கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 14,877 
 

அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள்.

அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள்.

“”அதான் சேர்ந்து மூணு நாள் ஆச்சே.. இன்னும் கூட வா கூடவான்னு சொல்லிட்டிருந்தா என்னடி அர்த்தம்.. டீச்சர் ஆன்ட்டிதான் வர்றாங்களே..” என்று அதட்ட, வள்ளி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தில் காணப்படும் இனம் புரியாத பயம், ஏதோ தனிமைப்பட்டிருப்பதைப் போன்ற அன்னிய உணர்வு, அவள் இன்னும் பள்ளியோடு ஒட்டவில்லை என்பதையே காட்டியது.

Muththamஆசிரியர் கோமதி, வள்ளியின் முன்னால் வந்து குனிந்து, “”என்னடி செல்லம்.. அதான் நான் வர்றேன்ல்ல.. அப்புறம் உனக்கெதுக்கு பயம்.. எங்க எனக்கு ஒரு முத்தம் கொடு..” என்று கன்னத்தைக் காட்டி கேட்டாள். வள்ளி ஆசிரியரை அமைதியாகப் பார்த்துவிட்டு, திரும்பி, பள்ளி இருக்கும் திசையை நோக்கி மெதுவாக நடந்து சென்றாள்.

“”பள்ளிக்கூடத்துலயும் இதே மாதிரி உம்முன்னுதான் இருக்காளா?”

“”அப்படியொண்ணும் தெரியலை.. புள்ளைங்களோட பழகிட்டுதான் இருக்கா.. போகப் போக சரியாயிடும்.. வீட்டைப் பாத்துக்க லட்சுமி..” என்று சொல்லிவிட்டு நாலு அடி எடுத்து வைத்தவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் திரும்பி, “”லட்சுமி.. இன்னும் என்னோட ரூம் ஒழுங்குக்கே வரலை.. நீ கொஞ்சம் பார்த்து ஒழுங்குபடுத்தி வையி..” என்று சொல்லிவிட்டு வள்ளியைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சேலத்திலிருந்து வீடு மாறி வந்து மூன்று நாள் தான் ஆகிறது. கோமதிக்கு தன் கணவன் ரவியிடம் ஏற்பட்ட முரண்பாடு முற்றி விவாகரத்து வரை போய், அது இப்போது குடும்பநல நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அங்கிருக்கும் உறவுகளும், நட்புகளும் அவளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏதோ ஒரு வகையில் அவளுடைய பிரச்சினைகளைக் கிளறிக் கொண்டிருக்க, அதை மறக்க வேண்டும் மன அமைதி வேண்டும் என்பதற்காகவே தனக்கு தெரிந்த கல்வி அதிகாரியைப் பார்த்துப் பேசி திருப்பூருக்கு மாறுதல் வாங்கி விட்டாள்.

திருப்பூர் நகருக்கு வெளியே அந்தப் பள்ளி இருந்தது. அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருந்த இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறி விட்டாள். வயலாக இருந்து அடுத்து பிளாட் போட்டு விற்பனை செய்வதற்கு ஏதுவான வகையில் தரிசாக போடப்பட்டிருக்கும் அந்த வெட்ட வெளியில் ஒரு கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குப் போவது கோமதிக்கு ஏனோ மன அமைதியைக் கொடுத்தது.

ஆனால் லட்சுமிக்குதான் திண்டாட்டமாக இருந்தது. குடியால் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, தன் ஒரே பிள்ளை வள்ளியை நல்லபடியாகக் கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக கோமதியின் வீட்டுக்கு வேலைக்காரியாக சேர்ந்து பம்பரமாக இயங்கி வந்தாள். கோமதி ஊர் மாறியதால் இவளும், வள்ளியும் கூடவே வந்துவிட்டார்கள். அங்கேயும் இங்கேயும் வள்ளியின் படிப்பு, கோமதி வேலை செய்யும் அரசுப் பள்ளியே என்றாகிவிட்டதால் வள்ளியின் படிப்பு பற்றி லட்சுமி கவலைப்பட்டதில்லை.

வள்ளிக்கு எப்படி பள்ளி ஒட்டவில்லையோ அதேபோல் லட்சுமிக்கும் வீடு இன்னும் ஒட்டவில்லை. காய்கறி, மளிகை என்று எல்லாவற்றிக்கும் தூரமாகப் போக வேண்டியிருக்கிறது. மளிகைப் பொருட்கள் பிரச்சினையில்லை. மொத்தமாக வாங்கிப் போட்டுவிட்டால் மாதம் முழுக்க வந்துவிடும். காய்கறிதான்.. அதையும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மார்க்கெட்டுக்குப் போய் விரைவில் கெட்டுப் போகாத காய்கறிகளை ஒரு வாரத்துக்கு மொத்தமாக வாங்கிப் போட்டுவிட வேண்டும் என்று முடிவோடு இயங்கத் தொடங்கினாள்.

பள்ளி மாணவர்கள் பிரேயருக்கு தயாராகிக் கொண்டிருக்க, வரிசையில் நின்று கொண்டிருந்த வள்ளியின் காதில் அவள் பின்னால் நின்று கொண்டிருந்த உமா, “”வள்ளி.. ஊருக்குப் போயிருந்த எச்.எம். டீச்சர் வந்துட்டார்டி..” என்று சொன்னாள். உமா.. இந்த பள்ளியில் வள்ளிக்கு கிடைத்த முதல் நட்பு.

“”எங்கடி..” என்று கேட்ட வள்ளியின் கண்கள் யாராவது புதிதாக வந்திருக்கிறார்களா? என்று நோட்டமிட்டது.

“”அதோ.. எச்.எம். ரூமிலிருந்து வராங்களே அவங்கதான்..” என்று கையை நீட்டாமல் கண்களாலேயே காட்டினாள். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க தலைமையாசிரியர் சிவகாமி, அமைதியாக வந்து நிற்க, பிரேயர் தொடங்கியது. தலைமையாசிரியர் எதுவும் பேசவில்லை. சக ஆசிரியர்களே பிரேயரை வழிநடத்தினார்கள்.

“நீராடும் கடலுடுத்த..’ தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் வரிசையில் நின்றிருந்த மாணவர்கள் அதே வரிசையில் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

உமா, வள்ளியின் கையைப் பிடித்து, “”வாடி.. எச்.எம். டீச்சர்கிட்ட உன்னை அறிமுகப்படுத்துறேன்..” என்று கூப்பிட, “”ஐயோ.. எச்.எம். டீச்சர்கிட்டயா.. வேண்டாம்டி.. பயமாயிருக்கு..” என்று மறுத்தாள்.

“”பேசறதுக்கு எதுக்கடி பயம்.. வாடி..” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தலைமையாசிரியர் சிவகாமியின் அருகில் வந்தாள்.

“”டீச்சர்.. இவ புதுசா எங்க கிளாசுக்கு வந்திருக்கா.. பேரு வள்ளி..”

“”ஓ.. புது ஸ்டூடன்ட் வள்ளியா..” என்று சொல்லிக் கொண்டே, வள்ளியின் தோள் மீது கை வைத்து புடவை தரையில் படாமல் மண்டியிட்டு அமர்ந்த தலைமையாசிரியர் சிவகாமி, “”ஸ்கூல் புடிச்சிருக்கா வள்ளி?”..என்று அன்போடு கேட்கிறார்.

வள்ளி வாயைத் திறக்காமல் “” ம்..” என்கிறாள்.

“”இடையில வந்து சேர்ந்துருக்கே.. புக்கு நோட்டெல்லாம் இருக்கா..?”

“”ம்..”

“”ஏதாவது வேணும்னா கேளு..” என்று சொல்ல வள்ளி தலையசைத்தாள்.

“”சரி.. கிளாசுக்குப் போங்க.. நான் அப்புறமா அங்க வறேன்..” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றார்.

வள்ளியும், உமாவும் திரும்பி நடக்கும் போது, “”வள்ளி.. எச்.எம். டீச்சரு ஏன் உனக்கு முன்னாடி உக்காந்து பேசுனாங்க தெரியுமா..?”

யோசனையுடன், “”தெரியலையே..”

“”ஏன்னா.. நின்னுட்டு கீழ பாத்து போசினா.. அதிகாரமாப் பேசத் தோணுமாம்.. கண்ணுக்கு கண்ணு நேரா பாத்துப் பேசினாத்தான் அன்பாப் பேசமுடியும்ன்னு சொல்லுவாங்க..”

உமா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் வள்ளிக்கு மின்சாரம் பாய்ச்சியது போல் உணர்ச்சி. அவள் உடல் சிலிர்த்தது.

“”அப்படின்னா.. அடிக்கவே மாட்டாங்களா..?”

“”திட்டக்கூட மாட்டாங்கடி.. வா போலாம்..” கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

உமா இழுத்த இழுப்புக்கு வள்ளியின் கால்கள் நகர மறுத்தது. திரும்பி தலைமையாசிரியரையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கண்களில் ஓர் அதிசயத்தைப் பார்க்கும் பரவசம்.

“”வாடி போலாம்..” என்று சொல்லிக் கொண்டே உமா இழுத்த இழுப்புக்கு, கால்கள் தடுமாற திரும்பிய பார்வையோடு வள்ளி தலைமையாசிரியரையே பார்த்துக் கொண்டு சென்றாள்.

“”அடிக்கவே மாட்டாங்களா..” என்று வள்ளி, உமாவைப் பார்த்துக் கேட்டாள். இதுவரை பத்து முறைக்கு மேல் கேட்டிருப்பாள். பதில் சொல்லி அலுத்துப் போயிருந்த உமா, இந்த முறை பதில் சொல்லாமல் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். கோமதி ஆசிரியர் கரும்பலகையில் எழுதியிருந்த குறிப்புகளைக் கையிலிருந்த குச்சியால் தொட்டுக் காட்டி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

வள்ளிக்கு ஏனோ பாடத்தில் மனம் பதியவே இல்லை. எதிரில் கோமதிஆசிரியர் ஏதோ ஒரு கேள்வியை ஒரு மாணவனிடம் கேட்டதும், அவன் தெரியாமல் முழிக்க கையிலிருந்த குச்சியால் அவன் கையை நீட்டச் சொல்லி அடித்ததும் என்னமோ அரைத் தூக்கத்தில் கனவில் நடப்பது போல் அவளுக்கு இருந்தது.

“”நான் உள்ள வரலாமா..?” என்ற குரல் கேட்டு வள்ளி சுய நினைவுக்கு வந்தாள். அறை வாசலில் தலைமையாசிரியர் நின்று கொண்டிருந்தார்.

பாடம் நடத்திக் கொண்டிருந்த கோமதி திரும்பிப் பார்த்து சிரித்தபடி, “”வாங்க டீச்சர்.. நீங்க வர்றதுக்கு எதுக்கு பர்மிஷன்..?”

உமா, வள்ளிக்கு மட்டும் கேட்கும் காதோடு காதாக, “”இப்ப ஒரு நாடகம் நடக்கப் போகுது பாரேன்..” என்று சொல்ல, “”என்ன நாடகம்..” என்று புரியாமல் கேட்டாள்.

“”எச்.எம். டீச்சரோட கண்ணு எதை கவனிக்குதுன்னு பாரு..” என்று உமா சொன்னாள்.

அவள் கண்கள், சிவகாமியின் பார்வை எங்கே போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “”ஏய்.. கோமதி டீச்சர் வெச்சிட்டிருக்கிற குச்சியத்தான்டி பாக்குறாங்க..” என்று சொன்னாள்.

“”எங்க புள்ளைங்கெல்லாம் எப்படி இருக்காங்க..?” என்று கேட்டபடியே உள்ளே வந்தார் தலைமையாசிரியர்.

“”இப்பப் பாரு.. பேசிட்டே வந்து அந்த குச்சிய கையில வாங்குவாங்க பாரோன்..” என்று உமா சொல்கிறாள்.

“”உங்க புள்ளைங்களுக்கு என்ன.. பாதி பேரு தங்கம்.. பாதி பேரு வெள்ளி..” என்று கோமதி சொல்ல, சிவகாமி கலகலவென சிரிக்கிறார்.

“”நல்லா பேசுறீங்க.. உண்மை என்னன்னா.. எல்லாருமே தங்கம்தான்.. நாமதான் அவங்களை வெள்ளியா ஆக்கிடுறோம்..” என்று பேசிக் கொண்டே கோமதி ஆசிரியரின் அருகில் வந்த தலைமையாசிரியர், கைகளை நீட்டினார். குச்சியைத்தான் கேட்கிறார் என்று புரிந்து கொண்ட கோமதி, குச்சியை அவர் கையில் குடுத்தார்.

“”இப்பப் பாரேன்.. எவ்வளவு நேரம் பேசிட்டிருந்தாலும் கடைசி வரைக்கும் குச்சியைக் குடுக்க மாட்டாங்க.. அப்படியே கொண்டு போயிடுவாங்க..” என்று உமா குசுகுசுத்தாள்.

சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, வாசல் பக்கம் வந்த தலைமையாசிரியர், மாணவர்களைப் பார்த்து, “”உங்களுக்கு அடுத்த கிளாஸ் யாரு..?” என்று கேட்க, “”பி.டி.கிளாஸ் டீச்சர்” என்று மாணவர்களிடமிருந்து கோரசாக பதில் வருகிறது.

“”பி.டி. கிளாஸ்ன்னா சந்தோசம் தாங்க முடியலை.. சரி பாத்து வெளையாடுங்க” என்று சொல்லிவிட்டு, “”கோமதி டீச்சர்.. கிளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து பாருங்க..” என்று சொல்லிவிட்டு குச்சியைக் கொடுக்காமல் சென்று விட்டார். குச்சியைக் கேட்பதற்கு மனம் பரபரத்தாலும் என்ன தயக்கமோ கோமதியும் கேட்க முடியவில்லை.

“”ஆமான்டி.. நீ சொன்ன மாதிரியே கொண்டு போயிட்டாங்க.. அந்த குச்சியை என்னடி செய்வாங்க..?”

மத்தியான சாப்பாட்டுக்கு அது வெறகாப் போயிடும்.. என்று உமா சிரித்துக் கொண்டே சொல்லும் போது மணி அடித்தது.

கோமதி டீச்சர் வெளியே சென்றதும், மாணவர்கள் ஓட்டமாக வெளியே ஓடினார்கள்.

வள்ளியின் கையைப் பிடித்த உமா, “”இங்க வா.. உனக்கு இன்னொரு நாடகத்தைக் காட்டுறேன்..” என்று சொல்லி அவளை வெளியே அழைத்துச் சென்றாள்.

வகுப்பறைகள் சதுரமாகக் கட்டப்பட்டிருக்க, நடுவில் விளையாட்டுத் திடல். வடக்கு திசையில் நான்கு வகுப்புகளுக்கு மத்தியில் தலைமையாசிரியர் அறை இருந்தது. அறை வாசலில் புங்கை மரம் அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

அந்த மரத்தின் கீழ் மறைவாக நின்று கொண்டு உமாவும், வள்ளியும் பார்க்க, தலைமையாசிரியர் அறை தெரிந்தது. அறையில் தலைமையாசிரியரும், கோமதி ஆசிரியரும் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசுவது வெளியே கேட்கவில்லை என்றாலும் அதைப் பார்த்து, “”இப்ப எச்.எம். டீச்சர் என்ன சொல்லுவாங்க தெரியுமா..?” என்று உமா கேட்க, என்ன சொல்லுவாங்க.. வள்ளி திருப்பிக் கேட்க, “”உக்கும்..” என்று உமா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “”இதப் பாருங்க கோமதி டீச்சர்.. குழந்தைங்களை அடிக்கக் கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போடறதுக்கு முன்னாடியே.. இங்க அது நடைமுறையில இருக்கு.. அடிக்கக் கூடாதுங்கறது மட்டுமில்ல.. குச்சியைக் கூட வெச்சிக்கக் கூடாது.. இப்படிச் சொல்லுவாங்க..” என்று சிவகாமி ஆசிரியர் பேசுவதைப் போல் பேசிக்காட்டினாள்.

உள்ளே கோமதி டீச்சர் பேசிக் கொண்டிருந்தார்.

“”இதுக்கு கோமதி டீச்சர் என்ன சொல்லுவாங்கன்னா..” என்று சொல்லப்போக,

“”எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்.. நான் சொல்றேன்..” என்று வள்ளி சொல்லிவிட்டு அவளும் உமா பாணியில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “”இதப் பாருங்க எச்.எம்.டீச்சர்.. அடியாத மாடு படியாது.. நான் என்ன வேணும்னா அடிக்கிறேன்.. தப்பு பண்ணுனா.. குறும்பு பண்ணுனாத்தானே அடிக்கிறேன்.. இப்படிச் சொல்லுவாங்க..” என்று வள்ளி சொன்னாள்.

உள்ளே சிவகாமி ஆசிரியர் பேசிக் கொண்டிருந்தார்.

“”குழந்தைகளை மாடா பாக்காதீங்க டீச்சர்… மனுசங்களா பாருங்க.. அப்ப உங்களுக்கு அடிக்கத் தோணாது.. இப்ப மாடுகளைக் கூட அடிக்கக் கூடாதுன்னு நிறைய அமைப்புகள் போராடுது.. இப்படிச் சொல்லுவாங்க..” என்று உமா சொன்னாள்.

உள்ளே கோமதி ஆசிரியர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“”டீச்சர்.. நாம அடிக்கிறமோ இல்லையோ.. அடிப்போம்ங்கற பயம் இருந்தாத்தான் புள்ளைங்க படிப்பாங்க.. கத்துப்பாங்க.. இப்படிச் சொல்லுவாங்க” என்று வள்ளி.

உள்ளே சிவகாமி ஆசிரியர் பேசிக் கொண்டிருந்தார்.

“”டீச்சர்.. குழந்தைங்க தூங்குற நேரம் தவிர.. மத்த எல்லா நேரமும் கத்துக்கிட்டுதான் இருக்காங்க பல்வேறு விசயங்களை.. அவங்க கத்துக்கிறதுக்கு நாம உதவி பண்றோம்.. அவங்க கத்துக்கிற முறையை ஒழுங்கு படுத்துறோம்.. அதுக்குத்தான் பள்ளிக் கூடம்.. நம்ம மாதிரி டீச்சர்ஸ்.. மத்தபடி நாம பெருசா ஒண்ணும் செஞ்சிடறதில்லை.. இப்படிச் சொல்லுவாங்க..” என்று உமா பேசிக் காட்ட, அப்போது கோமதி ஆசிரியர் எழுந்து நின்றார்.

அதைப் பார்த்து, “”ஆ.. பேசிட்டாங்க போலிருக்கு.. எச்.எம்.டீச்சரு கடைசியா என்ன சொல்லுவாங்க தெரியுமா.. இந்த பள்ளிக் கூடத்தோட நடைமுறையைச் சொல்லிட்டேன்.. அது மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க கோமதி டீச்சர்..” என்று பேசிக் காட்ட, கோமதி ஆசிரியர் வெளியே வர, உமாவும் வள்ளியும் பேச்சை நிறுத்திவிட்டு விளையாட்டு மைதானத்திற்கு வந்தார்கள்.

உமாவின் கையைப் பிடித்தபடி, “”நெசமாவே இங்க அடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கா..” என்று வள்ளி கேட்க, “”ஆமான்டி..” என்று உமா பதில் சொன்னாள்.

“”ஐயோ.. எனக்கு என்னமோ பண்ணணும்னு தோணுதே..” என்று உமாவின் கையைப் பிடித்தபடி வேகமாக ஓடினாள். வள்ளியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உமா மெதுவாக ஓட, அவள் கையை விட்டுவிட்டு வள்ளி வேகமாக ஓடி பள்ளிக்குப் பின்புறமிருந்த வெட்ட வெளிக்கு வந்து நின்றாள்.

“”ஏய் நில்லுடி.. நில்லுடி..” என்று கத்திக் கொண்டே உமா ஓடி வந்து வள்ளி அருகே நின்றாள்.

வள்ளியைப் பார்த்து, “”என்னடி?” என்று கேட்க, வள்ளி, ஊ.. என்று கத்திக் கொண்டு இரண்டு கைகளையும் அகல விரித்து அப்படியே சுற்றினாள். போட்டிருந்த யூனிஃபார்ம் உடை காற்றில் பறந்து அவள் மனம் போல் அலைபாய்ந்தது. அவள் பார்வையில் காட்சிகள் வேகமாக சுற்றியது. அப்படியே வானத்தைப் பார்த்தாள். வானம் வேகமாகச் சுற்றியது. சிறிது நேரம் சுற்றிவிட்டு தடுமாறி நின்றவள், விழாமல் இருக்க முட்டி மீது கை கையைத் தாங்கலாக கொடுத்து மூச்சு வாங்கினாள். அவளுக்குள் அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு.

“”என்னடி..” என்று உமா கேட்க, “”புடிச்சிருக்குடி..” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு மீண்டும் வேகமாகச் சுற்றி தடுமாறி கீழே விழுந்து கிறுகிறுப்பில் தலை சுற்ற உமாவைப் பார்த்து சிரிக்கிறாள்.

இன்னொரு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வள்ளி ஆர்வத்தோடு பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது தலைமையாசிரியர் வராண்டாவில் நடந்து செல்வது தெரிய, வள்ளி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் கண்பார்வையிலிருந்து மறைந்ததும், வள்ளி எழுந்து நின்று பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியரிடம் ஒற்றை விரலை நீட்ட, ஆசிரியர் “”போய் வா” என்று சைகையால் அனுமதி கொடுத்தார்.

வெளியே வந்த வள்ளி, தலைமைசிரியர் சென்ற திசையைப் பார்க்க, அவர் தனது அறைக்குள் செல்வதை பார்த்தாள். வேகமாக நடந்து, வலது புறம் திரும்பி தலைமையாசியர் அறைக்கு பின்புறமாக வந்து சேர்ந்தாள்.

அங்கே சன்னல் இருக்க, கம்பியை இரு கைகளால் பற்றிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். தலைமையாசிரியர், எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வள்ளி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தலைமையாசிரியர் ஏதேச்சையாக திரும்ப, வள்ளியைப் பார்த்து விட்டார். வள்ளி அவரைப் பார்த்து சிரிக்க, பதிலுக்கு அவரும் சிரித்தார். சட்டென்று சன்னலை விட்டு விலகிய வள்ளி மெதுவாக ஓடிவந்து, சிவகாமி ஆசிரியர் அறைக்கு முன்பாக வந்து சில வினாடிகள் நின்று, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்துவிட்டு, ஓடிப் போய் தனது வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டாள். வள்ளியின் குழந்தைத்தனமான இந்தச் செயலைக் கண்டு தலைமையாசிரியர் புன்னகையுடன் தலையாட்டிவிட்டு எழுதுவதைத் தொடர்ந்தார்.

அன்றைய தினத்தின் கடைசி மணி அடித்தவுடன் மாணவர்கள் அனைவரும் வேகமாக வெளியே ஓடி வந்தார்கள். வள்ளியுடன் வெளியே வந்த உமா அவளுக்கு டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டாள். வள்ளி, கோமதி ஆசிரியருக்காகக் காத்திருந்தாள். கோமதி ஆசிரியர் வருவதற்குள் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறியிருந்தனர்.

கோமதி வந்து வள்ளியைப் பார்த்து புன்னகைத்தபடி வள்ளியின் கையைப் பிடித்து, போலாமா.. என்று அழைத்தார். வள்ளி தலையசைத்துவிட்டு நடந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு வள்ளி திரும்பிப் பார்க்க, சற்று தள்ளி தலைமையாசிரியர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவரைப் பார்த்ததும் வள்ளியின் கால்கள் தானாக நடப்பதை நிறுத்திக் கொண்டது.

“”டீச்சர் ஒரு நிமிஷம்.. வந்துடுறேன்..” என்று கோமதி ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வள்ளி தலைமையாசிரியரை நோக்கி துள்ளிக் குதித்து ஓடினாள். அவர் அருகில் சென்று அவரைப் பார்த்து சிரித்தாள். தலைமையாசிரியர் அவளின் வித்தியாசமான செய்கையில் ஈர்க்கப்பட்டவராய், அவளைப் பார்த்து பதிலுக்கு சிரித்தார். அவரின் சிரிப்பு வள்ளிக்கு வெட்கத்தை ஏற்படுத்த, தலையைக் தாழ்த்திக் கொண்டு தரையைப் பார்த்து நிற்கிறாள்.

தலைமையாசிரியர் காலையில் செய்ததைப் போல் மண்டியிட்டு அவள் முன் அமர்ந்து, புன்னகையோடு, “”வள்ளிதானே உம்பேரு.. ஏதாவது சொல்லணுமா..?” என்று கேட்கிறார்.

“”இல்லை” என்பதாக தலையாட்டிய வள்ளி, தலைமையாசிரியர் எதிர்பாராத வகையில் அவர் தோளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் பச்சென்று அழுத்தமாக முத்தமிட்டாள்.

அச்செயலை எதிர்பார்க்காத தலைமையாசிரியர் வாஞ்சையோடு அவளைப் பார்த்தார்.

மீண்டும் இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு வள்ளி, துள்ளிக் குதித்து ஓடினாள்.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த கோமதியின் முகம் வாடிப் போனதற்கு காரணம் இருக்கத்தான் செய்தது.

அன்று வீட்டுக்கு வந்த வள்ளி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டாள். சுறுசுறுப்பாக அம்மாவோடு இணைந்து வீட்டு வேலைகளைச் செய்தாள். வீட்டுப்பாடத்தை செய்து முடித்தாள். மகளின் உற்சாகத்திற்குக் காரணம் தெரியாவிட்டாலும் அம்மா லட்சுமிக்கு அவளின் போக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வள்ளியின் மாற்றம் கோமதிக்குத்தான் உறுத்திக் கொண்டிருந்தது. தான் காலையில் முத்தம் கேட்டபோது மறுத்துவிட்டுப் போன காட்சியும், தலைமையாசிரியருக்கு கேட்காமலேயே முத்தமிட்ட காட்சியும் அவள் கண்முன் அடிக்கடி வந்து சென்றது. கோமதிக்கு பொறாமையாக இருந்தது. கூடவே, தலைமையாசிரியர் “”உங்க அணுகுமுறையில பிரச்சினையிருக்கு டீச்சர்.. யோசிங்க..” என்று சொன்னது அடிக்கடி நினைவுக்கு வந்து அவளின் அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தது.

எதையெதையோ யோசித்தவள், செல்போனை எடுத்து அழைப்பை அழுத்தி விட்டு காதில் வைத்தாள். மறு முனையில் அவள் கணவன் ரவி போனை எடுக்க.. “”நான் கோமதி பேசுறேன்.. எனக்கு.. என்னமோ.. நான் தப்பு பண்றதா தோணுது ரவி.. என்னோட அணுகுமுறையில பிரச்சினை இருக்குறதா நான் உணர்றேன்.. நாம சந்திச்சு பேசலாமா.. என்னால அங்க வர முடியாது.. நீ இங்க வாயேன்.. பிளீஸ்..”

அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கீழே விழுவதா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு நின்றது.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *