பிட உபயோகப்படுத்தப்படும் நாமம் குட்டியன்.

பட்டினத்து இதயத்தின் இரத்த நாளங்களாய் பலவாறாகப் பிரிந்து கிடக்கின்ற வீதிகளில் அவன் அடிக்கடி தென்படத்தான் செய்தான், காலை மாலைகளில் பிரதான வீதிகள் வழியாக மாடுகளைத் துரத்திக்கொண்டு நடை போட்டு வரும் போது நுனியில் இலையுள்ள பூவரசந்தடி அவன் கையில் செங்கோல் போலக் காட்சி தரும்.

அர்த்தமும் இசையும் புரிந்துகொள்ள முடியாத சினிமாப் பாட்டொன்றைத் தன் போக்கில் சீட்டியடித்தபடி கையிலுள்ள கழியைச் சுழற்றியவாறு நடந்து கொண்டிருந்தான், சின்னக்குட்டியன்.

அவன் ஆசையாகச் செல்லப் பெயரிட்டு அழைக்கும் அந்த மலாயாப் பெஞ்சனீயர் ஐயா வீட்டு சட்டச்சி என்னு மாடு, மிரண்டு, மாட்டு மந்தையை விட்டுப் பின் தங்கிப் – பின் தங்கி ஆடி அசைந்து அன்ன நடை பேர்ட்டு நடந்து வந்தது. அதைக் காணச் சின்னக்குட்டியனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து, எட்டிப் பின்னேற வைக்கிறது.

கையைச் சட்டென்று ஓங்கி, கையிலுள்ள கழியால் தனது அன்பிற்குரிய கட்டச்சி மாடென்றும் பாராமல் விளாசி விட்டான், ஒரு தடவை. முக்கி, முனகி ஓடவும் முடியாமல் நடக்கவும் இயலாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்த கட்டச்சி என்கிற அந்தக் கறுப்புப் பசு, “ம்…ம்மா!” என்று குரல் கொடுத்து வெதனையால் அலறியது.

அந்தத் தீன ஒலி…..?

மனது துணுக்குற்றது. நெஞ்சில் இரத்தம் வடிவது போன்ற மனக் கசிவு. அந்த மாட்டை -அதனது அப்போதைய நிலைமையில் அப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று மனம் வாதாடிப் பார்க்கிறது. தன் வயிற்றினுள்ளே இன்னொரு ஜீவனைச் சுமந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி வரும் இந்த வாயில்லாத ஜீவனைப் போலத்தான் இன்னொரு வாயுள்ள ஜீவனும்.

தன் மனைவி தையலம்மையின் ஞாபகமும் அவன் மனதில் நிழலாடுகின்றது. அந்தக் காட்சியைப் பற்றிய நினைவும் குறுக்கிடுகின்றது.

மலாய்க்காரப் பெஞ்சனீயர் வீட்டம்மா கட்டச்சியைப் படலையைத் திறந்து வெளியே விரட்டும்போது – அந்த மாட்டைச் சுட்டிக் காட்டி, “இதோ பார், குட்டியன். கட்டச்சியைக் கவனமாகப் பாத்துக்கோ. இண்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கிற நிறை கண்டுத்தாச்சி மாடு. அதிலும் இண்டைக்கு அமாவாசை; கனத்த நாள். காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கு… ஒரு வேளை…சரி, சரி. மேய்ச் சலுக்குக் கொண்டு போறாய். ஒரு கண்ணை அதிலை வச்சுக் கொள்-என்ன நான் சொன்னதெல்லாம் விளங்கிச்சா?” என்று எச்சரிக்கை செய்து தான் கட்டச்சியை வெளியே அனுப்பி வைத்தாள்.

இரண்டாவது தரம் ஓங்கிய கரம் இறங்கவில்லை. இந்த நினைவுகளுக்குக் கட்டுப்பட்டு செயலிழந்து விட்டது சின்னக் குட்டியனின் வலது கை.

கட்டச்சியைப் பற்றிய கவனத்தில் அதற்கு உரியவர்களை விட அவனுக்கு அதிக அக்கறையுண்டு. மாடுகள் ஒவ்வொன் றையும் தனது அன்பிற்குரிய நண்பர்களைப் போன்று நேசித் தான்; பாசம் காட்டினான். பெஞ்சனீயர் வீட்டு மாட்டுக்குக் கட்டச்சி என்று நாமகரணம் சூட்டிச் செல்லமாக முதல் முதல் கூப்பிட்டதே அவன் தான். அதன் பிறகுதான் அவர்கள் அதைக் கட்டச்சி என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர். கட்டச்சிக்கு மாத்திரமல்ல. அப்புக்காத்து அம்பலவாணர் வீட்டு மாட்டுக்குச் செல்லப் பெயர் கறுப்பு. கிளாக்கர் பொன்னம்பலத்தாரின் மாட்டுக்குச் செல்லி. ஓவசியர் ஏகாம்பரத்தின் மாட்டுக்குப் பூச்சி. அப்போத்திக் கரி சூசைப்பிள்ளையின் மாட்டுக்கு…….

எல்லாமே அவனிட்ட செல்லப் பெயர்கள் தான்.

‘இன்று கனத்த நாளாம். மிருகங்களுக்கு மட்டும் அப்படியா?-அல்லது மனிதருக்குமா? அப்படியென்றால் எனது தையலம்மை …’

காலையில் படுக்கையை விட்டு நேரம் கழித்து எழுந் திருந்த தையலம்மை சோர்ந்து வாடிய முகத் தோற்றத்துடன், பழைய சோற்றைப் பிழிந்து, இரவு மிஞ்சியிருந்த கருவாட்டுக் குழம்பை விட்டுப் பிசைந்து உருண்டை உருண்டையாகத் திரட்டி அவன் கையில் பரிமாறியபோதுஅவளது முகத்தை ஊடுருவிக் கூர்ந்து நோக்கினான் சின்னக் குட்டியன். அந்த முகத்தில் படிந்திருந்த சோர்வு… களைப்புத் தட்டிய கண்கள்……… வெளிறிப் போயிருந்த உதடுகள்…… –

“என்ன தையலம்மா, இண்டைக்கு ஒரு மாதிரி இருக்கிறே? ஏதாவது உடம்பைக் கிடம்பைச் செய்யுதா?”

வரண்ட புன்முறுவல் உதடுகளில் உலர்ந்து நெளியா “சே!–அப்படியெல்லாம் ஒண்டு மில்லை. ஒரே பஞ்சியாய் இருக்கு, வேறொண்டுமில்லை. இதுக்கேன் யோசிக்கிறீங்க?” என்றாள்.

“இல்லை. உன்னைப் பாத்தா ஒரு மாதிரி இருக்கு. சும்மா கேட்டன்.”

கட்டச்சி நிறை – கன்றுத்தாச்சி. தையலம்மையும் இன்றோ நாளையோ என்றிருக்கும் தலைப்பிள்ளைத்தாச்சி.

உணர்ச்சியின் வலுவான பிடிக்குள் அகப்பட்ட மனம், காற்று இறங்கிய பலூன் போலச் சுருக்கமடைய, ஆவேசம் தணிந்து மட்டுப்படுகிறது.

“சே! பாவம்! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட அவன், “போ-போடி ஆத்தை போ!” என்று மாட்டுடன்அன்பு மொழி பேசினான். தொடர்ந்து , “உம்…உம்…கெதி’ யாய்ப் போடி நாட்சியார். எட்டிப் போடி. இப்பிடி நடந் தால் நான் எண்ணத்தைச் செய்யிறது? எனக்குக் கோவம் வந்திடுது. உம்… போணை, போ…” என்று சொல்லிக் கொண்டே கட்டச்சியின் பின்னங்கால் மூட்டில் இலேசாகத் தடவிக் கொடுத்து, அடித்தற்குப் பிராயச் சித்தம் செய்ததாக கற்பனை பண்ணிக் கொண்டான்.”

தளர்ந்து நடக்கும் கட்டச்சியும் அன்பும் ஆதுரமும் கலந்த அவனது அன்பு மொழிகளைப் புரிந்துகொண்டது போல் நிர்ச்சலனமாகச் செல்கிறது.

கோபத்தில் அடித்த அடியைப் பொருட்படுத்தாத இந்த மாடு போல அந்தத் தையலம்மா……எவ்வளவு கருணை காட்டி மற்றவர் பேசிவிட்ட போதும் சமயத்துக்கு சுயரூபம் கோபமாக வெளிப்பட்டே விடுகிறது தான், அதற்குப்பின் ஏற்படுகின்ற இந்தப் பச்சாத்தாபம் இருக்கிறதே…

தையலம்மையின் அந்தக் கோபம்…அவள் செய்த அந்தச் செய்கை….அதைத் தொடர்ந்து அவனது வாழ்வின் திரும்புமுனையாக ஏற்பட்டுவிட்ட அந்த இன்பம்…

வெறும் வாயை மெல்லும் அவனது நினைவு, என்றும் மறந்துவிட முடியாத அந்தச் சம்பவத்தில் எவ்வளவு ருசி காண்கிறது. தாண்டித் தாண்டி அஷ்ட வக்கிர உருவத் துடன் நடமாடி ‘நொண்டி’ என்கிற பட்டப் பெயருக்கும் உரியவனாகி இருக்கும் அவன்கூட ஒரு காலத்தில் காதலித்தான்!

தையலம்மை ராணி தியேட்டர் வாசலில் கடலை விற்பவள். சின்னக்குட்டியன் அடிக்கடி தியேட்டர் வாசலில் தாமதிப்பதையும் எத்தனையோ கடலைக்காரிகள் கடலைக் கொட்டை விற்பனவு செய்யும்போது அவன் தினசரி தன்னிடம் வந்தே கடலைச் சுருளும் பீடியும் வாங்கி வருவதையும் துருதுருத்த அவளின் பார்வை உணர்ந்து கொள்ளாமல் போகவில்லை. ஒருநாள் கடலை வாங்கிக் கொண்ட அவன் வீம்புக்காக விற்பனவுச் சுளகிலிருந்து ஒரு ‘சிறங்கை’ கடலைக் கொட்டையை அள்ளி எடுக்கும்போது கையிலிருந்த பாக்கு வெட்டியால் ‘பட்’டென்று கைமொளியில் அடித்த தையும், அந்த அடியின் வலியால் அவனும், மனவலியால் அவளும் நீண்ட நாள் துடித்த துடிப்பையும், அந்தக் கோபம் தரும் சம்பவத்துக்குப் பின்னே அவளது . தூய நெஞ்சு அவனுக்காகப் பச்சாதாபப் பட்டதையும் எண்ணுகிறான்.

இதழ்க் கடையில் முறுவல் பூத்து மறைகிறது. காதல், காவிய நாயக-நாயகிகளுக்கு மாத்திரம் சொந்தமான தல்லவே. அந்தக் கடலைக்காரிக்கும் அந்த நொண்டிச் சின்னக். குட்டியனுக்கும் ஏன் ஏற்படக்கூடாது?

பரஸ்பரம் அவர்களிடையே ஒன்றிய அந்த அன்புகல்யாணத்தில் முடிந்தது! தூரத்தில் ‘பூம்…பூம்…’ என்ற காரின் ஹார்ன் ஓசை. . சின்னக்குட்டியனின் கற்பனை உலகச் சிலந்தி வலை, ஓசை கேட்டு அறுபடுகின்றது. குறுக்கு ரோட்டால் திரும்பி விட்டான்.

கட்டச்சியைப் பின்னே விட்டு விட்டு மாடுகள் எல்லாம் முன்னேறி விட்டன். ஒருமாடு வீதியோரமுள்ள ஒரு வீட்டின் கிடுகு வேலியில் காலை வைத்துத் தலையை உயர்த்திக் ‘கதியால்’களில் படர்ந்திருந்த கொவ்வை இலையை நாக்கை நீட்டி, வளைத்து, மடக்கி வாய்க்குள் திணிக்க முயன்றது.

“…த்தா! …த்தா!” என்று மிரட்டிக் குரல் கொடுத்தான், சின்னக்குட்டியன். அவனது அதட்டல் ஒலி ஆஸ்பத்திரிப் புதிய கட்டடத்தில் பட்டு எதிரொலித்தது.

ஆஸ்பத்திரி வீதியைக் கடந்து, கூண்டுக் கோபுர வீதியை மாடுகள் அடைந்து விட்டன. முற்றவெளிக்கு-புல்வெளி மைதானத்திற்கு- இன்னும் கூப்பிடு தூரம் தான் பாக்கி இருக்கும்.

வீதியின் நட்ட நடுவில் நெடிதுயர்ந்து வானத்திற்கும் பூமிக்கும் சேதி சொல்லும் மணிக் கூண்டுக் கோபுரத்தை, அண்ணாந்து பார்த்தான். பகைப் புலத்தில் நகரசபை மண்டபம் தெரிகிறது. மணி பார்க்க அவனுக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய படிப்பும் அவன் படிக்க –வில்லை. மணி பார்த்து வாழக் கூடிய இன்றைய விஞ்ஞான யுக்த்தில் சும்மா பொழுது போக்கிற்காகவும், ‘எனக்கும் மணி பார்க்கத் தெரியுமாக்கும்’ என்று தெருவில் போகிற நாலுபேர் நினைக்கட்டுமே என்கிற நப்பாசை யுடனுமே அவன் அந்த மணிக் கூண்டுக் கோபுரத்தைச் சிறிது நேரம் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொள்வது- இப்படி நடிப்பதில் ஒரு மனத் திருப்தி.

மனிதனின் மனமும் ஒருவித பாம்புப் புற்றுத்தான், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருந்து வெளிவருமோ, யாருக்குத் தெரியும்?

நெருக்கடி மிகுந்து கொண்டு வீதியோரமெல்லாம் புதிய புதிய மாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பட்டினத்திலே மூச்சு விடுவதற்கென்று அமைந்திருக்கும் இடம் இதாவது இருக்கிறதே. இந்த முற்ற வெளியில் மாடுகள் அனைத்தும் இறங்கி, ‘அங்கொன்றும் இங்கொன்று மாகப் பிரிந்து…

அந்த முற்றவெளிக்கு முன்னே தான் நீதி மன்றம். நீதி மன்றத்தின் முன்னே நின்று கொண்டிருக்கும் குற்றவாளி கோட்டை முனியப்பரை நோக்கித் தனது வழக்கு ஜெயமடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதையும் முற்றவெளியில் அமைக்கப்படும் மேடையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகின்ற பிரமுகர்கள் தமது பொய்யை மெய்யாக்க அவரைச் சந்திக்கிழுத்துச் சத்தியம் செய்வதையும் முனியப்பர் கண்டு கொண்டுதான் வீற்றிருக்கிறார். ஆனால் இதனால் முனியப்பரை விடச் சின்னக் குட்டியனுக்கு அதிகப் பலனுண்டு. கோட்டை. முனியப்பர் புண்ணியத்தால்-அருட் செறிவால்-வழக்குகளிலும் அரசிய லிலும் லாபமடைபவர்கள் அடிக்கடி போடும் அவியல் விருந்தை சின்னக்குட்டியன் இடைக்கிடை இரசித்து இரசித்துச் சாப்பிடுவதுண்டு. வாரத்தில் இரண்டொரு தினமாவது ‘ஓசி’யில் அவன் வயிற்றுக்கு வழி செய்யும் கோட்டை முனியப்பர் கோவிலைச் சரணடைந்தது அவன் வரைக்கும் வியப்படைவதில் ஒன்றுமில்லைத் தானே.

ஆலமரத்துக்குப் பக்கத்தில் நின்ற அவனது கட்புலனில் புத்தம் புதிய மாடல் கார் ஒன்று கோவில் முன்றிலில் நின்றது தெரிந்தது. இன்றைய மதியப் பிரச்சினையும் ‘ஓசி’ தான் என்ற மகிழ்வுணர்ச்சி நெஞ்சில் குதியாட்டம் போட்டது.

மதியப் பிரச்சினை-அதாவது சாண் வயிற்றுச் சாப்பாட்டுப் பிரச்சினையும் ஒரு வழியாகத் தீர்ந்து போய் விட்டது.

‘டிங்… டிங்…’ என்று கழுத்து மணிகள் நாதமிட மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில, மரநிழலில் படுத்தவாறு மேய்ந்த புல்லை அசை போட்டுக் கொண்டு…

திடிரென இருந்தாற் போலிருந்து “ம்…ம்மா!” என்று அலறியது -கட்டச்சி, அவன் கண்கள் படம்பிடித்து. இதயத்தில் பதித்துக் கொண்ட அந்தக் காட்சி-

“கட்டச்சி விழுந்து படுத்து, நாலு கால்களையும் பரக்கப் போட்டுக் கொண்டு, வலி வந்து விட்டதைப் போன்று புரண்டு புரண்டு தேகமெல்லாம் உதறி நடுங்க அது கிடக்கும் அந்த நிலை இருக்கிறதே…

மீண்டும் கட்டச்சி அலறியது. பரபரப்படைந்தாலும் நிதானமிழந்து விடாது சின்னக் குட்டியன் கிட்டே நெருங்கிப் பார்த்தான். மாடு எக்கி எக்கி, முக்கி முனகி மூச்சு விட்டு வலியினால் துடிதுடித்து அலறியது.

ஒன்றின் துன்பத் துடிப்பில் தான் இன்னொன்று உதயமாக வேண்டும் என்கிற இயற்கை நியதியையொட்டி புதிய உயிர்ச் சிருஷ்டி ஒன்று தோன்றுவதற்கு முன் ஏற்படும் பிரசவ வேதனை தான் அது.

ஒன்றல்ல, இரண்டல்ல பல பசுமாடுகளைப் பேணி அவற்றின் பிரசவத்துக்கு மருத்துவம் செய்து காப்பாற்றிய அநுபவஸ்தன் தானே சின்னக்குட்டியன். இதற்கெல்லாம் அவன் மயங்கவில்லை. தனியொருவனாக-கன்று ஈன்று கொண்டிருக்கும் கட்டச்சிக்கு மருத்துவம் பார்த்துத் தன் காரியங்களைத் திறம்படச் செய்தான். பிறந்த அந்தச் சின்னஞ் சிறு கன்றுக் குட்டியை ஒரு கையால் தூக்கி அதன் மேல் கவந்திருக்கும் நீரையும் சளியையும் வழித்துத் துடைத்துச் சுத்தம் செய்தான். இடுப்பில் செருகி இருந்த ‘வில்லுக் கத்தி’யை எடுத்து, கன்றின் கால் குளம்புகளை அளவாக வெட்டிப் பதமாக்கி விட்டான்.

மருத்துவ வேலை ஒரு வழியாக முடிந்து விட்டது.

புல்லுக் குளத்தில் கை இரண்டையும் கழுவித் துடைத்துக் கொண்டு மீண்டும் மர நிழலுக்கு வந்து சேர்ந்தான். சின்னக்குட்டியன். கட்டச்சி தனது புத்திர பாக்கியத்தை நாக்கினால் நக்கிச் சுத்திகரித்துக்கொண்டிருந்தது.

காதில் செருகி இருந்த பீடித் துண்டை எடுத்தான். மடியிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுக்கும்போது தான், மடியில் மறைவாக மறைத்து வைத்திருந்த பத்துச் சத நெவிகட்’ சிகரெட்டின் ஞாபகம் அவனுக்கு வந்தது. நீண்ட நாட்களாகச் சிகரெட்டு புகைத்துப் பார்த்து விட வேண்டு மென்று கொள்ளை ஆசை அவனது அடி நெஞ்சில். பீடித் துண்டுடன் அந்தக் கொள்ளை ஆசை ஆரம்பித்த இடத்திலேயே அடங்கி ஒடுங்கி விடும்.

ஆனால் இன்று?

காலையிலேயே விவரிக்க வொண்ணாத தனி மகிழ்ச்சி மனதில். மாசக் கடைசி வேறு. கையில் சில்லறை புளங்கக் கூடிய இந்த நேரத்தைவிட்டால் அவனது அந்தரங்க ஆசை பூர்த்தியடையவே முடியாமல் போய் விடலாம். பத்துச் சதம், வாழ்க்கை வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் என்று மனதாரத் தெரிந்தும் கூட அந்தச் சிகரெட்டுக்கு அவன் காசு கொடுத்து வாங்கி விட்டான்.

வேடிக்கைக் கதை கேட்கச் சப்பாணி கொட்டிக் கொண்டிருக்கும் சிறுவனைப் போல இருந்து கொண்டான் பீடித் துண்டைக் கசக்கி எறிந்து விட்டு, சிகரெட்டைக் கையில் எடுத்தான். நாகரிக புருஷர்கள் பெருவிரல் நகத்தில் தட்டிக் கொள்வதைப் போல அதைத் தட்டிப் பதப்படுத்திக் கொண்டான். ஒரு தடவை சிகரெட் தவறி, நழுவி தரைமீது விழுந்து விட்டது. பீடி வாயில் இருப்பதே தெரியாது. அப்படிப்பட்ட நிபுணத்துவப் பழக்கம். ஆனால் இந்தச் சிகரெட்?

புகையை இழுத்து அனுபவித்து அதன் சுவையை ஒரு தடவையாவது உணர்ந்துவிட வேண்டுமென்று அவன் நெஞ்சம் தவியாய்த் தவித்த தவிப்பு………

முயற்சித்து மீண்டும் அந்த வெள்ளைச் சுருட்டை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டான். உதடுகள் இரண்டையும் முற்றாக மடித்து சிகரெட் கீழே விழுந்து போகாவண்ணம் கெட்டியாகப் பிடித்தபடி தேனீர்க் கடையொன்றில் இரவல் வாங்கித் திருப்பிக் கொடுக்காமல் அடித்துக் கொண்டு வந்த நெருப்புப் பெட்டியைத் திறந்து குச்சியை எடுத்து உரசி பற்ற வைத்துக் கொண்டான். பீடிப் புகையை மூக்கால் விடுவதுபோல ஒரு தடவை விட்டுப் பார்த்தான். புரைக் கேறியது.

மோகம் தீரவில்லை.

‘என்ன இருந்தாலும் விலையேறின சிகரேட்டு அடிக்கடி புகைத்துத் தள்ளுகிற துரைமார் இருக்கிறாங்களே அவர்கள் ரொம்ப ரொம்பப் புண்ணியம் செய்தவங்கள் தான்!’

நெஞ்சம் நிச்சயித்துக் கொள்ளுகின்றது.

‘இந்தப் பிச்சைக்காரப் பயலுகள் குடிக்கிற பீடியை விட சிகரேட் ரொம்ப ஜோராய்த்தான் இருக்கு’ என்று மனம் நினைத்தது. ‘இனிமேல் வக்கில்லாத பயலுகள் குடிக்கிற இந்தப் பீடியைக் கையாலேயே தொடக்கூடாது. பெரிய மனுசங்கள் மாதிரி இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு ஒன்றாவதெண்டாலும்……’

சின்னக் குட்டியன் பெரிய பொருளாதார மேதையல்ல. சாதாரண மனிதன் தான். அந்த அற்ப நேரத்துக் கனவுக் குஷி அவனை இப்படியெல்லாம் கற்பனை பண்ணி தன்னைத் தானே இன்பம் காணும்படியே செய்து…செய்து…

என்ன இருந்தாலும் மனிதன் தானே அவன்!

கஞ்சாக் குடித்து அதன் பாதையில் தன்னை மறந்து கனவு உலகில் சஞ்சரிப்பவனைப்போல, கறுத்த விழியைச் செருகி, கண்களைப் போதை உணர்ச்சியில் வைத்த வண்ணம் இனம் புரியாத இன்பக் கற்பனையில் மனதை உள்வாங்கி… உள்வாங்கி….

மற்றொரு ‘தம்’மையும் இழுத்துப் புகையை வெளியே ஊதினான். ஜோராக- ரொம்ப ஜோராக- புகையை இழுத்து இழுத்துக் காற்றில் கலைய வீட்டான். குஷி கிளம்பிவிட்டது. வாயைக் குவித்து, அண்ணாந்து புகையை வானத்தில் வட்டம் விட்டான். ஒன்று, இரண்டு, மூன்று-

பெரு விரலுக்கும் மற்ற இரண்டு விரல்களுக்குமிடையே தனது வெள்ளை உடலைப் பூரண சரணாகதியாக்கி இருந்த அந்தச் சிகரெட் எரிந்து எரிந்து சாம்பல் பூத்துப்போய் நீறு பூத்த நெருப்புடன் காட்சி தந்தது.

சிகரெட் புகையில் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்தவன் கண்களில் – கட்டச்சி பெற்ற கன்று ஆடி, அசைந்து எழுந்து நடக்க முற்படுவதுபோலத் தெரிந்தது. மெதுவாக எழுந்து, நடந்து அந்த இடத்திற்குச் சென்றான்.

வாளிப்பும் இளமையும் மிருதுத் தமையும் கொண்ட தான அந்தக் கன்றினை மெதுவாக அணைத்துக்கொண்டே நீவிக் கொண்டு சிறிது நேரம் நின்றான். தனது மனைவி தையலம்மையும் அப்படி ஒரு…… இனிமையான அந்த நினைவின் இன்பம் ஒரு கணம் தேகத்தைப் புல்லரிக்கச் செய்து விட்டது.

உண்ட மயக்கம் அவனை நின்று சிந்திக்க விடவில்லை. களைப்பும் சோர்வும் அவனுக்கு. அரசமரத்துக்கு அப்பாலுள்ள பூவரச நிழலில் துண்டை உதறித் தரையில் விரித்து விட்டுத் தலையைச் சாய்த்துக் கொண்டான். கண்கள் தூக்க மயக்கத்தில் இமைக்குள் செருகிக் கொண்டன.

மதுரமான மயக்கத்தில் சின்னக்குட்டியன் எப்பொழுது தாங்கிப்போய் விட்டானோ தெரியாது. இடது . கையைத் தலைக்கு அணை கொடுத்துச் சாய்ந்து படுத்திருந்தான் அவன்.

சளி ஒழுகும் மூக்கும், பானை போலப் பெருத்த வயிறும் கறுத்த உறுவமும் கொண்ட பக்கத்து வீட்டுப் பையன் பரக்கப் பரக்கத் தட்டி எழுப்பியபோதுதான் சின்னக் குட்டியன் விழித்துக் கொண்டான். தன்னுடைய சரீரத்தைச் சொறிந்துகொண்டே படுத்த இடத்தை விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டான். எழுந்து உட்காரும் பொழுது அவனது மூட்டுகள் யாரோ சொடுக்கி விடுவது போன்று ஒலி செய்தன.

“என்னடா-என்னடாது?”

“தையலம்மைக் குஞ்சியாச்சி புள்ளை பெத்து விட்டாவாம். கையோடே கூட்டி வரட்டாம்.”

“என்னடா? புள்ளை பிறந்து விட்டதா!” அவனது குரலில் கனிவும் குழைவும் ஒன்று கூடி நின்றன. “பொறு, பொறு வாறன்…!”

பாசம் என்று ஒன்று இருக்கிறதே அது தான் உலகத்திலுள்ள ஆபத்துகளுக்கெல்லாம் ஆதிகாரணம்; ராமன் மேலுள்ள பாசம்தான் தசரத சக்கரவர்த்தியையே துடிக்கத் துடிக்க….

புத்திர பாசம் சின்னக்குட்டியனை அலைக்கழித்தது.

பொழுதும் டச்சுக்காரன் கோட்டைக்குப் பின்புறமாக இறங்கிவிட்டது. கட்டச்சியையும் பச்சிளம் கன்றையும் பத்திரமாக ஓட்டி வந்து பெஞ்சனீயர் ஐயா வீட்டுத் தொழு வத்தில் கட்டினான். மாடுகளை அதன் அதன் வீடுகளுக்கு ஓட்டிச்சென்று படல்களைத் திறந்து உள்ளே துரத்தினான். இதற்கெல்லாம் அவனது தேகம் சூத்திரப் பாவை போல் இயங்கியதே தவிர மனமென்னமோ….

அவன் வீடு வந்து சேரும்போது இரவின் வலுவான பிடிக்குள் உலகம் சுருண்டு விட்டது. வளர்ந்த விஞ்ஞான அறிவில் பரிணமித்த மின்சார விளக்குகள் இரவைப் பகலாக்க முயன்று கொண்டிருக்கும் அந்த, நகரத்தில் குருடனின் விழிகள் போன்று இருண்டிருக்கும் ஒழுங்கை களால் அவன் நடந்து வர நேரம் பிடித்து விட்டது.

விறாந்தையில் ஒரு கை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரக் கிழவி வெளித் திண்ணையில் காலை நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பிரசவ அறைக்குள் பூனைபோல நுழைந்த சின்னக் குட்டியன் – எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்துத் தையலம்மையின் முகத்தைக் குனிந்து பார்த்தான். பிள்ளைப் பேற்றினால் களைப்புற்றுச் சோர்வுற்றுத் துவண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள், அவள்.

தையலம்மையைத் தாயாராக்கி அவனைத் தந்தை நிலைக்கு உயர்த்திய சின்னஞ் சிறு சிசுவொன்று சீலைப் பொதிக்குள்ளே வளர்த்தப் பட்டுக் கிடக்கிறது.

முற்றவெளியில் கட்டச்சிப் பசுவுக்குப் பிறந்த அந்தக் கன்றைத் தடவுகையில் அவன் கண்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த இன்பம் இங்கே..

கண்கள் பரபரக்கின்றன; கைகள் துருதுருக்கின்றன.

அவனது வாரிசாக, அவனை நினைவூட்டி அவனது குலக் கொழுந்தாய், சந்ததியின் தனித் துளிராய் பிஞ்சுக் கைகளை உயர்த்தி, விரித்து, விரல்களைப் பரப்பி, கால்களை மாறி மாறி உதைத்துக் கொண்டு கிடக்கும் அந்தப் பச்சை மண்ணைத் தூக்கி ஆவல் நிறைந்த பார்வையால் ஆராய்ந்து பார்க்கிறான். கை வருடி வருடி எதையோ மனதிற்குச் செய்தியாக அறிவிக்கின்றது.

அவனது நெஞ்சை நிறைத்து அதுவரை அவனது நெஞ்சினை அரித்து வந்த மனப் பிராந்தியைப் போக்கி விட்டதா, அந்தச் செய்தி?

அதோ அவனது முகத்தில் இழையும் சந்துஷ்டி ரேகைகளும் புன்முறுவலும், பின்பு எதைத்தான் புலப்படுத்துகின்றன?

– 25-3-1960 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *