முதுநிலை மழலையர் இறுதித் தேர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 6,965 
 

சரியாக பிற்பகல் 3:40-க்கு பள்ளிப் பேருந்தில் அடுக்கு மாடி வளாக வாசலில் வந்திறங்கும் ஐந்து வயதுப் பேத்தியை நான் வாயிலில் சென்று வரவேற்கச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் ஒரு சின்னப் பிரளயமே நடக்கும்.

“நான் என்ன குட்டிப் பாப்பாவா…. என் ஃப்ரண்டு தனியாத்தானே இறங்கிப் போகிறான்… நீ மட்டும் ஏன் என்னை வந்து கூட்டிண்டு போகிறாய்…..?”

“இல்லடா உன்னை வண்டிலேந்து ஜாக்கிரதையா இறக்கணும் இல்ல…. அதான்…”

“அதெல்லாம் வேண்டாம், வாட்சுமேன் அங்கிள் இறக்கி விடுவார்… நான் வந்து காலிங் பெல் அடிச்சப்பறம் கதவைத் திறந்தால் போதும்…”

எங்கள் வீட்டில் அவள் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. இருந்தாலும் ஆதங்கம் தாங்காமல் பால்கனி வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டியிலிருந்து இறங்கியவள் காம்பௌண்டுக்குள் இப்படி அப்படி அலய, காவலாளியின் உந்துதலில் மாடி ஏறி வந்தாள். கதவருகே காத்திருந்த நான் அவள் மணியடித்தவுடன் ‘யார்’ என்று கேட்க, மாடி வீட்டுப் பெண் போல் குரலை மாற்றிக் கொண்டு ‘தன்னயே’ இருக்ககாளா என்று கேட்டாள். நானும் கதவைத் திறந்து “இல்லயேம்மா அவ இன்னும் பள்ளிக் கூடத்திலிருந்து வரல” எனக் கூற, உதட்டின் மீது விரலை வைத்து “சத்தம் போடாதே” என்று பாவனை செய்தாள். மீண்டும் குரலை மாற்றி அதேபோல் உள்ளே இருக்கும் பாட்டிக்கும் குரல் கொடுக்க, பாட்டியும் ‘இன்னும் வரலைம்மா’ என்றவுடன் ‘தாத்தா பாட்டியை ஏமாற்றி விட்டோம்’ என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து தான் வந்துவிட்டதை அறிவித்தாள். (இதற்கு மாறாக முதலிலேயே அவள் வந்ததாகக் காட்டிக் கொண்டால் அதற்கும் ஒர் அமர்க்களம் நடக்கும்)

சீருடை, காலணிகள் கழட்டிய பிறகு ஒரு தட்டில் அவள் விரும்பும் நொறுக்குத் தீனியை வைத்து நீட்ட, TV முன்னால் அமர்ந்து தான் விரும்பும் கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டே கொறிக்க ஆரம்பித்ததாள். பள்ளிப் பையைத் திறந்து முதலில் மதிய உணவு, சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டிருக்கிறாளா என்று சரி பாரக்க, க்ரீம் பிஸ்கட்டில் பிஸ்கட் அப்படியே இருந்தது. ஏன் என்று கேட்டால் பதில் வராது. க்ரீம் பிஸ்கட் என்றால் க்ரீம் மட்டும் சாப்பிட வேண்டும் என்பது பிள்ளைகள் நியதி (அதான் TVல காண்பிக்கிறார்களே) பிறகு ஒவ்வொரு புத்தகமாக எடுத்து வீட்டுப் பாடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, எழுதவேண்டிய நோட்டுப் புத்தகத்தையும் பென்சில் பாக்சையும் மேசைமேல் வைத்துவிட்டு, நாட்குறிப்பு(Diary) புத்தகத்தில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று பார்க்க, ஒன்றுமில்லை. ‘சாப்பிட்டு விட்டு வீட்டுப் பாடம் எழுது’ என்று சொல்லி விட்டு உள் அறைக்குச் சென்று விட்டேன்… விளையாடச் செல்லும் முன் வீட்டுப் பாடம் எழுத வேண்டும் என்பது எழதப்படாத நியதி. ஆரம்பத்தில் சற்று முரண்டு பிடித்தாலும் நாளடைவில் பழகி விட்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தவள் என் முன்னே diary-ஐத் தூக்கிப் போட்டு “தாத்தா பார்” என்றாள்.. எதையும் தூக்கி எறிவது, டமால் டுமீல் என சத்தமிடுவது அவளது சாந்த குணம். தான் சொல்வது போல் எல்லாம் நடக்க வேண்டும் என்பது அவளது தீவிர குணம். அவளுடைய எல்லா கோரிக்கைக்கும் பணிவது என்பது என் குணம்.. சரி விஷயத்திற்கு வருவோம். நான் பார்க்கத் தவறியது என்ன என்று பார்த்தால், முதல் பக்கத்தில் ஒரு காகிதத்தை எட்டாக மடித்து வைத்துப் பின் செய்திருந்தார்கள். பிரித்துப் பார்த்தால் ஆண்டு இறுதித் தேர்வுப் பட்டியல்.

முது நிலை மழலையர் பள்ளி (Senior kindergarten) தேர்வு விவரங்கள் விரிவாக அந்தப் பட்டியலில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டிருந்தது.

*தேர்வுகள் நடக்கும் நாட்கள்
*நேரம்
*மொத்தம் ஒன்பது பரீட்சைகள்
*ஒவ்வொரு பரீட்ச்சைக்கும் படிக்க வேண்டிய பாடங்கள்
*புத்தகத்தில் படிக்க வேண்டிய பக்கங்கள்
*எழுதிப் பழக வேண்டியவை
*மனப்பாடம் செய்ய வேண்டியவை
*இத்துடன் வகுப்பில் நடந்த தேர்வுக் காகிதங்கள்
*இன்னும் பல

பட்டியலினைப் பார்த்தவுடன் இன்னும் சில நாட்கள் நடக்கப் போகும் காட்சிகள் என் கண்முன் விரிந்தன. பெற்றவள் மனம் பதை பதைக்க, தன் பிள்ளை இதில் எல்லாம் தேர்ச்சி பெற வேண்டுமே என தினம் தீவிரப் பயிற்சி முகாம் தொடங்குவாள். பெற்றவளின் திடீர் தீவிரத்தைப் பார்த்து பிள்ளை சற்று துணுக் குற்றாலும், அவ்வளவாக சிரமப் படாது. ஒருவருக் கொருவர் ஒன்றும் தெரியாது என்ற கோணத்திலேயே பரீட்சையை நோக்கி நகர்வர். (முக்கியமாக உணர வேண்டியது இளம் மழலையர்கள் ஆசிரியர் கற்றுத் தந்தற்கு மேல் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)

“எங்க மிஸ் இப்படித்தான் சொல்லியிருக்காங்க” என்பதே முடிவான தீர்ப்பாக இருக்கும்.

இந்த இருமுனைப் போராட்டத்தில் வீடு போர்க்களமாகி விடும். பெரியவர்களும் அவரவர் திறமைக்கு ஏற்ப போரில் கலந்து கொள்வார்கள். இதற்கு நடுவில் குழந்தை இவர்களை வைத்து தனது அடுத்த சாக்லேட்டையோ, நொறுக்குத் தீனியையோ, விளையாட்டுப் பொருளையோ பெறுவது எப்படிப் என்ற சிந்தனையில் இருக்கும். வரவிருப்பதை நினைக்கும் போதே கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

சிந்தனை கலைந்தவனாய் பேத்தியைக் கூப்பிட்டேன்.

“என்ன தாத்தா…..?”

“Exam வருது டேய்லி படிக்கணும்….”

“சரி தாத்தா…… எப்ப லீவு விடுவாங்க……?”

நம்மைத் தாண்டி குழந்தைகள் சிந்திக்கிறார்கள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *