முதல் மனைவி

10
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 131,062 
 

கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது.

ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா கொஞ்சம் லேட் பண்ணால் என்ன? டெலிபோன் ஒலித்தால் என்ன?

மேனகா சற்றே பயத்துடன் சைக்கிளில் இருந்து இறங்கினாள்.

அவள் பேன்ட்டும் பட்டனில் அலட்சியமாக இருந்த சட்டையும் ராஜலட்சுமியின் கோபத்தை இன்னும் அதிகரித்தன.

”எப்பம்மா வந்தே?”

”போன் அடிக்கிறது… கதவைத் திற” என அதட்டினாள்.

மேனகா, ”ஈஸி மம்மி!”

”சரி போடீ… கதவைத் திற முதல்ல… அப்புறம் பெரியவாளுக்கு உபதேசம் பண்ணு.”

”லுக் அட் திஸ்! நான் என்ன உபதேசம் பண்ணேன்?”

கதவைத் திறந்து, போனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் போன் அடிப்பது நின்றுபோனது.

”சே…” என்று சோபாவில் விழுந்தாள்.

”ரிலாக்ஸ் மம்மி! முதல்ல ஈரப் புடைவையை மாத்தலாமா?” என்றாள்.

அத்தனை கோபத் திலும் மேனுவின் அழகான சடையின் கருநாகம் போன்ற வளர்த்தி பயமுறுத்தியது. கல்யாணம் பண்ண வேண்டும். நல்ல கணவனாகப் பார்த்து… என் கணவனைப் போல் இல்லாமல்.

போன் மறுபடி ஒலிக்க, மேனு எடுத்தாள்.

”…………..?”

”ராங் நம்பர்” என்றாள்.

எதிர் போன் மறுபடி ஏதோ கேட்க, மேனகா ”ஆமாம்… நம்பர் கரெக்ட்தான். உங்களுக்கு யார் வேணும்?”

”………….”

”மிஸஸ் ராமச்சந்திரன்னு யாரும் இல்லை இங்கே.”

”இரு” என்று அவளிடம் இருந்து ராஜ லட்சுமி போனைப் பிடுங்கிக்கொள்ள…

”யாரும்மா மிஸஸ் ராமச்சந்திரன்?”

ராஜலட்சுமி போனை எடுக்கும்போது அவள் கரம் நடுங்கியது.

”ராமச்சந்திரன்கறது உங்கப்பா பேரு.

ஹலோ… யாரு?”

”மிஸஸ் ஏ.வி.ராமச்சந்திரன் வீடுங்களா அது? நம்பர் கொடுத்தாங்க” என்று கேட்டது. நடுத்தர வயதுப் பெண் குரல்.

”ஆமாம், நீங்க யாரு..?”

”நான் எம்.ஆர். ஆஸ்பிட்டல்லேருந்து மேட்ரன் பேசறேன்.”’

”என்ன விஷயம்?”

”உங்க ஹஸ்பண்ட் இங்கே அட்மிட் ஆகி, போன ஒரு வாரமா நினைவு இல்லாமப் படுத்திருக்காரு. அட்மிஷன் ரிஜிஸ்தர்ல அட்ரஸும் போன் நம்பரும் இருக்குது. சார்ஜஸ் யாரும் ஏதும் கட்டலே… அதுக்குத்தான்…”

”அவருக்கு என்ன?”

”த்ராம்பாஸிஸ். நினைவு இல்லாமக் கிடக்கிறார். கேட் ஸ்கேன் எடுக்கறதுக்கு எழுதியிருக்காரு டாக்டர். ஆனா, யாரும் பணம் கொடுக்காததனால…”

ராஜலட்சுமியையே மேனகா உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்க…

”அட்ரஸ் சொல்லுங்க.”

”எம்.ஆர். ஆஸ்பத்திரி தெரியாதா… பூந்தமல்லி ஹைரோடுல ஈகா தியேட்டர் தாண்டினவுடனே திரும்பினீங்கன்னா…”

”ரூம் நம்பர் சொல்லுங்க.”

”பதினாலுல படுத்திருக்கார். வரீங்களா? கேஷா கொண்டுவந்தா நல்லது.”

”எத்தனை கொடுக்க வேண்டி இருக்கும்?”

”ஆயிரத்து எழுநூத்துச் சொச்சம் பாக்கி.”

”சரி… வரேன்” என்றாள் ராஜலட்சுமி.

”யாரும்மா?”

”உங்கப்பாடீ.”

”என்னவாம்?”

”ஆஸ்பத்திரியில பேச்சு மூச்சில்லாமப் படுத்திருக்காராம்.”

”அதனால?”

”பணம் பாக்கியிருக்காம்… டிஸ்சார்ஜ் வாங்கிட்டு…”

”என்னம்மா பேத்தறே? அவன் யாரு… அவனைப் போய் நீ என்ன பார்க்கறது?”

”அவன்லாம் பேசாதேம்மா… என்ன இருந் தாலும் உன் அப்பா அவர்.”

”நோ மம்மி, நோ… அந்தாளு உன்னைவிட்டு எத்தனை வருஷம் ஆச்சு?”

அப்போது மேனு மூன்று வயதுக் குழந்தை.

”அவன் மூஞ்சிகூடத் தெரியாதும்மா. உன்னைத் தனியா விட்டுட்டு… யாரவ… அவ பேர் என்னவோ சொன்னியே… யாரு அவ?”

”புனிதவல்லி.”

ராஜலட்சுமி ஈரப் புடைவையை மாற்றிக் கொண்டு, தலையை அவசரமாக வாரிக் கொண்டு, பர்ஸில் இருக்கும் பணத்தை எண்ணி செக் புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்.

”என்னம்மா, நான் சொல்லச் சொல்ல காது கேக்கலையா?”

”என்ன?”

”அங்கே போகப்போறியா?”

”ஆமாம். நீயும் வரே!”

”நோ வே! இந்த ஜென்மத்தில் நடக்காது.”

”மேனு, அப்புறம் விதண்டாவாதம் பண்ண லாம். இப்போ என்கூட வந்தே ஆகணும். நீ வேணும்னா பாக்க வர வேண்டாம்.”

”மம்மி, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?”

பவுடர் போட்டுக்கொண்டு நெற்றிப் பொட்டை விஸ்தாரம் பண்ணிக்கொண்டு, ”பாரு, உன் அப்பா இல்லை, என் கணவன் இல்லேன்னாலும் ஒரு ஸ்ட்ரேஞ்சர்னு வெச்சுக்கலாமே…”

”மம்மி, யூ ஆர் அன்பிலீவபிள்! பாரத நாரி! என்ன, இப்படி ஒரு மதர் இண்டியா வேஷம் – பதினஞ்சு வருஷமா எட்டிப் பார்க்காத பன்னாடைக்கு.”

”அதுக்கு முன்னாடி பதினஞ்சு வருஷம் பழகியிருக்கேனே!”

”இது பைத்தியக்காரத்தனம். நான் பரத்துக்கு போன் பண்ணிச் சொல்லப் போறேன்.”

”எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். வரப் போறியா, நான் தனியா போகணுமா?”

ஆட்டோவில் போகும்போது மழை விடாமல் அவள் கால் ஓரத்துப் புடைவையை நனைத்தது. சின்ன பள்ளங்களில் எல்லாம் துள்ளித் துள்ளி அந்த ஆட்டோ செல்ல, மழை இரைச்சலின் இடையே மேனு புலம்பிக்கொண்டே வந்தாள்.

”இந்த மாதிரியும் ஒரு ஆள்… இந்த மாதிரியும் ஒரு மனைவி.”

”பேசாம வா முதல்ல. அவரைப் போய்ப் பார்க்கலாம் என்ன ஸ்திதின்னு.”

”அந்தாளு போயாச்சு. காலி கிளாஸ்.”

எதற்காக அவரைப் பார்க்கப்போகிறேன். என்னைப் பாடுபடுத்தியதற்குப் பகவான் கொடுத்த தண்டனையைக் கண்கூடாக – ஊர்ஜிதமாகப் பார்ப்பதற்கா… இல்லை, இன்னா செய்தாரை நாணவைப்பதற்கா… ஏன்தான் இப்படிப் படபடப்பாகப் பதினைந்து வருஷம் காணாத கணவனை நோக்கிச் செல்கிறேன்?

‘இந்த லெட்டர் யாரு எழுதியிருக்கா..?’

‘படிச்சுப் பாத்தியே… கடைசியில என்ன எழுதியிருக்கு – புனிதவல்லின்னுதானே?’

‘யாரு இந்தப் புனிதவல்லி?’

‘யாராயிருந்தா உனக்கென்ன..?’

‘ஃப்ரெண்டா?’

‘இப்போதைக்கு அப்படித்தான்.’

‘அப்புறம்?’

‘கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் இருக்கு.’

‘இப்படிக் கூசாம நேரா ஆணி அடிச்சாப்ல தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட சொல்றியே பிராமணா… இது நியாயமா? நான் என்ன குறைவெச்சேன் உங்களுக்கு?’

‘ஒரு குறையும் இல்லை ராஜி.’

‘பின்னே எதுக்கு இவ?’

‘அதுவந்து ஒருவிதமான தேவை ஆயிடுத்து ராஜி. உனக்குச் சொன்னா புரியாது. உனக்கு எந்தவிதமான குறையும் இல்லாம…’

‘உங்கப்பாவுக்குத் தந்தி கொடுத்து வரவழையுங்கோ.’

‘வரவழைச்சா போச்சு. எனக்குப் பயமில்லை.’

‘எனக்குப் புகலிடம் இல்லை… தைரியம் இல்லை… படிப்பு இல்லை… சாமர்த்தியம் இல்லை… ஒரு வேலை பாக்கத் தெம்பு இல்லேங்கறதாலதானே இப்படி அழிச்சாட்டியமா…’

‘பீ ரீசனபிள். இதனால எந்தவிதத்துல நீ பாதிக்கப்படறே? உன்னண்ட குறை இருக்கணும்னு கட்டாயம் இல்லை. பல பேர் ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா, தெரியுமோல்லியோ? பெருமாளே… சீதேவி பூதேவினு…’

‘எனக்குச் சந்தோஷம் கிடையாது இதுல.’

‘இப்போ யாரு கல்யாணம் பண்ணப் போறதா சொன்னா? ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். அசடு… போ, மூஞ்சி அலம்பிண்டு பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு வா…’

‘தயவுபண்ணி எனக்குத் துரோகம் பண்ணிடாதீங்கோ. எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை. அண்ணா வீட்டுல எனக்கு வாழ்வு இல்லை. ஒண்டியா என்னால எதும் யாரையும் எதிர்க்க முடியாது. ப்ளீஸ்! என்னைக் கைவிட்டுடாதீங்கோ.’

‘சே, அப்படி நடக்காது. எழுந்திரு. காலை விடு முதல்ல!’

மேனகா ரிசப்ஷனில் இருப்பதாகச் சொன்னாள். ”எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம். சரியா அரை மணிதான் காத்திருப்பேன்” என்றாள்.

”எங்கேயும் போயிடாதே செல்லம். ப்ளீஸ், இன்னிக்கு மட்டும் அம்மாவுக்கு ஒத்தாசையா இரும்மா.”

”அழாத போ.”

14-ம் எண் அறையை மெள்ள அடைந்தாள் ராஜலட்சுமி. வெண்மை சக்கரத் திரை லேசாக ஃபேன் காற்றில் அசைந்துகொண்டு இருக்க, ட்ரிப் கொடுத்து மார்பு வரை போர்த்தி அந்த ஆசாமி படுத்திருந்தான். வாயில் குழாய் செருகியிருந்தது. அறையில் வேறு யாரும் இல்லை. ராஜலட்சுமி படுக்கையின் கால்மாட்டை அணுகினாள். கண்ணீர் இயல்பாக வடிந்தது. ராமச்சந்திரனின் முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான தாடி இருந்தது. ஊசிக்காகப் பொத்தல் பண்ண பல இடங்களில் கரு ரத்தமாக இருந்தது. வாய் திறந்திருந்தது. மூச்சு மட்டும் கேட்டுக்கொண்டு இருக்க, கண்கள் மூடி இருந்தன.

‘இந்த முகமா… இந்த முகமா… இதுவா நான் பிரிந்த கணவன்?’

‘நீ சிவப்பா… நான் சிவப்பா… சொல்லு?’

‘நீங்கதான். இதிலென்ன சந்தேகம்.’

‘சின்ன வயசில் கடுக்கன் போட்டுண்டு காது தொள்ளைக் காதா போயிருக்கும் வைர கனம் தாங்காம. எங்கப்பா பாபநாசம் மைனர் பேரு ஆயிரம் வேலி நிலம் ஒழிச்சே கட்டினார்.’

”வந்துட்டீங்களா?” என்று குரல் கேட்கத் திரும்பினாள். ஒரு நர்ஸ் விரைவாக உள்ளே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.

”இவர்தான்… இவர்தான்…”

”அவங்க சம்சாரமா நீங்க?”

”ஆமாம்மா…”

”ராஜலட்சுமி உங்க பேரு.”

நர்ஸ் சார்ட்டை எடுத்துக் கையை எடுத்து நாடி பிடித்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

”இப்போ இவருக்கு எப்படி இருக்கு?”

”டாக்டர் சொல்வாரு. ஆமா, ஒரு வாரமா இந்த மாதிரி போட்டுட்டுப் போயிட்டீங்கன்னா எப்படிங்க யாருன்னு தெரியும்? கேட் ஸ்கேன் எடுக்கணும்னு நியூரோ என்.எஸ். அனத்தறாரு.”

”இவருக்கு எப்படி இருக்கு?”

”அதான் பாக்கறீங்களே. பெட்சோர் வராமப் பாத்துக்கிட்டு இருக்கோம். அவ்ளோதான்.”

”பேசறாரா?”

”மாரைச் சொறிஞ்சா எப்பவாவது முழிச்சுப் பாரு. அந்தம்மா யாரு… முதல்ல வந்தாங்களே?”

பதில் சொல்லவில்லை.

”பேசாம டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருங்க. இங்கே ஒரு நாளைக்கு இருநூத்தம்பது ஆகுதில்லே!”

”ராமு சார்” என்று வலுக்கட்டாயமாக ராமச்சந்திரனை ஆட்டினாள் நர்ஸ்… திடுக்கிட்டு விழித்துக்கொண்டு பார்த்தான்.

”நான் வந்திருக்கேன்” என்றாள்.

”தலையணை மாத்திரலாமா?”

கண்கள் கலங்கியிருந்தன. எலும்பாக இருந்த கையைப் பிடித்தாள்.

”ராஜி வந்திருக்கேன்” என்றாள்.

கண்கள் அவளை அடையாளம் தேடினவா, கண்டுகொண்டனவா, கண்டுகொண்ட பின் துக்கப்பட்டனவா… ஏதும் தெரியாமல் மறுபடி கண் மூடிக்கொண்டான்.

”பேசுவாரா?”

”இல்லீங்க. பேச்சு, மூமென்ட் ஏதும் இல்லை. லம்பார் பங்க்சர் எடுத்தப்ப கட்டி கட்டியா ரத்தம்.”

”ஆகாரம்..?”

”எல்லாம் டியூப் வழியாதான். என்.எஸ். வந்தா கேட்டுருங்க. டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, வீட்டுக்கு எடுத்துட்டு ஒரு நைட் நர்ஸைப் போட்டு வெச்சுக்கறதுதான் நல்லது.”

”அவங்க யாரும் வரலையா..?”

”யாரு? வந்து அட்மிட் பண்ணதோட சரி. ஒரு சிவத்த ஆளு அந்தம்மாகூட வந்திருந்தாரு. என்னவோ அவங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டாங்க. ‘அவளை வரச் சொல்லி ஒப்படைச்சுரு’னு திருப்பித் திருப்பி வாதாடிக்கிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட கொஞ்சம் கடுமையாகூட இருக்க வேண்டியிருந்தது… பேரு என்னவோ சொன்னாங்களே? ராமு ராமுன்னு

கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க.”

”புனிதவல்லி.”

”ரெண்டு

சம்சாரமா? ராமு சார்… பெரிய ஆளு நீங்க” என்று ராமச்சந்திரனின் கன்னத்தை லேசாக நர்ஸ் தட்ட… அதற்கேற்ப தலை ஆடியது.

”நீங்க மூத்தவங்களா?”

”ஆமாம்.”

”எத்தனை நாளா இப்படி?”

ராஜலட்சுமி சட்டென்று முகத்தை மூடி விசும்பி விசும்பி அழுதாள். ”என்.எஸ். வர்ற நேரம். அழுவாதீங்க. கோவிப்பாரு.”

கண்களைத் துடைத்துக்கொண்டு ”கீழே என் பெண் மேனகானு பேரு… வரச் சொல்றீங்களா?”

”வார்டு பாய்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறேன். டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப் போயிருங்க… செலவு குறையும். எனக்கு என்னவோ அதிக நம்பிக்கையா தெரியலீங்க. நெறைய ரெஸ்ட் எடுத்தா செலப்ப சரியாகும். பிரெட் எதாவது வேணுமா, சொல்லுங்க.”

”இதுதானா எங்கப்பா?”

திடுக்கிட்டுத் திரும்ப, மேனகா நின்று கொண்டு இருந்தாள்.

”இதானா அந்தாளு?”

”சத்தம் போடாதீங்கம்மா… மற்ற ரூம்கள்ல பேஷண்டுங்க இருக்காங்க இல்லை? பாப்பா, நீ இவரு மகளா?”

”அப்டின்னு சொல்லித்தான் தெரியும். மம்மி, பாத்தாச்சில்ல. போக வேண்டியதுதானே? அப்புறம் ஆட்டோ, பஸ் எதும் கெடைக்காது.”

”இரு மேனு. டாக்டர் வரப்போறாராம். அவரைப் பாத்து…”

”அவரைப் பாத்து..?”

”என்ன விஷயம்னு கேக்கணும். யாராவது பொறுப்பேத்துக்கணும்ல?”

”மம்மி, இதில் நாம தலையைக் கொடுக்கறது நல்லதில்லை. நான் கீழே ஆபீஸ்ல விசாரிச்சேன். முதல் மூணு நாளைக்கு பேமென்ட் பண்ணி இருக்கா. அதுக்கப்புறம் யாரும் வரலை. பாக்கி மட்டும் ஆயிரத்தெழுநூறு ரூபா இருக்கு. அதைக் கொடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவா.”

”பணம் பெரிசில்லை மேனு…”

”அந்தப் பொம்பளை வந்திருந்தாங்களா அம்மா?”

”சொன்னேனே… முத நாள் மட்டும் வந்து ரெண்டு பேத்துக்குள்ள ஏதோ வாக்குவாதம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் யாரும் வரலை.”

”அவங்க அட்ரஸ் இருக்குமா?” என்று மேனகா கேட்டாள்.

”ரிஜிஸ்தர்ல இல்லை.”

”ரிஜிஸ்தர்ல நம்ம அட்ரஸ், போன் நம்பர்லாம் கரெக்டா அவா யாரோ கொடுத்திருக்காம்மா.. ரொம்ப க்ளவரா பண்ணியிருக்கா. எனக்கு அந்தப் புனிதவல்லி எங்கே தங்கறானு தெரிஞ்சாகணும்.”

”மயிலாப்பூர்ல எங்கயோ… அதுக்கென்ன இப்போ?”

”அதுக்கென்னன்னா? இந்தாளை டிஸ்சார்ஜ் பண்ணிக் குண்டுக்கட்டா அவ வீட்டு வாசல்ல கொண்டுவெச்சுட்டு வர வேண்டாமாம்மா.”

”என்ன மேனு?”

”ஆமாம்மா. சரியா கேட்டுக்கோ. இவனை வீட்டுக்குகீட்டுக்கு அழைச்சுண்டு வர்றதா ஏதாவது யோசனை இருந்தா கைவிட்டுரு முதல்ல. இப்படித் திருட்டுத்தனமா நம்ம விலாசத்தைக் கொடுத்துட்டு அவா பொறுப்புல இருந்து கழட்டிக்க முடியாது. திஸ் இஸ் ஜஸ்ட் நாட் ஆன்.”

”மேனு, இந்தச் சமயத்துல இதெல்லாம் பத்தி ஆர்க்யூ பண்ண வேண்டாம்னு தோண்றது.”

”பேச்சே கிடையாது சிஸ்டர்… இந்தாளு எங்கம்மாவை எப்படி ட்ரீட் பண்ணியிருக்கார் தெரியுமா… என் அண்ணா பரத் சொல்லி இருக்கான். அப்போ நான் கைக் குழந்தை. மழையில நிஜமாவே தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி வாசல்ல தள்ளிக் கதவைச் சாத்தி இருக்காரு. ஒரு மெடிக்கல் ஷாப்புல ராத்திரி மழை நிக்கற வரைக்கும் காத்திருந்தோம். ராத்திரி சாப்பாடே இல்லை. இவங்க அண்ணா வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டியிருக்காங்க. அவங்க சம்சாரம் பால்கனியில இருந்தே திருப்பி அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் இமாஜின் பண்ணிப் பார்க்க முடியாது உங்களால. வாங்க மம்மி, போகலாம்.”

”அப்படியா… ராமு சார், அப்பேர்ப்பட்ட ஆளா நீ?” என்று படுத்திருந்தவன் கன்னத்தை நர்ஸ் தட்டுவதற்கேற்ப, தலை மறுபடி ஆடியது.

”எந்த நியாயத்தின் பேர்ல இவரை நாங்க உள்ளே சேர்த்துக்க முடியும். சொல்லுங்க.”

”நர்ஸ், இப்போ இந்தாளு இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நிலையில் இலை. ஒரு மூட்டை மாதிரிதான் ஃப்ளாட்ஃபாரத்தில் விட்டாலும் படுத்திருப்பார். அப்படியே இருப்பார்.”

”காது கேக்குமா?” – மேனகா சார்ட்டைப் பார்த்தாள். கத்தையாகக் காகிதங்களில் பத்து நாள் சரித்திரம் எழுதியிருந்தது. ஸெரிப்ரல் த்ராம்பாஸிஸ்… எம்பாலிஸம் என்றெல்லாம் எழுதியிருந்தது.

”இல்லை கேக்காது!” – நர்ஸ் திடீரென்று மௌனமாகி சைகை மூலம் பெரிய டாக்டர் வருவதைக் காட்டினாள்.

பெரிய டாக்டருக்கு அதிகம் வயசாகவில்லை. முப்பத்தைந்து இருக்கலாம்போல. வெள்ளை கோட்டின் பையருகே ‘ஜி.ஆர்.கோபிநாத்’ என்று எழுதியிருந்தது. ”ஹலோ! அட்லாஸ்ட் ஸம் ஒன்… என்னம்மா… எல்லாரும் இந்தாளை த்ராட்ல வுட்டுட்டுப் போயிட்டீங்க?”

”இவங்க முதல் சம்சாரம் டாக்டர்.”

”யாராயிருந்தாலும் தினப்படி யாராவது பொறுப்பேத்துக்கணும். அண்டர்ஸ்டாண்ட்? நீங்க டாட்டரா?”

மேனகா தலையசைத்தாள்.

”லுக் யங் லேடி. யுர் ஃபாதர் இஸ் ரியலி ஸிக். கன்ட்ரோல் பண்ணாத டயாப்படீஸ். ஹைப்பர் டென்ஷன், ஆர்ட்டிரியல் திக்கனிங் த்ராம்பாஸிஸ் ஆகி பிளட் க்ளாட் ஆகியிருக்கு. அஃபேஸியா இருக்கு. எல்லாம் சேர்ந்து ஒரு பக்கமே பாரலைஸ் ஆகியிருக்கு. நிறைய க்ளாட்ஸ் இருக்கும்போல. அதைக் கரைக்கத்தான் தொடர்ந்து மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கமே… ஒரு ஸி.டி. ஸ்கேன் எடுக்கணும். எந்த அளவுக்கு டேமேஜ்னு தெரியணும்… யாரு பொறுப்புனு பார்த்தா, அட்மிட் பண்ணவங்க ஆளையே காணுங்கறாங்க… ரொம்ப விநோதம்!”

”நான் சொல்றேன் டாக்டர்.”

”மேனு சும்மாரு, டாக்டர்! இவர் உயிருக்கு ஆபத்தா?”

”அப்படி இல்லை. பெட் சோர் இல்லாமப் பாத்துக்கிட்டு வேளா வேளைக்கு ஃபீட் பண்ணா, பத்து நாளில் சில ஃபேகல்ட்டிஸ் எல்லாம் திரும்பப் பெற சான்ஸ் இருக்கு. எழுந்து நடக்க முடியாட்டாலும் ரைட்ஹாண்ட் கன்ட்ரோல் வரும்னு நம்பிக்கை இருக்கு.”

”டாக்டர், திஸ் பாஸ்டர்ட் ட்ரீட்டெட் மை மதர் லைக் ஷிட்” என்று ஆரம்பித்த மேனகாவைத் திரும்பி நிதானமாகப் பார்த்து, ”லுக் இந்தாளு என்னைப் பொறுத்தவரையில் ஒரு பேஷன்ட். இவர் பர்சனல் லைஃப்ல எப்படி இருந்தார்னு எனக்கு அக்கறை இல்லை. கொலைகாரனா இருந்து பெயில்ல வந்திருந்தாலும் இதே ட்ரீட்மென்ட்தான் கொடுப்பேன். எனக்கு இவர் ஒரு பல்ஸ், ஒரு மூச்சு, ஒரு எக்ஸ்ரே, ஒரு ஸ்கேன் இமேஜ், ஒரு சின்ட்ரோம்… அவ்வளவுதான்.”

”அந்த ஸ்கேன் என்னவோ சொன்னீங்களே… அது எடுக்க எத்தனை பணமாகும்?”

”ஆபீஸ்ல கேளுங்கோ, சொல்லுவா. நாளைக்கு எடுத்துரலாம். இவரை இன்னும் பத்து நாளாவது வெச்சுக்கிட்டா நினைவு வர சான்ஸ் இருக்கு. இப்பவே நிறைய இம்ப்ரூவ்மென்ட், மாரைப் பிறாண்டினா முழிச்சுப்பாரு. பாருங்க!”

டாக்டர், ”ராமசந்திரன் வேக்-அப் ராமச்சந்திரன். வேக்-அப்… யாரு வந்திருக்கா பாருங்க, வேக்-அப்” என மூர்க்கத்தனமாக அசைத்தார்.

”பத்து நாள் கழிச்சு அவரால பேச முடியுமா?” என்றாள் மேனகா.

”பேச்சு வர்றதுக்குக் கொஞ்ச நாள் ஆகலாம்.”

”சொல்றதைப் புரிஞ்சுப்பாரா?” ராமச்சந்திரன் கண் விழித்து விழிகள் உருண்டன.

”இப்பவே அரசல்புரசலா புரியும். என்ன ராமச்சந்திரன், இது யாரு, சொல்லுங்கோ… உங்க டாட்டர்.”

”அவர் பதினஞ்சு வருஷமா பாத்ததில்லை டாக்டர்.”

”அப்படியா… எங்கேயாவது அமெரிக்காவுல இருந்தாளா?”

”இல்லை. அசோக் நகர்ல” என்றாள் மேனகா.

இப்போது மேனகாவை உற்றுப் பார்த்த டாக்டர், ”ஸாரி, பர்சனல் ட்ராஜடிபோல இருக்கு. சரியானப்புறம் இந்தாளை உலுக்கிரலாம். கவலைப்படாதீங்க” என்றார்.

நர்ஸ் அவர் போனதும், ”இண்டியாலயே இவர்தாங்க பெரிய நியூரோ சர்ஜன். என்ன யங்கா இருக்கா பாருங்க.” மேனகா அதைக் கவனிக்காமல் ”மம்மி, போலாமா?”

”இல்லை… ராத்திரி நான் இங்கேயே இருக்கேன். நீ போய் எனக்கு மாற்றுப் புடைவையும் டாய்லெட் செட்டும் கொண்டுவந்துரு. கார்த்தால காலேஜுக்கு போன் பண்ணிச் சொல்லிடு. நாலு நாளைக்கு வர மாட்டானு.”

அவள் சொல்வதில் கவனம் இல்லாமல் மேனகா தன் தாயையே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்து ”திஸ் லேடி இஸ் அன்பிலீவபிள்” என்றாள்.

”சிஸ்டர், இந்தாள் சூட்டுத்தழும்பு இருக்குது எங்கம்மா புஜத்துல.”

”மேனு, ஜாஸ்தி பேசாம போறியா இப்போ?”

மேனகா, படுத்திருந்த ராமச்சந்திரனைப் பார்த்து ”பாருய்யா பாரதப் பண்பாடு… சட் யுர் ஆக் டிஸ்கஸ்டிங்!” விருட்டென்று புறப்பட்டுச் சென்றாள்.

போனதும் நர்ஸ் ”இந்த வயசுல புரியாதுங்க” என்று தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள்.

தினம் காலை மேனகா ஆட்டோவில் அவிஷ்கார் ரெஸ்டாரென்ட்டில் இருந்து அம்மாவுக்குச் சாப்பாடும் மாற்று உடையும் கொண்டு கொடுத்துவிட்டுத்தான் காலேஜ் போவாள். மாலை திரும்ப வந்ததும் காபி, டிபன் வாங்கிக் கொடுப்பாள். தாய்க்கும் மகளுக்கும் அதிகம் பேச்சே இல்லை. ராஜலட்சுமிதான் ”இன்னிக்கு முழிச்சு முழுசா என்னைப் பார்த்தார்” என்பாள். ”அடையாளம் தெரிஞ்சாப்ல இருந்தது. கண்ணுல தண்ணி வந்தது!”

”மருந்தோட ரியாக்ஷனா இருக்கும் மம்மி, உன்னை ஒண்ணு கேக்கணும்.”

”என்ன?”

”இவர் நிஜமா பிழைச்சு எழுந்து நட மாடறார்னு வெச்சுக்கோ… என்ன செய்யறதா உத்தேசம்?”

”என்ன செய்யறதுன்னா?”

”எங்கே தங்கப்போறார் எங்க அன்பான அப்பா? பரத்துக்கு எழுதினேன். அவனும் நம்பவே இல்லை”.

”நம்மகூடத்தான்.”

”நோ வே! நான் ஹாஸ்டல் போயிருவேன். ஐ ஜஸ்ட் கான்ட் ஸ்டாண்ட் திஸ் ரோக்.”

”அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல பிழைச்சு எழுந்திருக்கட்டும்.”

”அந்தப் புனிதவல்லிகிட்டே இருந்து தகவல் உண்டா?”

”இல்லை. அவா கைகழுவிட்டானு தோண்றது.”

”சக்கையா உறிஞ்சுட்டு, இந்தாளை கொட்டை துப்பறாப்ல துப்பிட்டா. அதைப் பொறுக்கி வெச்சுண்டு இருக்கே மம்மி. நீ என்ன நிரூபிக்க விரும்பறே?”

”ஒண்ணும் இல்லை. மேனு, ஒண்ணுமே நிரூபிக்க நான் விரும்பலை.”

”இவர் உன்னைப் படுத்தினது எல்லாம் மறந்துபோச்சா?”

”இல்லை.”

”பின்னே எதுக்காக?”

”எதோ ஒரு அநாதைக்குச் செய்யறதா. ஒரு மனிதாபிமானமா வெச்சுக்கலாமே. அதோட பழைய பந்தம்னு ஒண்ணு. அது என்னவோ எங்க தலைமுறைல அழியாத பந்தம்னு தோன்றது.”

”இன்க்ரெடிபிள் லேடி” என்று அவள் அருகில் வந்து கன்னத்தோடு ஒட்டித் தேய்த்து விட்டுச் சென்றாள் மேனகா.

டாக்டர் கோபிநாத் எதிர்பார்த்தபடி எட்டாம் நாள் ராமச்சந்திரனுக்கு முழு நினைவு வந்து வலது கையை அசைக்க முடிந்தது. கண்களில் அடையாளம் தெரிந்தது.

”என்னைத் தெரியறதா?” என்றாள் ராஜலட்சுமி.

கண்களில் நீர் வடியத் தலையை ஆட்டினான்.

”பேச மாட்டாரோ?”

”பேச்சு வர்றதுக்கு இன்னும் மூணு, நாலு நாள் ஆகும்.”

அப்போதுதான் உள்ளே வந்த மேனகாவைப் பார்த்து டாக்டர் புன்னகைத்து, ”மேனகா, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன். உங்க அப்பாவுக்கு முழு நினைவு வந்துடுத்து. என்ன என்னவோ கேக்கணும்னியே. என்ன வேண்ணா கேட்டுக்க. தி மான் இஸ் ல்யுஸிட் நௌ.”

”சிஸ்டர் இன்னிக்கு வார்டு பாயை ஷேவ் பண்ணிவிடச் சொல்லுங்க.”

மேனகா தன் தகப்பனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.

”பேசறாரா?”

”இல்லை, புரிஞ்சுக்கறார். இவ யாரு தெரியறதா?” கலங்கிய கண்கள் அவளை ஏறிட்டுப் பார்த்து அடையாளம் தேடின.

”இவ மேனகா! அப்போ மூணு வயசு. உங்க பொண்ணு மேனகா… மேனகா.”

ராமச்சந்திரனின் கண்கள் தன் மகளை மெதுவாக மெதுவாக நிரடின.

மேனகா படுக்கை அருகே வந்து மிக அருகில் நின்றாள்.

”சொன்னியாம்மா? எட்டு நாளா நீ இவருக்கு மூத்திரம், பீ வாரினதையெல்லாம் சொன்னியாம்மா? உன்னை நடுத் தெருவில் துரத்திவிட்டதுக்கு எப்படி எங்களை எல்லாம் வளர்த்தே? சொன்னியாம்மா, எப்படி ஆளாக்கினே, எப்படி நீ வேலைக்குப் போய்ச் சேர்ந்து,

எங்களைப் படிக்கவெச்சே… சொல்லும்மா! உறைக்கட்டும் சொல்லு.”

”மேனு, அதெல்லாம் வேண்டாம்.”

ராமச்சந்திரனின் கை மெதுவாக அசைந்து உயர்ந்து, மேனகாவின் கையில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைக் காட்டியது.

”என்ன சொல்றார்?”

”நோட்டு வேணுங்கறார்.”

”பேப்பர் வேணுங்கறார்போல இருக்கு.”

”ஏதாவது எழுதணுமா?”

ராமச்சந்திரன் தலையை அசைக்க, மேனகாவிடம் இருந்து பேனாவையும் காகிதத்தையும் வாங்கி அவன் மடியில் ராஜலட்சுமி வைத்தாள். ராமச்சந்திரனின் விரல் இடுக்கில் பேனா வைக்க, அவன் மெள்ள எழுதினான்…

‘புனிதவல்லி எங்கே?’

– அக்டோபர் 1989

Print Friendly, PDF & Email

10 thoughts on “முதல் மனைவி

  1. நமக்குத்தான் தெரியும் அவனை புனிதவல்லி விட்டு விட்டுப் போய் விட்டாள் என்று. இறுதிக் கேள்வி இயல்பானது. அதற்காக அவனை கொடூரன் என்று சொல்வது தவறு. அவனுக்கு நடந்ததெல்லாம் தெரிந்தபின் அப்படிச் சொன்னால்தான் அவன் அயோக்கியன் என்று முத்திரை குத்தலாம்.

  2. இந்த நேரத்தில் புனிதவல்லியை தேடுவது என்பது வேறு காரணமாக கூட இருக்கும்

  3. உண்மையான அன்பிற்கு இங்கே மதிப்பில்லை .மோகம் மூளையை முடக்கிவிட்டால் பாசம் நேசம் எல்லாம் பஞ்சாய் பறந்துவிடும் போல…

  4. ராஜலட்சுமியின் இடத்தில் ஆண்களும் இருக்கிறார்கள்

  5. யதார்த்தமான கதை… உண்மையான அன்பு என்றும் புரியப்படுவதில்லை….
    பாசம் உள்ளவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

  6. கிரேட்… மனிதனின் மறுபக்கம்..அருமையான படைப்பு

  7. எவ்வளவு பaண்ணியும் புனிதவல்லி எங்கே என்று கேட்கிறான் அறிவே இல்லை ….பாவம் ராஜலக்ஷ்மி அவள் மகள் சொன்னது போல அவள் அவனை விட்டு செல்ல வேண்டும் கருமம்

  8. நான் மேனகாவாக இருந்தால் அந்த பேனாவாலையே ஒரு குத்து குத்தி இருப்பேன் செத்து தொலைடா என்று

  9. அருமையான கதை சுஜாதா சாரின் பஞ்ச் கதை முடிவில் அட்டகாசம். நல்ல சேவை தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *