முதிர்வின் உணர்வு

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 10,986 
 

அதிகாலை 4.30 மணி

குளிர் காகங்களை பாடவைக்க, நாளிதடிந இணைப்பை தெருவில் சிறுவன் சேர்க்க, நட்சத்திரங்கள் சூரியன் வருகைக்காக காத்துக் கிடக்க, இந்தப் பரபரப்பும் இயற்கையின் மெய் ஞானமும் நமது மப்லர் கழுத்துக்காரரை மெதுவாக சைக்கிளை மிதிக்க வைத்தது. குறைக்கும் நாய்களுக்கு பயத்தில் பெல் அடித்து தன் கைகளையும், கால்களையும், மனசையும் பிசியாக வைத்துக் கொண்டு ஒரு முதிர்ந்த குழந்தை டீக்கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. டீ கடைக்கு வந்து சேர்ந்த அந்த சைக்கிள் ஜெட் வேகத்தில் இறங்கியதாக நினைத்து சைக்கிளை ஸ்டாண்டு போட்டுவிட்டு,

“என்னய்யா பழனி? உங்க வூட்டு சேவல் தூங்கவே இல்லையா?இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே?”

“குட்டு மார்னிங் ராசு! காலையிலேயே இப்படி கட்ட குடுக்குரியே பா, ஏதோ
ஏதோ இன்னிக்கு சீக்கிரம் முழுச்சிக்கிட்டேன்”

“சரி டீ ஸ்டார்ட் ஆயிடுச்சா?” என்றார் ராசு

“இன்னும் 10 நிமிஷம் ஆகும் போல, என்னா பா! நேத்து நம்ம மேலத்தெரு சண்முகம் ஆஸ்பத்ரிலே இருக்காராமே” என பழனி சொல்ல

“முந்தா நாள் கூட பாத்தேன் பா” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் ராசு.

“மனுஷன் வாழ்க்கையே கயித்து மேல நடக்கற மாதிரி தான் கண்சிமிட்டலுக்குள்ளே கீழே விழலாம். அங்கேயே கூட தொங்கலாம். ஒரே வியப்பு தான் பா என்றார் பழனி.

“நம்ப மாதிரி கிழ போல்ட் எப்போ நட்டுக்கும், எப்போ அவுரும் யாரு யாருக்குமே தெரியாது”

அல்லா ஒதுவதும் கேட்டது. இருவரும் டீ அருந்திவிட்டு தங்கள் இயல்பான அரசியல் முதல் சினிமா வரை பேசி சூரியனை பொறுமையில்லாமல் எழும்ப வைத்தார்கள்.

“நான் கிளம்புறேன் பழனி, பேத்தி தீபாவ ஸ்கூல்ல விடனும், சாயங்காலம் பார்க்கலாம்.

“ஏன்பா ராசு, நான் மூத்த பொண்ணு வீட்டுக்கு போறேன், வர்ற 9 ஆம் தேதி தான் வருவேன்”.

“என்னா பா, 6 நாள் டேராவா? எனக்கு பொழுது போவாதே.”

“அட ஓடிரும் ராசு, என் சின்ன மாப்ளே தேடுவாப்லே நான் வரேன் பா”

“பாத்து பத்திரம் பழனி!” என்று சைக்கிள் சீட்டை தட்டி நகர்ந்தார் ராசு.

ராசு நெடுங்காலம் ஒரு தனியார் வங்கி செக்யூரிட்டியாக இருந்தவர். அந்த வேலை, இந்த வேலை செய்து காலந்தள்ளியவர். இவருக்கு ஒரு மகன், பெயர் ராஜேஷ். மருமகள் சுபா, பேத்தி தீபா, அவரது மனைவி தவறி 10 ஆண்டுகள் ஆகிறது. ராசுவிற்கு அகவை 69. வைராக்கியம் மிக்க முதிய இளைஞர். தன் மகனிடம் காசு எதிர்பார்க்கவே மாட்டார், தனது செக்யூரிட்டி வேலை பென்ஷன் 750 ரூபாயை வைத்து மாதம் கடத்துவார். அவரது உலகம் சிறியது. தீபாவும், பழனியும் தான். அக்கம்பக்கத்தினருக்கு மிகவும் உழைக்க கூடியவர். அவர் உண்மையில் முதிய இளைஞன் தான். அவ்வளவு சுறுசுறுப்பு.

சைக்கிள் மெதுவாக ஓட, தன் நண்பன் பழனியில்லாத ஒருவாரம் வெகு விரைவாக ஓட வேண்டும் என்று மனதில் ஓட்டினார் ராசு.

“அப்பா, நான் இன்னிக்கி சீக்கிரம் கிளம்புறேன், தீபா இன்னிக்கி காலைல ஸ்கூல்ல விட்டுடுங்க” என்றார் ராஜேஷ்.

“சரி தம்பி” என்றார் ராசு.

தினமும் மாலையில் ராசு, தீபாவை பள்ளியில் இருந்து அழைத்து வருவது வழக்கம். சுபா,

தீபாவை சைக்கிள் மீது அமர வைத்து,

“டா டா சொல்லு தீபு” என்றாள்.

ராசு சைக்கிளை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு தான் செல்வார். தனது பேத்தி கால்களை தெரியாமல் சக்கரத்தில் விடுவாளோ? என்ற பயம், எதிரே வருகிறவன் எப்படி வருவான் என்று தெரியாது. இவ்வாறு சிந்தித்து பேத்தியை ஒரு பிள்ளையாரைப் போல அமரவைத்து ஊர்வலம் போவார். இதில் வியப்பு என்னவெனில், சரியான நேரத்துக்குள் பள்ளியில் விடுவார் ராசு.

“தாத்தா, பெரிய கார் பொம்மை வேணும் வாங்கி தா…”

“சரி குட்டிமா அப்புறம் வாங்கித்தறேன்” என ராசு சொல்ல

“இல்ல, நாளைக்கு தான் வேணு, ப்ளி°” என்றாள் மழலைக் குரலில் தீபா.

“இன்னிக்கி தேதி 4, நாளை மறுநாள் கட்டாயமா வாங்கி தறேன் குட்டிமா”

“சரி தேங்கஸ் தாத்தா”

பள்ளிக்கூடம் மணி அடிப்பதற்கு முன்னர் இறக்கி விட்டார் பேத்தியை, தீபா அவர் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து ‘டா டா’ என்றாள். ராசுவிற்கு எப்படியாவது நாளை வரும் பென்ஷனை வைத்து பேத்திக்கு அந்த பொம்மை கார் வாங்கி தர வேண்டும் என்று அந்த முத்தத்தின் ஈரம் சொன்னது.

பொழுது சாய்ந்தது, பேத்தியை அழைத்து வர பள்ளியின் வாசலில் காத்துக்கிடந்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் கதவு திறக்க காத்துக்கிடக்கும் பக்தர்கள் போல பள்ளி மணிஅடித்தது, பேத்தி தீபாவும் வந்தாள், மீண்டும் வீட்டிற்கு பிள்ளையார் ஊர்வலம்.

“தாத்தா நாளான்னிக்கு கார் பொம்ம மறந்திடாதே”

“குட்டிமா, நான் மறக்கல பா, இன்னிக்கு அம்மா கிட்ட அடி வாங்காம ஹோம்வொர்க் பண்ணனும், அப்போ தான் கார் பொம்ம” என்றார் ராசு.

“சரி சரி” என்ற மழலை சிணுக்கத்துடன்.

மறுநாள் விடிந்தது, பழனியில்லாததால், தனியே சென்று டீ குடித்தார்.

“என்னா.. பெருசு, உங்காளு எங்க? என்றார் ஒருவர்.

“அவரு ஊருக்கு போயிருக்காரு பா, இன்னும் 5 நாள்ல வந்துடுவாரு.. நீயும் நாளைக்கு இளசாக மாட்ட தம்பி” என்றார் ராசு.

அந்த நபர் சட்டென நழுவினார், ராசுவின் சைக்கிள் தன் வீட்டிற்கு மெதுவாக நகர்ந்தது.

“இன்னிக்கு பென்ஷன் வந்துரும், எப்படியாவது அந்த நூறு ரூபா பொம்ம காரு குட்டீக்கு வாங்கி கொடுக்கனும்” என்று மனதில் சைக்கிள் பெல் அடித்தது.

“அப்பா, நான் இன்னிக்கு தீபாவை ஸ்கூல்ல டிராப் பண்ணிடுறேன்” என்றார் ராஜேஷ்.

முதுமையில் எல்லாமுமே சரி என்ற பதில் ஆக இருக்க முடியும்

“சரி தம்பி” என்றார் ராசு

ராசு அன்று முழுதும் தபால்காரரை எதிர்பார்த்து இருந்தார். நேரம் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் சுபாவம் கொண்டது. அது பாட்டுக்கு வேகமாக ஓடியது.

“தாத்தா நாளைக்கு….. ” என ராகம் போட்டது மழலை.

“சரி குட்டிமா, ஞாபகம் இருக்கு” என்று நகைத்தார் ராசு. அவர் மனதில் கலக்கம்,

பென்ஷன் இன்னும் வரவில்லையே, தன் பேத்திக்கு கார் பொம்மை எப்படி வாங்குவது என்ற வருத்தத்துடன் பேத்தி தீபாவை வீட்டில் இறக்கிவிட்டு, அவருக்கு தெரிந்தவர் மூலம் அந்த தபால்காரர் வீட்டிற்கு சென்றார்.

“வணக்கம் சார்!,” என்றார் ராசு,

“வணக்கம் பெரியவரே, உங்க பென்ஷன் மூன்று மணிக்கு மேல்தான் டெலிவர் ஆச்சு, நாளைக்கு போஸ்ட ஆபீஸ் வந்து வாங்கிக்கோங்க” என்றார் தபால்காரர்.

“சார், அதுக்காக தான் உங்களை பாக்க வந்தேன் சார். என கண்களில் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

“நாளைக்கு பதினோரு மணிக்கு வந்திடுறேன்” என்று சொல்லி சட்டை பையில்
சில்லறையை தேடினார். ஆனால் கிடைக்கத்தான் இல்லை.

“பெரியவரே கிளம்புங்க, நாளைக்கு பாத்துக்கலாம்” என்றார் பெருந்தன்மையுடன் தபால்காரர்.

நிலா மறைந்து சூரியன் தெரிந்தது.

பரபரப்பான ராஜேஷ், “அப்பா இன்னிக்கு நீங்க..” என்று ஆரம்பித்தவுடன்,

“சரி தம்பி!”

பிள்ளையார் ஊர்வலம் ஆரம்பித்தது.

“தாத்தா இன்னிக்கு….”

அழகின் சிரிப்பு முதுமையிடமும், மழலையிடம் தானோ?

“நிச்சயம் குட்டிமா, சாயங்காலம் உன்ன கூட்டிட்டு போகும் போது கார் பொம்ம உன் கையில இருக்கும்”. என்றார் ராசு.

தீபாவும், ராசுவும், சிரித்து தன் உள்ளம் மகிடிநச்சியில் இருப்பதை உதட்டின் முத்தமாகவும், பற்களாகவும் தெரிந்தது.

சைக்கிள் பள்ளியில் இருந்து போஸ்ட் ஆபிசுக்கு செல்ல, காத்துக் கொண்டு இருப்பதுதான் முதுமையில் இயல்பு போல வெளியில் தபால்காரர் வரவிற்கு காத்துக்கொண்டிருந்தார் ராசு, வந்தார் தபால்காரர்.

“பெரியவரே உள்ள வாங்க!”.

ராசுவும் உள்ளே சென்றார். சொன்னயிடத்தில் கையெழுத்து போட்டு 750 ரூபாய் வாங்கினார். ஐம்பது ரூபாய்க்கு சில்லரை மாத்தி, தபால்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து வெளியே வந்தார். மகிழ்ச்சியின் உச்சத்தில் ராசு தனது டீ கடை பாக்கியை விட பேத்தியின் நூறு ரூபாய் பொம்ம கார் வாங்கிதரும் உற்சாகத்தில் ரூபாய் நோட்டுக்களை எண்ணிக்கொண்டிருந்தார்.

“பெருசு பின்னாடி சொக்கால காக்கா பீ பாரு!” என்றார் ஒருவன்.

ராசு பின் பக்கம் திரும்பி பார்த்தார். இன்னொரு நபர் கையில் எண்ணிக்கொண்டிருந்த பணத்தை பிடுங்கி ஓடினான். ராசு திரும்பி பார்த்தால் மூன்று பத்து ரூபா நோட்டுகள் மட்டும் சிதறிக் கிடந்தது.

தான் கத்த வேண்டுமா?, அழ வேண்டுமா? என்று தெரியாமல் கீழே சிதறிய பத்து ரூபாய் தாள்களை எடுத்தார் ராசு.

“பிடிங்கப்பா!, பிடிங்கப்பா!” என்று பார்த்தவர்கள் கத்தினார்கள் ஒரே அமளியாக இருந்தது.

என்ன செய்வதென்று அறியாது ராசு அங்கேயே அமர்ந்தார்.

“பெரியவரே விவஸ்தை வேண்டா, இப்படியா காசு எண்ணுவீங்க சரியான ஆளு போங்க”

என அங்குள்ளவர்கள் வசைபாடிக்கொண்டிருந்தனர்.

“போலீசுக்கு போங்க என மற்றவர்கள் கூற, அட போங்கடா என மனசுக்குள் நினைத்து உச்சி வெயிலில் சைக்கிளோடு நகர்ந்தார்.

எப்படியாவது பேத்திக்கு கார் பொம்மை வாங்கி தர வேண்டும் என்ற நினைப்பு, காசு யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை, பழனியும் இல்லை, மருமகளிடமும் கேட்க விருப்பமில்லை.

ஆடிநந்த சிந்தனையோடு விசையோடுஅசைந்து சென்றார் ராசு.

அவருக்கு என்ன தோன்றியது என தெரியவில்லை. திடீரென்று தனது சட்டை வேட்டியை அழுக்காக்கினார். ஒரு பைத்தியம் போல் மண்ணில் புரண்டார். ஏமாற்றம், ஏக்கம் ஒரு முதுமையை இப்படி வாட்டுகிறதே என்று நினைக்கையில் இயல்பாக எழுந்து சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

இரயில் நிலையம் அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் வாசலில் அமர்ந்தார் ராசு.

“சார்! அம்மா!” என்று வலுவிழுந்த குரலில் கையேந்தினார். மதியம் 2 மணி அளவில் அவர் குரலில் தொய் வும், அவமானமும், தெரிந்தது.

“பசிக்குது சார்! சாப்பிடல, முடியல சார்! ஏதாச்சும் உதவி செடீநுயுங்க சார்” என்று அழுகையுடன் கூவினார்.

இரயில் நிலையத்தில் பயணிப்பவர்கள் வந்து போகும் போது, ஏதோ அவர்களால் முடிந்ததை செய்தனர். பாசம் ஒருவரை பிச்சை எடுக்க வைக்கும் அப்படிப்பட்ட பாசம் இந்த ராசுவிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

ஒரு சில நபர்களின் இரக்க குணத்தால் ராசுவிற்கு 75 ரூபாய் தேறியது, சுறுசுறுப்பாக நடந்து சென்று சைக்கிளை எடுத்து பேன்சி °டோர் சென்று நூறு ரூபாய் கார் பொம்மை வாங்கினார்.

மாலை 4.30 மணி

பள்ளியின் வாசலில் கார் பொம்மையுடன் மகிழ்ச்சியுடன் காத்து கிடந்தார் ராசு.

பள்ளி மணி அடித்தது, தீபா வெளியே ஓடி வந்தாள் ராசு கையில் கார் பொம்மையைப் பார்த்தவுடன் அவள் வேறு உலகத்திற்கு சென்றாள், எண்ணற்ற மகிழ்ச்சி.

“இந்தா குட்டிமா” என்று கார் பொம்மையை கொடுத்தார்.

“தாத்தா, ஐ லவ் யூ” என்று ஒரு முத்தம் தந்தாள் தீபா

“தாத்தா, என்ன சட்டை அழுக்கா இருக்கு”

“அதுவா குட்டிமா, இரண்டு காக்கா என்ன கீழ தள்ளிடுச்சு”

“எப்படி தாத்தா காக்கா உங்கல கீழ தள்ளும்”

“அதுங்க கெட்ட காக்கா மா, அது செய்யும்”

“அந்த பேட் காக்கா எங்கோ போய் அடிவாங்கப் போவுது!”

“ சரி குட்டிமா” என சிரித்தார் ராசு

ராசு தீபாவை சைக்கிளில் அமரவைத்தபின் ஊர்வலம் தொடங்கியது. உயிருள்ள பொம்மை கார் பொம்மையுடன் பேசியது, “தாத்தா, நானு உன்மேல ஒரு ரவுண்டு நாளாக்கி போலாம்” இந்த மழலை அளவிலா மகிழ்ச்சியுடன் வீட்டை நெருங்கியது.

ராசு சைக்கிளை நிறுத்தி பேத்தி தீபாவை இறக்கி விட்டார். கார் பொம்மையுடன் அம்மாவிற்கு காட்ட வேண்டும் என உள்ளே ஓடியது குழந்தை. ராசுவின் துணி முட்டை வெளியே இடம் தேடியது.

“அப்பா, தயவு செடீநுது வெளியே போயிடுங்க, ஆட்டோ வரச்சொல்லி இருக்கேன். ஓல்ட் ஏஜ் ஹோமுக்கும் சொல்லிட்டேன், பிச்சை எடுத்து இந்த வீட்டுக்குள்ளே வாராதீங்க”

அமைதியாக தலை குனிந்தார் ராசு.

“ என் ஃப்ரெண்டு எனக்கு போன் பண்ணினான். உங்க அப்பாவுக்கு நானும் பிச்சை போட்டேன் டா ன்னு, என் மானம் போச்சு, மரியாதை போச்சு” என்று ஆவேசித்தார் ராஜேஷ்.

“என்ன ஜென்மமோ” என்று முணுமுணுத்தாள். மருமகள் சுபா

“இனி தீபாவ நானே டெய்லி ஸ்கூல விட்டுறேன்….”

“சரி தம்பி….”

Print Friendly, PDF & Email

6 thoughts on “முதிர்வின் உணர்வு

  1. பாசத்தின் உச்ச கட்டத்தை எடுத்து கூரும் ஆழமான கதை. அருமை.

  2. நன்றி தோழர் ….

    உங்களின் வாழ்த்து என்னை இன்னும் நன்றாக எழுதவைக்கும்,

  3. என்னை வுருகவைத்த ஓர் அற்புத சிறு கதை.

    “முதுமையில் எல்லாமே சரி என்ற பதில் ஆக இருக்க முடியம்”

    வாழ்த்துகள் பவித்ரன் விக்னேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *