Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முத்தங்கள் நூறு!

 

அந்த தொலைபேசியில் வந்த செய்தி ஜெபநேசனை நிலைகுலையச்செய்தது. அவன் தலையில் இடிவிழுந்து மண்டை பிளந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அவர் தலைவலிக்க ஆரம்பித்தது. அப்படியே மனம் தளர்ந்து அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென சாய்ந்தார்.

அவரது ஒரே ஒரு மகளான மேரி ரொஸலின் பாடசாலை விட்டு வரும் வழியில் வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்த்தபின் உயிரை விட்டிருக்கிறாள்.

ரொஸலினுக்கு அண்மையில்தான் பதினொரு வயது பூர்த்தியாகியிருந்தது. அவள் பிறக்கும்போதே அவளின் அம்மாவை இழந்து விட்டதால் அவள் அம்மாவை விழுங்கிவிட்டுத்தான் பிறந்தாள் என உறவினர் எல்லோரும் சபித்தார்கள்.

ஜெபநேசன் கூட அம்மா இல்லாத அந்தப் பிள்ளையை அன்பாக அரவணைத்து தேற்றியது கிடையாது. தனக்கு கோபம் வரும் போதெல்லாம் அதனை ஒன்றுமறியாத அந்தப் பிள்ளைமீது தான் காட்டுவார்.

ரொஸலின் சிறுவயது முதலே தனது சித்தியுடன்தான் வாழ்ந்தாள். சித்திகூட தனது பிள்ளைகளிடம் காட்டிய அன்பில் ஒரு துளியையாவது அவளிடம் காட்டியதில்லை.

ஆனால் ரொஸலினோ தன் தந்தை மீது ஆயிரம் மடங்கு அன்பை வைத்திருந்தாள். அவர் என்னதான் ஏசிப் பேசினாலும் அதனை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவே மாட்டாள்.

ஜெபநேசன் நிரந்தரமான ஒரு தொழில் புரிபவர் அல்ல. அங்கேயும் இங்கேயுமாக வழிக்கு வந்த வேலைகளைச் செய்வார். அவர் ஒரு மோட்டார்கார் மெக்கானிக்காக இருந்தபோதும் ஒரு காராஜில் நிரந்தரமாக வேலை செய்தது கிடையாது.

இதன் காரணமாக வீட்டில் எப்போதும் நிதி நெருக்கடி இருந்து கொண்டுதான் இருந்தது. நடந்து முடிந்த கடந்த வருட கிறிஸ்மஸ் தின கொண்டாட்டத்தின்போது ரொஸலின் அண்டை அயலில் உள்ள தன் நண்ப, நண்பிகளை கூட்டி வந்து வீட்டின் முன்றலில் கிறிஸ்மஸ் மரம் ஒன்றை நாட்டி அதனை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். அவர்கள் பச்சை, மஞ்சள், சிவப்புத் தாள்கள் என்று மின்னும் வண்ணக் கடதாசிகளை வாங்கி வந்து கார்ட்போட்களை வெட்டி ஒட்டி சிறு சிறு பரிசுப் பெட்டிகள் செய்து மரத்தில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் களைத்து வீடு திரும்பிய ஜெபநேசனுக்கு அதைப்பார்த்ததும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வீட்டில் காசுக்கு கஸ்டமான நேரத்தில் இது என்ன வீணான செலவு என்று கோபத்தில் எரிந்து விழுந்தார். இத்தகைய கோபங்களும் ஏச்சுப் பேச்சும் வழக்கமானதுதான் என்று கருதி அதனை சட்டை செய்யாமல் விட்ட ரொசலின், அந்த சம்பவம் தனது நண்பர்களுக்கு முன்னால் நடந்ததை எண்ணி மாத்திரமே வருத்தப்பட்டாள். அது அவளுக்கு பெரிய அவமானமாக இருந்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நண்பர்கள் எல்லாம் அந்த கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிப்பதை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இருந்தாலும் அவள் பொறுமையுடன் தனியாகவே அதன் அலங்காரத்தைப் பூர்த்தி செய்தாள்.

சில தினங்களில் கிறிஸ்மஸ் நாளும் வந்தது. அதிகாலையிலேயே எழுந்து விட்ட ரொஸலின் குளித்து முழுகி தன்னை அலங்காரம் செய்து கொண்டு தனக்கிருந்த, தான் விரும்பும் ஆடையொன்றையும் உடுத்திக்கொண்டு தான் ஏற்கனவே தங்க நிற வண்ணத் தாளால் ஒட்டி செய்திருந்த ஒரு பரிசுப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து தனது தந்தை ஜெபநேசன் இருந்த இடத்தைத் தேடி ஓடி வந்தாள். அவளது சந்தோசம் எல்லையற்றது என்பதனை அவள் ஓடிவந்த விதத்திலேயே ஊகிக்கலாம்.

அவள் நேராக தன் அன்பு அப்பாவின் கைக்குள் நுழைந்து தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பெட்டியினை “அப்பாவுக்கு இந்த அன்பு மகளின் பரிசு” என்று கூறி அதனைக் கொடுத்தாள். ஜெபநேசனின் அந்த இரும்பு மனமும் இச் செயலால் சற்றே கனிந்தது. அவரும் சில தினங்களுக்கு முன் கிறிஸ்மஸ் மரத்தை அவள் அலங்கரித்துக்கொண்டி ருந்தபோது அவளை திட்டியமைக்காக வருத்தப்பட்டு அந்தப் பெட்டியை ஆவலுடன் திறந்தார். ஆனால் அந்தப் பெட்டிக்குள் ஒன்றுமே இருக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்து அவருக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. “சனியனே! யாருக்கும் பரிசுப் பெட்டியைக் கொடுக்கும் போது ஏதாவது பரிசொன்றை பெட்டியில் வைத்துக் கொடுக்க வேண்டுமென்பது கூட உனக்குத் தெரியாதா?” என்று பலமாக கத்தி ஏசியதுடன் அந்தப் பெட்டியை தான் அமர்ந்திருந்த மேசையின் ஒரு மூளையில் தூக்கி எறிந்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரொஸலினின் கண்களில் கண்ணீர் நிறைய வாரம்பித்தது. “இல்லையப்பா, அது வெற்றுப் பெட்டியில்லை அப்பா, அதில் அப்பாவுக்கு என் அன்பு முத்தங்கள் என்று நூறு முத்தங்களை ஊதி பெட்டி முழுதும் நிறைத்துத் தந்திருக்கிறேன் அப்பா” என்றாள் மிகப் பரிதாபகரமாக.

அதன் பின் ரொஸலின் மனதால் மிகத்தளர்ந்து போனாள். அவளால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. வழக்கமாக பள்ளிக்கூடத்தில் ஆடி, ஓடி எல்லா நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாகக் கலந்து கொள்ளும் ரொஸலின் ஒரு மூளையில் அமர்ந்து எதனையோ வெறித்துப் பார்த்து யோசித்துக் கொண்டிருப்பாள்.

நண்பர்களும் அவளது இந்தப் போக்கால் அவளை உதாசீனப்படுத்தினார்கள். இதுவரை படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த அவளை அள்ளி அனைத்துத் தட்டிக் கொடுத்த ஆசிரியர்கள் அவள் படிப்பில் கவனமெடுத்துக் கொள்ளாததை அறிந்ததும் அவளை கடைசிக் கதிரையில் அமரச் செய்து தண்டனை கொடுத்தனர்.

வீட்டிலும் அவளது நடவடிக்கைகள் இவ்வாறே உப்புச் சப்பற்றதாக யாருடனும் ஒட்டாத போக்கிலேயே அமைந்தபோதும் இவள் ஏற்கனவே வீட்டில் வேண்டப்படாத, வெறுக்கப்படும் ஜீவனாகவே இருந்து வந்ததால். இவளை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவள் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் பிரக்ஞையற்றவளாக, சித்த சுவாதீனமற்றவளாக மாறிக்கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு நாள் பாடசாலையை விட்டுத் திரும்பி வரும் போது வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இன்றி நடைப்பிணம் போல் பாதையில் கவனம் செலுத்தாமல், மஞ்சள் கோடில்லாத இடத்தில் பாதையைத் தாண்ட முற்பட்ட போதுதான் அந்த விபத்து நடைபெற்றது. அவள் தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று சிந்திக்க திராணியற்றவளாக இந்த உலகத்தைவிட்டே பிரிந்து போய்விட்டாள்.

அவளது இறுதிச் சடங்கு தொடர்பான எல்லாக் காரியங்களும் மிக மௌனமாகவே நடந்தேறின. அவள் இறந்து போன பின்புதான் ஜெபநேசனுக்கும் வீட்டினருக்கும் அவள் இல்லையே என்ற இழப்பு புரிந்தது. அதன் பின்னரே ஏன் அவளுக்கு இப்படி நடந்ததென்று வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் பேசவாரம்பித்தனர்.

பாடசாலையில் அவளது ஆசிரியர்கள் கூட “அவளை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோமே” என்ற குற்ற உணர்வுக்கு ஆளானார்கள்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல் ஜெபநேசனுக்கு அப்போதுதான் தன் குருட்டுத்தன்மை புலப்பட்டது. அன்றொரு நாள் கிருஸ்மஸ் தினத்தன்று அவள் எவ்வளவு ஆவலுடன் அந்தப் பரிசுப் பெட்டியை தன்னிடம் தந்தாள் என ஞாபகத்துக்கு வந்த போதுதான் அந்த மனதால் குருடனான மடத்தந்தைக்கு அன்பு பொத்துக்கொண்டு வந்து கண்கள் குளமாகி கண்ணீரைப் பொழிந்தன. அவர் ஓடோடிச் சென்று தான் வீசிய இடத்தில் அந்தப் பெட்டி கிடக்கிறதா என்று பார்த்தார். ஆம் இப்போதும் அந்தப் பெட்டி மேசையில் சுவரோரத்தில் பாதிபிரித்தபடி அநாதரவாகக் கிடந்தது. அவர் அதனை பரிவுடன் எடுத்து பக்குவமாகத் தடவிப் பார்த்தார். அதற்குள் அவரது அன்பு மகள் அவருக்கு அன்புப் பரிசாகத் தந்த அந்த நூறு முத்தங்களும் அப்படியே பத்திரமாக இருப்பதனை அவரால் உணர முடிந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம். நான் தூங்கும்போது அம்மாவுடன் ஒட்டிக்கொண்டுதான் தூங்குவேன். அவளது முதுகுப்புறம் ஒட்டிக்கொண்டு, வலது கையால் அவள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்வேன். சிலவேளை ...
மேலும் கதையை படிக்க...
அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன மனதுக்கு எவ்வளவு இதமளிக்கின்றன. பார்க்குமிடங்கள் எல்லாம் பசுமைகள், புல்வெளிகள் யாருக்குத்தான் மனதில் இனிமை உணர்வை உண்டு பண்ணாது! இவை எல்லாவற்றுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று ...
மேலும் கதையை படிக்க...
1868 ஆம் ஆண்டு. இலங்கையின் மலையகம் எங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை செழித்துப் பூத்து காய்த்து கொக்கரித்து கோலோச்சிக் கொண்டிருந்தது. உலக சந்தையில் கோப்பியின் விலை மிக உச்சத்தில் உயர்ந்திருந்ததால் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக பதவி வகித்த ஹெர்கியூலிஸ் ரொபின்சன் மிகவும் ஆனந்தத்தில் ...
மேலும் கதையை படிக்க...
என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு அநேகமாக எல்லாருக்கும் இருக்கும். ஆனால் பல்கலைக்கழக வாழ்வு மிகச் சிலருக்குத்தான் கிட்டும். அத்தகைய பாக்கியசாலிகளில் இருவர்தான் வசந்தியும் ஆனந்தனும். இவர்கள் இருவரும் கொழும்புப் ...
மேலும் கதையை படிக்க...
அன்பை பங்கு போடுபவர்கள்
உன்னைக் கொன்றவர்கள் யார்?
சூடேறும் பாறைகள்
செல்லி அல்லது மணிராசு
வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)